சசாங்கனின் ஆவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: November 24, 2021
பார்வையிட்டோர்: 10,132 
 
 

(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்த விஜயகீர்த்தியின் நடை பொறுமை இழந்த அவன் மனத்தைக் காட்டிற்று. அரைமணி நேரத்திற்கு முன்பாகவே வந்திருக்க வேண்டிய சசாங்கன் இன்னும் வரவில்லை. ஏன் இன்னும் வரவில்லை?

ஒரு பக்கத்தில் இரண்டு ஆசனங்கள் போட்டிருந்தன. நடுவே உயரமான ஒரு பீடத்தில் சதுரங்கப் பலகையும் காய்களும் வைத் திருந்தன. பாத்திரத்திலுள்ள அகிற் கட்டைகளைக் கிளறிவிட்டு, வட்டமிடும் அகிற்புகையைப் போல வந்தாள் ஹேமாங்கனை. அரசனையும் தனித்து நிற்கும் சதுரங்கப் பலகையையும் பார்த்தாள். “சசாங்கர் ஏன் இன்னும் வரவில்லை?” என்று கேட்டாள்.

‘இந்த நேரத்தில் இவர்கள் ஆட்டம் ஆரம்பித்திருப்பார்கள். சசாங்கன் இன்னும் வரவில்லையே?’ என்று தான் கேட்டாள். ஆனால், விஜயகீர்த்திக்கு அது மாறான எண்ணத்தை உண்டுபண்ணிற்று. ‘என்னைப் போலவே, சசாங்கன் வரவை எதிர்பார்க்கும் ஜீவன் வேறொன் றும் இருக்கிறது. ஹேமாங்கனையும் அவனுக்காகத் தான் தவித்துக் கொண்டிருக்கிறாள்’ என்று நினைத்தான்.

சில மாதங்களாகவே, சசாங்கனுக்கும் ஹேமாங்கனைக்கும் இடையே எழும் பேச்சு வார்த்தைகளிலிருந்தும் முகக்குறிகளிலிருந்தும் ஒருவிதச் சந்தேகம் அவனை அரித்துக் கொண் டிருந்தது. சசாங்கன் இருக்கும் பொழுது அவள் முகத்திலுள்ள ஒளி அவன் போனவுடன் போய்விடுவது போல அவனுக்குத் தோன்றிற்று. புவனத்தையெல்லாம் வென்ற தான் ‘இந்தக் கணிகையின் மனத்தை மாத்திரம் ஜயிக்க முடியவில்லையே என்ற ஐயுறவு மனத்தில் புரையோடிக்கொண் டிருந்தது. அந்த எண்ணம் அமைதி யடைய முடியாத ஒரு துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

விஜயகீர்த்தி நினைத்ததைச் செய்தே தீருவான். அதில் வெற்றியும் பெறுவான். அவன் வெற்றி பெறாத காரியமே இல்லை; சசாங்கனிடம் தோல்வியறுவதைத் தவிர. ஆகவே செல்வத்தையும் அன்பையும் வைத்துப் பூசிக்கும் பெண் தெய்வத்தின் அன்பை மாத்திரம் பெற முடிய வில்லையே என்ற எண்ணம் அவனுக்குக் கசப்பாக இருந்தது.

ரூபம், யௌவனம், செல்வம், கீர்த்தி, அதிகாரம் – எல்லாம் நிறைந்த தன்னைவிடச் சசாங்கனிடம் அவள் மனத்தைக் கவரும் பொருள் என்ன இருக்க முடியும்? சசாங்கன் கவி, காயகன், வேதாந்தி, சுந்தர மானவன். தன்னைத் திரஸ்கரித்து அவனை அவள் நேசிக்கிறாளோ என்ற சந்தேகம், இயற்கையிலே அகம்பாவம் கொண்ட விஜயகீர்த்திக்குப் புல்லுருவி போல் படர்ந்திருந்தது.

கோபத்தைக் காட்டும் முகத்துடன், ஹேமாங்கனையின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் நந்தவனத்தை நோக்கி யிருக்கும் சாளரத்தருகே போய் நின்றான். ஹேமா நந்தவனத்துக்குள் போய்விட்டாள்.

பூக் கொய்து கொண்டிருந்த ஹேமாங்கனையின் காதில் பாட்டை முனகிக்கொண்டே வரும் சசாங்கனது குரல் கேட்டது. திரும்பிப் பார்த் தாள். இறைவனது பெருமையைச் சொல்லும் கவியை வாய்க்குள்ளே சொல்லிக்கொண்டு அசைந்து அசைந்து வந்தான் சசாங்கன். கை நிரம்பப் புஷ்பங்களை வைத்துக் கொண்டு பூத்து நிற்கும் மலர்க் கொடியைப்போல் நின்றாள் ஹேமாங்கனை.

“ஹேமா , எனக்கு இரண்டு மலர்கள் தரலாமோ?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான் சசாங்கன்.

“எந்த மலர்கள் வேண்டும்? “என்று கைகளை நீட்டினாள்.

“எது கை, எது மலர் என்பது தெரியவில்லையே?”

“கவிஞனுக்கும் கண் தெரியாது போல் இருக்கிறது.”

“கடவுளுக்கும் யோசனை இல்லை.”

“ஏன்?”

“கண்ணையும் படைத்துப் பெண்ணையும் படைத்திருக்கிறானே.”

“சரி, சரி; நீங்கள் பேசிக்கொண்டே இருப்பீர்கள். அரசர் ஒரு நாழிகையாக உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்.”

“நான் செய்திருக்கும் காவியத்தைச் சரி பார்த்துக்கொண்டிருந்தேன். நேரமாகிவிட்டது.”

“மன்னர் தங்கள் வருகைக்குத் தவித்துக்கொண்டிருக்கிறாரே.”

“என்ன சதுரங்கம்! வாழ்க்கை நியதியே சதுரங்க ஆட்டம் போலத்தான் இருக்கிறது. ஒரு கவி கூறியிருக்கிறான்-

எல்லாம் இங்கோர் சூதாட்டம்
இரவும் பகலும் மாறாட்டம்
வல்லான் விதியே ஆடுமகன்
வலியில் மனிதர் கருவிகளாம்
சொல்லா தெங்கும் இழுத்திடுவான்
ஜோடி சேர்ப்பான் வெட்டிடுவான்
செல்லா தாக்கி ஒவ்வொன்றாய்த்.

திரும்ப அறையில் இட்டிடுவான். எனக்கு வாழ்க்கையும் அலுத்துவிட்டது. சதுரங்கமும் அலுத்து விட்டது. வல்லான் விதி என்னை என்று வெட்டி அறையில் போடுவானோ?”

“என்ன, என்றுமில்லாமல் உங்களுக்கு இவ்வளவு விரக்தி! அதற்குக் காரணம், வாழ்க்கை அல்ல; தினசரி நீங்கள் ஜயித்துக்கொண்டே வருவதுதான். இன்று நீங்கள் ஜயிக்கப் போவதில்லை.”

“அதென்ன , உனக்கு அந்த எண்ணம் வந்தது? வாழ்க்கையில் ஜயம் ஏற்படாவிட்டாலும் ஆட்டத்தில் எனக்கு ஜயம் நிச்சயம். சந்தேகப்படாதே”

“இன்று நீங்கள் ஜயிக்கப் போவதில்லை. எனக்குத் தோன்றுகிறது”.

“இன்றும் நான் தான் ஜயிப்பேன்.” ஹேமா சந்தேகத்துடன் தலையை ஆட்டினாள்.

“பந்தயம் வைக்கவேண்டும் என்கிறாயா? நான் ஜயிக்காவிட்டால் இந்த முத்துமாலை உன்னுடையது” என்று கழற்றிக் கொடுத்துக் கொண்டே, “ஜயித்தால்?” என்று கேட்டான்.

“இந்த மலர்கள்” என்று கையிலுள்ள மலர்களை அவனிடம் கொடுத்தாள் ஹேமாங்கனை. சசாங்கன் நேரே அரசனிடம் வந்துவிட்டான். ஹேமாவும் திரும்பிவிட்டாள்.

சாளரத்தினருகே நின்று கொண்டு மயில்கள் நடந்து போவதையும், தடாகத்தில் அன்னங்கள் ஜோடிகளாக, நீந்துவதையும் பார்த்துக் கொண்டிருந்த மன்னனுக்கு இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது தட்டுப்படாமல் இல்லை. அவர்கள் பேசுவதைக் கவனித்துக்கொண்டிருந்தான். தான் இங்கே ஒவ்வொரு கணமும் அவன் வருகையை எதிர்பார்த்து நிற்க, சசாங்கன் அவகாசமாக ஹேமாங்கனையுடன் சிரிப்பும் கேலியுமாக விளையாடிக்கொண்டிருக்கிறான். ‘பேஷ், இவ்வளவு தூரம் வந்து விட்டதா?’ என்று உள்ளூறக் கடிந்து கொண்டிருந்த போது, சசாங்கன் மாலையைக் கழற்றி அவளிடம் கொடுத்துக்கொண்டிருந்தான். அவள் மலர்களை அவனிடம் கொடுத்துக்கொண்டிருந்தாள். ஒரு நிமிஷம் அரசன் மனம் ஸ்தம்பித்து நின்றது. மதியிழந்து மயங்கி நின்றான்.

மனத்தில் பயங்கரமான எண்ணம் புயலடித்துக் கிளம்பிக்கொண்டிருந்தது.

சசாங்கன் அரசன் முன் நின்றான். அவன் வந்ததைக் கவனிக்காதவன்போல் இருந்தான் விஜயகீர்த்தி. “இன்று மிகவும் நேரமாகி விட்டது” என்று ஆரம்பித்தான் சசாங்கன் அரசன் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

அரசன் சுமுகமாக இல்லை என்று மாத்திரம் எண்ணிய சசாங்கன், ஆசனங்கள் போட்டிருந்த பக்கம் சென்று காய்களை வரிசையாக வைத்துவிட்டு, “நான் இன்று ஓர் ஆட்டங்கூட உங்களை ஜயிக்க விடப் போவதில்லை” என்றான்.

வழக்கமாக இவர்கள் ஆட்டம் ஆரம்பிக்கும் பொழுதெல்லாம், “நான் ஓர் ஆட்டம் ஜயிப்பேன்” என்று சொல்லிக்கொண்டு அரசன் ஆரம்பிப்பது வழக்கம். தினசரி மூன்று ஆட்டம் ஆடுவார்கள். அதில் ஒன்றை ஜயிப்பதாக அரசன் வீறாப்புப் பேசுவது வழக்கம். ஆனால், அந்த ஓர் ஆட்டத்தை ஜயிப்பது கூட ஏக தேசத்தில், அத்தி பூத்தாற்போல் இருக்கும். தினசரி அதைச் சொல்லாமல் மாத்திரம் அரசன் விளையாட ஆரம்பிப்பதில்லை. தான் தாமதித்து வந்ததால் தன்னிடம் முகங்கொடுத் துப் பேசாமல் இருக்கிறான் என்று எண்ணிய சசாங்கன், அரசனை வம்புக்கு இழுத்து ஆட்டத்தில் உற்சாகம் உண்டுபண்ண வேண்டுமென்று நினைத்து, “உங்களை ஓர் ஆட்டங்கூட ஜயிக்க விடப்போவதில்லை” என்று ஆரம்பித்தான்.

அரசனுக்கு இந்த வார்த்தை உற்சாகத்தை உண்டுபண்ணவில்லை; எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்த்தாற்போல் இருந்தது. சசாங்கனிடம் அவன் எவ்வளவோ வாஞ்சையும் நட்பும் கொண்டிருந்தாலும், சசாங்கன் ஆட்டங்களை அடிக்கடி ஜயிப்பதிலிருந்து அந்தரங்கமான அசூயையும் இருந்து கொண்டிருந்தது. யானை களையும் குதிரைகளையும் கோட்டைகளையும் கொண்ட அநேக நிஜமான அரசுகளை யுத்தத்தில் அலட்சியமாக வென்ற தன்னை இந்தச் சசாங்கன் எதிர்பாராதபடி திடீர் திடீரென்று வெகு அலட்சியமாகவும் லாகவமாகவும் தோற்கடிக்கும் மாயத்தைக் கண்டு ஒரு பக்கம் அவனிடம் அளவிறந்த பிரமையும் மதிப்பும் கொண்டிருந்தாலும் தினசரி தன்னைத் தோற்கடித்துக்கொண்டே வரும் அந்தக் கவிஞனிடம் பொறாமையும் கனிந்து கொண்டே இருந்தது. ஆகவே சசாங்கனுடைய அந்த வார்த்தைகளைக் கேட்ட அரசன் மனம் சிறிது நேரத்தில் வெடிப்பதற்குத் தயாராக இருக்கும் எரிமலையை ஒத்திருந்தது.

அப்பொழுதும் அரசன் ஒன்றும் பதில் சொல்லவில்லை. பேசாமல் வந்து உட்கார்ந்தான். அவன் காய்களைப் பார்த்த பார்வை, ‘இன்று..இவனை ஜயிப்பேன்; அல்லது இவன் உயிரையே வாங்குவேன்’ என்று சொல்வது போல் இருந்தது.

ஆட்டம் ஆரம்பமாயிற்று. அணிவகுத்து நிற்கும் படைகள் ஒவ்வொன்றாய்க் கிளம்பின. சசாங்கன் இயற்கையாகவே சதுரங்க விளையாட்டில் நிபுணன். கல்மஷமின்றி நிதானமாக விளையாடினான். அரசனே சசாங்கனைவிடக் கீழ்த்தரமான விளையாட்டுக்காரன். தவிர மனத்தில் ஆத்திரமும் கோபமும் அசூயையும் பொங்கிக்கொண்டு நின்றன. அரசன் விளையாட்டெல்லாம் தப்பும் தவறுமாய் இருந்தது. சசாங்கன் இதைக் கவனித்தான். இரண்டொரு தரம் அரசனுடைய பிழைகளைச் சுட்டிக் – காட்டி, ‘ இப்படி ஆடினால் இது நேருமே’ என்று ஜாக்கிரதைப்படுத் தினான். அரசனோ, ‘இவன் சொல்லி நாம் கேட்பதாவது!’ என்ற மனப் பான்மையோடு “சும்மா இருக்கட்டும். வேண்டுமென்று யோசித்தே – அங்கு வைத்திருக்கிறேன்” என்று பிடிவாதத்துடன் அதையே விளையாடுவான். அதன் பலன் முதல் ஆட்டம் அரசனுக்குத் தோல்வி.

இரண்டாவது ஆட்டம் ஆரம்பமாயிற்று. முதல் ஆட்டத்தில் விளை யாடியதுபோல் அரசன் ஆத்திரத்தைக் காய்களிலும் விளையாட்டிலும் காட்டவில்லை. நிதானமாக விளையாடினான். ஜாக்கிரதையாகவும் புத்தி -சாலித்தனமாகவும் விளையாடிய போதிலும் வழக்கம்போல் சசாங்கன் வெற்றி பெற்றான்.

இரண்டாவது ஆட்டம் ஆரம்பித்தவுடன் ஹேமாங்கனை வந்து வழக்கமான இடத்தில் உட்கார்ந்து கொண்டாள். அவளுக்கும் சதுரங்கம் ஆடத் தெரியும். இரண்டாவது ஆட்டம் முடிந்தவுடன் எழுந்திருந்து போய் அரசனுக்குத் தாகத்திற்குக் கொண்டுவந்து கொடுத்து விட்டு உட்கார்ந்து கொண்டாள்.

மூன்றாவது ஆட்டம் ஆரம்பமாயிற்று. அது ஆரம்பமானவுடன் ஹேமாவும் சசாங்கனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அரசன் காய்களிலிருந்து கண்களை எடுக்கவில்லை. கடுகடுப்பான அவள் முகம் ஒரு தீர்மானத்தைக் காட்டிற்று.

காய்கள் நகர்ந்தன. யானையும் குதிரையும் ஒன்றை ஒன்று பொருது நின்றன. சிப்பாய்கள் ஒருவரை ஒருவர் பார்த்து உறுமிக்கொண்டிருந்தனர். இரண்டு அரசுகளும் பத்திரமாகக் கோட்டைக்குள் பதுங்கிக் கொண்டன. ஆட்டம் மும்முரமாக வந்து கொண் டிருந்தது. அரசன் ரதங்களைக் கொண்டு சசாங்கனின் யானைகளை விரட்டுவான். கவிஞன் தன் யானையினால் அரசனின் மந்திரியைத் தாக்கப் பார்ப்பான். இதுவரையில் ஆடாத முறையில், வெகு சாதுரியமாக ஆடி வந்தான் அரசன். அவன் ஆட்டம் சசாங்கனுக்குப் பிரமிப்பை உண்டுபண்ணக் கூடியதாக இருந்தது. ஒருகால் அரசனே ஜயித்துவிடுவானோ என்று ஹேமாங்கனை எண்ணினாள்.

கொஞ்சம் விறுவிறுப்பு உண்டாக்கிக்கொள்வதற்காகத் தாம்பூலத் தைத் தேடினான் சசாங்கன். அரசனுக்குத் தாம்பூலம் மடித்துக் கொடுப்ப தற்காகத் தாம்பாளத்தில் கையை வைத்துப் பாக்கை எடுத்துக்கொண்டிருந்தாள் ஹேமாங்கனை.

காய்களைப் பார்த்தபடியே சசாங்கன் பாக்கை எடுத்துக்கொள்வதற்காகக் கையைத் தாம்பாளத்தில் வைத்தான். சசாங்கன் கை ஹேமாவின் கையின்மேல் தங்கி நின்றது. பேசாமல் இதுவரையில் ஆடி வந்த அரசன் ஜயித்துவிட்டோமென்ற உற்சாகத்தில், ‘மந்திரி தொலைந்தான்’ என்று சொல்லிக்கொண்டே கவிஞனுடைய மந்திரிக்கு முன்னால் தன் யானையை வைத்தான். இவ்வளவு நெருங்கிய ஆபத்தைக் கவனிக்காமல் ஆடி விட்டோமே என்ற யோசனையில் பாக்கைக்கூட எடுத்துக்கொள்ளாமல் விழிகள் இரண்டும் விழுந்துவிடுவனபோலத் தன் மந்திரியையும் அரசன் யானையையும் கவனித்துக் கொண்டிருந்தான் சசாங்கன். எதிர்பாராத இந்த நெருக்கடியில் தன்னையும் மறந்து சிலைபோல ஆட்டத்தைக் கவனித்துக்கொண்டிருந்தாள் ஹேமா. தனக்கு இனி ஜயந்தான் என்ற நிச்சயத்துடன் அரசன் பலகையிலிருந்த கண்களை எடுத்து நிமிர்ந்து பார்த்தான். சசாங்கன் ஹேமாங்கனை இவர்களின் விழிகள் காய்களை நோக்கியிருந்தன.

கைகள் தாம்பாளத்தில் இருந்தன. உணர்வின்றிக் காய்களைக் கவனித் திருந்தார்கள். அரசன் தம்மைக் கவனிப்பதையும் அவன் மனத்தில் பயங்கரமான எரிமலை புகைய ஆரம்பிப்பதையும் பாவம், அவர்கள் அறியார்கள்! அதே நேரத்தில், மந்திரியின் உயிருக்காகத் தவித்துக் கொண்டிருந்த சசாங்கனுக்கு மின்னல் போன்ற ஒரு கற்பனை தோன் றிற்று. வெகு உற்சாகத்துடன், “என் மந்திரியா தொலையும்? உங்கள் ஆட்டந்தான் தொலைந்தது. இதோ அரசு!” என்று தன் மந்திரியைக் குறுக்கே இழுத்து யானையிடமிருந்து தப்பும்படியாகவும், அதே சமயத்தில் எதிரி அரசனைத் தாக்கும்படியாகவும் உள்ள ஓர் இடத்தில் வைத்தான். அவ்வளவு தான்; அந்த அரசுக்குப் பதில் இல்லை. அரசனின் ‘அரசன்’ கட்டுப்பட்டுவிட்டான்.

“ராஜா கட்டுப்பட்டுவிட்டதே” என்று குதூகலத்தைக் காட்டும் தொனியில் கத்தினாள் ஹேமாங்கனை. “ஆட்டம் போச்சு” என்று கையைத் தூக்கி ஒரு சொடுக்குச் சொடுக்கிவிட்டு ஹேமாங்கனையைத் திரும்பிப் பார்த்தான் சசாங்கன்.

அந்தச் சந்தோஷம் நீடித்திருக்கவில்லை. அந்த நிமிஷமே மன்னனின் வாள் சசாங்கனின் மார்பில் பதிந்து போயிருந்தது.

எதிர்பார்க்க முடியாத இதைக் கண்டு ஹேமாங்கனை அப்படியே மூர்ச்சித்து விழுந்தாள். பிரக்ஞை வந்து அவள் கண்ணைத் திறந்தபோது, அவள் அந்தக்கரணத்தையே ஊடுருவிப் பார்ப்பதுபோல் பார்த்துக் கொண்டிருந்தான் மன்னன்.

“எவ்வளவு நாளாகச் சசாங்கனுடன் இவ்வளவு நெருங்கிய பழக்கம்?” என்றான். ஒன்றும் புரியாமல் மிரள மிரள விழித்தாள் ஹேமா. “நந்தவனத்தில் மாலைகள் மாற்றிக்கொண்டதைப் பார்த்துக்கொண்டு தான் இருந்தேன். ஒளிக்காமல் உண்மையைச் சொல்” என்று உறுமினான். ஹேமாங்கனைக்கு ஓரளவு அப்பொழுது தான் விஷயம் விளங்க ஆரம்பித்தது.

“ஐயோ, ஒன்றுமே இல்லையே! சதுரங்க ஆட்டத்தை அவர் ஜயிக்க மாட்டார் என்றேன்; நான் ஜயிப்பேன் என்றார். மாலையைப் பந்தயமாக வைத்தார். வேறு ஒன்றும் இல்லையே?”

“ஓகோ! என்னை ஜயிப்பதாகப் பந்தயம் வேறு வைத்தானோ? இனி யாரை ஜயிக்கிறான், பார்ப்போம்! ஹேமா, எனக்கு இப்பொழுது தான் எல்லாம் தெரிகிறது. சசாங்கனை இன்னும் லேசில் விடப் போவதில்லை. உன்னையும் சும்மா விடப் போவதில்லை. இன்னும் இருக்கிறது!”” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

சில தினங்கள் சென்றன. விஜயகீர்த்தி சதுரங்கப் பலகையில் காய்களை வரிசையாக வைத்துக்கொண்டிருந்தான். அன்றைய விளையாட்டிற்குப் பிறகு இப்பொழுது தான் அவன் ஆட உட்கார்ந்தது. பக்கத்து அறையில் நாளுக்கு நாள் பலவீனமடைந்து வரும் ஹேமாங்கனை படுத்துக் கொண்டிருந்தாள். அவள் மனம் இருண்டிருந்தது, சந்திரன் இல்லாத இரவைப்போல.

“ஹேமா, இங்கே வா; வந்து இதைப் பார்” என்றான். அவள் மெதுவாக நடந்து வந்தாள்.

“இவை என்ன தெரியுமா? சசாங்கன் முதுகெலும்பினால் செய்த காய்கள்” என்று வரிசையாக நிற்கும் காய்களைச் சுட்டிக் காட்டினான்.

அவள் அப்படியே அதிர்ந்து போனாள். பயங்கரமான அந்தக் காய்களையும், அவற்றைவிடப் பயங்கரமான அரசன் மனத்தையும் கண்டு திகைத்துத் திடுக்கிட்டாள்.

“சசாங்கனுடன் வேண்டிய மட்டும் ஆடியாகி விட்டது. அவன் ஆவியுடன் இனி ஆடப் போகிறேன்” என்றான் அரசன். அவள் ஒன்றும் புரியாமல் தலை குனிந்து கொண்டிருந்தாள்.

“எப்படி என்று கேட்கிறாயா? கிட்டே வா. அதற்காகத்தானே உன்னைக் கூப்பிட்டேன்” என்றான். அவள் உணர்ச்சியற்று வறண்ட மேகம் போல் இருந்தாள். அவனோ தகிக்கும் பாலைவனத்தைப் போல இருந்தான்.

“சசாங்கன் ஆட்டங்களை ஜயிப்பதில் உனக்குச் சந்தோஷமாகத்தான் இருந்தது. இப்பொழுது அவன் ஆவி ஜயிப்பதிலும் உனக்குச் சந்தோஷமாகத்தான் இருக்கும்” என்று சொன்ன அவன் குரலின் வறட்சியும் உள்ளத்தின் ஈரமற்ற தன்மையும் ஹேமாங்கனைக்குப் பொசுக்கி எடுக்கும் வேதனையை உண்டுபண்ணின.

“இங்கே வந்து உட்கார்” என்றான். அவன் குரலின் ஸ்தாயி ஏறிற்று. “என் ஆட்டத்தை நான் ஆடப்போகிறேன். சசாங்கன் ஆட்டத்தை நீ ஆடு” என்று சொல்லிக்கொண்டு உயிரை வாங்கக்கூடிய ஒரு புன்முறுவல் செய்தான். ஒவ்வொரு வார்த்தையும் அவள் உள்ளத்தைக் குத்திக்கொண் டிருந்தது. அவளுக்கு வருத்தமும் பயமும் பொறுக்க முடியவில்லை. இருந்தாலும், தப்ப முயல ஓடும் மிருகத்தைப் போல, “முடியவே முடியாது. அந்தக் காய்களைத் தொடவே மாட்டேன்” என்று நகர்ந்தாள்.

“மாட்டேன் என்றா சொல்லுகிறாய்? என்ன நேரும், தெரியுமா?”

“என்ன ஆகும்? இன்னொரு வரிசைக்கும் காய்கள் கிடைக்கும்” என்று லட்சியமின்றிப் பதிலளித்தாள். அவள் மனம் மாறிவிட்டது. மகத்தான துணிவு உண்டாயிற்று. அவள் முகம் மிகுந்த அருவருப்பைக் காட்டிற்று. எதையும் செய்வதற்கு வேண்டிய நெஞ்சழுத்தமும் மனவலியும் உண்டாகி வந்தன. பழி வாங்க விரும்பும் ஐந்துவைப்போல் இருந்தாள்.

“எனக்கு இன்னொரு வரிசைக்குக் காய்கள் தேவை தான். அதற்காகத் தான் உன்னை ஆடச்சொல்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே அவளைக் கரகரவென்று இழுத்து அவள் கையை அந்தக் காய்களின் மேல் வைத்தான்.

காய்கள் கையில் பட்டவுடன் ஒரு விநாடி அவள் உடம்பு முழுவதும் கூசி நடுங்கிற்று. மறுவிநாடி பாம்புபோல் சீறி விழுந்தாள். பேய் பிடித்தது போலத் தோன்றியது அவள் முகம். அவள் தோற்றத்தையும் முகத்தையும் கண்டு கலங்காத நெஞ்சத்தவனான அரசனும் சிறிது உள்ளூற நடுக்கம் கொண்டான். அந்தக் காயில் தான் ஏதாவது சக்தி இருந்திருக்குமோ?

அமானுஷ்ய சக்தியை அடைந்தவள் போலத் தோன்றும் அவளைப் பார்த்துப் பார்த்து ஒன்றும் தோன்றாமல் திகைத்தான் அரசன்.

“இந்த ஆட்டத்தை நான் தான் ஜயிக்கப் போகிறேன். இதுவும் உயிரை வாங்கும் ஆட்டமாகத்தானே போகிறது!” என்று காயை அவள் நகர்த்தினாள். என்ன அப்படி ஆவேசம் திடீரென்று அவளுக்கு வந்து விட்டது?

யோசனை செய்ய முடியாத நிலையில் இருந்த அரசன் வேறு வழியின்றித் தன் காயை நகர்த்தினான். வெறிகொண்டவளைப்போல் தோன்றினாள் ஹேமா. “நீங்கள் சொல்வது ரொம்ப சரி. நீங்கள் என்னுடன் ஆடவில்லை. இந்த ஒவ்வொரு காயிலும் சசாங்கரின் ஆவி துடித்துக்கொண்டிருக்கிறது. சசாங்கரே ஆடுகிறார்” என்று காயை நகர்த்தினாள்.

அவன் பார்த்தான். ஆம்; உண்மையிலேயே காய் ஒவ்வொன்றும் உயிர்கொண்டு நகருவதற்குத் தவித்துக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. ஹேமாவின் கையைக் காய்கள் இழுத்துக்கொண்டு போவது போன்ற ஒரு பாவனை அவனுக்கு உண்டாயிற்று.

அவள் ஆடினாள். அவனும் ஆடினான். ஆட்டம் விறுவிறுப்பாக விரிந்து வந்தது. ஹேமாவின் படைகள் அணிவகுத்து நிற்பதும் பலங்கள் ஒன்றுக்கு ஒன்று துணையாக வியூகத்தில் நிற்பதும் காட்சிக்கு வெகு அழகான தோரணையில் இருந்தது. சசாங்கன் விளையாட்டைப் போலவே இருந்தது. ‘அவன் விளையாட்டைப் பார்த்துப் பார்த்து அந்த வழிகள் அப்படியே இவளுக்குப் பாடமாகிவிட்டனவா, அல்லது வேறு என்ன காரணமாக இருக்க முடியும். இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு அவனுக்கு நேரம் ஏது?’

ஹேமாவின் படைகள் தாக்க ஆரம்பித்துவிட்டன. அதிகமாக விளையாடாமல் ஆட்டங்களைப் பார்த்துக் கொண்டே வந்திருந்த அவள் இப்போது ஆடிவரும் இந்த விசித்திர விளையாட்டால் அவனுக்கு ஒரு பக்கம் பயமும் உண்டாயிற்று. அவளுடைய சாதாரணமான விளையாட் டாக இருக்க முடியாது என்ற எண்ணம் உள்ளூற அவன் மனத்தில் திகிலை உண்டுபண்ணிக்கொண்டே யிருந்தது. அவள் பேச்சும் தோற்றமும் அந்த எண்ணத்தை ஊர்ஜிதப் படுத்துவதற்கு ஏதுவாகவே இருந்தன.

“இது என் விளையாட்டு அல்ல. சசாங்கர் ஒரு கவிதை சொன்னார். அதைப்போல, என் மூலமாகச் சசாங்கரின் ஆவியே ஆடுகிறது” என்று பேசாமல் விளையாடும் அரசனிடம் சம்பந்தமில்லாமல் சொன்னாள்.

மனம் குழம்பியிருந்த அரசன் மனத்தில் ஒரு பிராந்தி ஏற்பட்டது. ஒரு காயை நகர்த்தி வைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தான். என்ன ஆச்சரியம்! சசாங்கன் அல்லவா ஆடிக்கொண்டிருக்கிறான்?

“உங்கள் குதிரை போச்சு” என்றாள் ஹேமா. அப்பொழுது தான் அவனுக்குச் சுய அறிவு வந்தது. ஆம், எதிரே சசாங்கன் ஆடவில்லை; ஹேமா தான் ஆடுகிறாள். வெகு நாள் அவனுடனேயே ஆடிய பழக்கத்தை ஒட்டி அந்தப் பிரமை உண்டாயிற்றுப் போலும் என்று சமாதானம் செய்துகொண்டான். ஆனால் அது ஒரு நொண்டிச் சமாதானமாகத் தான் அவனுக்குத் தோன்றிற்று. ‘சை! ஏன் என் மனம் அதைரியப்படுகிறது?’ என்று நெஞ்சைத் தைரியப்படுத்திக்கொண்டு தாகத்திற்குச் சாப்பிட்டுவிட்டுத் தாம்பூலம் தரித்துக்கொண்டான்.

ஹேமாவோ, நிமிஷங்கூட வீணாக்க விரும்பாதவளைப் போல அவசரப் பட்டுக்கொண்டிருந்தாள். அவள் காய்களோ அடுத்தபடி நகருவதற்குப் பறந்துகொண்டிருந்தன. அரசன் பலங்களோ சிதறிக் கிடந்தன. அவள் பலங்களோ அட்டகாசமாக முன்னேறியிருக்கின்றன.

“மகாராஜா, நான் ஆடமாட்டேன் என்றேன். என்னைப் பலவந்த மாக ஆடச் சொன்னீர்கள். இப்பொழுது இந்த ஆட்டத்தில் ஒரு பேயின் உற்சாகம் எனக்கு வந்து விட்டது”, என்று சொல்லும் ஹேமா உண்மையில் ஒரு பேயைப் போலவே தோன்றினாள். ஸப்த நாடியும் ஒடுங்கிய பிராணியைப் போல ஆடினான் அரசன். பயத்தையே அறியாத அவன் மனத்தில் எப்படியோ திகில் புகுந்து கொண்டு பாடுபடுத்த ஆரம்பித்து விட்டது. தடுமாறி நின்றான் முன்னேற்பாடாகச் செய்து வைத்திருந்த எதிரிகளின் வலையில் சிக்கிக்கொண்டது போன்ற அச்சம் அவனுக்கு உண்டாயிற்று.

அவன் ஆட்டம் வரவர மோசமாகிக்கொண்டே வந்தது; மரணத் தறுவாயில் இருக்கும் ஜீவனைப்போல அவனுடைய பயமும் அதிகரித்து வந்தது. இறக்கப் போகிறவனின் துக்கத்தைப் போன்ற உணர்ச்சி இருந்தது.

“எனக்குத்தான் வெற்றி” என்று சிரித்தாள் ஹேமா, ஒரு காயை நகர்த்திவிட்டு.

“இது என்ன, சசாங்கன் இப்படிச் சிரிக்கிறான்!” என்று திகைத் தான் அரசன். மறு விநாடி, ஹேமாங்கனை அல்லவா விளையாடுகிறாள்?

‘அவள் தானே சிரிக்கிறாள்?’ என்று தெளிவு படுத்திக்கொண்டான். வர வர அந்த விளையாட்டும் சுற்றுணர்ச்சியும் வாழ்க்கைக்குப் புறம்பான அந்நிய உலகத்தின் ஆவியைக் கொண்டிருப்பது போல் தோன்றின. அவன் மனம் பிருடை தவிர்ந்த வாத்தியத்தைப் போல, சுருதி கலைந்து இருந்தது. யோசனையின்றிக் காய்களை நகர்த்தி வந்தான்.

ரதத்தை ‘அரசன்’ முன் கொண்டு வந்து நிறுத்தி ‘அரசு’ என்றாள் . ஹேமா. விதியிடமிருந்து தப்ப முயலும் மனிதனைப் போலத் தன் காயைக் காப்பாற்ற முயன்றான் அரசன். வேறு இடத்தில் ‘அரசனை’ நகர்த்தி வைத்தான். யானையை அரசனுக்கு முன் நிறுத்தி ‘அரசு’ என்றாள் ஹேமா. அவ்வளவு தான்: அந்த ‘அரசு’க்குத் தப்ப வழி இல்லை. அரசனின் ரத்தம் கொதித்துக்கொண்டு கிளம்பியது. அவமானம் ஆத்திரம் பயம் எல்லாம் சேர்ந்து அவனுடைய ஒவ்வொரு நரம்பையும் சுண்டிச் சுண்டி இழுத்தன.

“சசாங்கரின் ஆவி வெற்றி பெற்றுவிட்டது. இனி நீங்கள் தோற்பதைவிடப் பிராணனை விடலாம்!” என்று சொல்லிக்கொண்டே அந்தக் காய்களை அரசன் முகத்தில் எறிந்துவிட்டு ஹேமாங்கனை எழுந்திருந்தாள். அரசன் தலை ‘கிறு கிறு’ வென்று சுழன்றது. அந்தக் காய்கள் அவன் மேல் பட்டவுடன் ஆயிரம் பேர்கள் ஈட்டியால் அவனைக் குத்துவது போல இருந்தது.. “ஐயோ” என்று சொல்லிக்கொண்டு கீழே விழுந்தான். வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் இரத்தம் பீரிட்டுக்கொண்டு வந்தது.

அரசன் ஆட்டம் முடிந்தது. விதியின் ஆட்டமும் முடிந்தது.

-ஜனவரி, 1943

– கலைமகள் கதம்பம் (1932-1957), வெள்ளி விழா வெளியீடு, முதற் பதிப்பு: ஏப்ரல் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *