சகுந்தலை சரிதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: June 11, 2022
பார்வையிட்டோர்: 17,072 
 

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1 – 9 | அத்தியாயம் 10 – 19

1. சகுந்தலையின் பிறப்பு

விசுவாமித்திர முனிவர் முதலில் அரசராக இருந்து, பின்பு தவஞ்செய்து முனிவரானவர். அவர் அரசராக இருந்தபோது அவருக்குக் கௌசிகராசா என்று பெயர்.

கௌசிகராசா ஒருமுறை தமது படைவீரர் களுடன் வேட்டையாடச் சென்றார். வழியிலே வசிட்டமுனிவரின் ஆசிரமத்தைக் கண்டு அங்கே சென்றார்.

வசிட்டர் முனி சிரேட்டர்; சாந்தமே உருவானவர்; தவத்தான் மிக்கவர்; பல சித்துக்களை அடைந்த வர். அதனாற்றான் கௌசிகராசா வசிட்டரது ஆசிரமத்துக்குச் சென்று அவரை வணங்கினார். வசிட்டர் அரசனை ஆசீர்வதித்த பின் நீரும் உம்முடைய படையினரும் இன்று இங்கே விருந் துண்டு செல்லல் வேண்டும்’ என்று தெரிவித் தார். கௌசிகர் அதைக் கேட்டு, காட்டிலே தவஞ் செய்து சருகு, கந்தம் முதலியவற்றை உண்ணும் முனிவராகிய வசிட்டரால் நமக்கும் நம் படைகளுக்கும் எப்படி உணவளிக்க முடியும்?’ என எண்ணி , வசிட்டமுனிவரிடம் தம்மெண்ணத்தை வெளிப்படையாகத் தெரிவித்தார்.

வசிட்டர் புன்னகை புரிந்து, சபலை என்னும் பெயருடைய தமது அழகிய பசுக்கன்றை அழைத்து, “குழந்தாய் சப்பலை, அரசனுக்கும், படைகளுக்கும் வேண்டிய போசனம் அளித்து உபசரி” என்று கூறினார்.

அப்பொழுது அங்கே ஓர் அற்புத நிகழ்ச்சி நடைபெற்றது! அரசனுக்கும் பரிவாரங்களுக்கும் போதியதான இனிய உணவுகள் உடனே அங்கே தோன்றிக் குவிந்து கிடந்தன. அவ்வுணவுகள் எல்லோருக்கும் பரிமாறப்பட்டன. அரசனும் பரிவாரங்களும் நன்கு உண்டு மகிழ்ச்சியடைந் தார்கள். இவற்றைப் பார்த்து அதிசயித்த கௌசிக ராசாவுக்கு, அந்தப் பசுவின் மேல் ஆசையுண்டா னது. அந்தப் பசுவை வசிட்டரிடமிருந்து பெற விரும்பி மகரிஷியே, இந்தச் சப்பலையை எனக்குத் தரவேண்டும். இத்தகைய பொருள்கள் அரசர் களுக்கே ஏற்றன” என்று வேண்டினார்.

வசிட்டர் சிறிதுநேரம் சிந்தித்தார். பின்பு கௌசி கரை நோக்கி, “சபலை என்னை விட்டுப் பிரிய விரும்பாது; ஆகையால் அதைத் தர முடியாமைக்கு வருந்துகிறேன்” என்று கூறினார். கௌசிகர், அதனைத் தமக்குத் தருமாறு மீண்டும் வசிட்டரை இரந்து கேட்டார். வசிட்டர் மீண்டும் மறுக்கவே, சபலையின்மேற் கௌசிகர் கொண்ட ஆசை மேலும் அதிகரித்தது. வசிட்டருக்கு விரோதமாய்த் தான் சபலையைக் கைப்பற்றிக் கொண்டு போக விரும்பிய கௌசிக ராசா சப்பலையைப் பிடிக்குமாறு, தம் படையினருக்குக் கட்டளையிட்டார். கௌசிகரின் படையினர், சபலையைப் பிடிக்க முயற்சித்தனர். அப்பொழுது சபலை, வசிட்டரி னருகிற் சென்று, கண்ணீர் சொரிந்து நின்றது. முனிவர் மனம் நைந்து, சப்பலையை நோக்கி, “குழந்தாய் சப்பலை, உன்னை வருத்தும் இவர் களை அழிக்கக்கூடிய ஒரு சேனையைப் பெற்றுக் கொள்வாய்” என்றார். உடனே, எண்ணற்ற போர் வீரர்கள் அப் பசுவினின்றுந் தோன்றிக் கௌசி கரின் போர்வீரர்களைக் கொன்றனர். அப்பொழுதுதான் கௌசிகருக்குத் தவத்தின் பெருமை புலனாயிற்று! வசிட்டர் தவத்தினா லடைந்துள்ள உயர்வைக் கண்டு தாமும் தவஞ் செய்து, வசிட்டர்போற் பிரமரிஷியாக வேண்டுமென்று எண்ணிக் கடுந் தவஞ் செய்யத் தொடங்கினார். தவஞ்செய்து விசுவாமித்திர முனிவரானார்.

கௌசிகர் கௌதமி யாற்றங் கரையில், புஷ்கர தீர்த்தத்திற் கடுந் தவஞ் செய்துகொண்டிருப் பதை அறிந்த இந்திரன், அவருடைய தவத்தைத் தடுக்க முயன்றான். மேனகை யென்னும் தேவ கன்னிகையை அழைத்து, அவளைப் புஷ்கர தீர்த் தத்துக்குச் சென்று விசுவாமித்திரரின் தவத்தைக் கலைக்குமாறு கூறினான்.

விசுவாமித்திரர் கோபித்துத் தன்னைச் சபித்து விடுவாரே” என்று மேனகை பயந்தாள். அப்போது தேவர்கோனாகிய இந்திரன் ‘அஞ்சாதே; உன் அழகில் விசுவாமித்திரர் மயங்குவார்” என அவளைத் தேற்றினான்.

“தேவர்கோன் கூறுமித் தேறுதலைக் கேட்டநங்கை ஆவி யழிந்தாலு மாற்றுவதுன் – சேவகமே தேர்ந்தேற் குறுதுணையாத் தென்ற லெனுந்தேவை ஈந்தருள்க வென்றாளிரந்து.”

சகுந்தலை வெண்பா மேனகையின் வேண்டுதலால், இளவேனிற் பருவந் தொடங்கிற்று. சூரியனது பொற்கிரணங் கள் குளிர்ச்சியடையும் மாலைக் காலமாயிற்று; முல்லையும், கோங்கும், குமுத மலரும் விரிந்தன. அந்திப் பிறை, வானை அழகுசெய்தது. அப்பொழுது மேனகை இனிய இசைப் பாடலுடனும் அன்ன நடையுடனும் கௌதமி யாற்றங்கரைக்குச் சென்று, ஆங்குள்ள புஷ்கர தீர்த்தத்தில் நீராடினாள். அப்பொழுது விசுவாமித்திரர் அவளைக் கண்டு பழவினையால் உள்ளந் தடுமாறினார். மேனகை யின் அழகில் மயங்கித் தன் தவத்தைவிட்டு அவள்மேற் காதலுற்று அவளை மணம்புரிந்து அவளுடன் சிலகாலம் வாழ்ந்தார். பின்னர் தமது பிழையை உணர்ந்து மேனகையைத் துறந்து மறுபடியுந் தவத்தை மேற்கொண்டார்.

அவர்களுடைய மணவாழ்வின் பயனாக, விசுவா மித்திரருக்கு மேனகையிடம் ஓரழகிய பெண் குழந்தை பிறந்தது. அதனை அவள் விசுவாமித் திரரிடம் கொண்டு சென்றபோது அதனை அவர் பொருட்படுத்தாது கடுந்தவத்தை மேற்கொண் டிருந்தார். அதனால், மேனகை அக்குழந்தையை அவருக்குச் சிறிது தூரத்தில் ஒரு புல்லுப் படுக்கை யில் வளர்த்தி விட்டுத் தேவலோகஞ் சென்று விட்டாள். காட்டிலே வளர்த்தப்பட்ட குழந்தையைச் சகுந்தாப் பறவைகள், தம் சிறகுகளை விரித்து நிழல் செய்து பாதுகாத்தன.

காசிப முனிவரின் வழித்தோன்றிய கண்ணுவர் என்னும் முனிவர், அவ் வாரணியத்தினூடே செல்ல நேரிட்டபோது, அக் குழந்தையைக் கண்டு தமது பன்னசாலைக்கு எடுத்துச் சென்றார். சகுந்தாப் பறவைகளாற் பாதுகாக்கப்பட்டமை யால், சகுந்தலை எனப் பெயரிட்டுத் தமது ஆசிரமத்தில் அக்குழந்தையை வளர்த்துவந்தார்.

2. கண்ணுவ ராசிரமத்திற் சகுந்தலை

உலகப் பற்றுக்களைத் துறந்தவர்கள் தம் துறவொழுக்கத்தினை மேற்கொள்ள ஆரணியஞ் செல்வர். அங்கே தடி கம்புகளாற் கட்டி, இலை தழைகளால் வேய்ந்து, ஆக்கிய பன்னசாலையில்

வாழ்வர்; மெய்ப்பொருளை உணர்தலாகிய தவமுயல்வர். அவர்கள் முனிவர்கள்.

முனிவர்கள் வசிக்கும் ஆசிரமப் பகுதிகளை, தவமியற்றும் புனித இடங்களென யாரும், இலகுவில் அறிந்துகொள்ளலாம். அங்கே இளங் கிளிகள் மரப் பொந்துகளில் வாசஞ் செய்யும். அவை வாசஞ் செய்யும் மரங்களின் கீழே காட்டுத் தானியங்கள் மரப் பொந்துகளிலிருந்து சிதறி, எங்கும் பரந்து கிடக்கும். வேறு சில இடங்களில் நெய்ப்பற்றுள்ள அழகிய கற்கள், ஒளியுள்ள அழகிய பழங்களைப்போல மின்னி மிளிரும். இளம் மான் கன்றுகள், அச்சமின்றிப் புற்கறித் துண்டு விளையாடா நிற்கும். நீராடிச் செல்லும் முனிவர்களது மரவுரியாடைகளின் ஓரங்களி னின்றும் நீர் சொட்டிக் கொண்டிருக்கும். அந் நீர் சொட்டிய துளியின் அடையாளங்களால் நீர் நிலைகளுக்குச் செல்லும் வழிகள் வரிவரியாகக் காணப்படும். நெய்யைச் சொரிந்து முனிவர்கள் செய்யும் யாகப் புகையினால், மரங்களிலரும்பிய இளந்தளிர்கள் பல்வேறு நிறமுடையனவாகத் தோற்றும். யாகத்துக்காகக் கொழுந்து அறுக்கப் பட்ட தருப்பைப் புல்லுள்ள நிலத்தில், கருப்பங் கொண்ட பெண் மான்கள் புற் கறித்து மெல்ல உல

பன்னசாலைகளின் பக்கத்திலே இறைவனை அருச்சனை செய்தற்கு ஏற்றனவான பூக்களைக் கொடுக்குஞ் செடிகளும், கொடிகளும், மரங்க ளும் உண்டாக்கப்பட்டிருக்கும். பிறர்க்குத் தீங்கு செய்யாதனவாகிய மான் முதலிய பிராணிகளும், மயில் முதலிய அழகிய பறவைகளும் அங்கே வளரும்.

கண்ணுவரது பன்னசாலை, மாலினி யாற்றங் கரையில் அழகிதாய் விளங்கிற்று. கண்ணுவரே அவ் வாசிரம வாசிகளின் தலைவராவர். அவர் காசிப முனிவரின் கோத்திரத்தைச் சேர்ந்தவர். கண்ணுவ முனிவரது பன்னசாலையை யடுத்து வேறு பல பன்னசாலைகளும் இருந்தன. அங்கே பல முனிவர்களும், முனி பத்தினியரும் தவவொழுக்கத்தில் வாழ்ந்து வந்தனர். முனி புதல்வர்கள் பலர், கண்ணுவர் ஆசிரமத்திற் கல்வி பயின்று வந்தனர்.

கண்ணுவ ராசிரமத்தில் மூதாட்டியார் ஒருவர் இருந்தார். அவர் முனிபுதல்வியரை நல்ல முறையிலே வளர்த்து வந்தார். கௌதமி என்பது அவரது பெயர். அவரை “ஐயை” என ஆசிரம வாசிகள் அழைத்தனர்.

கண்ணுவ ராசிரமத்தில் வளர்ந்த சகுந்தலை, கன்னிப் பருவமடைந்து பேரழகு பெற்றிருந்தாள். பிரமன் ஓரழகிய சித்திரத்தைப் பெண் வடிவமாக எழுதி, அவ் வடிவத்தினுள்ளே உயிரை நுழைத்து விட்டானோ? அன்றி, அழகிய உறுப்புக்களை மனத்தாலியைத்து, அவற்றை ஒருங்கு சேர்த்துச் சகுந்தலையாகப் படைத்தானோ? அன்றி, அழியாத நல்ல தவங்களெல்லாம் ஓருருவாய்த் திரண்டு, இவள் இவ்வுருப் பெற்றனளோ’ எனக் கண்டோர் கூறுமாறு பேரழகு படைத்திருந்தாள்.

பேரழகாற் றுலங்கிய சகுந்தலை, ஆசிரமத்துக் குரிய மரவுரி யணிந்திருந்தமையால், நறுமணங் கமழும் புதிய மல்லிகைப்பூ, மணமில்லாத எருக்கஞ் செடிமேல் வீழ்ந்திருப்பது போலக் காணப்பட்டாளாயினும், அவள் மணக்கப்படாத மலரையும், நகத்தாற் கிள்ளப்படாத இளந் தளிரையும், ஊசியாற் றொளைக்கப்படாத நவமணியையும், எவராலுஞ் சுவைக்கப்படாத புதிய தேனையும் போன்று, ஆரணியத்தை அழகு செய்து கொண்டிருந்தாள்.

கண்ணுவரது ஆசிரமத்தில் இவ்வாறு வளர்ந்து வந்த சகுந்தலைக்கு, முனிபுதல்வியர்களான அனசூயை, பிரியம்வதை என்னும் உயிர்த் தோழியர் இருவர் இருந்தனர். சகுந்தலை தன் தோழியருடன் பயமறியாத இளம் மான்கன்று போல மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்தாள். ஆசிரமத் திலுள்ள இளஞ் செடிகளுக்குக் குடத்தில் நீர் மொண்டு ஊற்றி, உடன் பிறந்தாரைப் போல அன்பு பாராட்டி அவற்றை வளர்த்துவந்தாள்.

தாயை இழந்த மான் கன்றுக்குக் கை நிரம்ப நெல்லை ஊட்டி, தன் புத்திரியைப்போலக் காப்பாற்றினாள். மான் கன்றுக்குத் தருப்பைப் புல்லின் முனை குத்தியமையால் ஏற்பட்ட வாய்ப் புண்ணுக்கு, இங்குதி நெய்யைத் தடவி அப் புண்ணை ஆற்றினாள். ஆசிரமத்துக்கு வந்த விருந்தினர்க்குக் கால் கழுவ இனிய நீருதவி, பாலும் பழமுமீந்து உபசரித்தாள். இவ்வாறு சகுந்தலையுந் தோழியரும் இனிது வாழ்ந்து வந்தனர்.

3. துஷ்யந்தன் சகுந்தலையை அறிந்தமை

சந்திர வம்சத்திலே புரு என்னும் அரசன் சிறந்தவன்; அவன் மரபிலே துஷ்யந்தன் தோன்றினான். அவன் அத்தினாபுரியிலிருந்து அரசு செய்தான்.

அத்தினாபுரி என்பது இப்போதுள்ள ‘டில்லி நகருக்கு வடக்கேயுள்ள ஒரு பட்டணம். துஷ்யந் தனது ஆட்சிக்குட்பட்ட ஆரணியத்தின் ஒரு பகுதியிலேயே கண்ணுவர் முதலிய முனிவர் களது ஆசிரமங்களும் இருந்தன.

ஒரு நாள் துஷ்யந்தன், தன் நண்பனான விதூஷகன், படைவீரர் முதலியோருடன் தன் தேரிலேறி வேட்டை விருப்புடன் காட்டுக்குச் சென்றான். பல இடங்களிலும் வேட்டையாடிய பின் கண்ணுவ ராசிரமத்தின் அயலிலுள்ள ஓரிடத்தில் ஒரு புள்ளிமானைக் கண்டான். உடனே அந்த மானைத் தொடருமாறு தன் தேர்ப்பாகனை ஏவித் தானும் தேரில் ஏறி, வில்லுங் கணையுங் கைக்கொண்டான்.

மான் மிக வேகமாக ஓடிற்று. அதனாலே துஷ்யந்தன் நெடுந்தொலைவில் இழுக்கப்பட்டுச் சென்றுவிட்டான். மான் இடையிடையே தன் கழுத்தை அழகாக வளைத்துத் திரும்பித் திரும்பி, துஷ்யந்தனது தேரைப் பார்த்துப் பார்த்து ஓடிற்று. அம்பு, தன்மேல் வந்து விழுந்துவிடுமோ என்னும் அச்சத்தால், தன் கழுத்தைச் சுருக்கி உள்ளே இழுத்து, பின் தொடைகளைப் பரப்பிக் கொண்டு பாய்ந்தது. அதன் வாயினின்று பாதி கறிக்கப்பட்ட புல், வழியெங்கும் சிந்திக் கிடந்தது. அது இடையிடையே துள்ளுவதால், அது காற்றிற் பறப்பது போலக் காட்சி அளித்தது. சிறிது நேரத்தில் அந்த மான் துஷ்யந்தனது பார்வைக்கு அரியதாய்த் தொலைவிற் போய்விட்டது.

தேர்ப்பாகன் மானைத் தொடர்வதற்காகக் குதிரைகளை வேகமாகச் செலுத்தினான். குதிரை கள், சூரியனது தேரை இழுக்கும் குதிரைகள் போல, மானைத் தொடர்ந்து தம் முடம்பின் முற்பாகத்தை நீட்டி, வேகமாக ஓடின. இதனாலே தூரத்திலே மிகச் சிறிதாகத் தோன்றிய பொருள் கள், விரைவினால் உடனே அண்மையில் மிகப் பெரிதாகத் தோன்றின. தேரும் மானைக் கிட்டி விட்டது. அரசன் அம்பைக் குறிவைத்து எய்யத் தொடங்கினான். அப்பொழுது, ‘ஓ அரசனே, நில்! நில்! அந்த மானை எய்யாதே; – அது ஆசிரமத்துக்குரிய மான். ஆசிரமத்துக்குரிய மான் கொல்லப்படல் பது ஆகாது’ – என்னும் வார்த்தைகளைக் கேட்டுத் தேரை நிறுத்தி,

அப்புறம் பார்த்தான். துறவி ஒருவர், இரண்டு மாணவர்களோடு தன் கையை உயரத் தூக்கி “ஓ, அரசனே, இம்மான் கண்ணுவ முனிவரது ஆசிரமத்துக்குரியது; இது கொல்லப் படல் ஆகாது. இடியைப் போல் வலியுடைய நின் அம்புகள் எங்கே! இம் மானின் மெல்லிய உடல் எங்கே! உன் அம்புகள் துன்பமுற்றவர்களைக் காப்பதற்கே உதவ வேண்டும். குற்றமற்றோரை அழிக்க உதவக்கூடாது” என்று கூறினர்.

அரசன் தன் வில்லைக் கீழே வைத்து, துறவி யரை வணங்கினான். அவர்கள் துஷ்யந்தனை ஆசீர்வதித்து, நாங்கள் ‘வேள்விக்கு விறகு தேடச் செல்கிறோம். அதோ மாலினியாற்றங் கரையில், கண்ணுவரது ஆசிரமமிருக்கிறது. கண்ணுவர் தம் புதல்வியாகிய சகுந்தலையிடம் விருந்தோம்பும் பணியை ஒப்படைத்து விட்டுத் தாம் தீர்த்தயாத் திரை சென்றுள்ளார். நீர் விரும்பினால் அங்கே சென்று விருந்தாளியாகலாம்” என்று கூறினர்.

இவ்வாறு கூறிய துறவி விடைபெற்றுச் செல்ல, துஷ்யந்தன் ஆசிரமத்தைக் காண விரும்பித் தேரிற் சென்று, முனிவர்கள் தவமியற்று மிடத்தை யடைந்து, தேரினின்று இறங்கினான். தன் அலங் கார உடைகளைக் களைந்து, தன் சாதாரண உடை தரித்து, வில்லையும் பாகன் கையிற் கொடுத்து, தான் ஆசிரம வாசிகளைக் கண்டு திரும்புவதற் குள் குதிரைகளைக் குளிப்பாட்டி ஆறச் செய்யு மாறு அவனிடங் கூறி, ஆசிரமத்துள் நுழைந்தான். துஷ்யந்தன் ஆசிரமத்துட்புகும் வாயிலை அறிந்து அதனுட் புகுந்தான். அப்பொழுது அவனது வலத்தோள் துடித்தது. எனது வலத்தோள் துடிப் பதற்குரிய பயனை நான் எங்கே அடையப்போகிறேன்!”* எனப் பலவாறு சிந்திக்கும் பொழுது, அவ்வாசிரமத்தின் தென்பாகத்தில் யாரோ உரையாடும் ஒலி கேட்டது. உடனே துஷ்யந்தன் ஒலிவந்த திசையை அவதானித்தான்.

துறவோர் குடிக்குரிய பெண்கள் மூவர், தங்கள் வலுவிற்கேற்ற குடங்களில் நீர் மொண்டு, இளஞ் செடிகளுக்குத் தண்ணீர் விட வருவதைத் துஷ்யந்தன் பார்த்தான். அவர்கள் அழகைக் கண்டு வியப்படைந்தான். முல்லைக் காட்டிலே துறவோர் குடியில் வாழும் மகளிர்க்குள்ள பேரழகு அரண்மனை உவளகத்தில் வதியும் அரசமகளிர் அழகினுஞ் சிறந்திருப்பதைத் தன் வாயாற் கூறி ஆச்சரியமடைந்தான். அவர்கள் அழகில் – முக்கியமாகச் சகுந்தலையினழகில் – தன் மனத்தைப் பறிகொடுத்த துஷ்யந்தன், ஒரு செடி மறைவில் நின்று அவர்கள் வருகையை அவதானித்தான்.

தண்ணீர் கொண்டு வந்த சகுந்தலை, ஓரிளஞ் செடிக்கு நீர் ஊற்றினாள். அவள் வளைந்து கொண்டு நீரூற்றுவதைக் கண்ட தோழியாகிய அனசூயை, அவளை நோக்கி “சகுந்தலா, நின் தந்தையாராகிய கண்ணுவர் உன்னைப்பார்க்கி லும், இவ்வாசிரமத்திலுள்ள இளஞ் செடிகளிடத் தில் மிக அன்பு கொண்டிருக்கிறார்போலும்! ஏனென்றால், இவ் விளஞ் செடிகளுக்கு நீரூற்று ஆடவர்க்கு வலத்தோளும் மகளிர்க்கு இடத்தோளும் துடித்தல், பின் நிகழும் நன்மையை முன் உணர்த்தும் உற்பாதம் மாறு அவற்றிலும் மெல்லியளாகிய நின்னை, ஏவியுள்ளாரே!” என்று கூறினாள்.

“என் தந்தை ஏவியதால் மட்டும் நான் இவ்வாறு செய்யவில்லை; நான் இவ் இளஞ் செடிகளை என் சகோதரிகள் போல நேசிக்கிறேன்; அதனா லேதான் நான் இவைகளை இவ்வாறு வளர்க்கி றேன்” என்று சகுந்தலை பிரியம்வதைக்கு விடைகூறிக்கொண்டே நீரூற்றினாள்.

துஷ்யந்தன் அவ்வார்த்தைகளைக் கேட்டு இன்புற்றான். அவர்களது உரையாடலினால் அவ்வழகி, கண்ணுவரின் புதல்வியாகிய சகுந்தலை என்பதை அவன் அறிந்துகொண்டான்.

4. துஷ்யந்தன் சகுந்தலையிற் காதல் கொண்டமை

தென்றற்காற்று வீசிற்று. இளந் தேமா மரத்தி னிலைகள் தென்றலா லசைந்தன. அந்த அசைவைக் கண்ட சகுந்தலை ‘அவைகள் என்னை யழைக்கின்றன போலும்; இதோ அவற்றின் பக்கத்திற் செல்கிறேன்’ என்று கூறிக்கொண்டு தேமாமரத்தி னயலிற் சென்று நின்றாள். அதனைக் கண்டு மகிழ்ந்த பிரியம்வதை, அவளைச் சற்று நேரம் அவ்விடத்திலே அசையாமல் நிற்கும்படி கூறினாள். ஏனெனில், சகுந்தலை தேமாமரத்தின் அயலில் நிற்றல், மாமரம் ஓரிளங் கொடியோடு பிணைந்து நிற்பது போலத் தோன்றிற்று.

சகுந்தலை அவ்விடத்தைவிட் டகன்று போய், தான் அன்பாய் வளர்த்த முல்லைக் கொடி, தன் பக்கத்தில் நின்ற ஒரு தேமா மரத்திற் றாவிச் சேர்ந்திருப்பதைப் பார்த்துக் கொண்டு நின்றாள். அப்பொழுது பிரியம்வதை அனசூயையை நோக்கி, “அனசூயா, அதோ பார்; தான் வளர்த்த முல்லைக்கொடி அதற்கிசைந்த மணாளனாக அத் தேமாமரத்தைப் பற்றி நிற்பதுபோல, தனக்கிசைந்த மணாளன் ஒருவன் கிடைப்பானா வென்று கருதியவளாய், என் தோழி அதனையே பார்த்து நிற்கிறாள்’ என்று உரத்துக் கூறி புன்னகை புரிந்தாள். இதனால் நாணமடைந்த சகுந்தலை ‘போடி, போ, உனக்கு எப்பொழுதும் என்மேற் பகடி தான்” என்று கூறினாள்.

சகுந்தலையினதும் தோழியரினதும் உரை யாடலை அவதானித்து நின்ற துஷ்யந்தன் ‘சகுந்தலை துறவோர் புத்திரியா? இவள் அரச குமாரிபோல இருக்கிறாளே! இவள் அரசகுமாரி யாகவே இருக்க வேண்டும்; ஏனெனில் என் மனம் ஒரு பொழுதும் தருமத்துக்கு விரோதமாகச் செல்லாது; என் மனம் இவள் மேற் காதலுறுகின்றமையால் இவள் அரசபுத்திரியாதல் வேண்டும்; அல்லது அரசர்களால் மணங் கொள்ளத்தக்க குடியிற் பிறந்தவளாதல் வேண்டும்; ஐயப்படுதற்கு ஏதுவான சந்தர்ப்பங் களில் நல்லோர் மனம் எப்பக்கஞ் சாரு கின்றதோ அதுவே கொள்ளத்தக்கது’ என்று தன் னுள்ளே தீர்மானஞ் செய்தான். ஆயினும் சகுந்தலையின் குலத்தை அறிய வேண்டு மென்னும் அவாவுடையவனா யிருந்தான். அப்பொழுது, சகுந்தலை நீரூற்றிய செடியி லிருந்த கருவண்டொன்று, நீரூற்றியமையாற் கலைக்கப்பட்டோ, அன்றி, மலர் சூடியிருந்த நினைந்தோ, அவள் முகத்தை நோக்கிப் பறந்தது. அதனாற் கலக்கமடைந்த சகுந்தலை “எனக்கு உதவி செய்யுங்கள்; எனக்கு உதவி செய்யுங்கள்” எனக் கூறினாள்.

சகுந்தலையின் சத்தத்தைக் கேட்ட தோழியரிரு வரும் புன்னகை புரிந்து நின்னை எங்களாற் காப்பாற்ற முடியுமா? தவத்தோர் வாழிடங்களை இடையூறின்றிக் காப்பவர் அரசராகையால், இவ்வாரணியத்தைப் பாதுகாக்கும் அரசனாகிய துஷ்யந்தனைக் கூப்பிடு” என்று குறும்பாகக் கூறினர். துஷ்யந்தன் தங்கள் அண்மையில் நின்றமையை அவர்கள் அறியாராகையால், அங்ஙனங் கூறினர்.

சகுந்தலையின் எழில்மிகு வதனத்தை வட்ட மிட்டு, அக் கருவண்டு சுழன்றமையினால், அவள் அச்சங்கொண்டு மேலும் மேலும் உதவி வேண்டிக் கூவினள். தன்னைத் தெரிவித்துக்கொள்வதற்கு அதுவே தக்க சமயம் என்பதை அறிந்த துஷ்யந் தன், விரைவாக அவர்களுக் கெதிரே பௌரவ மன்னன் ஆட்சிக்குட்பட்ட இப்புனித ஆசிரமத் திலே துறவியர் புதல்வியரை வருத்துபவன் யார்?” என்று கூறிக்கொண்டு அங்கே சென்றான். பெண்கள் மூவரும் அவனைப் பார்த்துத் திடுக்குற்றனர்.

5. துஷ்யந்தன் சகுந்தலையின் பிறப்பை அறிதல்

ஐய, இங்கோ ரபாயமுந் நேரிடவில்லை . என் அன்புக்குரிய தோழியை, வண்டொன்று வெருட்டி யமையால் மருண்டாள்; அஃதன்றி வேறொன்று மில்லை ‘ என்று, அனசூயை அரசனுக்குத் தெரிவித்தாள். அப்பொழுது அரசன் சகுந்த லையை நோக்கி “உங்கள் தவவொழுக்கம் நன்கு நடைபெறுகின்றதா?” என்று வினவ, சகுந்தலை நாணத்தாற் தலைகுனிந்து நின்றாள்.

சகுந்தலையின் தோழியர், துஷ்யந்தனை வரவேற்றுபசரிக்க விரும்பிச் சகுந்தலையை நோக்கி ‘நங் குடிலுக்குப் போய்ப் பழங்களும் பாலும் கொண்டு வருவோம். இங்குள்ள நீர், இவர் பாதங்களைக் கழுவ உதவும்” எனக் கூற, துஷ்யந்தன் அவர்களைத் தடுத்து, உங்கள் உபசார வார்த்தைகளே எனக்கு இதமளித்தன” எனக் கூறினான்.

துஷ்யந்தனும், அம்மகளிரும் ஆங்குள்ள மணன் மேட்டிற் சிறிதுநேரம் இளைப்பாறினர்.

அப்பொழுது துஷ்யந்தன், அவர்கள் நட்புரிமையைப் பெரிதும் பாராட்டிப் பேசினான். அச்சமயத்துச் சகுந்தலையின் மனத்தில் ஒருவித உணர்ச்சி ஏற்பட்டது. துறவாசிரமத்துக்கு ஒவ்வாத முறையிற் றன்மனம் துஷ்யந்தனிடத்து நெகிழ்ந்தமையை அவள் உணர்ந்தாள்.

துஷ்யந்தனது இனிய வார்த்தைகளாற் கவரப் பட்ட அனசூயை, பிரியம்வதை என் போர், அவன் ஓர் உயர்குடிப் பிறந்த பெருமகனா யிருக்க வேண்டுமென அநுமானித்து, அவனை நோக்கி, “ஐயா, எந்த நாட்டு மக்கள் இப்பொழுது தங்க ளைப் பிரிந்தமையால், ஏக்கம் அடைந்திருக்கி றார்கள்? எந்த அரச குடும்பம் தங்களை அடைந் தமையால் மதிப்புடையதாக விளங்குகிறது! என்பதை அறியும் அவாவுடையேம்” என்று கூறினார்கள்.

அரசன் சிறிது நேரம் சிந்தித்தபின், தான் தவச்சடங்குகள் நடைபெறும் இடங்களைப் பாதுகாப்பதற்காகத், துஷ்யந்த மகாராசாவால், நியமிக்கப்பட்டவ னென்றும் அதனாற்றான் துறவிய ராசிரமங்களைப் பார்த்துச் செல்ல அங்குவர நேரிட்டதென்றுங் கூறினான்.

சகுந்தலையுந் துஷ்யந்தனும் ஒருவர்மேலொரு வர் காதல் கொண்டமையைத் தோழியர் குறிப்பா லுணர்ந்தனர். அப்பொழுது துஷ்யந்தன் சகுந்த லையைப் பற்றித் தான் அறிய விரும்பியமையைத் தோழியருக்குத் தெரிவிக்குமுகமாய், “கண்ணுவர் பிரமசரிய வாழ்க்கை யுடையராகவும், உங்கள் தோழி அவருக்குப் புதல்வியாவ தெங்ஙனம் என்பது எனக்குப் புலனாகவில்லையே; அதை அறியும் அவாவுடையேன்’ என்று கூறினான். சகுந்தலையின் வரலாற்றை அனசூயை அரசனுக் குக் கூறினாள். சகுந்தலையின் பிறப்பு வரலாற்றை அறிந்த அரசன், தன் காதல் தக்க இடத்திற் சென்றிருப்பதை யறிந்து மகிழ்ச்சியடைந்தான்.

மன்னன் உள்ளக் கிளர்ச்சியைக் குறிப்பாலு ணர்ந்த தோழியர், சகுந்தலையைப் பற்றி அரசன் வினாவிய வினாக்களுக்கு அவளது விவாகம் பற்றிக் கண்ணுவர் கவலை கொண்டிருப்ப தையுந் தெரிவித்தனர். இதனால் நாணமடைந்த சகுந்தலை அவ்விடத்தைவிட்டகல முற்பட்டனள். அப்பொழுது பிரியம்வதை அவளைத் தடுத்து நிறுத்தி, அவள் தனக்காக இரண்டுமுறை மரங்க ளுக்குத் தண்ணீ ரூற்ற வேண்டிய கடன் இருப்பதைத் தெரிவித்தாள்.

அவள் களைப்படைந்திருக்கிறாள்; அவளுக் காக உனது கடனை நான் நிறைவேற்றுகிறேன்” என்று துஷ்யந்தன் பிரியம்வதைக்குக் கூறி நீரூற்று வதற்காகத் தன் கணையாழியைக் கழற்றினான். அக் கணையாழியின் மேல் எழுதப்பட்டிருந்த துஷ்யந்தன்’ என்னும் எழுத்துக்களைப் பார்த்துத் தோழியர் பிரமித்தனர். அதனைக் கண்ட துஷ்யந்தன், அக்கணையாழி துஷ்யந்தனாற் றனக் குப் பரிசாகக் கொடுக்கப்பட்டதாகக் கூறினான். அங்ஙனமாகில் அது தங்கள் விரலைவிட்டுப் பிரிதல் தகாது. தாங்கள் கூறிய நன்மொழிகளே சகுந்தலையின் கடனைத் தீர்த்துவிட்டன” எனத் தோழியர் அரசனுக்குத் தெரிவித்து, ‘உன் கடன் இப்பொழுது கழிந்தது; இனி, நீ விரும்பினாற் போகலாம் எனச் சகுந்தலைக்கு விடையீந்தார்கள்.

அச்சமயத்து, ஓர் யானையை யாரோ துரத்தி வருஞ் சத்தங் கேட்டது. அதனைக் கேட்ட முனிவர் கள் பயந்து, தங்கள் ஆசிரமங்களை அழித்து விடுமோ என எண்ணிக் கூக்குரலிட்டனர். அந்த யானை, ஒரு மரக்கிளையிலே தன் மருப்பு அழுந்தியமையால், அதனை முறித்து எடுத்துக் கொண்டும் மான் மந்தைகளைத் துரத்திக் கொண்டும் கொடிகள் எல்லாம் உடலைச் சுற்ற அவற்றை இழுத்துக் கொண்டும் ஓடிவந்தது. அதனைக் கண்டு எல்லோருங் கலக்கமடைந்தனர்.

தன்னைத் தேடிவரும் தனது படைஞராலேயே, அது நிகழ்ந்ததென்பதை யுணர்ந்த துஷ்யந்தன், அத் துறவாசிரமத்துக்கு அழிவேற்படா வண்ணங் காப்பதற்குப் புறப்பட்டான். சகுந்தலை முதலிய மூவரும் ஆசிரமத்துக்குச் செல்ல விரும்பினர். அவர்களுக்கு அரசன் விடைகொடுத்து அனுப்பினான்.

விருந்தினர்க்குச் செய்யவேண்டிய வழிபாடுகள் எதனையுந் தாங்கள் அவனுக்குச் செய்யாமை யால், அவர்கள் மனம் நொந்து, மற்றுமொரு முறை அவனைத் தம் ஆசிரமத்துக்கு வரும்படி கேட்டுக்கொண்டனர். இனிய வார்த்தைகளினா லுபசரித்தமை தனக்கு மன மகிழ்ச்சியைத் தந்தது, என அரசன் தெரிவித்துச் சென்றான்.

சகுந்தலைமேற் கொண்ட விருப்பால் துஷ்யந் தனுக்குத் தன் நகருக்குத் திரும்பவேண்டுமென்ற விருப்பங் குறைந்துவிட்டது. துறவிய ராசிரமத்துக் கண்மையிலுள்ள ஓரிடத்தில், படை வீரரைக் கொண்டு கூடாரமடிப்பித்தான். அவன் மனம் அவன் உடலோ டிணங்கியிராமல், காற்றோட்டத் துக்கு எதிரே பிடித்த கொடி மரத்தின் பட்டாடை போலச் சகுந்தலைபால் இழுப்புண்டு சென்றது.

6. துஷ்யந்தன் சகுந்தலையைப்பற்றி தன் பாங்கனிடங் கூறுதல்

துஷ்யந்தனின் நண்பனான மாடவியன் என்னும் விதூஷகன், நாள் பல கழிந்தமையின் வேட்டையாடலில் வெறுப்படைந்தான். அவன் அத்தினாபுரி செல்ல விரும்பினான். துஷ்யந்த னும் வேட்டையாடலில் வெறுப்புற்றானாயினும், சகுந்தலைமேற்கொண்ட காதல் காரணமாகத் தன் நகருக்கு உடனே திரும்பிச் செல்ல விரும்பவில்லை; பரிவாரங்களோ அதோ ஒரு மான்; இதோ புலி; அங்கே ஒரு பன்றி’ என்னுங் கூச்சலுடன் மரநிழலுமரிதான அக்கோடை காலத்தின் நடுப்பகலிலும் வேட்டை விரும்பி அலைந்து கொண்டிருந்தன. இரும்புக் கம்பியிற் கோத்து, நெருப்பில் வாட்டப்பட்ட இறைச்சியை வேளை தப்பிய வேளையிலும் உண்டனர். மரங்களினின்று உதிர்ந்து விழுந்த, இலைகளா லழுக்கடைந்த அருவி நீரை உண்டு காலங் கழித்தனர்.

சகுந்தலைமேற் கொண்ட காதல் நினைவால், துஷ்யந்தன் ஒருபுறம் மகிழ்ச்சியும், தன் காதல் கைகூடுமோ என்னும் எண்ணத்தால், ஒருபுறம் ஏக்கமுங் கொண்டிருந்தான்.

தன் உடல் வருத்தத்தைப் பொறுக்க மாட்டாமை யால் நகருக்குப் போக விரும்பிய விதூஷகன், தன் விருப்பத்தைத் தெரிவிக்க அரசனிடஞ் சென்றான். அப்பொழுது அரசன் தன்னை நோக்கி வருவதைக் கண்டு, கால்முடமாய் நடக்க முடியாத வனைப்போலப் பாசாங்கு செய்து, ஒரு மரத்தைப் பற்றிக்கொண்டு அவ்விடத்திலேயே நின்றான். அரசன் தன்னைக் கிட்டியவுடன் “ஓ நண்பரே, என் கையுங் காலும் நீட்டமுடியாதனவா யிருக்கின்றன. ஆகவே, ‘உமக்கு வெற்றி உண்டாவதாக’ என வாயினால் மட்டும் வாழ்த்துகிறேன்” எனக் கூறி நின்றான்.

அரசன் புன்னகை செய்து உன் உடம்புக்கு இந்தத் திமிர்வாதப் பிடிப்பு எங்கேயிருந்து வந்தது” என விதூஷகனை வினாவ, அவன் “இது கூடத் தங்களுக்குத் தெரியவில்லையா? கண்ணைக் குத்திவிட்டு, ஏன் கண்ணீர் வருகிற தென்று கேட்கிறீர்களே! ஒரு நாணற் புல்லு, நீரோட்டத்தின் வேகத்தினாலன்றித் தானாகவே வளைவதுண்டா ? நீங்கள் உங்கள் அரசியற் கடமைகளை மறந்து, இந்த இருள் மிகுந்த காட்டிலே ஒரு வேடுவனைப் போல அலைந்து கொண்டிருக்கிறீர்களே! உங்களுடன் நானும் காட்டு விலங்குகளைப் பின்தொடர்ந்தோடியதால் மரங்களுடன் உரோஞ்சுண்ட என்னுறுப்புக்கள் நோவடைந்துள்ளன. ஆகையால், ஒருநாளைக் கேனும், நான் சற்று இளைப்பாற அநுமதி தரல் வேண்டும்” என்று கூறினான்.

துஷ்யந்தனும் வேட்டையாடலை விரும்ப வில்லை . ஏனெனில், புள்ளிமான்களின் மருளும் கண்கள் சகுந்தலையின் கண்களை அவனுக்கு ஞாபகமூட்டின. அதனால், அந்த மான்களைக் கொல்ல அவன் மனம் இசையவில்லை. இவ்வாறு வேட்டையாடலை விரும்பாதிருந்த துஷ்யந்தன், விதூஷகனின் வேண்டுகோளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டான். அதனால், விதூஷகன் மனமகிழ்ந்து, இளைப்பாறுதற்கேற்ற ஒரு தனி யிடம் நாடிப் புறப்பட்டான். அப்பொழுது துஷ்யந் தன் அவனைத் தடுத்து நிறுத்தி சற்றே பொறு; நான் சொல்வதைக் கேட்டுச் செல். நீ, நன்கு இளைப்பாறிய பின் உனக்கு வருத்தந் தராத ஒரு செயலில் நீ எனக்கு உதவிபுரியவேண்டும்” எனத் தெரிவித்தான்; “எனக்குக் கஷ்டமற்ற செயலா? அப்படியானால், அது என்ன; கொழுக்கட்டை தின்னும் தொழிலா? அதுதான் எனக்கு வருத்தந் தராத செயல்!” என விதூஷகன் கூற “நான் அதனைப் பின்னர்த் தெரிவிப்பேன்’ என அரசன் கூறி, வாயிற் காவலனை விளித்து, தன் படைத் தலைவனை அழைத்துவருமாறு கூறினான். காவலன் சென்று, படைத்தலைவனை அழைத்து வந்தான்.

மலைகளிடையே திரியும் ஆண் யானை போல, அழகிய உரமேறிய உடலினையுடைய, துஷ்யந்தன் முன்னே, படைத்தலைவன் வந்து வணங்கி, காட்டிலே விலங்குகள் வளைக்கப்பட்டிருக் கின்றன; இன்னும் ஏன் காலந் தாமதித்தல் வேண்டும்; உடனே புறப்படுங்கள்; வேட்டை மேற்கொள்ளலாம்” என்று கூறினான்.

“என் நண்பனான விதூஷகன் வேட்டை யாடலை விரும்பவில்லை ; அன்றியும், துறவிய ராசிரமங்களி னயலில் நாம் கூடாரங்கள் அமைத் திருத்தலின், வேட்டையாடலை மேற்கொள்ளின் அது துறவிகளுக்குக் கஷ்டத்தைத் தரக்கூடும். அதனால், இன்று முதல் காட்டெருமைகள் தம் விருப்பப்படி நீர் நிலைகளிற் புகுந்து நீரைக் கலக்கட்டும்; மான் மர நிழலிற் றங்கி அசை போட்டு ஆறுதலடையட்டும்; காட்டுப் பன்றிகள் கோரைக் கிழங்குகளை அச்சமின்றிக் கிளறி உண்ணட்டும்; எம்முடைய வில்லும், நாண் தளர்த்தப்பட்டு, இளைப்பாறட்டும்” எனக் கட்ட ளையிட்டான். படைத்தலைவன் அக் கட்டளையை ஏற்று, அவ்விடம் விட்டகன்றான்.

துஷ்யந்தன் தன் அயலில் நின்ற அனைவருக் குந் தனித்தனி ஒவ்வோர் ஏவலிட்டு, அனைவரை யும் அவ்விடத்திலிருந்து போகச் செய்த பின்பு, விதூஷகனுடன் ஒரு படர் கொடி நிழலிலுள்ள மணலிருக்கையை அடைந்தான். அங்கே அவ்விரு வரும் ஓரிடத்தில் அமர்ந்த னர்.

துஷ்யந்தன் விதூஷகனுக்கு, தான் கண்ணுவ ராசிரமத்திற் சகுந்தலையைக் கண்டமையையும், அவளிடந்தன் மனங் காதல் கொண்டமையையுங் கூறினான். அதனைக் கேட்ட விதூஷகன், “துறவி மகளை அரசர் மணம்புரியலாமா? அஃது அரசர்க்குப் பொருந்தாதே! அங்ஙனமாக அவளை நீங்கள் விரும்புவதேன்? அவளை மறந்து விடுங்கள்” எனத் தெரிவித்தான். அப்பொழுது அரசன் சகுந்தலையின் பிறப்பு வரலாற்றை விதூஷகனுக்கு ஆதியோ டந்தமாகக் கூறினான். அதனால் அவன் மனமகிழ்ந்து தங்களிடத்து இம்மாற்றத்தை ஏற்படுத்திய அக் கன்னிகை, மிகவுஞ் சிறந்தவளாகவே இருத்தல் வேண்டும். அவளைத் தாங்கள் மணம்புரிந்து மகிழுங்கள்” எனக் கூறினான்.

சகுந்தலையின் தந்தையாரான கண்ணுவர், இப்பொழுது இங்கில்லை. அன்றியும், அவள் தன் எண்ணப்படி எதுவுஞ் செய்ய முடியா தவளாயு மிருக்கிறாள். ஆகையால் மண நிகழ்வது சாத்தியமன்று. ஆயினும் அவளைக் காண்பதற்கு என் மனம் விழைகிறது. எவ்விதம் அவளைக் காணலாம். எக்காரணத்தை முன்னிட்டு மறுபடி யும் அவளிருப்பிடத்தையடையலாம். இதற்கு நீ ஓர் உபாயங் கூறு’ என, அரசன் விதூஷகனை வினாவ, அவன் “தாங்கள் அரசர்; அரசர்க்குக் குடிகள் ஆறிலொரு கூறு கொடுக்கவேண்டியது கடமை. ஆகையால், ஆரணிய வாசிகளான துறவிகள், காட்டுத் தானியத்திலே தாங் கொடுக்கவேண்டிய ஆறிலொரு பகுதியைக் கொடுக்க வேண்டுமெனச் சென்று அவளைத் தரிசிக்கலாமே!” என்று கூறினான். இச்சமையத்துத் துறவிய ரிருவர் அரச கூடாரத்தை நாடி வருவதைக் கண்டு, அரசனும் விதூஷகனும் அவ்விடத்தினீங்கிக் கூடாரத்தையடைந்தனர்.

7. துஷ்யந்தன் பாங்கனை

அயோத்திக்கனுப்புதல் துஷ்யந்தன் தன்னிருக்கையை அடைந்தவுடன், வாயில் காப்போன் அவ்விடம் வந்து அவனை வணங்கி, “அரசே, வாயிலில் முனி புதல்வரிருவர் தங்களைத் தரிசிக்கும் பொருட்டு வந்திருக் கின்றனர்’ எனத் தெரிவிக்க, அவர்களை யழைத்து வருமாறு துஷ்யந்தன் பணித்தான். வாயில் காப்போன் விரைந்து சென்று, முனிபுதல் வர்களை அழைத்துக்கொண்டு அங்கே வந்தான். முனிவர்கள் வசிக்கும் ஆசிரமங்களினயலிலே, துஷ்யந்தன் சிலகாலம் வசித்தமையால், அரசரிடத்து இயற்கையாமைந்துள்ள அச்சத் தோற்றம் அவனிடத்து அப்பொழுது காணப்பட வில்லை . ஆனால், அரச ஒளியுடன் சாந்த சொரூப மும் அமைந்து பொலிவுடன் காணப்பட்டான். முனிவர் ஒருவருக்கும், அவனுக்கும் வேறுபாடு அதிகங் காணப்படவில்லை.

துறவிகள் தம்மிடம் வருவோரை மகிழ்ச்சியுடன் இன்முகங் காட்டி வரவேற்று அவர் வேண்டுகோளை நிறைவேற்றி வருவதுபோல துஷ்யந்தனுஞ் செய்து வந்தான். துறவிகள் தவ ஒழுக்கத்தின் வலியால் உலகைப் பாதுகாத்துப் பெரும் புண்ணியத்தைத் தேடிக் கொண்டமை போல, இவனும் உலகைப் பாதுகாத்தலாற் பெரும் புண்ணியத்தை அடைந்திருந்தான்.

கூடாரத்தை அடைந்த முனி புதல்வர்கள், இந்திரனைப் போலத் தோற்றம் அளித்த துஷ்யந் தனைப் பார்த்து, தேவர்களுக்கு உதவியாய், அரக்கரை அழிக்கும் ஆற்றல் இவனுக்கு உண்மை யில் உண்டு’ என மனத்துள் நினைந்து, “ஓ, அரசே, உமக்கு வெற்றியுண்டாவதாக” என வாழ்த் தினர். அப்பொழுது அரசன் தன் இருக்கையி

னின்றும் எழுந்து, அவர்களை வணங்கினான். முனிபுதல்வர்கள் துஷ்யந்தனை அடைந்து தாங்கள் கொண்டு வந்த இனிய பழங்களைக் கையுறையாகக் கொடுத்தனர். அரசன் அவற்றை மகிழ்ச்சியோடேற்று, “தங்கள் கட்டளை எதுவோ, நான் அதனைச் செய்யச் சித்தமாயிருக்கிறேன்” என்றான்.

ஆசிரமத்திலுள்ள முனிவர்கள், தேவர்களைப் பிரீதிப்படுத்துதற்காக, ஒரு வேள்வி செய்ய எண்ணினர். கண்ணுவரங்கில்லாமையால் அவ்வேள்வியை அரக்கர்கள் அழித்து விடுவரோ என, அவர்கள் அஞ்சினார்கள். ஆனால், துஷ்யந் தன் அப்பொழுது தம்மயலி லிருப்பதை யறிந்து அவனுதவியுடன் வேள்வியை இனிது நிறைவேற்ற லாமென நினைந்தே அம் முனிபுதல்வர்களை அவனிடம் அனுப்பினார்கள்.

முனி புதல்வர்கள் தாம் வந்த காரணத்தைத் தெரிவித்து, வேள்வியை இனிது நிறைவேற்ற, ஆசிரமத்திற் சில இரவுகள் தங்கி உதவிபுரியுமாறு துஷ்யந்தனை வேண்டினர். துஷ்யந்தன் அதற்குச் சம்மதித்து வில்லுங் கணையுமேந்திப் புறப்பட ஆயத்தஞ்செய்தான். விதூஷகன் தாங்கள் தேடிய பூண்டு காலில் அகப்பட்டது” என்று மறைவாய் அரசனிடத்திற் புன் சிரிப்புடன் கூறினான்.

துஷ்யந்தன் தங்கள் வேண்டுகோளுக்கியைந்த மையைக் கண்ட முனி புதல்வர்கள் மகிழ்ச்சி யுடன், “இடர் உற்றவர்களுக்கு உதவிபுரிவதற் கென்றே புருவின் குடியிற் பிறந்தோர் தம்மை அருப்பணித்துள்ளார்கள்” என்று கூறித் தம் இருக்கை மீண்டனர்.

தன் நண்பனான விதூஷகனையும், முனிவர் களது ஆசிரமத்துக்குத் தன்னுடன் வருமாறு துஷ்யந்தன் கூறினான். சகுந்தலையைக் காண வேண்டு மென்னுமவா, விதூஷகனுக்கிருந்தா லும், வேள்வியை யழிக்கவரும் அரக்கர்கள், தன்னையுங் கொல்வர் எனக் கூறி, அவன் துஷ்யந் தனுடன் செல்ல மறுத்தான்.

“நீ என் அருகிலேயே யிருக்கலாம். நான் உன்னைப் பாதுகாப்பேன்; நீ பயப்படவேண்டாம்” எனக் கூறித் துஷ்யந்தன் விதூஷகனைத் தேற்றி னான். அச் சமயத்தில், வாயில் காப்போன் ஆங்குப் புகுந்து, துஷ்யந்தனின் அன்னையாரா லனுப்பப்பெற்ற தூதுவன் ஒருவன் துஷ்யந்த னுக்கு ஏதோ செய்தி கொண்டு வந்திருப்பதாகக் கூறினான். அரசன் தூதுவனை அழைத்து வருமாறு கூறியவுடன் வாயிற் காவலன் அவனை யழைத்து வந்தான்.

கரபகன் என்னும் அத்தூதன், துஷ்யந்தன் முன்னிலையையடைந்து ‘மன்னர் மன்ன, நுமக்கு வெற்றி சிறப்பதாக! இன்றிலிருந்து நான்காந்நாள் தங்கள் அன்னையாரின் நோன்பு முடிவுறும். அன்று தாங்கள் தவறாமல் தன்னுடன் வந்திருக்க வேண்டுமென்பது தங்கள் அன்னையாரின் செய்தியாகும்” என்று கூறி வணங்கி நின்றான்.

துஷ்யந்தனுக்கு ஒரு புறத்திலே துறவிகளின் வேள்வியைக் காக்க வேண்டிய கடமையிருந்தது; மற்றொரு புறத்திலே, தன் அன்னையாரின் கட்டளையை நிறைவேற்றவேண்டிய கடமை இருந்தது. இரண்டிலும் வழுவுதலாகாது. ஆகவே, என்ன செய்வதென்று சிந்தித்தான். ‘யாது செய்யத்தக்கது” என விதூஷகனை வினா வினான். “திரிசங்குபோல அங்குமின்றி இங்கு மின்றி இடையே தொங்கிக் கொண்டிருக்க லாமே” என்று விகடமாகப் பதிலளித்தான் விதூஷகன்.

இரண்டு கடமைகளுஞ் செய்யப்பட வேண்டியன வாதலின், துஷ்யந்தனின் மனம் கற்பாறையாற் பிரிக்கப்பட்ட நீரோட்டம் போல, இரண்டு பிள வாய்ப் பிரிவுண்டது. சிறிது நேரஞ் சிந்தித்தான். அவனுக்கு ஓர் யோசனை புலப்பட்டது. உடனே விதூஷகனை நோக்கி, “நண்பா, நீ என் அன்னை அவர் புதல்வன்போலக் கருதப்படுகிறாய்; ஆகையால், நீ சென்று, அன்னையின் விருந்திற் பங்குபற்று. துறவிகளுக்குச் செய்ய வேண்டிய கடமையிலே, என் உள்ளம் ஈடுபட்டிருப்பதாகச் சொல்லு. நீயே, நான் செய்ய வேண்டிய அனைத்தையும் ஆங்குச் செய்” என்று கூறினான்.

விதூஷகன் சம்மதித்தான். துஷ்யந்தன், தன் படைவீரர்களையுந் தன் நகருக்கு அனுப்ப எண்ணியிருப்பதை யறிந்த விதூஷகன், தன்னை ஓரிளவரசனாக எண்ணி மகிழ்ச்சியடைந்து, அதனைத் துஷ்யந்தனுக்குப் பெருமையுடன் கூறினான். அதனைக் கேட்ட துஷ்யந்தன் விதூஷ கனின் பேதைமையை நினைந்து, புன்னகை புரிந்தான். ஒருபோதும், தான் சகுந்தலைமேற் காதலுற்றிருப்பதை, விதூஷகன் தன் தாயாரிடத்தி லும் உவளகளத்து மகளிரிடத்திலுங் கூறக்கூடு மென நினைந்து, விதூஷகனின் கையைப் பிடித்து அழைத்து, “இளவரசரே, முனிவரிடங் கொண்ட பெரும் பயபக்தியால், நான் முனிவர் களது யாகத்தைக் காப்பாற்ற ஆசிரமத்துக்குச் செல்கிறேன். உண்மையில், எனக்கு அத்துறவி மகளிடத்தில் எவ்வித விருப்பமுமில்லை . என்னுடைய அந்தஸ்து எங்கே! காட்டில் வாழும் அப் பெண்ணின் அந்தஸ்து எங்கே! அன்ப, நான் பகடியாகக் கூறியவற்றை, நீ உண்மையென நம்பாதே” எனக் கூறி, எல்லாரையும் வழி யனுப்பி விட்டு, துறவியராசிரமம் நோக்கிச் சென்றான்.

8. துஷ்யந்தன் சகுந்தலையை மணந்தமை

மாட்சிமை தங்கிய துஷ்யந்த மன்னனின் பாதுகாப்பிலே, துறவிய ராசிரமத்தில் வேள்விகள் னைத்தும் இனிது நடைபெறலாயின. துஷ்யந் தனது வின்னாணினோசையைக் கேட்ட அளவி லேயே, வேள்வியை நோக்கி வந்த இடையூறுக ளனைத்தும் நீங்கிவிட்டன. இவ்வாறு வேள்விச் சடங்குகள் இனிது முடிந்து, வேள்வி மேடைகள் யாவுந் தந்தொழிலொழிந்தன. வேள்வியாசிரியர், தம் வேள்வி இனிது நிறைவேறினமையால், மனம கிழ்ச்சியுடன் துஷ்யந்தனுக்கு நன்றி தெரிவித்தார். வேள்வியாசிரியரின் மாணாக்கர்கள், துஷ்யந்தன் வேள்வி காத்த சிறப்பைப் பாராட்டினர். அனை வருந் துஷ்யந்தனைக் கௌரவித்து, அவனுக்குப் பிரியாவிடை கூறினர்.

துஷ்யந்தன், உழைப்பினாற் களைப்படைந் திருந்தான். அவனுக்கு, ஆறுதல் வேண்டியிருந் தது. சகுந்தலையைக் காண்பதால் அவனது உடலும் மனமும் ஆறுதலடையக்கூடும். அவ் வெண்ணம் துஷ்யந்தனைத் தூண்ட, அவன் சகுந் தலையைக் காண வேண்டுமென விரும்பினான்.

அப்பொழுது வெம்மை மிகுந்த நடுப்பகல் நேரமாயிருந்தது.

வெம்மை மிகுந்த நடுப்பகல் நேரத்தை, சகுந்தலை தன் தோழிமாரோடு, பசுமை வாய்ந்த இளங்கொடிகளிணைந்துள்ள பந்தரால் மூடப்பெற்ற, மாலினி யாற்றங் கரையிற் கழிப்பது வழக்கம். ஆகவே, துஷ்யந்தன் அவ்விடத்தை நோக்கிச் சென்றான். அங்கே இனிய தென்றல் வீசிற்று. அது, உடலுக்கின்பத்தையும் ஆறுதலை யும் அளித்து, இனிமை செய்தது. அவன் சகுந்த லையைக் காணத்தக்கதான ஒரு மறைவான இடத்திலே தங்கி நின்றான்.

சகுந்தலை துஷ்யந்தன் மேற் கொண்ட காத லால், மனத்தில் ஒருவித பேதலிப்பும் உடல் வருத்தமு முற்றிருந்தாள். அவள் வருத்தத்தின் காரணத்தை நன்கு அறிந்து கொள்ளாத தோழியர், அவள் வருத்தத்துக்கு வெப்பமே காரணமென எண்ணினர். தாமரைக் கிழங்குகளுடன் கூடிய தாமரையிலைகளையும் நரந்தம் புல்லின் நெய்யினையும் பிரியம்வதை கொண்டு வந்தாள். வேள்விபுரியும் மாணாக்கன், பிரியம் வதை மூலம் சகுந்தலையின் நோயை அறிந்தான். கண்ணுவ முனிவரின் உயிரை ஒத்த சகுந்தலைக்கு வெப் பத்தா லேற்பட்ட நோயைத் தீர்ப்பதற்காக, வேள்விச்சாலையின் இனிய தூய நீரைக் கௌதமியம்மையார் கையிற் கொடுத்தான்.

பிரப்பங் கொடியால் வளைக்கப்பட்ட இளங் கொடிப் பந்தரிலே, மலர்ப் படுக்கையிற் சகுந்தலை தங்கியிருந்தாள். தோழியரிருவரும் தாமரையிலைகளால் வீசி, இனிய காற்றை உண்டாக்கினார்கள். இவற்றாற் சிறிது சுகம் பெற்ற சகுந்தலை, தன் காதல் நினைவாற் பலவாறு தனக்குத்தானே கூறி, தன்னை மறந்திருந்தாள். இதனாற் கலக்கமடைந்த தோழியர், ஒருவரையொருவர் பார்த்து விழித்தனர். இவையனைத்தையும் அவதானித்து நின்ற துஷ்யந்தன், சகுந்தலையின் நோய், தன்மேற் கொண்ட காதலாலேற்பட்டதென உணர்ந்து கொண்டான். அதனைத் தோழியரு மறிந்து கொண்டன ரென்பதை, அவர்களின் முகக்குறி காட்டின. அதனை அவர்கள் சகுந்தலையிடம் வினவி உண்மையை அறிந்து கொண்டனர். துஷ்யந்தனும் அவர்கள் சம்பாஷணையை அவதா னித்து, தன்மேற் சகுந்தலை காதல்கொண்டி ருப்பதை, அவள் வாயால் அறிந்தமையால், அளவற்ற மகிழ்ச்சி கொண்டான். ‘சகுந்தலையிடத்து, துஷ்யந்தன் காட்டிய அன்பான பார்வையும் அவன் தேக மெலிவும் அவனுஞ் சகுந்தலையிடத்துக் காதல் கொண் டுள்ளா னென்பதைப் புலப்படுத்தின. இதனைப் பிரியம்வதையும், அனசூயையும் ஒருவாறு அறிந்தி ருந்தனர். ஆதலால், சகுந்தலை அரசனுக்குத் தன் காதலைத் தெரிவித்து ஒரு கடிதம் எழுதினால், அதனைத் தான் மலர்களுடன் கொண்டு சென்று கடவுளுக்குப் பூசை செய்து துஷ்யந்தன் கையிற் கொடுப்பதாகப் பிரியம்வதை கூறினாள். கடவுளுக்குப் பூசை செய்த பூக்களையும் பிரசாதங் களையும் விருந்தினர்க்கும் பெரியோர்க்குங் கொடுப்பது மரபு. ஆதலாற் பிரியம்வதை அவ்வாறு கூறினாள்.

சகுந்தலையுந் துஷ்யந்தனுக்குக் கடிதம் எழுத விரும்பினாளாயினும், ஒருபோது அரசன் தன்மேற் காதல் கொண்டிலனாயின் யாதாகுமோ வென, ஐயுறவு கொண்டாள். அதனையுணர்ந்த தோழியர் அவளைத் தேற்றி அரசனும் அவள்மேற் காதலுற்ற மையைத் தாமறிந்து கொண்டமைக் கேற்ப அவளுக்குப் புலப்படுத்தினர். அவளுந் தன் மனத்தைத் தேற்றி, துஷ்யந்தனுக்கு ஒரு கடிதம் எழுத ஆரம்பித்தாள்.

கிளிப்பிள்ளையின் மார்புப் பகுதியைப் போல, அழகிய தோற்றங்கொண்ட ஒரு தாமரையிலை யின் மீது, தன் நகங்களாற் றன் காதலைப் புலப்படுத்தித் துஷ்யந்தனுக்குச் சகுந்தலை ஒரு கடிதம் வரைந்தாள். அதனைத் தன் தோழியரான பிரியம்வதைக்கும், அனசூயைக்கும் வாசித்துக் காட்டினாள். அது அரசனுக்குக் கேட்டது. உடனே, அரசன் மறைவிடத்தினின்றும் வெளிப்பட்டு வந்து, சகுந்தலையைக் கிட்டி, அவளிடந் தானுங் காதலுற்றிருப்பதைத் தெரிவித்தான். அரசனைக் கண்டதுந் தோழியர் மகிழ்ச்சி கொண்டு நல்வரவு கூறி, அவனை வரவேற்றனர். சகுந்தலையும் மலர்ப் பாயலினின் றெழுந்து அவனை வரவேற்க விரும்பினாள். அரசன் அவளைத் தடுத்து, அவளருகிலே ஒரு பக்கத்தில் அமர்ந்தான். அப்பொழுது சகுந்தலை எழுந்து நின்றாள். பிரியம்வதையும் அனசூயையும் அவ்விடம் விட்டகன்றனர்.

துஷ்யந்தன், தான் அவள்மேற் காதலுற்றிருப்ப தைச் சகுந்தலைக்குக் கூறி, தான் அவளை மணம் புரிந்து தன் பட்டத்து இராணியாக்க விரும்புவ தாகத் தெரிவித்தான். சகுந்தலையும் அதனை விரும்பினாளாயினும், கண்ணுவர் அப்போது ஆங்கு இல்லாமையால், தான் றன் விருப்பப்படி யெதுவுஞ் செய்ய முடியாதிருப்பதை அரசனிடந் தெரிவித்தாள். அரசன் அவளைத் தேற்றி அரச மகளிர் காந்தர்வ முறைப்படி மணம் புரிதல் அறமுறைக்கேற்றது என்பதற்குப் பல உதார ணங்கள் காட்டி, சகுந்தலையும் அரச குலத்தினளே யாதலின், அவள் காந்தர்வ முறையில் மணம் புரிவதை அறவொழுக்கம் முழுவதுமுணர்ந்த கண்ணுவரும் விரும்புவாரென்று அவள் மனமிசையுமாறு கூறி, மாலினி யாற்றங்கரையிலுள்ள அவ் வழகிய மலர்ப் பந்தரின் கீழ் இனிய தென்றற் காற்று வீசிய நடுப்பகல் நேரத்திலே, சகுந்தலையைக் காந்தர்வ மணம் புரிந்தான். அவ்வாறு மணம் புரிந்தமைக் கறிகுறியாகத் தன் பெயர் எழுதப்பட்ட அரச மோதிரத்தைச் சகுந்தலையின் விரலி லணிவித்தான்.

அப்பொழுது, கண்ணுவர் ஆசிரமத்திலில்லா மையால், துஷ்யந்தன் சகுந்தலையைத் தன்னுடன் அழைத்துச் செல்ல முடியவில்லை . ஆகவே, துஷ்யந்தன் சகுந்தலையை நோக்கி, “சகுந்தலா, இந்தக் கணையாழியைப் பார்; இதில் என் பெயர் எழுதப்பட்டிருக்கிறது. இதிலுள்ள எழுத்துக் களைத் தினம் ஒவ்வோரெழுத்தாக எண்ணு. இவ்வாறு நீ எண்ணி முடிப்பதற்குள், நான் இவ்விடம் வந்து உன்னை அழைத்துச் செல் வேன்” என்று கூறினான். அப்பொழுது சகுந்தலை மகிழ்ச்சியுடன் காணப்பட்டாள்.

தன் மகள் வெப்பு நோயுற்றிருப்பதையறிந்து, அதனைத் தீர்ப்பதற்காக, வேள்வி மாணாக்கன் தந்த இனிய நீருடன், ஆசிரமத்தாயாராகிய கௌதமி, அச்சமயத்து அவ்விடம் நோக்கி வந்தார். அவர் வரும் அரவங் கேட்ட சகுந்தலை, அதனை அரசனிடந் தெரிவித்தாள். அரசன் அவ்விடத்தை விட்டகன்று, ஒருபுறத்தே மறைந்து நின்றான். கௌதமி வேள்விப் புனல் நிரம்பிய பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பிரியம்வதை, அனசூயை என் போருடன் சகுந்தலையின் அண்மையிற் சென்று, “குழந்தாய், உன் வருத்தந் தணிந்ததா? இதோ, இந்த நீரைத் தருப்பைப் புல்லினால் உன் உடம்பிலே தெளிக்கிறேன்; இதனால், உன் உடல் நலம் அடையும்” என்று கூறி, வேள்விப் புனலைச் சகுந்தலை மீது தெளித்தார்.

மாலைப்பொழுது ஆயிற்று. ஆதலாற் கௌதமி சகுந்தலையை ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றார். சகுந்தலை அவ்விடத்தை விட்டுப் பிரிய மனம் வருந்தி, உரத்த குரலில் கொடிப் பந்தரே என் துன்பத்தைப் போக்கிய பந்தரே, இப்போது உன்னிடம் விடை பெற்றுக்கொள்கிறேன்” என்று கூறி, அவ்விடம் விட்டகன்றாள். சகுந்தலை கூறிய வற்றின் பொருளைத் துஷ்யந்தன், உணர்ந்து கொண்டான்.

சகுந்தலை முதலியோர் சென்றபின் துஷ்யந்தன் அங்கே வந்து, பெருமூச்செறிந்து துக்கமடைந் தான். பின், ஆரணியத்திலே தன் கடமை முடிந்து விட்டபடியாலும், தன் படையினர் நகருக்குச் சென்று பல நாள்கள் கடந்து விட்டமையாலும், நகரில், அவனாற் செய்யப்பட வேண்டிய கடமைகள் பல இருந்தமையாலும், துஷ்யந்தன் நகருக்குத் திரும்பிச் சென்றான்.

9. துருவாசமுனிவரிட்ட சாபம்

நாள்கள் சில கழிந்தன. சகுந்தலை காந்தர்வ முறைப்படி தனக்கிசைந்த மணாளனை மணந்து கொண்டமை பற்றிச் சகுந்தலையின் தோழியர் மகிழ்ச்சியுற்றனர். ஆயின், ‘துஷ்யந்தன் வேள்விக் கடன்களை முடித்துக் கொண்டு தன் நகருக்குப் போய் விட்டமையால், தன் நகரிலே உவளகத்து மகளிரோடு கூடியிருக்கும்போது, இங்கு நடந்த காந்தர்வ மணத்தை நினைவுகூர்வானோ?’ என்ற எண்ணத்தால் அவர்கள் சிறிது கவலையு முற்றனர்.

பிரியம்வதை அனசூயையை நோக்கி, ‘நம்பிக் கையாயிரு; அவரைப்போல உயர்ந்த ஒழுக்க முடையோர், ஒருபொழுதும், அறநெறி தவறார். அப்பா கண்ணுவர், இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டால் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார். ஏனெனில், தம் மகளைத் தக்கவனொருவனுக்குக் கொடுக்க வேண்டு மென்பது அவரது முதன்மை யான விருப்பம்; அவர் விருப்பத்தை, விதி தானாகவே நிறைவேற்றிவைத்தது. அது அவருக்கு எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்கும்?” என்று கூறினாள்.

“சகுந்தலைக்கு இத்தகைய நன்மையைத் தந்த காவற் றெய்வத்துக்கு நாம் பூசை செய்வோமாக; அதற்கு வேண்டிய பூக்களைக் கொய்வோம்” என்று கூறிக்கொண்டு தோழியரிருவரும் பூப்பறிக்கச் சென்றனர். சகுந்தலை பன்ன சாலையி னயலிலே, தன் காதலன்பாற் சென்ற மனத்தினளாய், துஷ்யந்தனை எண்ணி, அவன் வயப்பட்டு, அவனையே நினைந்து தன் வயமிழந்திருந்தாள். அச்சமயத்திலே துருவாசமுனிவர் அங்கே வந்தார்.

துருவாசமுனிவர் அத்திரிமுனிவரின் புதல்வர்; மிகவிரைவிற் கோபங்கொள்ளு மியல்பினர். கொடுஞ் சாபமிடுவதிலும் முதன்மையானவர்.

துருவாசர் கண்ணுவரின் ஆசிரமத்தை அடைந் தார். தன் காதலனையே நினைந்து தன் வயமிழந் திருந்த சகுந்தலை, அதனை யவதானிக்க வில்லை . துருவாசர் கூறிய வார்த்தைகள் தோழிய ருக்குக் கேட்டன. விருந்தினர் யாரோ வந்திருப் பதை, அவர்கள் அறிந்தார்களாயினும், சகுந்தலை ஆசிரமத்திலிருப்பதால் அவள் விருந்தினரை வரவேற்பாளென எண்ணி, தம் வேலையிலீடு பட்டனர். சில வினாடிகளுக்குள், “ஆ, விருந்தி னரை வரவேற்காது பராமுகமாய் இருந்தவளே! முனிவனாகிய யான் இவ்விடம் வந்திருப்பதை அறியாமல், நீ யாரை நினைந்து கொண்டிருக் கிறாயோ, அவன், நீ நினைப்பூட்டினாலும், கள் உண்டோன் முன் பேசியதை நினையாமை போல, உன்னை நினையா திருப்பானாக’ என்று துருவாச ரிட்ட கொடுஞ் சாபந் தோழியர் செவிப்பட்டது.

“ஐயையோ, இது என்ன? சகுந்தலை யாரோ முனிவருக்கு ஏதோ பிழை செய்து விட்டாள் போலும்! அதோ, அவர் யார்? அவர் துருவாச ரல்லரோ!” என்று கூறிய தோழியர், எவராலுந் தடுக்க முடியாத, கடுநடையுடன் துருவாசமுனிவர் திரும்பிச் சென்றதைக் கண்டு நடு நடுங்கினர்.

துருவாச முனிவரிட்ட சாபத்தால், மனம் நைந்த தோழியருள் ஒருத்தியாகிய அனசூயை ஓடிச் சென்று, துருவாச முனிவரை வணங்கி, மறுபடி யும் அவரை ஆசிரமத்துக்கு வருமாறு மன்றாடி னாள். அதனை அவர் பொருட்படுத்தாது, கோபா வேசராய் விரைந்தார். அனசூயை மேலுந் தொடர்ந்து சென்று, அவர் பாதங்களைப் பற்றிக் மையால், ஏதோ பிழை செய்து விட்டாள்; இந்த ஒரு பிழையை அவள் முதன் முதற் செய்த பிழை யெனக் கருதி, எம்பெருமானே பொறுத்தருள வேண்டும். தாங்களிட்ட சாபத்திற்கு விமோசன மருளவேண்டும்” என்று, இரந்து வேண்டிக் கொண்டாள். இதற்கிடையிற் பிரியம்வதை துருவாசரை வரவேற்பதற்காக, ஆசிரமத்தை நோக்கி விரைந்து சென்றாள். விரைந்து சென்றதனாற் கால் தடுக்கிக் கீழே வீழ்ந்தாள். கையிலிருந்த பூங்கூடையும் வீழ, பூக்களுஞ் சிதறின. அவள் அப்பூக்களை ஒன்று சேர்த்தாள்.

துருவாசமுனிவரிடத்துச் சென்ற அனசூயை திரும்பி வருவதைக் கண்ட, பிரியம்வதை “அனசூயா, என்ன நிகழ்ந்தது? முனிவர் எங்கே?” என்று வினவினாள்.

அனசூயை தான் முனிவரிடங் கூறியவற்றை அவளுக்குத் தெரிவித்து, அவர் தனது வேண்டு கோளுக்குச் செவிசாய்த்து என் சொல் பிழை யாது; ஆயினும், நினைவு கூர்வதற்கு அடையாள மாகத் துஷ்யந்தனாலளிக்கப்பட்ட ஓரணிகலத் தைக் கண்டதும், என்சாபம் விமோசனம் ஆகும்” என அவர் கூறிய சாப விமோசனத்தையுங் கூறினாள்.

துருவாசர் அங்கே வந்ததும், அதன் பிறகு நிகழ்ந் தனவுமாகிய சம்பவங்களெதனையுஞ் சகுந்தலை அறியாள். தோழியரிருவரும் மாத்திரமே யறிவர். முனிவர் கூறிய சாப விமோசனம் அவர்களுக்கு ஒருவாறு சாந்தி அளித்தது. ஏனெனில், துஷ்யந்தன் தன் நகருக்கு மீளுமுன், நினைவு கூர்வதற்கு அடையாளமாக, தன் பெயர் பொறிக் கப்பட்ட கணையாழியைச் சகுந்தலையின் விரலிலே தானே அணிவித்துப் போனான். அதனுதவியாற் சகுந்தலை சாப விமோசனம் பெற முடியும்’ என்று, தோழியரின் மனம் எண்ணியமையே அவர்களது மனச் சாந்திக்குக் காரணமாயிருந்தது.

தோழிய ரிருவரும் பூக்களுடன் சென்று, காவற் றெய்வத்தை வழிபாடு செய்தனர். அவர்கள் ஆசிரமத்தை யடைந்தபோது, சகுந்தலை இடது கையில் முகத்தைப் புதைத்தவண்ணம் ஓவியத்தி லெழுதப்பட்ட உருவம்போல அசைவற்றுக் காணப்பட்டாள். தன் கணவனை நினைந்து, ஆழ்ந்த நினைவிற் றன்னையே மறந்திருந்த சகுந்தலை, விருந்தினரை மறந்திருந்தமை ஒரு புதுமை யன்று.

சகுந்தலையைக் கண்ட தோழிய ரிருவருந் துருவாசமுனிவர் பற்றிய சம்பவத்தைத் தாங்கள் யாருக்கும் வெளிப்படுத்துவதில்லையெனத் தீர்மானித்துக்கொண்டனர். ஏனெனில், இயற்கை யிலேயே மிக மெல்லியளான சகுந்தலை, அதனை அறியின் வருந்துவாளன்றோ! ஆதலில், தோழியரிருவரும் சகுந்தலையை யடைந்து துருவாசரின் சாபம் பற்றிய விடயத்தைக் கூறாது, வேறு பல இனிய உரைகளைக் கூறி அளவளாவி யிருந்தனர்.

– தொடரும்

– சகுந்தலை சரிதை, முதலாம் பதிப்பு: 1956, வட – இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *