பட்டினத்துப் பெண்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: December 18, 2022
பார்வையிட்டோர்: 3,204 
 

(1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மருதி என்பவள் சோழ நாட்டுக் காவிரிப் பூம்பட்டினத்தில் வாழ்ந்தாள் என்று முன்னே படித்தீர்கள் அன்றோ! அந்தக் காவிரிப்பூம் பட்டினத்திற்கு வேறு பல பெயர்களும் உண்டு. அவற்றில் புகார் என்பது ஒன்று. பகைவர்கள் அந்த நகரத்தினுள்ளே புகமாட்டார்கள் என்பது அப்பெயரின் பொருள்.

துறைமுகப் பட்டினமாக அஃது இருந் தமையால் வாணிபம் செய்வோர் பலர் அங்கு வாழ்ந்தார்கள். அவர்கள் செல்வம் சிறந்திருந்தார்கள். அவர்கள் வீட்டில் பொன்னும் மணியும் நிறைந்து கிடந்தன. நெல், கேழ்வரகு, எள்ளு முதலிய தானிய வகைகள் குவியல் குவியலாகக் கிடந்தன. அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் பசுக்கள், ஆடுகள், எருமைகள் முதலியவை கூட்டங் கூட்டமாக இருந்தன.

வாணிகர்களின் தலைவனாக ஒருவன் இருந்தான். அவன் செல்வத்தில் குபேரனைப்போல் இருந்தான். அரசனும் ஒவ்வொரு காலத்தில் இவனிடம் பணம் கடன்வாங்குவதுண்டு. இவனுக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் பெயர் விசாகை.

விசாகை அழகில் திருமகளைவிடச் சிறந்திருந்தாள்; அறிவில் கலைமகளை வென்றாள். மயில் போன்ற சாயலைப் பெற்றிருந்தாள்;

அவள் பேச்சு குயிலின் குரல் போல் இனிமையாக இருக்கும். அவள் நடப்பதை அன்னங்கள் கண்டால் நாணமடையும்.

வாணிகர் தலைவனுடன் பிறந்தவள் ஒருத்தி உண்டு. அவள் விசாகைக்கு அத்தை என்னும் முறையினை உடையவள். அவளுக்கு ஓர் ஆண் மகன் இருந்தான். அவன் அறம் செய்வதிலேயே கருத்தைச் செலுத்தினான். அவனைத் தருமதத்தன் என்று அழைத்தார்கள்.

தருமதத்தன் மதியினை ஒத்த முகமுடையன் சிறந்த கல்வி அறிவினை உடையவன்; ஒழுங்காக வாணிபமுறையினையும் அறிந்திருந்தான். நல்ல குணங்கள் எல்லாம் இவனிடம் அடைக்கலம் புகுந்திருந்தன. மிகச் சிறியவனாக இவன் இருந்தாலும் பட்டினத்திலுள்ளோர் யாவரும் இவனை அறிந்திருந்தார்கள். தத்தன் என்று யாரேனும் சொன்னால், ‘ஓ! அவனா! அவன் நல்லவனாயிற்றே! அவனைப் பெற் றெடுக்க அவன் பெற்றோர்கள் என்ன தவம் செய்தார்களோ!’ என்று வாயூறச் சொல்லு வார்கள். தம் கெட்ட குணமுடைய பிள்ளைக களைத் திருத்துதற்குப் பெற்றோர்கள், தத்தனை எடுத்துக்காட்டாகச் சொல்லுவார்கள். தத்தன் யாவராலும் புகழப்பட்டான்.

தத்தனும் விசாகையும் அம்மான் மகளும் அத்தைமகனும் ஆவர் ; இருவரும் மைத்துன முறையினர். இருவரும் ஒரே வீட்டில் வளர்ந்தனர். செந்தமிழ் மொழியில் அழுந்திய உள்ளம் விசாகைக்கு உண்டு. ஆகவே அவள் நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிருப்பாள். படிக்கும் காலத்தில் சில இடங்கள் விளங் காமல் இருக்கும். அந்தப் பகுதிகளைத் தத்தனைக் கேட்டுத் தெரிந்து கொள்வாள்.

தத்தனும் கலைபயில் கருத்துடையவன். அவன் நயமாகக் கருதும் பகுதியை அவளுக் கும் படித்துக்காட்டி மகிழ்வான். அவளும் மிகுதியும் மகிழ்வாள். “தேருந்தோறும் இனி தாம் தமிழ்” என்றார்களே! அஃது எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது. அன்பரே! நீர்த் துறையில் மூழ்கியவர்களின் உடல் சிறிது நேரம் தூய்மையாக இருக்கும்; அதுவரை அவர்களும் மகிழ்ந்திருப்பார்கள். ஆனால் தமிழ்த் துறையில் மூழ்க மூழ்க நம் அறிவு தூய்மையாகின்றது; அறிவு தூய்மையாக ஆக மகிழ்ச்சியும் மிகுகின்றது. இம் மகிழ்ச்சி நிலைத்துப் பேரின்பத்தை உண்டாக்குகின்றது. தமிழே இனிமை; ஆ! தமிழ்ச் சொற்களோ மிக மிக இனிமையாக இருக்கின்றன; அவற்றின் பொருள்களோ, ஆகா! எவ்வளவு பெரு மகிழ்வை உண்டாக்குகின்றன; நம் வாழ்நாள் வரை இத்தமிழ்மொழிக்கே முழு அடிமைக ளாகி இன்பத்தைத் துய்க்க வேண்டும்” என்று உடல் பூரித்துச் சொல்வாள். அவள் சொல் லாகிய தேனில் தத்தனாகிய ஈதன் உடலையும் மறந்து கிடக்கும்.

தங்களுக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தை வீணாக்காது பேசி மகிழ்ந்தார்கள். இருவரும் அறிவால் வரும் இன்பத்தை ஒரே வகையாகத் துய்த்தார்கள். கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்பது அறிஞர் வாக்கு. அறிவுடைய இருவரும் ஒருவரை ஒருவர் உயிர் போல் கருதினர். மாலையில் கிழக்கே மதியும் மேற்கே ஞாயிறும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமோ அவ்வளவு நன்றாக இருந்தனர் இருவரும். மாடு ஒன்று; அதற்குக் கொம்பு இரண்டு; அவ் வாறே உடலால் இரண்டாகவும் உயிரால் ஒன்ராகவும் வாழ்ந்தனர்.

குற்றம் செய்தல் மக்களுக்கு இயற்கையா கிய குணம். இருவர் உள்ளம் ஒத்து வாழ்வதையே சில பொறாமைக்காரர் காணமாட்டார். அப்படிப்பட்ட மக்கள் எங்கும் காணப்படுவார்கள். பட்டினத்திலும் இவ்வகை மக்கள் சிலர் நம்பியாகிய தத்தனும் நங்கையாகிய விசாகையும் அன்பில் கட்டுண்டிருந்ததைத் தவறாக நினைத்தனர் ஆதலின், பல இழி சொற்களைக் கூறினர். நம்பியும் நங்கையும் களவில் மணந்து கொண்டனர் என்று வாய்ப்பறை அடித்தனர். இச்சொற் கள் காட்டுத்தீயைப் போல் எங்கும் பரவிற்று. ஊர் வாயை மூட யாரால் முடியும்?

நங்கையும் இச்சொற்களைக் கேட்டாள். வீணர்களின் அறியாத தன்மையை எண்ணி வருந்தினாள். இந்தச் சொற்கள் கூர்மையான அம்புகளைப்போல் அவள் உள்ளத்தில் தைத்துப் பெரும் புண்ணை உண்டாக்கின. ஒருவர் ஒரு வீட்டின் நடுவில் இருக்கிறார். அப்போது அவ்வீடு நான்கு பக்கங்களிலும் நெருப்புப் பிடித்துக் கொண்டால் நடுவில் இருப்போர் கதி என்ன? ஓடிப்பிழைக்கவும் முடியாமல் சூட்டி னால் வாடிப் புகையால் நைந்து துன்புறுவார்கள் அன்றோ? விசாகையும் பழிச்சொற்களாகிய தீயினால் வாடி வருந்தினாள். உண்மையை மக்களுக்கு அறிவிக்க ஆசை கொண்டாள். என்ன செய்தாள்.

வீட்டைவிட்டு வெளியில் வந்தாள்; உலக அறவியைச் சார்ந்தாள். உலக அறவி என்பது ஊரம்பலம். இங்குப் பலரும் வந்து தங்குவார்கள். இந்தக் காலத்தில் மக்கள் தங்குவதற்கு என்று கட்டப்படும் அறச்சாலையைப் (தரும சாத் திரம்) போன்றது.

உலக அறவியில் ஒரு தூண் இருந்தது. அத்தூணில் ஒரு பாவை செதுக்கப்பட்டிருந்தது. அதற்குக் கந்திற் பாவை என்று பெயர். இப்பாவையை மக்கள் வணங்குவர். தன்னைக் கேட்போருக்கு இவ்வுருவம் மூன்று காலச் செய்தியையும் தெரிவிக்கும். ஆதலினால் இது நாவுடைப் பாவை என்று போற்றப்பட்டது.

விசாகை இப்பாவையின் அருகே வந்தாள். “அரிய பாவையே!” இவ்வூர் வீணர்சிலர் என்னைப் பழித்துப் பேசுகின்றனர். என்கற்பில் ஐயம் கொள்ளுகின்றனர். நீயே உண்மையை எடுத்துரைக்க வேண்டும்,” என்று வேண்டி நின்றாள்.

கேட்டது பாவை . “நகரத்து வாழ்கின்றவர்களே! இவள் கற்புடையாள்; இவள் கற்பிற்குக் கட்டுப்பட்டது மழை . ஐந்து பூதங்களும் கட்டுப் பட்டன; கடவுள் கற்புடையாள் இவள்; அலர் மொழியைத் தூற்றாதீர்,” என்றுரைத்தது.

பட்டினத்தில் வாழ்வோர் எல்லோரும் பாவை சொன்னவற்றைக் கேட்டனர்; தாம் கொண்டிருந்த ஐயத்தைப் போக்கினர். “விசாகை நம் பட்டினத்துப் பெண்; இவள் பிறந்தமையாலேயே நம் பட்டினம் பெருமை பெற்றது; இனி இந்த வகையான பழிச் சொற்களைச் சொல்லக்கூடாது. விசாகை நீடூழி வாழ்க! தருமதத்தன் பல ஊழி வாழ்க,” என்று கூறினார்கள்.

விசாகை தன் வீட்டிற்கு வந்தாள்; தாயினை வணங்கினாள். எழுந்து அடக்கத்தோடு நின்று “அம்மா! இந்த ஊரார் என்னைப் பழித்தார்கள். கந்திற் பாவை என் கற்பை எடுத்துக்கூறியது; அவர்கள் வாயடங்கி விட்டார்கள். தூய்மையா கிய உள்ளத்தில் மைத்துனர் அவர்களையே வைத்து வணங்குகின்றேன். அவரைத் தவிர வேறு எவரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். இவ்வளவு பழிச்சொல் மூட்டை களைச் சுமந்த பின்பு மணம் செய்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. உண்மைக்காதல் பல பிறப்புக்களையும் தொடர்ந்து வருகிறது என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். யான் உறுதியும் உண்மையும் கூடிய காதலுடையவளே. ஆத லால் அடுத்த பிறப்பில் யான் மைத்துனரை மணந்து கொள்வேன். இனி மணமில்லாமலே காலத்தைக் கழிக்க ஆசைப்படுகின்றேன்; எனக்கு ஒரு கன்னிமாடம் கட்டித்தருதல் வேண்டும், அதிலிருந்து கொண்டு ஐந்து பொறிகளையும் அடக்கிக் கடவுளை வணங்கித் தமிழ்மொழியைப் பயின்று என் காலத்தைக் கழிப்பேன்; அன்போடு என் எண்ணத்தை நிறைவேற்றி வைக்க வேண்டும்,” என்று சொல்லி மறுமுறையும் வணங்கினாள்.

“நூலைப் போல சேலை தாயைப் போல பெண்” என்பது பழமொழி. அழகிலும் அறிவி லும் கற்பிலும் சிறந்த விசாகையைப் பெற்றதாய் எவ்வாறிருப்பாள்? அவளும் அறிவில் மிகுந்து விளங்கியிருப்பாளன்றோ? மகள் சொன்னவை எல்லாம் ஒழுங்கானவை என்று நினைத்தாள். தன் கணவனிடத்தில் மகளின் விருப்பத்தைச் சொல்லிக் கன்னிமாடம் கட்டித் தருமாறு தூண்டினாள். கன்னிமாடத்தில் நம் பட்டினத்துப் பெண் குடி புகுந்தாள்.

தத்தன் நடந்தவற்றை அறிந்தான். அரிய மாணிக்க மணியை இழந்த நாகம்போல் அலறி னான். கன்னிமாடத்துள் ஆண்கள் செல்லலா காது. ஆகவே தத்தனும் அங்கே போக முடி யாது. தன் கண்மணியை ஒத்த கன்னியைக் காணாது காவிரிப்பூம் பட்டினத்தில் வாழ அவன் விரும்பவில்லை. அவ்வூரிலிருந்தால் அவன் உள்ளம் உடைந்துவிடும் போன்றி ருந்தது. விசாகையைப்பற்றிய நினைவு கள் அடிக்கடி அவனைத் துன்புறுத்துவன ஆயின. ஆதலின் பட்டினத்தை விட்டுப் போவதற்கு முற்பட்டான்.

தன் மாமன் மாமியாராகிய விசாகையின் தந்தை தாயாரை வணங்கினான்; மற்ற உறவி னர்களுக்கும் சொல்லிக்கொண்டான்; ஒரு நல்ல நாளிலே பட்டினத்தை விட்டுப் புறப்பட்டான்; தென் மதுரையை அடைந்தான்; அவ்வூரில் வாணிபம் நன்றாக நடப்பதைக் கண்டான். அவன் வாணிபம் செய்யும் ஆற்ற லுடையவன் அல்லவா? பொழுதுபோக்காக அத்தொழிலை மேற்கொண்டான். வாணிபத் துறையில் நுட்பமான மதியுடையவன் அவன். ஆதலின் மளமள என்று பொருள் சேர்ந்தது. ஒன்று நூறாயிற்று; நூறு ஆயிரம் ஆயிற்று; இவ்வாறு கோடிக்கணக்காகப் பொருள் சேர்ந்தது.

தருமதத்தன் கல்விச் செல்வத்தில் பொலிந் தவன்; இப்போதோ பொருட் செல்வமும் குவிந்தது. சிலர் பொருளைப் பெற்றவுடன் இருள் நிறைந்த அறையில் பைகளில் நிரப்பி வைப்பார்கள். நாள்தோறும் அந்த அறையினுள் சென்று அவற்றை எண்ணி மகிழ்வார்கள். எண்ணி முடிந்தவுடன், ‘ஐயோ! எண்ணுவதற்கு மேலும் பணம் இல்லையே. ஏ! கடவுளே ! எனக்குப் பணம் வேண்டும்.’ என்று நைந்து கடவுளை வணங்குவார்கள். இதுவோ பணத்தைப் பயன்படுத்தும் வழி!

தத்தன் அவ்வாறு செய்யவில்லை. பணத்தை என்ன செய்தல் வேண்டும்? என்று கருதினான். “செல்வத்துப் பயனே ஈதல், துய்ப்பேம் எனினே தப்புந பலவே” என நக்கீரர் என்ற பெரும் புலவர் சொன்னார். செல்வம் படைத் தவர் இருவகைச் செயல்களை மேற்கொள்ள வேண்டும். அவை, பிறர்க்குக் கொடுத்தல், தானும் பயன்படுத்திக் கொள்ளுதல், என்பவை யாம். ‘ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது, ஊதியம் இல்லை உயிர்க்கு’ என்றனர் வள்ளுவர். ‘பிறர்க்குக் கொடுத்தல் வேண்டும்; நாமும் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்,’ என்பது அதன் கருத்து. செல்வமுடையான் இந்த இருவகைச் செயல்களையும் மேற்கொள்ளாமல் போனால் அவன் செல்வத்தின் பயனைப் பெறாதவன் ஆகின்றான். ஆகவே, வறுமையாளனாக அவன் எண்ணப்பட வேண்டியவனே.

தத்தன் அறம் செய்தலை மேற்கொண்டான். ‘இரவலர் தமரினும் இனியர்’ என்றார் மற்றொருவர். பிச்சைக்காரர் நமக்கு உறவினரைவிட இனிமையுடையவர்களாய் இருக்கின்றனர். ‘இல்லை’ என்று வந்து கேட்டவர்களுக்கு, ‘உண்டு, இதோ எடுத்துப் போ’ என்று மகிழ்வுடன் தத்தன் கொடுத்தான்.

மேலும் பல அறச் செயல்களை மேற்கொண் டான். ‘எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்’. எண்ணும் எழுத்தும் என்று சொல்லப்படு பவை கல்வியில் அடங்கும். கல்வியே மக்களுக்கு உணர்ச்சி தருவது. கற்றற்குப் பொருள் தேவை. செல்வமுடையவரே கற்கலாம். ஏழைகள் என்ன செய்யலாம்? அவர்களிடத்தில் பொருளில்லாக்குறையால் வாழ்நாள் முழுவதும் கல்வி என்ற அரிய பொருளைப் பெறாது ஒழிதல் நன்று ஆகாது, என்று தத்தன் கருதினான். தமிழகத்தில் கல்வி எல்லாருக்கும் வேண்டும். கல்லாதவரே இருத்தல் ஆகாது என்று நினைத்தான். ஆகவே, இலவசக் கல்விச் சாலைகளை நிறுவினான். ஏழைகளுக்கு எத்தகைய செலவும் இன்றிப் படிப்புச் சொல்லிக் கொடுக்கப்பட்டது. உணவும் உடையும் சுவடிகளும் அவர்களுக்கு உதவப்பட்டன. தென்மதுரை மக்கள் மட்டும் அன்றி வெளியூர்களிலிருந்தும் பலர் வந்து படித்தனர்.

தத்தன் வாழ்ந்த நாளில் மக்கள் சாலைகள் வழியே ஓரிடமிருந்து மற்றோரிடத்திற்கு நடந்தே செல்லவேண்டி இருந்தது. சாலை களில் நடப்போருக்குப் பல நன்மைகளைச் செய்யவேண்டும் என்று நம்பி கருதினான். ஐந்துக்கல் தொலைவுக்கு ஓர் அறச்சாலை கட்டினான்; அடுத்துச் சோலைகளை உண்டாக்கினான்; வழி நெடுகக் கிணறுகளைத் தோண்டி வைத்தான். அறச் சாலையில் வழிப்போவாருக்கு உணவு தரப்பட்டது. சோலைகளிலிருந்த இனிய பழ மரங்கள் அவர்களுக்கு நல்ல பழங் களை உதவின. நீர் வறட்சியைக் கிணறுகள் போக்கின. இவ்வாறு தத்தன் செய்த அறச் செயல்கள் கணக்கில் அடங்கா.

தத்தனின் புகழ் எங்கும் பரவிற்று. அரசன் இவனைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப் பட்டான்; தன் அவைக்கு அழைத்தான்.

இந்தக் காலத்தில் நம் அரசினர் பொதுத் தொண்டு செய்வோருக்குத் தங்கப் பதக்கம் முதலியவற்றைத் தருகின்றார்கள். அன்றியும் பட்டங்களையும் கொடுக்கின்றார்கள். நம் நாட்டில் பழங்காலத்திலும் இந்த வகையான பழக் கங்கள் உண்டு. வாணிக மரபில் நல்ல அறங் களைச் செய்வோருக்கு எட்டி என்ற பட்டத்தைக் கொடுப்பார்கள். அதற்கடையாளமாகப் பொற்பூ ஒன்று தருவார்கள். அப்பூவிற்கே எட்டிப்பூ என்ற பெயரும் உண்டு. நம் தத்தனுக்கு மன்னன் எட்டிப் பூவினை வழங்கினான். தன் அவையில் வீற்றிருக்கும் உரிமையினையும் கொடுத்தான். அன்று முதல் தருமதத்தன், எட்டி தருமதத்தனானான். அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும் அன்றோ?

ஆண்டுகள் பல கடந்தன. தத்தனுக்கு வயது அறுபது முடிந்தது. அவன் ஏன் காவிரிப்பூம் பட்டினத்தை விட்டுவந்தான்? தன் மாமன் மகள் விசாகை கன்னிமாடத்திற் குச் சென்றமையால் வந்தான் என்று முன்னே சொன்னேன். வரும்போது இவன் சிலவற்றைச் சொல்லிவிட்டு வந்தான். என்ன சொல்லி இருப்பான்? எண்ணிச் சொல்லுங்கள். சொல்லு கின்றேன். ‘என் உயிரை ஒத்தவள் விசாகை; அவள் ஊர்வாயை அடக்க இந்தப் பிறப்பில் என்னை மணக்கமாட்டேன் என்றாள் : அடுத்த பிறப்பில் கூடி வாழ இறைவனை வேண்டு கின்றாள். அப்படி ஆனால் யான் மட்டும் மணம் செய்து கொள்ளலாமா? தகாது. யானும் இப் பிறப்பில் யாரையும் மணம் செய்து கொள்ளேன்; அடுத்த பிறப்பில் என் அருமருந்து அன்ன மாமன் மகளையே மணப்பேன்,’ என்று உறுதி கூறிவிட்டு வந்தான். இருவர் உள்ளங்களும் எவ்வாறிருக்கின்றன என்பதைப் பாருங்கள்.

ஒருநாள் தத்தன் தன் மாளிகையில் இருந் தான். அப்போது அங்கு ஒருவன் வந்தான். அவன் ஓர் அறவோன். எவரேனும் தீமை செய்வதாக அறிந்தால் அவருடைய வீட்டிற்குச் செல்வான். ‘இன்ன செய்கை கெட்டது; அதனை நீக்கிவிடுங்கள்,’ என்று சொல்லுவான். அப்படிப்பட்ட அவன் தத்தனிடத்தில், “எட்டிப் பட்டத்தினைப் பெற்றோய்! செல்வத்தில் சிறந் தோய்! தாங்கள் இதுவரை மணம் செய்து கொள்ளவில்லை என்பதை அறிகின்றேன். மணம் செய்து கொள்ளாதவர்கள் எவ்வளவு அறம் புரிந்தாலும் மேலுலகத்திற்குச் செல்ல மாட்டார். ஆதலின், உடனே தாங்கள் உள்ளத்திற்குப் பொருந்திய ஒருத்தியை மணம் புரிந்து கொள்ள வேண்டும்; இல்லற வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும்; இவற்றையே யான் தங்கள் நன்மைக்காகத் தங்களைக் கேட்டுக்கொள்கின்றேன்,” என்று வணக்கத்துடன் கூறினான்.

அறவோன் சொற்கள் தத்தனைக் காவிரிப் பூம் பட்டினத்தை நினைக்குமாறு செய்தன. தான் பிறந்து வளர்ந்த அவ்வூரை ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாகப் பார்க்காமலிருந்து விட்டான். சென்று பட்டினத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்தது. நண்பினர் முதலியோரிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டான். தென்மதுரை மக்கள் தருமமே உருவாகிய தருமதத்தனைப் பிரிய முடியாமல் அழுது நின்றனர்.

பட்டினத்திலும் தத்தன்புகழ் நிறைந் திருந்தது. இப்போது அவ்விடத்திற்குத் தத் தன் வருகின்றான் என்பதைக் கேட்ட மக்கள் திரள் திரளாகக் கூடினர். அவன் உறவினரும் பிறரும் கும்பல் கும்பலாய்ச் சூழ்ந்தனர். தத்த னைத் தவிரப் பிறரை மணக்க மாட்டேன் என்று கன்னிமாடம் புகுந்த இளங்கன்னியும் எதிர் கொள வந்தாள்.

பட்டினம் முழுவதும் கிளர்ச்சியுடன் விளங்கிற்று. ‘அதோ தத்தனார் வருகின்றார்’ என்று பெரிய ஒலி எழுந்தது. தத்தன் வாழ்க ! அறச்செயல் புரிந்த அண்ணல் வாழ்க ! உறுதி உள்ளத்து உயர்ந்தோன் வாழ்க! எம் நகர் புரிந்த ஏந்தல் வாழ்க! மடமை ஓட்டிய மன்னர் வாழ்க!’ என்று நான்கு புறங்களிலும் வாழ்த் தொலிகள் வானைப்பிளந்தன.

தத்தனை எல்லோரும் கண்டனர். தத்த னும் எல்லோரையும் கண்டான். விசாகை வீரனைக் கண்டாள்! வீரனும் விசாகையைக் கண்டான்; ஆயினும் ஒருவரை ஒருவர் காணவில்லை. என்ன வியப்பு! நேருக்கு நேர் நிற்கின்றனர்; ஆனாலும் அறிந்துகொள்ள முடியவில்லை.

பட்டினத்தை விட்டு நீங்கிய நாளில் தத்தன் கட்டிளங் காளையாக இருந்தனன். காமனை வென்ற அழகுடன் விளங்கினான். குறு குறு என்ற கருவிழி; பளபள என்ற நெற்றி; எடுத்த தலை; விரிந்த மார்பு; இவற்றோடு அழகே ஒரு வடிவத்தைக் கொண்டதைப் போன்று இருந்தான். ஆனால் இன்று எவ்வாறு காணப்படுகின்றான்? கருத்துச் சுருண்டிருந்த தலைமயிர் பாலினும் வெளுத்தது; நீண்டு அழ காயிருந்த புருவங்கள் சுருங்கின ; ஒளியுடன் விளங்கிய தோல் கடல் அலைகளைப் போல் மடிந்து தொங்கிற்று; நெற்றியில் பல வரிகள் காணப்பட்டன. அந்தோ! அவனிடம் நிறைந்து நின்ற அழகு இன்று மறைந்தது! காலம் என்னும் கொடியோன் செய்த வேலை அன்றோ இது.

விசாகையி னுருவமும் மாறியது. அன்று தாமரையை ஒத்திருந்தன அவள் கண்கள்.

கருமணலைப் போல் வரிவரியாக ஒளிவிட்டு அழகோடு நின்றது அவள் பின்னி விட்ட கூந்தல். முத்தினைத் தோல்வியுறச் செய்தன அவள் பல். சந்திரன் அவள் முகத்தைக் கண்டு தலை கவிழ்ந்தான். இன்று அவள் எவ்வா றிருக்கிறாள்? ஐயோ! கண்கள் குழிந் தன. முகம் சுருங்கியது; பற்கள் வீழ்ந்தன; பால் நுரையைப் போல் தலைமயிர் வெளுத்தது.

விசாகையும் தத்தரும் ஒருவரை ஒருவர் நோக்கல் இவ்வாறு இருவரும் முழுவதும் உருவம் மாறி இருந்தார்கள். ஆகவே ஒருவரை ஒருவர் அறிய முடியவில்லை; பிறகு அறிந்தார்கள். விசாகை ! என்றனன் தத்தன். அன்ப! என் றனள் விசாகை. ஒருவரை ஒருவர் நெடுநேரம் நோக்கி ஒன்றும் பேசாதிருந்தனர். ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ!’

விசாகை வாய் திறந்தாள். “அன்பரே! இன்று நம்மை நாம் அறியாது விழிக்கின்றோம். நம்மிருவரையும் ஒன்றாகக் கட்டிவைத்த அழகு எங்கே? தங்களுக்கு அறுபது ஆண்டுகளுக்கு மேலாயிற்று. என் கூந்தலும் வெண் நிறம் ஏற்றது. நம்மை முன்னே மயக்கிய காமமும் தன் வன்மையை இழந்தது. எல்லாம் தோன்றி மறைவனவே!

தத்தன் :- என் அன்புடைய விசாகை! நீ சொல்வன யாவும் உண்மையே. யான் ஓர் அறவோனால் இங்கு அனுப்பப்பட்டேன். அவன், ‘மணம் செய்து கொள்ளாதவர்கள் செய்யும் அறம் பயனுடைத்தன்று,’ என்றான். அவன் சொல்லில் எனக்கு நம்பிக்கை வர வில்லை. ஆயினும் என் உள்ளத்துப் பெண்ணாகிய நின்னைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அழுத்தமாக என் உள்ளத்தில் உண்டாயிற்று.

விசாகை : – அறவோர் என்ன சொல்லி னர். ‘மணம் செய்யாதவர் செய்யும் அறம் பயனில்லாதது, என்றா கூறினர்? அஃது எப்படி ? இளமை நில்லாது; யாக்கையும் நில்லாது; செல்வமும் நில்லாது; அறவோர் சொல்லும் இல்வாழ்க்கையில் பிறக்கும் பிள்ளைகளும் நமக்கு மேலுலகத்தைத் தரமாட்டார்கள். என்றும் வாழ்வது அறம் ஒன்றே. ஆதலின் இனியும் அறம் செய்வீராக!

இருவரும் பேசி மகிழ்ந்தனர். நகர மக்கள் உடல் பூரித்தனர். ‘நம்பி வாழ்க ! நங்கை வாழ்க! கற்பிற் சிறந்த காரிகை வாழ்க! உறுதி சிறந்த உண்மையோன் வாழ்க! பட்டினத்துப் பெண் வாழ்க! பல நலம் சிறந்த பண்பினர் வாழ்க!’ என்று ஆரவாரித்து மகிழ்ந்தார்கள்.

விசாகையின் உள்ளத்து உறுதியே உறுதி! தத்தனின் தகுதியே தகுதி!

– சங்க இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: ஜனவரி 1942, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *