(1998ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 11-15 | அத்தியாயம் 16-20 | அத்தியாயம் 21-25
அத்தியாயம்-16
இலஞ்சிச் சாமியார் பதினெட்டு வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்தக் கதையைப் பற்றிக் கூறும் போது அதிவீரனுக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது.
அந்த மகத்தான சண்டையைப் பற்றி பல பேரிட மிருந்து கேள்விப்பட்டிருக்கிறான்.
ஆச்சரியமும் கண்ணீரும் பொங்கக் கூறியிருக்கிறார்கள்.
ஏன். அவன் தந்தை பராக்கிரம பாண்டியரே, கூறி இருக்கிறார்.
அவரே விஜய நகரத்துக்குப் படை கொடுத்து உதவி இருக்கிறார். தெற்கத்தி ராஜ்ஜியங்கள் எத்தனையோ அத்தனை பேரும் படை கொடுத்து, விஜய நகரப் படையை சமுத்திரம் போல் பெருக்கி இருந்தார்கள்.
இந்த மாபெரும் படையை யாரும் வென்றிருக்க முடியாது.
ஆனால் என்ன நடந்தது?
சில சூழ்ச்சிகளும் சில துரோகங்களும் இந்த மாபெரும் படையைக் கலக்கிவிட்டன.
சண்டை ஆரம்பித்த நான்கு மணி நேரங்களில் படை சின்னாபின்னமாகிவிட்டது.
நாலா திசையிலும் ஓட ஆரம்பித்தது.
எதிரியாக வந்த காட்டுச் சேனை விஜய நகர சேனை களை விடவில்லை! துரத்திக்கொண்டே சென்றன. விஜய நகரத்துள் புகுந்தன. அந்த அற்புதமான நகரைக் கொள்ளை அடித்தன. தரையாடின. உடைக்க வேண்டியதை உடைத்தன. எரிக்க வேண்டியதை எரித்தன.
ஒருநாள் இரு நாள் அல்ல! மாதக்கணக்கில் இதைச் செய்தன.
இன்று….
அந்தப் பிரசித்திப்பெற்ற நகரம் பாழாகக் கிடக்கிறது.
பல முயற்சிகள் செய்தும் அதில் மக்கள் குடியேற இசையவில்லை.
அதை சாபமிடப்பட்ட நகரம் என்று நினைத்தார்கள்.
ராமராயருக்குப் பின்னால் வந்த விஜய நகர அரசர்கள் தங்கள் நலை நகரை பெனுகொண்டாவுக்கு மாற்றிவிட்டார்கள்.
“விஜய நகர மன்னர் ராமராயரின் கடைசி நிமிடம் வரை தளவாய் அரியநாதர் அவர் பக்கத்திலேயே இருந்தார். அவரைவிட்டு விலகவில்லை. ஆபத்தான சோதனைக் கிடையே இப்படி தம்மோடு இருந்த அரிய செயலை உணர்ந்து ராமராயர் அரியநாதரை. “என் தம்பீ” என்று உள்ளன்போடு அழைத்தார். தாம் கொண்டு வந்திருந்த பொக்கிஷங்களை அவரிடம் ஒப்படைத்து “நான் இறந்து விட்டால், இந்தப் பொக்கிஷங்களைப் பாதுகாத்து மீண்டும் ஒரு சாம்ராஜ்ஜியம் தலை எடுக்க உதவி செய்யுங்கள், நமது தர்மத்தை நிலைநாட்டுங்கள்!” என்று கூறினார்.
கண்ணீர்ப் பெருக்கோடு அரியநாதர் அவர் கைகளைப் பற்றிக்கொண்டார்.
ராமராயர் எக்கச்சக்கமாக எதிரியிடம் அகப்பட்டு கொலை யுண்டதுதான் தாமதம், அரியநாதர் தாம் கொடுத்துள்ள உறுதிமொழிக்கு இணங்க, பொக்கிஷங்களை குதிரை, யானைகளில் ஏற்றிக் கொண்டு தெற்கே போய் விட்டார்.”
“அரியநாதர் அந்தப் பொக்கிஷத்தை எங்கே வைத்திருக்கிறார்?” என்று ஆவலோடு கேட்டான் அதிவீரன்.
இலஞ்சியார் சிரித்தார்.
“அதைத்தான் எல்லோரும் தேடுகிறார்கள்!” என்றார் அவர்.
“மறைத்துத்தான் வைத்திருக்க வேண்டும். அவர் வாக்குறுதி கொடுத்தவர் ஆயிற்றே?”
“எங்கே வைத்திருக்கிறார் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே?” என்றான் அதிவீரன்.
“அவர் சொல்வாரா?” என்றார் இலஞ்சியார்.
“மதுரை நாயக்கரே கேட்டால் சொல்லமாட்டாரா?”
“அவர் கேட்டாரா?. இவர் சொன்னாரா என்பது தெரியாது. ஒரு விஷயம் அதிவீரா! அரியநாதரிடம் பொக்கிஷம் ஒப்படைக்கப்பட்டது என்ற விஷயமே சமீப காலத்தில்தான் தெரிய வந்தது’ என்றார் இலஞ்சியார்,
“என்னது?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் அதி வீரன். “ஏன் இந்த விஷயம், முன்னாடியே தெரியவில்லை? அந்த சண்டை நடந்து பதினெட்டு ஆண்டு ஆயிற்றே, சுவாமி”
“அதனால என்ன? சண்டை முடிந்தவுடன் அரியநாதர் மதுரைக்கு நேரே திரும்பவில்லை. அங்கே வருவதற்கே இரண்டு வருடம் ஆயிற்று.”
“ஏன், எங்கே போனார்?
“பல இடங்களுக்குப் போய்விட்டு வந்தார்! வடக்கே ராஜரீக காரியங்களில் ஈடுபட்டிருந்தார் என்று கேன்வி அது போலத்தான் அவரும் செய்தி அனுப்பிக்கொண்டிருந்தார்! ஆனால், இந்த இரண்டு வருஷங்களில் அந்தப் பொக்கிஷத்தை அவர் சரியான இடத்தில் வைத்துவிட்டுத் தான் வந்திருக்க வேண்டும் என்பது பின்னர் தெரிந்தது.”
“எவ்வளவு பொருள் இருக்கும் சுவாமி!” என்றான் அதிவீரன்.
“ஒரு சாம்ராஜ்ஜியத்தை மீண்டும் நிறுவு!” என்று ராமராயரே கூறியிருக்க வேண்டுமானால் அது எவ்வளவு பெரிய சொத்தாக இருக்க வேண்டும், கணக்கிட்டுக் கொள்.”
“அப்படியா?” என்று வியப்போடு பார்த்தான் அதிவீரன்.
“ஏன் சுவாமி? மதுரை நாயக்கரிடம்தானே அவர் தளவாயாக இருக்கிறார்? அந்த ராஜ்ஜியத்துக்குச் செலவு செய்ய வேண்டியதுதானே?”
‘”செய்யலாம்! மதுரை ஒரு சாம்ராஜ்ஜியம் ஆகுமா என்று அவருக்குச் சந்தேகம் வந்திருக்கலாம்.”
“ஏன் அப்படி?”
“மதுரை ராஜ வம்சம் அதற்குத் தகுதியானது தானா என்று அவருக்குச் சந்தேகம் தோன்றியிருக்க வேண்டும்! என்ன இருந்தாலும் அவர்கள் தெலுங்கர்கள். ஆயிற்றே?”
சுள்ளென்று உறைத்தது. அதிவீரனுக்கு!
இரண்டு தலைமுறைக்கு முன்பு அதுபோன்று பகைமை நிறைய இருந்ததாக அதிவீரன் கேள்விப்பட்டிருக்கிறான்.
தற்சமயம் அவர்கள் தமிழில் கலந்து முழுதும் தமிழராகி விட்ட நிலையில் இருந்தார்கள்.
அப்படியும் ராமநாதபுரம் போன்ற இடங்களில் உள்ள மறவர் குலத்தினர் அவ்வப்போது மதுரை நாயக்கர்கள் மீது விரோதம் பாராட்டியே வந்தார்கள்.
இவை எல்லாம் அதிவீரன் அறிவான்.
“ஓகோ! அரியநாதர் அப்படியும் நினைக்கிறாரோ?”
“அவர் நினைக்கிறாரோ, என்னவோ தெரியாது. நினைக்கலாமே என்று தோன்றுகிறது. யார் கண்டார்கள் அவர் மனதை?”
“இப்போது தளவாய் எங்கே இருக்கிறார் சுவாமி?”
“தெரியவில்லை. சிறிது காலமாக அவர் மதுரையில் இல்லை! எங்கே போயிருக்கிறாரோ தெரியாது. ராஜரீக மாகப் போனாரா. ஒரு மறைவு வேண்டிப் போனாரா, அல்லது வயதாகிவிட்டதே என்று, சிகிச்சை வேண்டிப் போனாரா, தெரியாது.*
“அவருக்கு என்ன வயதாகி இருக்கும் சுவாமி?”
“எண்பதுக்கு மேல் இருக்க வேண்டுமே.. “
“அடேயப்பா! அவரைப் பார்த்தால் அப்படித் தோன்ற வில்லையே!”
“உண்மைதான் இருந்தாலும் அவர் சிரஞ்சீவியாக வாழ்ந்துவிட முடியுமா? அதை எண்ணியே பலர் கவலை கொண்டிருக்கிறார்கள்.”
“ஏன் சுவாமி?”
“பொக்கிஷம் இருக்கும் இடத்தை அறிவிக்காமல் அவர் இறந்துவிட்டால்…”
“ஓ! அதுவும் உண்மைதான், சுவாமி”
“அதனால்தான் அவர் இருக்கும் இடத்தைப் பலர் தேட ஆரம்பித்துவிட்டார்கள். பலர் பழைய ஊகங்களை வைத்து பொக்கிஷம் இன்ன இடத்தில்தான் இருக்கிறது எனறு தேட ஆரம்பித்திருக்கிறார்கள். பலர் ஜோஸ்யர்களைத் தேடிப் போயிருக்கிறார்கள். சிரித்தான் அதிவீரன்.
“இதற்கு இவ்வளவு பாடா?”
“பாடுதான்! அந்தப் பொருள் மட்டும் இருந்தால் போதும். ஒரு புது ராஜ்ஜியத்தையே உருவாக்கிவிடலாம்!. அல்லது சரியான முயற்சி எடுத்தால். ஒரு சின்ன ராஜ்ஜியத்தை, ஒரு சாம்ராஜ்ஜியமாக மாற்றிவிடலாம். அவ்வளவு சாத்தியங்கள் உண்டு.”
‘அதனால்தான் மன்னர்கள், குறுநிலக்காரர்கள், பாளையக்காரர்கள் எல்லாம் பொக்கிஷ வேட்டைக்குப் போயிருக்கிறார்கள்.”
அதிவீரனின் கண்கள் ஆச்சரிய விரிப்பில் மலர்ந்தன. பளீர் என்று ஒரு ஒளிக் கூட்டம் உள்ளே தெரிந்தது.
இலஞ்சியார் சொல்வதின் உட்பொருள் எல்லாம் ரொம்பத் தெளிவாகத் தெரிந்தது.
அதைப் புரிந்த நிலையில் பேச ஓடவில்லை.
இலஞ்சியார் அவன் மவுனத்தை கனிவுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
“அதிவீரா!” என்றார் அவர் குறுநகையோடு. “எல்லோரும் பொன் தேடிப் போகிறார்கள். நீ பெண் தேடிப் போகிறாய்?” என்றார் கனத்த அடிக் குரலில்
“சுவாமி! என்று அவர் கால்களில் அடியோடு வீழ்ந்தான்.
“சுவாமி! அடியேனுக்கு நாட்டின் நடப்பு என்ன என்று கூறுகிறீரா? அல்லது எனது அகக் கண்ணைத் திறந்து விடுகிறீரா?” என்று கேட்டான் அவன்!
இலஞ்சியார் தமது வெள்ளித் தாடியோடு புன்னகை கொட்டினார்.
“ஏன்? இரண்டு விதத்திலுமே எடுத்துக்கொண்டால் என்ன?”
அதிவரன் பார்வையைத் தூக்கி அவரைப் பார்த்தான்.
சிறிது நேரம் தன்னுள் மூழ்கியவனாய் மவுனமாக இருந்தான்.
அவன் முகம் கலங்கிவிட்டது.
“சுவாமி” என்றான் தழைத்துக்கொண்டு, “நான் இதுவரை நடந்துகொண்டதெல்லாம் சரியான மார்க்கம் இல்லையா?” என்றான் கவலையுடன்.
அஹ் ஹஹ்ஹ என்று மெல்லிதாக இலஞ்சியார் சிரித்தார்.
“அப்பா! அதிவீரா! எல்லாமே நல்ல மார்க்கம்தான்! சில நம் குறிக்கோளுக்குச் சீக்கிரம் அழைத்துச் செல்லும். சில தாமதமாக இழுத்துச் செல்லும். அவ்வளவுதான் மன்னர்களாக இருந்தால ஒருவர் மூன்று ஆசைகளையும் நிச்சயம் கொள்ளவேண்டும். பெண், பொன், மண் இதில் ஏதாவது ஒன்றைப் பற்றிவிட்டு மற்றவைகளை விட்டுவிடக் கூடாது என்பதே பெரியவர்கள் உபதேசம்! இந்தா. இப்போது பெண்ணைத் தேடிப் போகிறாயா? பொன்னையும் தேடும் சந்தர்ப்பம் வந்தால் மண்ணையும் தேடு” என்றார்.
வழிநெடுகிலும் கேட்டுக்கொண்டு நீலப்பாகைகளைப் பின்பற்றி அதிவீரனும் அவன் சகாக்களும் பன்னிரண்டு தினங்கள் பிரயாணம் செய்தார்கள்.
நீலப் பாகையார் ஒரு நேரான பாதையை எடுக்க வில்லை! சில சுற்று வழிகளை எடுத்தார்கள். ஆனால், அல்லிக்கொடியையும் அவர்கள் அபகரித்துச் செல்வதால் போகும் இடமெல்லாம் அவர்கள் யார் கண்ணிலாவது பட்டுக் கொண்டுதான் சென்றார்கள்.
எனவே அதிவீரனும் அதிகக் கஷ்டமில்லாமல் அவர்களைப் பின்பற்ற முடிந்தது.
கடைசியில் மதுரைக்கு அவர்கள் போய்விட்டார்கள் என்று தெரியவந்தது.
பதிமூன்றாம் நாள் அதிவீரனும் சகாக்களும். மங்கையும் அவள் சேடிகளோடு கோட்டைக்குள் நுழைந்தார்கள்.
மாலை நேரம் அது!
கோட்டைக் கதவு திறந்திருந்த
உள்ளே வதிகள் கலகலப்பாக இருந்தன.
இரு வீதிகளைக் கடந்ததுதான் தாமதம், “நாங்கள் விடை பெறுகிறோம்” என்று கூறினாள் மங்கை.
மனதில் அந்த வார்த்தைகள் சுருக்கென்று தைத்தன. ஏன் அவனுக்கு வருத்தம் வந்தது,
இருப்பினும் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல், “சரி” என்றான் அவன்.
அந்தப் பெண்கள் சற்று தூரம் விலகிப் போய் அவனைத் திரும்பிப் பார்த்தார்கள்.
கைகளைத் தூக்கி மங்கை, மீண்டும் காண்பித்து விரைவாகக் குதிரையைச் செலுத்தியபடி போனார்கள்.
அதிவீரனின் மனம் பொங்கியது.
கண்கள் நீர்த்திரையிட்டன.
அத்தியாயம்-17
மதுரை மாநகரில் அந்த அந்திச்சாயலில் மங்கையும் அவள் சேடியும் விடைபெற்றுப்போசு மனதில் சிறிது சிறிதாக ஒரு வெறுமை விழுந்துகொண்டிருந்தது.
பதினோரு நாட்கள் அவளுடன் பிரயாணம் செய்து விட்டான். எந்தவித தொடர்பும் கிடையாது. அவள் ஒரு மாதவிலக்குப் பெண்போல எப்போதும் விகியே இருந்தாள். சத்திரத்தில் தனியே பின்புற அறைக்குப் போய்விடுவாள். திறந்தவெளியில் இளைப்பாறினால் தனியே ஒரு மர நிழலுக்குப் போய் விடுவாள்.
பேச்சோ, புன்னகையோ வைத்துக்கொள்ளவில்லை. உண்டாளா, உறங்கினாளா என்பது தெரியாது. எந்த நேரம் புறப்பட்டாலும் உடனே சித்தமாக இருந்தாள்.
சாதாரணப் பெண்ணாகத் தெரியவில்லை. குதிரை ஏற்றம், வாள் வீச்சு எல்லாம் என்ன நேர்த்தியாகக் சுற்றிருந்தாள்!
அந்த வழிமறிப்பு நடந்தபோது எப்படி கத்தி எறிந்து எதிரிகளை மடக்கினாள்! அதுவும் குதிரையை மாறி மாறிச் செலுத்திக் கொண்டு….
அதென்னவோ, அவள் பேசிப் பழகாவிட்டாலும், அவள் மீது எப்படிப் பாசம் ஒட்டிவிட்டது!
அவனை அறியாமல், நுண்னிய நேசநூல்கள் ஆயிரம் அவளோடு ஒட்டிக் கொண்டு ஒரு பிணைப்பைச் ஏற்படுத்தியது போல தோன்றியது.
அந்தப் பிரிவை ஒரு வெம்மையாக மனம் உணர்கிறது. எதுவும் இழக்காவிட்டாலும். எல்லாம் பறிகொடுத்த உணர்வு அல்லவா தோன்றுகிறது.
சிந்தனையில் சற்று நேரம் நீடித்து நின்று கொண்டிருக்க,
அவன் சகலைதீரசேனன் அவனை அணுகி-
“பிரபு” என்றான்.
விழி துள்ள, அதிவீரன் திரும்பினான்.
“வாருங்கள். போகலாம்” என்றான்.
அவன் அப்படிச் சொல்லவும்தான், அவனுக்கு அந்தக் கோட்டையடி வீதியிலேயே நிற்கும் பிரமை தெரிந்தது.
“நல்லது போகலாம்” என்றான்
ஏற்கனவே யோசித்தபடி, கூடிவந்தான் சத்திரத்தை நோக்கிப் போனார்கள்.
சாதாரணச் சத்திரம் அது! எப்போதும் ஆட்கள் நிறைந்து கலகல என்று இருக்கும். வசதிவேண்டுகிறவர்கள் அங்கே தங்கமாட்டார்கள்.
தங்கள் அடையாளம் வெளித் தெரியக்கூடாது என்ற எண்ணத்தில்தான் அங்கே போக விரும்பியிருந்தார்கள்.
மூவரும் குதிரையைச் செலுத்திக்கொண்டு போக, அடுத்த தெருவில் திரும்பியதும், “அய்யா” என்று குரல் கேட்டது.
திரும்பிப் பார்த்தார்கள்
அங்கிதரித்து, பாகைதரித்த ஒரு மெல்லிய மனிதன் அவர்களை நோக்கி வந்தான்.
குதிரையை நிறுத்தினார்கள். வந்தவனுக்கு ஒரு வணிகனின் தோற்றம் இருந்தது.
“அய்யா, யாத்தரீகர்களா?” என்று கேட்டான் அவன்.
“ஆமாம்” என்றான் அதிவீரன்.
“இப்படி வாருங்கள் இங்கே தும்பிச்சி சத்திரம் இருக்கிறதே. அங்கே ஏராள வசதி ஆயிற்றே வெந்நீர் வைத்து, தலைக்கு எண்ணெயும் தருகிறார்கள்! குதிரைக்கு லாயமும் இருக்கிறது! தாராளமாக வந்து தங்குங்கள்!” என்று கூறினான், அந்த மெல்லியன்,
அதிவீரன் திரும்ப சகாக்களைப் பார்த்தான்.
தீரசேனன் உடனே. ‘”அய்யா! நாங்கள் கூடிவந்தானுக்குப் போகிறோம்! எப்போதும் அங்கே தங்குவது வழக்கம்!” என்றான். அழுத்தத்தோடு.
“ஆ! கூடிவந்தான். இப்போது உங்களுக்கு அது கூடிவராது!” என்றான். மெல்லியன், “போன மழைக்கு அதன் பின்பகுதி விழுந்துவிட்டது. யாரும் இப்போது அங்கே தங்க பயப்படுகிறார்கள்! இங்கே வாருங்கள்! ரொம்ப வசதி!” என்று கூறினான், அ ன்.
அதிவீரன் தலை அசைத்து குதிரையைக் கிளப்ப, மற்றவர்களும் அவனைத் தொடர்ந்தார்கள்.
சத்திரம் உண்மையில் விசாலமாகவும், வசதியாகவும் இருந்தது. ஒரு போக்குவரத்து இல்லாத தெருவில் ஒடுங்கி விட்டதால், அதற்கு அதிகப்பேர்வராமல் இருந்தார்கள்.
அதை பார்த்தால் அதிவீரனுக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சி “நமது ரகசிய வேலைகளுக்கு இதுதான் தகுதி” என்று கூறிக்கொண்டான்.
இரவு உணவு அருந்திய பிறகு அதிவீரனுக்கு உறக்கம் எத்தனை நாட்களாகிவிட்டன! ஒரு வரவில்லை. பெண்ணோடு சயனித்து!
கைகள் ஏங்கின. மார்பு வெப்பமாக மூச்சுவிட் கால்கள் தம்மை அறியாமல் பின்னிக்கொண்டன.
ஆகா! இந்த உலகத்தில் பெண்ணின் சுகத்தை விட மேலானது எது?
அதுவும் தினமும் ஒருவருக்கு அது கிடைக்கப் பெற்றால்…
அந்தத் தினமும் வெவ்வேறு பெண்ணாகக் கிடைத்தால்.
நூறு வயதில்லை! மனிதன் அப்போது ஆயிரம் வயது வரை வாழ்வான்.
நல்லவேளையாக அரசனாகப் பிறந்தோம்.
இல்லாவிடில்… ஒரு அந்தப்புரம் கிடைத்திருக்குமா?
போகும் இடமெல்லாம் சுவை பார்க்கிறானே, அரசனாக இல்லாவிடில் அதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா?
இப்போது எத்தனை நாட்கள் ஓடிவிட்டன. ஒரு பெண்ணின் சுகம் கிடைக்காமல்!
ஒரு இரவு ஆகியிருந்தது! குறை நிலா ஒன்று வானில் தோன்றி இருந்தது.
அதன் கிரணங்கள் சாரை துவாரங்கள் வழியே உள்ளே வந்து, வெள்ளி வட்டங்களாக விழுந்திருந்தன,
யார் இந்த நிலாக்கிண்ணங்களை சுவர் ஓரம் பரப்பி வைத்தார்கள்.
அதிவீரனுக்கு மனம் மென்மையாகச் சிலிர்த்தது. உள்ளே ஒரு மோகத் தென்றல் சிலு சிலு என்று அடித்தது.
புரண்டு மூச்சுவிட்டான்.
திடீரென்று கண்முன் ஒரு மங்கை தோன்றினாள். என்ன வாளிப்பான பெண் அவள்?
நிலா முகம்! கண்கள் இரண்டும் மது குடித்தவை. ஒரு பார்வையில் சுரக்கும் உணர்வில் ஓராயிரம் கவிதை எழுதலாம்.
உம்! கடைசியில் எங்கோ தங்குகிறாள் என்று கேட் காமல் விட்டுவிட்டோமே!
நீண்டு சர்ப்பம் போல் ஒரு மூச்சுவர், எழுந்தான். கதவைத் திறந்து வெளியே வந்தான்.
வாசலில் இரவு பிரமித்துக்கொண்டு நின்றது. நிசப்தம்,சமனமில்லாது எல்லாம் உறைந்த நிலை. நடை எங்கும் நிலா வெள்ளித் தகடு அடித்திருந்தது.
வீதிக்கு வந்தான்.
வெளிப்புறத்துக் குளிர் உடம்பில் மெல்லிதாய் உரசியது.
நெஞ்சம் பொங்கியது.
மனசில் ஒரு தாப நிலை குவிந்துகொண்டு எழுந்தது.
ண்டு உறங்கி, பெண்டீரை அனுபவிப்பதை விட் டு விட்டு சண்டை எதற்கு மனிதனுக்கு? சச்சரவு எதற்கு? வெம்மை மூச்சு ஒன்று நீண்டதாக வர, தூரத்தில் வரும் நிழல் பார்வையில் விழுந்தது.
யார் அது?
நெருங்கி வரவர, அதன் தோற்றத்தை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது.
மனசை அவன் தூண்டி விடுவதற் தாங்களா? சுவாமிட நான் மாலை பார்த்தபோதே நினைத்தேன். மனிதரின் கண்சளைப் பார்த்தாலே மன்மதக் காற்று வீசுகிறதே இவர் ஒரு சிருங்கார புருடராக இருப்பார் என்று நினைத்தேன்! அதுபோல இரவு வேளையில் இருப்புக்கொள்ளாமல் வெளிவந்து விட்டீர்களே! வாருங்கள்! வாருங்கள்! என் பெயர் வெண்ணைக் கண்ணன்!” என்று கூறி அவன் கையைப் பிடித்தான், சாயங்காலம், சந்திக்க நேர்ந்த மெல்லியன்.
என்னவோ தெரியவில்லை! அவன் அழைத்த முறையும், பேச்சில் குழைந்த பரிவும், கையைப் பிடித்த சுவாதீனமும் அதிவீரனின், மனசை அந்த நேரத்தில் வெகுவாகத் தொட்டுவிட்டது.
பதில் சொல்லவேண்டிய வாயும் அடைத்துவிட்டது. அதற்கு இணையாக புன்னகைகள் பூத்து புதிதாக மின்னி வத்தன.
“தங்களைப் போன்று இரவை அனுபவிப்பவர் சுளுக்காகவே அடியேன் காத்திருக்கிறேன்! உலகம் ங்களுக்குத்தான் ஆமாம்! மனிதவாழ்க்கை நாளை முடியும் தறுவாயில் இன்றைய இரவைச் சும்மா விடலாமோ? தாங்கள் யார்? வடக்கத்திக்காரரா தெற்கத்திக்காரரா?” என்றான். வெண்ணைக் கண்ணன்.
“தெற்கத்திக்காரன்!”
“ஆகா! தென்பாண்டிய நாடா! அவர்களுக்குத்தான் வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியும். அதுவும் அதிவீர ராமன் ஆளும் பூமி என்றால், காமன் சதிராடுவான். பிறந்தால் அப்படி அல்லவா பிறக்கவேண்டும் தென் மொழித் தமிழிலே “ரதி ரகசியம்” எழுதப் போகிறார் என்று கேள்விப்பட்டோம்! ஆகா! இந்த மண்ணிலே, இத்தனை ராஜாக்கள், பண்டிதர்கள், கவிஞர்கள், ஞானிகள் எல்லாரும் பிறந்தார்களே! மன்மதக் கலையைப் பற்றி யாராவது ஒருவர் தமிழில் எழுதினார்களா? எழுத வேண்டும் என்றாவது தோன்றிற்றார் ஆனால், அதிவீரராமனுக்கு அது தோன்றியதே. பெரிசு! அவர், மனம் ரொம்பப் பெரிசு! எழுதட்டும் ஒவ்வொரு அடியாள் வீட்டிலும் அதைப் பாராய ணமே பண்ணவைக்கலாம்” என்று இன்பம் நல்கும் கிளு கிளு மொழிகளை கொட்டிக்கொண்டே பிடித்த -கையை விடாமல், அவன் இழுத்துப் போனான்.
இருந்தாலும் “எங்கே போகிறோம்” என்கிற ஆதங்கத் தால் அதிவீரன், வெண்ணைக் கண்ணரே!!” என்று அழைக்கப் போக,
அவன் குறுக்கிட்டு, “ஒன்றும் பேசவேண்டாம்! எனக்குத் தெரியும் அதெல்லாம்! எங்கே போகிறோம் என்று கேட்பீர்கள்? அப்படி அன்ப சொல்பமான இடத்துக்கு நான் அழைத்துச் செல்வேனார் தங்களைப் பார்த்தவுடனே செல்வந்தர் என்று நான் கணக்குப் போட் டுவிட்டேனே! எனக்குத் தெரியாதா, தங்களை எங்கே அழைத்துப்போக என்று கூறிய அவன்.
அந்த வீதி முனைவாக்கும் போய், அடுத்த வீதி முனையிலிருக்கும் ஒரு பெரிய மாளிகை வாயிலுள் நுழைந்தான.
ஆச்சரியம்! அந்த மாளிகை அந்த நேரத்தில் வெளிச்ச மாக இருந்தது.
மாடங்களில் விளக்குகள் மெல்லிய தங்க நாக்குகளை சுடராகக் காட்ட
உள்ளே பொன் தூவியது போல் ஒரு புதுமை வெளிச்சம் பரவியிருந்தது.
அகிலும், பூவும் சேர்ந்த கதம்ப வாடை எங்கும் மணத்தது.
அதனூடே பெண்டிரின் மேனி வாசம் கலந்து வீசுவதையும் அதிவீரன் அறிந்துகொண்டான்.
உள்ளே கூடங்களும், அறைகளும், அறைகளின் சுவர்களும் மனசில் பிரமிப்பை உண்டு பண்ணின.
பிரசித்திப்பெற்ற தேவதாசியின் வீடாக இருக்க வேண்டுமென்று நினைவு தோன்றியது.
அவன் எங்கேயும் நிற்கவில்லை. மேலும் மேலும் உள்ளே இழுத்துப் போய் புழைக்கடைக்கு வந்துவிட்டான். அங்கே கடைசி வாயிலின் கதவைத் திறந்ததும். அப்பால் தெரிந்த முற்ற வெளியில் தெரிந்த காட்சி என்று மெல்ல வாயைத் திறக்கவைத்தன.
பெரிய தீபத் தூண்களும் பெரிய மாடங்களும் தீப ஒளிகளை எங்கும் பகல் போல் பாய்ச்சிக்கொண்டிருக்க,
முற்றத்து நடுவில் ஒரு சித்திரக்குளம் தெரிந்தது.
அதைச் சுற்றிவர சொர்க்கத்து மோகினிகள் போல் பெண்கள் வந்து அமர்ந்திருந்தார்கள்.
கொஞ்சமான ஆடை! மெல்லிய பசும் உடம்புகளை கச்சும் சின்ன அரைத்துணியுமே இருந்தன.
நிலாச் செதுக்கலில் அமைந்த பால் பாவைகள் போல அவர்கள் தெரிய,
குளத்தின் நறுமணம் கல்விசெய்த நீரில் ஒரே ஒரு இளம் பெண் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தாள்.
முற்றத்தில் இறங்கி குளத்தை நோக்கி நடக்கும்போது,
குளத்து உள்ளே நீந்திய அந்தப் பெண், நீருள் விழுந்த சந்திரிகை போல் விகசித்துத் தெரிந்தாள்.
முகமும் உடலும் இடையிடையே விட்டுத் தெரிய நிலாச் சில்லுகள் உடைபட்டு மிதப்பன போல தோன்றியது.
அதிவீரனை வெண்ணைக் கண்ணன் அழைத்துப் போய் குளத்து விளிம்பில் நிறுத்தினான்.
”சந்திரி! சந்திரி! தெற்கத்தி பிரபு…” என்று சொல்லி அதிவீரனைப் பார்க்க, சீவல்லபன்” என்றான். அதிவீரன்.
“ஆமாம்! இவர்தான் தனவான் சீவல்லப்பன், உன்னைக் காணவே வந்து இருக்கிறார்” என்று சொல்ல.
குளத்து நடுவில் இருந்த சந்திரிகை இன்ப நாதங்களாகக் குலுங்கிச் சிரித்து நீச்சலிட்டே கரை நோக்கி வந்தாள்.
அதிவீரன் வந்ததும் அவனைக் கடைக்கண் கிரணங் களால் குளிர்ந்து பார்க்க, அவளது அத்தனை வசிய சக்தியும் அவனைப் போர்த்துவதுபோல் இருந்தது.
பிறகு அவள் அவனை நோக்கிக் கையை நீட்ட அதிவீரனும் தன் கையை நீட்டி அவளை வெளியே இழுத்தான்.
வனப்பு மிகுந்த ஒரு பூவுடல் நீரில் கண்ணாடிச்சில் விழும் சப்தம் ஏற்படுத்திக்கொண்டு மேலே எழுந்தது.
அத்தனை பெண்களும் கலகல என்று கிரிக்க, அங்கே அந்தக் கணத்தில் சொர்க்கம் பிறந்துவிட்டது என்று நினைத்தான், அதிவீரன்.
அத்தியாயம்-18
சந்திரி என்ற அந்தக் குளத்து மோகினியை கைதூக்கி விட்டதும், அவள் பசுமை உடம்பில், முத்துப் படிவங்களாக நீர் உருண்டைகள் தரித்து நிற்க, ஈரத்தோடு மேனியில் ஒட் டிய துணி அவளது மறைந்த பகுதிகளை அப்பட்டமாக காட் சி தந்து பொருளாக்கிக்கொண்டிருக்க-
இவன் சித்தினி இனமோ! பத்மினி இனமோர் நால்வகை இனத்தில் எந்த இனமோ தெரியவில்லையே என்று எண்ணி மாய்ந்திருக்க-
“வாருங்கள், நீராடலாம்!” என்று அவள் மெல்லிய முறுவல் பூத்து, அவரை அழைக்க-
அந்த மதுரக்குரலில் புதைந்திருந்த ஒரு மாயம் அவனது அந்தரங்கத்தை வசீகரித்தது.
அவள் அவனது கைகளைக் கோர்த்துக் கொள்ள, அதன் குளிர் அவனது உயிர்க் குறுத்து வரை சென்றது.
எத்தனையோ நாள்விட்ட தாபம் மனதில் ஒட்டிக் கொள்ள, அந்தக் கணத்தில் ஆடைகளைக் கழற்றி மேடை மீது உள் வைத்துவிட்டு, உள்ஆடை ஒன்றோடு தொபீர் என்று நீருள் பாய்ந்தான்.
அலைகள் ஆயிரம் இங்குமங்கும் சறுக்காகிப் புரண்டு கொள்ள-
மகரந்தப்பொடிகளும், வாசனைத் திரவியங்களும், மலர் இதழ்களும் கலந்து பரிமள வாடை வீசும் குளிர்ந்த நீரில் வெகுநேரம் திளைத்தான்.
பூ எறிதல், பந்து பிடித்தல், பாதங்களைத் தேடல், கண்ணாமூச்சி ஆடல் என்ற பலவித கேளிக்கை ஆட்டங் களை சந்தரியுடன் ஆடி,
மேனியில் மதன உணர்வு ஆக்கிரமித்தவனாகக் கரையேறி ஆடைகளை உடுத்திக் கொண்டான்.
சேடிகள் வந்து, அவனை அழைத்து, குதூகலமாய் மணிச் சிரிப்புகள் நிறைய சிரித்து, மாளிகையின் மேல் தளங்களுக்கு அழைத்துச் சென்றார்கள்.
ஆகாயத்தைக் கூரையாகக் கொண்ட அந்தத் திறந்த வெளியின் தரை, மேடை, ஆதனங்கள் அனைத்துமே இழைத்த பளிங்குக்கற்களால் அழகுற வேயப்பட்டிருந்தன.
இரவின் கதிர்களைக் கிரகித்து ஆதனங்கள் பனிக் குளிராக இதத்தைக் கொடுக்க, அதிவீரன் அதில் அதிக மகிழ்ச்சியுடன் அமர்ந்துகொண்டான்.
அதேநேரத்தில் சந்திரி அவன்முன் பிரசன்னமானாள். குளிக்கும்போது ஆடைகள் அற்ற உடலால் அவனுக்கு போதை தந்தாள்-
இப்போது மெல்லியதாக சருகுபோல், அணிந்த பட்டு ஆடையும், அழகிய கச்சும், இன்னும் அதிகம் போதை தந்தன. சேடிகள், பொன் தாம்பாளத்தில் மதுவையும் கின்னங்களையும் கொண்டு அமர்த்தினார்கள்.
சந்தரி, அவனுக்கும் ஒரு கிண்ணம் வழங்கி, அவளும் ஒரு கிண்ணம் பற்றிக்கொள்ள, அதிவீரனின் மனம் புளகாங்கிதம் அடைந்தது.
சுத்தமான கண்ணாடி போன்ற பளிங்கு மேடையில் ஆதாய நட்சத்திரங்கள் பிரதிபலித்து, புஷ்பங்கள் சிதறி இருப்பது போல், பிரமை கொடுக்க-
சேடி ஒருத்தி மெல்லிய சத்தத் தடங்களாக மிருதங்கத்தை முழக்க,
மற்றொருத்தி மென்மையாகப் புல்லாங் குழவில் பரிமாற,
சுவர்க்கம் என்பது வானத்தில் இருந்து இறங்கி அவன் முன்னால் நிற்பது போல் தோன்றியது.
“பிரபு! மது எப்படி அருந்தவேண்டும் என்று தெரியுமோ?” என்று கேட்ட அவள், மேலும் தொடர்ந்து,
“மது அருந்தும்போது ஒரு பெண் துணையாக இருந்து அருந்தினால் மிக விசேஷம். தானும் உண்டு. அவளையும் உண்பித்து, மதுவை ரசிக்கவேண்டும். அன்றியும் அவசர மாகப் பருகாமல் மதுவை நின்று, நிறுத்தி, சுவைத்து, களித்து சிறிது சிறிதாக உற்சாகம் பெற்று அனுபவித்துப் பருக வேண்டும். அப்படிச் செய்யும் மதுபானமானது கற்பக மரத்திலிருந்து கிடைக்கும் “ரதி பலம்” என்ற மதுவை ஒத் திருக்கும். அதனை அருந்தினால் இந்திரனைவிட சுகத்தை வாழ்க்கையில் அனுபவிக்க முடியும்” என்றாள்.
ஏற்கனவே ரதி மதன விஷயங்களில் மனதைச் சலுத்தி ஆய்ந்துகொண்டிருந்த அதிவீரனுக்கு அந்த வார்த்தைகள் மேலும் மனதை தூண்டிச் சிந்திக்க வைத்தன.
இரவில் வெகுநேரம் மது அருந்தினார்கள். பிறகு உடம்பில் மது வேகமும், பெண் மோகமும் கூடி சொல்லொனாத வேட்கைத் தீயை ஏற்படுத்த,
இருவரும் உள்ளே சென்று அலங்கரிக்கப்பட்ட அம்சதூளிகா மஞ்சத்தில் ஏறி, அருமையான கலவி சுகத்தை எய்தினார்கள்.
ஆனந்தப் பரவசங்களின் உச்சங்களுக்குச் சென்று. அங்கே வெகு நேரம் சிரக்கம்பம் ஆடிவிட்டுக் கீழே இறங்கினான்.
பிறகு பெருமூச்சுகள் நிறைந்து, வியர்வை நிறைய ஒழுகவிட்டு ஆசுவாசமாகிக் கொண்டிருந்த அவனுக்கு நள்ளிரவைக் கடந்த பின்வரும் கீழைக்காற்று அதிக இதமாய் இருநதது.
அந்த இதத்தில் ஆழ்ந்து அரை யாமம் இருந்திருக்க மாட்டான்.
”எழுந்திரு!” என்று கடுமையாக, தாராசமாக அவனை உலுப்பி எழுப்பியது, ஒரு குரல்.
எழுந்து கண்களைத் துடைத்துப் பார்க்க, அருகில் சந்தரியை காணவில்லை.
திடுக்கிட்டான். எதிரே இரண்டு இரு வீரர்கள் நிற்பதைக் கண்டு
“ம்…எழுந்திருங்கள்!” என்றார்கள், அவர்கள்.
“நீங்கள் யார்? என்னை ஏன் எழுப்புகிறீர்கள்?” என்று அதிவீரன் அவசரம் பொங்கக் கேட்டான்!.
அவர்கள் அதற்கு மறுமொழி கூறவில்லை. அதற்குப் பதிலாக அரை நொடியில் அவன் மீது தாவி அவன் கைகளையு ம் கால்களையும் கட்டி. அப்படியே செந்தூக்காகத் தூக்கிக்கொண்டு போனார்கள்.
அந்த நேரத்தில் அதிவீரன், “சந்தரி! சந்தரி!” என்று பலமுறை அழைத்தும் அவள் எங்கே போனாள் என்று தெரியவில்லை.
அந்தக் கணத்திலேயே அது ஒரு துரோகச் செயல் என்பதை அதிவீரன் புரிந்து கொண்டான்.
அவனுக்குப் பல கவலைகள் ஏற்பட்டன?
முதலில் தனது சகாக்கள் வீரசேனன், தருமசேனன் இருவரிடமும் சொல்லாமல் வந்துவிட்டோம்!
இரண்டாவது இந்தக் கிராதகர்கள் யார் என்று தெரியவில்லை.
மாளிகைக்கு வெளியில் கொண்டு போகுமுன், அவனது கண்களை ஒருவன் துணியால் மூடிக் கட்டினான். வெளியே வந்ததும் அவனை ஒரு பல்லக்கில் ஏற்று வது அவனுக்குத் தெரிந்தது.
மீண்டும் பின்னர் ஒரு முகூர்த்தப் பிரயாணத்திற்குப் பிறகு, அவன் ஒரு மாளிகைக்குள் எடுத்தச் செல்லப்படுவது தெரிந்தது.
முடிவில் தனியாக விடப்பட்டு கால் கைகளின் கட்டு அவிழ்க்கப்பட்ட பிறகு,
அவனே தனது. கண்ணைக் கட்டிய துணியை அவிழ்த்து வெளிப்புறத்தைப் பார்த்தான்.
முதலில் எதுவும் புலப்படவில்லை. இருக்கும் இடமே இருட்டு மயமாக இருந்தது.
பிறகு மேலே கூரைக்கு அடுத்து மெல்லிதாக வெளிச்சம் தரித்திரமாக வருவதைப் பார்த்ததும், அவன் இருப்பது சிறைக்கிடங்கு என்று தெரிந்து விட்டது.
என்ன ஆச்சரியம்?
அவனா சிறையில் இருப்பது? தென்பாண்டிய மன்னனா? அதுவும் மதுரைச் சிறையிலா?
கடமை தவறாது கப்பம் கட்டும் அந்தத் தென்காசி, மன்னனா, மதுரை நாயக்கரது சிறையில் இருப்பது. யார் அவனை அடைத்தார்கள்?
ஏன் அடைத்தார்கள்?
“ம். சொல்லப்பா! நீ யார்? தென்காசிப் பாண்டியன் தானே?” என்று கர்ஜனையான குரல் கேட்டது.
அதிவீரன் மீண்டும் ஒருமுறை நிமிர்ந்து பார்த்தான். அவன் முன்னால் கம்பீர உருவத்தில் நிற்பது யார்?
அந்த மீசையையும் முகத் தோற்றந்தையும் பார்த்தால், எந்தப் பாளையக்காரர், என்பது மறந்துவிட்டதே! இவர் ஏன் அவனைச் சிறையில் தள்ளி பயமுறுத்துகிறார்?
“ம்… யோசிக்காதே. சொல்லு?” என்று மீண்டும் கர்ஜித்தார். பாளையக்காரர்.
“இல்லை அய்யா! நான் வெறும் வழிப்போக்கன். யாத்திரீகன்?”
கடகட என்று சிரித்தார், பாளையக்காரர். அய்ம்பது வயது இருக்கும். நல்ல வைரம் பாய்ந்த உடம்பு! அருகில் ஒருவன் தீவர்த்தி பிடித்திருக்க, அதன் குதிக்கும் ஒளியில் அவர் உடம்பு பசும்பொன் போல்மின்னியது. வாளிப்பான உடம்பு.
“யாரேனும் நம்புவார்கள் என்று பார்த்தாயா? ஒத்துக் கொள்ளப் போகிறாயா, அல்லது சித்திரவதை செய்யட்டுமா?” என்று இரைந்தார், அவர்.
“அய்யா! ஏன் இந்த ரீதியில் போகிறீர்? நானா தென் காசி மன்னன் அப்படியிருந்தால் மிகவும் கிழ்ச்சி அடைவேனே! ஏழை வீட்டில் பிறந்த எனக்கு அரியாசனம் எங்கேயாவது கிடைக்குமா?” என்று பணிவுடன் கூறினான். அதிவீரன்.
“நீ எங்கிருந்து வருகிறாய்?”
“திருநாராயணபுரம்!”
*அங்கிருந்து ஏன் இங்கு வந்தாய்?”
“திருவரங்கத்தை சேவிக்க வந்தேன். அப்படியே தென் பாண்டிய நாட்டிலுள்ள நவ திருப்பதிகளைச் சேவிக்கச் செல்கிறேன்! நான் பரமன வைஷ்ணவன். ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ!” என்றான், அதிவீரன்.
“பொய் சொல்கிறாய் நீர்”
“அல்ல, இதுவே மெய்”
“வேண்டுமென்று சாதிக்காதே! எனக்கு நீ இங்கே வந்த காரணம் தெரியும்!”
“எனன?”
“உன் பிரதான தாசி அல்லிக்கொடியைத் தேடி வந்திருக்கிறாய்!”
“எனக்கா? பிரதான தாசியா? என்னைத் தாங்கள் யாரென்றுதான் நினைத்தீர்?” என்றான். அதிவீரன்.
“சீ! வாயை மூடு! இந்தா. இவருக்கு இரவு உணவு படையாதே!” என்று கூறிவிட்டு, தமது காலாட்கள் பின் தொடர, கிடங்கைவிட்டு அகன்று படிகளில் ஏறினார்.
அவர். அவர் போனபிறகு அதிவீரன் கவலையும் யோசனையும் மிகுந்தவனாய் அறைக்குள் உலாவினான்.
எந்தவிதச் சத்தமும் அந்த அறைக்குள் வரவில்லை.
மனித நடமாட்டம் எதுவுமே தெரியவில்லை.
வெகு நேரம் உலாவி களைத்துப் போனவனாய் சிறை மேடையில் அவன் அமர்ந்தான்.
அப்போது மெல்லிதாக வந்த காலடிகளை அவன் உணரவில்லை.
வாசலுக்கு வெளியே அவன் கண்ணுக்கு மறைவாக ஒரு இளம்பெண் வந்து நின்றாள்.
இலேசாக எட்டிப் பார்த்து பிறகு சட்டென்று முகத்தை இழுத்துக்கொண்டாள், அந்தப் பெண்.
இதுபோல பலமுறை செய்தாள்,
அதிவீரன் கவனித்ததாகத் தெரியவில்லை.
அவன் கண்கள் மேலே உள்ள சாளரத்தை நோக்கி இருந்தன.
அதன் வெளிச்ச மாறுதல் அவனைத் திடுக்கிட வைத்தது.
அத்தியாயம்-19
காலையில் எழுந்ததும் அரசர் அதிவீரனைக் காணாமல் அவனது சகாக்களான வீரசேனனும், தர்மசேனனும் கவலை அடைந்தார்கள். “என்ன ஆனார்? இங்கேதானே தூங்கினார்? எங்கும் சொல்லாமல் செல்ல மாட்டாரே!” என்று வீரசேனன் பிரலாபிக்க
“சொல்லிவிட்டுப் போவார் சரி, ஆனால் ஒரு இடத்திற்கு மட்டும் சொல்லாமல் போவார்” என்று கூறினான், தர்மசேனன்,
“ஓகோ! தாசி வீட்டுக்கோ?” என்று வீரசேனன். “தர்மா! ஒரு விஷயம் நடந்திருக்க வேணும்! நம்முடன் வந்தாளே திருமங்கை, அவள் மீது எனக்குச் சந்தேகம் உண்டு, ஒன்றும் தெரியாதவள் போல் அவள் ஒதுங்கி வந்ததை நான் நம்பவில்லை! அவள் நம் அரசரை மயக்கி இருக்க வேண்டும்!” என்றான்.
“நாம்தான் அரசரோடு கூட வந்தோமே! அவர்கள் இருவரும் நெருங்கிப் பேசக்கூட இல்லையே?” என்றான், வீரசேனன்.
சிரித்தான் தர்மசேனன்.
“காதலின் அத்தனை வார்த்தையும் பேசிவிட கண் ஒன்றே போதுமே!” என்றான், அவன்.
“அப்படியும் அவர்கள் பார்த்துக்கொண்டதாகத் தெரியவில்லையே!” என்றான், வீரசேனன்.
மீண்டும் சிரித்தான் தர்மன்.
“வீரா! இதை நான் சொல்லித் தெரியவேண்டுமா? காதல் அற்புதமான மாயாவி! கண்ணுக்குத் தெரியாத வழியில் நுழைந்துவிடும். யாரும் பாராத நேரத்தில் மலர்ந்து விடும். நம் பயணத்தின் போது எத்தனையோ முறை நாம் கவனிக்காத வேளையில் அவர்கள் பார்த்திருப்பார்கள். ஏன், நமக்குத் தெரியாமல் சந்திக்கக்கூடச் செய்திருப்பார்கள்!” என்றான.
“என்ன இப்படிச் சொல்கிறாய்? காதல் என்பதை ஒப்புக்கொண்டாலும் அதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் நடந்துவிடுமா?” என்று கேட்டான், வீரசேனன்.
“காதல் என்றாலும் இது காதல் அல்ல! இது வசியம்! அந்தப் பெண் ஒரு வஞ்சக நோக்கோடு நமது அரசரை வசியம் செய்திருக்கிறான். நம் மன்னர் அதைக் காதல் என்று நம்பி, அவளது வலையில் விழுந்திருக்கிறார். இப்போது மதுரை வந்த பிறகு அவரை என்ன செய்தாளோ? ஆளைக் காணவில்லை பார்!” என்றான், தர்மசேனன்.
பிறகு இருவருமாகச் சேர்ந்து அவளைத் தேட ஆரம்பித்தார்கள்.
நல்லவேளையாக அந்த “மங்கை” என்பவளும், அவள் சேடியும் குதிரையில் வந்திருந்தார்கள். அந்தக் குதிரைகளை அடையாளம் வைத்துத் தேடலாம் அல்லவா?
தேடினார்கள்.
அப்போதுதான் அதன் கடினம் கூட அவர்களுக்குத் தெரிய ஆரம்பித்தது.
மதுரை மாநகரை ஏற்கனவே இருமுறை பார்த்திருக்கிறார்கள்.
குபேரப் பட்டணத்தின் சாயலில் இருந்தது அது. எங்கும் தூமிகள் விதவிதப் பருமன்களில் எழுந்து வானத்தைக் குத்திய வண்ணம் இருந்தன. கோபுரங்களும் அதன் ஒவ்வொரு நிலைவாசலும் ஆகாயத்துக்கு ஏணி வைத்தது போல இருந்தது. மாடங்கள், உப்பரிநைகள், மேடைகள். பூங்காக்கள், கல்தூண் விளக்குகள் எல்லாம் எங்கும் நிறைந்து, மதுரை நகரமே ஒரு பிரம்மாண்ட அரச மாளிகை போல காட்சி அளித்தது.
வீதிகளும் சாலைகளும், ஜனங்களின் கலகலப்பில் மிதந்தன.
உலகத்து பல பாகத்து மாத்திரியர்கள் கலந்திருக்க, அவர்களது வெவ்வேறு வித உடைகள் கண்களைப் பறித்த வண்ணம் இருந்தன.
ஜனங்களில் பாதி பேருக்கும் குதிரை சொந்தம் போல் தெரிந்தது.
இதில் திருமங்கையும் அவள் சேடியும் உபயோகித்த குதிரைகளை எங்கே தேடுவது?
இருந்தும், இரு சகாக்களும் தளரவில்லை.
பகல் முழுவதிலும், தெருக்களில் அலைந்தார்கள். எந்த வீட்டிலாவது குதிரை லாயம் இருக்கிறதா என்பதைக் கூர்ந்து கவனித்தார்கள்.
இருப்பது தெரிந்தால் ஏதாவது யுக்தி செய்து உள்ளே போய், குதிரைகளைக் கவனித்தார்கள்.
மதியத்தில் உணவு உண்ணவில்லை. அதை ஒரு பொருட்டாகவும் கருதவில்லை.
வீதிகளில் அவசரமாகத் தேடுவதுதான் அவர்களது குறியாக இருந்தது.
பொழுது சாயும் நேரம், மதுரை மேலும் கோலா கலமாகிக் கொண்டிருந்தது.
தீப் பற்றியதுபோல் ஒரு சிரிப்பும், புன்னகையும் எல்லார் முகத்திலும் பற்றியிருந்தது.
கடைவீதிகளில் ஆராவாரங்கள் அதிகமாயின.
பொடிந்த வியர்வையுடன் அவர்கள் நின்ற போது, வீரசேனனின் கண்கள் சற்று எட்டத்தில் இருக்கும் அரபு வியாபாரி மீது விழுந்தது.
“குத்ரே! குத்ரே!” என்று இடைக்கு இடை பிரலாபித்துக் கொண்டிருந்தார்.
அவர் அருகே ஒரு குதிரை அசையாமல் நின்று கொண்டிருந்தது.
அராபியக் கப்பல் வந்துவிட்டால் மதுரையில் குதிரை விற்கும் படலம் ஆரம்பமாகிவிடும்.
ஏதோ ஒரு உந்தல் ஏற்பட்டு அவரை அணுகி ஒரு புன்னகை காட்டினான். வீரசேனன்.
“குத்ரே வேணுமா?” என்று உச்சரிப்பு சரியில்லாமல் கேட்டார், அராபிய வியாபாரி!
“விற்கிறீங்களா?” என்றான். வீரன்.
“ஆமாம்!”
“இந்தக் குதிரைதானா?”
“ஏன்! இதுபிடிக்கலையா?”
“இல்லை! ஒரு குதிரை வைத்துக்கொண்டா வியாபாரம் செய்றீங்க?”
“குத்ரே நிறைய இருக்கு எல்லாம் தோட்டத்திலே இருக்குது!”
“தோட்டம் எங்கே?”
“தீளக்கோட்டே பக்கத்திலே இருக்கு!”
“குதிரை’ வீற்பனை மட்டும்தான் செய்வீங்களா?”
அராபியர் அவர்களை ஏற இறங்கப் பார்த்தான்.
“ஏன்! வாங்கிக்கவும் செய்வோம்! குத்ரே இருக்குதா?”
“இல்லை” என்று தலை ஆட்டினான், வீரன்.
“பின்னே ஏம்பா கேட்கிறே” என்று கூறி, தெருவை நோக்கி “‘குத்ரே! குத்ரே” என்று கூவ ஆரம்பித்தான்.
“இந்தாங்க!” என்று இடைமறித்தான், வீரசேனன்.
அவனை அராபியர் பொருட்படுத்தவில்லை.
”இந்தாங்க! குதிரை வாங்கணும்!” என்று அழுத்திக் கூறினான், வீரன்.
”குத்ரே வேணுமா?”
‘”ஆமாம்!”
“அப்படி இருந்துக்க இப்போ அழைச்சிட்டுப் போறேன்.”
வீரசேனன் சற்று தள்ளி அமர்ந்தான்.
பிறகு அராபியர் “குத்ரே குத்ரே!” என்று அரைமுகூர்த்த நேரம் கூவிவிட்டு, மேலும் இரு ஆட்களைச் சேர்த்துக் கொண்டான்.
இதற்குள் நன்றாக இருட்டிவிட்டது. அராபியர் அவர்களை அழைத்துக் கொண்டு. குதிரையை மெல்ல நடப்பித்தவாறு போனான்.
பல வீதிகளைக் கடந்து, சில சந்துகளில் நுழைந்து, கடைசியில் தோட்டத்தை அடைந்தான்.
“தம்பி!” என்று அழைக்க “அய்யா!” என்று குரல் வந்தது.
“இப்படி வா?”
அருகிலுள்ள வீட்டினுள்ளிருந்து ஒரு பையன் கையில் தீவர்த்தி கொண்டு வந்தான்.
தோட்டம் பளிச்சிட்டது.
அத்தனை நேரம் வரை கண்ணுக்கு புலப்படாது இருந்த குதிரைகள் சட்டென்று தென்பட்டன.
அவற்றின் கண்கள் பளிங்குபோல் வெளிச்சத்தைப் பார்த்தன.
அராபியர் ஒவ்வொரு குதிரையாகக் காட்டி வர, எல்லாக் குதிரைகளையும் மூவரும் பார்த்தார்கள். யாரும் பேசவில்லை.
அடுத்து சற்று தள்ளியிருக்கும் குதிரைகளிடம் தீவர்த்தி, செல்ல தர்மசேனன் வீரனின் கைகளை அமுக்கினான்.
அங்கே திருமங்கை உபயோகித்த இரு குதிரைகளும் நிற்பது தெரிந்தது.
தீவர்த்தி அலைகளின் அருகில் சென்றதும் அது உறுதியாகிவிட்டது.
மற்ற இருவர் வெவ்வேறு குதிரைகளுக்குப் பேரம் பேசி, தோது படாது போய்விட்டார்கள்.
உடனே வீரசேனன் அராபியரை அணுகி, “அந்த இரண்டு குதிரைகளை எங்கே வாங்கினீர்கள்?” என்று கேட்டான்.
”யாரோ கொடுத்தாங்கோ?”
“யார்? எங்களுக்குத் தெரியணும்?”
“சோமேசர் தெருவிலே ஒரு இளைஞன் கொடுத்தாங்க!” என்றான். அராபியன்.
”வாங்க! வந்து இடத்தைக் காட்டுங்கள்!”
அராபியர் அவர்களை ஏற இறங்கப் பார்த்தார். “ஏதாவது தகராறா?’
“ஆமாம்!”
“வாங்க! வீட்டைக் காட்டறேன்” என்று சொன்னார், அராபியர்.
இருவரும் அவரை பின்தொடர்ந்து சென்றார்கள்.
சோமேசர் தெருவில் அந்த வீட்டை அராபியர் காட்டிக் கொடுத்தார்.
அதை அடுத்து அந்த இளைஞனையும் காட்டிக் கொடுத்தார்.
வீரசேனன் உடனே அராபியரை அனுப்பிவிட்டு இளைஞனை விசாரிக்கத் தொடங்கினான்.
இரு பெண்களும் இருக்குமிடம் விரைவில் தெரிந்தது. அவர்கள் சொல்லித்தான் குதிரைகளை விற்றதாக இளைஞன் தெரிவித்துக்கொண்டான்.
இரவு ஆராவாரம் அடங்கும் நேரத்தில் அவர்கள் திருமங்கை இருக்கும் இடத்தை அணுகினார்கள்.
வெளியே சாதாரண வணிகர் வீடாகத் தோன்றியது. உள்ளே பெரிய மாளிகை போல் விஸ்தரித்திருந்தது.
திருமங்கை உணவு அருந்திவிட்டு, ஒரு மஞ்சத்தில், சாய்ந்தவாறு அமர்ந்திருந்தாள்.
அவர்களைக் கண்டதும் ஆச்சரியப்பட்டாள்.
அவர்கள் வந்ததைத் திகைப்புடன் அவள் கவனிப்பது தெரிந்தது.
“என்ன விஷயம்?” என்றாள் அவள், பற்றில்லாதது போல.
:எங்கள் எஜமானர் வேண்டும்!”
:உங்கள் எஜமானரா? ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்?:
“இங்கே இருக்கிறார் என்று தெரியும், அம்மா!” என்று அழுத்தமாகக் கூறினான், வீரசேனன். திருமங்கை வியப்புடன் நோக்கினாள்.
அத்தியாயம்-20
வீரசேனனுக்கு மங்கையின் மொழி திருப்தி அளிக்க வில்லை! அவளது கண்ணில் இருந்த அமைதியோ சாந்தமோ உண்மை அல்ல! இவள் ஆழமானவள் என்று நினைத்தான்.
“அம்மணி! இந்த மதுரை மாடிகளில் எங்கள் எஜமான ருக்குத் தெரிந்தவர்கள், எங்களைத் தவிர தாங்கள்தான்! இன்னும் ஒரு முழுப் பகல் பொழுது கூட அவர் இங்கே வாசம் செய்யவில்லை. வேறு யாரையும் அவர் அறிந்திருக்க நியாயம் இல்லை ஒரு இரவுக்குள் அவர் காணாமல் போக வேண்டுமானால், தங்கள் இருப்பிடம்தான் வந்திருக்க வேண்டும்… அதனால் ”
அவன் மேலே சொல்லிக்கொண்டு போகுமுன் “வீரரே!” என்று இடைமறித்தாள் அவள்.
அவள் கண்களில் தீக்கொழுந்துகள் துள்ளியிருந்தன.
“பார்த்துப் பேசும்! நான் ஒரு குடும்பப் பெண்! ஏதோ ஒரு கால விசேஷத்தில் ஆண்களோடு பயணம் செய்ய நேர்ந்ததைக் கண்டு, என்னைக் கேவலமாக நினைத்து விடாதீர்கள். எங்கள் ஊர் வந்து எங்களைப் பார்த்து இருந்தால் எங்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டிருப்பீர்கள்!” என்றாள் கோபமான வீச்சில்!
வார்த்தைகளில் வெப்பம் தோய்ந்திருப்பதைப் பார்த்து வீரசேனன் சற்று திகைத்து நின்றான்.
இன்னும் அதிகம் பேசினால், ஏதாவது செய்து விடுவாளோ என்ற அச்சம் அவனுக்கு இருந்தது. ஏனெனில் வழிப்பறிக்காரர்களை அவள் முடியறித்தது அவனுக்கு நினைவு இருந்தது.
இருந்தாலும், போக மனமில்லாமலும், அவள் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லாமலும் அவன் அங்கே குழம்பி நிற்க,
திருமங்கை அவனை மீண்டும் ஒரு கண் வீச்சில் ஏற இறங்கப் பார்த்தான்.
“இந்தா, ரூபா! இவர்களுக்கு இந்த வீடு முழுதும். காட்டு! இவர்கள் எஜமானரை நாம் நம் முந்தானையில் முடிந்து வைக்கவில்லை என்று தெரியட்டும்” என்றாள் தோரணையாக.
அந்தச் சேடி அவர்களைப் பார்த்து, “வாருங்கள்” என்றாள்.
அந்த வீட்டில் ஒரு பகுதி விடாமல் எல்லா இடமும் அழைத்துப் போய்வந்தாள்.
அவனது சந்தேகத்தைக் கிளப்பிய இடமெல்லாம் நன்றாகத் தேடிப் பார்த்துவிட்டு அவன் திரும்பி வந்தான்.
திருமங்கையை நோக்கி, “அம்மணி! மன்னிக்கவும்! நான் சொன்னது தங்களைப் புண்படுத்தியிருந்தால் பொறுத்தருள வேண்டும்” என்று விநயமாகக் கூறி விடை பெற்றான்.
வாசல் வரை போனவனை, “ஐயா!” என்று நிறுத்தினாள்.
“உங்கள் எஜமானர் ஏதாவது இக்கட்டில் அகப்பட்டிருந்தால் என்னிடம் தெரிவியுங்கள்! முடிந்தால் என்னாலான உதவியைச் செய்கிறேன்” என்றாள்.
“நல்லது அம்மணி!” என்று வீரசேனன் வணங்கி விட்டுச் சென்றான்.
வெளியே போனபிறகு வீரசேனன் தர்மசேனனை நோக்கி, “இவள் சொல்வது உண்மையாக இருக்குமா? நம் எஜமானர் பற்றி நிச்சயம் இவளுக்குத் தெரியாதா?” எனறான்.
“அவள் சொல்வதைப் பார்த்தால் மெய் போலத் தோன்றுகிறது! நாமும் இவள் வீடு முழுதும் தேடிவிட்டோம்! அனாவசியமாய் இவள் மீது சந்தேகப் பட்டிருக்கிறோம்” என்றான் தர்மசேனன்.
“அப்படியானால் மன்னர் எங்கே போனார்?” என்றான் வீரசேனன்,
“யாராவது எதிரிகள் அவரைப் பிடித்திருப்பார்களோ?”
“எதிரிகளா? நம் எஜமானர் இன்னார் என்று அவர்களுக்குத் தெரியுமா?”
“தெரிந்திருக்கலாம்!”
“எப்படி?”,
“நாம் வேடத்தை மாற்றினோமே தவிர, அதிக எச்சரிக்கை எடுக்கவில்லை!”
“எப்படிச் சொல்கிறாய்?”
“கரிசூழ்ந்த மங்கலத்தில் நாம் என்ன என்ன செய்தோம் நினைவு இருக்கிறதா?” “என்ன செய்தோம்?” என்று யோசித்தவாறு கேட்டான், வீரசேனன்.
“கோட்டைக் காவலர் நம்மை வழி மறைந்த போது நம் எஜமானரை தென்காசி மன்னர் என்று குறிப்பிட்டு விட்டோம். நினைவிருக்கிறதா?” என்றான் தாமசேனன்.
“ஆ!” என்று கையை உதறினான் வீரசேனன். “உண்மை! மெய்மறந்து கூறிவிட்டோம்” என்று ஒரு விரலைப் பல்லில் வைத்துக் கடித்தான். ஆனால்…. அப்போது இந்தப் பெண்கள்தானே இருந்தார்கள்?” என்றான் அவன்.
“பெண்கள்தான். ஆனால், சாதாரணப் பெண்கள் இல்லை என்பதை அறிந்திருப்பாய், வீரசேனா! வழியிலேயே அவர்கள் சாமர்த்தியத்தை அறிந்தோம்! உயர் குடி மக்கள் அவர்கள். விஷயத்தை எங்கேயாவது சொல்லி விடக் கூடாது” என்றான் தர்மசேனன்,
“சொல்வார்களா?” என்று ஆதங்கத்துடன் கேட்டான் வீரசேனன்.
“யார் கண்டார்கள்?” என்றான் தர்மன்.
வீரசேனனுக்கு மனது சரியாகவில்லை. குழம்பிக் கொண்டே நடந்தான்.
மேல்மாட வெளியில் திருமங்கையும் சேடி ரூபாவதியும் அமர்ந்திருக்க –
“நிச்சயம் அவர் அரசவம்சந்தான். முகத்தைப் பார்த்தால் தெரியவில்லையா? தவிர, கரிசூழ்ந்த மங்கலத்துக் கோட்டைக் காவலரிடம், அவரது துணை ஆள் பேசியதை மறந்துவிட்டாயா?” என்று கேட்டாள் திருமங்கை.
“என்ன சொன்னார்?” என்றாள் ரூபா.
“வரதுங்க ராஜாவுக்கு சகோதரர் என்றாரே!”
”அப்படியா? நான் சரியாகக் கவனிக்கவில்லையே!”
“தென்காசிப் பாண்டியர் இவராகத்தான் இருக்க வேண்டும். அவரது மன்மத சொரூபமே அதைச் சொல்கிறதே!”
‘ஒ” என்று ஓரக கண்ணால் பார்த்தாள் ரூபா.
“நல்ல ராஜகளை! கவனித்தாயா?”
“எங்கே நான் கவனித்தேன்?” என்று அங்கலாய்த்தாள், ரூபா.
*கல்வியில் சிறந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்!” என்றாள் திருமங்கை.
“கல்வியில் சிறந்தவரோ என்னவோ? கலவி விஷயத்தில் ஆராய்ச்சி செய்கிறவர்.”
“செய்யட்டுமே! நாம் எத்தனை நாள் அவருடன் பிரயாணம் செய்தோம்? எப்போதாவது நம்மைத் திரும்பிப் பார்த்தாரா?”
“இல்லைதான். ஆனால் அதனால் என்ன?”
“நினைத்தபோது மனதைக் கட்டுப்படுத்திக் கொள்கிறார் இல்லையா?”
“ஆமாம்!”
“அதுவே அவரது அடக்கத்தையும் ஒழுக்கத்தையும் காட்டுகிறதே”
சேடி ரூபா பேசவில்லை!
திருமங்கையின் கண்கள் எங்கேயோ பார்த்திருந்தன. மதுரை வந்த பிறகு உடனே அவர்கள் ரகசியமாய் வீரபாளையக்காரைச் சந்தித்திருக்க வேண்டும். அவரிடம் கொடுக்க வேண்டிய ஓலை திருமங்கை யிடம் இருந்தது.
“சிறிதும் தாமதிக்கக் கூடாது!” என்று புறப்படும் போது உபதேசம் பண்ணியிருந்தார்கள்.
திருமங்கை இங்கே வந்தபிறகு, அன்றைய பகல் பொழுது ஒடுகிறது. ஆனால், வீரபாளையக்காரரைப் பற்றி இன்னும் பேச்சு எடுக்கவில்லை.
வந்ததில் இருந்து ஒருவித மனக் கலக்கமாய் இருந்தாள் மங்கை.
அது சேடி ரூபாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
இரண்டு மூன்று முறை அவள் காரணம் கேட்டும் மங்கை சரியாக மறுமொழி கூறவில்லை.
ஆனால், சாலையில் எழுந்த பிறகு மங்கையின் உள்ளக் கிடக்கை ஒருவாறு புரிய ஆரம்பித்தது.
“ஊம்! என்ன ரூபா? என்ன சொல்கிறாய்? மதுரை ஏன் சீக்கிரம் வந்துவிட்டது என்று தோன்றவில்லையா? இன்னும் பிரயாணம் போய்க்கொண்டே இருந்தால் நன்றாய் இருந்திருக்குமல்லவா?” என்றாள் அவள்.
“ஆமாம் ஆமாம் தஞ்சாவூர் இன்னும் சீக்கிரம் வர வில்லை என்கிறீர்கள்? அவ்வளவுதானே” என்றாள் சேடி.
மங்கை முகத்தில் தோன்றிய சுருக்கம் அந்த வார்த்தையை அவள் ரசிக்கவில்லை என்று தெரிவித்தது.
ஒரு பெருமூச்சு விட்டு விட்டு அவள் சொன்னாள். “இல்லை ரூபா! எனக்கு இப்படி ஒரு பிரயாணம் போனது எவ்வளவு பிடிக்கிறது தெரியுமா? பிரயாணத்தை முடிக்காமல் போய்க்கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது” என்றாள் அவள்.
பிறகு, “அந்த வீரரைப் பார்த்தாயா? என்ன கம்பீர மாக இருந்தார்? அவரோடு நேற்றுவரை பிரயாணம் செய்துவிட்டு இன்றைக்குத் திடீரென்று அது இல்லாமல் போனால் மனசு எவ்வளவு சூன்யமாகிறது?” என்றாள்.
இந்த வார்த்தைகளைக் கேட்டதும்தான் ரூபாவுக்கு மனதில் ஏதோ குறுகுறுப்பு ஏற்பட்டது.
சட்டென்று மங்கையின் மனம் நினைக்கும் தடம் தட்டுப்பட்டது போல் இருந்தது.
அது உண்மையாக இருக்குமா?
“உம்….எந்த முடிவும் திடீரென்று எடுத்துவிடக் கூடாது” என்று நினைத்தாள், சேடி ரூபா.
மங்கையை நோக்கி, “அம்மா! வீரபாளையக்காரரை உடனே போய் நாம் பார்க்க வேண்டாமா?” என்று கேட்டாள், அவளை நினைவு படுத்தும் ரீதியில்.
“எல்லாம் போகலாம்! அதற்கு முன்னாடி, பாவம், அந்த மனிதரைக் காணலையாம். கேட்கிறதுக்கே வருத்தமாக இருக்கிறது!” என்றாள்.
அதைப் பற்றி நமக்குக் கவவை இல்லை.
– தொடரும்…
– மன்மதப் பாண்டியன் (நாவல்), முதல் பதிப்பு: 1998, பூம்புகார் பதிப்பகம், சென்னை.