(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இயற்கைத் தேவியின் எழில் நலம் குலுங்கும் மலைப் பகுதி அது; குறிஞ்சி நிலம். அந்த நிலத்து மடமகளும் வேறு ஒரு மலைக்குத் தலைவனாகிய மைந்தன் ஒருவனும் பிறவிதோறும் தொடர்ந்து வரும் ஊழின் வன்மையால் சந்தித்தனர். அவர்களிடையே காதல் முகிழ்த்தது; அளவளாவினர். எல்லா வகையாலும் ஒப்புடைய அவர் களுடைய களவுக் காதல் வளர ஒரு கொள் கொம்பு வேண்டியிருந்தது. காதலியின் உயிர்த் தோழி ஒருத்தி இருந்தாள்; தலைவியோடு பழகி விளையாடும் தோழிமார் பலர் இருந்தாலும் அவளுடைய உள்ளத்தைப்போல நெருங்கி ஒன்று பட்டுப் பழகும் நிலை அந்தத் தோழிக்குத் தான் இருந்தது. இதைத் தலைவன் குறிப்பாகத் தெரிந்து கொண்டான். இனிமேல் அவள் துணையைக் கொண்டு அடிக்கடி தன் காதலியைச் சந்திக்கலாம் என்று எண்ணி அவளைத் தனியே அணுகினான்.
மிகவும் பணிவுடையவனாகித் தனக்குத் தலைவியின் பால் உள்ள காதலைப் புலப்படுத்தினான். தோழி முதலில் அவன் வார்த்தைகளைக் கேளாமற் புறக்கணித்தும், அப்பால் பல காரணம் கூறி அவனை மறுத்தும் வந்தாள். அவன் மேலும் மேலும் இரந்து நிற்கவே, அவனுடைய உண்மையான காதலையும், அதன் வலிமையையும் உணர்ந்து கொண்டாள். அன்றியும், தலைவன் பேச்சி லிருந்து அவனுக்கும் தலைவிக்கும் முன்பே பழக்கம் இருப்பதும் அவளுக்குத் தெரிய வந்தது. இறுதியில், தலைவியின் அன்பை அவன் பெறும்படி செய்வதாகக் கூறி விட்டுத் தலைவியை அடைந்தாள்.
தோழி : நினைக்க நினைக்கப் பரிதாபமாக இருக்கிறது!
தலைவி : என்ன தோழி? எதை இப்பொழுது நினைத்தாய்? எது பரிதாபமாக இருக்கிறது?
தோழி : எதற்கும் அஞ்சாத நெஞ்சுடைய வீரனென்று அவனைப் பார்த்தால் தெரிகிறது. மலையைப் போன்ற தோள்கள்; யானைத் துதிக்கையைப் போன்ற கைகள்.
தலைவி : இதோ பார். இந்தத் தேனிறால் எவ்வளவு பெரிதாக இருக்கிறது! நெடுநாட்களாக மலரிலிருந்து ஈட்டிய தேனை வண்டுகள் சேமித்து வைத்திருக்கின்றன.
தலைவி தான் கூறுவதைக் காதில் வாங்கவில்லை என் பதைத் தோழி உணர்ந்தாள். தலைவிக்கோ தன் தோழி தன் காதலனைச் சந்தித்திருக்கிறாள் என்று தெரிந்து விட்டது. ஆனாலும் அவனைத் தனக்குத் தெரிந்ததாகவே காட்டிக் கொள்ளக் கூடாது என்று எண்ணினாள். ஆகவே வேறு எதையோ பேசினாள்.
தோழி : அவன் நிலையை உணர உணர என் உள்ளம் இரங்குகிறது. ஒரு களிறு தன் பிடியின் அருகே நின்றது. அதைக் கண்டு பெ மூச்சு விட்டபடியே அவன் நின்றான்.
தலைவி : என்ன தோழி, நம்மோடு தொடர்பில்லாத செய்திகளையெல்லாம் எதற்காக இங்கே சொல்கிறாய்?
தோழி . அவன் உன்னிடத்தில் இணையற்ற காதல் பூண்டிருக்கிறான். நம்மை நயந்து இந்தப் பகுதிகளில் சுற்றிக் கொண்டே உலவுகிறான்.
தலைவி . வழியில் போவோரைப் பற்றியெல்லாம் கவலைப் பட்டுப் பயன் என்ன? யாரோ ஒருவா எதையோ பார்த்து வருந்தினார் என்று என்னிடம் எதற்காகச் சொல்ல வருகிறாய்?
தலைவி வேண்டுமென்றே தோழியின் வார்த்தைகளைக் கவனிக்காதவளைப்போல் காட்டிக் கொள்கிறாள். முன்பே தலைவனைத் தெரிந்து கொண்டு பழகிய செய்தியை அவளுக்கு மறைக்கிறாள். இதுவரையில் அவள் அப்படி இருந்ததில்லை. எந்தச் செயலையும் தோழியை அறியாமல் செய்ததில்லை. அப்படி இருக்க, இப்பொழுது மாத்திரம் தோழி சொல்லைக் கேட்கவில்லை.
தோழி தலைவிக்குத் தகாத ஒன்றைச் சொல்வாளா? அவளுக்கு எது நல்லது என்று உணர்ந்து சொல்வதோடு, அதை அடைவதற்கும் துணையாக நிற்பாளே! உள்ளம் கலந்து பழகிய நட்புடையவர்கள் அவர்கள் இருவரும். அந்த நட்புக்கிடையே இப்போது ஏதாவது வந்து விட்டதா?
ஒருவர் மற்றவரோடு பழகுவதானால் யோசித்துப் பழகவேண்டும். தமக்கு இனியரா, நன்மை செய்பவரா, இடையூறு வந்தால் உதவி செய்பவரா என்று பல வகை யில் நாடி நட்புக் கொள்ள வேண்டும். ஏற்ற நண்பர் என்று உறுதி செய்து நட்ட பிறகு, இவரை நம்பலாமா, கூடாதா என்று ஆராய்வது தவறு. நாடி நட்புக் கொள்ள வேண்டும்; நட்ட பிறகு நாடக் கூடாது.
இப்போது தலைவி, தோழி சொல்வதைக் கவனிக்க வில்லை; அவள் சொல்வதை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. இதுவரையில் அவர்களிடையே யாதொரு வேற்றுமையும் எழவில்லை. இப்போது தலைவியின் பேச்சில் வேறுபாடு ஒலிக்கிறது ஏதோ தவறான காரியத்தைச் செய்யச் சொல்வது போலத் தோழியின் வார்த்தைகளைத் தலைவி கொண் டாளோ! அப்படியானால் இதுகாறும் அவளை உயிர்த் தோழியாக எண்ணி ஒழுகினாளே! அது பொய்யா? அல்லது இதுவரையில் தோழியின் இயல்பை ஆராய்ந்து பார்க்கும் அவசியம் இல்லாமல் இருந்து, இப்போதுதான் வந்திருக் கிறதா? தலைவி முதலில் நண்பு செய்துவிட்டு, இப்பொழுது அந்த நட்புக்குரிய தோழியைப் பற்றி ஆராய , நாட, தொடங்கியிருக்கிறாளா?
தோழியின் உள்ளம் என்ன எல்லாமோ எண்ணியது.
“நான் என்றும் தவறு செய்யவில்லையே! அந்த வீரப் பெருமகனை நானா வரச் சொன்னேன்? அவன் தன் கருத் தைச் சொன்னவுடனே பல்லை இளித்துக் கொண்டு உடனே ஒப்புக்கொண்டேனா எத்தனை வகையில் அவனைச் சோதனை செய்து பார்த்தேன்! மறுத்தேன் ! அவன் எளிதில் விட்டுச் செல்பவனாகத் தோன்றவில்லை. மலை கலங்கினும், கடல் குமுறினும் அவன் காதல் நிலை கலங்காதென்று எனக்கு நன்றாகத் தெரிகிறது. அது மாத்திரம் அன்று. முன்பே இவளைத் தெரிந்து பழகியவன் என்று வேறு தெரிய வந்தது. அதற்குப் பிறகு நான் மறுப்பதில் பயன் என்ன? இவள் அவனிடம் காதல் கொண்டு விட்டா ளென்றே தோன்றுகிறது. அப்படி இருக்க, இப்போது அவன் யார்? ஏன் வருகிறான் என்று ஆராய்ச்சி செய்வ தால் வரும் லாபம் என்ன? நட்ட பின்பு நாடும் அறியா மையைச் சேர்ந்தது தானே இதுவும்?”
தோழியின் உள்ளத்தே சிறிது சினம் பூத்தது! இவ்வளவு காலமும் இல்லாதபடி இன்று பேசுகிறாளே; நம்மிடமே இவளுக்கு ஐயப்பாடு வந்து விட்டதோ! என்று பொருமினாள். தலைவியைப் பார்த்துப் பேசலானாள்.
தோழி : அவன் யாரோ, எவனோ என்று கேட்கிறாய். அவன் மலைநாடன்; குறிஞ்சி நிலத்தவன்; அழகிய மலைக்குத் தலைவன். வளப்பம் நிறைந்து பசுமை படர்ந்த தோற்றத்தோடு ஓங்கி நிற்கும் அந்த மலைப் பக்கங்களைப் பார்த்தாலே , இப்படித்தான் நீலமேனி நெடியோனாகிய மாயோன் இருப்பானோ!’ என்று நினைக்கத் தோன்றும். பெரிய மலைகளின் தாழ்வரை யில், மலைச்சாரலில், நின்று பார்த்து அந்த அழகை நுகரவேண்டும். கண்ணபிரானுடைய நீலத் திருமேனி யின் நினைவை உண்டாக்கும் மலைப் பக்கத்தே உயரத்திலிருந்து சலசலவென்று வீழும் அருவி உண்டு. நெடுந்தூரத்திலிருந்து பார்த்தால் விளங்கித் தோன்றும் அருவி அது. வயங்கும் (விளங்கும்) அருவி மலையிலிருந்து வீழ்கையில் ஒரே வெள்ளைப் பரப்பாக இருக்கும். ஆகா! கரிய மலையினிடையே அந்த வெள் ளருவி எவ்வளவு அழகாகத் தோன்றும் தெரியுமா? கண்ணன் கரிய மேனியன். அவனுக்கு மூத்தபிரானாகிய பலராமன் வெள்ளை வெளேரென்ற திருமேனியை உடையவன். ‘நம் தம்பி இங்கே இருக்கிறான் ; நாமும் அவனோடு சேர்ந்து வாழலாம்’ என்ற எண்ணத்தோடு அவனும் அங்கே வந்து விட்டானோ? வயங்குகின்ற வெள்ளிய அருவி பலவேதனை நினைக்கச் செய்கிறது. மலைச்சார்பும் அருவியும் மாயோனையும், வாலியோனா கிய பல தேவனையும் போலத் தோன்றும் அழகிய மலைக்குத் தலைவன் அவன்.
தலைவி : மலையையும் அருவியையும், மாலையும் வாலியோ னையும் பற்றி நான் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இப்போது என்ன வந்தது?
தோழி : அதைத்தான் சொல்ல வருகிறேன். அழகிய மலைகிழவோனாகிய அந்த வடிவழகன் இங்கே வந்தானென்று சொன்னேன். நம்மை விரும்பி வந்து, தன் விருப்பம் நிறைவேறப் பெறாமையால் வருந்துகிறான் என்றும் கூறினேன். அவற்றை நீ காதில் வாங்கிக் கொள்ளவில்லை. என் வார்த்தைகளில் உள்ள கருத்தை நீ தெளியவில்லை. இதுவரையில் நீ இப்படி இருந்ததில்லையே!
தலைவி : என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?
தோழி : என் வார்த்தைகளில் உனக்கு நம்பிக்கை இல்லை. நான் சொல்வதைச் சோதித்துப் பார்க்கும் வழக்கத்தை இப்போது தான் உன்னிடம் காண் கிறேன். அந்த மலைகிழவோன் நிலையை நீயே தெரிந்து கொள். நான் சொல்வது தான் உனக்குப் பிடிக்க வில்லை. நீயே நேரில் தெரிந்து கொண்டு, உனக்கு நன்மை செய்ய எண்ணியிருக்கும் வேறு தோழிய ரோடும் கலந்து யோசித்துப்பார். இன்னது செய்வது தான் அறிவுடைமை என்று தேர்ந்து, பிறகு நீ அவனோடு பழகு. எனக்குத் தெரிந்த ஒன்றை மாத் திரம் சொல்ல விரும்புகிறேன். அவன் எளிதிலே மறுப்பதற்குரியவன் அல்லன். ஆழ்ந்த காதலும், தன் காதலை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஏக்கமும் உடையவனாக இருக்கிறான். எப்படியோ நீ சௌக்கியமாக வாழ வேண்டும். அது தான் என் விருப்பம். வாழி!
தலைவி : ஏன் இப்படிப் பேசுகிறாய்?
தோழி : எல்லாம் அவ்விடத்துப் பேச்சில் மாறுபாடு தோன்றினதால் தான். பெரியவர்கள் திடீரென்று ஒருவருடன் நண்பர்களாகி விடமாட்டார்கள். பல காலம் ஆராய்ந்து தகுதி நோக்கி நட்புப் பூண்பார் கள். நாடிய பின்பே நண்பு செய்வார்கள், அப்படி இன்றி யோசனையில்லாமல் நட்புக் கொண்டு விட்டு அப்புறம், ‘நண்பர்கள் நல்லவரா, அவரோடு பழக லாமா அவர் வார்த்தையைக் கேட்கலாமா?’ என்று ஆராய்ச்சி செய்ய மாட்டார்கள் நட்ட பிறகு நாடு வது அவர்கள் இயல்பு அல்ல. தம்மோடு ஒட்டி நட்ட வர்கள் திறத்தில் பெரியோர்கள் இன்னவாறு நடந்து கொள்வார்கள் என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும். தோழியரோடு பழகினாலும் இந்த நட்பிலக்கணத்தை நன்கு அறிந்து வைத்தல் நல மென்று எனக்குத் தோற்றியது; சொன்னேன். விருப்பம் இருந்தால் ஏற்றுக் கொள். இல்லையானால் உன் விருப்பப்படியே நடந்து கொள். உனக்கு அறிவுரை கூற நான் யார் ?
கோபம் கொப்புளிக்கும் இந்தப் பேச்சைத் தலைவி கேட்டாள். தன் பிழையை உணர்ந்தாள். நட்டு நாடும் பேதைமை தன்னிடம் இருக்கக் கூடாது என்பதைத் தெளிந்தாள். அதன் பயன் என்ன? தோழியின் துணை கொண்டு காதலனைச் சந்திக்கும் நிலை அமைந்தது.
தோழி சினந்து கூறும் கூற்றாக அமைந்திருப்பது பின் வரும் பாட்டு:
‘மாயோன் அன்னமால்வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்குவெள் அருவி
அம்மலை கிழவோன் நம்நயந்து என்றும்
வருந்தினன்’ என்பதோர் வாய்ச்சொல் தேறாய்;
நீயும் கண்டு நுமரொடும் எண்ணி
அறிவறிந்து அளவல் வேண்டும்; மறுதரற்கு
அரியன்; வாழி தோழி! பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார், தம் ஒட்டியோர் திறத்தே
தோழி, திருமாலைப்போன்ற பெரிய தாழ்வரைகளை யும், பலராமனைப்போன்ற விளங்கிய வெள்ளிய அருவியையும் உடைய அழகிய மலைக்குத் தலைவனாகிய அவன் நம்மை விரும்பி எப்போதும் வருந்தினான் என்று சொன்னதாகிய என் வார்த்தையை நீ தெளியவில்லை; நீயும் நேரே கண்டு உங்களவர்களாகிய பிற தோழிகளோடும் ஆராய்ந்து. இது செய்தால் அறிவுடைமையாகும் என்பதைத் தேர்ந்து பழகுதல் வேண்டும், அவன் மறுப்பதற்கு அரிய காதலும் உறுதியும் உடையவன்; நீ வாழ்க! பெரிய வர்கள் முதலில் ஆராய்ந்து பிறகு ஒருவரோடு நண்பு செய்தாலன்றி, நண்பு செய்து பிறகு ஆராயமாட் டார்கள். தம்மோடு நண்பு செய்து ஒட்டினவர்கள் திறத்தில்.
தோழி, கிழவோன் வருந்தினன் என்பதோர் சொல் தேறாய்; நீயும் கண்டு எண்ணி , அறிந்து அளவல் வேண்டும்; அரியன்; பெரியோர் நாடி நட்பின் அல்லது நட்டு நாடார் – என்று கூட்டுக.
மாயோன் – கரிய நிறமுடைய திருமால்; கண்ணன். மால் பெருமை, வரைக் கவா அன் – மலையின் பக்கம். வாலியோன் – வெள்ளை நிறமுடையவன்; கண்ணனுக்குத் தமையனாகிய பலதேவன். வயங்குதல் – விளங்குதல். அம் அழகிய . கிழவோன் – உரியவன் நம் நயந்து – நம்மை விரும்பி . தலைவியும் தோழியும் உள்ளம் ஒன்றிப் பழகியமையால் அவருக்குள் வேறுபாடு இல்லை. அதனால் நின்னை நயந்து’ என்னாமல், நம்மை நயந்து’ என்றாள். தலைவியைத் தலை வன் விரும்பியதையே அவ்வாறு சொன்னாள். தேறாய் – நீ தெரிந்து கொள்ளவில்லை. நுமர் – உன்னைச் சேர்ந்தவர். கோபம் இல்லாமல் இருந்தால் நமர் என்று சொல்லியிருப் பாள் ; கோபத்தினால் தன்னை விலக்கிக் கொண்டு நுமர் என்றாள். அறிவு அறிந்து – இப்படிச் செய்வது அறிவு என் பதைத் தெரிந்து கொண்டு. அளவல் – பழகுதல் . மறு தரல் – மறுத்தல், மறுத்தரல் என்று வருவதே பெரு வழக்கு ; அறிவறிந்து’ என்ற பகுதிக்கு இணைந்து ஒலிக்கும் பொருட்டு மறுதரற்கு’ என்று வந்தது. நாடி – ஆராய்ந்து ஒட்டியோர் – நண்பராகப் பற்றிக்கொண்டவர்.
துறை : தலைவிக்குக் குறை நயப்பக் கூறியது.
‘தலைவனுடைய வேண்டுகோளுக்கு இணங்கும்படி தலைவியினிடம் தோழி சொல்லியது’ என்பது இதன் பொருள். குறை – காரியம்.
இதைப் பாடிய புலவர் கபிலர். இது நற்றிணையில் முப்பத்திரண்டாவது பாட்டு.
– மனை விளக்கு (சங்கநூற் காட்சிகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1951, அமுத நிலையம் லிமிடெட், சென்னை.