சகுந்தலை சரிதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: June 13, 2022
பார்வையிட்டோர்: 17,797 
 
 

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1 – 9 | அத்தியாயம் 10 – 19

10. சகுந்தலை அத்தினாபுரிக்குப் புறப்பட ஆயத்தமாதல்

தீர்த்த யாத்திரையினின்று திரும்பிவந்த கண்ணுவர், ஒருநாளிரவு தமது மாணாக்க னொருவனை அழைத்து, இரவு எத்தனை நாழிகைகள் கழிந்துவிட்டன’ வென அறிந்துவரு மாறு அனுப்பினார். மாணாக்கன் சென்று பார்த்த பொழுது, மருத்துப் பூண்டுகளுக்குத் தலைவ னான சந்திரன், மேற்கு மலையில் மறைந்தான்; எதிர்ப்புறத்தில் வைகறை என்னும் தேர்ப் பாகனை முன்னனுப்பி, பொன்போன்ற சூரியன், தோன்ற ஆரம்பித்தான். இவ்வாறு, இருசுடர்களுள் ஒன்று தோன்ற, மற்றொன்று மறைதல் பூமியிலுள் ளோர் வாழ்வில் இன்பமுந் துன்பமும் மாறிமாறி வருதலைப் போன்றிருந்தது. சந்திரன் மறைய, அதனா லழகிழந்த ஆம்பல், கணவரைப் பிரிந்து மனமும் உடலும் வருந்தும் மகளிரைப் போன்றி ருந்தது. இவற்றை யவதானித்த மாணாக்கன் காலை வேள்வி செய்யுங்காலம் வந்து விட்டதென, குருவிடங் கூறுமாறு சென்றான்.

அன்று வைகறையிலே துயிலுணர்ந்த அனசூயை, பல உறுதிமொழிகள் கூறிச் சென்ற அரசன், அதுகாறுந் திரும்பாததைக் குறித்து மனங் கவன்றாள். அவர் ஒரு கடிதம் கூட எழுத வில்லையே; துருவாச முனிவரின் சாபத்தால், அரசர் சகுந்தலையை மறந்திருப்பாரோ! அங்ஙன மாயின், யாது செய்யத்தக்கது! சகுந்தலையின், நினைவை ஏற்படுத்துவதற்கு, அவர் தந்த கணையாழியை அவர்க்கு நாமனுப்பலாம். ஆனால், அதனை யார் செய்வது? தந்தை கண்ணுவருக்கு, சகுந்தலை காந்தர்வ மணம் புரிந்துள்ளாளென்பதையும், அதன் பயனாய் அவள் கருப்பமுற்றிருக்கின்றா ளென்பதையுங் கூறுதற்கு, என் மனம் விழைகின்ற தெனினும், நா எழவில்லையே! அவர் அறியின் எல்லாம் நன்மையாய் முடியுமே! அவர் அறியாராயின், நாம் யாது செய்ய முடியும்?’ எனப் பலவாறு சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

அனசூயை சிந்தனையிலாழ்ந்திருக்கையில் அங்கே பிரியம்வதை தோன்றி மகிழ்ச்சியோடு அனசூயையின் தோள்களைப் பற்றிக் கொண்டு தோழி, இன்று சகுந்தலையை அவள் கணவனிட மனுப்ப வேண்டிய கடன்கள் செய்யவேண்டும்;

“வா, சீக்கிரம் போகலாம்” என்று கூறினாள்.

அனசூயைக்கு இவ் வார்த்தைகள் அதிசயத்தை யும் மகிழ்ச்சியையும் அளித்தன. அவள் உடனே “இது எப்படி நிகழ்ந்த து? விபரமாகச் சொல்”
எனக் கேட்டாள்.

“நான் இன்று காலை, சகுந்தலை நன்றாயுறங் கினளா’ என்பதை யறியச் சகுந்தலையிடஞ் சென்றேன். அப்பொழுது சகுந்தலை நாணத்தினாற் றலைகவிழ்ந்து கொண்டிருக்க, அப்பா கண்ணுவர், அவளைத் தழுவிக் கொண்டு, ‘தகுதியுள்ள மாணவனுக்குக் கற்றுக்கொடுத்த கல்விபோல நீயும் எனக்குக் கவலை தராதவ ளானாய்; உன் காந்தர்வ விவாகத்தை அசரீரி மூலமறிந்தேன்; அஃது அரசர்களுக்கேற்றதே; இன்றே துறவிகளைத் துணையாகக் கூட்டி, உன் கணவனிடம் உன்னை அனுப்புகிறேன்’ என்று கூறிக் கொண்டிருந்தார்” எனக் கூறினாள்.

தீர்த்த யாத்திரை முடிந்து கண்ணுவர் ஆசிரமத்தை அடைந்தபோது, அசரீரியின் மூலம் சகுந்தலையின் காந்தர்வ மணத்தையும் அதனாலவள் கருவுற்றிருப்பதையும் அறிந்து கொண்டார்.

பிரியம்வதை கூறியவற்றைக் கேட்ட அனசூயை, மகிழ்ச்சியடைந்தா ளாயினும், சகுந்தலையைப் பிரியவேண்டுமே யென்பதனாற் சிறிது துக்கமு மடைந்தாள்.

அனசூயை பல நாள்களுக்கு வாடாமலிருக்கக் கூடிய ஒரு மகிழமாலையை, தென்னோலையால் முடையப்பட்ட ஒரு கூடையில் வைத்து, ஒரு மரக்கிளையிலே தொங்க விட்டிருந்தாள், அவள் அம்மாலையையு மெடுத்துக் கொண்டு கோரோ சனை, தீர்த்தமண், அறுகம் புல் முதலிய மங்கலப் பொருள்களைத் திரட்டி வரச் சென்றாள்.

ஆசிரமத் தாயாராகிய கௌதமி, சகுந்தலையை அத்தினாபுரிக்குக் கூட்டிச் செல்லும் துறவியர் களை அழைக்குமாறு கூறிய சத்தம், பிரியம் வதைக்குக் கேட்டது. பிரியம்வதை, அதை அனசூயைக்குக் கூறிவிட்டு, விரைவாகச் சகுந்த லையிருக்குமிடஞ் சென்றாள். அங்கே சகுந்தலை சூரியோதயத்திலே ஸ்நானஞ் செய்விக்கப்பட்டு, ஆசிரமத் தாய்மார்களா லாசீர்வதிக்கப்பட்டு நின்றாள்

தோழியரைக் கண்ட சகுந்தலை, மகிழ்ந்து “நல்ல நேரத்தில் வந்தீர்கள்; இங்கே வாருங்கள்” என வரவேற்றாள். தோழியர் சகுந்தலையை அலங்காரஞ் செய்யத் தொடங்கினர். ஆசிரமத்திற் கிடைக்கும் பொருள்களால் அவர்கள் சகுந்த லையை அலங்காரஞ் செய்தனர். அப்பொழுது விலையேறப்பெற்ற வெண்பட்டாடைகளையும் அணிகலன்களையும் செம்பஞ்சுக் குழம்பையுங் கொண்டு, சீடர்கள் சிலர் அங்கே வந்து, ஆசிரமத் தாயாராகிய கௌதமியிடம் அவற்றைக் கொடுத்தனர்.

ஆடை ஆபரணங்களைக் கண்டு அனைவரும் அதிசயமடைய, கௌதமித் தாயார் அச் சீடர்களை நோக்கி “குழந்தைகளே, எங்கிருந்து இவற்றைப் பெற்றீர்கள்” என்று வினாவினார்.

“தந்தை கண்ணுவர், மரங்களினின்று, மலர் பறித்து வருமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார். அப்பொழுது அங்கே ஒரு மரம், மங்கலக் கடன்களுக் கேற்ற வெண்மதி போன்ற பட்டாடை களை ஈந்தது; மற்றொன்று இவ்வாபரணங்களைத்

தந்தது. இன்னொன்று பாதங்களுக்கூட்டும் செம்பஞ்சுக் குழம்பை நல்கிற்று” என விடையளித்தனர் சீடர்.

அனைவரு மிதனைக் கேட்டு மகிழ்ச்சியடைந்து, (சகுந்தலை தன் கணவன் மாளிகையி லடையவிருக்கு மரச செல்வத்தை அறிவிக்கும் உற்பாதமிவை” என்று கூறிப் புன்னகை புரிந்தனர். சகுந்தலை நாண மெய்தி நின்றாள். தோழியர் சகுந்தலையை, தாம் ஓவியங்களிற் கண்ட சித்திரம் போலப் புனைந்து அணி செய்தனர்.

11. கண்ணுவர் சகுந்தலையை வழி அனுப்புதல்

சகுந்தலையைத் தோழியர் ஆபரணங்களா லணிசெய்த பின்னர், பட்டாடைகளையும் அணிவித்தனர். சகுந்தலை அவ் வெண்பட்டா டைகளை யணியும்போது, கண்ணுவர் பேரின்பம் நிறைந்த கண்களால் அவளை அன்பொழுகப் பார்த்துக்கொண்டு அங்கே வந்தார். அவரைக் கண்ட சகுந்தலை நாணத்துடன் குனிந்து வணங்கினாள். வணங்கிய சகுந்தலையின் தலையிற் கண்ணுவர் கையை வைத்து, “குழந்தாய், யயாதி மன்னனால், சர்மிஷ்டை எவ்வாறு நன்கு மதிக்கப்பட்டாளோ, அவ்வாறே, நீயும் நின் கணவனால் மிகவும் நன்கு மதிக்கப்படுவாயாக! சர்மிஷ்டை புரு என்னும் பெறற்கரும் புதல் வனைப் பெற்றுச் சிறப்படைந்தவாறுபோல, நீயும் இவ்வுலகம் முழுவதையும் ஆளத்தக்க புதல் வனைப் பெறுவாயாக!” என வாழ்த்துவதுபோல வரமீந்தார்.

யயாதி, சந்திர வமிசத்திற் றோன்றிய அரசன். சர்மிஷ்டை, பிசாசர் வம்ச அரசனாகிய விருஷபர்வன் என்பவனின் புதல்வி. யயாதி மன்னன் முதலிற் சுக்கிராசாரியர் புதல்வியான தேவ யானையை மணஞ் செய்தான். தேவயானைக்குத் தோழியாகச் சர்மிஷ்டை அனுப்பப்பட்டாள். அவள் அழகிலும் அறிவிலுஞ் சிறந்தவள். இவற்றாற் கவரப்பட்ட யயாதி, சர்மிஷ்டையின்மேற் காதலுற்றான். அவளுமவன்மேற் காதல்கொள்ள, இருவரும் தம் பெற்றோரினநுமதி பெறாது, சகுந்தலையும் துஷ்யந்தனும் மணங்கொண்டமை போல, தாமாகவே மணஞ்செய்து கொண்டனர். அவர்களின் புதல்வன் புரு எனப்படுவான்; புரு பேரரசன். அப் புருவின் மரபிலேயே துஷ்யந்தன் தோன்றினான். இதனை உட்கொண்டே கண்ணுவர் சகுந்தலையை மேற்கூறியவாறு வாழ்த்தினார்.

கண்ணுவர் அங்கே கிடந்த வேள்வித்தீயை வலம்வருமாறு சகுந்தலைக்குக் கூறினார். சகுந்தலை, அப்போதுதான் வேட்கப்பட்ட வேள்வித் தீயை வலம் வந்து கண்ணுவரை வணங்கினாள். கண்ணுவர், இருக்கு வேதத்தி லுள்ள ஒரு சுலோகத்தைக் கூறி, “பரிசுத்தமான விறகுக ளிட்டு, தருப்பைப்புல் பரப்பி, வேள்வி மேடையைச் சுற்றி அமைக்கப்பட்ட குழிகளி லாக்கப்பட்ட இப்புனிதமான தீ, உன்னைத் தூய்மை செய்வதாக!” என்று வாழ்த்தி “இப்பொழுதே புறப்படுக” என்று கூற, அவள் புறப்பட்டாள். கண்ணுவரின் மாணவர்களுள் ஒருவரான சார்ங்கரவன், சகுந்தலைக்கு வழிகாட்டிச் சென்றான்.

எல்லோரும், அவளைத் தொடர்ந்து செல்ல, “இலக்குமியை ஒத்தவளான சகுந்தலை செல்லும் வழிகளி னிடையிடையே தாமரைகள் நிறைந்த குளிர்ந்த வளம் பொருந்திய தடாகங்கள் விளங்குவனவாக; மிக்க வெப்பத்தைத் தருஞ் சூரியனாலுண்டாக்கப்படும் வெப்பத்தை, பெரிய இலைகளையுடைய மரங்கள் நீக்கி, நிழல் செய்வனவாக; பூக்களிலிருந்து கீழே விழுந்த மகரந்தப் பொடிகள், அவள் பாதங்களுக்கு மென்மை தருவனவாக!, அவள் செல்ல வேண்டிய தூரம் குறுகுவதாக!”

*மங்கையிவள் செலும்வழியில் நறுந்தருக்கள்
நிழல்செய்து மலிக;மற்றும் பொங்குமணல், தாமரையின் பொலந்தாது
போற்பொலிக; புனிதவாவி எங்குமலர்ந் திலங்கிடுக; மந்தமா
ருதம்வீச இனியதோகை யுங்குயிலுந் துணையாக; அறுதொடர்க்கண்
ணுகரம்போ லுறுகதூரம்.

எனக் கண்ணுவர் மனமகிழ்ந்து வாழ்த்தினார். சகுந்தலை புறப்படுவதற்கு முன், அவ்வாசிர மத்தில் வதியும் தேவதைகளை வணங்கி விடை பெற்றாள். சகுந்தலை கணவனிடஞ் செல்வதில் மகிழ்ச்சியடைந்தா ளாயினும், ஆசிரமத்தை விட்டுப் பிரிவதிலே துன்பமடைந்தாள். அத் துன்பத்தைப் போலவே ஆசிரமத்திலுள்ளோரும் ம.வே. மகாலிங்கசிவம் அவர்களாற் பாடப்பட்டது. பாயிரத்திலுள்ளவாறு இது திருத்தப்பட்டுள்ளது.

அவளைப் பிரிவதில், மிகத் துன்புற்றனர். ஆசிரமவாசிகள் மாத்திரமா? சகுந்தலையைப் பிரிவதில், மான்கள் முதலிய விலங்குகள் கூடத் துன்புற்றன. தம் வாய் நிறையக் கௌவிய தருப்பைப் புல்லை வாயிலிருந்து நழுவவிட்டு, மான்கள் வருத்தமுற்றன. மயில்கள் தம் ஆடலைவிட்டுக் கலங்கின. பழுத்த இலைகளையும், மிதமிஞ்சிய நீரையும் உதிரவிட்ட மரங்கள், தங் கண்ணீ ரைச் சிந்தி அழுவன போன்றிருந்தன.

சகுந்தலை தன்னுடன் பிறப்பைப் போலக் கருதி வளர்த்த ”வனசோதினி” என்னும் மல்லிகைக் கொடியிடத்து, முதலில் விடைபெறச் சென்றாள். அக்கொடி ஒரு தேமா மரத்தைத் தன் கொடிகளாற் றழுவிக்கொண்டிருந்தது. சகுந்தலை, அதன் கிட்டப்போய் “இன்று முதல் நான் உன்னை விட்டுப் பிரிந்து நெடுந்தொலைவிற் போய் இருக்க வேண்டியவளா யிருக்கின்றேன். ஆயினும் என்னுயிரினுமினிய தோழியரிருவரும் உன்னை யன்பாய்ப் பாதுகாப்பர்; அவர்களிடத்து நின்னை ஒப்படைக்கின்றேன். நீ வருந்தாதே” என்று கூறினாள்.

அங்ஙனமாகில் எங்களை யார் கையில் ஒப்படைக்கிறாய்” என்று தோழியர் இருவரும் கூறிக் கண்ணீ ர் சிந்தினர். அவர்கள் துயரைக் கண்ட கண்ணுவர், பல இதமான வார்த்தைகள் கூறி, அவர்களைத் தேற்றினார்.

கருக்கொண்டிருத்தலால், ஆசிரமத்தி னயலில் மெதுவாக உலாவி மேய்ந்து கொண்டிருந்த பெண்மானைக் கண்ட சகுந்தலை, கண்ணுவரை நோக்கி, “அப்பா, இம்மான், கன்றீன்றவுடன் அம் மகிழ்ச்சியான செய்தியை – எனக்குத் தெரிவியுங்கள்” என்று கூறினாள். கண்ணுவர், அதனைக் கேட்டுப் புன்முறுவல் பூத்தார். அச் சமயத்துச் சகுந்தலையின் ஆடையை, யாரோ பிடித்து இழுப்பது போன்ற ஓருணர்ச்சி சகுந்தலைக்கு ஏற்பட்டது. அவள் திரும்பிப் பார்த்தாள். தன் கை நிரம்ப நெல்லை யூட்டியும் அதன் வாயிலே தருப்பைப் புல்லின் முனை குத்தியமையா லேற்பட்ட புண்ணுக்கு இங்குதி நெய்யைத் தடவி, அப் புண்ணை யாற்றியும் தன் புதல்வனைப்போல, அன்பு பாராட்டி வளர்த்த மான் கன்று, தன்னுடையைப் பற்றி யிழுப்பதைக் கண்டாள்.

“குழந்தாய், உன்னை விட்டுப் பிரியப் போகின்ற என்னை, ஏன் தொடருகின்றாய்? உன்னையீன்ற சிறிது நேரத்தால், உன் தாய் இறந்துவிட, நான் நன்கு வளர்த்தேனென்பது உண்மைதான். ஆயின், நான் உன்னை விட்டுப் பிரியுங் காலம் வந்து விட்டது! நானில்லாவிட்டாலும், என் அப்பா, உன்னை இனிது காப்பார். ஆகையால் நீ திரும்பிப் போ” என்று அழுகையுடன் கூறினாள். ‘குழந்தாய், அழாதே; நீ யழுதலாற் கண்ணீ ர் இமைகளை மறைக்கின்றன. கணவனிடம் செல்லும் நீ, அழலாகாது” என்று கண்ணுவர் கூறிச் சகுந்தலையைத் தேற்றினார்.

தமக்கு இனியவர்களை வழி அனுப்புபவர்கள் நீர்க்கரைவரை சென்று வழியனுப்புவது முறை.

சகுந்தலை, ஓர் ஏரிக்கரையண்டை வந்து விட்டமையால், அதற்கு மேற் செல்லல் முறையன்று என்ற விதிக்கிணங்க, எல்லோரும் அங்கே தங்கினார்கள். அப்பொழுது, கண்ணுவர் சார்ங்கரவனை நோக்கி, “சார்ங்கரவா, நீ சகுந்தலையை அரசனெதிரிற் கொண்டு போய் விட்டு நாம் தவச் செல்வமுடையோ மென்றும், அவரோ பெரிய அரச ரென்றும், அவருடைய குடி மிக மேம்பாடுடைய தென்றும், அவரிடத்துச் சகுந்தலை மிகுந்த அன்பு பூண்டு ஒழுகுகின்றா ளென்பதை அவர் உணர்ந்து, அவர் மனைவியரோ டொப்ப இவளையும் நன்கு நடத்தி வரல் முறை’ யென்றும் தெரிவி. அதற்குமேல் இவள் நல்வினைப்படி நடக்கட்டும்” என்று கூறியபின் சகுந்தலையை நோக்கி, “குழந்தாய், என் மகளே, நீ உன் கணவனில்லத்திற்குச் சென்றபின், நின் மூத்தோர்க்கு ஏவல் செய்து ஒழுகு; நின் கணவனுக்குரிய மற்றைய மனைவியரோடு, அன்பு பூண்டுவாழ். உன் கணவன் உன்னைக் கோபிப்பினும், நீ அவனுடன் கோபியாதே; இவையே மனைவியர்க்குரிய ஒழுக்கம். இதற்கு மாறாய் நடப்பவர் கொடியவர். இதனை மனதிற்கொள்’ என்று கற்பொழுக்கங் கூறி, ஆசீர்வதித்தார். அப்பொழுது சகுந்தலை கண்ணுவர் பாதத்தில் விழுந்து தங்களைப் பிரிந்து நான் எங்ஙனம் வாழ்வேன்” என்று கூறியழுதாள்.

“மகளே, நீ ஓருத்தம புத்திரனைப் பெற்று மகிழும்போது என்னைப் பிரிந்த துன்பத்தை மறந்துவிடுவாய். நிகரற்ற வீரனான புதல்வனைப் பெற்று, அவனிடம் அரசியலை ஒப்படைத்தபின், நீ உன் கணவனுடன் இவ்வாரணியத்துக்கு வந்து, தவத்தை மேற்கொள்வாயாக” என்று கண்ணுவர் கூறிச் சகுந்தலைக்கு விடையீந்தார்.

சகுந்தலை தன் தோழியருக்குக் கிட்டப்போய், அவர்களைத் தழுவி, கண்கலங்கி நின்றாள். அப்பொழுது தோழியருக்குத் துருவாச முனிவரின் சாபம் ஞாபகத்துக்குவர, அவர்கள் சகுந்தலையை நோக்கி, “அன்பான தோழீ, ஒருபோது அரசன் உன்னை அறிந்து கொள்ளக் காலந் தாழ்த்தினால், அவரது பெயர் பொறிக்கப்பட்ட இக் கணையாழியின் மூலம் ஞாபகப்படுத்து” எனக் கூறி, அக் கணையாழியை அவள் விரலில் நன்கு அணிவித்தனர்.

சகுந்தலை தந்தையாரையும் தோழியரையும் மறுபடியுந் தழுவி, விடைபெற்றுக்கொண்டு சார்ங்கரவன், சாரத்துவ னென்னும் மாணவர் களிருவரும் முன்செல்ல, ஆசிரமத் தாயாராகிய கௌதமியுடன் வழிக்கொண்டாள்.

கண்ணுவரும், தோழியரும் சகுந்தலை தம் கட்பார்வைக்கு மறையும்வரை அங்கேயே நின்று பார்த்துக்கொண்டு நின்றனர். பின்னர் கண்ணுவர், பிரியம்வதையையும் அனசூயையை யும் நோக்கி, ‘வாருங்கள் போகலாம்” என அழைத்துக்கொண்டு ஆசிரமத்துக்குத் திரும்பினர். சகுந்தலையைப் பிரிந்தமையின், கண்ணுவர் துன்பமுற்றாரேனும், தன்னிடத்து வைக்கப்பட்ட அடைக்கலப் பொருளை, திரும்பவும் உடைய வனிடஞ் சேர்த்துவிட்டாற் போன்ற மனவமைதி பெற்றார்.

12. சகுந்தலை துஷ்யந்தனைக் காணுதல்

துஷ்யந்தன், தன் அரண்மனையில் ஓரரச இருக்கையிற் றங்கியிருந்தான். அவன் பாங்கனான விதூஷகன், துஷ்யந்தனி னயலில் நின்றான். அப்பொழுது அரண்மனையி னயலி லுள்ள இசைக் கழகத்திலிருந்து, மிக இனிமை வாய்ந்த பாடலொலி கேட்டது. அதனைக் கேட்டு மகிழ்ந்த அரசன், அப்பாடலைப் பாடிய அமிச பதிகை என்னும் பெண்ணிடந் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்து வருமாறு, விதூஷகனை யனுப்பினான். விதூஷகன் செல்ல, அரசன் அப்பாடலைக் கேட்டமையால் தன் மனம் ஒருவாறு கலக்கமடைந்திருப்பதை யுணர்ந்தான். தன் அன்புக்குரியார்

ஒருவரைப் பிரிந்தமைபோன்ற உணர்ச்சி, தன் வசம் ஏற்பட்டிருப்பதன் காரணமென்ன வென்பது அவனுக்குப் புலனாகவில்லை . அதனால், அவன் சிறிது துயரமடைந்தான்.

கண்ணுவ ராசிரமத்திலிருந்து வந்த சகுந்தலை முதலியோர், தம் வரவைத் துஷ்யந்தனுக்குத் தெரிவிக்குமாறு, வாயிற் காவலனிடங் கூறினர்.

வாயிற் காவலன் அதனைத் தெரிவிப்பதற்காக, அரசனிருப்பிடம் நோக்கிச் சென்றான். அப்பொழுதுதான், அரசன் அரச கருமங்களை முடித்து அத்தாணி மண்டபத்திலிருந்து வெளிப் பட்டுத் தன் னரண்மனையிற்றங்கியிருந்தான். அதனால், அரசனை மேலுங் கடமையுளாழ்த்தித் துன்புறுத்துவதை வாயிற் காவலன் விரும்ப வில்லை . ஆயினுமென் செய்வது! ‘குடிகளின் நன்மையைக் கருது மரசர்களுக்கு, ஓய்வு கிடையாது. சூரியன் தன் தேரிற் பூட்டிய குதிரை களை, இடைவிடாது செலுத்திக்கொண்டே யிருக்கிறான். காற்று, இரவும் பகலும், எந்தநேரமு மியங்கிக்கொண்டே யிருக்கிறது. ஆதிசேடன், எப்பொழுதும் பூமாதேவியைச் சுமந்துகொண்டே யிருக்கிறான். மக்களைக் காக்கும் மன்னன் கடமையும் சூரியன், காற்று, ஆதிசேடன் என்பவரின் கடமைபோன்று, இடைவிடாது நிகழ்ந்து கொண்டே யிருக்கிறது’ என்பதை உணர்ந்த வாயிற் காவலன், தன் கடமையைச் செய்ய எண்ணினான். அரசன் தங்கியிருக்கு மிடத்தை யடைந்து, அரசனைக் கண்டான்.

வெப்பத்தாற் றாக்குண்ட அரசயானை, தன்னைச் சுற்றிலும் யானை மந்தைகளை மேய விட்டு, தான் தனியே குளிர்ந்த நிழலில் இளைப் பாறுதல் போல, துஷ்யந்தனுந் தன் குடிகளுடைய கடமைகளை யெல்லாம் முடித்து விட்டு, இளைப் புற்ற மனத்தோடு ஓரிடத்திலாறியிருந்தான். வாயிற் காவலன் அரசனையடைந்து “மன்ன னுக்கு வெற்றி சிறப்பதாக! மன்னர் மன்ன, கண்ணுவர் ஆசிரமத்திலிருக்கும் முனிவர்கள் ஆசிரம மாத ரிருவருடன், இங்கே வந்திருக் கின்றனர். கண்ணுவரிடமிருந்து ஏதோ செய்தி கொண்டு வந்துள்ளார்களாம். தங்கள் கட்டளை என்ன?” என்று கூறிப் பணிந்து நின்றான்.

அரசன் மிகவும் பணிந்த குரலில், “கண்ணுவரி டமிருந்து செய்தி கொண்டுவந்தார்களா? அங்ஙன மாயின், அவர்களை வேதங்களிற் கூறப்பட்ட முறைப்படி வரவேற்குமாறு நமது புரோகிதராகிய சோமநாதருக்குத் தெரிவி. நானு மவர்களைக் காண்பதற்கேற்ற இடத்துக்குச் செல்லுகிறேன்” என்று வாயிற் காவலனுக்குக் கூறிவிட்டு, தான் வேள்வி செய்யுமிடத்தை யடைந்து வேள்விக் களத்தினுயரமான தாழ்வாரத்தின் படியிலேறி நின்றான்.

இம் முனிவர்கள் மாட்சிமை தங்கிய கண்ணுவ முனிவரால், ஏன் அனுப்பப்பட்டார்கள்? அவர்கள் தவத்துக்கு, ஏதுமிடையூ றேற்பட்டதோ? விலங்கு களால், எவர்க்கேனும் தீங்கு நேரிட்டதோ? மாதர்களும் கூட வருவானேன்?’ என்று, அரசன் தனக்குட் பலவாறு சிந்தித்து, யாதுந் துணிய மாட்டாதவனாய்க் கலக்கமடைந்திருந்தான். அப்பொழுது கௌதமியும் சகுந்தலையும் முன்வர, முனிகுமாரர்களும், புரோகிதரும் பின்னால் வந்தனர். அவர்களை வாயிற் காவலன் முன் நடத்தி வேள்வி மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான்: அப்பொழுது சகுந்தலையின் வலக்கண் துடித்தது. ‘என்ன தீமை நிகழுமோ? எவ்வாறாகுமோ?’ எனச் சகுந்தலை துக்க முற்றாள். கௌதமி அவளைத் தேற்ற, சகுந்தலை தெய்வங்களை வணங்கிக் கொண்டு, அரசன் தங்கியிருந்த வேள்வி மண்டபத்தை அடைந்தாள். துஷ்யந்தனின் புரோகிதர், அவர்களை அரசனிடம் அழைத்துச் சென்று “இவர்கள் கண்ணுவரிடமிருந்து செய்தி கொண்டுவந்திருக் கிறார்கள். அதனைத் தாங்கள் அன்பு கூர்ந்து கேட்டல் வேண்டும்” என்று துஷ்யந்தனுக்குக் கூற, அரசன் முனிகுமாரர்களையும், வதங்கிய இலைகளின் நடுவே ஓரிளந்தளிர் தோன்றுதல் போலக் கௌதமியின் பக்கத்தில் முக்காட்டுடன் காணப்படுஞ் சகுந்தலையையுங் கண்டு அவள் யாராயிருக்கலாமெனத் தன்னுட் சிந்தித்து, புரோகிதரை நோக்கி இவர்கள் கொண்டு வந்த செய்தியைக் கேட்பதற்கு, இதோ ஆயத்தமாய் இருக்கிறேன்” என்று தெரிவித்தான்.

சகுந்தலை துஷ்யந்தனை நோக்கித் தன் மார்பிற் கையை வைத்து ‘யாதாகுமோ’ என்னும் எண்ணத்தளாய், அரசனை நோக்குவதும், நிலத்தை நோக்குவதுமாய்க் கலக்கமடைந்த மனத்தளாய், நின்றாள்.

13. அரச சபையிற் சகுந்தலை

துறவிகள் கையை யுயரத் தூக்கித் துஷ்யந்தனை வாழ்த்தினர். அரசன், அவ் வாழ்த்துக்கு மகிழ்ந்து, அவர்களனைவருக்கும் வணக்கஞ் செலுத்தினான். பின்னர், அவர்களை நோக்கி, “முனிவர்களது தவங்களும், வேள் விகளும் யாதோ ரிடையூறுமின்றி, இனிது நடைபெற்று வருகின்றனவா?” என முனி குமாரர்களை வினாவினான்.

“சூரியன் சுடர் வீசி ஒளி காலும்போது இருள் எவ்வாறு தோன்றும்? நல்லோரைப் பாதுகாப்ப தற்குத் தாங்களிருக்கும்போது முனிவர்களது தவ வொழுக்கங்களுக்கும், வேள்விகளுக்கும், இடையூறு எவ்வாறுண்டாகும்?” என முனி குமாரர்கள் விடை கூறினர். இம்மொழிகளால், அரசன் மிக மகிழ்ச்சியடைந்து, “மாட்சிமை தங்கிய கண்ணுவர் இனிது வாழ்கின்றனரா?” என அவர்களை வினாவினான்.

வேதமோதும் முனிவர்களுக்கு, எந்நாளும் நலக்குறை வேற்படுவதில்லை . அவர், உமக்கு நலஞ் சிறக்குமாறு ஆசீர்வதித்தார். தம் மகளாகிய சகுந்தலையும், நீரும் ஒருவரிலொருவர் காதலுற்றுக் காந்தர்வ மணம் புரிந்து கொண்ட புனிதச் செயலை, அன்பினாலேற்றுக் கொண்டிருக்கின்றார். நீரோ, யாவராலும் நன்கு மதிக்கப்படுவதற் குரியவராய், எல்லாராலும் புகழப்படுதற்குரிய ஒழுக்கமுடையீர். இங்கே நிற்கும் சகுந்தலையோ நல்லொழுக்கமே ஓருருவெடுத்து வந்தாற்போல விளங்குகின்றாள், பிரமதேவன், ஒத்தவியல்பு வாய்ந்த ஆடவரையும் மகளிரையும், ஒன்று கூட்டி வைத்துப் பெரும்புகழ் பெறுகிறான். இவ்வாறு உங்களை ஒன்று கூட்டி வைத்த பிரமன் புகழ் பெருகுவதாக. உமது இல்லற வாழ்க்கையை இனிது நடத்துதற்குத் துணையாகக் கருவுற்றிருக்கு மிவளை ஏற்றுக்கொள்வீராக! இதுவே, கண்ணுவர் நம்மிடஞ் சொல்லி அனுப்பிய செய்தி. நீர் நீடு வாழ்வீராக!” என முனிவர்கள் தம் வரவின் வரலாற்றைக் கூறி நின்றனர்.

துருவாசமுனிவரின் சாபங் காரணமாகத் தான் சகுந்தலையை மணமுடித்தமையை மறந்துவிட்ட துஷ்யந்தன், முனி குமாரர்களின் வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்தே துணுக்கமுற்றான். “இது என்ன? இப்பெண், என் மனைவியா?” என, அதிசயமுந் திகிலுமுடையவனாய்க் கூறினான்.

துஷ்யந்தன் யாது கூறுவானோ வெனத் தனக்குட் பலவாறு சிந்தித்து நின்ற சகுந்தலை, அரசன் வார்த்தைகளைக் கேட்டதும் நெருப்பாற்றகிக்கப் பட்டவள்போல வெதும்பினாள். அவளவ்வாறு துன்புறும்போது, துஷ்யந்தன் மேலுந்தொடர்ந்து, உங்கள் கற்பனை நன்றாயிருக்கிறது; இப் பெண்ணை இதற்கு முன் நான் கண்டதேயில்லை! அங்ஙனமாக, இப்பெண்ணை என் மனைவியென நீங்கள் கூறுவதை என்னால் விளங்க முடியவில்லையே!” என்று கூறினான்.

துஷ்யந்தன் வார்த்தைகளைக் கேட்டு நின்ற கௌதமித் தாயார் ஆச்சரியமடைந்து, பின் சகுந்தலையை நோக்கி “மகளே, உன் முக்காட்டை எடு. அப்பொழுது உன்னை அரசனால் அடையாளங் கண்டுகொள்ளல் முடியும். வெட்கமுறாமல் உன் முக்காட்டை எடு” எனக் கூற சகுந்தலை தன் முக்காட்டை எடுத்தாள். அப்பொழுது சகுந்தலையின் அழகைக் கண்டு, அரசன்வியந்தானாயினும் அவளைத் தான் மணம் புரிந்தமை அவன் நினைவுக்கு வரவில்லை . அவன் பலவாறு சிந்திக்க, சார்ங்கரவன் அரசனை நோக்கி, “உங்கள் சிந்தனையின் முடிவு என்ன?” என வினாவினான்.

“நான் எவ்வளவுதான் நினைத்துப்பார்த்தும் இப் பெண்ணை மணம் புரிந்ததாக எனக்கு நினைவு இல்லை. அவ்வாறிருக்கக் கருவுற்றிருக்கு மிப் பெண்ணை , நான் எங்ஙனம் ஏற்றுக் கொள்ள முடியும்?” என்று கூறினான்.

துஷ்யந்தனின் வார்த்தைகளைக் கேட்ட சகுந்தலை செய்வ தின்னதென் றறியாது திகைத்து நிற்க, சாரத்துவன், சகுந்தலையை நோக்கி, ‘அம்மா, நீயே இனி இதனை மெய்ப்பித்தல் வேண்டும்” என்று கூறினான்.

சகுந்தலை திகைத்து நின்றாளாயினும் தன் கற்பொழுக்க உயர்வை நிலைநிறுத்தவேண்டிய தன் கடமையை உணர்ந்து “அரசே, துறவாச் சிரமத்திற் பலப்பல பேசி என்னைக் கடிமணம் புரிந்த தாங்கள், இப்பொழுது என்னைத் தள்ளிவிடுவது தருமமாகுமா?” என்று கூற, அரசன் தன் காதுகளைப் பொத்திக் கொண்டு அம்மணி, கரைபுரண்டு பெருகிச் செல்லும் ஓராறானது தனது தெளிவான நீரைத் தானே கலங்கச் செய்து, கரை மேலுள்ள மரங்களையும் வேரோடு வீழ்த்தி விடுதல் போல, உனது பேச்சினால் உன்னையும் இழிவாக்கி, என் குலத்துக்கும் வடுவேற்படுத்த முயல்கின்றாய்!” என்று கூறினான்.

‘இனி, என் செய்யலாம்’ என்று எண்ணி நின்ற சகுந்தலைக்கு, தோழியர் கூறிய கணையாழியின் ஞாபகம் வர, “அரசே, நீர் மறந்து விட்டால் உமது கணையாழி உமக்கு ஞாபக மூட்டட்டும். நீர் தந்த உமது பெயரெழுதப்பட்ட கணையாழியை இதோ காட்டுகிறேன்” என்று கூறித் தன் வலது கையைப் பார்த்து, கணையாழியைக் காணாதவளாய் நடுநடுங்கி, ‘ஐயையோ, கணையாழி எங்கே போயிற்று’ என்று கூறிக்கொண்டு கௌதமித் தாயாரை அழுகையுடன் நோக்கினாள்.

கணையாழியைக் காணாமையால் மனம் வருந்திய கௌதமித்தாயார் அம்மா, நீ நீராடுகையில், அது சசிதீர்த்தத்தில் நழுவி விழுந்திருக்கவேண்டும்” எனக் கூறினள்.

துஷ்யந்தன் இதனைக் கேட்டுப் புன்னகை புரிந்து பெண்கள் இயற்கையில், நேரத்திற் கேற்றவாறு பேசுவதில் வல்லவர்களே” எனக் கூறினான்.

“விதியும் எனக்கு எதிராக இருக்கிறது போலும்! நான் எவ்வளவு அபாக்கியசாலியாய் விட்டேன். ஆயினும், நான் இன்னுமொரு நிகழ்ச்சி சொல்லு கிறேன். அப்பொழு தாவது உமக்கு ஞாபகம் ஏற்படுமென நம்புகிறேன்’ என்று கூறிப் பின்வருமாறு சொல்லத் தொடங்கினாள்:

“அரசே, ஒருநாள் எங்கள் ஆசிரமத்திலுள்ள புது மல்லிகைப் பந்தரின் கீழ், தாமரை இலையைப் பாத்திரம்போலக் கோலி, அதிலே தண்ணீர் கொண்டுவந்தீர்கள். அப்பொழுது, என் அன்புக் குரிய தீர்க்காபாங்க னென்னும் மான் கன்று, அங்கே வந்தது. தாங்கள் அத் தண்ணீரை அந்த மான் கன்றுக்கு ஊட்ட முயன்றீர்கள். ஆனால், அது தங்களிடத்திற் பழகாததனால் உங்கள் அருகில் வர மறுத்தது. பின்னர், அந்நீரை நான் உங்களிடமிருந்து பெற்று அதற்கு ஊட்டினேன். அப்பொழுது தாங்கள் சிரித்து ஒவ்வொருவரும் தம்மினத்தாரில் நம்பிக்கை யுடையவர்களா யிருக்கின்றார்கள். நீயும் கானகவாசியாதலின், மான் உனக்குப் பயப்படவில்லை ‘ என்று கூறினீர்களே!” எனக் கூறினாள்.

துஷ்யந்தன் புன்னகை புரிந்து, “இவ்விதமான பொய்க் கதைகளைத் தந் தேன்மொழிகளாற் கூறுவதிற் பெண்கள் வல்லவர்கள். காமுகர்களே அவ் வார்த்தைகளால் மயங்குகின்றனர்” என்றான். அப்பொழுது கௌதமி அரசனை நோக்கி (சகுந்தலை புனிதமான துறவாசிர மத்தில் வளர்ந்தவ ளாகையால், கள்ளமே அறியாதவள்” என்று கூறினார்.

துறவொழுக்கத்தில் மேம்பட்ட அம்மையாரே, இத்தகைய விடயங்களிற் பிறர் கற்பிக்காமலே எவ்வாறு பொய் சொல்லுவதென்பதைப் பெண்கள் தாங்களாகவே இலகுவில் அறிய வல்லவர்கள். தாழ்ந்த விலங்குகளிலும் பெண் இனத்திற் காணப்படு மிவ் வியல்பு, மக்களிடத் தில் இன்னும் அதிகமாகக் காணப்படுவது புதுமையல்லவே! குயிற் பெடைகள், தங் குஞ்சுகள் ஆகாயத்திற் பறக்கும்வரையில் வேறு பறவைகளைக் கொண்டு வளர்ப்பித்து வருவது நீங்கள் அறியாததா?” என்று கூறினான்.

இவ் வார்த்தைகளைக் கேட்ட சகுந்தலை கோபத்துடன் (கீழ்மகனே, உன் மன இயல்பிற் கிணங்கப் பிறரையுங் கருதுகின்றாய்! புற்களால் மூடப்பட்டுக் கீழே மறைந்திருக்குங் கிணற்றைப் போல, அறம்புரியும் அரசனென்னும் பெயர் பூண்டு, தீமை புரியும் இழிசெயல் உனக்கே உரியது; புருவம்சத்திற் பிறந்தவரென்ற நம்பிக் கையால், நாவிலே தேனும், அகத்திலே நஞ்சும் அமைந்துள்ள நும்மால் நான் வேசியாக்கப்பட்டது தக்கதே” என்று கூறித் தன் முந்தானையால் முகத்தை மூடிக் கொண்டு அழத்தொடங்கினாள்.

முனி புதல்வனான சார்ங்கரவன், சகுந்த லையை நோக்கி, “அம்மா, முன் நன்கு அறியாதாரை எளிதில் நம்புவதால் ஏற்படும் பலன் இதுதான்; நாம் மேலும் பேசுவதிற் பயன் என்ன? குருவின் கட்டளைப்படி செய்து விட்டோம். நாம் திரும்பிப் போகிறோம்” என்று கூறி அரசனை நோக்கி “இதோ நும் மனைவி; இவளை ஏற்றுக்கொள்ளினுங் கொள்ளுக. தள்ளிவிடினும் விடுக. தன் மனைவியை ஓராடவன் எங்ஙனம் நடத்தினும், அதன் பலன் அவனையே சாரும்!” என்று கூறிக் கௌதமித்தாயை நோக்கி அம்மா, புறப்படுங்கள், போகலாம்’ என்று கூறிப் புறப்பட்டனர்.

முனி புதல்வர்களுங் கௌதமியும் புறப்படு வதைக் கண்ட சகுந்தலை, தானும் அவர்களைப் பின் தொடர்ந்தாள். அப்பொழுது சார்ங்கரவன் சினத்துடன் திரும்பி, சகுந்தலையை நோக்கி ‘தூர்த்தே , நின் ஒழுக்கம் சரியானதென்று நீ அறிந்தாயானால், உன் கணவன் வீட்டில் இருத்தலே தக்கது! நீ, நில், நாங்கள் போகிறோம்” என்று கூறி அவளை விட்டுச் சென்றனர்.

இவளை விட்டுச் செல்வது தருமமாகாது. பிறன்மனை ஒருத்தியை இவ்விடம் விட்டுச் செல்வது நியாயமாகுமா?” எனக் கூறிய துஷ்யந்தன், “இது என்ன, தருமசங்கடமாயிருக் கிறதே! இவள், ஒருபோது என் மனைவியாயி ருத்தல் கூடுமோ? என் மனம் பேதுறுகின்றதே” என்று பலவாறு சிந்திக்கும்போது அரண்மனைப் புரோகிதர் அரசனை நோக்கி, “அரசே, பிள்ளைப் பேறு வரையில் இந்த அம்மையார், என் ஆசிரமத்தி லிருக்கட்டும் ‘மன்னர் மன்னனாகும் ஒரு புதல்வனை, நீ முதன்முதற் பெறுவாய், என முனிவர்கள் முன்னொருமுறை உன்னை வாழ்த்தியுள்ளனர். இவள் பெறும் புதல்வனின் அரச அடையாளங்களால், உனது ஐயந்தீர வழியுண்டாகும்” எனக் கூறினார். அரசனும் அதற்கிணங்க, புரோகிதர், சகுந்தலையை அழைத்துச் சென்றார்.

“ஓ பெருமை தங்கிய பூமாதேவி! நீ வெடித்து என்னை ஏற்றுக்கொள்” என்று கூறிக் கொண்டு சகுந்தலை புரோகிதரின் பின்னே சென்றாள். அரசனுஞ் சகுந்தலையின் கூற்றுக்களை மனத்துள் நினைந்து துன்புற்றிருந்தான்.

புரோகிதரின் பின்சென்ற சகுந்தலை தன் கைகளைத் தூக்கி ஓலமிட்டாள். அப்பொழுது பெண் வடிவமுடைய ஓர் ஒளியுருத் தோன்றி, அவளை ஆகாயத்தே தூக்கிச் சென்றது. இதனைக் கண்டு ஆச்சரியமுற்ற புரோகிதர், நடந்ததை அரசனுக்குத் தெரிவித்தார். இதனால், அரசன் மேலுங் கலக்கமடைந்து மனவருத்தத்துடன் தன் படுக்கையை அடைந்தான்.

14. துஷ்யந்தன் மோதிரம் பெற்றமை

சக்கிராவதார நதிக்கரையில் வசிக்கும் செம்படவனொருவன் வழக்கப்படி ஒருநாள் அந் நதியில் மீன்பிடிக்கச் சென்றான். அன்று அவனுடைய வலையில் ஒரு செந்நிற மீன் அகப்பட்டது. அம்மீனைக் கண்டு ஆச்சரியமடைந்த செம்படவன், அதனை விற்க விரும்பாமல், தன் வீட்டுக்குக் கொண்டு சென்று அதனை அரிந்தான். என்ன அதிசயம்! அம் மீனின் வயிற்றுக்குள் ஒரு மணியாழி காணப்பட்டது. அம் மணியாழியே சகுந்தலையால் இழக்கப்பட்டதும், துஷ்யந்தனின் நாமம் எழுதப்பட்டதுமாகிய மோதிரம் ஆகும். சகுந்தலை நீராடும்போது சசிதீர்த்தத்தில் அதனை இழந்துவிட, அதனை அம் மீன் விழுங்கிற்று.

மோதிரத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்த செம்படவன், அதனை விற்கும் பொருட்டுக் கடை வீதியை அடைந்தான். அம் மோதிரத்திலே துஷ்யந்தனின் பெயர் எழுதப்பட்டிருப்பதைக் கல்வியறிவற்ற செம்படவனா லறிய முடிய வில்லை . அவன் அம் மோதிரத்தை விற்க முயற்சிக் கும்போது, அம் மோதிரம், அரசனுக்குச் சொந்தமானதென்பதை அறிந்தவர்களால், அவன் அரசனின் காவலாளிகளிடம் ஒப்படைக்கப் பட்டான்.

அரசனின் பெயர் எழுதப்பட்ட மோதிரம் அவனுக்கு எவ்வாறு கிடைத்ததெனக் காவலாளிகள் அவனைக் கேட்டனர். அப்பொழுது அவன் நடுக்கத்தோடு, “ஐயா, நான் அப்படிப்பட்ட செயல் செய்கிறவன் அல்லன்; என்னை மன்னித்து விடுங்கள்” என்று மன்றாடினான்.

அது சரி; இம்மோதிரம் உனக்கு எப்படிக் கிடைத்தது. அவர் உனக்குப் பரிசாகத் தந்தாரா?” எனக் காவலாளிகளுள் ஒருவன் வினாவ, அச் செம்படவன், “ஐயா, நான் சொல்லுகிறதைக் கேளுங்கள். நான் சக்கிராவதாரக் கரையிலிருக் கிற செம்படவன் என்று சொல்லத் தொடங்க, இரண்டாங் காவலாளி, அவனைத் தடுத்து, “அடே, உன் சாதியை நாங்கள் கேட்கவில்லை; உனக்கு இம்மோதிரம் எப்படிக் கிடைத்தது? அதனைச் சொல்” எனக் கேட்டான்.

“அதைத்தான் ஆண்டவனே சொல்லுகிறேன். நான் மீன்பிடிக்கிற தூண்டில், வலை முதலிய வற்றைக் கொண்டு மீன் பிடித்து என் குடும்பத் தைக் காப்பாற்றிவருகிறேன்’ என்று, அவன் மறுபடியும் சொல்ல ஆரம்பிக்க, காவலாளி பொறுமையை இழந்து, “அடே, உன் தொழில் மிக விசேடமானதுதான்; அது கிடக்க நீ இம் மோதிரத்தை எங்கேயடா எடுத்தாய்; அதனைச் சொல்லடா” எனக் கூறிச் செம்படவனை வெருட்டினான்.

“ஆம் சாமி; அதனைத்தான் சொல்லுகிறேன். தலைமுறை தலைமுறையாகச் செய்து வருகிற தொழில், இழிவானாலும் அதை விட்டு விடக்கூடாது” என அவன் மீண்டும் தான் விட்ட இடத்திலிருந்து கதையை ஆரம்பிக்க, காவலாளி “அது சரி; பிறகு நடந்தது என்ன? விரைவாகச் சொல்” என, விரைவுப்படுத்தினான். செம்படவன் அதனைத் தொடர்ந்து “நான் ஒரு நாள் வழமைபோல் மீன் பிடிக்கும் பொழுது ஒரு சிவப்பு மீன் அகப்பட்டது. அதை அரிந்தேன். அதற்குள் இம் மோதிரங் கிடைத்தது. அதை விற்கக் கொண்டு வந்தேன். அப்பொழுது என்னை நீங்கள் பிடித்தீர்கள். என்னை நீங்கள் கொன்றாலுஞ் சரி; விட்டாலுஞ் சரி; இது தான் மோதிரம் பெற்ற வரலாறு’ என்று கூறினான்.

செம்படவனி லுடலிற் பச்சை மீன் நாற்றமிருப்பதை உணர்ந்த காவலாளிகள், அவன் பேச்சை ஓரளவு நம்பி, அவனையு மழைத்துக் கொண்டு, அரண்மனைக்குச் சென்றனர். அரண்மனையை அடைந்து, செம்படவனை வாயிலிலே காவலாளி ஒருவனுடன் நிறுத்திவிட்டு, மற்றைய காவலாளி அம்மோதிரத்துடன் அரசனை அடைந்தான்.

காவலாளி மோதிரத்தை அரசனுக்குக் காட்டி, அது கிடைத்த வரலாற்றையுங் கூறினான். மோதிரத்தைக் கண்ட அரசன், தனக்கு மிக இனியரான யாரோ ஒருவருடைய ஞாபகம் ஏற்படுவதை அறிந்தான். அம்மோதிரத்தைக் கண்டவுடன், துருவாச முனிவரது சாபம் விமோசனமாயிற்று. அதனாற் சகுந்தலையின் நினைவு அவனுள்ளத்திற் சிறிது சிறிதாக வளர ஆரம்பித்தது. அவன் கண்களில் நீர் ததும்பிற்று; அவன் நிலை தடுமாறினான். அதனைக் கண்ட காவலாளி கலங்கினான்.

துஷ்யந்தன் சிறிது நிதானமடைந்து அம் மோதிரத்தைத் தன் கையில் வாங்கிக் கொண்டு, காவலாளியிடம் பெரும் பொருள் கொடுத்து, அதனைச் செம்படவனிடங் கொடுக்குமாறு கூறினான்.

காவலாளி விரைவாக மீண்டு சென்று செம்படவனைக் கட்டவிழ்த்துவிட்டு, துஷ்யந்தன் தந்த பொருளைச் செம்படவனிடங் கொடுத்தான். அப்பொழுது மற்றக் காவலாளி மிகவும் ஆச்சரியமடைந்து நிகழ்ந்த தென்ன?” என்று வினாவ, மற்றக் காவலாளி நிகழ்ந்தவனைத்தையும் விபரமாகக் கூறினான்.

“இவன் அதிட்டசாலிதான்; இவனைக் கொல்வ தற்கு என்கை எவ்வளவு துடித்தது! தப்பிவிட்டான். அதுமட்டுமா? இவனுக்குப் பொன்னுமன்றோ கிடைத்திருக்கிறது!” என்று கூறிக்கொண்டு

மூவரும் அவ்விடத்தை விட்டகன்றனர்.

15. துஷ்யந்தன் உற்ற துயரம்

துஷ்யந்தன் கணையாழியைக் கண்டவுடன், துருவாசரின் சாபம் விமோசனமானமையின், அவன் சகுந்தலையைத் தான் மணம் புரிந்த மையை நினைந்துகொண்டான். தன் மறதியி னால் அவளை ஏற்றுக்கொள்ளாமல், இழிசொற் கூறித் தள்ளிவிட்டமையை நினைந்து மிகவும் மனம் வருந்தினான். சகுந்தலைதன்னிடம் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளையும் நினைக்க நினைக்க, அவன் மனம் பாகுபோல உருகிற்று. அவ் வார்த்தைகள் அவன் மனத்தை ஈட்டி போலத் தாக்கின. எனவே, துஷ்யந்தன்,

“இன்பநுகர் பொருளெல்லாம் வெறுத்து விட்டான்,
இனியநூ லமைச்சரையும் கலவான் முன்போல், கண்ணுறக்க மிரவெல்லாம் பெறமாட் டானாய்க்
கட்டில்மிசை யிங்குமங்கும் புரளு கின்றான் தன்பெரிய மனைநல்லார் பேசும் போதும்
தண்மையினாற் சிலசொல்லி யுள்ளும் போதும் பெண்ணரசி சகுந்தலையைப் பிழைத்துச் சொல்லி
பெரிதுவரும் நாணத்தாற் கலங்கு கின்றான்.”

-சாகுந்தலம்

மறைமலையடிகள பற்றப்பட்டது ஆகி, தன் செயலிழந்து அறங்கூறு மவையத் திற்குஞ் செல்லாது, தன் கடமைகளையும் மறந்திருந்தான்.

இளவேனிற் பருவம் வந்தது. வேனிற் காலத்துக் கொண்டாடப்படும் விழாவைத் தன் மனத்துயர் காரணமாகக் கொண்டாட வேண்டாமென்று மன்னன் தடைசெய்திருந்தான். மான்பிணை போன்ற விழிகளையுடைய சகுந்தலையின் தோற்றம், மன்னன் நெஞ்சம் முழுவதையும் பற்றிக் கொண்டது. அவன் தனது மனத்துயரைச் சிறிது தணிப்பதற்காக அரண்மனையினயலி லுள்ள ஓரிள மரக்காவினை அடைந்தான். அரசனின் நண்பனான விதூஷகனும் அச்சோலையை அடைந்தான்.

துஷ்யந்தன், விதூஷகனை நோக்கி, ‘நண்பா, நான் இப்போது சகுந்தலையைப் பற்றிய நிகழ்ச்சிகளையெல்லாம் நினைந்து கொண்டேன். முன்னர், உனக்கும் அவற்றைச் சொன்னேனே. நான் அவளை விலக்கி விட்டபோது, நீ என் பக்கத்தி லில்லையாயினும் அதற்கு முன்னராவது அதனைச் சொல்ல வில்லையே! என்னைப்போலவே நீயும் மறந்து விட்டனையா?” என்று வினாவினான்.

“நான் மறக்கவில்லை ; ஆயினும் நீர், (இஃது உண்மையன்று. வெறும் பகடிப்பேச்சு;” என்று அன்று கூறினீரே! நானோ களிமண் மூளையுள்ள வனாதலால், நீர் சொல்லியதை உண்மையென்று நம்பிவிட்டேன். ஆனாலும் ஊழ் எல்லாம் வல்லது! அஃதிருக்க, உங்கள் பெயரெழுதப்பட்ட மோதிரத்தின் வரலாறென்ன?” என்று கேட்டான் விதூஷகன்.

‘யான் கண்ணுவ ராசிரமத்தினின்று புறப்பட்டு வரும்போது, என் காதலி கண்களில் நீர் ததும்ப நின்று, “எப்பெருமான், எப்பொழுது எனக்குச் செய்தி விடுப்பீர்கள்?’ என வினாவினாள். அப்பொழுது நான் என் பெயர் செதுக்கப்பட்ட இக் கணையாழியை அவள் விரலிலிட்டு, ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வோர் எழுத்தாக இக் கணையாழியிலுள்ள எழுத்துக்களை எண்ணு, கடையெழுத்தை எண்ணவரும் நாளில், நின்னை என் அரண்மனைக்கு அழைத்துவரும் பொருட்டு, ஒரு தூதுவனை அனுப்புவேன் என, அவளுக்கு விடை கூறினேன். ஆயின், நான் மறதியினால் அங்ஙனஞ் செய்யத் தவறிவிட்டேன். சசி தீர்த்தத்தில் நீராடும்போது இக் கணையாழி கழன்று விழுந்துவிட, இதனை மீன் ஒன்று விழுங்கியிருத்தல் வேண்டும்!” எனத் துஷ்யந்தன் விதூஷகனிடம் கணையாழியின் வரலாற்றைக் கூறினான். அப்பொழுது, துஷ்யந்தனால், வரையப்பட்ட சகுந்தலையின் சித்திரத்தை, சதுரிகை என்பவள் அங்கே கொண்டு வந்தாள். துன்பத்தால் வருத்தமுற்ற துஷ்யந்தன் பொழுது போக்காகச் சகுந்தலையின் உருவத்தை எழுதியி ருந்தான். நன்கு தழைத்துப் பருத்த மாமரத் தினருகே, மலர்கள் சூடப்பட்டுக் கட்டவிழ்க்கப் பட்ட கரிய கூந்தலோடும், வியர்வைத் துளிக ளரும்பிய முகத்தோடும், சிறிது களைப்படைந்த தோற்றத்தோடும் சகுந்தலையின் உருவம் வரையப்பட்டிருந்தது. சகுந்தலை தன் அழகிய கையினாலே தன் முகத்தை மூடியபடி நின்றாள். ஒரு கரிய வண்டு, அவள் முகத்தின் மேல் வந்து விழுந் தோற்றங் காணப்பட்டது. சகுந்தலையைத் தான் முதன் முதற் கண்ட தோற்றம்போல, துஷ்யந்தன் அச் சித்திரத்தைத் தீட்டியிருந்தான். அச்சித்திரத்தைத் துஷ்யந்தன் பார்த்து, தன் முன்னே உண்மையாகச் சகுந்தலையே நிற்பதாக எண்ணி, அச் சித்திரத்துடன் பல பேசித் தன்னை மன்னிக்குமாறு வேண்டினான்.

சகுந்தலையின் தாயாகிய மேனகையாலனுப் பப்பட்ட சானுமதி யென்னும் தெய்வப் பெண் ணொருத்தி துஷ்யந்தன் தங்கியிருந்த இளமரச் சோலைக்கு வந்து, யார் கண்களுக்கும் புலனாகாதவாறு மறைந்திருந்தாள். துஷ்யந்தன் சகுந்தலையின் பிரிவாற் றுயருறுவதையும், அதனால் அத்தினாபுரியில் ஏற்பட்டிருக்கும் மாற்ற நிலையையும், சகுந்தலையின் சித்திரத்தைத் துஷ்யந்தன் பார்த்து மனம் வெம்புவதையும், சானுமதி கண்டு மனமகிழ்ந்தாள். தன் தோழியாகிய சகுந்தலையிடஞ் சென்று, அச்சோலையிற்றான் கண்டவனைத்தையுங் கூறினாள். சகுந்தலை இவற்றைக் கேட்டு மகிழ்ச்சியடைந்து, தன் தாயாராகிய மேனகை, தன்னை அத்தினாபுரியிலிருந்து தேவருலகுக்குக் கொண்டு வந்தபோது, இந்திரனின் அன்னையார், ”கடவுளர் நின்னை நின் கணவனுடன் சேர்ப்பிப்பார்” எனத் தனக்குக் கூறிய ஆறுதல் மொழியை அப்பொழுது நினைத்தாள். துஷ்யந்தன் சகுந்தலையின் பிரிவாலடையும் துன்பம் பற்றி, சானுமதி சகுந்தலைக்குக் கூறியபோது, சகுந்தலை தன் துன்பங்கள் நீங்கும் காலம் வருகின்றதோ” என எண்ணி மகிழ்ந்தாள்.

துஷ்யந்தன் மரச்சோலையிற் சகுந்தலையின் நினைவாற் துன்பமுற்றிருக்குஞ் சமயத்தில், அங்கே சேவகன் ஒருவன் ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து அரசனிடங் கொடுத்தான்.

தனமித்திர னென்னும் வணிகன், கடலிற் பிரயாணஞ் செய்யும்போது கப்பலுடைந்த மையாற் கடலிலேயே இறந்து விட்டா னென்றும், அவனுக்குப் பிள்ளைக ளின்மையான் அவனது பொருள் முழுவதும் அரசாங்கத்தைச் சேர வேண்டுமென்றும் அக் கடிதத்தி லெழுதப்பட்டி ருந்தது. அக் கடிதம் துஷ்யந்தனின் முதலமைச் சரால் எழுதப்பட்டது.

கடிதத்தை அரசன் படித்தவுடன், பிள்ளை இல்லாதிருத்தல் மிகவும் பரிதபிக்கத்தக்க தென்னு முணர்ச்சி அவனுக்குளதாக, தனக்கும் புதல்வனின்மையும், கருப்பவதியாய்த் தன்னை யடைந்த தன் காதலி சகுந்தலை தன்னாலே துறக்கப்பட்டமையும், சகுந்தலை தன்னைப் பிரியும்போது நீர் நிரம்பிய கண்களாற் றன்னை நோக்கிய பரிதாபப் பார்வையும், அவன் மனக்கண்முன் தோன்றின. அவன் அத் துன்பத்தைப் பொறுக்கமாட்டானாய் மேலும் வருந்துவானாயினான்.

16. துஷ்யந்தன் தேவருலகு சென்று மீளல்

இந்திரன் தேவர்களுக் கதிபன். தேவர்களும், அசுரர்களுங் குலப் பகைஞர்கள். பெரும்பாலும் அவர்களுக்கிடையே யுத்தம் நிகழ்வது இயல்பு. சில சமயங்களிற் பூவுலகத்தரசர்களான தசரதன், துஷ்யந்தன் முதலியோர் தேவர்களுக் குதவியாகத் தேவருலகு சென்று, அசுரருடன் போர் புரிவது முண்டு. ஒருமுறை இந்திரனைக் காலநேமி என்னும் அசுரரின் வழிவந்த துர்ச்சயர் என்னும் அசுரர் எதிர்த்தார்கள். அவர்களை இந்திரனால் வெல்ல முடியவில்லை. துஷ்யந்தன் தேவ சேனைக்குத் தலைமை வகித்துப் போர் புரியின், அவ் வசுரரை வெல்ல முடியுமென இந்திரன் எண்ணினான். அதனால், துஷ்யந்தனை அழைத்துவருமாறு இந்திரன் தன் பாகனான மாலதி என்பவனைத் தன் தேருடன் துஷ்யந்தனிட மனுப்பினான்.

மாலதி, துஷ்யந்தன் தங்கியிருந்த சோலைக்குச் சென்று, அவனது துன்ப நிலையைக் கண்டு, அவன் மனத்துயரை மாற்றித் தான் வந்த காரணத்தைத் தெரிவித்தான்.

இந்திரன் தன்னைக் கௌரவித்துப் பெருமைப் படுத்தியதைக் குறித்து மகிழ்ந்த துஷ்யந்தன், இந்திரன் கட்டளையை நிறைவேற்ற விரும்பி, தன் அரசாட்சியைப் பிசுனர் என்னும் மந்திரியிடம் ஒப்படைத்து மாலதியுடன் இந்திரனின் தேரிலேறி விண்ணுலகு சென்றான்.

துஷ்யந்தன் தேவலோகத்தில் அசுரர்களை யழித்து வாகைமாலை சூடினான். அதனால் இந்திரன் மகிழ்ந்து, துஷ்யந்தனைக் கௌர வித்துப் பெருமதிப்புச் செய்தான். இந்திரன், தான் வீற்றிருக்கும் அரியணையிலே துஷ்யந் தனை இருக்கச் செய்து, தன் மார்பிற் பொருந்திய சந்தனந் தோய்த்த மலர்மாலையைத் துஷ்யந் தனின் கழுத்தி லணிவித்து மகிழ்ந்தான்.

தேவர்கள் துஷ்யந்தனது வெற்றித் திறங்களைப் புகழ்ந்து பாடினார்கள். அப்பாடல்களைத் தேவ மாதர், கற்பகமரப் பலகைகளிலே தாமணியும் குங்குமத்தினால் எழுதினார்கள். இந்நிகழ்ச்சி களினால் துஷ்யந்தன் மகிழ்ச்சியடைந்தான். இவற்றாற்போலும், சகுந்தலையின் பிரிவால் வாடியிருந்த அவனுள்ளம் சிறிது அமைதியுற்றது. தேவர்களிடமும் இந்திரனிடமும் பிரியாவிடை பெற்ற துஷ்யந்தன், மாலதியாற் செலுத்தப்பட்ட தேரின்மீதேறிப் பூவுலகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான். சிறிது நேரத்தில், மூன்று பிரிவாகச் செல்லும் வானகங்கையையுடையதும் நட்சத்திரங்களை இயக்குவதும் திருமால் மூன்றடியால் உலகை யளக்கும்போது இரண்டாவ தடி தீண்டியமையால் எல்லாக் குற்றங்களும் நீங்கப் பெற்றதுமான பரிவகம் என்னும் வாயு மண்டலத்தை அத்தேர் அடைந்தது. பின்னும் சற்று நேரத்தில் அத்தேர் மேகமண்டலத்திலிறங்கிற்று. தேர்ச்சில்லுகளின் விளிம்புகள், மழைத் துளிகளால் நனைந்திருந்தன. சாதகப் புட்கள் அம் மேக மண்டலத்தினூடே பறந்து சென்று கொண்டிருந்தன. தேரிற் பூட்டப்பட்ட குதிரைகள் மின்னலொளியால், மினுமினுவென விளங்கின சூல்கொண்ட கருமேகங்கள், மெல்ல மெல்ல அசைந்து கொண்டிருந்தன. அப்பொழுது மாலதி துஷ்யந்தனை நோக்கி, “இன்னும் ஒரு நொடியில் உமது ஆளுகையின் கீழுள்ள நிலவுலகத்தை யடைவீர்” என்று கூற, துஷ்யந்தன் கீழே பார்த்துப் பூவுலகின் அழகை அனுபவித்தான். உயர்ந்த மலையானது, வரவர இழிந்து, கீழ் இறங்குவது போன்று, இவ்வுலகங் காட்சி யளித்தது. உயர்ந்த பெருமரங்களின் பருத்த கிளைகள் அவற்றின் செழித்த தழைகளால், இடையிடை விடுபடு வதுமாய்த் தோன்றின. குளிர்ந்த இனிய நீரையுடைய அகன்ற பெரிய ஆறுகள், முதலிற் கண்ணுக்கு நன்கு புலனாகாதிருந்து, பின்னர்ப் புலனாகி, வர வர அகன்று கண்ணுக்குப் புலனாயின. இவற்றால், அழகு விளங்குகின்ற – எழுச்சிபெற்ற – இந் நிலவுலகத்தினையாரோ ஒருவன் எழச் செய்து, துஷ்யந்தனின் பக்கத்தில் அதனைச் சேர்ப்பது போன்ற தன்மை பெற்றிருந்தது அக்காட்சி.

இத்தகைய இனிய தோற்றத்தையுடைய நிலவுலகத்தைப் பார்த்து மகிழ்ந்தவாறே துஷ்யந்தன் ஏமகூட மலைச்சாரலை யடைந்தான்.

17. துஷ்யந்தன் சருவதமனைக் காணல்

ஏமகூடமலை, இமயமலையின் சிகரம். அது பொன்மயமான உச்சியினை யுடையது. முகிலை முட்டுமாறு உயர்ந்தது; பொன்னை உருக்கி ஓடவிட்டாற்போன்று பொன்மயமாய்க் காட்சிதந்து, கீழ்த்திசை மேற்றிசை யனைத்தையும் மூடி நின்றது; கிழக்கிலும் மேற்கிலுமுள்ள இரு கடல்களையு மிணைத்து அகன்று கிடந்தது; சாயங்காலத்து மஞ்சள் வெயில், பொன்னொளி மிகுந்து திகழ்தலால் பொன்மலை யென்னும் பெயரினை யுடையது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஏம கூட மலையைத் துஷ்யந்தன் கண்டு “இம்மலை யாது?” என மாலதியை வினவ, மாலதி அம் மலையின் பெயரையும், அதன் சிறப்பையுங் கூறி, அம் மலையிலே தேவர் களையும் அசுரர்களையுந் தோற்றுவித்த காசிபர் என்னும் முனிவர் தவமியற்றுதலையுந் தெரிவித்தான்.

காசிபரின் பெருமையை அறிந்த துஷ்யந்தன், அவரை வணங்க விரும்பினான். அதனைத் துஷ்யந்தன் மாலதிக்குத் தெரிவிக்க, மாலதி, மந்தார மரங்கள் நிறைந்த காசிபரின் தவப் பள்ளியினூடே தேரை நிறுத்தினான். அங்கே காசிபர் தவஞ் செய்து கொண்டிருந்தார்.

காசிபரின் உடம்பிலே ஒரு பாதி கறையான் புற்றினால் மூடப்பட்டிருந்தது. பாம்புச் செட்டைகள் காசிபரின் மார்பில் ஒட்டிக் கொண்டிருந்தன. அவருடைய கழுத்துக்கள் கொடிகளாற் சுற்றப்பட்டிருந்தன. சடாமுடியி லிருந்து, பறவைக் கூடுகள் கழுத்துவரையிற் றொங்கிக் கொண்டிருந்தன. காசிபர் சூரியனுக்கு எதிர் முகமாய், பருத்த அடியுடைய மரம்போல அசையாது நின்று தவம் புரிந்து கொண்டிருந்தார்.

துஷ்யந்தன் வியப்புடன் காசிபரை நோக்கினான். ‘இம் முனிவர்கள், கேட்டனவற்றை எல்லாம் கொடுக்கவல்ல கற்பக மரங்கள் நிறைந்த இடத்தின் கண்ணிருந்தும், அவைகளை யாதும் விரும்பிக் கேளாதவராய், இனிய காற்றை மாத்திரமே அருந்துகிறார்கள். தாமரை மலர்களின் பொன் நிறமான மகரந்தங்கள் விழுதலாற் பழுப்பு நிறமடைந்த இனிய நீரிலே நீராடுகிறார்கள். இவர்கள் மனமோ, அசையாத கருங்கற்போல இறைவனிலேயே பதிந்து கிடக்கின்றது. இவர்களது தவமோ மிக அருமையானது” என மனத்துள் நினைந்து, அவரை வணங்குதற்கேற்ற செவ்வி நோக்கி நின்றான்.

மாலதி அவ்விடத்தை நீங்கி அப்பாற் சென்றான். துஷ்யந்தன் அங்கே காணப்பட்ட ஓர் அசோக மரத்தின் கீழ் நின்றான்.

துஷ்யந்தன் நின்ற இடத்துக்குச் சிறிது தூரத்துக் கப்பால், தன் தாயிடத்துப் பால் குடித்துக் கொண்டிருந்த ஒரு சிங்கக் குட்டியை, தன்னுடன் விளையாட வருமாறு, அதன் பிடரி மயிரிற் பிடித்துச் சிறுவன் ஒருவன் இழுப்பதையும், முனிபத்தினியர் இருவர் அவனை அங்ஙனம் செய்யவிடாது தடுப்பதையும், துஷ்யந்தன் கண்டு அச் சிறுவனைக் கூர்ந்து நோக்கினான். சிங்கக்குட்டியை இழுத்துக்கொண்டு வந்த சிறுவன், அதன் வாயைத் திறந்து அக் குட்டியின் பற்களை எண்ணத் தொடங்கினான். அதனைக் கண்ட முனிபத்தினியர், “ஏ, பையா; வர வர, உன் பட்டித்தனம் அதிகமாகிறது. உனக்குச் சருவதமனன் (= எல்லாவற்றையும் அடக்கியாள் பவன்) என்னும் பெயர் பொருத்தமானதுதான்! இந்த விலங்கை வருத்தாதே. இக்குட்டியை நீ விடாதொழியின் இதன் தாய் உன்மேற் பாயும்” எனக் கூறினர். அவனோ அதற்கஞ்சாதவனாய் “அம்மா, நான் மிகவும் பயப்படுகிறேன்” எனக் கூறிக் கேலிச் சிரிப்புச் சிரித்தான். சிறுவனை அச் செயலினின்றும் மாற்றி வேறொரு விளையாட்டி லீடுபடுத்துமாறு, ஒரு விளையாட்டுப் பொருளை எடுக்க முனிபத் தினியருள் ஒருவர் சென்றார். இவையனைத் தையும் பார்த்து நின்ற துஷ்யந்தனின் மனம் அச்சிறுவன்பால் இழுப்புண்டது. அச் சமயத்து துஷ்யந்தனைக் கண்ட முனிபத்தினி துஷ்யந்தனை நோக்கி, ‘ஐயா, இச் சிங்கக் குட்டியை இவன் கைகளினின்றும் விடுவியுங்கள்” எனக் கேட்டுக்கொண்டார்.

அரசன் புன்சிரிப்புடன் அச் சிறுவனின் அருகிற் சென்று நீ துறவியர் புதல்வனாயிருந்தும் துறவோ ரியல்புக்கு மாறாக, ஏன் இப்பிராணி களை வருத்துகிறாய்?” எனக் கூறி, அவனுடலைத் தீண்டி, அக் குட்டியை விடுவித்தான். அப்பொழுது துஷ்யந்தனின் உடலில், ஒருவித இன்பம் உண்டாயிற்று.

துஷ்யந்தன் சருவதமனனுடன் சேர்ந்து காணப்படும்போது, இருவர் தோற்றமும் ஒத்திருப் பதைக் கண்டு, அம் முனிபத்தினி ஆச்சரிய மடைந்து, “இஃதென்ன புதுமை! இவ் விருவரும் ஒரே தோற்றமுடையராய்க் காணப்படுகிறார் களே!” என எண்ணி , “ஐயா, இவன் துறவியர் புதல்வன் அல்லன். இவன் புருவம்சத்தைச் சேர்ந்த ஓரரசனின் புதல்வன் ஆவன்’ எனக் கூறினர். இவ்வார்த்தைகள் துஷ்யந்தனின் மனத்தில், ஒரு நம்பிக்கையை உண்டாக்கி, அச் சிறுவன் தன் புதல்வனாயிருக்கவேண்டுமென்ற எண்ண ம், அவன் மனத்திலுதித்தது. ஆதலால், துஷ்யந்தன் முனிபத்தினியை நோக்கி, ‘அம்மா, புரு வம்சத்தவர் அரசாட்சி புரிந்து, தம் புதல் வருக்குப் பட்டங் கட்டிய பின்பன்றோ , இத்தகைய ஆசிரமங்களில் வதிவர். அங்ஙனமாக, புருவின் வம்சத்தவனான இச் சிறுவன் இங்கு வந்த தெங்ஙனம்? இவன் யாருடைய புதல்வன்?” என வினாவினான்.

“இவனுடைய தந்தை ஒரு கொடூரமான மனிதன். தன் மனைவியாகிய இச் சிறுவனின் தாயை, ஏற்றுக்கொள்ளாது துரத்திய கொடியவன்.

தன் மனையாளை நீக்கிவிட்ட அக்கொடியவனின் பெயரை நாம் வாயால் உச்சரிக்கமாட்டோம்” என, அம் முனிபத்தினி விடை கூறினாள். இவ் வார்த் தைகள் துஷ்யந்தனுக்கு மேலும் நம்பிக்கையை அளித்தன. சருவதமனன் தன் புதல்வனே யெனவும், சகுந்தலையும் அவ்விடத்திலேயே இருக்க வேண்டுமெனவும் தீர்மானித்தான்.

18. துஷ்யந்தன் புதல்வனை அறிதல்

சருவதமனனுக்கான விளையாட்டுப்பொருளை எடுக்கச் சென்ற முனிபத்தினி, களி மண்ணாற் செய்யப்பட்ட ஒரு பறவையை எடுத்துக் கொண்டு அங்கே வந்து “சருவதமனா, இச்சகுந்தலா வண்ணியத்தைப் பார்” (= இப்பறவையின் அழகைப் பார்) எனக் கூறினார்.

சருவதமனன் திரும்பிப் பார்த்து “என் அம்மா எங்கே?” என வினாவினான். உடனே, முனிபத்தினியர் ‘நாம் சகுந்தலாவண்ணியம் என இப் பறவையின் அழகைக் கூற இவன் தன் தாய் சகுந்தலையோ என ஏமாறினானே” எனக் கூறி நகைத்தனர்.

சருவதமனனின் தாய், சகுந்தலை என்பதை, முனிபத்தினியர் மூல மறிந்து கொண்ட துஷ்யந்தன், தன் துன்பங்களனைத்தும் நீங்குங் காலம் வந்துவிட்டதென மனமகிழ்ந்தான். ஆயினும், அவன் அதை நன்கு துணிய முடியாத வனாயிருந்தான். முனிபத்தினியருள் ஒருவர், சிறிது மனக்குழப்பத்தோடு சருவதமனனது, மணிக்கட்டை நோக்கிக்கொண்டு “ஓ, இவனது மணிக்கட்டிற் கட்டப்பட்டிருந்த கரண்டகத்தைக் காணவில்லையே! அது எங்கே போயிற்று” என்று கூறிக்கொண்டு அங்குமிங்கும் பார்த்தார்.

சருவதமனன் சிங்கக்குட்டியைப் பிடித்து விளையாடும்போது அவனது கரண்டகம் நழுவிக் கீழே விழுந்துவிட்டது. அதனைக் கண்ட துஷ்யந்தன் “அம்மா, அதோ அக் கரண்டகம் இருக்கிறது; இவன் சிங்கக் குட்டியுடன் விளையாடும்பொழுது இது விழுந்து விட்டது” என்று கூறிக்கொண்டு அதனை எடுப்பதற்காகக் கீழே குனிந்தான்.

“அதனைத் தொடாதீர்; தொடாதீர்” என அம் முனிபத்தினி தடுத்தார். சருவதமனன் ஆசிரமத் திற் பிறந்த காலத்தில் மாரீசமுனிவரென்பவர், அபராசிதை என்னும் ஒரு பூண்டை அவன்கையில் ஒருகரண்டகமாக அணிவித்தார். அது ஒருவகைக் காப்பு. அக் காப்பைச் சருவதமனன் எப்பொழு தும் தன்கையிலணிந்திருந்தான். அது, அவனைப் பல அபாயங்களினின்றும் பாதுகாத்து வந்தது. அக்கரண்டகம் அவன் கையிலிருந்து கீழே விழுந்ததால் அச் சிறுவனாவது அல்லது அவன் பெற்றோராவது எடுக்கலாம். அவர்களைத் தவிர வேறு யாராவது எடுத்தால், அது ஒரு பாம்பாக மாறி, அவரைத் தீண்டிவிடும். ஆனபடியாற்றான், முனிபத்தினி அக்கரண்டகத்தைத் தீண்டவேண்டா மெனத் துஷ்யந்தனைத் தடுத்தார். ஆயின், அதற்கிடையில் துஷ்யந்தன் அதனை எடுத்து விட்டான். அது பாம்பாக மாறி, துஷ்யந்தனைத் தீண்டிவிடுமென நினைத்த முனிபத்தினியர், அங்ஙனம் நிகழாததைக் கண்டு, தங்கள் கைகளைத் தம் மார்பின்மேல் வைத்துக்கொண்டு, ஒருவரை யொருவர் ஆச்சரியத்துடன் நோக்கினர்.

ஏன் என்னை எடுக்கவேண்டாமெனத் தடுத்தீர்கள்?” எனத் துஷ்யந்தன் மலைத்து நிற்கும் அம் முனிபத்தினியரை வினாவினான். முனிபத்தினியர் ஒருவர், அக் கரண்டகத்தின் இயல்பையும் வரலாற்றையுந் துஷ்யந்தனுக்குக் கூறினார். துஷ்யந்தன் தன் சந்தேகங்களனைத்தும் நீங்கப்பெற்று, அவன் தன் புதல்வனென்னும் உண்மையை யறிந்து “நானே உன் தந்தை” என்று கூறிக்கொண்டு சருவதமனனை அன்புடன் தழுவினான்.

“இல்லை, நீ என் தந்தை அல்லன், துஷ்யந்தனே என் தந்தை’ என்று சிறுவன் கூறினான். இக்கூற்று துஷ்யந்தனுக்கு மகிழ்ச்சிதர, அவன் தன் புதல்வனைத் தழுவிக்கொண்டு நின்றான். இவ் வாச்சரியத்தைப் பார்த்த முனிபத்தினியருள் ஒருவர் சகுந்தலையிடம் விரைந்து சென்று, சகுந்தலைக்கு அந்நிகழ்ச்சிகளைக் கூறினார். அதனைக் கேள்வியுற்ற சகுந்தலை, ”சானுமதி முன் தனக்குத் தெரிவித்தவாறும் இந்திரனி னன்னையார் கூறியவாறும் துன்பங்கள் நீங்கும் காலம் வந்து விட்டதோ” என எண்ணினாள்.

19. எல்லாம் நன்மையாதல்

சகுந்தலை முனிபத்தினியர்களுடன் பின்னப் பட்ட சடையும் அழுக்கேறிய மரவுரி யுடையும் கடும் நோன்பினால் வாடிய உடலு முடையவளாய், தன் புதல்வனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அவளது பின்னிய சடை அவளது தூய ஒழுக்கத்தை யும், நெடுநாள் அவள் மேற்கொண்டிருந்த நோன்பின் பெருமையையுங் காட்டின.

துஷ்யந்தன் சகுந்தலையைக் கண்டு அவளை அறிந்து கொண்டான். அவள் தோற்றத்தைக் கண்டு மனம் வருந்தினான். கழிவிரக்கத்தினால் வெளுத்துத் தோன்றும் அரசனைப் பார்த்து, சகுந்தலையால், முதலில் அவனை அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் தன் புதல்வ னின் கழுத்தைக் கட்டிக்கொண்டிருக்கும் அன்னியன், ஏன் இன்னும் கரண்டகத்தாற் றாக்கப்பட வில்லை” யென ஆச்சரியமடைந்தாள்.

தாயைக் கண்ட சருவதமனன், தாயிடம் ஓடி, “அம்மா, அம்மா, இவரைப் பார்; யாரோ அன்னியர்; என் தந்தை எனக் கூறி ‘ஓ, மகனே’ என அணைக்கின்றார்,” என்று கூறினான்.

துஷ்யந்தன் சகுந்தலையை நோக்கி ”என் அன்பே, என்னை மறந்துவிட்டாயா? சகுந்தலா! நான் உன்னை மிக வருத்திவிட்டேன். கிரகணத்தால் விடப்பட்டவுடன், உரோகிணி என்னும் நட்சத்திரம் சந்திரனைச் சேர்ந்தவாறு போல, என் மறதி என்னும் இருள் நினைவினால், நின்னைத் துரத்திய பின்பு, நீ என் எதிரில் வந்து நிற்பது என் நல்வினையே!” எனக் கூற, சகுந்தலை “இவரே என் கணவர், எம்பெருமானுக்கு வெற்றி சிறக்க,” என்று கூறினாளாயினும், கண்ணீர் மிகுதியால் அவளால் வேறு யாதும் கூற முடியாதிருந்தது.

துஷ்யந்தன் சகுந்தலையைக் கிட்டி, “அந்நேரத்தில், என் மனம் ஏதோ, அறியப்படாத காரணத்தால் மயங்கி நின்றது. குருடன் தன் தலையிற் சூடப்பட்ட மலர் மாலையையும், பாம் பென்றஞ்சியெறிந்துவிடுதல்போல, நின்னையும் புறக்கணித்தேன். என்னை மன்னிப்பாய்” எனக் கூறி நின்றனன்.

“நான் பூர்வத்திற் செய்த தீவினைப் பயனால், அங்ஙனம் நிகழ்ந்தது; என் காதலர் இரக்க முடையர்” என எண்ணியவளாய், அரசன்கையிற் கணையாழியைக் கண்டு ‘எம் பெருமானே இஃதன்றோ , அம்மோதிரம்” எனக் கூறினாள். “இம்மோதிரம் கிடைத்தமையினாலேயே, நான் உண்மையாக நின் நினைவு வரப்பெற்றேன்” எனத் துஷ்யந்தன் தெரிவித்தான்.

ஆசிரமத்திலுள்ள முனிவர்களும், மற்றை யோரும் அங்கே கூடினர். மாலதியும் அங்கே வந்து,

அரசே, “நீடுவாழ்க; மனையாளையும் புதல்வனையுங் கண்டதினால், நீர் மகிழ்ச்சியுறுவீராக!” என வாழ்த்தி, “இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் இந்திரன் முதலிய தேவர்களுமறிந்தனர்; தெய்வத் தன்மைவாய்ந்த மாரீசர் தம்மைப் பார்க்கும்படி விடைதந்தார்; வாருங்கள்,” என, தெரிவித்தான். சகுந்தலையையும் புதல்வனையும் முன்னடத் திச் சென்று, துஷ்யந்தன் மாரீசரை வணங்கி

னான். மாரீசர் துஷ்யந்தனையும், சகுந்தலையை யும் சருவதமனனையும் வாழ்த்தினார். துஷ்யந் தன் நடந்தன வனைத்தையுங் கூறி, “யானையைக் கண்டும், அது யானையன்றென எண்ணிப் புறக்கணித்து, பின் யானையின் அடிச்சுவடு களைப்பார்த்து யானையென அறிந்த வாறுபோல், முதலிற் சகுந்தலையைப் புறக்கணித்து, பின் கணையாழியைக் கண்டே சகுந்தலையைப் பற்றிய எண்ணம் வந்த காரணம் யாதென அறியேன்; அதனைத் தெரிவிக்க வேண்டும்” என வினவி நின்றான்.

மாரீசர் துருவாசரது சாபவரலாற்றைக் கூறினார். அதனைக் கேட்ட துஷ்யந்தன், தான் அப் பழியினின்றும் விடுதலை பெற்றமைக்காக மகிழ்ந்தான். சகுந்தலையுந் தன் குற்றத்தினா லேயே அவ்வாறு நிகழ்ந்ததென்றும் தம் கணவர் பேரன்பு மிரக்கமு முடையவரென்றும் அறிந்து மகிழ்ந்தாள்.

இம் மகிழ்ச்சியான வரலாற்றைக் கண்ணுவ ருக்குத் தெரிவிக்கவேண்டுமெனத் துஷ்யந்தன் விரும்பினான். ஆயின், ‘தவ வலிமையால், அவையனைத்தையுங் கண்ணுவர் உணர்ந்து விட்டார்’ என்பதை மாரீசர் மூலம் துஷ்யந்தன் அறிந்து மகிழ்ச்சிகொண்டான். ஆயினும், மாரீசர், மாணவன் ஒருவன் மூலம் இச் செய்தியைக் கண்ணுவருக்கு உணர்த்தினார்.

கண்ணுவர், முன்பு தன்னைச் சினவாமைக்கும், இதுவே காரணமென்பதைத் துஷ்யந்தன் சிந்தித்துத் தெளிந்து கொண்டான்.

மாரீசர், சருவதமனனை நோக்கி, “குழந்தாய், நீ வீராதி வீரனாய், நிகரற்ற போர்வீரனாய் இந் நிலவுலகத்தை நீண்டகாலம் ஆட்சி புரிவாயாக” எனவும், துஷ்யந்தனையுஞ் சகுந்தலையையும் நோக்கி, “இந்திரன், நுங் குடிகளுக்கு ஏராளமான மழையைப் பெய்விக்கட்டும்! நீவிரும் வேள்விகள் வேட்பித்துத் தேவர்களை மகிழ்விப்பீராக! நற்செய்கைகள் பல புரிந்து பல்லூழிகாலம் வாழ்வீராக!” எனவும் வாழ்த்தினார். மூவரும் தேவேந்திரனது தேரி லேறிக்கொண்டு மாலதி தேரைச் செலுத்த, அத்தினாபுரியை அடைந்தனர். அங்கே நகர மாந்தர் மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்று உபசரித்தனர்.

துஷ்யந்தன் நீண்டகாலம் நல்லாட்சி புரிந்து தன் மகன் சருவதமனனுக்குப் பட்டங் கட்டி அரசனாக் கிய பின்பு, சகுந்தலையுடன் ஆரணியத்தை அடைந்து, தவம்புரிந்து சுவர்க்கமடைந்தான்.

சருவதமனன், பரதன் என்னும் பெயருடன், இந்தியா முழுவதையும் ஆட்சி புரிந்தான். இதனாலேயே இந்தியா, பரதகண்டம் என வழங்கப்படுகிறது. பனை

வாழி நல்லறம் வாழி புரோகிதர்
வாழி நற்றமிழ் வண்புல வர்கடாம்
வாழி மன்னன் வளமுறு நற்குடி
வாழி வாழி வரன்முறை வாழியே

– சுபம் –

– சகுந்தலை சரிதை, முதலாம் பதிப்பு: 1956, வட – இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *