வீரபாண்டிய கட்டபொம்மன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை நாடகம்
கதைப்பதிவு: December 16, 2022
பார்வையிட்டோர்: 5,120 
 
 

என்னால் முடிந்தது!

கட்டபொம்மன் சரித் திரத்தை அஸ்திவாரத்தடம் புர ளாது கோர்ப்பது எத்தனை சிரமமென்பது, அதில் ஈடுபட் டோர்க்குத்தான் தெரிதலாகும். அவ்வகையிலே யான் எந்த அளவு தேறியிருக்கிறேனென் பது-தூத்துக்குடி நகரத்தில் மட்டும் இந்நாடகம் ஆறு முறை கள் அமோக ஆரவாரத்துடன் நடைபெற்றிருக்கிறதென்பதிலி ருந்து தெரிய ஏதுவாகும். இந் நாடக ஏடை நீங்கள் படிக்கத் துவங்கிவிட்டால் போதும்; கடைசி வாக்கியம் முடிய, நீங்கள் எவ்வுணர்ச்சியிலீடு பட்டு தத்தளித்தீர்களென்பதை உங்க ளுக்கே சொல்ல வராது! அந்த அளவிற்கு சுதந்திரச் சிறகடித்து ஓட்டமாய் ஓடும் !

– சா.சண்முகவேலு, நாடகாசிரியர்.

காட்சி 1 – 13 | காட்சி 14 – 33

காட்சி 14

இடம்: போர்க்களம்.

உறுப்பினர்: கட்டபொம்மு படைகள், பானர்மென் படைகள், கட்டபொம்மு, பானர்மென், காலன் துரை.

நிலைமை: யுத்தம் நடந்து கொண்டிருக் கிறது. கோட்டைமீது துப்பாக்கிக் குண்டுகள், பீரங்கிக்குண்டுகள் சரமாரி பொழிகின்றது. பலத்த சண்டைக்குப் பின் கோட்டையின் வடக்கு வாயில் தகர்க்கப்படுகிறது. அந்தக் கோட்டையின் உள் வாயிலில் இருந்த வெள்ளையத் தேவர், வெள்ளைப்படை தளபதி ஆலன் துரையை தனது ஈட்டியால் நெஞ்சில் குத்திவிடுகிறார். அது முதுகுக்கு ஊடுருவி வந்த அந்த இடத்திலேயே ஆலன் மரணமடைகிறான்.

வெள்ளையத்தேவர்: தொலைந்தான் ஆலன்!

[மறுகணம் வெள்ளையத்தேவர் மீது குண்டு ஒன்று விழுந்து அவரும் கோட்டை வாயிலிலே இறக்கிறார். கட்டபொம்மு படைகள் மும்முரமாக முனைந்து சண்டை செய்கிறார்கள். வெள்ளைப் படைகள் வெருண்டு ஓடுகிறார்கள். சண்டை முடிகிறது]

காட்சி 15

இடம்: வெள்ளையன் அரண்மனை.

உறுப்பினர்: பானர்மென், துரைகள், சிப்பாய், நடனமாது.

நிலைமை: நடனம் நடந்து கொண்டிருக்கிறது. அப்பொழுது சிப்பாய் ஒருவன் நடன சபையில் வேகமாக வந்து விழுகிறான். பாதியோடு நடனம் நின்று விடுகிறது. பானர்மென் ஓடிவந்து அவனைத் தூக்கி வைத்துக்கொண்டு, தனது ரிவால்வரையும் எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு விபரம் கேட்கிறான்.

சிப்பாய் (தயக்கத்துடன்) ஆலன் துரையைக் கட்டபொம்மன் கொன்றுவிட்டான். நமது படை தோல்வியடைந்துவிட்டது.

பானர்: என்ன? ஆலன் கொல்லப்பட்டாரா? கட்டபொம்மனுக்கு வெற்றி! நமக்குத் தோல்வி! சே, வெட்கம்! சாதாரண ஒரு பாளையப்பட்டுக்காரனை ஜெயிக்க நம்மால் முடியவில்லை. கம்பும் கல்லும் கொண்டு போர் செய்யும் கம்பளத் தானை ஜெயிக்க, குண்டும் துப்பாக்கியும் கொண்ட நமக்கு முடிய வில்லை. தோற்றுவிட்டோம் என்று சொல்ல உனக்கு வெட்கமில்லை. போ! ஆலன் போனவழியே நீயும் போ! (கைத் துப்பாக்கியால் சிப்பாயைச் சுட்டு விடுகிறான்) எதிரியின் கோட்டையை எட்டிப் பிடிக்காத நீங்கள் காலனின் வீட்டையாவது எட்டிப் பிடியுங்கள். இவர்களுக்கு பீரங்கி, துப்பாக்கி, குதிரைப்படை வேறு, பாதுகாப்புக்கு!

பக்கட்: (மெதுவாக பானர்மெனின் இடதுபக்கம் வந்து நின்று கொண்டு) ஒரு விஷயம்!…

பானர்: போதும். (இடது கையால் கன்னத்தில் ஒங்கி அடித்து விட்டு) போகலாம்! எல்லோரும் வெளியே போகலாம்.

(எல்லோரும் திருதிருவென்று முழிக்கிறார்கள்)

பானர்: (அதிக கோபமாக) சீக்கிரம்.

(எல்லோரும் போய் விடுகிறார்கள்)

பானர்: அட, பரதேசிப் பாஞ்சாலங்குறிச்சி! இரு, உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்!

காட்சி 16

இடம்: கட்டபொம்மு அரண்மனையில் மந்திராலோசனை சபை.

உறுப்பினர்: கட்டபொம்மு, தானாபதி, ஊமைத்துரை.

நிலைமை: கட்டபொம்மு மந்திராலோசனை சபையில் அங்குமிங்கும் யோசனை செய்து உலாவிக் கொண்டிருக்கும் போது தானாபதிப் பிள்ளை ஓடிவந்து வணங்குதல்.)

தானா ; மகாராஜா ! வணக்கம் !

கட்ட: வாரும் தானாபதியாரே! உமக்கு ஒன்றும் ஆபத்து இல்லையே?

தானா: உங்கள் கிருபையால் எனக்கொன்றும் ஆபத்தில்லை மகாராஜா! ஆனால்…

கட்ட: ஆனால் என்ன?

தானா: என்னைப் பிடிப்பதற்காக ஆத்தூருக்கு நேற்று இருநூறு படை வீரர்கள் வந்து என் வீட்டை வட்டமிட்டுக் கொண்டார்கள். நல்ல வேளையாக நான் தந்திரமாகத் தப்பி வந்து விட்டேன். ஆனால் வீட்டிலிருந்த என் பெண்டு பிள்ளைகளை எல்லாம் சிறை செய்து காண்டு போய்விட்டார்கள் மகாராஜா!

கட்ட: ஆ அப்படியா செய்தார்கள்? அயோக்கியர்கள்! நீர் தான் என்ன பிள்ளை, பேடியா? எதிரிகள் வந்து உம் மனைவியைச் சிறைபிடித்துச் செல்வதைப் பார்த்துக் கொண்டிருக்க உம் மனம் எப்படித் துணிந்தது?

தானா: அந்நிலையில் நான் அவர்கள் முன்னிலையில் பட்டிருந்தால் என்னைச் சித்ரவதை செய்திருப்பார்கள் பிரபு!

கட்ட : ஆம்; சித்ரவதை மட்டுமா செய்வார்கள். பாபிகள், வெள்ளையத்தேவரையல்லவா போர்க்களத்தில் கொன்று விட்டார்கள்.

தானா: வெள்ளையத் தேவர் இறந்து விட்டாரா? அவரே இக் கதிக்குள்ளாகி விட்டார் என்றால் நான் எம்மாத்திரம் அரசே! எனக்கு அவமானமாக இருக்கிறதே! இதை நான் எப்படித் தீர்ப்பேன்? மனைவியைப் பறிகொடுத்து மானமற்று நிற்கும் மரக்கட்டை என்று தூற்றுவார்களே பிரபு! அவர்களை அந்தச் சண்டாளர்கள் என்ன பாடு படுத்துகிறார்களோ தெரியவில்லையே! என் மானம், மரியாதை போயிற்றே!

கட்ட: பிள்ளையே! ஏன் இப்படி நிலை தடுமாறுகிறீர்? நீர் பயப்படாதேயும். நான் சென்று உம் மனைவி மக்களை மக்களை மீட்டு வருகிறேன்.

[தம்பி ஊமைத்துரை வேகமாக ஓடி வந்து ‘அண்ணா’ என்று கட்டியணைத்துக் கொள்கிறான்.)

கட்ட: யார்? தம்பி ஊமைத்துரையா? (இரண்டுபேரும் கட்டி யணைக்கிறார்கள்)

ஊமை: அண்ணா!

கட்ட: தம்பி! (இருவரும் விடுவித்துக்கொள்ளல்) தம்பி, முருகனுக்கு எல்லாம் சரிவரச் செய்துவிட்டாயல்லவா?

ஊமை: ஆம், அண்ணா! அண்ணா, என்னை மன்னித்துவிடுங்கள். என்னைத் தம்பி என்றழைக்காதீர்கள் – தன்னலக்காரன் என்றழையுங்கள் – சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்ளுகிறேன். நான் உங்களுக்கு தம்பியாகப் பிறக்கத்தான் பாக்கியம் செய்தேனே தவிர, உங்கள் சுகத்தில் பங்கெடுக்கத்தான் ஓடி வந்தேனே தவிர, உங்கள் ஆபத்துக்கு உதவி செய்ய முடியாமல் போன உலோபி, உளுத்தன், உடன் பிறந்தவனாயிருந்தும் உற்ற சண்டையில் உடன் இருந்து உதவிபுரிய முடியாமல் போன ஊனன்; இந்தப் பாபியினால் உங்களுக்கு ஏதாவது பயனுண்டா? நான் உடன் பிறந்தும் உதவாதவன்; ஊக்கமிருந்தும் ஆக்கமிழந்தவன்; கை கால் இருந்தும் முடவன்; கண்ணிருந்தும் குருடன்; உயிர் இருந்தும் இறந்தவன்; இனி என்னை ஒவ்வொருவரும் உயிரற்ற ஊமைத்துரை என்றழைக் கட்டும்.

கட்ட: தம்பி! என் வீணாக மனதைப் போட்டு குழப்புகிறாய். யுத்தத்திற்கு பயந்து ஓடி ஒளிந்து கொள்ளவில்லையே நீ! நான்தானே உன்னை திருச்செந்தூருக்கு அனுப்பி வைத்தேன். இப்படியெல்லாம் வருமென்று யார் நினைத்தது நடந்தது நடந்து விட்டது. நீ ஒன்றுக்கும் கவலைப்படாதே! எல்லாம் செந்திலாதிபன் திருவருள்போல் நடக்கும். வா ! நீ வா
இன்னும் சாப்பிடவில்லையே! தானாபதியாரே, வாரும் போகலாம்.

காட்சி 17

இடம்: படுக்கை அறை.

உறுப்பினர்: சக்கம்மாள், மூன்று உருவங்கள்.

நிலைமை: சக்கம்மாள் கட்டிலில் படுத்துக் கொண்டிருக்கிறாள். தனது கணவனை இரண்டு வீரர்கள் பிடித்துக்கொண்டு போய் தூக்கிலிட்டு கொல்வது போல் கனவு காண்கிறாள்.

சக்கம்மாள்: ஆ! வேண்டாம்; கொல்ல வேண்டாம்; சுவாமியைக் கொல்ல வேண்டாம். சுவாமி!சுவாமி!!

[திடீரென எழுந்து பார்க்கிறாள்]

சக்க: ஆ ! என் சுவாமிக்கா ஆபத்து! தேவி! என்னைக் காப்பாற்று தாயே! தாயே தயாநிதி! நான் கண்ட கண்ட கனவு பலித்துவிட்டால்… என் கதி…ஆ, அம்மா! (ஏக்கம்) எனக்கு அடைக்கலம் கொடு தாயே! உன் பாதார விந்தமே கதியென் றெண்ணியிருக்கும் என்னைக் காப்பதுன் பாரமல்லவா! நாதன் அப்படியென்ன தவறு செய்துவிட்டார்— இப்படி அகால மரணமடைவதற்கு தாயே? நினைத்தால் என் உள்ளம் நடுங்குகிறே த பாராண்ட வேந்தர் இப்படி பதை பதைத்துச் சாவதா? தங்கக் கயிற்றில் ஊஞ்சலாடிய அவர் உடல் இப்போது தூக்குக் கயிற்றில் ஊஞ்சலாடவா? வான் மதி போன்ற அவரது முகம் இ பாது வாடி வதங்க வேண்டுமா? தேன் மொழி போன்ற அவரது கீதத்தை இனி யாரிடம் கேட்பேன் தாயே? ஆண்களிலே அசகாயசூரர் என்று பேர் வாங்கிய அவர் இப்போது பகைவர் கைகளினால் படுகுழியில் வீழ்வதா? தாய்நாட்டுக்குச் சேவை செய்த என் சுவாமியின் உடல் இப்போது உருவழிந்தா போகவேண்டும்? முடிதரித்து அரசாண்ட எம் மன்னர் இப்போது முடிதுறந்தா மாளவேண்டும்? நாகரெத்தினத்தால் ஜொலித்த என் நாதன் தலை, இப்போது நாதியற்ற அழியவேண்டும். தாயே! என் நாதன் போன பின்பு நான் உயிரோடிருக்க முடியுமா? தருமம்தான் தழைக்குமா? சதி செய்யும் சதிகார சண்டாளர் களாகிய தாய் நாட்டு துரோகிகளுக்கு, அயல் நாட்டு அடிமை களுக்கல்லவா இக்கதி வாவேண்டும். இதுவும் உன சோதனையா?

காட்சி 18

இடம்: தானாபதி பிள்ளை வீடு.

உறுப்பினா: தானாபதி, சேவகன்.

நிலைமை: தானாபதி பிள்ளை அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருக்கிறார். அவருக்குப்பின் சேவகனும் போய்க்கொண்டிருத்தல்.

தானா: அட கடவுளே ! கடைசியா, பெண்டாட்டியைப் பறி கொடுத்த பேடியாவா நான் திரியவேண்டும் ஹும். (யோசனை) நேரில் சென்று வந்தால் என்ன? (யோசித்தல்) ஆம். அது தான் சரி. உடனே மகாராஜாவிடம் சென்று விஷயத்தை விளக்கி, விபரத்தைக் காட்டி…!

டர்னிங்

இடம்: அரண்மனை.

நிலைமை: அரசரும், தானாபதியும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

கட்ட: காட்டவும் வேண்டாம், போகவும் வேண்டாம். உமக்கு இப்போது மூளை சரியாய் இல்லை. நீர் போய்க் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள்ளும்.

தானா: மகாராஜா! நான் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது.

கட்ட: என்ன அர்த்தமிருக்கிறது? அங்கு சென்றால், நமக்கு அனர்த்தம் தான் விளையும்.

தானா: நான் சொல்ல வந்தது…

கட்ட: என்ன பிள்ளையே! பெரிய தொல்லையாய் இருக்கிறது, என்ன சொல்லப் போகிறீர்?

தானா மகாராஜா! கொஞ்சம் நிதானமாகக் கேட்கவேண்டும்.

கட்ட: சொல்லும்.

தானா: அரசே! நேற்று தோல்வியடைந்த கும்பினி படைகள், திரும்பவும் பெரும் படைகளைத் திரட்டிக்கொண்டு, கூடிய சீக்கிரத்தில் வந்து நம்மை எதிர்க்கப் போவதாக வதந்தி உலவுகிறது. நம்மிடமோ போதிய பலம் இல்லை. இருந்த படைகளும் பாதிக்குமேல் காலியாகி விட்டது. ஆகையினால் அவர்களை இனி எதிர்க்க முடியாது.

கட்ட: அதற்காக?

தானா: அரசே! அரசே! அதற்காகத்தான் நாம் சற்றும் தாமதியாமல் திருச்சிக்கு போய் மேல் அதிகாரிகளைக் கண்டு பேசினால் நமக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கும். தாங்கள் தட்டாது வரவேண்டும்.

கட்ட: மந்திரியாரே! உமக்கு மனைவியை இழந்த துயரத்தால், மதிமயங்கி விட்டது. நீர் கூறும் யோசனை சரியானது தானா என்று யோசித்து முடிவு சொல்லும்.

தானா: நான் தீர யோசித்துத்தான் முடிவு செய்திருக்கிறேன் மகாராஜா! அதிலும் முன்னர் ஒரு தடவை நாம் அங்கு நாம் சென்றபோது நமக்களித்த அன்பை மறக்க முடியுமா? அங்கு போனால் நமக்கு நிச்சயமாக நன்மை கிட்டும். தாங்கள் தடையேதுமின்றி வரவேண்டும்.

கட்ட: பிள்ளையே! முன்னர் போனது வேறு முறை; இப்போது இரு தரத்தாருக்கும் பலத்த போர்! இருவருக்கும் எத்தனையோ உயிர் சேதம், உடல் சேதம், பொருள் சேதம். இப்படி இருக்கும் இந்த நேரத்தில் நாம் அங்கு சென்றால் நம்மை அவன் கண்டிப்பாக சிறை செய்துவிடுவான். அத்தோடு கோட்டையையும் எளிதில் பிடித்துக்கொள்வான் பிள்ளையே!

தானா: அரசே! எதிரிகள் நம் கோட்டையை எட்டிப் பிடிப்பதற்குள் நாம் திருச்சிக்குப் போய், அதிகாரிகளைக் கண்டுபேசி விடலாம். இதில் நமக்கு இழுக்கு ஒன்றும் வந்துவிடாது. என் பேச்சைத் தட்டாமல் வாருங்கள் பிரபு!

கட்ட: நன்றாகயிருக்கிறது பிள்ளையே! முன்னர் நெல்லை கொள்ளை செய்து கொடும் பகையை மூட்டிவிட்டு, இப்போது அவர்களிடம் போய் உறவுமுறை கொள்ளவேண்டும் என்று சொல்வது என்ன மதி? இப்போது நாம் கோட்டையை விட்டு வெளியே போனால் உலகம் நம்மை என்ன சொல்லும் தெரியுமா வெள்ளையரின் குண்டுகளுக்கு ஆற்றமாட்டாமல், வீறு பேசிய வீரபாண்டியன் கோட்டையை விட்டு வெளியே பயந்து போய்விட்டான் என்றுதானே உலகம் நம்மைத் தூற்றும்!

தானா: அரசே! நாம் யுத்தகளத்திலிருந்து பயந்து ஓடினால் தானே நம்மை உலகம் அப்படித்தூற்றும்? அதிலும் வீரப்போர் செய்து வெற்றியடைந்திருக்கும் நாமே நேரில் சென்று சமாதானத்தை விரும்புவதாக இருந்தால், அது நமக்கு பெருமைதானே தவிர, சிறுமை இல்லை.

கட்ட: பிள்ளையே! வானம் வருவதாயினும் சரி, மானமிழந்து நான் வாழ விரும்பவில்லை. ஆனவரையிலும் அமர்க்களத்திலே போரிட்டு மாண்டாலும் மாள்வேனேயன்றி, ஈனமாக எவனிடத்திலேனும் போய் இச்சகம் கேட்க நான் தயாரில்லை. இன்று வந்ததுபோல், இனி எத்தனை மடங்கு அதிகமான படை வந்தபோதிலும் அவைகளைக்கொன்று குவிக்கும் திறமை என்னிடமுண்டு. நீர் ஒன்றுக்கும் பயப்படவேண்டாம்.

தானா: அரசே! அடியேனின் கடைசியான ஒரு வேண்டுகோள்…

கட்ட: என்ன?

தானா: மகாராஜா, அபாயம் நம்மை அணுகிக்கொண்டிருக்கிறது. தக்க உபாயத்தோடு நாமிப்போது தப்பித்துக்கொண்டால் தான் நல்லது. முதலில் நான் சொல்வது உங்களுக்கு சரி யென்று படவில்லையானாலும், முடிவில் நன்மையாகவே முடியும். ஆகையால் தாங்கள் கிருபை செய்து, என்மீது நம்பிக்கை வைத்து என்னோடு வாருங்கள். (மன்னர் காலில் விழுந்து பிடித்துக்கொண்டு) மகாராஜா! என் வார்த்தையைத் தட்டாதீர்கள்.

கட்ட: (பிள்ளையை கை தூக்கி நிறுத்தி) எழுந்திரும் பிள்ளையே! (அங்குமிங்கும் உலாவிக்கொண்டு) (தனக்குள்) நமக்கும் சரியான படை பலம் இப்போது இல்லை. ஒரு ஒரு வேளை மேலதிகாரிகள் நம்மீது கொண்டுள்ள அன்பு காரணமாக நமக்கு நன்மை செய்தாலும் செய்யலாம். பிள்ளையையும் நன்றாகத் தெரிந்தவர்களை நானும் போய்ப் பார்த்தால்தான் என்ன குற்றம்? ஆம், அதுதான் சரி. (தானாபதியை நோக்கி) சரி பிள்ளையே! உம் இஷ்டப்படியே போவோம். பிரயாணத்திற்கு வேண்டிய வசதிகளைச் செய்யும்.

தானா: உத்தரவு பிரபு! (தானாபதி போகிறார்)

[அரசர் உலாவிக்கொண்டிருக்கையில் ஊமைத் துரை வருகிறார்]

ஊமை: அண்ணா, பலமான யோசனையா?

கட்ட: தம்பி வா-உன்னைத்தான் எதிர்பார்த்திருந்தேன்.

ஊமை: அப்படி என்ன விஷயம், அண்ணா?

கட்ட: தம்பி! நான் திருச்சிராப்பள்ளியில் உள்ள மேலதிகாரி களைக்கண்டு பேசி, பானர்மென் செய்துள்ள தீங்குகளை எடுத் சொல்லி பிள்ளையின் மனைவி, மக்களையும் அழைத்து வருகிறேன்.நீ கோட்டையை பத்திரமாகக் காத்துக்கொள்.

ஊமை: அண்ணா, இது என்ன மதியீனம்! உங்களுக்கும் மதி மயங்கி விட்டதா என்ன? இடர்ப்பட்ட வேதனை தாங்காது தானாபதி சொல்கிறார் என்றால், அதைத் தாங்களுமா கேட்க வேண்டும்? தாங்கள் இப்போது அங்கு போனால் இங்கு இருப்பவர்களின் கதி என்னவாகும் என்று யோசித்தீர்களா?

கட்ட: தம்பி! நீ ஒன்றுக்கும் அஞ்சவேண்டாம். எல்லாவற்றையும் நான் சிந்தனை செய்து தான் சொல்கிறேன். நீ மறுக்காமல் விடைகொடு.

ஊமை: அண்ணா, ஏதோ அது என் மனதிற்கு சரியென்று படவில்லை. பிறகு உங்களிஷ்டம். ஆனால் நீங்கள் போவதாக இருந்தால் நானும் கண்டிப்பாக உங்களுடன் வருவேன்.

கட்ட: பின்பு கோட்டைக்காவலுக்கு பொறுப்பு…?

ஊமை: சிவத்தையாவும், அண்ணன் வீரகஞ்சயரும் இருக்கிறார்கள்.

கட்ட. ஆம்; அப்படியே செய்வோம். நான் போய் சக்கம்மாளிடம் சொல்லி வருகிறேன். நீ தயாராய் இரு.

காட்சி 19

இடம் : பூஜை அறை.

உறுப்பினர்: கட்டபொம்மு, சக்கம்மாள்.

நிலைமை: (சக்கம்மாள் முருகப்பெருமான் முன் முழங்காலிட்டு பாடிக்கொண்டு முடிக்கிறாள்)

சக்: ஆறுமுகா! உன் அருளால் எல்லா உயிர்களும் இன்புற்றி ருக்க அருள் புரியவேண்டும். என் சுவாமிக்கு ஒரு ஆபத்தும் வராமல் பாதுகாக்கவேண்டும், தேவா!

கட்ட: (பூஜை அறையை நோக்கி வந்து) தேவி!

சக்: சுவாமி, வாருங்கள். இப்போதுதான் வருகிறீர்களா?

கட்ட : ஆம், பூஜை எல்லாம் முடிந்ததா?

சக்: ஆம் சுவாமி, நீங்களும் பெருமானைப் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்.

(சூடத்தட்டு காட்டுகிறாள். அப்போது கால் இடறி கையில் வைத்திருக்கும் சூடத்தட்டானது தவறி விழுகிறது.)

சக்: ஆ ! …அபசகுனம் சுவாமி! நமக்கு ஏதோ ஆபத்து நேர இருக்கிறது.

கட்ட: தவறுதலாகக கைதவறி கீழே விழுந்துவிட்டால் அது அபசகுனமாகுமா கண்ணே!

சக்: சுவாமி! எனக்கென்னவோ பயமாயிருக்கிறது.

கட்ட : கண்மணி! நமக்கு ஒரு குறைவும் வராது. நீ ஒன்றுக்கும் பயப்படாதே.

சக்: சுவாமி! நேற்றுப் போரில் தோற்றுச் சென்ற வீரர்கள் திரும்பவும் வந்து விடுவார்களோ என்று தான் பயமாயிருக்கிறது.

கட்ட: கண்ணே! அவன் இனி இங்கு எங்கே வரப்போகிறான். பட்டது போதாதா அவனுக்கு! அதைப் பற்றிதான் நானும் உன்னிடம் சொல்ல வந்தேன்.

சக்: என்ன அது?

கட்ட: தேவி! வெள்ளை அதிகாரி பானர்மேன் என்பவன் நியாயமாக நம்மீ போர் தொடுத்து அநேக கஷ்டங்களை விளைவித்திருக்கிற படியால் அதைப்பற்றி திருச்சியிலுள்ள மேல் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி சமரசம் செய்துகொள்வதற்காக நான் திருச்சிவரை சென்று வரவேண்டும். ஒரு வாரத்தில் திரும்பிவிடுவேன். உனது அன்புகலந்து இன்ப மொழியால் எனக்கு விடைகொடு.

சக் சுவாமி! தாங்கள் இந்த நிலையிலா கோட்டையை விட்டு வெளியேறுவது? வேண்டாம், எனக்கு பயமாயிருக்கிறது, சுவாமி.

கட்ட: துணைக்கு நிறையப் படைகள் இருக்கிறது தேவி. நீ ஒன்றுக்கும் கலங்காதே. எனக்கு விரைவில் விடைகொடு; நான் சென்று வருகிறேன்.

சக்: சுவாமி என் வார்த்தையைக் கேளுங்கள். வாழ்ந்தால் எல்லோருமாக வாழ்வோம். மடிந்தால் எல்லோருமாக மடிவோம்.

கட்ட: கண்மணி! நீ சொல்வது உண்மைதான். ஆனால் ஆனால் நான் அங்கு செல்ல நினைப்பது எனது ஒருவனின் நலத்திற்காக மட்டுமல்ல, நம்நாட்டு மக்கள் நல்வாழ்வு வாழவேண்டும் – அந்நியன் ஆட்சிக்கு அடிபணியக் கூடாது- சுதந்திர வாழ்வு வாழ்வெண்டு மென்பதை நிலை நாட்டத்தான் நானே நேரில் சென்று வாழ்வு பெறவிரும்புகிறேன். அவன் சம்மதிக்க வில்லையானால் நாளையே போர்.

சக்: பிடிவாதம் செய்யாதீர்கள். நான் நேற்று ஒரு கெட்ட கனவு கண்டேன். அதைக்கண்ட நேரத்திலிருந்து எனக்கு இன்னமும் உடல் சிலிர்க்கிறது. (உடல் சிலிர்த்தல்) சுவாமி! பெரிய வீரன் ஒருவனை பலர்சேர்ந்து பிடித்துக் கொள்வது போலவும் முத்துமாலை அறுந்து விழவும், முன் கை வளையல் நொறுங்கி விழவும், முத்துச் சரப்பளி குலையவும் கண்டேன். அத்துடன் நமது தேவி கோவிலிலிருந்து ஒருவாலைப்பெண் பழைய சீலை கட்டிக்கொண்டு பரிதாபமான கோலத்தோடு வெளி யேறி நம் திருநகரைப் பார்த்து பார்த்து தேம்பித் தேம்பி அழுது இறுதியில் ஒருமுகமாய் வடதிசையை நோக்கி போக வும் கண்டேன். இன்று தாங்கள் கண் எதிரிலேயே தீபத் தட்டு தவறிக் கீழே விழவும் கண்டீர்கள். முருகப்பெருமான் நமக்கு ஆபத்து என்று சொல்லவே இந்த அறிகுறிகளைக் காட்டி யிருக்கிறார்.நாம் புத்தியோடு நடந்து கொள்வதுதான் நல்லது சுவாமி. என் வார்த்தையைக் கேட்காவிட்டாலும், இது நம் குலதேவதை சக்கம்மாளின் ஆணை என்றாவது கருதுங்கள்.

கட்ட: (கோபமாக) சக்கம்மா! ஏன் வீணாக மனதை அலட்டிக் கொள்கிறாய்? நான் போவதாக முடிவு செய்து விட்டேன். இனி அதை மாற்ற முடியாது. (அன்பாக அவள் கன்னத்தை பிடித்துக்கொண்டு) கண்ணே, கனவைக் கண்டா கலங்குவது? கண்ணீரைத் துடைத்துக்கொள். (கண்ணீரைத் துடைத்தல்) என் கண் அல்லவா, விடை கொடு, நான்போய்வருகிறேன்.

சக்: சுவாமி! தாங்கள் எதிரிகளிடம் சிக்கிக் கொள்வீர்களோ என்று தான்…

கட்ட: கண்ணே! நானா, எதிரியின் கைகளிலே சிக்கிக்கொள் பவன். (சிரிப்பு) சக்கம்மா, நீ கலங்காதே. கலங்காதே. அரண்டு உருண் டோடியிருக்கும் எதிரிகள் திரண்டு ஒரு முகமாக வந்தாலும் அவர்களை உன் திருமுகத்தின் நினைவால் எழுந்த வீரத்தால் சின்னாபின்னம் செய்துவிடுவேன். உன் பூவிதழிலே காவியப் புதுமைகளைக் கண்ட நான் எதிரிகளை புறங்காட்டி ஓடச் செய்வேன். பளிங்கு போன்ற உன் கண்ணாடிக் கன்னத்தை கிள்ளி விளையாடி நான் அதிலே என்னைக்கொல்ல வரும் பகைவனைக் காண்பேன். நாதா என்றழைக்கும் உனது ஒவ் வொரு இன்பக்குரலும் என்னை வாவா என்றழைக்கும். வர வழி மறுக்கும் வஞ்சகரை எனை நீ நெஞ்சத்துள் வைத்திருக் கும் பாசத்தைக்கொண்டு கொன்று குவித்து விடுவேன். எனக்கு ஏற்படும் ஒவ்வொரு ஆபத்திலும் நீ இடும் ஒவ்வொரு அபயக்குரலும் என்னை ஆயிரம் கட்டபொம்மன்களாக மாற்றும். உன் கண்களிலிருந்து பெருகிவரும் கண்ணீரெல்லாம் எதிரிகளின் செந்நீரை உறிஞ்சும் விஷ நீராக மாறும். நான் உன் கண்ணீரை நோக்கினால் என் வாள் எதிரியின் வாழ் நாளின் எல்லையை நோக்கும். என்னைக் காண நினைக்கும் உனது ஒவ்வொரு இன்பத்துடிப்பும் எதிரிகளை வானலோகத்திற்கு இழுத்துச் செல்லும் எனது இதயத் துடிப்பாகமாறும். எங்கே உன் சிரித்த முகத்துடன் எனக்கு சீக்கிரம் விடை கொடு!

சக்: சுவாமி! நான் சொல்வது உங்களுக்குத் தெரியவில்லையா? நமக்கு இருந்த நல்லகாலம் நம்மைவிட்டுப் போய்விட்டது உடன் இருந்த தேவியும் ஊரைவிட்டு போய்விட்டாள். நிலையில் நீங்களும் என்னை விட்டு போய்விட்டால் நான் எப்படி உயிர் வாழமுடியும்? உங்கள் பிரிவை என்னால் எப்படி சகிக்க முடியும்? பட்டு நொந்து வெந்து கொண்டிருக்கும் என் உள்ளம் எரிந்து சாம்பலாக வேண்டியதுதானா? பிள்ளை மொழி பேசிக் கிள்ளி விளையாடிய நீங்கள் இப்போது அப்பிள்ளை மொழி கேட்டும் அதை புறக்கணிக்கவா வேண்டும்? (ஏக்கத்துடன்) சுவாமி! என்னைத் தனியே தவிக்க விட்டுவிட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள். சுவாமி வாருங்கள் வாருங்கள் என்று கூவி மஞ்சத்தில் உட்கார வைத்த நான் போங்கள் என்று சொல்லி எப்படி புறக்கணிப்பேன். (மன்னர் காலில் விழுந்து அழுதல்)

கட்ட: (சக்கம்மாளைத் தூக்கிவிட்டு) கண்ணே, நான் உனக்கு இன்னும் சொல்ல என்ன இருக்கிறது? நீ என்ன சின்னக் குழந்தையா? கண்ணீரைத் துடைத்து கொள். எங்கே சிரி பார்க்கலாம். நான் வரட்டுமா? (அரசர் போகிறார்)

சக்: சுவாமி (என்று கீழே விழுகிறாள். ஓடிப்போய் முருகன் சிலை முன் விழுந்து) முருகா! முருகா!! முருகா!!! என்நாதனைக் காப்பாற்று!

காட்சி 20

இடம்: எட்டயாபுரம் எட்டப்ப நாயக்கர் அரண்மனை.

உறுப்பினர்: எட்டப்பர், சேவகன்.

நிலைமை: எட்டப்பர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு கடிதம் எழுதுகிறார்.

எட்ட: யாரங்கே?

சேவகன்: எஜமான்! (வந்து வணங்குதல்)

எட்: இந்தக் கடிதத்தைக் கொண்டுபோய், பாளையங்கோட்டையில் இருக்கின்ற கும்பினிபடை தளபதி, ஜெனரல் “பானர்மெ”னிடம் “எட்டயாபுரத்து ஜமீன்தார் எட்டப்ப நாயக்கர்” கொடுத்ததாகக் கொடுத்துவிட்டு வா. (கடிதம் கொடுத்தல்)

சேவ: அப்படியே அரசே! (வணங்கிப் போகிறான்)

எட் : (தனிமையில் உலாவிக்கொண்டு) நமது திறமையே திறமை! (சிரிப்பு) உரிமைப்போர் நடத்துகிறானாம் – திறமைகெட்ட மடையன். இந்த எட்டப்பருடைய கடிதம் துரைக்கு கிடைக்கும்; அஙகு கட்டபொம்மனுடைய கம்பெனிக்கு கிடைக்கும். (சிரிப்பு ) பீரங்கி குண்டுகளும் தாக்கிப் பிடிக்க முடியாத அந்த கட்டபொம்மனுடைய கோட்டை, நாளை எந்தத் தளவாடமும் இல்லாமல் பிடிபடப் போவதைக் குறித்து கம்பெனியார் நம்மீது எவ்வளவு பெருமைப்படுவார்கள். அவர்களால் நம்மை மறக்கத்தான் முடியுமா! “கட்டபொம்மன்”! தொலைந்தான் கட்ட பொம்மன் !! இனிமேல் நான் தான் பாளையங்களின் பட்டத் தரசன். இனி நான் வைத்ததுதான் சட்டம். தேச பக்தன், பெரிய வீரன், அசகாய சூரன் என்றெல்லாம் பேர்பெற்ற அந்த தீரனையும் பிடித்துக்கொடுத்து விட்டோமானால், நான் தான் வெள்ளையன்; வெள்ளையன் தான் நான். நான் அவர்களுக்கு செலுத்திவரும் கிஸ்தியைக்கூட வேண்டாம் என் சொல்லி விடுவார்கள். இனி எவர் பயமின்றியும் அரியாசனத்தில் சுகமாக வீற்றிருக்கலாம். முதல் வேலை கோட்டையைப் பிடித்துக்கொடுக்க வேண்டும்; இரண்டாவது கட்டபொம்மனை காட்டி கொடுக்கவேண்டும்; மூன்றாவது ஆங்கிலேயரின் அபிமானம் பெற்ற சிற்றரசனாக, அரசு செலுத்த வேண்டியது. வெள்ளையருக்கு உகந்த நண்பன் ஒருவன் இருக்கின்றான் என்றால், அது இந்த எட்டப்பன் தான் என்பதை நிலைநிறுத்த வேண்டும். மறக்க முடியுமா இந்த எட்டப்பரை!

காட்சி 21

இடம்: பானர்மென் அறை.

உறுப்பினர்: பானர்மென், பக்கட், இராமலிங்க முதலியார்.

நிலைமை: பானர்மென் கையில் உள்ள கடிதத்தை பார்க்கிறார்.

பானர்: மறக்க முடியுமா எப்டப்பரை! ஒருக்காலும் முடியாது!!

பக்கட்: (வந்துகொண்டு) என்ன செய்தியோ அப்படி?

பானர்: இந்தக் கடிதம் பதில் சொல்லும்!

[கடிதத்தைக் கொடுக்கிறார். வாங்கிப் பார்த்து, பக்கத்தில் வந்துகொண்டிருக்கும் இராமலிங்க முதலியாரிடம் படிக்கச் சொல்லுதல்]

எட்டயாபுரம்
8-9-1799

மேன்மை தங்கிய கும்பினி அதிகாரி, ஜெனரல் பானர்மென் அவர்களுக்கு, தங்கள் அடிமை எட்டயா புரத்தான் எழுதிக்கொண்ட கடிதம். நமஸ்காரம்! 7-9-1799ல் இரவு பத்தரை மணிக்கு கட்டபொம் மனும், அவனது தம்பி, தானாபதி உள்பட கோட்டையை விட்டு வெளியேறிவிட்டார்கள் என்று என் ஒற்றர்கள் மூலம் அறிந்தேன். எனவே சமுகம் இது சமயம் உடனே புறப்பட்டு பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்தால், எளிதில் கோட்டையைப் பிடித்துக்கொள்ளலாம். எனது படைகளை நான் முன்னமே அனுப்பியிருக்கிறேன். அத்துடன், கட்டபொம்மன் இப்பொழுது கோலார்பட்டியில் இருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. எனவே தாங்கள் படையை என்னுடன் அனுப்பி வைத்தால், கட்டபொம்மனையும் பிடித்துத்தர சித்தமாயிருக்கிறேன்.

இப்படிக்கு தங்கள் ஊழியன்,
எட்டப்ப நாயக்கர்,
எட்டயாபுரம்.

பானர்: பக்கட்! சிறிதும் தாமதம் செய்யாமல், நம் படையை இரண்டாகப் பிரித்து, ஒன்றை கோட்டையைப் பிடிப்பதற்கும், மற்றொன்றை கோலார்பட்டியில் இருக்கும் அவனைப் பிடிப்பதற்கும் அனுப்பி அந்த கட்டுக்கடங்காத கட்டபொம்மனைக் கைது செய்யும்.

பக்கட்: அப்படியே!

காட்சி 22

இடம்: கோலார் பட்டி ஜமீன் அரண்மனை.

உறுப்பினர்: இராஜகோபால நாயக்கர், கட்டபொம்மன், ஊமைத்துரை, தானாபதி பிள்ளை, சேவகன்.

நிலைமை: எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இராஜ: தாங்கள் மேல் அதிகாரிகளைக் கண்டு பேச வேண்டயது அவசியந்தானா?

கட்ட: அவசியம் என்று தான் படுகிறது.

இராஜ: அரியாசனத்தில் வீற்றிருக்க வேண்டிய தாங்கள் இப்படி அலையவேண்டியது தங்கள் பிராப்தம் தான். ஹும்……! என்ன செய்வது?

ஊமை: எல்லாம் அந்த அயோக்கியக் எட்டப்பனால் வந்த வினை தான். காட்டிக் கொடுத்ததோடுமல்லாமல், போருக்கு படைகளையும் அல்லவா திரட்டிக்கொண்டு வந்திருந்தான்! என் கையில் மட்டும் அவன் கிடைத்தால், அவனை கசக்கிப் பிழிந்து நெற்றியில் பொட்டிட்டிருப்பேன்.

இராஜ: அரசே! தாங்கள் வந்த விஷயம் பானர்மென் தெரிந்து கொண்டால்..

கட்ட: தெரிந்து கொண்டால்?

சேவகன்: (ஒடிவந்து) மகாராஜா! தாங்கள் இங்கிருப்பது எப்படியோ கும்பினியாருக்கு தெரிந்துவிட்டது. பெரிய படைகளோடு தங்களைப் பிடிப்பதற்கு உள்ளே புகுந்து விட்டார்கள்.

கட்ட: ஆம்! நான் எதிர்பார்த்ததுதான். பிள்ளையே, நானும் தம்பியும், எதிரிகளை வெட்டி வீழ்த்திக்கொண்டு முன்னால் போகிறோம். நீரும் எங்களைப் பின் தொடர்ந்து வந்துவிடும். தம்பி! ஹும்..

(வாளை உருவிக் கொள்கிறார்கள். வெள்ளைப் படைகளும் உள்ளே வந்து விடுகிறது. இரு தரப்பிற்கும் சண்டை நடக்கிறது. கட்டபொம்மனும் ஊமைத்துரையும் குதிரையில் ஏறித் தப்பி ஓடுகிறார்கள். தானாபதி பிள்ளை மட்டும் சிறைப்படுகிறார். சேவகர்கள் அவரைப்பிடித்து பானர்மென் முன்பு நிறுத்துகிறார்கள்.)

பானர்: (தானாபதியைப் பார்த்து) ஏ தானாபதி, இப்போது எங்கே உன் மன்னன்? இவ்வளவுதானா உன் மன்னனின் வீரம்? உடன் வந்த உன்னை விட்டுவிட்டு தன் உயிரைப்பாது காத்துக் கொண்டானே, அவனா வீரன்?

தானா: நீ மகா வீரன் தான். தனியே இருக்கும் எம் அரசரைப் பிடிப்பதற்கு இவ்வளவு பெரிய சேனையை திரட்டிக் கொண்டு வந்திருக்கிறாயே, நீ தான் மகாவீரன்! வாய்ப்பேச்சு பேசும் நீ எம் அரசர் முன் பட்டால் தெரியும் அவர் வீரமும் தீரமும் உனக்கு. உன்னைச் சொல்லி என்ன பயன். எல்லாம் இதோ இருக்கிறானே, குலத்தைக் கெடுக்க வந்த கோடலிக் காம்பன் – எட்டப்பன், இவனால் வந்த விளைவுதான்.

எட்: பிள்ளைவாள், கவனமாகப்பேசும் – தவறினால் மரணம் வரக் காத்திருக்கும் என்பது நினைவிலிருக்கட்டும்.

தானா: உனக்கு காலம் நெருங்கிவிட்டது.

எட்: ஆம்! எனக்கு நல்லகாலம் நெருங்கிவிட்டது. ஆனால் உன்னை காலான் நெருங்கிவிட்டான் போ.

பானர்: இழுத்து வாருங்கள் நியாய சபைக்கு.

(இரண்டு சிப்பாய்கள் இழுத்துப் போகிறார்கள்)

காட்சி 23

இடம்: நீதி மன்றம்.

உறுப்பினர்: ஜெனரல் பானர்மென், துரைகள், எட்டப்பர்.

நிலைமை: பானர்மென் நீதிபதியாக அமர்ந் திருக்க ஏனையோர் சபையில் யிருக்கிறார்கள்.

பானர்: கொண்டு வாருங்கள் தானாபதியை!

(சேவகர்கள் இருவர் பிள்ளையை இழுத்து வருகிறார்கள்.)

கூடி

பானர்: உமது பெயர்?

தானா: சிவசுப்பிரமணியபிள்ளை.

பானர்: நீதி சபை என்பதை மறந்து, நெஞ்சஞ்சாமல் பொய் வேறா சொல்லுகிறீர். உமது பெயர் என்ன? உண்மையைச் சொல்லும்.

தானா: சிவசுப்பிரமணிய பிள்ளை தான்.

பானர்: தானாபதிபிள்ளை என்பது உமது பெயர் இல்லையா?

தானா: இல்லை. அது என் பெயர் இல்லை.

பானர்: (எட்டப்பரைப் பார்த்து கோபமாக) எட்டப்பரே!

எட் : பிரபு ! தானாபதி என்பது அவர் செய்துவரும் மந்திரி வேலைக்குச் சொல்லும் மாற்றுப் பெயர்.

பானர்: பிள்ளை என்பது?

தானா: நான் தான்.

பானர்: (சிரிப்பு ) நீர் தானா? உமது ஒருவருக்குத்தான் மூன்று பெயர்களோ! இன்னும் வேறு ஏதாவது பெயர்களும் உமக்கு இருக்கிறதா?

தானா: இல்லை.

பானர்: நீர் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்?

தானா: உன்னை ஒழித்துக்கட்ட செயல்பட்டிருக்கும் வகுப்பைச் சேர்ந்தவன்.

பானர்: முட்டாள்! கேட்ட வார்த்தைக்கு மட்டும் பதில்! நீர் பிறந்த குலம்?

தானா: சைவப்பிள்ளை குலம்.

பானர்: வேலை பார்ப்பது?

தானா: அன்னியனான, உன் அடக்குமுறை ஆட்சியை ஒழித்துக் கட்ட கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மு மகாராஜாவின் பிரதம மந்திரியாக

பானர்: அனாவசியமாக உளறாதே. கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டும் பதில் தந்தால் போதும்.

தானா: உண்மையை விபரமாகச் சொன்னேன்; அவ்வளவு தான்.

பானர்: (கோபமாக) இந்த மூர்க்கன் இனி வாய் திறந்தால் குத் திக் கொன்றுவிடுங்கள்.

தானா: ஆ! இது என்ன அநியாயம்? நியாய சபையிலே என் வழக்கை எடுத்துக் கூறக்கூட எனக்கு உரிமை கிடையாதா? என் பேச்சுரிமையைப் பறிக்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது?

பானர்: (கோபமாக) சிப்பாய்!

(சிப்பாய் இருவர் தானாபதியை துப்பாக்கி முனையால் குத்துகிறார்கள். தானாபதி வலி பொறுக்கமாட்டாமல் கதறி கீழே விழுகிறார்.)

பானர்: கழுதையை தூக்கி நிறுத்துங்கள். (அவரைத் தூக்கி நிறுத்துகிறார்கள்.)

பானர்: பிள்ளையே! இல்லை, மந்திரியாரே, உம்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றங்களைத் தெரிந்து கொள்ளும். கும்பினியின் நெல்லைக் கொள்ளை செய்தீர், கொலை செய்தீர், எல்லை மீறி என் குடிகளுக்கு இடர் விளைவித்தீர், கம்பெனிக்கு வரி கொடாமல் உம் அரசரையும் தடுத்து வைத்தீர். இதை உண்மை யென்று ஒப்பக் கொள்கின்றீரா? அல்லது மறுக்கப் போகிறீரா?

தானா: நான் ஏன் மறுக்க வேண்டும்! மறுப்பதால் கிடைக்கம் போகும் பலன்?

பான: அப்படியானால் நீர் செய்ததை குற்றமென்று ஒப்புக்கொள்கின்றீரா?

தானா: ஒப்புக் கொள்கின்றேன், குற்றமாக அல்ல; அது என் கடமையாக..

பானர்: எது உன் கடமை? கொள்ளை அடிப்பதும், கொலை செய்வதும் தான் உன் கடமையோ? நீ…!

தானா: இல்லை; ஆனால் கொலைக்கும், கொள்ளைக்கும் தகுந்த காரணம் இருக்கிறது.

பானர்: ருசுப்படுத்த முடியுமா?

தானா: முடியும்.

பானர்: சரி போகட்டும். கம்பெனிக்கு வரி தரவிடாமல் தடுத்த குற்றத்திற்கு நீர் என்ன சொல்லப் போகிறீர்?

தானா: ஆம்; வரி கொடுக்க தடுத்தது உண்மைதான். கேன் நாங்கள் வரி கொடுக்கவேண்டும்? உனக்குச் சொந்மான இங்லாந்தில் வந்து நாங்கள் இருக்க இடம் கேட்டோமா? அல்லது உன்னைப் போல வியாபாரம் செய்ய வந்த வணிகனைப் போல் இருந்து பின் வையகம் ஆளும் உரிமையைப் பறிக்கப் பார்த்தோமா? நாற்பத்தேழு தலைமுறையாக எண்ணூறு வருஷங்களாக நாங்கள் இந்நாட்டை ஆண்டுவருகிறோம். இன்று அடியெடுத்து வைத்த நீ தான் எங்களுக்கு வரி கொடுக்கவேண்டிய கடமை இருக்கின்றதே தவிர நாங்கள் ஏன் உனக்கு வரி கொடுக்கவேண்டும்?

பானர்: பிள்ளைவாள்! உம்மை இங்கே பிரசங்கம் செய்வதற்காக அழைத்து வரவில்லை. நீதி விசாரிப்பதற்காக… நினைவிருக்கட்டும்.

தானா: நீதி விசாரணையா? நீ எனக்கு நியாயம் வழங்கப் போகிறா யாக்கும்! (சிரிப்பு) மன்னனைப் பிடிக்க வலுவில்லாமல், என் மனைவியைப் பிடித்து ஒரு பெண் என்றும் பாராமல், அவளைச் சிறையிலடைத்து வைத்திருக்கும் நீயா எனக்கு நியாயம் வழங்கப் போகிறாய்! நேருக்கு நேர் இருந்து போர் செய்ய முடியாது பேடியைப் போல யாருக்கும் தெரியாது நள்ளிரவிலே வந்து கோட்டையை வளைத்துக் கொண்ட நீயா, எனக்கு நியாயம் கூறப்போகிறாய்? நீ இவ்வித சூழ்ச்சிக்காரன் என்று முன்னமே தெரிந்திருந்தால் உன்னை சூரையாடியிருப்யார், எம் மன்னர்.

பானர்: சீ, மானங்கெட்ட மடையனே! பெண்டாட்டியைப் பறி கொடுத்துவிட்டு திண்டாடித் துடிக்கும் பேடியே, உனக்கு மானமில்லை?

தானா: ஆட்சி பீடத்தில் ஏறி உட்கார்ந்திருக்கிறோம் என்ற இறு மாப்பால் எதுவும் பேசலாமென்று நினைத்துப் பேசாதே! நீ ஆள நினைப்பவன்; நான் மாளத்துணிந்தவன். எனக்கு என்ன தண்டனையைக் கொடுக்க வேண்டுமென்று நீ நினைக்கிறாயோ, அதைச் சீக்கிரம் நிறைவேற்றிக் கொள். மீண்டும் மீண்டும் கேள்விகளைக் கேட்டு என் கோபத்தைக் கிளராதே!

பானர்:என்னடா செய்துவிடும் உன்கோபம்?

தானா: சமயம் வரும்பொது கூறுகிறேன்.

பான: (கோபமாக எழுந்து) இந்தத் தடியனைக் கொண்டுபோய் தூக்கிலிட்டு, தலையை வெட்டி, பாஞ்சாலங் குறிச்சியின் கோட்டையில் கொண்டுபோய் மாட்டி விடுங்கள். இனி இந்த ஆங்கிலேயரை எதிர்த்து போராடும் எந்தத் தமிழனுக்கும், இந்த கதிதான் என்தை ஒவ்வொரு தமிழனும் உணரட்டும்.

தானா: ஆ! ரத்த வெறி கொண்ட பேயே! முதலில் நீ ஒழிந்து போ!

[ஓடிப்போய் பானர்மெனைப் பிடித்து கழுத்தை நெறிக்கிறார். பானர்மென் சப்தம்போட்டுக் கொண்டு ‘சிப்பாய் சிப்பாய்’ என்று கதறுகிறார். சிப்பாய் ஓடி வந்து பின்னாலிருந்து தானாபதியின் மண்டையிலடிக்க அம்மா வென்று கீழே விழுகிறார். பிறகு சிப்பாய்கள் இழுத்துக்கொண்டு போகிறார்கள்.]

பானர்: நல்லவேளை! தொலைந்தது ஒன்று. அடுத்தபடியாக கம்பெனிக்கு எதிரிடையாகவும், கட்டபொம்மனுக்கு ஒத்தாசையாகவும் இருந்து இடையூறு செய்து வந்ததால் விசாரணையின்றி கம்பெனியின் எதிரிகளாகக்கருதி தானாபதியின் தம்பி வீரபுத்திர பிள்ளை, நாகலாபுரம் ஜமீன்தார் தம்பி சௌந்திர பாண்டிய நாயக்கர் ஆகிய இருவருக்கும் தூக்குத்தண்டனையும், நாகலாபுரம் ஜமீன் மந்திரி சாத்தூரப்ப பிள்ளை, கோலார் ஜமீன்தார் மைத்துனர் சௌந்திரலிங்க நாயக்கர், குளத்தூர் ஜமீன்தார் ஆறுமுகம் பிள்ளை, ஏழாயிரம்பண்ணை ஜமீன் தர்மப்பெருமாள் பிள்ளை ஆகிய நால்வருக்கும் ஆயுள் தண்டனையும் விதித்திருக்கிறேன்.

[பானர்மென் எழுந்து போகிறான்]

காட்சி 24

இடம்: தூக்குமேடை

உறுப்பினர்: தானாபதி, கொலையாளி, பொது மக்கள், சிப்பாய், வீரபுத்திர பிள்ளை, சௌந்திரபாண்டிய நாயக்கர், பானர்மென், எட்டப்பன்.

நிலைமை: படைவீரர்கள் சூழ மூன்று கைதிகளையும் விலங்கிட்டுப் பூட்டி தூக்கு மேடைக்கு கொண்டு வருகிறார்கள். பானர்மென், எட்டப்பன், மற்ற துரைகள் உட்கார்ந்திருக்கிறார்கள். பொதுமக்களும் கூட்டமாக மூவரையும் பரிதாபமான பார்வையில் பார்க்கிறார்கள். பொதுமக்களில் ஒருவன் முகம் வாடுகிறது. மற்றவன் உள்ளம் குமுறுகிறது. இன்னொருவன் கண்களில் நீர் ததும்புகிறது. மூவரும் தயாராயிருக்கும் மூன்று தூக்கு கயிறுகளுக்கு முன்னால் நின்றுகொண்டு கைகூப்பி கண்ணை மூடிக்கொண்டு மனதிற்குள் பிரார்த்திக்கிறார்கள். அது சமயம் அவர்களுடைய மனச்சாட்சி பேசுகிறது.

(நிழற் காட்சியில் மூன்று பேர்களுடைய உருவத்தையும் காட்டி முதலாவது தானாபதி முகம் பேசுகிறது.)

தானா: தாயே! என்னைப் பெற்று வளர்த்த தாயகமே! உன் வயிற்றில் எத்தனையோ மக்கள் தோன்றி மறைந்திருக் கிறார்கள். அவர்களில் நானும் ஒருவன். மகிழ்ச்சியால் உன் மடியிலே தவழ்ந்து விளையாடிய நான் இப்போது லேயே மடியப்போகிறேன். எம் மன்னர் அறிவாரா? என் மனத் துடிப்பை இப்போது அவர்களுக்கு எப்படி உரைப்பேன்? எனது மனமார அவரிடத்தில் மண்டி யிட்டு மன்னிப்பு கேட்கக்கூட கொடுத்து வைக்காத பாபி நான். நான் கெட்டதுமல்லாமல் எம்மன்னரையும் கெடுத்து, பாரலையவைத்துப் பரதேசியாக்கிய பாதகன் நான். வர மறுத்த தங்களை வழிமறித்து இழுத்து வந்த மகா பாவி நான் அரசே! அரசே! என்னை மன்னிப்பீர்களா? (தலையில் ஓங்கி அறைந்து கொள்ளுதல்) கோட்டையிலே இருந்திருந் தால் வெற்றியாவது, வீரசுவர்க்கமாவது கிடைத்திருக்கும்.

(அடுத்தாற் போல் வீரபுத்திரபிள்ளை மனச் சாட்சி பேசுகிறது.)

வீர: ஆம். அனுபவிக்கத்தான் வேண்டும். நாடிவந்த வெள்ளை யனை கால் கடுக்கத் தேடிச்சென்று கைகூப்பி பாடிநிற்கும் பேடிகளுக்குத்தான் இப்போது காலம் மோடி வாசிக்கிறதே தவிர நம்மை நினைத்து வருந்தும் வாய்ப்பு எங்கிருக்கிறது? நானும் அந்த எட்டப்பனைப்போல் கெடு புத்தியோடு வாழ்ந் திருந்தால் அவனை விடப் பத்துமடங்கு மேன்மையாகத்தான் வாழலாம். சுதந்திரமில்லாத வாழ்வு, ஒரு வாழ்வா? எட்டப்பா! என்னைக் காட்டிக்கொடுத்தாய்; எட்டி உதைத் தாய்; இப்போது கொட்டி நகைக்கிறாய். ஆனால் உன்னைப் பார்த்து ஊரே திட்டி நகைக்கிறது என்பதை மறந்து விட்டாய்! பிறந்தவன் இறப்பது திண்ணம். மானாபிமானமற்ற மனிதனாய் வாழ்வதைவிட வீதியிலே பிச்சை யெடுப்பதே மேல்! பலனற்றுத் தவித்து நலம் கெட்டு தலம் விட்டு அல்லல் பட்டாலும் அன்னியன் கைபட்டு உயிர் துறப்பது கூடாது. அதிலும் அன்னியனுடனிருந்து தன்னவனைக் காட்டிக் கொடுக்கும் தமிழனும் ஒரு தமிழனா?

(சௌந்திரபாண்டிய பிள்ளையின் மனச்சாட்சி பேசுகிறது)

சௌ: ஆம்! நானும் ஒரு தமிழன் – நீயும் ஒரு தமிழன். நாட்டுக்காக பாடுபட்டவன் நான் – காட்டிக்கொடுக்க திட்டமிட்டவன் நீ! நீ இன்று அடைந்த பலன் தான் என்ன? என்றாவது ஒரு நாளாவது மண்ணோடு மண்ணாவது மட்டும் திண்ணம். அப்போது உன்னைச்சுற்றி பேய்களும், நாய்களும் தான் வருமே தவிர ம தவிர உனக்காக கண்ணீர் வடிக்க ஒரு தமிழன் கூட வரமாட்டான். என்னருமைத் தாய்நாட்டு பக்தர்களே! தேசத் தொண்டர்களே! இந்நாட்டில் அலங்கார உடை உடுத்தித்திரியும் அனாமதேயப் பேர் வழிகளின் மீது, நாட்டுக்கு துரோகம் விளைவிக்கும் நாசகாரர்கள் மீது உங்களுக்கு எப்போதும் ஒரு கண் இருக்கட்டும். அவர்கள் இருக்கும் வரை நம் நாட்டிற்கு விமோசனமே கிடையாது.

தானா: அயராது உழைத்து, உருக்குலைந்த என் அருமைப் பாஞ்சைப் பிரஜைகளே! கடைசியாக நான் உங்களிடம் கேட் டுக் கொள்வது என்னவென்றால், என் தாய் நாட்டுக்காக நான் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். நாட்டுக்காக தியாகம் செய்த என் ஆவி, மறுபடி யும் இந்த நாடு விடுதலை பெறும் வரையும் உங்கள் வீட்டிலே ஊசலாடிக் கொண்டிருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

வீர: இதோ தொங்கும் இந்த சுருக்குக் கயிற்றை மறந்து விடாதீர்கள்!

சௌ: இந்த நிகழ்ச்சியை மறந்து விடாதீர்கள்!

தானா: இந்த நாடு விடுதலை அடைந்ததும் – பாரத நாடு விடுதலை அடைந்ததும் எந்தக் குற்றத்திற்காக நான் தூக்கிலிடப் பட்டேனோ, எவன் உதவியால் தூக்கிலிடப்பட்டேனோ, அந்தக் கயவனை, (கோபமாக) காட்டிக்கொடுக்கும் கயவனை …!

வீர: (கோபமாக) தேசத் துரோகியை…!

சௌ: (கோபமாக) அன்னியன் அடிவருடியை !

தானா: உள்ளிருந்து உலை வைக்கும் உலோபியை!

வீர : முடிவாக தான் பிறந்த நாட்டைக் குறைகூறி மேல் நாட்டை அறை கூவி அழைக்கும் அயோக்கியனை…!

சௌ: தாய் நாட்டை சரிக்கச் சதி செய்யும் ஒவ்வொரு சதிகாரக் கூட்டத்தினரையும் இதே கயிற்றில் ஏற்றுங்கள்.

தானா: என் உயிர் பதை பதைப்பது போல், பதை பதைத்துச் சாவதைப் போல் அவர்கள் உயிரும் பதை பதைத்துச் சாக வேண்டும். அத்துடன் நீங்கவேண்டும்- தாய்நாட்டின் மீதுள்ள சாபம்.

(மூவரையும் ஒன்று போல் கழுத்தில் கயிற்றை மாட்டுகிறார்கள் கொலையாளிகள். அத்துடன் மூன்று உருவங்களும் கயிற்றிலே தொங்கிக் கொண்டிருக்கிறது. அவற்றில் தானாபதியின் தலையைத் துண்டித்து ஈட்டியால் குத்தி கோட்டையில் நட்டு விடுகிறார்கள்)

காட்சி 25

இடம்: காடு.

உறுப்பினர்: கட்டபொம்மன், ஊமைத் துரை, வீரகஞ்சயன்.

நிலைமை: கட்டபொம்மன் காட்டில் பாறை ஒன்றில் உட்கார்ந்துகொண்டு சோக மாகப் பாடிக் கொண்டிருக்கிறார். ஊமைத்துரை ஏதோ கிழங்குகளை தீ மூட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஊமை: அண்ணா! நாம் கோட்டையை விட்டுப் புறப்பட்டு இன்றோடு ஏழு நாட்கள் ஆகின்றன. இனியும் தாமதித்தால் எதிரி கள் நம்மை சிறைப்பிடித்து விடுவார்கள். வாருங்களண்ணா, நாம் சீக்கிரமாக திருச்சிப்போய் சேருவோம்.

கட்ட: தம்பி! எனக்கு எனக்கு இரண்டு நாட்களாக மனம் ஒரு நிலையில் இல்லை. ஏதோ ஒரு பெரிய ஆபத்தை எதிர்பார்ப்பது போல் இருக்கிறது. கோட்டையிலே விட்டு வந்த நமது குடும்பமும் கோலார்பட்டியில் பிடிபட்ட தானாபதியாரும் என்னவானார்களோ?

ஊமை: அண்ணா! நீங்களா, இப்படி மனங்கலங்குவது! கேவலம், இந்த வெள்ளை மூஞ்சிகளால், உங்களை என்ன செய்துவிட முடியும்? அன்று ராமலிங்க விலாசத்திலே ஐயாயிரம் வீரர்கள் சேர்ந்திருந்து பிடிக்க முடியாத பேடிகளால், போர்க்கோலம் பூண்டு, பெரும் படையுடன் திரண்டு வந்து, பீரங்கிக் குண்டுகளையும் கொண்டு வெற்றிகாண முடியாத வீணர்களால் தங்களை என்ன செய்துவிட முடியும், அண்ணா? அண்ணா, நேரே திருச்சிக்குச் சென்று நியாயம் கேட்போம்; கொடுத்தால் ஆட்சி. இல்லையென்றால் அவனது சூழ்ச்சியையும், புரட்சியால் வென்று விடுவோம்.

கட்ட: தம்பி! நீ நினைப்பது முடியாத காரியம். காலம் கடந்து விட்டது. நாமொன்று நினைக்க, தெய்வமொன்று நினைத்து விட்டது. அவர்களை அன்று அந்த இடத்திலேயே கொன்றிருக்கவேண்டும்; தவறிவிட்டோம். ஆனால் இன்று நாடிழந்து, நலமிழந்து ஏறிவந்த குதிரையின் குடலறுந்து கால் கடுக்க வெயிலடிக்க நடை நடந்து உண்ண உணவிழந்து திரியும் நம்மால் இப்போது என்ன செய்ய முடியும்?

(வீர கஞ்சயன் அண்ணா என்று ஓடி வரவும், கட்டபொம்மன் தம்பி என்றழைத்து ஓடி வரவும், ஊமைத்துரை அண்ணா றழைத்து ஓடி வரவும், வீரகஞ்சயன் ஊமைத்துரையைப் பார்த்து தம்பி என்ற ழைத்து ஏக காலத்தில் மூவரும் கட்டித் தழுவிக் கொள்கிறார்கள்)

கட்ட: வீர கஞ்சயா, நீ எப்படி இங்கு வந்தாய்? நாங்கள் இங்கிருப்பது உனக்கு எப்படித்தெரியும்? தானாபதியைப்பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?

ஊமை: அண்ணா, கோட்டையில் எல்லோரும் சௌக்கியந்தானா?

பீர: தம்பி, எல்லோரும் சௌக்கியந்தான். ஆனால்…

கட்ட: ஆனால் என்ன?

கட்ட: என்ன தம்பி விஷயம், சொல் சீக்கிரம்.

வீர: அட கடவுளே !

வீர: அண்ணா! உங்களை நான் இந்நிலையிலா காணவேண்டும், அண்ணா! (ஊமைத்துரையைப் பார்த்து) தம்பி! என்னை மன்னித்து விடு. நான் பாபி (அழுதல்)!

கட்ட: தம்பி ! என் அழுகிறாய்? வரும் விதி வந்து தானே தீரும். எல்லாம் நம் விதிப்பயன். அதிருக்கட்டும். சிறைப்பட்ட பிள்ளை என்னவானார்?

வீர: அண்ணா, இதை சொல்லவா நான் இங்கு வரவேண்டும்? என்னையும் அவருடன் சேர்த்து தூக்கிலேற்றியிருக்கக் கூடாதா?

கட்ட & ஊமை: ஆ!…

கட்ட: என்ன சொன்னாய்? தானாபதியை தூக்கிலிட்டுவிட்டார்களா?

வீர: ஆம்.

கட்ட: (பெரிய சத்தத்தில்) ஆ! முருகா ! (என்று தலையிலடித்துக்கொண்டு) பிள்ளையே! என் சொல்லைக் கேட்டு கோட்டையிலே இருந்திருந்தால் உமக்கு இந்தக் கேடு வந்திருக்குமோ? நீர் துடி துடித்து இறக்கும்போ இறக்கும்போது எதை நினைத்துக்கொண்டு என்ன சொல்லி இறந்தீரோ!

ஊமை: (வீர கஞ்சயனைப்பார்த்து) அண்ணா! நடந்ததை விபரமாகச் சொல்லுங்கள்.

வீர: நீங்கள் கோலார் பட்டியிலிருந்து தப்பி வந்ததும், தானாபதி பிள்ளை மட்டும் சிறைப்பட்டு விட்டார். கம்பெனியார் அவரை மறுநாள் விசாரித்து, தூக்கிலிட்டுக்கொன்று, அவர் தலையை வெட்டி நமது கோட்டையின் வாசலில் நட்டு விட்டார்கள்.

ஊமை: அப்படியா செய்தார்கள்?

கட்ட: அட, பாபிகள்!

ஊமை: நமது கோட்டையில் எப்படி நட்டுவைக்க முடிந்தது?

வீர: நீங்கள் கோட்டையை விட்டு வந்த விஷயம் எட்டப்பனுக்குத் தெரிந்து, அவன் போய் பானர்மெனிடம் சொல்லி பெரும் படையுடன் வந்து கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டான்

ஊமை: கோட்டையில் இருந்தவர்களின் கதி?

வீர: அந்தப்புரம் ஒன்றுக்கும் போகவில்லை.

கட்ட: தம்பி! உடனே சென்று தானாபதியைக் கொன்ற அந்த அரக்கனைப் பழிக்குப் பழி வாங்கவேண்டும். இவ்வளவுக்கும் காரணமாய் இருந்த, அந்த எட்டப்பனைக்கொன்று அவன் ரத்தத்தை உறிஞ்சி என் தாகத்தைத் தீர்க்கவேண்டும். வா போகலாம். (ஓடுகிறார்)

ஊமை: (ஊமைத்துரை தடுத்து நிறுத்தி) அண்ணா! நாமிப் போது அங்கு செல்லலாகாது. கோட்டையும் பிடிப்பட்டு விட்டது. வீரர்களும் சிறைபட்டிருப்பார்கள். நாம் நேரே திருச்சிக்குத்தான் செல்லவேண்டும். வாருங்கள் அண்ணா, போய் வருவோம்.

வீர: ஆம், அண்ணா! அது தான் சரி. முதலில் வந்த காரியத்தைக் கவனியுங்கள்.

கட்ட: சரி வாருங்கள் போவோம்.

காட்சி 26

இடம்: ரஸ்தா.

உறுப்பினர்: சேவகன், பொதுமக்கள்.

நிலைமை: சேவகன் ஒருவன் தம்பட்டம் அடிக்கிறான். ஜனங்கள் கூடுகிறார்கள்.

சேவ: இதனால் சகலமான ஜனங்களுக்கும் தெரிவிப்பது என்ன வெனறால், பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபாண்டிய கட்ட பொம்மனைப் பிடித்துக்கொடுப்பவர்களுக்கு ஐயாயிரம் ரூபாய் பரிசளிக்கப்படும். இது கிழக்கிந்திய கம்பெனியின் உத்தரவு.

[தம்பட்டத்தை அடித்துக்கொண்டு போய் விடுகிறான்,]

காட்சி 27

இடம்: கம்பெனியின் அரண்மனை.

உறுப்பினர்: பானர்மென், பக்கட், துரைகள், சேவகன்.

நிலைமை: நடனம் நடந்து கொண்டிருக்கும் போது சேவகன் ஒருவன் வந்து லெட்டர் ஒன்றை பானர்மெனிடம் கொடுத்துப் போகிறான். பானர்மென் வாங்கிப் படிக்கிறான்.

பானர்: சபாஷ்! பக்கட், இதோ இந்தக் கடிதத்தைப் படியும்.

புதுக்கோட்டை,
24-9-1799

மேன்மை தங்கிய தளபதி ஜெனரல் பானர்மென் அவர்களுக்கு, தொண்டைமான் புதுக்கோட்டை விஜய ரகுநாதன் எழுதியது.

வணக்கம். உங்கள் உத்தரவுக்கு கீழ்ப் பணிந்து பாஞ்சாலங்குறிச்சியானை, மிகவும் கஷ்டப்பட்டு பிடிக்க ஏற்பாடு செய்திருக்கிறேன்.

பாஞ்சாலங்குறிச்சியான் திருச்சிக்குச் செல்லும் வழியில், என்னைக் கண்டு பேசவேண்டுமென்று சொல்லி அழைத்துவரும்படி தூதர்களை அனுப்பியிருக்கிறேன். வந்ததும் அவர்களைத் தந்திரமாக, நிராயுத பாணிகளாக்கி விடுகிறேன். தாங்கள் பெரும் படையுடன் வந்து சிறைபிடித்துச் செல்லும் நேரத்தை நான் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். அப்போது வந்து உங்கள் காரியத்தைப் பூர்த்தி செய்து கொள்ளவும்.

இப்படிக்கு, தங்கள் ஊழியன்,
விஜயரகுநாதன்,
தொண்டைமான்.

பானர்: சரி! இனி கட்டபொம்மன் நம்மிடம் கிடைத்தமாதிரி தான். கேப்டன் பக்கட்! உடனே ஒரு பெரும்படையுடன் புதுக்கோட்டைக்குப் போய் மறைந்துகொள்ளுங்கள். சமயம் வந்ததும், தந்திரமாக தாவிப்பிடித்து கட்டபொம்மனைக் கட்டியுருட்டி என் காலடியில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். இம்முறையும் ஏமாந்து விடாதீர்கள். ஜாக்கிரதை!

காட்சி 28

இடம்: சாலை.

உறுப்பினர்: ஊமைத்துரை, அரசர், சேவகன்.

நிலைமை: வீதியில் அரசனும், தம்பியும் போகின்றனர். அப்போது சேவகன் அரசரை வணங்குகிறான்.

சேவ: மகாராஜா! தங்களைத் தொண்டமான் புதுக்கோட்டை மகாராஜா கையோடு அழைத்துவரச் சொன்னார்கள்.

கட்ட: யார்! புதுக்கோட்டை மகாராஜாவா?

சேவ: ஆம், அரசே! தாங்கள் அவருக்குச் செய்த உதவிக்குப் பதிலாக இந்த நேரத்தில்தான் தங்களுக்கு உதவ வேண்டு மென்று உங்கள் வருகையை மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கிறார் பிரபு!

கட்ட: ஆகா! அப்படியா? எவ்வளவு அன்பு! என்ன உரிமை!!

ஊமை: அண்ணா! இது தீமையை விளைவித்தாலும் விளைவிக்கும். நன்மை கிடைக்குமென்று எண்ணுவதற்கில்லை.

சேவ: நான் சொல்வது உண்மை.

கட்ட: எனக்குத் தெரியும் தம்பி, அவர் தன்மை.

ஊமை: வன்மையோடு இருந்த காலத்தில் அவர் நாடியிருக்கலாம் நம்மை. ஆனால்……

கட்ட: ஆனால் என்ன தம்பி? நீ ஒன்றுக்கும் கலங்காதே, வா போகலாம்.

ஊமை: சரியண்ணா! விதி வழிதானே மதி செல்லும்.

காட்சி 29

இடம் : விஜய ரகுநாதனின் அரண்மனை.

உறுப்பினர்: கட்டபொம்மு, ஊமைத் துரை, ரகுநாதன்.

நிலைமை: விஜய ரகுநாதன் நாற்காலியில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண் டிருக்கிறார். கட்டபொம்மு, ஊமைத் துரை, சேவகன் முதலியோர் வருகின் றனர். அதைக் கவனிக்காதது போல் படிக்கிறார். சேவகன் பக்கத்தில் வந்து வணங்குகிறான்.

சேவ: மகாராஜா!

விஜ: (தலையைக் குனிந்து கொண்டே) என்ன? யாரது?

சேவ: மகாராஜா! வந்து…

விஜ: என்ன வந்து?

சே: இல்லை, நமது பாஞ்சாலங்குறிச்சி ராஜா……

விஜ: யார்? (நிமிர்ந்து பார்த்து) ஆ, நீங்களா! மன்னிக்க வேண்டும்.

கட்ட: பரவாயில்லை.

விஜ: நானே நேரில் வந்து தங்களை அழைத்திருப்பேன். ஆனால் காலம் இடம் கொடுக்கவில்லை. தாங்கள் வரமறுத்து விடுவீர்களோ என்று எண்ணினேன்.நல்ல வேளை, வந்து சேர்ந்து விட்டீர்கள். இனி என் குறை தீர்ந்துவிட்டது. அட்டா! உங்களுக்குமா இக்கதி வரவேண்டும்? சிவிகை ஏறி சிறப் பாக வந்த தாங்கள் இப்போது ஒரு குதிரைகூட இல்லாமல் கால் நடையாகவா நடந்து வரவேண்டும்? உங்களது பூப் போன்ற பாதத்தில் பொத்திருக்கும் காயங்கள் என் மார் பகத்தில் கொப்பளிக்கும் இரத்தமாகவறே இருக்கிறது! உங்கள் நிதானம் முடிவில் மயானத்தில் தான் கொண்டுவந் விட்டது. நீங்கள் என்ன செய்வீர்கள்? எல்லாம் அந்தத் தானாபதியின் தனி ஆலோசனையில் வந்த வினை தான்.

ஊமை: ரகுநாதரே, உமது போக்கு முரணானது.

விஜ: தப்பர்த்தம் எடுத்துக் கொண்டீர்கள். என் அன்பு இராமன் மீது கொண்ட குகன் அன்பு அரசே! நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாதீர்கள். எதிரிகளுக்கு உங்களைப்பற்றிய நினைவே இல்லாமல் செய்து விடுகிறேன்.

கட்ட : அதெப்படி?

விஜ: இன்னும் ஒரு வாரத்தில் பெரும் படைதிரட்டி வெள்ளைத் தலை ஒன்று கூட இல்லாமல் எல்லோரையும் ஒரேயடியாகப் பொசுக்கி விடுவோம்.

கட்ட: அதற்குத்தக்க ஆற்றல் உம்மிடம் இருக்கிறதா?

விஜ: இல்லையென்றால் உங்களை இங்கு வரவழைத்திருப்பேனா?

கட்ட: ரகுநாதா, என்மேல் உனக்கு அவ்வளவு அன்பிருந்தால் போதும். நமது போராட்டத்தை நான் திருச்சிக்குப் போய் வந்ததும் வைத்துக் கொள்வோம்.

விஜ: மகாராஜா, தாங்கள் வந்ததும் வராததுமாக இப்படிப்பேசுவது என் அந்தஸ்துக்குக் குறைவு. அதிலும் என் எண்ணத்தை நிறைவேற்றுமுன் போவதென்றால்…

கட்ட: என்ன உமது எண்ணம்?

விஜ: பிரமாதமாக ஒன்றுமில்லை. என் அந்தஸ்த்துக்குத் தக்க தாங்கள் இங்கு குறைந்தது ஒருவாரமாவது தங்கித்தான் போக வேண்டும். என்னை உலகம் மறக்காமல் இருக்கும் வகையில் உங்களுக்கு நான் உபசாரம் செய்யத் திட்டமிட்டிருக்கிறேன். அதிலும் தாங்கள் சரியாக உண்டு களித்து பல நாட்கள் ஆகி யிருப்பது போலவும் தெரிகிறது.

கட்ட: ஆம்! எனது வாழ்க்கையிலேயே நான் இது வரையும் அடைந்திராத அவ்வளவு பெரிய கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன். கடந்த பல பல நாட்களில், குளித்து பூசை புரிந்து, உண்டு, உறங்கி பதினைந்து நாட்கள் ஆகின்றன.

விஜ: அப்படியா! அரசே, மன்னிக்க வேண்டும். உங்கள் நிலை தெரியாது ஏதேதோ பேசிக்கொண்டிருந்துவிட்டேன். தாங்கள் சென்று எண்ணெய் ஸ்நானம் செய்து, வேறு ஆடை யணிந்து, ஆண்டவனை தியானித்துவிட்டு, உணவருந்திய பின் மேல் மாடியில் தூங்குங்கள். யாரங்கே? (சேவகன் ஒருவன் வந் து வணங்குதல்) மன்னரை அழைத்துச் சென்று மாற் றுடை கொடுத்து, மஞ்சத்தை விரித்து படுப்பதற்கு வேண் டிய வசதியைச் செய்துகொடு. அ… அந்த உடை வாளைத் தவறிவிடாமல் பத்திரமாய் வாங்கி வை.

சேவ: உத்தரவு மகாராஜா!

(கட்டபொம்மனும், தம்பியும் வாளைக் கழற்றிக் கொடுக்க சேவகன் வாங்குகிறான்,)

விஜ: மகாராஜா! நீங்கள் போய் ஸ்நானம் செய்துவிட்டு உடம்பு வலி தீர நன்றாய் தூங்குங்கள்.

கட்ட: நல்லது. (மூவரும் போகிறார்கள்)

விஜ: (தனிமையில்) என் ஆருயிர் நண்பரே, என்னை மன்னித்து விடும். நண்பனான நானே உம்மை உறவு கொண்டாடி, காட்டிக் கொடுக்கத் திட்டமிட்டேனென்றால் அது உமது ஊழ்வினைப் பயன் தான். நீர் யாரையும் நொந்துகொள்வதில் பயனில்லை. உங்கள் பலம் பல்லில்லாத பாம்பு. நிலையோ பருந்தின் விருந்தாக வளர்ந்துவரும் எலி. இந்த நிலையில் நான் உங்களைக் காட்டிக்கொடுக்காவிட்டாலும் நீங்கள் அவர்கள் கையில் சிக்குவது மட்டும் திண்ணம். எனவே தங்களைக் கொண்டு கம்பெனியின் செல்வாக்கைத் தேடிக்கொள்ள வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் உங்களுக்கு நன்றி செலுத்திக் கொள்கிறேன்.

காட்சி 30

இடம்: படுக்கை அறை

உறுப்பினர்: கட்டபொம்மன், ஊமைத்துரை, படைகள்.

நிலைமை: கட்டபொம்மனும் ஊமைத்துரையும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

படைகள் நீட்டிய கத்தியோடு வந்து அவர்கள் நெஞ்சில் வைத்துக்கொண்டு எழுப்புகிறார்கள்.

கட்ட: (கோபமாக) உடலிலே உயிர் இல்லா உலுத்தர்களே! உங்களில் ஒருவனுக்காவது உடம்பிலே உரமில்லையா? அயர்ந்து தூங்கும் ஒருவனை ஆயுதங்களோடு வந்து பிடிப்பது தான் இந்நாட்டு வழக்கம் போலும்?

ஊமை: அண்ணா! சாவதானாலும் சரி, வாழ்வதானாலும் சரி, உத்தரவு கொடுங்கள்-ஒரு நொடியில் முடித்துவிடுகிறேன்.

கட்ட: தம்பி! கொடும்புலியானாலும் கூர்மையான நகம் இல்லாவிட்டால் அதன் சக்தி கொஞ்சம் குறைவுதான். நிராயுதபாணிகளாக இருக்கும் நம்மால் இப்போது என்ன செய்துவிடமுடியும்? நடப்பது நடக்கட்டும். சிப்பாய்களே, நீங்கள் எங்களைத் தாராளமாகக் கைது செய்து போகலாம். ஏன் பயப்படுகிறீர்கள்? உங்களை நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம். தைரியமாகக் கைதி செய்து கொள்ளுங்கள்.

காட்சி 31

இடம் : சாலை.

உறுப்பினர்: சேவகன், பொதுமக்கள்.

நிலைமை: சேவகன் தம்பட்டம் அடிக்கிறான்.

சேவகன்: இதனால் சகலமான ஜனங்களுக்கும், பாளையப்பட்டு ஜமீன்களுக்கும் தெரியப்படுத்துவது என்னவென்றால்,

இன்றுமுதல் கட்டபொம்மனுடைய வரலாற்றை யாராவது சொன்னாலும், சொல்லக் கேட்டாலும், சொன்னவர்களையும், கேட்டவர்களையும் விசாரணை யின்றி தூக்கிலிடப்படும். அத்துடன் இந்த உத்தரவு கண்ட ஏழு நாட்களுக்குள் மற்றைய பாளையப்பட்டுக்காரர்கள் தங்களிடம், உள்ள ஆயுதங்களை கம்பெனியார் வசம் ஒப்புவித்து விட்டு, தங்கள் கோட்டை கொத்தளங்களை இடித்து தரை மட்டமாக்கி விடவேண்டும். தவறினால் அவர்களையும் கடுமையாகத் தண்டிக்கப்படும். இது கிழக்கிந்திய கம்பெனியின் உத்தரவு.

(தம்பட்டத்தை அடித்துக்கொண்டு போகிறான்.)

காட்சி 32

இடம்: நீதி சபை

உறுப்பினர்: கட்டபொம்மன், பானர் மென், ஜூரிகள், எட்டப்பன், விஜய ரகுநாதன், சிப்பாய்கள்.

நிலைமை: எல்லோகும் நீதி சபையில் உட்கார்ந்திருக்கிறார்கள். நீதிபதியாக பானர்மென் உட்கார்ந்திருக்கிறார்.

பான: குற்றவாளியைக் கொண்டு வாருங்கள்!

(நான்கு சிப்பாய்கள் கட்டபொம்மனை சங்கிலியால் கட்டி இழுத்து வருதல்)

வீரபாண்டிய கட்டபொம்மு என்பவர் நீர்தானே?

கட்ட : ஆம், தமிழ் நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டு இன்று படுகுழியில் வீழ்த்தப்பட்டிருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் நான் தான்.

பான: உம்மீது குற்றங்கள் குவிந்திருக்கின்றன. அதை விசாரிக்கவே உம்மை இங்கு கொண்டு வந்தோம். கேட்கப்படும் கேள்விகளுக்கு நியாயமான முறையில் பதில் கூறவேண்டும்.

கட்ட: நியாயம்! அது உன் பகுத்தறிவுப் பாசறைகள் யாதும் பார்த்திருக்கவே முடியாதே! என் உரிமை, பெருமைகளைச் சீர் குலைத்து சித்ரவதை செய்ய, என்னை வந்து நித்திரையில் சிறை பிடித்த நீ தான் நியாயாதிபதியோ? அநீதியே உருவான உன்னிடத்தில் இருந்துவரும் தனி நீதிகளை மனுநீதி என்று நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டுமோ? நீ மகா நியாயாதிபதி! இதற்கு ஒரு நியாயசபை! ஹும்! அதர்மமே தலை விரித்தாடும் தளபதி ஒர் அக்கிராசனாதிபதி! அக்கிராசனாதிபதியின் அன்புக்கேற்ற பண்பே தெரியாத கலெக்டர்! அவருக்கேற்ற உறுப்பினர்! அவருக்கேற்ற ஒரு சபை! இந்த வம்பர் சபையிலா நான் நியாயத்தை எதிர்பார்ப்பது?

பானர்: நிறுத்தும். நீர் ஒரு குற்றவாளி என்பதை மறந்துவிட வேண்டாம்.

கட்ட: நான் செய்த குற்றங்கள்?

பானர்: உம்மை சமரசம் பேச அழைத்தபோது நீர் அரியாசனம் வீற்றிருந்து எம்மை அவமதித்து, முடிவில் எனது படைகளை அநியாயமாக அழித்தது மாபெரும் குற்றம். இந்த குற்றங்களைச் செய்துவிட்டு இப்போது என்ன குற்றம் செய்தே னென்று கேட்கும் உன்னை என்ன செய்தாலும் தகும்.

கட்ட: இவ்வளவு தானா, இன்னும் ஏதாவது இருக்கிறதா?

பானர்: நீர் வரி கொடுக்காததை குற்றமென்று ஒப்புக்கொள்கிறாயா? இல்லையா ?

கட்ட: ஏன் ஒப்புக்கொள்ளவேண்டும்? நான் ஏன் வரிகொடுக்க வேண்டும்? உனக்கு நான் வந்து உன்னிடத்தில் பூமி கேட்டேனா? இல்லையென்றால் ஆற்காட்டு நவாபைப் போல நலமிழந்தேனா? கடன் கேட்டேனா? உனக்கு வரி கொடுக்க வகையானவர்கள் தொண்டைமானும், எட்டப்பனுமே தவிர, இந்த கட்டபொம்மன் அல்ல. அவர்கள் வேண்டுமானால் எஜமானைக் கண்ட நாயைப்போல் ஓடி வந்து வாலாட்டலாம்; ஆனால் உன்னைக்கண்டதும் என் உறையிலிருக்கும் வாள் பாயும்; தோள் துடிக்கும்.

பானர்: சரிதான் நிறுத்தும்! உம்மை சமாதானத்துக்கு அழைத்த என்னை நீர் சண்டைக்கு இழுத்து என் படையை ஒழித்ததைக் குற்றமென்று ஒப்புக் கொள்கின்றீரா? அல்லது அதையும் ஏதாவது சாக்கு சொல்லி மழுப்பப் போகின்றீரா?

கட்ட: ஏ, துரையே! இது தெய்வம் பொறுக்காது. இது நியாயசபையா? அல்லது அநியாயக்காரர்கள் நிறைந்த அரக்கர் சபையா? என்னை வஞ்சித்து, என் கோட்டையைக் கைப்பிடித்து, கிஞ்சித்தும் மனமிரங்காமல் நான் அனுப்பிய தூதனைச் சிறை பிடித்தடைத்து, இரவோடு இரவே யாருக்கும் தெரியாமல் படையெடுத்து வந்து புறமுதுகைக் காட்டி ஓடிவிட்டு, இப்போது என்னைக் குறை கூறுகிறாய்! சமாதானம் செய்யவந்த உனக்கு என் படையும், பலமும், பீரங்கியும்? சமாதானம்! யார் விரும்பியது சமாதானம்? சமாதான மென்னும் புனிதமான வார்த்தையைக் கூற உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? ஒரு பக்கம் என்னை சமாதானப் படுத்துவதாக நிதானப்படுத்திவிட்டு மறுபக்கம் என்னை மயானத்திற்கு அனுப்பும் மார்க்கத்தை கடைப் பிடிப்பது தான் சமாதானமோ? அவனியை ஆள ஆசைகொண்டு நாசகார சதி செய்வதொரு பக்கம், பவனி வந்து பலர் பார்க்க பரஸ்பரம் என பதம் போடுவது மற்றொரு பக்கம். இது தான் உனது சமாதான மாநாட்டின் ஷரத்து; உன் சமாதானத்தை நம்பி நாசமானவன் நானல்ல. ஆனால் இன்று நான் உன் முன் கட்டுண்டு கைதியாக இருக்கிறேன் என்றால் உன ஊனுக்கு என் நாட்டில் பிறந்த ஊதாரிகளின் விபரீதத்தின் விளைவு தான்!

பானர்: உமக்கு என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா?

கட்ட: நீ எனக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகிறாய், கொடுக்க முடியும் என்று எனக்குத் தெரியும். இந்த ஒரு கட்டபொம்மனை உலகிலிருந்தே மறைத்து விட்டால் உன் இச்சையெல்லாம் பூர்த்தியாகிவிடுமென்று மனப்பால் குடிக்காதே! நான் இறந்தாலும் என் உருக்குலைந்தாலும், என்னைப் பற்றிய நினைவு மாத்திரம் ஊற்றெடுத்துக்கொண்டே இருக்கும் என்பதை மறந்து விடாதே! நான் இப்போது விட்டுச்செல்லும் ஒவ்வொரு மூச்சும் உன்னை இந்நாட்டிலிருந்து வெளியேற்றும் வரை ஒவ்வொரு உருவாக நேருக்கு நேர் போர் செய்யும் வீரனாகவும், போருக்கு படை திரட்டும் சூரராகவும், நாட்டுக் கவி இயற்றும் அமரராகவும், ஆயுத மின்றி உன் வீரியத்தை சூரையாடும் அஹிம்சா மூர்த்தியாகவும் அவதரித்து, முடிவில் ஆயுதமின்றி மக்களை காகிதம் கொண்டு உருவேற்றி, உன் ஆட்சியை ஒழித்துக்கட்ட, ‘வெள்ளையனே வெளியே போ!’ என்ற கோஷத்தினாலேயே உன்னை இந்நாட்டிலிருந்து விரட்டி திரும்பவும் சுதந்திர நாடாக மாற்றி அமைத்து விட்டுத்தான் என் ஆவி இந்நாட்டை விட்டு அகலும் என்பதைத் தெரிந்து கொள்.

பானர்: முடிந்ததா உன் பிரசங்கம்?

கட்ட: ஆம், எனது பிரசங்கம் முடிந்துவிட்டது உனது பிரசங்கம் தான் இன்று முதல் ஆரம்பமாகிறது.

பானர்: அது ஆரம்பமாகட்டும். அதற்குள் நீ ஆயத்தமாகிக் கொள். நீ செய்த குற்றங்களுக்குத் தண்டனையாக உனக்கு நியாயத்தின் பேரில் தூக்கு தண்டனை விதித்திருக்கிறேன்.

கடட : துரையே! இது நான் எதிர்பார்த்தது தான். இது போல் நீயும் உன் முடிவை எதிர்பார்த்து நில். நாளை நான் என்றால் சில நாட்களுக்குப் பின் நீயும் தான் என்பதை மறந்து விடாதே!

பானர்: கொண்டு போங்கள். (கொண்டு போகிறார்கள்.)

காட்சி 33

இடம்: கயத்தாறு புளியமரத்தின் தூக்குமேடை.

உறுப்பினர் கட்டபொம்மன், கொலையாளி, பொதுமக்கள், துரைகள்,

நிலைமை: கட்டப்பொம்மு, புளியமரத்தில் போடப்பட்டிருந்த தூக்குக் கயற்றின் முன் நின்று கொண்டிருக்கிறார்.

கட்ட: பாருங்கள் கூடியிருப்போரே, பாருங்கள்! எனை வா, வா என்றழைத்து வட்டமிட்டுக்கொண்டு இந்த புளியமரத்திலே தொங்கும் சுருக்கு கயிற்றைப் பாருங்கள்! தாய் மானத்தை தன்மானமாகப் பேணி, மக்களின் அஞ்ஞானத்தை நீக்கி, அரசியல் மெய்ஞானத்தை வளர்த்த எனக்குக் கிடைத்திருக்கும் இந்த சன்மானத்தைப் பாருங்கள்! நான் குற்றவாளியா? நான் துரோகியா? எனக்குத் தண்டனையா? தனக்கன்றி தாய் நாட்டுக்காகப் பாடுபட்ட எனக்குத் தூக்குத்தண்டனையா? இது அநியாயம்! கொடுங்கோல் ஆட்சியைத் தொலைக்க கடும் சமர் புரிந்த நான் இக்கதிக்குள்ளாக வேண்டியதற்கு கார ணம்? மதுபானத்தைக்கொடுத்து தமிழ்மானத்தைக் கெடுத்து அன்னிய அணங்குகளை அணைத்துத் தவழும் சதிகாரக் கூட் டத்தை தரை மட்டமாக்க பாடுபட்ட நான் இக்கதிக்குள்ளாக வண்டிய காரணம்? தாய்நாட்டு மக்களான தென்னா மக்கள் மேம்பாட்டுடன் வாழ மேல் நாட்டானை எதிர்த்துப் போராடிய நான் இக்கதிக்குள்ளாக வேண்டிய காரணம்? ஆம் இந்நாட்டிலே பிறந்து தாய்நாட்டு செய்தியை மேல் நாட்டுக்கனுப்பி உள்நாட்டுக் குழப்பம் செய்து உடனிருந்து கெடுத்த உளுத்தன் விஜயாகுநாதனும், எட்டப்பனும்தான் காரணம். எட்டப்பன்! ஏ, துரோகி! உன் வாழ்வு ஒரு வாழ்வா? அன்னியனை அண்டினாய்; அவனை அடிபணிந்தாய்; அவன் ஆளுகையை ஆதரித்தாய்; என்னைக் காட்டிக் கொடுத்தாய்; நாட்டைப் பிரித்து வைத்தாய்; ஆட்சியை அடகு வைத்தாய்; முடிவில் என்னை இக்கதிக்குள்ளாக்கி வைத்தாய். மனைவியின் துயிலை மாற்றான் உரிய, உடனிருந்து அகமகிழ்ந்து, ஊக்க மளித்து, நோக்கம் தீர்க்க, சோரம் புரிய கோரம் சேர்க்கும் கோணங்கியே, போ! ஒடி வந்தழைத்த உன் வீட்டில் ஆடிப் பாடி அக மகிழ்ந்திருந்த என்னை இந்நிலைக்குள்ளாக்கி வைத்த இனத்துரோகியே, போ! உன் நாசம் கலந்த பாச வார்த்தை யால் என்னை மோசம் செய்தாய்; உறவு கொண்டாடி உணவளித்து உறங்க வைத்தாய்; ஊசி பாய வாசலிலே மில்லாமல் உலுத்தர்களை நிறுத் வைத்தாய்! காட்டிக் கொடுத்து கைகட்டி எட்டி நின்றாய்! நேசம் கொண்டு நாசம் செய்த நயவஞ்சகனே போ! நாடோடியே போ! நாட்டின் துரோகியே போ! நீ என்னைக் காட்டிக்கொடுத்த தால் கண்ட பலன்? நான் உனக்கு என்ன தீங்கு செய் தேன்? எந்நாடு, நகரம், பெண்டு, பிள்ளைகள் அத்தனையு மிழந்து நான் இந்தக் கதிக்குள்ளாகி உயிர் துறக்க நீ அடைந்த பலன் தான் என்ன ? நீ ஒரு மனிதனா ? நீ ஒரு தமிழனா? நீ பிறந்த நாட்டிற்கு உன்னால் சேவை செய்ய முடியவில்லை யென்றாலும், அதைக் காட்டிக் கொடுக்காமலாவது இருக்க முடியவில்லையா? அன்னியனுக்கு இருக்கும் அவன் நாட்டுப் பற்றுப்போல் ஏன் உனக்கு உன் நாட்டுப்பற்று அற்றுப் போய்விட்டது? பொற்கைப் பாண்டியன் அவதரித்து அரசாண்ட இந்நாட்டிலே ஏன் உன் போன்று கருத்தைப் பறி கொடுக்கும் கயவர்களை நான் காணவேண்டும்? முதலில் நீ தொலையவேண்டும். போ! ஒழிந்து போ!

ஆ! என் பஞ்சைப் பதிகளே! கேளுங்கள். நான் குற்றவாளியாம்! உங்கள் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டது என் குற்றமாம்! உங்கள் வயிற்றில் மண்ணைத்தூவி வந்தவனுக்கு வரியை வாரிக்கொடுக்காமல் இருந்ததற்காக எனக்குத் தண்டனையாம்! அதிலும் தூக்குத் தண்டனையாம்! ஆம்! இத்தனை நாளும் நீங்கள் வாழ்ந்த வாழ்வும் மகிழ்ந்த மகிழ்வும் தாழ்ந்து தவிடு பொடியாய்விடும். என் ஆத்திரமாக இருக்கிறதா, உங்களுக்கு? ஆத்திரப்பட்டு ஆகப்போவது என்ன? வஞ்சகர்களின் சூழ்ச்சியை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். ஆ! எனக்குப் பின் உங்கள் வாழ்வு வளம் பெருகி இருக்குமா? நல்வாழ்வு நடக்குமா? நடக்காது! நடக்காது!! ஒருக்காலும் நடக்காது!!! (சிரிப்பு) ஆ! நான் சாகக்கூடாது… நான் வாழவேண்டும் வாழவேண்டும். என்னைக் காப்பாற்றுவார் யாருமில்லையா? நாட்டிற்கு சுதந்திரமில்லையா? இந்நாட்டைக் காக்கும் காவலனில்லையா? (கோபமாக சிரிப்பு)

ஏன் இல்லை? நான் இறந்தால் எனது ஆவி இருக்கிறது; நான் புரிந்த தியாகம் இருக்கிறது; மக்களுக்கு எடுத்துக்காட்டாக என்றைக்கும் மறைக்க முடியாத மாபெரும் இந்த சம்பவம் இருக்கிறது. எந்நாட்டிலே பிறநாட்டானால் நான் இன்று தூக்கிலிடப் படப்போகும் இந்நேரத்திலே என் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டுக் கொண்டிருக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு தியாக உணர்ச்சி நிறைந்த திலகங்களாக மாற்றி அமைக்கும் திறன் இருக்கிறது. ஆம், என்னைத் தூக்கிலிடுவதைக் காண கண்டு பதைக்கும் உங்களது ஒவ்வொரு இதயக் கொதிப்பும் நாளை வெள்ளையனை வெருண்டோடச் செய்த வேல் அம்புகளாக அவன் மீது பாய்ந்து, சடலத்தைத் துளைத்து,ரத்தத்தை உறிஞ்சி அவன் ஆணவத்தை அடக்கி ஆட்சியைக் கவரும் நல்ல யுத்தங்களாக மாறட்டும். அன்னியன் கொடிக்கு அடி வணங்கி தன்னவன் கொடிக்கு வலை விரிக்கும் வேடர்கள் கூட்டம் நலியட்டும். இந்நாட்டின் துரோகிகள் ஒழியட்டும். நான் தூக்கிலிடப்படுவதை பார்த்தாவது அவர்கள் உள்ளம் உருகட்டும்…பிறகாவது திருந்தட்டும்.

ஏ, தேசத் துரோகிகளே! முடிவாக உங்களை ஒன்று கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் பிறந்தநாடு இந்தப் பாரத நாடு வாழ வேண்டுமென்று உண்மையிலேயே உங்களுக்கு எண்ணமிருக்குமானால் தாய் நாட்டைக் காக்கும் வகைக்காக வேண்டுமானாலும், செய்யத் தயங்க மாட்டேனென்று கொள்ளுங்கள். உங்களால் சேவைசெய்ய முடியவில்லையென்றாலும் சேவை செய்வோரை, செம்மையற்றவர், வன்மையற்றவர் என்று கூறி அவர்களின் உறுதியை கலைத்து விடாதீர்கள்! செய்யும் காரியங்களில் குற்றமிருந்தால் குறை கூறாதே! அன்னியனை அறைகூவி அழைக்காதே! ஆக்க வேலையை எடுத்துக்கூறு! நமக்குள் பிளவு உண்டாக்காதே! உளவு கூறாதே! நம்மவர் மகிழ்வுகாண நாளெல்லாம் பாடுபடு! தமிழ் நாட்டில் பிறந்த வகைக்காகாவது நீ இதைச் செய்வாயா? நண்பனே! நீ இதைச் செய்வாயா? அன்னியனுக்கு அடங்கி வாழ்வதை வெட்கம் என்று உணர்வாயா? என் ஆத்மாவுக்கு சாந்தி அளிப்பாயா தமிழா?

முருகா! உன்னை நான் பூஜித்துவந்த பலனுக்காகவாவது, நானடைந்த இந்த அவமானத்தை நீக்க எனக்கருள் புரிவாயா?

(தன் கைகளினாலேயே தூக்குக் கயிற்றைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு, நின்றுகொண்டிருந்த நாற்காலியை கால்களினால் எகிறிவிடுகிறார். உயிர் நீத்த கட்டபொம்மன் ஆவி புகழுலகிற்குச் செல்கிறது.)

வாழ்க தாய்த்திருநாடு !

– வீரபாண்டிய கட்டபொம்மன், ரதி பதிப்பகம், மதுரை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *