(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 11 | அத்தியாயம் 12
காந்தளூர்ச் சாலை இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டிருந்தது. ஒரு பக்கம் சோழனின் கடற்படையும் மறுபக்கம் தரைப் படையும் நிகழ்த்திய இரு முனைத் தாக்குதலில் மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் மரக் கலங்கள் பலவும் கொண்ட சேரனின் அந்த அழகிய கடற்கரைப் பட்டினம் நிர்மூலமாகி விட்டிருந்தது. எங்கேயும் அதிக தாமதமின்றி வெற்றியைத் தவிர வேறொன்றும் அறியாமல் திட்டமிட்ட காலக் கெடுக்களில் மாறுதலேதுமில்லாமல் முன்னேறி வந்திருந்த அருள்மொழி வர்மனுக்கு ஒரே கவலை. பெருங் கவலை கம்பன் மணியன் சிவலோக நாதனை விடுவிப்பதில் வெற்றி பெற வேண்டுமே என்பதுதான். அதுமட்டும் நிறைவேறாது போனால் இந்தப் படையெடுப்பே பயனற்றதாகுமல்லவா?
அதற்காகத் தன் பாசறையிலேயே ஒரு பிரிவில் சிவ பூஜை நடத்திப் பிரார்த்தித்து விட்டு திரை விலக்கி வெளிப்பட்டவன் பூசனைக்கு உடனடிப் பலன் கிட்டியது போல் கம்பன் மணியன் தனக்காகக் காத்திருப்பதைக் கண்டு வியந்தான்.
மன்னரைப் பணிவுடன் வணங்கி எழ முற்பட்டான் கம்பன் மணியன். அதற்குள் பொறுமை இழந்தவனாய், “கம்பன் மணியா செய்தி என்ன? அதைச் சொல் முதலில்!” என்று கட்டளையிட்டான் அருள்மொழி.
“மரகதத்தேவர் அருளாலும் தங்கள் ஆசியாலும் காரியம் வெற்றிகரமாய் முடிந்தது பிரபோ! ஆனால் அம்முயற்சியில் என் உயிருக்குயிரான தோழர்கள் ஆறுபேரைக் காவு கொடுத்துவிட்டேன்!” என்று கலங்கினான் கம்பன் மணியன்.
அவன் தோள்களைத் தட்டி ஆறுதல் அளித்தான் அருள்மொழி. “மணியா! உன் மனநிலை எனக்குப் புரிகிறது. அறுவர் குடும்பங்களுக்கும் ஆறுதல் அளிக்கும் பொறுப்பை உனக்கே அளிக்கிறேன். நமது அவைப் புலவர்கள் அவர்கள் வீரத்தைப் பாடுவார்கள். அவர்களின் வீரக் கதையைக் குறவைக் கூத்தாக்கிச் சோழ நாடெங்கும் அரங்கேற்றி அவர்கள் இறவாப் புகழ் பெறச் செய்வோம், அவர்கள் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆறாயிரம் பொற்கழஞ்சுகளை வழங்குவோம். அந்த அறுவரின் வீரம் மேலும் அறுபதாயிரம் வீரர்களை உருவாக்கட்டும்” என்றான்.
கண்களிலிருந்து நீரையும் இதயத்திலிருந்து துயரையும் துடைக்க முயன்றவாறே கம்பன் மணியன் கூறினான்: “பிரபோ! உதகைக் கோட்டையிலிருந்து சிறை மீட்கப்பட்ட சிவலோக நாதன் விசித்திரமாக நடந்து கொள்கிறான். தன்னைக் கொன்றுவிடுமாறும் அல்லது தற்கொலைக்கு உதவியாக ஒரு குத்தீட்டியோ விஷமோ தருமாறும் கெஞ்சிக் கொண்டிருக்கிறான். ஒருவேளை சிறைச்சாலையில் அவன் அனுபவித்த சித்திரவதை காரணமாக சித்தம் கலங்கி விட்டிருக்குமோ என்றுகூடத் தோன்றுகிறது. சிறைவாசம் மட்டுமின்றிச் சித்திரவதைகளையும் அனுபவித்து அவன் உடலும் உள்ளமும் மிகவும் நைந்துவிட்டிருக்கின்றன.”
“எங்கே அவன்? எங்கே?” என்று கேட்டுக்கொண்டே மகிழ்ச்சியும் கவலையும் போட்டியிட்டுப் பொங்க கம்பன் மணியன் பின்தொடர மருத்துவப் பாசறைக்குச் சென்றான் அருள்மொழி வர்மன்.
அப்பாசறையில் போரில் அடிபட்டு வேதனையில் துடித்துக் கொண்டிருந்த பல வீரர்களுக்கும் அன்பு மொழியும் ஆறுதல் வார்த்தைகளும் கூறியபடியே இலேசான பரபரப்பு எட்டிப் பார்க்க சிவலோக நாதனைச் சென்றடைந்தான் அருள்மொழி.
மன்னரைப் பார்த்ததும் பொல பொலவென்று கண்ணீர் உகுத்துக் கதறினான் சிவலோக நாதன். “அரசே! தாங்கள் அளித்த பொறுப்பைச் சரிவர நிறைவேற்றாத இந்தப் பெரும்பாவிக்கு உரிய தண்டனை கொடுங்கள்” என்று புலம்பினான்.
மன்னன் நெற்றியில் சிந்தனை ரேகைகள் படர்ந்தன. “மருத்துவரே இவன் மனநிலை சரியில்லை. இவனுக்குத் தனிப் பாசறை ஒதுக்குங்கள். அங்கு வந்து காண்பேன்” என்றான்.
அவ்வாறே சிவலோக நாதன் தனிமைப் படுத்தப்பட்ட பின்னர் கம்பன் மணியனை மட்டும் உடன் வைத்துக் கொண்டு அவனை விசாரித்தான் அருள்மொழி. ஆறுதலும் கூறினான்: கவலை வேண்டாம் சிவலோக நாதா! சேரன் உனக்கு இழைத்த அநீதிக்குப் பழிவாங்கியாகி விட்டது. உன்னைச் சிறை வைத்திருந்த உதகையையும் இனி தாக்கி மண்ணோடு மண்ணாக்குவேன்” என்று வீரம் பேசினான்.
“பிரபோ! இத்தனை அன்புக்கும் நான் தகுதி வாய்ந்தவன் அல்ல என்பதுதான் என் குறை” என்று அழுதான் சிவலோக நாதன். “என் சொல்வேன்? வண்டார் குழலியின் கயல் விழிகளில் மயங்கி மோசம் போனேன். நல்லெண்ணத் தூதுவனாக வந்தவன் ஒற்றன் எனப் பெயர் பெற்றேன்” என்று தொடங்கி நடந்தனவற்றையெல்லாம் மெல்ல மெல்ல கண்ணீர்ப் பெருக்கினூடே விம்மல் விசும்பலுக்கிடையில் கூறி முடித்தான். கடைசியில், உங்களைச் சேர நாட்டின் மீது படையெடுக்கச் செய்வதுதான் அவள் என்னை ஒற்றனாக்கிச் சிறைப்படுத்தியதற்கு உள்நோக்கமாக இருக்க வேண்டும் என இப்போது உணர்கிறேன் பிரபோ” என்றான்.
இதையெல்லாம் கேட்டு வந்த கம்பன் மணியன் தன் அனுபவங்களையும் மன்னருக்கு எடுத்துரைத்து, இறுதியில், “எனக்கு உதவுவது போலும் நடந்து கொண்டு அதே நேரத்தில் சிவாவைப் புலிக்கு இரையாக்கிவிடவும் முயன்ற வண்டார் குழலியின் நடத்தைக்குக் காரணம் இப்போது புரிகிறது” என்றான். “சோழன் வென்றால், சிவலோக நாதனைச் சிறைமீட்க மனப்பூர்வமாய் உதவினேன். ஆனால் கணக்குப் பிசகிவிட்டது. எந்தக் கொட்டடியில் அவன் இருக்கிறான் என்பதில் குழப்பம் ஏற்பட்டுவிட்டது எனலாம்… சேரன் போரில் ஒருவேளை வென்றுவிட்டால், சிவலோக நாதனைச் சோழர்கள் மீட்புப் படையை ஏவி சிறை மீட்க முயன்றனர். அவர்கள் முயற்சியை நான்தான் முறியடித்தேன் என்று பெருமையாகக் கூறலாம். இரு தரப்பிலும் நற்பெயரெடுத்து அதே நேரத்தில் சிவா ஒற்றன் எனக் கருதப்படத் தான்தான் காரணம் என்ற ரகசியமும் வெளிப்படாமல் காக்கலாம்!”
ஆதியோடு அந்தமாக அனைத்தையும் தெரிந்துகொண்ட அருள்மொழி வர்மன், “ஆகா! அவள் வஞ்சம் மட்டும் வெற்றி பெற்றிருந்தால்….” என்று நிறுத்தினான்.
”நான் ஏமாந்தவனாகி விட்டிருப்பேன். சிவாவுக்குப் பதில் எவனையோ விடுவித்து அழைத்து வந்திருப்பேன். எவ்வளவு அவமானம்!”
“அவமானம் உனக்கு மட்டுமா?” என்று கர்ஜித்தான் அருள்மொழி. “எனக்கும் சோழ நாட்டுக்கும் எப்பேர்ப்பட்ட அபகீர்த்தி!” நினைக்க நினைக்க அருள்மொழிக்குக் கோபம் கொந்தளித்தது. “சீச்சீ! ஒரு பெண் நாட்டியக்காரி, ராஜ நர்த்தகி, பேரழகி எத்துணை பெரிய சூழ்ச்சியில் ஈடுபட்டு சேரமானை முட்டாளாக்கி அநீதி இழைக்கச் செய்துவிட்டாள். அதனால் அமைதி காத்து அறப் பணிகளிலும் கலைப் பணிகளிலும் ஈடுபட நினைத்த நானும் அல்லவா படையெடுக்க நேர்ந்துவிட்டது? சேரன்பால் பழிதீர்த்துக்கொள்ள என்னைக் கருவியாக்கி மாபெரும் வெற்றியும் பெற்றுவிட்டாளே! அவள் மடிந்தாள் என்றாலும் அவள் லட்சியம் ஈடேறிவிட்டதே!”
இத்தகைய துரோகியை இனம் கண்டு கொள்ளாமல் தன் அரசவையிலேயே இடம் அளித்து அவளால் வஞ்சிக்கப்பட்டு, பெரும் போருக்கும் வழி வகுத்துவிட்ட சேரன்பால் ஆத்திரம் கட்டுக்கடங்காமல் பொங்கியது அருள்மொழிக்கு. அந்த ஆவேச வெறியில் அவன் சிவலோக நாதன் சிறைபட்டிருந்த உதகையை மட்டுமல்ல மற்றோரு கடற்கரைப் பட்டினமாம் விழிஞத்தையும் இடித்துத் தகர்த்துத் தரை மட்டமாக்கி அழித்தான்.
வெற்றித் திருவை மணந்து சேர நாட்டில் தங்கியிருந்த நாளில் தான் பிறந்த சதய நாள் விழாவைக் கொண்டாடினான். ஆண்டு தோறும் கொண்டாடவும் உத்தரவிட்டான். பின்னர் பொன்னும் மணியும் பவழமும் முத்தும் களிறும் சந்தனமும் வேறு பலவும் பெருமளவில் வெற்றிப் பரிசாகப் பெற்றுத் திரும்பினான்.
சோணாடு திரும்புகையில் வீர பாண்டியன் எதிர்ப்பட்டான். வணங்கிக் கூறினான்: “என் கோரிக்கையை மறக்க மாட்டேன் என்றீர்கள்!”
“மறக்கவில்லை வீர பாண்டியரே” என்றான் அருள்மொழி. “அமரபுஜங்கனிடமிருந்து நான் போரிட்டுப் பெற்ற இந்தப் பாண்டியப் பேரரசை வாக்களித்தபடி உமக்கே அளிக்கிறேன். ஆனால் அதனை மீண்டும் யுத்தம் செய்து நானே பறித்துக்கொள்ளவும் போகிறேன்! தனது ஒரு சொந்தப் பழிதீர்ப்புக்காக வஞ்சனை புரிந்த ஒருத்தியின் சாகசத்தில் மயங்கி இரு பேரரசர்களை மோதவிட்டு இடையில் ஆதாயம் காண நினைத்த நீர் மன்னராயிருக்கவே தகுதியற்றவர். எங்கே உமது படை பலம்? அதற்கேற்ப என் சேனையையும் குறைத்துக் கொண்டு உம்முடன் பொருதுகிறேன். அல்லது நாம் இருவர் மட்டுமே கைகலக்கலாம். என்னுடன் நேருக்கு நேர் சண்டையிட்டுப் பாண்டிய நாட்டைக் காத்துக் கொள்ளுங்கள்! வாளா? வில்லா? வேலா? அல்லது வெறுங்கையா எதைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?”
வீர பாண்டியனுக்கு வேறு வழி இல்லாது போய்விட்டது. நேருக்கு நேர் நிற்கத் துணிவில்லாத கோழையாகித் தன் படை பலத்தை உணர்த்தினான். அதற்குச் சம பலத்துடன் மட்டுமே முன்னேறி ஏனையோரை ஒதுங்கி இருக்கச் செய்தான் அருள்மொழி. நிகழ்ந்த யுத்தத்தில் பாண்டியப் படை நிர்மூலமாகியது.
அமரபுஜங்கனை மட்டுமின்றி அவனுக்குப் போட்டியாகப் பாண்டிய நாட்டின் மீது உரிமை கொண்டாடிய வீர பாண்டியனையும் வென்றதால், ‘செழியரை தேசுகொள் கோவி ராசகேசரி வர்மன்’ ஆனான் அருள்மொழி.
தஞ்சை திரும்பியபோது “சேரனையும் பான்டியனையும் ஒருசேர வென்ற சோழன் என்ற அளவில் ‘மும்முடிச் சோழரே வருக” என்று தம்பியை வரவேற்றாள் குந்தவை. “அரசர்க் கரசன் என்று பொருள்பட, “ராஜ ராஜனே! வருக!” என்றாள் பட்டமகிஷி வானவன் மாதேவி.
“பிரபோ! என் காதலன் எங்கே?” என்று வினவினாள் உதயபானு.
“மீட்டு வந்தேன் நங்காய்! ஆனால் அவன் தவறிழைத்திருக்கிறான். ராஜ நீதிப்படி அவனுக்கு நான் தண்டனை வழங்க வேண்டியவனாய் உள்ளேன்” என்றான் ராஜராஜன். “சிறையில் நீ அவனைச் சந்திக்கலாம்; சந்திப்பதென்ன? உன் காதல் உறுதியானதாயிருந்தால் சிறைச்சாலையிலேயே அவனைத் திருமணம்கூடச் செய்து கொள்ளலாம். ஆனால் சேர்ந்து வாழ முடியாது.”
“என்ன தம்பி இது?” என்று கலக்கதுடன் வினவினாள் குந்தவை. நடந்ததையெல்லாம் அறிய வேண்டியவர்களுக்கு மட்டும் விவரித்தான் அருள்மொழி.
“நான் அஞ்சமாட்டேன் அக்கா! எங்கள் திருமணம் சிறைச்சாலையிலேயே நடக்கட்டும்!” என்றாள் உதயபானு. “சேர்ந்து வாழ்ந்தாலும் பிரிந்து வாழ்ந்தாலும் என் கணவர் அவரே! அவர் எனக்குத் துரோகம் இழைத்திருக்கலாம். ஆனால் சோழ நாட்டுக்குத் துரோகம் எண்ணியிருக்கவே மாட்டார். தவறுவது மனித இயல்பு. திருந்துவது தெய்வ இயல்பு. என் காதலரின் கண்ணீர் அவரைத் தெய்வமாக்குகிறது அக்கா!”
“அப்படியானால் சரி, திருமணத்துக்கு நாள் குறிக்கலாம்” என்றான் ராஜராஜன்.
திருமணம் அடக்கமாக, அமைதியாக நடந்தது. துயரமும் மகிழ்ச்சியும் வியப்பும் நெகிழ்ச்சியும் ஒன்றோடொன்று போட்டியிட, கூடியிருந்தவர்கள்
திக்கித் திணறியபடியே, உறுதியாய் நின்ற அந்த விசித்திரமான இளம் தம்பதிக்கு ஆசி நல்கினர்.
“தம்பி! ஏதோ திருமணப் பரிசு அளிக்கப் போவதாய்ச் சொன்னாயே?” என்று நினைவூட்டினாள் குந்தவை.
“ஆம் அக்கா! இதோ! உன் கரத்தினாலேயே இதனை மணமகனிடம் கொடு” என்றான் அருள்மொழி வர்மன்.
ராஜ முத்திரையுடன் கூடிய நறுக்கோலையை சிவலோக நாதனிடம் அளித்தாள் குந்தவை. “உரக்கப் படி சிவா” என்றாள்.
பிரித்துப் படித்தான் அவன்.
“செய்த தவறுக்கு உரிய தண்டனையை சேர நாட்டிலேயே சிறை வாசமாகவும் சித்திரவதையாகவும் ஏற்கனவே போதிய அளவு அடைந்து மனம் வருந்தித் திருந்திவிட்ட சிவலோக நாதனுக்கு இன்று முதல் பூரண மன்னிப்பு. இதுவே ராஜராஜன் அவனுக்கு வழங்கும் திருமணப் பரிசு!”
ஆனந்தக் கண்ணீர் பெருகத் தன் கால்களில் விழுந்து வணங்கிய இளம் தம்பதிக்கு மனப்பூர்வமான் ஆசிகளை நல்கினான் மும்முடிச் சோழன்.
– முற்றும் –