கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: December 31, 2023
பார்வையிட்டோர்: 2,623 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 21-24 | அத்தியாயம் 25-27

25.யுவ மகாராஜா 

இரவின் ஆரம்பத்தில், சந்திர ஒளி லேசாகப் பரவியிருந்த மந்தமான வெளிச்சத்தில், பெரும் பந்தங்களை இடது கையில் பற்றியும், வாளை வலது கையில் உயர ஏந்தியும், பயங்கரமான, பலவிதக் கூச்சல்களைப் போட்டுக்கொண்டும் சூறாவளி போல் வந்து கொண்டிருந்த களப்பிரர் கூட்டத்தைக் கண்டதும், அதை எதிர்க்க காஞ்சியின் காலாட்படையையும் புரவிப் படையையும் சுவர் போல இணைந்து நிற்க வைத்தான் குமாரன். 

முதலில் காலாட்படைத் தலைவனை அழைத்து, “இது நகரமக்கள் சமீபத்தில் ஏற்படுத்திய படை. அதிக போர் அனுபவமில்லாதது. எதிரி வந்ததும் இவர்கள் தங்கள் வேல்களை எதிரிப்படையின் புரவியின் மீதும், புரவி வீரர்கள் மீதும் குறிபார்த்து ஒரேசமயத்தில் எறிந்துவிட்டுப் பின்வாங்கி விடட்டும். அவர்கள் காட்டுப் பகுதியை நோக்கிப் பின்வாங்கும் சமயத்தில் புரவிப்படை யுடன் முதலில் நான் மோதுவேன். பிறகு அதற்குள் ஊடுருவி முன்னேறுவேன். அதே சமயத்தில் பின்வாங்கிய உனது காலாட்படை முன்னேறி, பக்கவாட்டில் எதிரிகள் சிதறி ஓடுவதைத் தடுக்கட்டும். மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று எச்சரித்து அனுப்பினான். 

அடுத்து காஞ்சிக் காவலர் தலைவனை அழைத்து, “நான் எதிரியை ஊடுருவியதும் உனது புரவிப்படை சுற்றிச் சென்று எதிரிக்குப் பின்னால் வரட்டும். நான் முன்புறத்திலும் நீ பின்புறத்திலும் ஊடுருவி எதிரிப்படை இரண்டாகப் பிளக்கப்படும். அதற்குள் காலாட்படையும் எதிரியைச் சுற்றிக் கொண்டால் அப்படியே எதிரி நொறுக்கப்படுவான்” என்று கூறினான். “காஞ்சிக்குத் தென்புறத்தில் படைப்பிரிவு நிற்கிறதா?” என்று கேட்டு அங்கு படை நிறுத்தப்பட்டிருப்பதை அறிந்ததும் திருப்தியுடன் எதிரியின் வரவை நோக்கி நின்றான் குமாரன் தனது புரவியில். 

களப்பிரர் சூறாவளி போல வந்தவர்கள், பத்தடிதூரத்துக்கு வந்ததும் எதிரிலே சுவர் போல் நின்ற காஞ்சி படையுடன் மோத வேண்டியதாயிற்று. அவர்கள் வாளைச் சுழற்றுவதற்கு முன்பாகவே அவர்களை நோக்கி காலாட் படையின் வேல்கள் பறந்தன. அவற்றால் தாக்குண்ட புரவிகள் அலறின. வேல்களுக்கு வீரர்கள் சிலரும் இலக்காகிப் புரவிகளிலிருந்து சரிந்தனர். இத்தகைய போர் முறையில் களப்பிரர் வேகம் சிறிது மட்டுப்பட்டாலும், மறுபடியும் முன்னைவிட அதிக உக்கிரத்துடன் போரில் இறங்கினார்கள். அப்படிப் போரிட்டு வந்த களப்பிரர் படைக்குள்ளே குமாரன் புரவிப் படை புகுந்தது. எதிரில் வந்தவர்களை நாலா பக்கமும் வெட்டிக் கொண்டே ருத்திரன் போல் முன்னேறித் தனது புரவி வீரர்களுக்குப் பாதை செய்து கொடுத்த குமாரன் தன்னைத் தொடரும்படி சைகை செய்ய, அவன் வீரர்கள் எதிரி வரிசைகளை நடுமையத்தில், தாக்கிப் பிளந்தனர். 

அப்படி குமாரன், படையைப் பிளந்துவிட்டதைக் கண்ட களப்பிரர் தாங்களே பிரிந்து வழிவிட்டு குமாரன் பாதி முன்னேறியதும் அவனையும் அவன் படைப்பிரிவையும் இரண்டு பிரிவாக நின்று இருபுறத்திலும் தாக்கினர். அதே சமயத்தில் திட்டப்படி காலாட்படை பிளவுபட்ட எதிரிகளின் படையைச் சூழ முற்பட்டது. வேல்கள் சரமாரியாகப் பறந்து வந்தன. களப்பிரர்களைத் தவிர வேறு யாராவது எதிரியாக இருந்திருக்கும் பட்சத்தில் கலகலத்து அந்தப் படை ஓடியிருக்கும். ஆனால், களப்பிரர் இத்தனைக்கும் சளைக்காது வெறிக் கூச்சலைப் போட்டுக் கொண்டும், கையிலிருந்த பந்தங்களை எதிரிகள் மீது வீசியும் பயங்கரமாகப் போரிட்டதால் அரை ஜாம காலத்துக்கு வெற்றி யார் பக்கம் என்று தெரியவில்லை. இரு பக்கத்திலும் நாசமும், மும்முரமான போரும் நடந்தது. 

களப்பிரரைப் பின்னாலிருந்து ஊடுருவ முயன்ற காஞ்சியின் காவலர் தலைவன் பெரும் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டி யிருந்தது. அவன் பின்னால் தாக்கியதும் பிளவுண்ட பாதிப்படை அவனைத் திரும்பிப் போரிடவே காஞ்சியின் காவலர் தலைவனுக்கு ஊடுருவுவது சற்று சிரமமாகவே இருந்தது. அப்படி ஜெய அபய ஜெயம் சந்தேகமாயிருந்த சமயத்தில், “பல்லவமன்னர். வாழ்க!’ என்று வெறிக் கூச்சலிட்டான் குமாரன். சட்டென்று எரிவாளியொன்றையும் ஆகாயத்தில் எய்ய உத்தரவிட்டுப் போருக்குள் மீண்டும் புகுந்தான். மெல்ல மெல்ல களப்பிரர் படை லேசாகத் தடுமாறியது. பிறகு பின்வாங்க முயன்றது. பின்வாங்கும் முயற்சியைக் காஞ்சியின் காவலர் தலைவன் தடுத்து விட்டான். 

முன்புறம் குமாரனாலும் பின்புறத்தில் காஞ்சிக் காவலர் தலைவனாலும், பக்கவாட்டுகளில் தரைப்படைகளாலும் தாக்கப்பட்டும், நாடோடிகளும் அசுரத் தன்மை வாய்ந்த வீரர்களுமான களப்பிரர் லட்சியமின்றிப் போரிட்டனர். பத்து பேர் மாண்டு விழுந்த இடத்தை இருபது பேர் நிரப்பிக் கொண்டனர். ரணகளம் பயங்கர மாயிருந்தது. வேல்களால் தாக்கப்பட்ட புரவிகள் அலறின. மாண்டு விழுந்து ஆகாயத்தை வெறித்து நோக்கிக் கொண்டிருந்த சடலங்கள் மீது புரவிகள் துவைத்து ஓடிக் கொண்டிருந்தன. இந்தக் குழப்பத்தில் அவ்வப்பொழுது தனது படைகளை அணிவகுத்து எதிரிகளைத் தாக்கிக் கொண்டிருந்த குமாரன் காதில் பெரும் ஓசையொன்று கேட்கவே அவன் திருப்திக்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான், அடுத்த நிமிடங்களுக்கெல்லாம் தொலைவில் பெரும் படையொன்று வருவதற்கான தூள் பறந்தது. 

மிக வேகமாக வந்த அந்தப் படையை நோக்கிய களப்பிரர் பின்வாங்க முயன்றும் முடியாமல் திணறிய சமயத்தில் அந்தப் புதிய புரவிப்படை வடக்கிலிருந்து குமாரன் படையை நோக்கி வந்தது. அதன் முன்னிலையில் வந்த புரவி வீரனைக் கண்டதும் காஞ்சியின் காவலர் தலைவன் திகைத்தான். எற்கெனவே இறந்து விட்டதாக எல்லோரும் நம்பிக்கொண்டிருந்த பெரியமறவன் பெரும் வேகத்துடன் வந்ததும் களப்பிரர் எதிர்ப்பை மும்முரமாகவே நடத்தினாலும் களப்பிரர் தலைவன் சிறைப்பட்டதும் அவர்கள் போரை நிறுத்தி விட்டார்கள். 

களப்பிரர் தலைவன் மார்பில் பெரும் காயமிருந்தும் அவன் முகத்தில் சிறிதும் வருத்தமோ, பிராண பயமோ இல்லை. பிரமிப்பே இருந்தது. அவனைத் தூக்கி வரச்சொல்லி இரு வீரர்களுக்கு உத்தரவிட்ட குமாரன் போர் முடிந்து விட்டதற்கான சங்கை எடுத்துப் பலமாக ஊத உத்தரவிட்டான். எதிரிகளில் காயமடைந்தோருக்கு சிகிச்சை செய்யவும், மற்றவர்களைச் சிறை செய்து காஞ்சி சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லவும், மாண்டவர் களை புதைக்கவும் உத்தரவிட்ட குமாரன். தான் கொண்டு வந்து காட்டில் ஒதுக்குப்புறமாக வைத்திருந்த நான்கு ரதங்களில் ஒன்றை எடுத்துக்கொண்டு குடிசை மேட்டை நோக்கிச் சென்றான். குடிசை வாயிலில் தாமரைச்செல்வி அவனுக்காகக் காத்திருந்தாள். 

அப்பொழுது களப்பிரர் தலைவனைத் தூக்கி வந்த இரு வீரர்களை நோக்கி, “தலைவனை உள்ளே படுக்க வையுங்கள். மருத்துவரை அழைத்து வாருங்கள்” என்றான். உள்ளே சிறு கட்டிலொன்றில் படுத்திருந்த களப்பிரர் தலைவன், “இதற்கு என்ன அர்த்தம்?” என்று வினவினான். 

“அர்த்தமா? போருக்கு வந்தீர்கள். சந்தித்தோம். இதில் சந்தேகத்துக்கு என்ன இடமிருக்கிறது?” என்று குமாரன் கேட்டான். 

“மருத்துவர் வரட்டும். பிறகு பேசுவோம்” என்று மேலும் சொன்ன குமாரன், மருத்துவர் வந்ததும் அவன் மார்புக்காயத்தைப் பார்க்கச் சொன்னான். காயம் மேல் காயம் தானென்றும் பயமேதுமில்லையென்றும் கூறி மருத்துவர் மருந்து வைத்துக் கட்டினார். 

மருத்துவத்தால் சிறிது சுரணை வந்ததும் களப்பிரர் தலைவன் கேட்டான்: “யாரும் போரிடமாட்டார்கள். அப்படியே போர் இருந்தாலும் பெயருக்குத்தான் இருக்கும் என்று எழுதிவிட்டு வலுவான சண்டையை விளைவிப்பது எப்படி நியாயம்?” என்று. 

“அந்த ஓலை இருக்கிறதா?” என்று குமாரன் கேட்டான். 

இருக்கிறது. இதோ” என்று காட்டினான் களப்பிரர் தலைவன். அதை வாங்கி தாமரைச்செல்வியிடம் கொடுத்த குமாரன், ‘இவரை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்” என்று கூறிவிட்டுப் புரவி ஏறி வேகமாக காஞ்சி நகரை நோக்கிச் சென்றான். அங்கு நீதிபதி வீட்டுக்குச் சென்று “நீதிபதியைப் பார்க்க வேண்டும்” என்று கேட்டான். 

“நீதிபதி இல்லை” என்று பதில் வந்தது. 

“எங்கே?” என்று பதில் சொன்ன பணிமகளைக் கேட்டான் குமாரன், 

“உங்களுக்கு முன்பு இங்கே வந்த பெரிய மறவரும் இதையே கேட்டார். இல்லையென்று சொன்னதும் அவர் புரவியில் பறந்தார் வெறிபிடித்தவரைப் போல” என்று கூறினாள் அந்தப் பணிமகள். 

அதைக்கேட்டுக் கொண்டு வெளியே வந்த குமாரன் குடிசை மேட்டுக்கு வந்து சேர்ந்தான். அங்கு தனக்காகக் காத்திருந்த காவலர் தலைவனிடம், “இங்கு நமது வீரர்கள் சிலர் இருக்கட்டும்” என்று கூறினான். “தாமரைச்செல்வி! நீ களப்பிரர் தலைவனைப் பார்த்துக் கொள் நான் திரும்பும் வரை அவனிடம் யாரும் பேச வேண்டாம்” என்று உத்தரவிட்டு வெளியே சென்று தென்புலம் நோக்கிப் புரவியைப் பறக்க விட்டான். 

அன்றைய இரவில் சுரணை பூரணமாக வந்து விழிகளை அகல விழித்த களப்பிரர் தலைவன், பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரைப் பார்த்து, “நீதான் என்னை காஞ்சியைத் தாக்கும்படி கூறினாய். பிறகு ஏன் உன் படைகளை என்னை நோக்கிப் போரிட விட்டாய்?” என்று வினவினான். 

“உன்னை வரவழைத்தவன் நானல்ல,” என்றார். அவன் பஞ்சணைப் பக்கத்தில் அமர்ந்திருந்தவர். 

”பொய் பொய். நீதான். உன் முகம் எனக்கு இன்னும் மறக்கவில்லை” என்றான் களப்பிரர் தலைவன். 

“நீ என் ஒன்றுவிட்ட தம்பியைப் பார்த்திருக்க வேண்டும். அவனும் கிட்டதட்ட என் மாதிரி இருப்பான்” என்றார் பக்கத்தில் அமர்ந்திருந்தவர். 

மேலும் கேட்டான் களப்பிரர் தலைவன். “இன்று என்னை எதிர்த்துப் படைகளை நடத்தியவனுக்கு உன்சாயல் இருக்கிறது. அவன் யார்?” என்று. 

“என் மகன். இந்த காஞ்சியின் மன்னனாகப் போகிறவன்” என்று சொற்களை மெதுவாக உதிர்த்தார் பக்கத்திலிருந்தவர். 

“அவன்…” களப்பிரர் தலைவன் இழுத்தான் பிரமிப்பின் விளைவாக. 

“சிவஸ்கந்த வர்மன். பப்பதேவர் குமாரன். காஞ்சி மண்டலத்தின் யுவமகாராஜா” என்று சொல்லிக் கொண்டே பல்லவ புரியிலிருந்து வந்த அமைச்சர் உள்ளே நுழைந்தார். “மன்னவா!” என்று மன்னருக்குத் தலைவணங்கினார். பிறகு மன்னரைக் கேட்டார், “யுவமகாராஜா எங்கே?” என்று. 

“குற்றவாளியை அழைத்துவரப் போயிருக்கிறான்” என்றார் பல்லவ மன்னர் பப்பதேவர். 

இந்த உரையாடலைக் கேட்ட தாமரைச்செல்வி திகைத்து நின்றாள். அவள் திகைப்பைப் பார்த்த பப்பதேவர், “காஞ்சியின் வருங்கால ராணி கொஞ்சம் தைரியத்துடன் இருப்பது நல்லது” என்று சொல்லிப் புன் முறுவல் செய்தார். 

26.குலத்தைக் கெடுக்க ஒரு… 

நீதிபதி நிருபவர்மர் அவர் மாளிகையிலிருந்து மறைந்து விட்டதாகக் கேள்விப்பட்டதும், குடிசை மேட்டுக்கு வந்து சில வீரர்களைக் காவலுக்கு நிறுத்திவிட்டு களப்பிரர் தலைவனைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி எச்சரித்துவிட்டு மீண்டும் புரவியேறி குமாரன் தென்புறம் நோக்கிப் பறந்தான். பிறகு கிழக்கே கடல் மல்லையை நோக்கித் திரும்பி பழைய மலைப்பாறையும் குகையுமிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்து புரவியிலிருந்து குதித்து நாற்புறமும் நோக்கினான். எங்கும் யாரையும் காணோம் பெரிய மறவன் புரவியோ, நிருபவர்மர் புரவியோ ஏதுமே காணாததால் தான் நிருபவர்மரைப் பற்றிப் போட்ட கணக்கு தப்பாயிருக்குமோ என சந்தேகித்தான் குமாரன். அத்தகைய தவறுக்குக் காரணமில்லை யாகையால் தனது புரவியை ஒரு மரத்தில் பிணைத்து விட்டு அந்தப் பெரிய பாறையைச் சுற்றிப் பார்த்தான். இரண்டு பாறைகளின் மறைவில் இரண்டு புரவிகள் நின்றிருந்ததைப் பார்த்து குமாரன் எனும் சிவஸ்கந்தவர்மன் ஒரு நிச்சயத்துக்கு வந்தவனாய்த் தலையை அசைத்துக்கொண்டு கீழே பல்லவ பீடமிருந்த பாதாள அறைக்குச் செல்லும் பெரிய பாறையை அகற்றிவிட்டு, பழைய வழியே இறங்கினான். மெதுவாக, பிராகிருதச் செய்திகள் பொறித்த பாறையருகே வந்ததும் அதையும் நகர்த்தி பல்லவ பீடமிருந்த குகையருகே வந்து நின்றான் சில விநாடிகள். 

அங்கு யாரும் வந்ததற்கான அறிகுறிகள் ஏதும் காணாததால் காதைத் தீட்டிக்கொண்டு நின்றான் சில விநாடிகள். எந்த அரவமும் இல்லாதுபோகவே மெல்ல, முன்பு பெரிய மறவன் காட்டிய முறைப்படி அந்தப் பாறையையும் நீக்கவே, பல்லவ பீடம் ஜகஜ் ஜோதியாகப் பளபளத்தது அறைக்குள். மேற்பாறையின் விரிசலிலிருந்து லேசாக உள்ளே நேராகக் கோடு போல விழுந்த சிறு ஒளி பல்லவர்களின் அந்தப் புராதன அரியணையின் சாய்வுப் பகுதியிலிருந்த பெரும் மாணிக்கக் கல்லொன்றின் மீது விழுந்த அந்த ரகசிய பாதாள அறையை ரத்தச் சிவப்பாக அடித்திருந்தது. இத்தனைக்கும் அங்கு நிருபவர்மனையோ, பெரிய மறவனையோ காணாததால் மெல்ல அறைக்குள் நுழைந்த குமாரன் அறையில் ஏதோ சிறு அரவம் கேட்டதைக் காதில் வாங்கியதும் அசைவற்று நின்றான் சில விநாடிகள். அவன் கை இடையிலிருந்த குறுவாளைத் தொட்டுக் கொண்டிருந்தது. கண்கள் நாலாபக்கமும் சுழன்று கொண்டிருந்தன. அந்தச் சமயத்தில் லேசான சிரிப்பொலி ஒன்று கேட்டது. அது நாலா பக்கச் சுவர்களில் தாக்கி எதிரொலி செய்தது பயங்கரமாக. 

குமாரனின் உணர்ச்சிகள் ஊசி முனையில் நின்றன. அந்தச் சிறு குகையில் மறைவுக்கு வேறு இடமேதும் இல்லாதிருக்க, நகைத்தவன் எங்குதான் ஒளிந்திருப்பான் என்று சிந்தித்தான் குமாரன். அவன் முகத்தில் படர்ந்த சிந்தனை ஒளிந்திருந்தவன் கண்களிலும் பட்டிருக்க வேண்டும். ஒளிந்த இடத்திலிருந்தவன் மெல்லிய குரலில் பேசினான்: “சிவஸ்கந்தவர்மா! உன் குறுவாளையும் கச்சையில் கட்டியிருக்கும் நீண்ட வாளையும் கீழே போட்டு விடு. இல்லையேல் பப்பதேவன் மகனை இழப்பான். காஞ்சியும் தனது யுவ மகாராஜாவை இழக்கும். எனது குறுவாள் நேராக உனது இதயத்தை நோக்கிக் குறி வைக்கப்பட்டிருக்கிறது” என்று. 

“நிருபவர்மா! நீ வேடம் பல போடலாம், குரலையும் மாற்றலாம். ஆனால் உனது முடிவுகாலம் நெருங்கி விட்டது. ராஜத் துரோகிகள் சில காலம் தப்பலாம், பயனும் அடையலாம். ஆனால் நிரந்தரப் பலனோ, எண்ணிய லட்சியமோ அவர்களுக்குக் கிட்டுவதில்லை” என்று கூறினான் குமாரன். 

அடுத்துப் பேசியபோது நிருபவர்மர் தனது சொந்தக் குரலில் பேசினார். “உன்னைப் பார்த்த முதல் நாளே நீ யார் என்பதை அறிந்து கொண்டேன். நீ புதுப்பெயர் வைத்துக் கொள்ளலாம். பப்பதேவன் குமாரன் என்பதில் பப்பதேவனை நீக்கிவிட்டு வெறும் குமாரனாகலாம். ஆனால் உன் முகஜாடையை மாற்ற முடியாது. நீ காஞ்சியில் பெரிய கள்ளுக்கடையில் செய்த சாகசச் செயல்கள் உன் சொரூபத்தை வெளிக்காட்டி விட்டன. பல்லவபுரியிலிருந்த இளம் மகாராஜா எதற்கும் துணிந்தவர் என்ற பிரசித்தி உனக்கு ஏற்கனவே ஏற்பட்டிருக்கிறது. நீ காஞ்சி வந்து மாட்டுத் திருட்டையும் மற்ற காஞ்சிக் காவல் விவரங்களையும் ஆராய முற்பட்டபோது நீ வந்த காரணத்தையும் ஊகித்துக் கொண்டேன். உன்னைத் தீர்த்துக் கட்ட முயன்றேன். என்னுடைய கண்களின் பார்வையிலிருந்து நீ விலகக் கூடாதென்பதற்காகவே உன்னை என் காவலர்களுக்குத் தலைவனாக்கினேன். நீயும் என் வலையில் வந்து விழுந்தாய்” என்று கூறி சிறிது நிறுத்தினார். 

குமாரன் மெல்லப் புன்முறுவல் கொண்டான். “நிருபவர்மா! முன்பின் தெரியாதவனை உனது காவலர் தலைவனாக்கியபோதே உன் சூழ்ச்சியை அறிந்தேன். ஆனால் என் கண்ணை மறைக்கவும், காஞ்சித் தலைவன் மீது சந்தேகத்தைத் திருப்பவும் நீ செய்த சகல முயற்சிகளையும் நான் அறிந்தேன். நீ என்னை அழிக்கப் பார்த்தாய். முடியவில்லை. தாமரைச்செல்வியை முறைப்பிள்ளைக்கு மணம் முடிக்க முயன்றாய், நடக்கவில்லை. அப்படி மணம் முடித்திருந்தால் அந்த முட்டாளை ஒரு கருவியாகப் பயன்படுத்தியிருப்பாய். அதுவும் முடியாததால் காஞ்சியையே விற்றுவிடத்த துணிந்தாய். தவிர எல்லாப் பழியையும் காஞ்சியின் காவலர் தலைவன்மீது திருப்பினாய். என்னைத் தவிர வேற யாராயிருந்தாலும் உன் தந்திரத்துக்கு இலக்காகி இருப்பார்கள். காஞ்சியின் நிலவரங்களைப் பற்றி முன்னமேயே பல்லவபுரிக்குச் செய்தி வந்ததால் மன்னர் என்னை அனுப்பினார், இங்கு நடப்பதை அறிய” என்று கூறிய குமாரன் சிறிது நிறுத்திவிட்டு, “இந்தச் சமயத்திலாவது ஆண் மகனாக மறைவிலிருந்து வெளியே வா” என்று அதிகாரத் தோரணையில் அறிவித்தான். 

“உன் குறுவாளையும் வாளையும் கீழே போடு. இல்லாவிட்டால் என் குறுவாளுக்கு இப்பொழுதே நீ இரையாவாய்” என்று கூறியதும் கூறாததுமாகக் குறுவாளை வேகமாக எறிந்து விட்டார் நிருபவர்மர். 

எந்த விநாடியும் அந்தக் குறுவாளை எதிர்பார்த்திருந்த குமாரன் சற்று பக்கவாட்டில் ஒதுங்கியதால் குறுவாள் எதிரிலே பாறையில் தாக்கிப் பேரொலி கிளப்பியதன் விளைவாக நிருபவர்மர் இருந்த இடத்தை ஊகித்துவிட்ட குமாரன், “நிருபவர்மா! பல்லவ பீடத்தின் பின்னால் பதுங்கிப் பயனில்லை. நீ வராவிட்டால் உன்னை நாடி நான் வருவேன்” என்று கூறித்தனது நீண்ட வாளை உருவிக்கொண்டு பீடத்தைச் சுற்றி நடக்கக் காலடி எடுத்து வைத்த சமயத்தில், பீடத்துக்குப் பின்னால் இன்னொரு பாறை நகர, அதன் நடுவில் தோன்றிய நிருபவர்மர், “இந்த ரகசிய அறை என்னைத் தவிர வேறு ஒருவனுக்குத்தான் தெரியும். அவனும் இறந்து விட்டான்” என்று கூறிக்கொண்டே இன்னொரு குறுவாளை எடுத்து குமாரன்மீது வீசிவிட்டு பல்லவ பீடத்துக்குப் பின்னால் வந்து அதைப் பிடித்தவர் அடுத்த விநாடி அலறினார். அவர் மார்பில் புதைந்து கிடந்த குறுவாளொன்று இதயக்குருதியை வெளியே அனுப்பிக் கொண்டிருந்தது. அவன் கண்களில் அச்சத்துக்குப் பதில் வியப்பு விரிந்து, “நீ… நீ… இறந்துவிட்டாய். பிசாசாக வந்திருக்கிறாய்” என்று உளறிக்கொண்டே பல்லவ பீடத்தின் மீது சாய்ந்தார். அவர் இதய ரத்ததம் பல்லவ பீடத்தின் முன் பகுதியைச் சிறிது நனைத்தது. 

குமாரன் வியப்புடன் திரும்பி நோக்கியபோது குகை வாயிற்படியில் நின்று கொண்டிருந்தான் பெரியமறவன். “ஒழிந்தான் ஒரு துரோகி” என்று மிகுந்த எரிச்சலுடன் கூறிய பெரிய மறவன், “யுவமகாராஜா! தாங்கள் மட்டும் என்னைக் கொல்ல வந்தவனைக் கொன்று என்னையும் தாமரைச்செல்வியையும் பல்லவபுரிக்கு அனுப்பியிருக்காவிட்டால் எங்களை நிருபவர்மர் ஒழித்திருப்பார். ஆனால் அவர் கண்களில் மண்ணைத் தூவ நீங்கள் எங்களையும் அனுப்பிவிட்டு, நீங்கள் கொன்றவனைக் குடிசை யிலும் வைத்துக் குடிசைக்குத் தீ வைத்துவிட்டதால் நான் தொலைந்ததாக மனப்பால் குடித்தார் நிருபவர்மர். உங்களுக்குப் பிறகு நிருபவர்மர்தான் அரசுக் கட்டில் ஏறக்கூடிய நெருங்கிய உறவினர். ஆகவே காஞ்சியில் இவர் ஆடிய நாடகமும் சூழ்ச்சியும் இப்பொழுது உங்களுக்குப் புரிகிறது என்று நினைக்கிறேன். அந்தக் கையாலாகாத காஞ்சிக் காவலர் தலைவனை இயக்கி, கெட்டபெயரை அவனுக்கு வாங்கிக் கொடுத்தது இவர்தான். இவர் பாவ ரத்தம் புனிதமான இளந்திரையனின் இந்த பல்லவ பீடத்தை நனைக்கிறது. இவரை முதலில் அகற்றுவோம்” என்று கூறி பல்லவ பீடத்தைப் பின்புறமாக அணுகி நிருபவர்மரை இழுத்துப் பின்னாலிருந்த ரகசிய அறையில் தள்ளினான். அந்த அறையின் வழிப்பாறையை அழுத்திய பெரிய மறவன், “யுவமகாராஜா! வெளியே ஓடிவிடுங்கள்” என்று கூறிக்கொண்டே குமாரனையும் இழுத்துக்கொண்டு வெளியே ஓடினான். அடுத்த விநாடி ஏதோ பெரியதாக வெடிக்கும் சத்தம் கேட்டது. அந்தப் பாதாள அறையில் மேற்புறப் பாறைகளும் பக்கப் பாறைகளும் சடசடவென்று இடிந்து விழுந்தன. “எந்தப் பல்லவ பீடத்தில் அமர பல பாவச் செயல்களை நிருபவர்மர் செய்தாரோ அந்தப் பாவங்களே அவரை பல்லவ பீடத்துடன் சமாதி கட்டிவிட்டன. வாருங்கள் போவோம்” என்றான் பெரிய மறவன். எதிரே’இடிந்து கிடந்த மலைப்பாறைகளையும் சுவடு சிறிதுமின்றி அடியோடு மறைந்துவிட்ட குகை வழியையும் பார்த்துக் கொண்டே பல விநாடிகள் நின்றான் குமாரன். 

“யுவ மகாராஜா! வருந்தாதீர்கள். இதன் முடிவு இப்படித் தானிருக்கும் என்பது ஏற்கனவே தெரியும் எனக்கு, இந்த இடிந்த பாறைகளை நீக்குவதற்கு நம் இருவரால் முடியாது. அதுவும் பல்லவ பீடத்தை நனைத்திருந்த பாவ ரத்தத்தைக் கழுவாமல் அதைப் புனிதப் படுத்தாமல் எடுத்து வரமுடியாது” என்று கூறி யுவமகா ராஜாவை அழைத்துக் கொண்டு காஞ்சி நோக்கிப் புறப்பட்டான் பெரிய மறவன். 

குடிசையிலிருந்த களப்பிரர் படைத்தலைவன் தனக்கு நிருபவர்மர் அளித்த ஓலைகளைப் பற்றியும் காஞ்சியைக் கைப்பற்ற அவர் செய்த சதியைப் பற்றியும் பப்பதேவனுக்கு விளக்கிக் கொண்டிருந்தான். அந்தப் பயங்கர சதியைக் கேட்ட பப்பதேவன், “எனது குலத்தைக் கெடுக்க ஒரு கோடாலிக் காம்பும் பிறந்திருக்கிறது” என்று அலுத்து துன்பப் பெருமூச்சு விட்டான். 

27.சுமை தாங்கி 

மனிதனுக்கு ஆசையிருப்பது தவறல்ல. ஆசை அத்துமீறிப் போகும்போது அது சுய நாசத்தில் கொண்டுபோய் விடுகிறது. இந்த நியதிக்குச் சான்றாக விளங்கிய நீதிபதி நிருபவர்மர் பல்லவ பீடத்துடன் சமாதியானதும் யுவமகாராஜா சிவஸ்கந்தவர்மனுடன் காஞ்சி நோக்கிப் புறப்பட்ட பெரியமறவன் வழியில் சில சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டே பயணம் செய்தான். “யுவமகாராஜா! ஒன்று புரியவில்லை எனக்கு? முதலில் உங்களை எனக்குப் புரியவில்லை. நீங்கள் யுவமகாராஜா என்று அழைக்கப்படுகிறீர்களென்று நீங்கள் காஞ்சி வருமுன்பே மக்கள் பேசிக்கொண்டார்கள். மகாராஜா ஒருவர் இருக்கும் போது யுவராஜா ஒருவர் உண்டென்பது பரம்பரை நியாயம். யுவராஜாவாகவுமில்லாமல் மகாராஜாவாகவுமில்லாமல் இரண்டை யும் சேர்ந்த யுவமகாராஜா பட்டம் ஒன்று உண்டென்று நான் கேள்விப்பட்டதில்லை. இது புது முறையாயிருக்கிறது. இதற்கு ஏதாவது காரணம் உண்டா?” என்று முதலில் சந்தேகம் கேட்டான். 

சிவஸ்கந்தவர்மன் சிறிதும் சிந்திக்காமலே பதில் சொன்னான். “பெரிய மறவரே! பல்லவபுரியில் அரசு ஏற்ற என் தந்தை நீண்ட காலமாகவே அரசு பீடத்தை, தொன்மையும் வரலாறும் கொண்ட காஞ்சி மாநகருக்கு மாற்ற வேண்டுமென்று சிந்தித்து வந்தார். தவிர காஞ்சி மாநகர் பலவீனப்பட்டால் அரசாட்சியின் வலு குறையு மென்று அபிப்பிராயப்பட்டார். எந்த நேரத்திலும் கடல் வழியாக மாற்றார் பல்லவ ராஜ்யத்தில் உட்புகக் காரணமிருந்ததால் காஞ்சியைப் பலமான தனி ராஜ்யமாக்கினாலொழிய பல்லவர் ஆட்சி அதிகநாள் நீடிப்பது கஷ்டம் என்று கருதி வந்தார். ஆகையால் காஞ்சியைப் பிரதான பீடமாக்கி அங்கிருந்தே பல்லவ மகாராஜாக்கள் ஆளவேண்டுமென்று எண்ணினார். 

“இப்படி அவர் அடிக்கடி எண்ணிக்கொண்டும் அமைச்சர் களுடன் விவாதித்துக் கொண்டும் இருந்த சமயத்தில் காஞ்சியைப் பற்றிப் பயங்கரச் செய்திகள் வந்தன. பிற நிலங்களிலிருந்து மாடுகள் பிடிக்கப்படுவதாகவும், காஞ்சியின் பாதுகாப்பும் குலையும் தருவாயிலிருப்பதாகவும் காஞ்சியிலிருந்து செய்தி கிடைத்தது. தவிர காஞ்சியின் எல்லைகளில் களப்பிரர் தலையீடு அதிகமாக இருப்பதாகவும் வதந்திகள் உலாவின. இங்குள்ள நிலையை ஆராயவும், நிலை சீர்கேடாயிருந்தால் திருத்தவும் மகாராஜா என்னை இங்கு அனுப்பினார். அமைச்சர் கூட என் பயணத்தை ஆட்சேபித்தார். யுவராஜாவைத் தனியாக அனுப்புவது தவறென்றும், எனக்கு ஏதாவது தீங்கு நேரிட்டால் பல்லவகுலத்து க்கு வேறு வாரிசு இல்லையென்றும் அமைச்சர் கூறினார். 

அதை என் தந்தை ஒப்புக்கொள்ளவில்லை. “காஞ்சியைத் தனி ராஜ்யமாக்கி, அதைத் தலைநகராக்கி அதற்கு ஒரு மகாராஜாவையும் நியமிக்க முடிவு செய்திருக்கிறேன். காஞ்சிக்குள்ள இலக்கிய, வரலாற்று மகத்துவம் பல்லவபுரி (பல்லாரி)க்குக் கிடையாது. பிற்காலத்தில் பல்லவர்கள் தரணியாள்வார்கள்” என்று தந்தை திட்டமாகச் சொன்னார். காஞ்சிக்கு என்னை யுவ மகாராஜாவாக நியமித்தார். ஆனால் காஞ்சியின் நிலைமை சீர்படும் வரையில் நான் வெறும் வீரனாகவே செல்ல வேண்டுமென்றும் கூறி என்னை இங்கு அனுப்பினார். அப்பொழுதும் அமைச்சர், ‘யுவ மகாராஜாவுடன் இன்னும் பத்து வீரர்களைத் துணைக்கு அனுப்பினாலென்ன?’ என்று கேட்டார். 

‘யுவ மகாராஜாவே பத்து வீரர்களுக்குச் சமம். தனியாகப் போகட்டும்’ என்று திட்டமாகச் சொல்லிவிட்டார். என் தந்தை பப்பதேவர். ஆகவே நான் தனித்து வந்தேன். காஞ்சி நகருக்குள் புகுமுன்பே பசுக் கூட்டங்களையும் அவற்றுக்குப் பலவிதமாக சூட்டுக் குறிகள் போடப்பட்டிருப்பதையும் கவனித்தேன். பிறகு உங்கள் புதல்வியையும் சந்தித்தேன். மெல்ல மெல்ல ஊர் நிலை எனக்குப் புரிந்தது. மாட்டை விற்றுக் கள்ளைக் குடிப்பதென்பது மறவர்களின் பழைய பழக்கம். அதைப் பற்றி நான் கவலைப்பட வில்லை. இப்படி மாடுகளைத் திருடத் தூண்டுபவர் யாராக இருக்குமென்று ஆராய முற்பட்டேன். முதலில் காஞ்சிக் காவலர் தலைவன் மீதுதான் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. பெரிய கள்ளுக்கடையில் குடிவெறியில் ஒருவன் தாமரைச் செல்வியிடம் தாறு மாறாக நடந்ததை காஞ்சியின் காவலர் தலைவன் பார்த்துக் கொண்டிருந்தது எனது சந்தேகத்தைக் கிளறிவிட்டது. என் ஆராய்ச்சிகளுக்கு வெகு சுலபமாகப் பதிலும் கிடைத்தது. அத்தனை சுலபமாக அறியக் கூடியதல்ல காஞ்சியின் நிலைமை என்பதை ஊகித்தேன். அப்பொழுதுதான் நிருபவர்மர் என்னைத் தன்னிடம் வேலைக்கு அமர்த்திக்கொண்டார்” என்று விளக்கிய சிவஸ்கந்தவர்மன் பெரிய மறவனை நோக்கினான். 

பெரிய மறவன் கேட்டான், “உங்களை நாங்கள் மன்னரின் ஒற்றனென்று நினைத்தோம். நீங்கள் ஏன் அதை மறுக்கவில்லை?” என்று 

‘மறுக்க அவசியமில்லை. என்னை ஒற்றனென்று நீங்கள் நினைக்கும் வரையில் நான் தங்கு தடையின்றி எதையும் ஆராய முடியும். நான் யாரென்று தெரிந்து விட்டால் அத்தாட்சிகள் அனைத்தும் மறைந்துவிடும்” என்றான் சிவஸ்கந்த வர்மன். 

“அது மறையாதிருக்க என்ன செய்தீர்கள்?” என்று வினவினான் பெரிய மறவன். 

“நான் செய்யவில்லை. நிருபவர்மரே அந்தப் புண்ணியத்தைக் கட்டிக்கொண்டார். முன்பின் தெரியாத என்னைத் தனது காவலர்களுக்குத் தலைவனாக்கினார் என் மீது கண்ணை வைத்திருக்க. அது எனக்கும் உதவியாயிற்று, அவர் மீது கண்ணை வைக்க என்னால் முடிந்தது. காஞ்சியின் காவலர் தலைவனுக்கு சிந்திக்கும் சக்தியில்லாததால் அவன்மீது எல்லாப் பழிகளையும் நிருபவர்மர் திருப்பினார். ஆனால் நான் ஏமாறவில்லை. சிறையில் கைதி கொல்லப்பட்டதை நாங்களிருவரும் சென்று பார்த்தபோது கூட நிருபவர்மர் ஏதுமறியாத பூனைபோல நடித்தார். இறந்த சாட்சியின் கச்சையிலிருந்து நான் களப்பிரர் அடையாள நாணயத்தை எடுத்துக் காட்டிய போது கூடத் தனக்கு ஏதும் தெரியாதது போலவே நடித்தார். ஆனால். அதற்குப் பிறகு துரிதமாகச் செயல்பட்டார். களப்பிரர்களை காஞ்சியைதாக்கச் சொல்லிவிட்டு அவர்கள் வராத தென்புறத்தில் படைகளை நிறுத்தினார். நான் அதை மாற்றி வடபுறத்துக்குப் படைகளைக் கொண்டு செல்ல காஞ்சியின் காவலர் தலைவனிடம் உத்தர விட்டேன். களப்பிரர் முறியடிக்கப்பட்ட பிறகு உண்மைவெளியாகு மென்ற அச்சத்தாலும், அதற்கு மரண தண்டனையைப் பல்லவ மன்னர் விதிக்கத் தவற மாட்டாரென்று தெரிந்ததும் அவர் பல்லவபீட குகைக்குப் பறந்தார். நாமிருவரும் தொடர்ந்தோம். மீதி உங்களுக்குத் தெரியும்” என்று விளக்கினான். 

இப்படிப் பேசிக் கொண்டே காஞ்சியை அன்று நள்ளிரவில் அடைந்த பெரிய மறவனும் சிவஸ்கந்தவர்மனும் காஞ்சியில் நுழைந்தபோது காஞ்சி நான்றாகத் துப்புரவு செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. எங்கும் பல்லவ வீரர்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். காஞ்சியின் தெருக்களில் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. அந்த நடுநிசியையும் மக்கள் உற்சாகம் பகலாக ஆக்கியிருந்தது. 

அலங்கார வீதிகளைப் பார்த்துக் கொண்டே காஞ்சிக்குப் புறம்பேயிருந்த காட்டுப் பகுதிக்குச் செல்ல முயன்ற பெரியமறவன் யுவமகாராஜாவும் தன்னைத் தொடர முற்பட்டதைக்கண்டு. “யுவமகாராஜா! நீங்கள் செல்ல வேண்டியது அரண்மனைக்கு” என்றான். 

“மகாராணியில்லாமல் மகாராஜா அரண்மனைக்குப் போக மாட்டார்” என்ற சிவஸ்கந்தவர்மன் பெரிய மறவனுடன் குடிசை மேட்டை நோக்கிச் சென்றான். 

மேட்டிலிருந்த அந்தப் பழைய் குடிசை அதன் பழைமையை இழந்து இருந்தது. அது ஏதோ அரண்மனை போலவே சிங்காரிக்கப் பட்டிருந்தது. சுற்றிலும் புரவி மீது காவல் வீரர் கத்திகளை உருவிப்பிடித்து நின்றார்கள். மேட்டின் மீது ஏறிக் குடிசையை அடைந்ததும், “யுவ மகாராஜா! அப்படியே நிற்கட்டும்” என்று இரண்டு பெண்களின் ஒலி கேட்கவே பெரியமறவன் சற்று பக்கவாட்டில் நகர்ந்தான். இரு பெண்கள் யுவ மகாராஜாவுக்கு மங்கல ஆரத்தி எடுத்தார்கள். சிவஸ்கந்தவர்மன் குடிசைக்குள்ளே சென்றான். அங்கு யாரையும் காணோம். “தாமரைச்செல்வி எங்கே?” என்று சீறினான் யுவமகாராஜா! 

“மகாராணி அரண்மனையிலிருக்கிறார்கள்” என்றாள் ஒரு பணிப்பெண். 

“சரி அங்கு போகிறேன்” என்று திரும்பினான் சிவஸ்கந்த வர்மன். 

“போய்ப் பயனில்லை” என்றாள் இன்னொரு பணிப்பெண். 

“ஏன்?” 

“நாளைக்கு மறுநாள் உங்களுக்குப் பட்டாபிஷேகமும் திருமணமும். அன்றுதான் மகாராணியைப் பார்க்கலாம். இது பப்பதேவர் கட்டளை” என்றாள் இன்னொருத்தி. 

சிவஸ்கந்தவர்மன் முகத்தில் சங்கடமும் ஏமாற்றமும் காணப்பட்டன. அதைக்கண்ட இரு பெண்களும் நகைத்தார்கள். “யுவமகாராஜா! அவசரப்படாதீர்கள். கிணற்றுநீரை வெள்ளம் கொண்டு போய்விடாது” என்று ஒருத்தி சொன்னாள். 

“நீங்கள் அருந்த உணவு இருக்கிறது. படுக்க பஞ்சணையும் இருக்கிறது” என்றாள் இன்னொருத்தி. 

யுவமகாராஜா அறுசுவை உண்டியையும் பஞ்சணையையும் வெறுப்புடன் பார்த்தான். பிறகு தனது அங்கியைக் களைந்து வாளுடன் வெளியே சென்று மேட்டின் புல்தரையில் படுத்தான். 

நாலைந்து நாட்கள் கழித்து காஞ்சியின் அரண்மனை அந்தப் புரத்தில் அவனை வரவேற்க தாமரைச் செல்வி சகல ஆபரணங்களையும் அணிந்து நின்றிருந்தாள். மணவறைக்குள் நுழைந்த சிவஸ்கந்தவர்மன் அவளையும் நோக்கி மணவறையின் அலங்காரத்தையும் நோக்கினான். பிறகு தாமரைச்செல்வியை நோக்கி நடந்து, “செல்வி! இந்த ஆபரணங்கள் உன் அழகை மறைக்கின்றன” என்று கூறிக்கொண்டு அவள் தலையிலிருந்து வைரவைடூரிய சுற்றுச் சங்கிலிகளையும், கழுத்தில் அணிந்திருந்த இடியெனக் கனத்த மாணிக்க மாலைகளையும் எடுத்து வைக்க இடம் தேடியவன் அத்தனை நகைகளையும் பஞ்சணையில் வைத்தான். “மகாராணி! உன்னைப் பிணைத்திருந்த சுமை நீங்கிவிட்டது” என்று சொல்லி அவளைப் பஞ்சணைக்கருகில் அழைத்துப் போய் அதில் உட்காரவைத்தான். 

அவள் மெல்லக் கேட்டாள். “ஏன் பல்லவ பீடம் அரண்மணைக்கு வரவில்லை?” என்று. 

”அதைப்பற்றி ஒரு சாபமிருப்பதாகத் தந்தை சொன்னார். இளந்திரையனுக்குப் பிறகு அதில் உட்கார முயன்ற எவரும் விருத்திக்கு வரவில்லையாம். அதைக் குகையிலிருந்து எடுக்க வேண்டாமென்று தந்தை உத்தரவிட்டிருக்கிறார். இனிமேல் ஏதோ ஒரு காலத்தில் அது வெளியே வரலாம். கால வெள்ளத்தின் கதையை யார் சொல்ல முடியும்?” என்றான் சிவஸ்கந்தவர்மன். 

பிறகு அவன் கைகள் அவளைப் பஞ்சணையிலிருந்து தூக்கித் தரையில் படுக்க வைத்தன. அவன் கைகள் மெல்ல அவள் மேலாடையையும் நீக்க முற்பட்டன. அவள் தடை செய்யவில்லை. “பஞ்சணை” என்று ஏதோ மெதுவாகச் சொன்னாள். 

“அன்னை பூமிக்கு இணையாகாது செல்வி. குடிசைத் தரையைவிட இந்தப் பஞ்சணை எப்படி உயர்வு?” என்று கேட்டு அவள் உடலின் மீது கைகளை ஓடவிட்டான். அவள் மீது சாயவும் செய்தான். 

”குமாரா!” என்று பழைய பெயரைச் சொல்லி மெதுவாக அழைத்தாள் செல்வி. 

அவள் மார்புக்கிடையிலிருந்து தலை நிமிர்ந்த குமாரன், “சொல் செல்வி” என்றான். 

“உங்கள் தந்தை உங்கள் மீது பெரும்சுமையைச் சுமத்தி விட்டார்” என்று கூறினாள். 

அப்பொழுது அவள் உடை மெல்ல அகன்று கொண்டிருந்தது. “அரசு சுமைதானே?” என்று வாய் கேட்டது. கைகள் தங்கள் செயலைத் தொடர்ந்தன. 

“ஆம். அது சுமையல்லவா?” 

“ஆம் செல்வி, அது சுமைதான். அந்தச் சுமையையும் சேர்த்து நீதானே தாங்கப் போகிறாய்?” 

“வேறு சுமை ஏது?” 

”நான்தான். என்னையும் சேர்த்து இரு சுமைகளை நீ தாங்க வேண்டுமே?” 

தாங்கினாள் அவள். சுமக்க வேண்டியது பெண்ணின் கடமைதானே என்று அவள் சிந்தித்துப் புன்முறுவல் செய்தாள். அவள்மீது இன்பச்சுமை புரண்டது. இருமுறை ‘உம்’ கொட்டினாள் செல்வி. துவக்கத்திலிருந்த கஷ்டத்தால் கஷ்டம் இஷ்டமாக, துன்பம் இன்பமானதும் அவள் அவனை இரு கைகளாலும் சுற்றினாள். 

“செல்வி” என்றான் சிவஸ்கந்தவர்மன். 

”என்ன?’ -அவள் முணுமுணுத்தாள். 

“பல்லவபீடம் போகவில்லை.” என்றான் அவன். 

“என்ன?” 

“நீதான் பல்லவபீடம். இதுதான் பின்வரும் பல்லவ பெருமகனைச் சுமக்கும் அரியணை. நீ ஒரு இணையற்ற சுமைதாங்கி” என்று கூறி அவள் வயிற்றையும் கையால் தடவிக் கொடுத்தான். பிறகு இருவரும் பேசவில்லை. சிந்தனைக்கு இடமில்லாததால் செயல் ஆட்கொண்டது அவ்விருவரையும். 

(முற்றும்)

– பல்லவ பீடம், முதற் பதிப்பு:, பாரதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *