கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 29, 2024
பார்வையிட்டோர்: 1,212 
 
 

(1993ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அதிகாரம் 1-2 | அதிகாரம் 3-4 | அதிகாரம் 5-6

அதிகாரம்-3

ஆடி பதினேழு! 

காவிரிக் கன்னி கரைபுரண்டு நடனமாடும் இரவு நேரம்! கரையிலே சூந்தங் கம்புகளால் ஆன விளக்குகளின் ஒளி! நூற்றுக்கணக்கான அந்த விளக்குகளின் நடுவிலே ஓர் அழகிய மண்டபம்! கருங்கற்களால் ஆன அந்த மண்டபம், அந்த சூந்தங்கம்பு விளக்கொளியால் மேலும் அழகு பெற்றது. சுற்றிலும் நின்ற மரங்கள் அந்த வெளிச்சத்தில் நன்றாகத் தெரிந்தன. காவலுக்கு நின்ற புரவிகளின் கனைப்பு இடையிடையே கேட்டுக் கொண்டே இருந்தது. முன்னும் பின்னும் நூற்றுக் கணக்கான வேல் தாங்கிய வீரர்கள் நடந்து கொண்டே இருந்தார்கள். அவர்கள் யாவரும் பாரி மன்னன் காவலுக்கு வந்தவர்கள்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய அமைப்பு எனினும் பார்ப்பதற்கு அழகான அமைப்பாக இருந்த அந்த மாளிகை மண்டபத்திற்குள்ளே, பாரியும் பாரி மகளிரும் தளபதி வானவரையனும் வந்தபோது “இம் மண்டபம் தங்களுடைய தகுதிக்கு மிகவும் குறைவுதான். என்றாலும், எங்களுடைய சோழ மன்னர் தங்கள் திருவடிகளே முதலில் பட வேண்டும் என்பதற்காகக் கட்டுவித்ததாகும்” என்றான் செங்கணான். 

“நீங்கள் சற்று அளவிற்குப் பெரிய வார்த்தையைப் பயன்படுத்துகிறீர்கள். மாமன்னர் சோழ மன்னரோடு ஒப்பிடும் போது நான் மிகவும் சிறியவனே! ஒரு மலைக்கும் முன்னூறு கிராமங்களுக்கும் அதிபதியாக உள்ள எனக்கு இவ்வளவு பெரிய மாபெரும் வரவேற்பினை அளித்தது தங்கள் மாமன்னருடைய பெரும் இதயத்தைக் காட்டுகிறது! இது எனக்காகவே கட்டப்பட்டிருக்குமாயின் என்னைப் படைத்த இறைவன் நன்றிக்குரியவனாவான். வேறு எதை நான் சொல்ல முடியும்” என்றான் வள்ளல் பாரி. 

“அப்பா! சோழ மன்னர் தங்களிடம் வைத்துள்ள அளவற்ற அன்பு இதுவரையிலும் நான் யாரிடமும் காணாத ஒன்று” என்றாள் அங்கவை. 

“ஆமாம், மகளே! சிலர் மட்டுமே சில இதயங்களைப் புரிந்து கொள்கிறார்கள். என்னைப் புரிந்து கொண்டதில் சோழ மன்னர் ஒருவராக இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்! ஏனோ மற்றவர்கள் சிலர் என் மீது ஆத்திர உணர்ச்சியோடு இருக்கிறார்கள். நான் கொடுப்பதும் நான் புகழ் பெறுவதும், அவர்களுக்குப் பிடிக்கவில்லை யென்றால், அவர்களை அமைதிப்படுத்துவதற்காவது என்னுடைய கொடைத் திறனை நான் குறைத்துக் கொள்ளக் கூடும்! அதிலே, தவறு ஒன்றும் இல்லை. ஆனால், சோழ மன்னருடைய இதயத்தைக் கணக்கிடும் போது மற்றவர்களும் இப்படி இருக்கக் கூடாதா என்றே எனக்குத் தோன்றுகிறது” என்றான் பாரி. 

“சோழ மன்னர் மற்றவர்களை விட சற்று உயர்ந்தவர்! அவர் எதனையும் பெரும் கண்ணோட்டத்தோடு பார்க்கிறார்! தங்களுடைய மகத்தான புகழைக் கேள்விப்பட்டு உற்சாகம் அடைந்தவர்களிலே அவர் ஒருவர் ஆவார். அவரை நான் மட்டுமே அறிவேன்” என்றான் செங்கணான். 

மேலும் அவர்கள் பேசிக் கொண்டே இருந்த போது, செங்கணான் இடைமறித்து, “நல்லது, தங்களுக்கு காலம் தாழ்கிறது. நான் என் சகோதரியை அழைத்துக் கொண்டு வருகிறேன்” என்று புரவியில் ஏறிப் புறப்பட்டான். 

அவனைப் பார்த்துக் கொண்டேயிருந்த அங்கவையும் சங்கவையும், “அப்பா! சோழ நாட்டில் தளபதிகள் கூட எவ்வளவு பக்தி வயப்பட்டு இருக்கிறார்கள் பார்த்தீர்களா?” என்றார்கள். 

உடனே பாரி, “ஆமாம், மகளே! மனிதர்களுக்காகவே படைக்கப்பட்டது மண்டலமென்றாலும், மனிதர்களில் சிலரைத் தான் ஆங்காங்கே என்னால் காண முடிகின்றது” என்றான். 

மாளிகைத் தூண்களைத் தட்டிப் பார்த்துக் கொண்டே வந்தாள் அங்கவை. அதற்கேற்ப இசை யெழுப்பிக் கொண்டே வந்தாள் சங்கவை! இருவரும் அந்த மாளிகை முழுவதையும், மண்டபம் முழுவதையும் சுற்றிப் பார்த்துக் கொண்டே வந்தார்கள். 

பறம்பு நாட்டில் அவ்வளவு அழகான மண்டபம் இல்லை தான்! அம்மலையின் மீது நீண்ட நெடுங்காலமாகவே இருந்து வந்த தன் மூதாதையர்களின் மாளிகையில்தான் அவர்கள் குடியிருந்து வந்தார்கள். மூதாதையர் கட்டியதை அழிக்கக்கூடாது, அத்தகைய சின்னங்கள் வாழவேண்டும் என்பதிலே பாரி மன்னன் அக்கறையுடையவனாக இருந்தான்.

நீண்ட வளைவுகளை உடைய மிகப்பெரிய மாடங்கள் பாரியினுடைய பறம்புமலை மாளிகையிலே இருந்தன. இங்கே இருப்பது போன்ற கருங்கல் மண்டபங்கள் அங்கே இல்லை. அவன் அரண்மனையில் சிங்காதனம் போடுகின்ற மேடை மட்டுமே கருங்கல்லால் ஆனதாக இருந்தது. ஆயினும் பறம்பு மலையைச் சுற்றி, ஏராளமான கருங்கற்கள் கிடைத்தன. தன்னுடைய மாளிகையைப் பெரிது படுத்துவதைவிட அதில் மிஞ்சுகின்ற பொருளைக் கொண்டு, மற்றவர்களை வாழவைக்க வேண்டும் என்றேதான் அவன் இருந்தான். 

ஆனால் சோழன், பாரியைவிட பொருள் தரத்தில் மிகவும் உயர்ந்தவன். சோழ நாடு பறம்பு மலையை விட மிகவும் பரந்தது. அதனால் அவன் கட்டிய மாளிகையும் பறம்பு மலை மாளிகையை விட மிகப் பெரியதாக அமைந்திருந்தது. அவ்வளவுதான் பாரிக்குத் தோன்றிற்று. ஆனால் அவனது மகளிருக்கோ, அப்பா ஏன் இப்படிச் சிறிய மாளிகையிலேயே, பறம்பிலேயே வாழ்ந்து வருகிறார், இப்படி ஒன்றை எழுப்பினால் என்ன என்று தோன்றிற்று. 

அந்த மாளிகையின் அழகை அவர்கள் ரசித்துக் கொண்டேயிருக்கும் பொழுது, இத்தகைய மாளிகையில் இப்படிப்பட்ட பெண்ணல்லவோ இருக்க வேண்டும் என்பது போல வந்து சேர்ந்தாள் கதலி! 

கதலி உள்ளே வரும்பொழுது பாரியும் வரவேற்கவில்லை. அங்கவை, சங்கவையும் வரவேற்கவில்லை. அமைதியாக சாய்ந்து கையைக் கட்டிக்கொண்டிருந்த வானவரையனே வரவேற்றான். வானவரையன் மட்டுமே “வாருங்கள்” என்றான். அவள் கண்ணாலே பதில் சொன்னாள்!

அவளை அழைத்துக் கொண்டு வந்த செங்கணான், “இவர்தான் பறம்பு மலையின் தளபதி” என்று வானவரையனை அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். “மிக்க நல்லது ! நன்றி !” என்று ஒரு வார்த்தையுடன் உள்ளே சென்றாள் கதலி. 

உள்ளே, அவள் நடந்து வருகின்ற பேரழகைப் பார்த்தபடியே அங்கவையும் சங்கவையும் நின்று கொண்டிருந்தார்கள். 

நெல்லையே சுருட்டி விட்டிருந்த நீண்ட நெடுங் கூந்தல்! நேர் வகிடு! நிலவையே வடிவெடுத்து வைத்திருந்தது போல் திருவதனம்! உற்றுப் பார்த்தால் கற்றவரும் மெய்மறக்கும் அழகான நாசி! வெள்ளி அம்பலத்துக் கைப்பிடி போன்ற அழகிய செவிகள். உரித்து வைத்த வாழைத் தண்டைப் போன்ற பொன்னால் அலங்கரித்த கழுத்து; தோன்றியும் தோன்றாமலும் இருக்கும் அழகான இளம் மார்பகம்; அதனைப் பிறர் காண முடியாதவாறு மறைத்துக் கொண்டிருக்கும் துல்லிய பட்டாடை. 

இவளைப் பார்த்தே கவிஞன் எழுதினானோ என்று அறுதியிட்டுச் சொல்லுமாறு இடை; இப்படி நடந்தால் எப்படி உலகம் மயங்காமல் இருக்கும் என்பது போன்ற நடை; பொழுது விடியும்போது தோன்றும் கலகலப்போடு பளபளப்புடன் விளங்கும் அங்கங்கள். 

மனித குலத்தைப் பழி வாங்குவதற்கு என்றே இறைவன் பூமிக்கு அனுப்பிய தூது அவள். 

ஆம்! அங்கவை, அப்படித்தான் நினைத்தாள். பெண்மையிலே இப்படிப்பட்ட பேரழகு பறம்பு மலையில் இல்லை.  

உறுதி வாய்ந்த உடற்கட்டு உள்ள பெண்கள் பறம்பு மலையில் ஏராளம்! ஆனால், இந்த அழகு. தனி. இது என்ன சோழ மண்டலத்திற்கு இறைவன் அளித்த வரமா?

அங்கவையும் சங்கவையும் பெண்கள் பார்ப்பது. போல் அவளைப் பார்க்கவில்லை. காதல் வயப்பட்ட ஆடவர்கள் பார்ப்பதுபோல் அல்லவா பார்த்தார்கள்!

அவளை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தலை குனிந்து நின்றவன் வானவரையன்! இந்த சூழ்நிலையில் என்ன பேசுவதென்று புரியாமல் தன் தங்கையிடம் விடை பெற்றுக் கொண்டான் செங்கணான். 

வள்ளல் பாரி சலவைக்கல் பள்ளியில் சாய்ந்தார். 

புகழ் பெருகி வரும்போது, ஒரு மனிதனுக்கு அடக்கமும் கூடவே வருமானால், அவன் புகழ் இன்னும் அதிகமாகப் போகிறது என்று பொருள். ஒவ்வொரு கட்டத்திலேயும் பாரி, அப்படியே விளங்கினான்.

பாரியைப் பற்றிப் பாடாதார் தென் தமிழகம் முழுவதிலேயும் எங்கேயும் இல்லை, சேர நாடு உட்பட அவன் புகழ் பரவாத இடம் இல்லை. பாரியும் காரியும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் என்றாலும், பாரிக்கே அளவு கடந்த புகழ் இருந்தது. அந்தப் புகழைப்பற்றி அவன் மெய்சிலிர்த்தது இல்லை. புகழ் இல்லாமல் போனாலும் அவன் கவலைப்பட வில்லை.

அவன், சாய்ந்து கிடந்தபோது ஒரு சடலத்தின் உணர்ச்சியே அவனுள் நிறைந்து கிடந்தது. எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளும் ஒரு மனப்பக்குவத்தை,பாரி பெற்று இருந்தான்! இத்தனைக்கும் அவன் நாற்பத்து ஐந்து வயதைக் கடந்து விட வில்லை. துணையை இழந்தபின் பாரி பறம்பில் ஒரு துணையையும் தேடிக்கொண்டதில்லை. வந்திருக்கும் புதிய பெண்ணை அங்கவையும் சங்கவையும் அழைத்துக் கொண்டுபோய், “அப்பா! இவள் தான் தளபதியின் சகோதரி” என்றார்கள். 

“அப்படியா ? மிக்க மகிழ்ச்சி. அழகான பெண், நல்ல குணம் போலும் தெரிகிறது. இங்கேயே இரு அம்மா!” என்று சொல்லி மறுபடியும் பள்ளியில் சாய்ந்தார் பாரி. 

“உங்களுக்குத் தாயம் விளையாடத் தெரியுமா?” என்று கேட்டாள் அங்கவை. 

“தெரியும்” என்றாள் கதலி. 

“எனக்கு அந்த விளையாட்டில் மிகவும் பிரியம். நாம் இப்போது விளையாடலாமா?” என்றாள் சங்கவை. தாயம் விளையாடுவதற்கான சலவைக் கல் ஒன்றினை அங்கேயே வைத்திருந்தார்கள்! 

“இது என்ன ! இங்கேயே இருக்கிறது ?” என்று கேட்டாள் அங்கவை! 

“வருகின்ற விருந்தாளிகளுக்கு எப்போதும் ஏதாவது பயன் படவேண்டும் என்பதற்காக பல பொருட்களை மன்னர் இங்கேயே வைத்திருக்கிறார். இவையன்றியும் ஒரு ஊஞ்சலைப் பார்த்திருக்க முடியும். அந்த ஊஞ்சலோடு நீராடும் குளம் ஒன்றினையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த நீராடும் குளம் சுற்றிலும் அடைக்கப்பட்டிருக்கிறது. அதற்குள் பெண்கள் விரும்பினால் ஆனந்தமாக குளித்துக் கொண்டேயிருக்கலாம். ஆடவர்கள் அங்கே வர மாட்டார்கள். அத்தகைய வசதிகளைக் கொண்ட இந்த இல்லத்தை வருகிற விருந்தினர்களுக்காகவே படைத்திருக்கிறார் மன்னவர்” என்றாள் கதலி. 

“அடடா! இங்கேயே இருக்க வேண்டும் போல தான் எனக்கும் தோன்றுகிறது” என்று சொன்னாள் சங்கவை. 

“ம்! பறம்பு மலையைவிட இது அதிக வசதிகள் கொண்ட இடம் தான். ஆனாலும் கூட ஒவ்வொரு பெண்ணுக்கும் பிறந்த வீட்டை விடப் புகுந்த வீடு தானே பெருமையாகத்தெரியும்” என்றாள் அங்கவை. 

“நான் அப்படி நினைக்கவில்லை. பிறந்த வீட்டை விட்டு எப்போது ஒருத்தி புகுந்த வீட்டிற்குப் போய் விடுகின்றாளோ, அப்போதே அவளுடைய பாசமும் கூடப்போய்விடுகிறது என்று கருதுகிறேன்” என்றாள் கதலி. 

“அது எப்படிச் சொல்லுகிறீர்கள்! இருபது யாக்கை வரையிலும் வளர்த்து, கடைசி வரையிலும் கண்ணைப் போன்று காத்திருந்த தாயையும் தந்தை யையும் விட்டுவிட்டு, கணவனது காலடி தொடரு வது நியாயந்தான். ஆனால் அங்கே சென்ற வுடனேயே,பிறந்த இடத்தை விடப் புகுந்த அகமே போகம் என்று எப்படி ஏற்பட்டு விட முடியும்?” என்றாள் அங்கவை. “அந்த இடத்திற்குப் போய் விட்டால், நாம் மீண்டும் எங்கேயும் திரும்ப முடியாது”. 

“எந்த இடத்தில் நாம் இறுதிக் காலம் வரையிலும் வாழ்ந்து தீரவேண்டுமோ, அந்த இடத்தை நேசிப்பது ஒன்றுதான், பிறந்த இடத்தை மறப்பதற்கு வழியாகும்” என்றாள் கதலி. 

“அதென்னவோ, இதில் நமக்கு ஒத்தக் கருத்தும் உடன்பாடும் இல்லை. யானும் என் தங்கையும் இருக்கின்ற வரையில், இந்த உலகில் வாழ்கின்ற வரையில், என் தந்தையையே நேசிப்போம். எங்கள் தந்தைக்குப் பிறகுதான் எங்கள் திருமணத்தையே நாங்கள் யோசிப்போம்” என்றாள் அங்கவை. 

“இது வேடிக்கையான நிலை. தாங்கள் தங்கள் தந்தையின் மீது வைத்திருக்கும் பாச உணர்வை நான் மதிக்கிறேன். ஆனால், இது ஒரு பெண்ணுடைய பெண்மைக்கும், பெண் காட்ட வேண்டிய நியாயத்திற்கும் உரியதாகாது” என்றாள் கதலி. 

“எந்தப் பெண்மையும் காதலிலும் குடும்ப வாழ்க்கையிலும் தான் கடைத் தேறுகிறது என்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால் பெற்ற தந்தையையும் பிறந்த வீட்டையும் மறந்து விட்டு, புகுந்த வீட்டிலேயே உறவு கொண்டாடுவது என்பது எனக்குப் புரியவும் இல்லை, பிடிக்கவும் இல்லை. ஒருவேளை எங்கள் தந்தையோடு வளர்ந்த சூழ்நிலை அப்படியிருக்கலாம்” என்றாள் அங்கவை. 

“அந்தப் பறம்பு மலையை விட்டு இறங்கி வேறொரு இல்லத்துக்குள் நுழைவதையே சிந்திக்கக் கூட, முடியாதவர்களாக நாங்கள் இருக்கக் கூடும. ஆனால் உங்களுடைய பண்பாட்டை நான் மதிக்கிறேன். எங்கே நீங்கள் புகுந்து விடுகிறீர்களோ, அந்த இல்லம் உண்மையிலேயே மிகச் சிறப்பான இல்லமாகவே இருக்கும். உங்களுடைய வருகை எந்த இல்லத்திற்குக் கிடைக்கிறதோ அந்த இல்லம் வரம் பெற்ற இல்லமாகவே வாழப்போகிறது. வாழ்க! உங்கள் நல்ல நெய்வு!” என்று அவளை வயதானவளைப் போல் வாழ்த்தினாள் சங்கவை. 

சிரித்துக் கொண்ட கதலி, “ஏதோ ஒரு கருத்தில் இரண்டு பேருக்கும் ஒப்புதல் இருந்தாலும் இல்லா விட்டாலும் பரிமாறிக் கொண்டோம். என்னை நீங்கள் வாழ்த்தினாலும் சரி, உங்களை நான் வாழ்த்தினாலும் சரி அந்த வாழ்த்துப் பலிக்கிறது. நல்ல எண்ணங்கள் நல்ல உள்ளங்கள் பரிமாறப் படும்போது, அந்த அலைகளாலே மனித உயிர்கள் அதிக நாள் வாழ்கின்றன என்று கவிஞர்கள் பாடுகிறார்கள். அந்த முறையிலே உங்கள் வாழ்த்திலே நான் பலன் பெறுவேனானால், அதுவே எனது மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும்” என்றாள் கதலி. 

“மூவரும் ஏதோ அவ்வையார் மூன்று வடிவம் எடுத்துப் பேசுவது போலல்லவா பேசிக்கொண்டிருக்கிறோம். சரி, நாம் விளையாடலாம்” என்றாள் அங்கவை. 

தாயம் விளையாட அவர்கள் தொடங்கினார்கள். வானிலே நிலா வலம் வந்து கொண்டிருந்தது. ஆம், ஒரே இடத்தில் நிற்பது போலவும், உருண்டு உருண்டு வருவது போலவுமே, வானவரையனுக்கு அது தோன்றிற்று. 

அதிகாரம்-4

 அன்று ஆடிப் பதினெட்டு ! 

குடகிலே பெய்யும் மழையின் வெள்ளம், ஆடி பதினெட்டாம் நாளன்றுதான் காவிரியில் பெருகி ஓடும் என்பதனை, பல்லாயிரம் ஆண்டுக் காலமாக, தமிழகம் கண்டு வந்திருக்கிறது! பருவம் தப்பாத அந்தக் காலத்தில், அது முறையாகவும் நடந்து வந்திருக்கிறது. ஆகவே, ஆடிப் பதினெட்டை ஆடிப் பெருக்கு விழாவாகக் கொண்டாடுவது சோழ மண்டலத்தின் வழக்கமாகவும், அந்த விழாவே பெருவிழாவாகவும் இருந்து வந்திருக்கிறது. 

அன்றும், ஆடி பதினெட்டு, தப்பாமல் தவறாமல் பெருவெள்ளமாக உருவெடுத்தது! பொன்னி இரு கரையிலும் அலைமோதிப் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கினாள்! கரை மருங்கின் இரண்டு பகுதியிலும் பெரும் கூட்டம் கூடி அந்தக் காட்சியைக் கண்டு களித்துக் கொண்டிருந்தது. 

ஆடி பதினெட்டிலே, அமைதியான ஒரு பகுதியில் குளிப்பது என்பது, அன்று உற்சாகமான செயலாக இருந்து வந்தது! இளம் மாதருக்கும், இளம் காளையருக்கும் அந்த நாள் ஓர் இன்பத் திருநாளாகும். அவர்கள் அதிகாலையிலேயே எழுந்து பொன்னியிலே விழத் தொடங்கினால், அவர்கள் அன்று மீண்டும் வெளியேறி வரும் பொழுது உச்சி வெயில் வந்திருக்கும். அவ்வளவு நேரம் பொன்னியிலே குளிப்பது ஓர் ஆனந்தம் என்று தான் அன்று இளைஞர்களும், இளம் மாதரும் களித்தார்கள். 

காவிரியின் கரையும் தெரியாமல், அடிதொடும் மணலும் தெரியாமல் வெள்ளம் புரளும் அந்த ஆடிப் பதினெட்டில், சோழ மண்டலம் ஆயிரக்கணக்கான தேங்காய்களையும் வாழைப் பழங்களையும் அந்தக் கரையிலே கொண்டு வந்து குவித்து, எல்லாவற்றையும் பொன்னி நதிக்கு உடைத்து, “எங்கள் மண்டலத்தை வாழவைக்கும் தாயே! உன்னை வணங்குகிறோம்” என்று என்று வணங்குவதும் வழக்கமாகும்! வேறு எந்த விழாவையும் விட அந்த விழாவையே சோழ மன்னர்கள் பெரிதாகக் கொண்டாடி னார்கள். 

அந்த விழாவுக்குப் பாரி வந்திருந்தது இதுவே முதல் தடவை. 

அன்றைய சோழ மக்கள் காவிரியின் வெள்ளத்தையும் கண்டார்கள். வந்திருந்த வள்ளல் பாரியையும் கண்டார்கள். அவரது மக்கள் அங்கவை, சங்கவையையும் கண்டார்கள். 

கரையிலே மன்னவர்களது தேர்கள் வந்து நின்ற போது அந்தத் தேர்களைச் சுற்றி பெருங்கூட்டம் கூடிற்று. ஆடி வெள்ளம் போல் அனைத்தையும் வாரி வாரி வழங்குகின்ற அந்த உள்ளங்கள் சிவந்து இருப்பதனையே அவர்கள் கண்டார்கள்! மன்னவன் பாரியைக் கண்ட அதே கண்ணோடு, மன்னவன் சோழனையும் அவர்கள் கண்டார்கள்! 

பாரியிடம் யார் யார் அன்பு செலுத்துகின்றார்களோ அவர்கள் எல்லாம் தங்கள் அன்புக்குரியவர்கள் என்பது போல அவர்கள் மொய்த்துக் கொண்டார்கள். 

அந்தக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு சேனா வீரர்கள் காவிரியில் குளிப்பதற்கு அங்கவையையும் சங்கவையையும் கூட்டிச் சென்றார்கள். 

தளபதி வானவரையனுக்கு ஒரே உற்சாகம் பிறந்து விட்டது. இப்படிப்பட்ட பெரும் வெள்ளத்தை அவன் மலையிலே கண்டதில்லை அல்லவா! இது வரையிலும் மலையைவிட்டுக் கீழே இறங்க வேண்டிய அவசியம் அவனுக்கு வந்ததும் இல்லை. 

மலையிலே போரும் கிடையாது. மலையை விட்டுக் கீழே வரவேண்டிய அவசியமும் கிடையாது என்பதனால் மலைவாசியாகவே வாழ்ந்து விட்ட வானவரையன் பெருகி ஓடும் நதியினைக் கண்டதும் அதிலே குதித்து ஆடவேண்டும் என்ற ஆசை கொண்டான். 

அந்த நதியிலே குளிக்கும்போது மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று, சோழ மன்னர் எச்சரித்தார். காரணம், வெள்ளம் ஒரே சீராக வராது. திடீர் திடீரென அதிகரிக்கும், திடீரெனக் குறையும். எப்போது அதிகரிக்கும், எப்போது குறையும் என்பது அந்த காவிரி மாதாவுக்கே தெரியும். ஆகவே, “நீங்கள் குளிக்கும்போது எச்சரிக்கையாக இருங்கள்” என்று அவனிடம் கூறி வைத்தார். 

வானவரையனுக்கு இருந்த உற்சாகத்தில் மன்னருடைய எச்சரிக்கை மறந்தே போய்விட்டது. அவன் நதியினுள் இறங்கினான். இக்கரையில் இருந்து அக்கரைக்கே போய்விடுவது போல் நீந்தத் தொடங்கினான். விளையாடத் தொடங்கினான். ஆனால், சோழ மன்னன் எச்சரித்தது போல, மாபெரிய வெள்ளம் ஒன்று வந்து, வானவரையனை அடித்துக் கொண்டு போகத் தொடங்கிற்று. 

“அய்யோ! வானவரையரை வெள்ளம், அடித்துக் கொண்டு போகிறது, அடித்துக் கொண்டுபோகிறது” என்று அங்கவையும் சங்கவையும் கதறினார்கள்! பதறினார்கள்! 

“நான் அப்பொழுதே சொன்னேன், தவறு செய்து விட்டாரே!” என்று வருந்திய சோழ மன்னன் தன் சேனா வீரர்களைப் பின்னாலேயே குதிக்கச் சொன்னான்! அவர்களும் குதித்து, வேண்டும் வரையிலே நீந்திப் பார்த்தார்கள். ஆனால், காவிரியிலே மேலும் மேலும் வெள்ளம் பெருமளவிற்குப் பொங்கி வந்தது! இனி தாங்களும் சிக்கிக் கொள்வோமோ என்று அஞ்சிய நிலையில் பல வீரர்கள் கரையேறி விட்டார்கள். 

வானவரையனை காவிரி இழுத்துக்கொண்டு போகத் தொடங்கிற்று. 

“சோழ மண்டலத்தில், காவிரியை எதிர்த்து நீந்தக் கூடியவர்கள் யாருமே இல்லையா? என்ன வெட்கக்கேடு” என்று ஒரே கேள்வியோடு காவிரியில் குதித்தாள், கதலி ! 

“கதலி” என்று ஓங்கிச் சத்தமிட்டான் சோழ மன்னன்! 

“கதலி” என்று அடுத்து குரல் எழுப்பினான் செங்கணான். 

“அய்யோ! இந்தப் பெண் யாது செய்யக் கூடும். இவள் ஏன் குதிக்கின்றாள். கொஞ்சம் சொல்லுங்கள். அவளை திரும்ப அழையுங்கள்’ என்று குரல் கொடுத்தான், பாரி மன்னன். 

“நீங்கள் கலவரம் கொள்ள வேண்டாம். காவிரியை அடக்கக்கூடிய சக்தி, கதலிக்கு மட்டுமே உண்டு” என்று அங்கிருந்த ஒரு பெண் சொன்னாள். 

“என்னதான் சக்தியிருந்தாலும், இவ்வளவு பெரிய வெள்ளத்தில் எதிர் நீச்சல் போடுவதற்கு அவளுக்குத் திறமை ஏது? ஆடவர்களே அஞ்சி விட்ட ஒரு விஷயத்தில் அவள் இவ்வளவு துணிச்சலாக இறங்கியிருக்க வேண்டாம்” என்றான் சோழ மன்னன். 

கரையிலே தேங்காய் உடைப்போரும், ஆரத்தி எடுப்பவர்களும் என்ன அவலமோ என்று அஞ்சியவாறு, கைகட்டி நின்று கொண்டிருந்தார்கள். செயலற்று கரைகள் நிற்க, நதி முன்னாலே வானவரையனையும், வெகுதூரத்தில் பின்னாலே கதலியையும் இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்கிற்று. 

“உறந்தைக்கு நாம் வந்தது ஒரு உத்தமத் தளபதியை இழக்கவே” என்று வருந்தினான் பாரி மன்னன். 

வானவரையனை இழந்து விட்டதாகவே அங்கவையும் சங்கவையும் கண் கலங்கினார்கள். 

வந்திருக்கும் விருந்தாளியின் தளபதியையும், நீண்ட காலமாக தான் வளர்த்து வரும் மகளையும் ஒரே நேரத்தில் பறிகொடுக்க நேர்ந்ததை எண்ணி காவிரி விட்ட கண்ணீரைவிட அதிகமாக கண்ணீர் விட்டான் சோழ மன்னன். 

ஆனால் அங்கிருந்த ஒரு பெண்ணோ மீண்டும் மீண்டும், முன்னும் பின்னும் நடந்தவாறே கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு, “நீங்கள் அஞ்சுதல் வேண்டாம். அவர்கள் உயிருடன் திரும்பி வருவார்கள். இங்கிருந்து வெகுதூரத்தில் அவர்கள் கரை ஏறி நாளை மாலைக்குள் உங்களை வந்து அடைவார்கள்” என்று சொல்லிக் கொண்டே யிருந்தாள். 

என்ன, அவளது கணிதம்! எதைக் கருதி இப்படிச் சொல்லுகிறாள் என்று, கோபம் வந்து விட்டது சோழ மன்னனுக்கு. 

“இதோ பார், இவ்வளவு கொடுமையான வெள்ளத்தில் அவர்கள் சிக்கிக்கொண்டு போயிருக்கிறார்கள். மீண்டும் கரையேறுவார்கள், கரையேறுவார்கள் என்று, பொய்யான நம்பிக்கையை நீ யாருக்குத் தருகிறாய்? நீ யார்?” என்று கேட்டார், அவர். 

அந்தப் பெண், அமைதியாக, பின்புறம் இருந்த கையை முன்புறம் தூக்கிக் கட்டிக்கொண்டு, விரித்த கூந்தலோடு, “என் பெயர் காளி, நான் இவ்வூரிலேயே பல்லாண்டு காலமாக காலமாக குடியிருந்து வருகிறேன். மன்னவா, காவிரியுடைய சீற்றம் எனக்குத் தெரியும். யாரை அவள் சீறுவாள், யாரிடம் அவள் மாறுவாள். எந்த நிலையில் அவள் தேறுவாள் என்பது அனைத்தையும் நான் அறிவேன்” என்றாள். 

“நல்லது! நீ அறிந்ததை, நீ உன்னுடனேயே வைத்துக் கொள்! அவர்கள் மீண்டும் கரையேறி வருவார்களானால், அப்பொழுது நீ என்னிடம் வா, உன்னை நான் கவனிக்கிறேன்” என்றார் சோழ மன்னர். 

பொழுது போய்க் கொண்டேயிருந்தது. நேரம் ஆக, ஆக அவர்கள் திரும்புவார்கள் என்ற நம்பிக்கையை சோழனும் இழந்தான், பாரியும் இழந்தான். 

காவிரியில் ஆடிப் பெருக்கு காண வந்து இவ்வளவு கவலைக்குரியவர்களாக ஆகிவிட்டோமே என்று சொன்னவாறு, சோழ மன்னன் தேரிலே ஏறினான். 

தன்னுடைய கவலையைக் காட்டாதவாறு, பாரியும் தேரில் ஏறி, “அற்புதமான தளபதி, அருமையான தளபதி! இப்படி ஒருவனை நான் இழந்துவிட்டதற்காக வருந்துகிறேன். ஆனாலும், காவிரி அன்னை அவனைத் திருப்பிக் கொடுப்பாள் என்கிற நம்பிக்கை இருக்கிறது,” என்று சொல்லிக்கொண்டே தேரில் ஏறினான். 

தேர் புறப்பட்டபோது, அங்கவையும், சங்கவையும் தாங்கள் ஈர உடையில் இருப்பதைக்கூட மறந்து விட்டார்கள். 

மண்டபத்திலே அவர்களைக் கொண்டு வந்து இறக்கிவிட்ட சோழ மன்னன், “நாம் வணங்குகின்ற வானமாதேவி என்றைக்கும் நம்மைக் கைவிட மாட்டாள்,” என்று கூறிவிட்டுப் புறப்பட்டான். 

ஆடை மாற்றிக் கொண்டு, துக்கமே வடிவாக அங்கிருந்த கல்லில் அமர்ந்து விட்டார்கள் அங்கவையும், சங்கவையும். 

காவிரி இழுத்துக் கொண்டு போன வானவரையனை ஒரு இடத்தில் மணல் மேட்டில், அப்படியே நிறுத்தி வைத்தது. பின்னாலேயே இழுத்துக் கொண்டு வந்த கதலியையும், அதே மணல் மேட்டில் இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தியது. 

மயக்கத்தில் கிடந்த வானவரையனை அப்படியே கைத்தாங்கலாக எடுத்தபடி, அங்கிருந்தே கரையேறத் தொடங்கினாள் கதலி 

ஏறக்குறைய, ஒன்றரைக் காவக தூரம் அவர்கள் இழுத்து வரப்பட்டிருந்தார்கள். (15 மைல்). 

எங்கிருக்கிறோம், தாங்கள் எங்கு கொண்டு வரப்பட்டிருக்கிறோம் என்பதை அறியாதவாறு அந்தக் கரையிலே, அந்தக் காட்டிலே சிறிது நேரம் அவர்கள் இருவரும் மயக்கமுற்றுக் கிடந்தார்கள். 

கதலியைவிட அதிகமாக மயங்கி இருந்தவன் வானவரையன். 

வானவரையனுக்கு இந்த அனுபவம் புதியது. கதலிக்கோ இது மிகவும் பழையது. ஆண்டுதோறும் இந்த விழாவில் அவள் கலந்து கொண்டிருக்கிறாள். காவிரியின் சீற்றத்தையும் கவனித்து இருக்கிறாள். காவிரியிலே குளித்து பல நேரம் இடம் தாண்டி கரையேறியிருக்கிறாள். ஆகவே, அவள் மெதுவாக எந்த உடை கொண்டு அவனைத் துடைப்பது என்று இல்லாமல், தன்னுடைய கரங்களாலே அவனுடைய முகத்தை துடைத்துவிட்டு, அவனை அப்படியே தன் மடியில் குப்புறப் போட்டு, தண்ணீரை அவன் குடித்திருந்தால், வெளியிலே அவன் கொட்டிவிடட்டும் என்பதற்காக அவன் தலையிலே சிறிது நேரம் தட்டிக் கொண்டேயிருந்தாள். 

அவன் குடித்திருந்த தண்ணீரை வெளியே கொட்டினான். பிறகு அந்த மடியிலேயே அவனை சாய்த்துக் கொண்டு, “இப்பொழுது எப்படி இருக்கிறது ?” என்று கேட்டாள் கதலி. 

“மோசமில்லை! நான் நன்றாகவே இருக்கிறேன்,” என்று சொன்னபடி மீண்டும் கண்களை மூடினான் வானவரையன். 

தூரத்தில் சில இளம் பெண்கள், மார்புக் கச்சை யணிந்து, பாவாடை கட்டி, கையிலே ஒரு சிறிய கூடையை ஏந்தியவாறு சென்று கொண்டிருந் தார்கள். 

அவர்கள் என்ன கொண்டு போகிறார்கள் என்பது கதலிக்கு கதலிக்கு மட்டுமே தெரியும். அந்த நேரத்தில் அவர்கள் கொண்டு போவது, முளைத்த பனைமரத்தின் அடிப்பாகம். முளைத்த மூன்று மாத காலத்திற்குள்ளாக ஒரு பனைமரத்தின் அடிப்பாகத்தைத் தோண்டி எடுத்தால், சுவையுள்ள கிழங்கு அதிலே கிடைக்கும். அந்தக் கிழங்கினை சாப்பிடுவது, அந்த நாளிலே ஒரு பழக்கமாக இருந்தது. சுவையான அந்தக் கிழங்கு உடலுக்கு. சக்தி தரக்கூடியதுமாகும். அவர்களைக் கைகாட்டி. அழைத்தாள் கதலி. 

யாரோ இருவர் அங்கு கிடப்பதைப் பார்த்து, “அதோ பாரடி ? யாரோ இருவர் கரையிலே கிடக்கின்றார்கள். காவிரி இழுத்து வந்தாள் போலிருக்கிறது. வாருங்கள் போவோம்” என்று ஒருத்தி அழைத்தாள் மற்றவர்கள் பின் தொடர்ந்தார்கள், ஒரு மானைத் தொடர்ந்து பல மான்கள் ஓடி வருவதைப் போல். 

அவர்களைப் பார்த்து அப்படியே அசைவற்று உட்கார்ந்திருந்தாள் கதலி. 

அருகிலே வந்த அந்தப் பெண்கள், “என்னம்மா வேண்டும்? நீங்கள் யார் ?” என்று கேட்டார்கள். 

“நாங்கள் உறந்தை ! காவிரி எங்களை இழுத்துக் கொண்டு வந்துவிட்டாள். இப்பொழுதுதான் கரையேறினோம். உங்கள் கையிலே இருப்பதை எங்களுக்கு கொடுத்தால் எங்களுடைய பசியும் தீரும், உடம்புக்கு சக்தியும் வரும்” என்றாள் அவள். 

“நல்லது! இவைதானே வேண்டும் உங்களுக்கு, இதோ!” தங்களது கூடைகளைக் கீழே இறக்கி மண்டியிட்டபடி அவர்கள் முன்னால் அமர்ந்தார்கள் அந்த இளம் பெண்கள். 

அந்தக் கிழங்கை எடுத்து மேல்பகுதியை அப்படியே உரித்து உள்ளிருந்த சுவையான கிழங்கை ஒவ்வொன்றாகக் கிள்ளியெடுத்து, அவன் வாயிலே ஊட்டினாள் கதலி. 

எவ்வளவு பசியோ வானவரையனுக்கு! கொடுப்பது யார், வாங்கியது எங்கே? என்ற விவரங்கள் இன்றி சாப்பிட்டுக் கொண்டேயிருந்தான். 

அவன் சாப்பிடச் சாப்பிட அவள் ஊட்டி விட்டாள். சிறிது நேரத்தில் அந்தச் சாப்பாட்டினுடைய சக்தியாலோ, இல்லை அவள் கைபட்ட மந்திரத்தாலோ அவன் எழுந்து அமர்ந்தான். 

“கிழங்கு சுவையாக இருக்கிறதா?” என்று கேட்டாள் கதலி. 

“நான் உயிரோடு இருக்கிறேனே அது ஒன்றே போதாதா? இனி எதை நீ கொடுத்தாலும் அது சுவையாகவே இருக்கும். என்னைக் கரையேற்றுவித்தது ஒரு பெண் என்பதை எண்ணும்போது எனக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது” என்றான் வானவரையன் கிழங்கைக் கடித்தபடியே! 

“அதைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்? சமயங்களில் பெண்கள் ஆடவர்களைவிட வலுவுள்ளவர்களாக இருக்கிறார்கள். அதுதான் சிருஷ்டியினுடைய இரகசியம்!” என்றாள் அவள். 

“இப்படிப்பட்ட ஒரு மடியில் படுத்துக் கிடக்க முடியும் என்றால் இன்னும் எத்தனை தடவை இந்த நதியில் நான் இழுத்துக் கொண்டு வரப்பட்டாலும் கவலைப்பட மாட்டேன்” என்றான் அவன். 

அவள் சிரித்தபடி தலைகுனிந்தாள். தன்னைப் புகழ்வதனை குலமங்கையரும் பிற மங்கையரும் பெரிதும் விரும்புவார்கள். ஆனால், விரும்பாததைப் போலவே காட்டிக் கொள்வது குலமங்கையருடைய பண்பாகும். 

அதை விரும்பாதவள் போல அவள் காட்டிக் கொண்டாள் என்றாலும், இன்னும் கொஞ்சம் பேச மாட்டானா என்பது போல ஆதங்கத்தோடு தலையைத் தூக்கிப் பார்த்தாள். 

“நீங்கள் தான் என்னைத் தொடர்ந்து வருகின்றீர்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நதியிலே அடித்துக் கொண்டு போகும் போது பின்னாலேயே ஒரு உருவம் கொண்டு வரப்படுவதையும் நான் பார்த்தேன். அது, யாரோ? எவரோ எனக்காக அவர்கள் உயிர் நீக்கப் போகிறார்களே என்று கலங்கினேன். நான் இறப்பது உறுதி என்று முடிவு கட்டியிருந்தேன். ஆனால், இப்படி ஒரு கரையில் என்னை நீங்கள் கொண்டு வந்து சேர்த்து உயிர்ப்பிப்பீர்கள் என்பதனை நான் அறியமாட்டேன். இதற்கு எந்தக் காலத்திலும் நான் கைம்மாறு உள்ளவனாக இருப்பேன்” என்றான் வானவரையன். 

“என்ன கைம்மாறு தருவீர்கள்” என்று குனிந்தபடியே கேட்டாள் அவள். 

“நீங்கள் எதைக் கேட்கிறீர்களோ, அதை!”

“முதலில் நீங்கள் என்கிற மரியாதை வார்த்தையைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, நீ என்றே அழையுங்கள்” என்றாள், கதலி. 

“நாங்கள் யாரையுமே அப்படித்தான் மரியாதை யோடு அழைப்பது வழக்கம். எங்களது மலையுடைய பண்பாடு அது” என்றான் அவன். 

“உலகத்தில் அன்புக்குரியவர்கள் மரியாதைக்குரியவர்கள் என்று இருவர் உண்டு. அன்புக்குடையவர்களே அதிகமான நெருக்கம் உடையவர்கள். மரியாதைக்குரியவர்கள் எப்போதும் தூரத்திலேயே வைக்கப்படுகின்றார்கள்” என்றாள் கதலி. 

“நான் உங்களை தூரத்திலேயே வைத்திருக்க விரும்பவில்லை. நீங்கள் அருகிலேயே இருக்க  வேண்டும். எங்கள் மலை விரிந்த மலை. அது உங்களுக்கும் இடம் கொடுக்கும்” என்றான் அவன். 

அவள் சிரித்தாள். அதன் உட்பொருளை அவனால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. அந்தச் சிரிப்புக்கு உள்ளர்த்தம் என்ன என்பதனை அவளும்கூட அப்போது உணரவில்லை. மெதுவாக இருவரும் எழுந்தார்கள். ஒன்றரைக் காவத தூரம் நடக்க வேண்டும் என்பதனை அப்போது அவர்கள் அறிய மாட்டார்கள். ஆனால், அவளும் அவனுமாக இருந்த காரணத்தினால் இருவரும் நடக்க நடக்க தூரம் குறைவாகவே தோன்றிற்று. 

அந்திபடும் நேரத்திலே அவர்கள் உறந்தைக் கரையில் வந்து நின்றார்கள். உறந்தைக்கு வரும் பொழுது அவர்கள் கால்கள் இரண்டும் பெருத்த வலி யெடுத்தன. ஆனால், அந்த வலி தெரியாதவாறு அவர்களுக்குள்ளே ஒரு உடன்பாடும் உற்சாகமான பேச்சும் இருந்ததால் வழிப் பயணம் அலுக்கவில்லை. 

உறந்தைக் கரைக்கு வந்தபோது அவர்கள், ஏராளமான மலர்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதைக் கண்டார்கள். 

ஏராளமான மலர்களை பொன்னி அடித்தபடி வந்துகொண்டிருந்தாள். பல இடங்களிலே தேங்காய் உடைக்கப்பட்டு உடைந்த சில துண்டுகள் ஆங்காங்கே கிடந்தன. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே, “ஏதோ ஒரு துன்பமயமான நிகழ்ச்சி என்று கருதி இன்றைய விழாவை முழுக்க நிறைவேற்றாமல் மன்னர் பிரிந்திருக்கிறார் போலும். நாம் அங்கே சென்று, நம்முடைய வருகையை உடனடியாக அறிவிக்க வேண்டும்” என்றாள் கதலி.

“வா செல்வோம்!” என்று இருவரும் மண்டபத்துக்குள்ளே சென்றார்கள். 

மண்டபத்துக்குள்ளே இருவரும் நுழையும்போது வைத்த உணவு வைத்தபடியே இருந்தது. அதை உண்ணாமலும் எந்தவிதமான அமைதி கொள்ளாமலும் அங்கே உலாவியபடி இருந்தார்கள் அங்கவையும் சங்கவையும். 

கருங்கல் பள்ளியிலே சாய்ந்தவாறு இருந்தார் பாரி மன்னர். 

“ஐயா!” என்ற குரல் கேட்டபோது அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள். கதலியும் வானவரையனும் அங்கே நிற்பதைப் பார்த்ததும் அவர்களுக்கு மீண்டும் உயிர் வந்தது. 

‘பொன்னி பிறர் உயிரை வாங்கமாட்டாள். காவிரி மாதாவுக்கு அந்தச் சீற்றம் இல்லை. யார் மீதும் அவளுக்குக் கோபம் இல்லை’ என்றெல்லாம் அந்த நேரத்தில் ஒரு பெண் சொன்னாளே, உண்மை தான் என்பது போல அவர்களுக்குத் தோன்றிற்று. அங்கவையும் சங்கவையும் அவர்கள் அருகில் ஓடி வந்தார்கள். 

பிறகென்ன உயிரோடு வந்தாகிவிட்டது. எப்படிப் போனோம், எப்படிப் பிழைத்தோம் என்ற கதைதானே! 

வானவரையன் தனது ஆடையை ஆடையை மாற்றிக் கொண்டான். கதலியும் தனது ஆடையை மாற்றிக் கொண்டாள். கதை சொல்ல ஆரம்பித்தாள். கதை சொல்ல ஆரம்பிக்கும்போது நடந்த கதையை, அப்படியே சொல்ல வேண்டாமா? 

அந்தக் கதைக்குப் பின்னாலேதான் ஒரு சிறிய கதை ஒன்று நடந்திருக்கிறதே, அந்தக் கதையையும் மெதுவாக சேர்த்துக் குழைத்து எடுத்தவாறு அவள், நளினமாக கதை சொல்ல ஆரம்பித்தாள். “அவர் முன்னாலே இழுத்துக் கொண்டு போகப் பட்டாரா? பின்னாலேயே நான் வந்தேன்” என்றாள் அவள். 

“நான் வந்தேன் என்று அவள் சொன்னவுடனேயே, ‘என்னுடைய சக்திதான் அவளை ஈர்த்துக் கொண்டு வந்தது’ என்கிற மாதிரி அவளைப் பார்த்தான், வானவரையன். 

‘அவருடைய சக்தியாலேதான் நான் ஈர்க்கப் பட்டேன்!’ என்பதுபோல் அவனைப் பார்த்தபடி கதை சொல்லிக் கொண்டிருந்தாள் கதலி. 

அந்தக் கதை வெறும் காவிரியாறு இழுத்துக் கொண்டு போன கதையாக இல்லை. ஒரு காதல் இலக்கியமாகவும் இருந்தது. 

ஆனால், அங்கவைக்கும் சங்கவைக்கும் அது புரியவில்லை! அவர்களுக்கு அந்த அனுபவமும் இல்லை. அந்த தொடக்கமும் இல்லை. 

பள்ளியிலே சாய்ந்திருந்த பாரிக்கு ஏதோ புரிந்தது. நம்முடைய தளபதி அந்தப் பெண்ணிடம் உள்ளார்ந்த அன்பு வைத்திருக்கிறார் என்பது மட்டும் அவருக்குப் புரிந்தது. 

கதையை சிறிதாக முடிக்கவும் அவள் விரும்பவில்லை. சொல்லச் சொல்ல வானத்தில் பழைய படியும் நிலா வந்து சேர்ந்தது. 

முந்திய நாள் வந்த அதே நிலா! அதே நிலாவினுடைய ஊர்வலம்! அந்த ஊர்வலத்தில் இந்தக் கதை முடியும்போது, நள்ளிரவு ஆகிவிட்டது. 

நள்ளிரவுக்குப் பின்னாலே மீண்டும் அவர்கள் தாயம் விளையாட ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு எதிரிலேயே உட்கார்ந்து, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் வானவரையன். 

வெள்ளி முளைக்கும் போதுதான் அவர்கள் தூங்கச் சென்றார்கள். உறங்கச் சென்றார்களே தவிர, பள்ளி கொள்ளவில்லை. பள்ளியில் படுத்தபடி அப்படியும் இப்படியும் ஆக திரும்பத் திரும்ப அலை மோதினாள் கதலி. 

அப்படியேதான், வேறோர் பக்கத்தில் தானும் அலைமோதிக் கொண்டிருந்தான் தளபதி வானவரையன். 

ஒரே நாள் சந்திப்பு! அதிலும் நெருக்கமான பிடித்தமான சந்திப்பு. இந்த அழுத்தமான சந்திப்புக்குப் பிறகு ஒரு மனிதனுடைய உள்ளமும், ஓர் இளம் பெண்ணினுடைய உள்ளமும், முழு ஐக்கியப்பட்டு, காதல் வயப்பட்டு இரவு நேரத்தில் தவியாய்த் தவிப்பது, ஒன்றும் புதியதல்ல. ஆனால், கதலி, ஒரு புதிய அனுபவத்தில் மிதந்தாள். 

இதுவரையிலே அவள், வாழ்க்கை என்பது தன்னுடைய விருப்பத்தை சுற்றி நடப்பது அல்ல என்று தான் கருதியிருந்தாள். ஆனால், ‘தன்னுடைய கண்களும் தனக்கு பகையாகலாம்’ என்பதை இப்போது உணர்ந்து கொண்டாள். 

எழுந்து அவளைப் பார்க்க வேண்டும் போல் தோன்றிற்று வானவரையனுக்கு. எழுந்து முன்னும் பின்னும் உலாவினான். அவளும் படுத்தபடியே உலாவுதல் போல் அப்படியும் இப்படியும் திரும்பிக் கொண்டேயிருந்தாள். 

இவர்களுடைய இந்த ஊடாட்டத்தில் மெது மெதுவாக வெள்ளி முளைத்தது, பளபளவென்று பொழுது விடிந்தது. விடிந்துவிட்ட பொழுதைப் பார்த்து ‘வேதனைமிக்க பொழுதே, ஏன் விடிந்தாய்?’ என்று கேட்பது போலவே, இருவரும் எழுந்தார்கள். 

இருவரும் எழுந்து முதன்முதலாக வெளியிலே வந்தபோது, இருவரும் ஒருவருக்கொருவர் நேர்பட்டார்கள்! மீண்டும் சந்திப்பு! அது காலை நேரம் ஆனால் என்ன, கடும் பகலானால் என்ன, இரவானால் என்ன? அந்தச் சந்திப்பிலே பழையபடியும் உடம்பிலே ஒரு சூடு; ஓர் உற்சாகம், ஒரு ஆசை, ஒரு தாகம், தணியாத அந்த நிலையில் இருவரும் பிரிய முடியாமல் பிரிந்தார்கள். 

குளிக்கும்போது, அவள் நெருப்பிலே குளித்தாள். வெளியிலே உலவும் போது அவன் நெருப்பிலே உலாவினான். 

– தொடரும்…

– பாரிமலைக் கொடி (நாவல்), முதற் பதிப்பு: 1993, வானதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *