கதிரவனின் உக்கிரம் அந்தக் காலை வேளையில் பனித்துளிகளை சிதறடித்துக் கொண்டிருக்க எண்ணற்ற பட்சிகள் சிறகடித்துப் பறக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தன. அடர்ந்த அக்காட்டில் இயற்கை தனது பச்சை பசேல் என்ற புடவையை பாரபட்சமின்றி படரவிட்டிருந்தது. பட்சிகளின் ஒலி, எந்தவித சங்கீத ஒலிகளின் கட்டுப்பாட்டிலும் அகப்படாத வித்தியாசமான இசை. அந்த மலையினூடே மின்னல் கொடியென காட்சியளிக்கும் “சளசள’வென வெண்ணிற நீர்வீழ்ச்சி.
இவற்றையெல்லாம் மீறி அந்த அமைதிப் பிரதேசத்தையே சீர் குலைக்கும் அந்த இளம் பெண்களின் சிரிப்பொலி அப்பப்பா… இயற்கைக்குத்தான் இறைவன் எவ்வளவு அலங்கார உபகரணங்களைக் காணிக்கையாக்கியுள்ளான். அந்த இளம் காலை வேளையில் துள்ளிக் குதித்தோடும் மான்களைப் போல அந்த இளம் சிட்டுக்கள் துள்ளிக் குதித்தோடும் காட்சி அப்பப்பா…. ஏதோ அரச குடும்பத்தைச் சார்ந்தவர்கள் போலும்! அவர்களிடையே ஒய்யார நடை நடந்து செல்லும் அந்த மங்கைதான் அக்கூட்டத்தின் தலைவி போலும். மற்ற இளம் சிட்டுக்கள் அவளது தோழிகள் போலும். இளமையின் குதூகலத்தினூடே எவ்வித சஞ்சலமும் இன்றி தாவிக் குதித்து வந்தவர்களின் மத்தியில் ஏற்பட்ட அடுத்தக் கட்ட நடவடிக்கை அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்தது.
ஆம். இந்த இளம்சிட்டுக்கள் பயத்தில் மின்னலென கூக்குரலிட்டுச் சிதறின. ஆனால் அந்த வீர மங்கை சிலிர்த்தெழுந்து தன் முன் தோன்றிய சிறுத்தையை எதிர்கொள்ளத் தயாரானாள். ஆம் பூ ஒன்று புயலாக சுழன்று மாறிய காட்சியை அங்கு மறைவிடத்தில் மறைந்து நின்று கண்ணுற்ற வீரபத்திரனைத் திகைக்க வைத்தது.
இவள் ஒரு சாதாரணப் பெண்ணல்ல. ஏதோ வீரமறவர் வம்சத்தில் பிறந்திருக்க வேண்டும். கொடியென ஒடிந்த அக்கொடியிடையாள் திடுமென அச்சிறுத்தையை எதிர் கொண்டு போரிடும் லாகவம், அப்பப்பா… போர் உக்கிரத்தை அடைந்து கொண்டிருந்த அதே நேரத்தில் அவள் கை கால்கள் துவளுவதைக் கண்ட வீரபத்திரன் அவளை இனியும் போரிட அனுமதித்தால் விபரீதம்தான் என நினைத்து தன்வசம் வைத்திருந்த அம்பை எடுத்து குறி தவறாமல் அந்த சிறுத்தையின் மீது பாய்ச்சி அதைச் செயலிழக்கச் செய்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அம்பு வந்த திசையை நோக்கிய அந்த வீராங்கனையின் முகத்தில் அனல் பறந்தது.
“”யார் நீ போர்க்களத்தில் புறமுதுகில் குத்தும் கோழையா நீ? ஓர் ஐந்தறிவு விலங்கை புறமுதுகிட்டு ஓடச் செய்யாமல் புறமுதுகில் குத்திக் கொல்லும் கோழைத்தனமான ஈனப்பிறவியே நீ யார்” அந்த இளம்பெண்ணின் குரல் ஆக்ரோசமாக ஒலித்தது.
“”ஒரு வீரமகள் ஆபத்தில் சிக்கித்தவிக்கும்பொழுது போர்த் தர்மங்களைப் பார்த்துக் கொண்டிருப்பது முட்டாள்தனம்” -வீரபத்திரன்.
தான் எதிர்கொண்டுள்ள ஆடவன் போர்த்தந்திரங்களைத் தெரிந்து கொண்டுள்ளான் என்பதை அவன் அணிந்துள்ள ஆடை அணிகலன்களே பறைசாற்றின. அவன் எண்ணற்ற போர்க்களங்களைக் கண்டது போன்ற ஓர் உணர்வு அப் பெண் புலியின் எண்ணத்தில் பளிச்சிட்டது.
“”யார் நீ? நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதிலில்லையே?” என்று கேட்டவளின் குரலில் முன்பிருந்த ஆக்ரோஷம் குறைந்திருந்தது.
“”மன்னிக்க வேண்டும் இளவரசியே. நான் யார் என்பதை நானே அறியாத பொழுது நான் யார் என்பதை நான் எப்படி தங்களுக்குச் சொல்ல முடியும்?” என வீரபத்திரன் சொல்வதைக் கேட்டு, “”இளவரசியா நானா? என்ன உளறுகிறாய்? என்று ஆச்சரியப்பட்டவளை,
“”நான் ஒன்றும் உளரவில்லை. உண்மையைத்தான் சொல்கிறேன். தாங்கள் வேங்கி நாட்டு இளவரசிதானே? உங்கள் பெயர் கயல்விழி என்பதும் எனக்குத் தெரியும்” என்று சொல்லிக் கொண்டு போனவனைப் பற்றி ஒரு முடிவுக்கு வர முடியாமல் போகவே அவன் மீது கோபத்திற்குப் பதிலாக ஒருவித பயம் கலந்த மரியாதையையே அவன் மீது காட்ட முடிந்தது.
ஆர்ப்பரித்தவள் அருகில் வந்ததும் வீரபத்திரன் தன்னை மறந்து அவளது அழகில் மயங்கினான். விண்ணிலிருந்து பூலோகத்திற்கு வந்துள்ள தேவதையோ என ஒரு கணம் மெய் மறந்தான். தன்னை மறந்தான். தானிருந்த சூழ்நிலையை மறந்தான். அடுத்து நிகழ்ந்த நிகழ்ச்சி அவனை தன் சுய நினைவுக்குகொண்டு வந்தது. ஆம். அவனை நோக்கி அம்பெய்ய தலைப்பட்ட மறவர் கூட்டத் தலைவனை ஆக்ரோஷத்தோடு கூடிய கயல்விழியின் உத்தரவு வீரபத்திரனை மட்டுமின்றி அந்தக் காட்டையே கதிகலங்கச் செய்தது. இருப்பினும் அதைக் கண்டு அஞ்சாத அக்கூட்டம் வீரபத்திரனை கண்ணிமைக்கும் நேரத்தில் சிறைப்படுத்தியது.
அரசவையையே கதிகலங்க வைத்தது அரசன் விக்ரமசேனனின் கர்ஜனை. “”என்ன அமைச்சரே தாங்கள் என்ன பதில் கூறப்போகிறீர்கள்? சேனாதிபதியாரே. தாங்கள் படைகளை நிர்வாகிக்கும் லட்சணம் இதுதானா?” விக்ரமசேனன்.
“”மன்னவா. தாங்கள் கோபப்படுவதில் நியாயம் உள்ளது” என்று விளக்கம் சொல்ல முற்பட்ட சேனாதிபதியைக் கையமர்த்தி,
“”எந்த விளக்கமும் வேண்டாம். இளவரசன் காணாமல் போய் ஒரு வாரத்திற்கு மேலாகிறது. இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இது தங்களின் நிர்வாகத் திறமையின்மையைத்தான் காட்டுகிறது. எத்தனை படைபலம் இருந்து என்ன செய்வது? இளவரசன் எங்கு சென்றார்? ஏன் சென்றார்? என்ற கேள்விகளுக்கு என்ன விடையளிக்கப் போகிறீர்களோ?” மன்னவன் விக்ரமசேனன்.
அரசவையில் விக்ரமன் நுழைந்து கொண்டே,
“”மன்னவன் வாழ்க, பல்லாண்டு வாழ்க இளவரசனைத் தேட வேண்டிய அவசியமில்லை. அவர் பத்திரமாக உள்ளார்” என்ற பதில் அரசவையில் உள்ள அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
“” என்ன இளவரசர் கிடைத்துவிட்டாரா? எங்குள்ளார்?” எனஅரசவையிலிருந்த அனைவரும் ஏககாலத்தில் குரல் கொடுக்க,
“”மன்னிக்கவேண்டும், மன்னவா. இதனை
அனைவரிடமும் விளக்கமாகச் சொல்ல முடியாது. அரசு நலன் கருதி தங்களிடம் மட்டும் தனியாக கூற விழைகிறேன்” என்று விக்ரமன் கூற அரசனும் சபை நடவடிக்கைகளை முடித்து தனது அந்தரங்க அறைக்கு விக்ரமனுடன் சென்றான். விக்ரமன் அரசியலில் அரசனுக்கு ஓர் அந்தரங்க ஆலோசகன். அதனால் இதனை யாரும் தவறாக நினைக்க மாட்டார்கள்.
“”என்ன விக்ரமா. இளவரசன் எங்கே என் மகன் எங்கே?” என மன்னவன் அதிர்ச்சி கலந்த ஆவலோடு கேட்டான்.
“”இளவரசன் வீரபத்திரன் ஒரு தீவுக்குச் சென்றிருக்கிறார். அங்கு தலைமறைவாக உள்ள நமது முன்னாள் மன்னன் நரசிம்மனின் கைகளில் அகப்பட்டுக் கொண்டார். அதன் பிறகுதான் தெரிந்தது இளவரசர் அத்தீவிற்கு அடிக்கடி போயிருக்கிறார் என்று. ஆம். நரசிம்மனின் மகளுக்கும் இளவரசனுக்கும் காதல் போலும். இதனை அறிந்து நான் அவர்களிருவரையும் அங்குள்ள குகை ஒன்றில் கைதிபோல் சிறைவைத்துள்ளேன்” என்றான் விக்ரமன்.
“”என்ன இளவரசனை சிறைபடுத்தியுள்ளாயா? என்ன தைரியம் உனக்கு?” என விக்ரமசேனன் கோபம் கலந்த ஆக்ரோஷத்தோடு கேட்டான்.
“”எல்லாம் காரணமாகத்தான் மன்னவா. நமது இளவரசருக்கு தாங்கள் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்தது கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. அதனால் தலைமறைவாகிவிட்ட அரசன் நரசிம்மனைச் சந்தித்து அவருடைய ஒத்துழைப்பின் பேரில் மீண்டும் ஆட்சியை நரசிம்மனுக்கே கொடுக்க வேண்டும் என்றும் அதற்கான முயற்சியில் இளவரசன் இறங்கியிருப்பதாக நம்பத் தகுந்த ஒற்றர்கள் மூலம் சமீபத்தில் கேள்விப்பட்டேன்” என்று கூறியதைக் கேட்ட விக்ரமசேனன் தனது பழங்கால நடவடிக்கைகளை அசை போட்டான்.
“”சரி மன்னவா. மேற்கொண்டு நடக்கும் நிகழ்வுகளை நான் அடுத்த சில நாட்களில் தங்களுடன் கலந்து கொள்கிறேன். எனக்கு நாழியாகிவிட்டது மன்னவா. கதிரவன் சாயுமுன் நான் தீவை அடைய
வேண்டும். இல்லையெனில் நரசிம்மன் என் மீது சந்தேகம் கொள்வான். நான் உங்களை வேவு பார்த்து வருவதாகத்தான் சொல்லி இங்கு வந்துள்ளேன். காலம் தாழ்த்தினால் சந்தேகம் வலுப்பெற்றுவிடும்” என்று சொல்லிக் கொண்டே விடை பெற்றுக் கொண்டான்.
நள்ளிரவு நடு ஜாமம் இருக்கும். சிறைப்பட்ட வீரபத்திரனுக்கு தூக்கம் வரவில்லை. தன்னை யார் ஏன் சிறைப்படுத்தினார்கள்? என்ன செய்யப்போகிறார்கள்? தன்னை சிறை படுத்தியபின் அந்த வீராங்கனை கயல்விழிக்கு என்னாச்சு? அவள் யாருடைய பாதுகாப்பில் இங்குள்ளாள்? இப்படி எல்லாவற்றையும் போட்டுக் குழம்பிக் கொண்டிருந்தவன் கண்ணயர்ந்து தூங்க எத்தனிக்கும் பொழுது அந்த அதிசயம் நடந்தது. இருளில் ஏதோ ஓர் உருவம் பதுங்கிப் பதுங்கி வந்தது. தன் அறை நோக்கி வருவது போல் அவன் உணர்ந்தான், யாராக இருக்கும். பதுங்கி பதுங்கி வந்த உருவம் இறுதியில் தன் அறை வாசலுக்கு வந்ததும் மிகுந்த எச்சரிக்கையுடன் சுற்றும் முற்றும் பார்த்து பூட்டைத் திறக்கத் தொடங்கியது. வீரபத்திரனுக்கு பயத்தால் “திக் திக்’ என்றது. வருவது யாராக இருக்கும். அதுவும் இந்த நேரத்தில். தன்னை ஏதாவது செய்யப் போகிறதா? என்ன ஆனாலும் ஆகட்டும். பொறுத்திருந்து பார்க்கலாம் என நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது வந்த உருவம் தன்னருகில் வரவே, வீரபத்திரன் தன் உறைவாளை எடுக்க முற்பட்ட பொழுது,
“”உஷ். எந்த முயற்சியும்வேண்டாம். நான்தான் கயல்விழி. தப்பிச் சென்றுவிடுங்கள்” கயல்விழி பதறினாள்.
“”இல்லை கயல்விழி. இல்லை. சில விஷயங்கள் புரியாத புதிராக உள்ளன. அதைத் தெரிந்து கொண்டுதான் நான் மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என முடிவெடுக்க வேண்டும்” வீரபத்திரன்.
“”உங்கள் சந்தேகம் எனக்குப் புரிகிறது” கயல்விழி.
“”என்ன புரிந்து கொண்டாய் நீ? ” வீரபத்திரன்.
“”நான் யார். உங்களை சிறைப்படுத்தியது யார்? எதற்காக சிறைப்படுத்தினார்கள்? என்னசெய்யப் போகிறார்கள்? என்பதைப் பற்றிதானே?”- கயல்விழி.
“”ஆமாம் கயல்விழி. இந்த கேள்விகளுக்கெல்லாம் என்ன பதில்” என்று கேட்ட வீரபத்திரன் அவளுடைய அறிவுக்கூர்மையை எண்ணி வியந்தான். அதே சமயத்தில் கயல்விழி மேற்கொண்டு வீரபத்திரனின் சந்தேகங்களுக்கு பதில் கூற முற்பட்டான்.
“”உங்களைச் சிறை படுத்தியது எனது தந்தையின் சேனாதிபதியாகவும் தலைமை மந்திரியாகவும் விளங்கும் விக்கிரமன். அவனுக்கு எப்பொழுதும் என் மீது ஒரு கண். ஆனால் அவனைக்கண்டாலே எனக்கு ஆகாது” கயல்விழி.
“”அது சரி. என்னை எதற்கு சிறைப்படுத்தியுள்ளான்?” – வீரபத்திரன்.
“”அது கூடவா தெரியவில்லை. அவன் விரும்பும் என்னை வேறொருவன் அடைய முற்பட்டால் எப்படி அவன் சும்மா இருப்பான்? அதிருக்கட்டும். இப்பொழுதாவது தாங்கள் யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா? ”
கயல்விழி.
“”தெரியும் பொழுது தெரிந்து கொள்வாய். நான் பேரரசரை இன்று இரவு விடிவதற்குள் பார்த்தாக வேண்டும். அதற்கு நீதான் ஏற்பாடு செய்து தரவேண்டும்” வீரபத்திரன்.
“”இன்று இரவா?” கயல்விழி.
“”ஆமாம் காரியம் தலைக்கு மேல் போவதற்குள் நான் வெகுவிரைவில் அரசரை சந்திக்க வேண்டும்” அவனுடைய அவசரத்தைப் பார்த்த கயல்விழி இவன் ஏதோ விபரீதத்தை எதிர்பார்க்கிறான் என்பதை அவனது உறுதியான தீர்க்கமான பேச்சிலிருந்து தெரிந்து கொண்டாள்.
“”பேரரசன் நரசிம்மனை அதான் எனது அப்பாவை அதுவும் இந்த நேரத்தில் அழைத்து வருவதா? என்ன விளையாடுகிறீர்களா? அதுவும் என்னவென்று சொல்லி அழைப்பது?” கயல்விழி.
“”அரசியல் அந்தரங்கம் பேச வேண்டும் வீரபத்திரனிடம் என்று மட்டும் சொல் போதும்”- என வீரபத்திரன் சொல்லியதைக் கேட்டு அதிர்ந்தாள். அதைத் தெரிந்து கொண்டு,
“”என்னது விக்ரமசேனனுடைய மகன் வீரபத்திரனா தாங்கள்? எனது தந்தையின் விரோதி மகனா தாங்கள்? குறுக்கு வழியில் நம்பிக்கைத் துரோகம் செய்து ஆட்சியைக் கவிழ்த்து எனது தந்தையைக் கொல்ல முயன்ற அந்தத் துரோகியின் மகனா நீங்கள்? ஐய்யய்யோ. என் மனதை உங்களிடமா பறிகொடுத்தேன்? எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன். நான் மோசம் போனதோடல்லாமல் எனது தந்தைக்கும் துரோகம் செய்துவிட்டேனே” கயல்விழி.
“”கயல்விழி அவசரப்படாதே. நீ போய் நான் சொன்னதைச் சொல். பேரரசரிடம் பேசும் பொழுது அனைத்தையும் தெரிந்து கொள்வாய். காலம் தாழ்த்தாமல் போ” – வீரபத்திரன்.
கயல்விழி மேற்கொண்டு எதுவும் பேசாமல் பேரரசரைக் காணச் சென்றாள். சென்றவள் சென்ற வேகத்திலேயே மன்னனுடன் திரும்பினாள். உரையாடலைத் தொடங்க அந்த இடம் சரியில்லை என்பதால் மூவரும் மறைவிடம் சென்றனர். அவர்கள் சென்ற இடத்திற்கு அருகாமையில் இருவருடைய பேச்சுக் குரல் கேட்கவே அதுவும் விக்ரமனின் பேச்சுக்குரலாக இருக்கவே மன்னனும் கயல்விழியும் வியந்தாலும் வீரபத்திரன் மட்டும் அதை எதிர்பார்த்தவன் போல் அவர்களை அமைதியடையச்செய்துவிட்டு அவர்களது பேச்சை மூவரும் கேட்கத் தலைப்பட்டனர்.
“”பவித்ரா அனைத்தும் நான் நினைத்தபடியே நடந்து கொண்டு வருகிறது. யார் பிரச்னையாக இருப்பான் என நான் நினைத்தேனோ அவனையே இன்று காலை நான் சிறை பிடித்தேன். ஆம். வீரபத்திரனைத்தான் சொல்கிறேன். அவன் தன் தந்தையான விக்ரமசேனனின் நடவடிக்கைகளைப் பிடிக்காமல் தன்னுடன் தனது தந்தையின் படைப்பிரிவைக் கவர்ந்து கொண்டு உரிய நேரத்தில் நரசிம்மனுடன் சேர்ந்து கொண்டு தனது தந்தையின் வழியிலேயே ஆட்சியைப் பிடிக்க முயல்கிறான்” என்று சொல்லிக்கொண்டு சென்றவனை இடைமறித்து, மற்றொரு குரலைக்கேட்டதும் வீரபத்திரன் அதிர்ச்சி கலந்த ஆத்திரம் கொண்டான். அதே நேரம் கைது செய்யப்பட்டுள்ளவன் யார் என்பதும் எதற்காக வந்துள்ளான் என்பதை நாடிழந்த மன்னன் நரசிம்மனும் கயல்விழியும் அறிந்து கொண்ட பொழுது ஆச்சரியம் ஏற்பட்டாலும் அதே நேரத்தில் தான் யாரை நம்பிக்கைக்கு உரியவனாக நினைத்தேனோ? அவனா அதாவது விக்ரமனா இத்தகைய துரோகத்தை செய்த நம்பிக்கைத் துரோகி? சரி மேற்கொண்டு என்னதான் பேசுகிறார்கள் என்பதைத் திரும்பவும் கேட்கத் தலைப்பட்டான் நாடிழந்த மன்னன்.
“”என்னது வீரபத்திரனை சிறைப் படுத்திவிட்டீர்களா?” மற்றொருவன் குரல்.
“”ஆமாம் ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள் விழப்போகிறது. ஆம் வீரபத்திரனை இனி விடப் போவதில்லை. சேனாதிபதியாக இருக்கும் நீங்கள் வரும் அமாவாசை இரவு விக்ரமசேனனை சிறிதும் சந்தேகமில்லாமல் கைது செய்துவிடு. அன்று இரவே யாருக்கும் தெரியாமலும் சந்தேகம் ஏற்படாமலும் இங்கு கொண்டு வந்து விடு. அதற்குள் நான் இங்கு நரசிம்மனை சிறை பிடித்து வந்துவிடுகிறேன். அவர்கள் இருவரோடும் வீரபத்திரனையும் சேர்த்து மூன்று பேரையும் ஒரு சேர பாதாள சிறையில் அடைத்துவிடலாம். அதன்பின் நரசிம்மன் மகள் கயல்விழியை நான் மணமுடித்து அரசியாக்கிவிடுகிறேன். அதன் பின் நான் இந்த நாட்டு அரசன். நீ இந்நாட்டு முதலமைச்சர் மற்றும் சேனாதிபதியாகவும் நியமிக்கப்படுவாய்”” இப்படி விக்ரமன் பேசியதைக் கேட்ட மூவரும் பேச்சு முடிந்து விட்டதற்கான அறிகுறி தென்படவே அவர்களை நோக்கிப் பாய முற்பட்ட வீரபத்திரனை கையமர்த்தி அடக்கி அமைதிப்படுத்தினான் மன்னன்.
“”வீரபத்திரா அவசரப்படாதே. பொறுமையாக இரு. இவன் உனது தந்தையையே மிஞ்சி விட்டான். இதனை சாமர்த்தியமாகத்தான் சமாளிக்க வேண்டும். நாம் அனாவசியமாகப் போரிடக்கூடாது. உங்கள் வசம் இருக்கும் படைப்பிரிவை இந்தத் தீவிற்குள் அமாவாசைக்குள் மிகவும் ரகசியமாக வந்தடையும்படி ஏற்பாடு செய்துவிடுங்கள்” நரசிம்மன்.
“”மன்னவா நான் சிறைப்பட்டுள்ளேனே” – வீரபத்திரன்.
“”நீ சிறையிலிருப்பது ரொம்ப வசதியாகப் போனது. எனக்கு நம்பிக்கைக்கு உரியவன் மூலம் உனது ஓலையை நான் அனுப்ப ஏற்பாடு செய்கிறேன். அதன் மூலம் சிறுகச் சிறுக இங்கு வரும் உனது படைவீரர்களை இங்கு வரும்பொழுது இங்குள்ள வீரர்களின் உடையில் வரச் செய்துவிடு. அந்த சமயத்தில் விக்ரமனின் விசுவாச வீரர்களை நான் அமைதியாக ஆரவாரமின்றி சப்தமில்லாமல் கைது செய்துவிடுகிறேன். அமாவாசையன்று உனது தந்தையை விக்ரமன் சிறை செய்து வரும்பொழுது உனது தந்தையோடு விக்ரமன் மற்றும் அவன் சேனாதிபதியாகக் கனவு கண்டுள்ளவனையும் நாம் இங்கு மிக எளிமையில் சிறை பிடித்துவிடலாம். விக்ரமசேனன் நமக்கு வேலையை மிகவும் எளிதாக்கிவிட்டான். நாம் தான் அவனுக்கு நன்றி சொல்லணும் ” என சொல்லிவிட்டு வீரபத்திரனை பொறுமையாக அமைதியாக நிதானமாகச் செயல்படும்படி சொல்லிவிட்டு தனது மகளுடன் சென்றுவிட்ட மன்னனைப் பார்த்து அதிசயித்தான். இவ்வளவு பெரிய பிரச்னையை மன்னவன் எவ்வளவு லாகவமாக கையாள்கிறான் என வியந்து தன்னுடைய இடம் வந்து எதுவுமே தெரியாதவன் போல் உறங்கினான் வீரபத்திரன்.
அவர்கள் எதிர்பார்த்த அந்த அமாவாசையும் வந்தது. அனைத்தும் நரசிம்மன் திட்டப்படியே கொஞ்சம்கூட தவறாமல் நடந்தன. துரோகிகள் அனைவரும் சிறைப்பிடிக்கப்பட்டனர். விக்ரமனின் துரோகத்தைக் கண்ட விக்ரமசேனன் மனம் நொந்து மன்னன் நரசிம்மனிடம் தான் செய்த துரோகத்திற்கு தன்னைத் தண்டிக்க வேண்டி மன்றாடினான். மன்னன் நரசிம்மன்,விக்ரமசேனன் திருந்திவிட்டதைக் கண்டு, அவனை மன்னித்து தனது மகளையும் வீரபத்திரனுக்கு மணமுடித்து அவனை தனக்கு சேனாதிபதியாக்கி மகிழ்ந்தான். விக்ரமசேனன் தனது செய்கையால் மனம் நொந்து வெட்கித் தலைகுனிந்தான்.
– டிசம்பர் 2012
mokkai