தமிழ்நாடு முற்காலத்தில் சேரமண்டிலமென்றும் பாண்டி மண்டிலமென்றும் சோழமண்டிலமென்றும் மூன்று பிரிவினையுடையது. திருவாங்கூர் மலையாளம் கொச்சி குடகு கோயமுத்தூர் முதலியவை சேரமண்டலத்தைச் சேர்ந்தவை.
மதுரையும் திருநெல்வேலியும் பாண்டிமண்டலத்தைச் சேர்ந்தவை. திருவேங்கடம் முதல் திரிசிரபுரம் வரையில் சோழமண்டிலம் பரவியிருந்தது. காவிரியாறு கடலொடு கலக்கின்ற சங்கமுகத் துறையில் காவிரிப்பூம்பட்டினம் என்பது சோழராஜர்களுக்குத் தலைநகராயிருந்தது.
அந்தப் பட்டினம் ஆற்றங்கரையில் கிழக்கு மேற்காய் ஐந்து மைல் தூரமும் தெற்கு வடக்காய் நான்கு மைல் தூரமும் பரவியிருந்தது. அந்தப் பட்டினத்தை இங்கே வர்ணித்துப் பொழுதுபோக்குவதில் பலனில்லை. வேண்டின பேர்கள் சிலப்பதிகாரம் என்கிற காவ்யத்தில் படித்துக்கொள்ளலாம். அங்கே அரமனைக்கு அருகில் ஒரு கன்னிகாமாடமும் அதைச் சேர்ந்த ஒரு பூங்காவனமும் உண்டு.
பூங்காவனத்தில் ஒருபக்கம் சந்தனமரமும் சண்பக மரமும் தேமாமரமும் தீம்பலாமரமும் குராமரமும் மராமரமும் கோங்குமரமும் வேங்கைமரமும் தழைத்திருக்கும். ஒருபக்கம் கஸ்தூரி நந்தியாவட்டை சாமந்தி மல்லிகை இருவாட்சி முதலிய பூஞ்செடிகள் மலர்ந்திருக்கும். இடையிடையில் ஸம்பங்கி குருக்கத்தி மாதவிமுல்லை முதலான கொடிகள் படர்ந்த நடைக்காவணங்கள் நறுமணம் வீசி நன்னிழல் செய்திருக்கும். வனத்தின் இடையில் பெரிய தடாகம் ஒன்று உண்டு. அதன் இடையில் தாமரைக்கொடிகளும் அல்லிக்கொடிகளும் பின்னிப் பிணைந்திருக்கும். நாற்புறத்திலும் இறங்குதுறைகள் கட்டி, கரையில் அங்கங்கே ஸலவைக்கல்லால் திண்ணைகள் அமைத்து, திண்ணைகளைச் சுற்றறிலும் துளஸி, நிலஸம்பங்கி, ரோஜா முதலியன வைத்து, அந்தத் தடாகம் அதிக ரமணீயமாக இருக்கும்.
பூங்காவனத்தில் மாங்குயில் தீங்குரலாகப் பாடியிருந்தன. மயில் கூட்டங்கள் மரக்கிளைகளில் ஏறியிருந்தன. கிளிகள் பழங்களைக் கொந்தியும் இறகைக் கோதியும் கொஞ்சிக் குலாவியிருந்தன. நாகணவாய்கள் நாதம் செய்திருந்தன. மீன்குத்திகள் தடாகத்தினின்றும், மீன்களைக் கவ்வியெடுத்துப் பறந்துபோயின. சில இடங்களில் மான்கள் மேய்ந்திருந்தன. சில இடங்களில் மான்கள் மிரண்டோடின.
ஒருநாள் மாலைநேரம் நாலுமணிக்குமேல் அந்தப் பூங்காவனத்தில் ராஜகுமாரி ஒரு பூம்பந்தலை நோக்கிக் தன்னந்தனியே போய்க்கொண்டிருந்தாள். இடையில் கட்டியிருந்த பாவாடையும் மேலே போட்டிருந்த பூவாடையும் காற்றில் அலைந்திருந்தன. கோதிமுடித்த கூந்தலில் ஒரு ரோஜாமலர் செருகியிருந்தது. நெற்றியில் சிந்தூரத்திலகம் இட்டிருந்தது. காதில் வைரக் கம்மல் விளங்கியிருந்தது. அவளுக்கு வயது பதினெட்டிருக்கும். அவள் புஷ்பங்களின் அழகைக் கண்ணால் காணாமலும் பறவைகளின் பாட்டைக் காதால் கேட்காமலும் அப்படியிப்படித் திரும்பாமலும் அடிமேல் அடிவைத்துப் போகிறாள். ஒரு கவலை அவள் மனதைக் கவர்ந்திருக்கின்றது.
நடந்துபோன சில செய்திகள் ஒன்றின்பின் ஒன்றாய் நினைவில் புறப்படுகின்றன.: — என் தம்பிமார்கள் எங்குற்றனரோ, என்னாயினரோ? அவர்களைக் கைக்கொண்டு போனவர் எவரேயோ? எங்களைப் பெற்ற தாய் இறந்துபோய் எட்டு வருஷங்கள் ஆய்விட்டன. அவள் இறந்து ஆறுமாதம் ஆவதற்குள் தந்தை பராக்ரம சோழர் இந்த மோகனாங்கியை மணஞ் செய்துகொண்டார். ஏனாதி புதல்வரான பாலசிங்கரோடு ஆசிரியரிடம் கல்விகற்றும் இனிது விளையாடியும் சில வருஷங்கள் ஸந்தோஷமாகக் கழிந்துபோயின. வயதேற ஏற பாலசிங்கருக்கும் எனக்கும் நேசம் ஏறிவந்தது. இப்பொழுது நாங்கள் ஒருவரையொருவர் இன்றியமையாதவராய் இருவரும் மணம்புரிந்துகொள்வ தென்று மனம் ஒன்றியிருக்கிறோம். இந்த மோகனாங்கி தன் ஸகோதரன் மகன் மட்டி ஸாம்ப்ராணியான மடையனிடத்தில் என்னைத் தொலைக்கப் பார்க்கிறாள். தன்னுடைய தாதிகளால் நயவஞ்சகமாக என் ரகஸ்யத்தைத் தெரிந்துகொண்டு ராஜாவிடத்தில் கோள்சொல்லி அவர் மனதைக் கலைத்திருக்கிறாள். கைக்கெட்டினதை வாய்க்கெட்டாதபடி செய்வாளே. என்செய்வேன்.
இவ்விதமான கவலையோடு இவள் செல்லும்போது,பூம்பந்தலில் கொடிகளின் மறைவில் நின்று அவள் வரவை ஒருவன் எதிர்பார்த்திருக்கிறான். அவன் தலையில் ஸரிகை முண்டாசு கட்டியிருக்கிறான். இடையில் ஸலவைவேஷ்டி தரித்து உடலில் சொக்காயணிந்து அதன்மேல் பட்டு வல்லவாட்டுப் போட்டிருக்கிறான். நெற்றியில் சந்தனப்பொட்டு வட்டமாய்ச் சிறிதாய் இட்டிருக்கிறது. காதில் வைர வொட்டுக் கடுக்கன் விளங்கியிருக்கிறது. மீசை கருக்கிட்டிருக்கிறது. வயது இருபதிருக்கும். அவனுக்கும் ஒரு கவலை உண்டாயிருந்தது.
“பராக்ரமரிடம் ஏனாதியாக இருந்த என் தந்தை அரசனிமித்தம் அமர்க்களத்தில் ஆருயிர் விட்டான். அப்போது கர்ப்பமாக இருந்த என் தாய் என்னைப் பெற்றுவைத்துச் சில நாளில் இறந்துபோனாள். பராக்ரமர் பாலசிங்கன் என்று பெயரிட்டு என்னைச் சீருஞ் சிறப்புமாய் வளர்த்துவந்தார். நானும் ராஜகுமாரியான கோமளத்துடன் ஓராசிரியரிடம் கல்வி கற்றும் விளையாடியும் இளமைப் பருவத்தை இனிது கழித்தேன். பின்பு பல கலைகளில் பயின்றுவந்ததனால் புலவர்கள் என்னை நன்கு மதிக்கின்றார்கள். எனக்கும் கோமளத்துக்கும் உள்ள நேசம் இப்பொழுது எங்களுக்கு உயிர்நிலையாய் வளர்ந்திருக்கிறது. என்னை யின்றி அவள் உயிர்தரியாள்.: அவளையின்றி நான் உயிர்தரியேன். நாங்கள் காந்தர்வ வழக்கத்தை அநுஸரித்திருக்கிறோம். ராணி வார்த்தையைக் கேட்டு ராஜன் என்னைச் சோழமண்டிலம் விட்டுப் புறம் போகவென்று கட்டளை யிட்டிருக்கிறான். ஐயோ, கோமளம்! உன்னைப் பிரிந்து எங்ஙனம் ஆற்றியிருப்பேன்” என்று பாலசிங்கன் பூம்பந்தரில் பரிதபித்திருந்தான்.
“உன்னைப் பிரிந்து எங்ஙனம் ஆற்றியிருப்பேன்” என்றதைக் கேட்டுவந்த கோமளம் “என்னைப் பிரிவானேன்? இதோ வருகின்றேனே” என்று புன்சிரிப்போடு எதிரில் வந்தாள். பால சிங்கன் ராஜநிருபத்தை எடுத்து அவள் கையில் கொடுத்தான். கோமளம் அதைப் பார்த்தவளவில் மெய்ம்மறந்து அவன் மார்பில் சாய்ந்தாள். பாலசிங்கன் ஆறுதல் சொல்லி அவளைத் தேற்றினான்.
கோமளம். — ஐயோ, அந்தப் பாவி இப்படிப்பட்ட சதி செய்வாளென்று நான் நினைக்கவில்லையே.
பாலசிங்கன். — இனி என்ன செய்வது. நான் போகவே வேண்டும்.
கோமளம். — நீங்கள் ஏதாவது வேலையாக ஒருநாழிகை நேரம் வெளியில் போயிருந்தால், அந்த ஒரு நாழிகை எனக்கு ஓர் ஊழிகாலம்போல் இருக்குமே; உங்களை வேறு தேசம் போகவிட்டு எப்படி ஆற்றியிருப்பேன்?
பாலசிங்கன். — நீ கண்ணீர்விட்டுக் கதறினால், கண்ணே! என் கட்டாண்மை கரைகின்றது. உன்னிடம் எனக்குள்ள அன்பு கடுகளவும் குறையாது. இலங்கைத்தீவில் யாழ்ப்பாணத்தில் என் தந்தைக்கு நண்பர் சேனாதிராயர் என்பவர் ஒரு வர்த்தகர் இருக்கிறார். அவரிடம் போகிறேன். இங்கிருந்து கப்பலேறி வருகின்ற வர்த்தகர் மூலமாக அவருடைய விலாஸமிட்டுக் கடிதம் எழுது. உன் கடிதங்களின் வார்த்தைகளை ஆரமிர்தாகப் பருகியிருப்பேன்.
கோமளம். –உங்களோடு இல்லறம் நடத்த எண்ணியிருந்தேன். அதற்கு அந்தப் பாவி இடையூறு தேடினாள். அப வாதத்துக்கும் அஞ்சாமல் உடன்போக்காக உங்களோடு வந்துவிடுவேன். என் தந்தை உங்களை இடர்ப்படுப்பா ரென்றஞ்சுகிறேன். என் தந்தையை இணங்குவித்து உங்களை மீண்டும் பெறுதல் கூடுமென்றே நான் உயிர்தரித்திருத்தல் வேண்டும்.
பாலசிங்கன். — நாம் எத்தனை நேரம் பேசியிருந்தாலும் நமக்குச் சலிக்காது. உன்னைப் பார்க்கிற பாவனையாக ராணி ராஜாவை அழைத்துக்கொண்டு இங்கே வந்தாலும் வருவாள். நான் போய் வருகிறேன். திக்கற்ற நமக்குத் தெய்வமே துணை.
கோமளம்.–சற்றிரும். இந்த வைரக்கல் மோதிரம் என் தாயார் எனக்குக் கொடுத்தது. என்னுயிர் என்னிடம் இருக்கிறவரையில் இந்த மோதிரத்தை நீங்கள் அணிந்து கொண்டிருக்கவேண்டும்.
பாலசிங்கன்.–இதோ, அணிந்துகொண்டேன். இதை நீ தான் என் கையிலிருந்து எப்பொழுதாவது கழற்றிக் கொள்ள வேண்டும். இந்தக் கடகங்களை நீ அணிந்துகொள்.
கோமளம்.–அணிந்துகொண்டேன். மறுபடியும் எப்போது ஸந்திப்போமோ? ஐயோ, தெய்வமே —
தூரத்தில் அரசனும் அரசியும் உல்லாஸமாய்ப் பேசி வருவதைக் கண்டு, பாலசிங்கன் செடிகளில் மறைந்து பாறிப் போய்விட்டான்.
II
யாழ்ப்பாணத்தில் சேனாதிராயருடைய மளிகைக்கு வருதலான வெவ்வேறு தேசத்து வர்த்தகர்களில் சில விடர்கள் பாலசிங்கனுக்கு அறிமுகமாயினர். வேலையில்லாத வேளைகளில் அவர்கள் அந்த மளிகையில் கூடி வேடிக்கையாக வார்த்தை சொல்லிக்கொண்டிருப்பர். ஒருநாள் அங்ஙனம் பொழுதுபோக்கி யிருக்கையில், பொதுவாகப் பெண்களைப்பற்றி ஸம்பாஷணை நடந்தது. அவனவன் தன் தன் தேசத்துப் பெண்டிருடைய குண விசேஷங்களைப் புகழ்ந்து பேசினான்: தன்தன் காதலியின் குண விசேஷங்களையும் புகழ்ந்து பேசினான்.
அப்போது பாலசிங்கனும் “என்காதலியான கோமளம் அறிவில் சிறந்தவள்: அழகில் இணையில்லாதவள்: கல்லைப் போல் கலங்காத கற்புடையவள்; அவளைக் கண்ணகியென்றே சொல்லலாம்” என்று தன் காதலியைப் புகழ்ந்து பேசினான்.
அதைக் கேட்டுப் பொறாமையடைந்த தென்னாட்டுத் தமிழன் ஒருவன் தேவராயன் என்பவன் “எங்கள் பாண்டிநாட்டுப் பெண்டிரைக் காட்டிலும் சோழநாட்டுப் பெண்டிருக்குள்ள உயர்வு என்ன? உம்முடைய காதலி உத்தமியென்பதை நான் உறுதியாக நம்பமாட்டேன்” என்றான்.விளையாட்டாகப் பேசியிருந்தது கடைசியில் வினையாக முடிந்தது.
தேவராயன். –ஐயா, உங்கள் பட்டினத்துக்குப்போய் நான் உமது காதலியின் காதலைக் கவர்ந்து வருகிறேன், பாரும். என் எண்ணம் ஈடேறாவிட்டால், உமக்கு ஆயிரம் பொன் கொடுக்கக்கடவேன். அவளுடைய கற்பைக் கலக்கி அவள் கையிலுள்ள கடகங்களையும் பெற்று வருவேனாகில், நீர் உமது கையில் அணிந்திருக்கும் கணையாழியை எனக்குக் கொடுத்துவிடுதல் வேண்டும். உமக்கு உடன்பாடுதானா?
பாலசிங்கன்.–ஆஹா. ஆக்ஷேபனை இல்லை. அது செய்யத் தவறினால் நீர் வாள் கையேந்தி என்னோடு வலிய சமர் செய்தல் வேண்டும். அதில் நம்மிருவரில் ஒருவர் சாவதே ஸரி.இருவரும் ஸாக்ஷிகளை ஏற்படுத்தி மேற்கண்ட உறுதிகளைக் காட்டி உடன்படிக்கைப் பத்திரம் எழுதிக்கொண்டனர்.
உடனே தேவராயன் புறப்பட்டுக் கப்பலேறி வந்து காவிரிப்பூம் பட்டினத்தில் இறங்கினான். வாயில் காப்போரிடம் வர்த்தகனென்று சொல்லிப்போய், ராஜகுமாரியைக் கண்டான். கண்டதும், “அம்மா, உமது உயிர்க்காதலரான பாலசிங்கருக்கு நான் நண்பன்” என்றுசொன்னான். அதைக் கேட்ட கோமளம் தேவராயனை ஓராசனத்தில் இருக்கச் செய்து, பாலசிங்கனுடைய செய்திகளை உசாவினாள். அப்போது தேவராயன் பாலசிங்கன்மீது இல்லதும் பொல்லதும் சில கற்பித்துக்கூறி, கோமளத்தின்மீது மோகங்காட்டிச் சில ஸரஸ வார்த்தைகளைப் பேசத் தொடங்கினான். அவ்வளவிலே கோமளம் அருவருப்படைந்து முகங்கறுத்தாள்.
அதுகண்ட தேவராயன், “உமது கற்பின் திண்மையை ஆராய்ந்தறியும் பொருட்டே நான் இங்குற்றேன். உமது காதலர் உள்ளிட்ட நண்பர் நாங்கள் சிலர், சில அருங்கலம் வாங்கி இலங்கை யரசனுக்கு அளிக்க எண்ணினோம். அதன் பொருட்டு நாகைக்கு வந்தேன். உமது காதலர் வேண்டு கோளால் இங்கு வந்தேன். நாளைக்குப் புறப்பட்டுத் திரும்ப வேண்டும். பட்டினத்தில் உள்ள வேலையைப் போய்ப் பார்க்க வேண்டும். நான் வாங்கின அருங்கலங்களை ஒரு மரப்பெட்டியில் பூட்டிவைத்திருக்கிறேன். அதை இன்றிரவு மாத்திரம் இங்கே வைத்திருந்து கொடுக்கவேண்டும். ஆள்கள் மூலமாய் அனுப்புகிறேன்” என்றான். தன் நாயகனும் உள்ளிட்ட கருமம் என்றதனால் கோமளம் அதுசெய்ய அங்கீகரித்தாள்.
தேவராயன் ராஜகுமாரியிடத்தில் விடைபெற்றுப்போய் ஒரு மரப்பெட்டியின் உள்ளே புகுந்துகொண்டு, தன் ஆட்களை அழைத்து, “உள்ளிருந்தபடியே மூடவும் திறக்கவும் இந்தப் பெட்டியில் தாளிட்டிருக்கிறேன். நீங்கள் இந்தப் பெட்டியைக் கொண்டுபோய் ராஜகுமாரியின் அறையில் வைத்து வாருங்கள். நாளை விடியற்காலத்தில் மறுபடியும் அங்குற்று இந்தப் பெட்டியை இங்கே கொண்டுவருதல் வேண்டும்” என்று கட்டளையிட்டான். ஆட்கள் பெட்டியைக்கொண்டுபோய் ராஜகுமாரியின் அறையில் இறக்கிவிட்டு வந்தனர்.
நள்ளிரவில் கோமளம் மெய்ம்மறந்து உறங்கியிருக்கையில், ஆளரவம் காட்டாமல் தேவராயன் மெல்லெனப் பெட்டியைத் திறந்துகொண்டு வெளிப்பட்டான். பள்ளியறையின் அடையாளங்களை நன்றாகக் குறித்துக்கொண்டான்; அவள் கையிலிருந்த கடகங்களைக் கழற்றிக்கொண்டு, அவள் உடலைச் சற்றுநேரம் உற்றுப்பார்த்திருந்தான். அவள் புரளும் போது வயிற்றின் மீது மூடியிருந்த வஸ்திரம் விலகி ஒரு மச்சம் புலப்பட்டது. “இவளுடைய காதலனிடத்தில் நான் செய்துகொண்ட சூளுறவை முடித்துக்கொள்வதற்கு இதைக் காட்டிலும் வேறு ஸாக்ஷி வேண்டா” என்று ஸந்தோஷ மடைந்து முன்போலவே பெட்டியில் புகுந்து தாளிட்டுக் கொண்டான். விடியற்காலத்தில் ஆள்கள் வந்து பெட்டியைக் கொண்டுபோய் இறக்கிவிட்டனர். உடனே தேவராயன் புறப்பட்டுக் கப்பலேறி யாழ்ப்பாணம் போனான். மறுநாள் தேவராயன் சேனாதிராயருடைய மளிகைக்குப்போய், பாலசிங்கனைப்பார்த்து, “ஐயா, போன வேலையை முடித்துவந்தேன்” என்றான்.
பாலசிங்கன். –என்ன ஸங்கதி?
தேவராயன். –உமது நாயகியின் பள்ளியறையை விவரிக்கிறேன், கேளும்.
பாலசிங்கன். –அவ்வறையை நீர் உள்ளே போய்ப் பார்த்தீர் என்பது என்ன நிச்சயம்? எவராகிலும் சொல்லக் கேட்டிருக்கலாமே.
தேவராயன்.–ராஜகுமாரியின் பள்ளியறையை எதிரில் உள்ளதுபோல் விவரித்தான்: விவரித்தவுடனே, “ஏனையா, மோதிரத்தைக் கழற்றுமே” என்றான்.
பாலசிங்கன்.–நீர் சொன்ன அடையாளமெல்லாம் அக்கம்பக்கம் அறிந்ததுதானே. வீணாக விளையாட்ட வார்த்தை பேசுகிறீர்.
தேவராயன்.–விளையாட்டு வார்த்தையா? ஏன் இன்னும் பொறுப்பான அடையாளமும் கொண்டுவந்திருக்கிறேன். இதோ பாரும்! இது அவள் கையிலிந்த கடகந்தானா? ஏன் அப்படிப் பதைக்கிறீர்? கழற்றும் மோதிரத்தை (என்று நகைத்தான்.)
பாலசிங்கன்.–எதோ, அதை இப்படிக் காட்டும். நான் கொடுத்துவந்த கடகந்தானா பார்ப்போம்.
தேவராயன். –அதை அவள் கழற்றிக்கொடத்த ஒயிலை என்ன சொல்வேன். எதிரில் இப்பொழுதுதான் மந்தஹாஸம் செய்வதாகக் காண்கிறாள்.
பாலசிங்கன்.–புளுகு கற்றாலும் பொருந்தவே புளுக வேண்டும். என்னிடம் சேர்க்கும்படி உம்மிடம் கழற்றிக் கொடுத்தாளா?
தேவராயன்.–இதோ உமக்கு அவள் கொடுத்த கடிதம். அதில் அவ்வண்ணம் எழுதியிருந்தால், இந்தக் கடகத்தை நீரே எடுத்துக்கொள்ளலாம்.
பாலசிங்கன், கடிதத்தைப் பிரித்துப் பார்த்து, “ஓ இல்லை இல்லை. நான் உடன்படிக்கையின்படியே நடப்பேன்: தவற மாட்டேன். இதோ மோதிரம்:” என்று மோதிரத்தைக் கழற்றிக்கொடுத்தான்.
பாலசிங்கன்.- என்ன ஸங்கதி?
தேவராயன்.- உமது நாயகியின் பள்ளியறையை விவரிக்கிறேன், கேளும்.
பாலசிங்கன்.- அவ்வறையை நீர் உள்ளே போய்ப் பார்த்தீர் என்பது என்ன நிச்சயம்? எவராகிலும் சொல்லக் கேட்டிருக்கலாமே.
தேவராயன்.- ராஜகுமாரியின் பள்ளியறையை எதிரில் உள்ளதுபோல் விவரித்தான்: விவரித்தவுடனே, “ஏனையா, மோதிரத்தைக் கழற்றுமே” என்றான்.
பாலசிங்கன்.- நீர் சொன்ன அடையாளமெல்லாம் அக்கம்பக்கம் அறிந்ததுதானே. வீணாக விளையாட்டு வார்த்தை பேசுகிறீர்.
தேவராயன்.- விளையாட்டு வார்த்தையா? ஏன் இன்னும் பொறுப்பான அடையாளமும் கொண்டுவந்திருக்கிறேன். இதோ பாரும்! இது அவள் கையிலிருந்த கடகந்தானா? ஏன் அப்படிப் பதைக்கிறீர்? கழற்றும் மோதிரத்தை(என்று நகைத்தான்.)
பாலசிங்கன்.- எதோ, அதை இப்படிக் காட்டும். நான் கொடுத்துவந்த கடகந்தானா பார்ப்போம்.
தேவராயன்.- அதை அவள் கழற்றிக் கொடுத்த ஒயிலை என்ன சொல்வேன். எதிரில் இப்பொழுதுதான் மந்தஉறாஸம் செய்வதாகக் காண்கிறாள்.
பாலசிங்கன்.- புளுகு கற்றாலும் பொருந்தவே புளுகவேண்டும். என்னிடம் சேர்க்கும்படி உம்மிடம் கழற்றிக்கொடுத்தாளா?
தேவராயன்.- இதோ உமக்கு அவள் கொடுத்த கடிதம். அதில் அவ்வண்ணம் எழுதியிருந்தால், இந்தக் கடகத்தை நீரே எடுத்துக்கொள்ளலாம்.
பாலசிங்கன், கடிதத்தைப் பிரித்துப் பார்த்து,”ஓ இல்லை இல்லை. நான் உடன்படிக்கையின்படியே நடப்பேன்: தவற மாட்டேன். இதோ மோதிரம்:” என்று மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்தான்.
கோபமும் மானமும் துக்கமு் மாறி மாறி அவனை வருத்திக்கொண்டிருந்தன. “ஐயோ, ‘ரூபவதி பார்யா சத்ரு’ என்பது மெய்யாயிற்றே. அவளுக்கு முகம் சந்த்ரபிம்பம் அகம் பாம்பின் விஷம் என்றறியாமற் போனேனே” என்று துயரப்பட்டான்.
அப்பால் கடுங்கோபங்கொண்டு, எல்லப்பன் என மேல் விலாஸமிட்டு ஒரு கடிதம் எழுதினான். எல்லப்பன், பூங்காவனத்து ஆள்களின் தலைவன். பாலசிங்கனிடம் விசுவாசம் உள்ளவன். அக்கடிதத்தில், கோமளம் பழிக்கஞ்சாத பாவியென்றும் அதற்குள்ள ஸாக்ஷிகள் இன்னவை யென்றும் எழுதி, “இலங்கைக்குக் கப்பலேற்றி அனுப்புவதாகச் சொல்லி, நாகைக்கு அழைத்துவருவதாகப் பாவனைகாட்டி, அவளை வழியில் கொலைசெய்துவிடுக” என்று வேண்டிக்கொண்டான்.
அந்தக் கடிதத்தோடுகூடவே கோமளத்துக்கும் நயவஞ்சகமான மற்றொரு கடிதம் அனுப்பினான். பிரிந்து வந்து நெடு நாள் ஆனதனால் அவளைக் காணும் அவா மேலிட்டிருக்கிறதென்றும், எல்லப்பனுடன் நாகைக்கு வந்தால் தன்னை ஸந்திக்கலா மென்றும் அக்கடிதத்தில் எழுதியிருந்தான்.
நாயகனே நினைவாக இருப்பவளாதலால், கடிதம் பெற்ற அன்றிரவே கோமளம் புறப்பட்டாள். எல்லப்பன் படுகொலை செய்யத் துணியாமல், தாங்கள் செல்லும் பயணத்தின் கருத்தை வழியிடையில் வெளியிட்டான். அதைக் கேட்டவளவில் அவளுக்கு ஆறாததுயரம் உண்யாயிற்று.
எல்லப்பன் “அம்மா, இதில் ஏதோ வஞ்சனை நடந்திருக்கிறது. உண்மை வெளிப்படுகிற வரையில் அவஸரப்பட்டு ஒன்றும் செய்யலாகாது. பொறுத்தார் பூமியாள்வார்” என்று வற்புறுத்தினான்.
கோமளம் “நல்லது, பொறுக்கக்கூடிய வரையில் பொறுக்கிறேன். பொறுக்கக் கூடாவிட்டால் உயிர் விடுகிறேன். இனி அரமனைக்கு வரவே மாட்டேன்” என்றாள்.
எல்லப்பன் “நீ இந்தக் கோலத்துடன் தனிவழியாகப் போதல் தகாது. சிலநாள் அஞ்ஞாதவாஸம் பண்ணவேண்டும். ஆண்பிள்ளை வேஷம் தரித்துக் கொண்டால் அச்ச மின்றிப் போகலாம்” என்று ஆலோசனை சொல்லி, ஆண் வேஷத்துக்குரிய உடைகளையும் சவதரித்துக் கொடுத்தான்.கொடுக்கும்போது, ஒரு மருந்துக்குப்பியும் அவள் கையில் கொடுத்து, “அம்மா, இது அமிர்த ஸஞ்சீவி என்னும் மஹௌஷதம். பலவிதமான வ்யாதிகளுக்குப் பரிஹாரமாவது: உனக்கு உதவும்படி ராணி என்னிடம் கொடுத்தது. வழியில் எந்த வ்யாதி கண்டாலும் இதில் கொஞ்சம் உண்டிடுக” என்று சொல்லிப் போய்விட்டான்.
சில ஜீவஜந்துக்களுக்குக் கொடுத்துப் பரீட்சை பார்க்க வேண்டு மென்று, ராணி சிறிது பாஷாணம் கொடுக்கும்படி அரமனை வைத்யனை வேண்டியிருந்தாள். இவளுடைய துர்க்குணத்தை அறிந்தவனாகையால், வைத்யன், பாஷாணமென்று சொல்லி, ஒருமருந்தைக் குப்பியிலிட்டு அவளிடம் கொடுத்தான். பாஷாணமென்றே நினைத்து அவள் அந்தக் குப்பியை எல்லப்பனிடம் கொடுத்தாள். எல்லப்பன் இப்போது கோமளத்திடம் கொடுத்தது இதுவே. அந்த மருந்தை உட்கொண்டவர், இரண்டு மூன்று நாழிகை மெய்ம்மறந்து கிடந்து, பின்பு முன்னிலும் உடலுரம் பெற்று எழுவார்கள்.
III
ஆண்வேஷம் தரித்து மருந்துக்குப்பியை மடியில் வைத்துக்கொண்டு, கோமளம் வழிநடக்கத் தொடங்கினாள். நாகையை அடைந்தால் நாயகனைக் காணலாகும் என்றெண்ணிச் செல்பவள், வழி தெரியாமல் வேறு வழியே போனாள். அந்தவழி மாலை வேளையில் ஒரு காட்டில் கொண்டுபோய் விட்டது.காட்டில் போகும்போது வயிறு பசித்தது: நாவரண்டது. சோர்வடைந்து, நடக்க முடியாமல், இருக்க இடந் தேடினாள். ஒரு குடிசை எதிர்ப்பட்டது. உள்ளே எவராகிலும் இருந்தால் உணவு கிடைக்கும் என்றெண்ணிக் குடிசையினுள்ளே புகுந்தாள். உள்ளே ஒருவரும் இல்லை. ஒரு மூலையில் ஒரு பானையில் கொஞ்சம் பழஞ்சோறும் ஒரு சட்டியில் கொஞ்சம் இலைக்கறியும் இருந்தது. ஆபத்துக்குப் பாபமில்லை என்று நினைத்துச் சோற்றையும் இலைக்கறியையும் எடுத்து ஒரு மரத்தட்டில் இட்டுக்கொண்டு உண்ணத் தொடங்கினாள்.
அப்போது வயோதிகன் ஒருவனும் வாலிபர் இருவரும் அக்குடிசையை அடைந்தனர். குடிசையினுள்ளே முற்படச் சென்ற வயோதிகன், அங்கே ஆண்மகனொருவன் ஆஹாரம் பண்ணிக்கொண் டிருப்பதைக் கண்டு, திடுக்கிட்டுப் பின்னடைந்து, “பிள்ளைகளே, சற்றுப் பொறுங்கள். உள்ளே வர வேண்டாம். நாம் மீதியாக வைத்த ஆஹாரத்தை யாரோ ஒருவன் உண்கிறான். அவன் தேவனோ மனிதனோ கந்தர்வனோ தெரியவில்லை” என்றான்.
மனிதர் அரவத்தைக் கேட்டவுடனே கோமளம் வெளியில் வந்து, “ஐயா, எனக்கு ஒரு தீங்கும் செய்ய நினைக்க வேண்டா. பசி பொறுக்க முடியாமையால், எவரிடத்தாயினும் பணங்கொடுத்தே அன்னம் அருந்த எண்ணிவந்தேன். குடிசையில் இருந்ததை உண்டதற்காக இதோ பணம் கொடுக்கிறேன்; பெற்றுக்கொள்ளுங்கள். இந்த ஸமயம் நீங்கள் வராவிட்டாலும் பணத்தை இங்கே வந்தனபூர்வமாக வைத்த விட்டே போவேன்” என்று புன்னகை செய்தாள்.
அவர்கள் மூவரும் ஒரு குரலாய், “நாங்கள் பணம் வாங்க மாட்டோம்” என்றார்கள்.
கோமளம்.–என்மேல் கோபங்கொள்ள வேண்டா. பசி பொறுக்காமல் செய்த குற்றத்தை மன்னிக்கவேண்டும். குற்றத்துக்கு அஞ்சியிருந்தால், இந்நேரம் என்னுயிர் என்னை விட்டு நீங்கியிருக்கும்.
வயோதிகன்.–ஐயோ, அப்படிப்பட்ட ஸமயத்தில் எங்கள் ஆஹாரம் உனக்கு உதவியானது எங்களுக்கு அதிக ஸந்தோஷமே. நீ யார்? உன் பெயர் என்ன? எங்கே போக வேண்டும்?
கோமளம்.–என் பெயர் ஸுந்தரன். உறவினரொருவர் யாழ்ப்பாணம் போயிருக்கிறார். அவரைப் பார்க்க நாகையில் கப்பலேறிப் போகவேண்டும்.
வயோதிகன்.–அப்பா, ஸுந்தரா, காட்டில் வஸிப்பதால் எங்களைக் கொடிய வேடர் என் றெண்ணவேண்டா. பொழுது போய்விட்து. நீ இங்கே தங்கியிருந்து இளைப்பாறி ஸாவகாசமாய்ப் போகலாம். பிள்ளைகளே, இந்த ஸுந்தரனுக்கு உணவிட்டு உபசரியுங்கள்.
பிள்ளைகள் இருவரும் இனிய வார்த்தைகள் பேசி ஸுந்தரனை உள்ளே அழைத்துப்போயினர். ஸுந்தரனைக் கண்டு பேசிய அளவில் அவர்களுக்கு ஸஹோதரவாஞ்சை உண்டாயிற்று. அவர்கள் வேட்டையாடிக் கொண்டுவந்த மாம்ஸத்தை ஸுந்தரன் அதிமாதுர்யமாகத் திருத்திச் சமைத்து அவர்களுக்கு ஆநந்தம் உண்டாக்கினான்.
முகமலர்ச்சியோடு கூடியிருந்தாலும், ஸுந்தரனுடைய மனதில் ஏதோ கவலை குடிகொண்டிருப்பதாக அவர்கள் அநுமானித்துக் கொண்டனர். அடக்கம் முதலிய அரிய குணங்களைக் கண்டு ஸுந்தரனிடம் அவர்களுக்கு அன்பு உண்டா யிற்று. கோமளமும் “என் காதலர் என் மனதைக் கவர்ந்திராவிட்டால், நான் இங்கேதானே இவ்விளங்குமரருடனே என் காலத்தைக் கழித்திருப்பேன்” என்று நினைத்தாள். ஆயாஸம் தீர்கிறவரையில் அவர்களோடு தங்கியிருக்க ஸம்மதித்தாள்.
மறுநாள் இளங்குமரர் இருவரும் வேட்டைக்குப் புறப்பட்டனர். அசக்தியால் ஸுந்தரன் அவர்களோடு போகவில்லை. வழிமுழுதும் அவர்கள் ஸுந்தரனுடைய குண விசேஷங்களையே புகழ்ந்துகொண்டு போயினர். அவர்கள் போனபிறகு, கோமளம், மடியிலிருந்த மருந்தை உட்கொண்டாள். உட்கொண்ட கொஞ்சநேரத்தில் பிணம்போல் மெய்ம்மறந்து உறங்கிவிட்டாள்.
வேட்டையாடி வந்தவர்கள், ஸுந்தரன் எழாமலும் அசையாமலும் ஸ்மரணையின்றி இருப்பதைக் கண்டு, “ஐயோ, இறந்துவிட்டானே. எங்கிருந்து வந்தானோ? எவனோ தெரிய வில்லையே. என்ன செய்வது? இப்படிப்பட்டவனை இந்தக் காட்டிலே இனிக் காணப்போகிறோமா?” என்றழுது, ஸுந்தரனைக் கொண்டுபோய் வெளியான இடத்தில் ஒரு மர நிழலில் ஒரு பாறையின்மேல் வளர்த்தி, மேலே தழைகளையும் கண்ணிகளையும் மூடிவைத்து, அதிக துக்கத்துடன் குடிசைக்குத் திரும்பினார்கள்.
அங்ஙனம் அவர்கள் திரும்பின பிறகு, கொஞ்ச நேரத்தில் கோமளம் நித்திரை தெளிந்து, மேலே மூடியிருந்த தழைகளையும் கண்ணிகளையும் உதறியெழுந்து, “குடிசையில் இருந்த நான் இங்கு எப்பொழுது வந்தேன்? எப்படி வந்தேன்? என்மீது தழைகள் மூடியிருந்த காரணம் என்ன? அந்த வயோதிகனும் இளங்குமரரும் இன்னும் வரவில்லையோ” இதெல்லாம் கனவோ நனவோ! ஒன்றும் விளங்கவில்லையே” என்று சுற்றி வளைத்துப் பார்த்தாள். குடிசைக்குப் போகிற வழியும் தெரியவில்லை. செய்வது இன்னதென்பது ஒன்றும் தோன்றவில்லை. நினைவெல்லாம் நாயகனிடம் சென்றதால். அணிந்திருந்த ஆண்வேஷத்துடன சென்று அவனைக் காண்பதான ஆசை மேலிட்டு, நாகை நோக்கிப் போவதென்று புறப்பட்டாள்.
IV
கோமளத்தைக் கொன்றுவிட்டதாக எல்லப்பன் எழுதிய கடிதத்தைப் பார்த்தமாத்திரத்தில், பாலசிங்கன், “ஐயோ, எனக்கு அவளிடம் இருந்த அன்பு என்ன? அவளுக்கு என்னிடம் இருந்த அன்பு என்ன? எல்லாம் இப்படி முடிந்ததல்லவா. இனி நான் உயிரோடிருந்து பெறுதலான இன்பம் என்ன இருக்கிறது?” என்று துக்கமடைந்தான்.
அந்த ஸமயத்தில், பராக்ரமசோழனோடு யுத்தம் செய்யுமாறு இலங்கையரசனுடைய சேனை புறப்பட்டது. பாலசிங்கன் “இந்தச் சேனையோடு போய், சோழன் சேனையோடு கலந்துகொண்டு அவன் சார்பிலே நின்று யுத்தத்தில் மடிந்து போவது ஒன்று; இன்றேல் ராஜகட்டளையை மீறித் திரும்பிய நிமித்தம் சோழனால் கொலையுண்பது ஒன்று. இவ்விரண்டில் ஒன்றே செய்யத்தகுவது” என்று உறுதிசெய்துகொண்டு, இலங்கை யரசனுடைய சேனையோடு வந்தான்.
கோமளம் காட்டில் அலைந்து திரியும்போது, இலங்கைச் சேனை அந்தக் காட்டிலே வந்து சேர்ந்தது. கோமளம் சிறைப் பட்டாள்.
ஆண்வேஷத்திலிருந்த அவளுடைய ஒழுக்கத்தையும் தைர்யத்தையும் கண்டு, சேனாதிபதியான பாகுபலி அவளைத் தன் ஸேவகத்தில் அமர்த்திக்கொண்டான்.காட்டையடைந்த இலங்கைச் சேனையோடு போர் புரியும் பொருட்டுச் சோழன்சேனையும் அக்காட்டில் நுழையும் போது, குடிசையிலிருந்த வயோதிகனும் இளங்குமரர் இருவரும் சோழன் சேனையில் சேர்ந்துகொண்டார்கள். பாலசிங்கன் இலங்கைச் சேனையை விட்டு, புதர்களின் மூலமாய் மறைந்துவந்து, சோழன் சேனையில் சேர்ந்துகொண்டான். இந்நால்வரும் வந்து சேராவிட்டால், சோழன் தோல்வியடைந்து கொலையுண்டிருக்கவேண்டும்.இலங்கைச் சேனை தோல்வியடைந்த அளவிலே, சோழனுடைய படைவீரர் பகைவருடைய படைத்தலைவன் முதலானவர்களைச் சிறைபிடித்து வந்து சோழினதிரில் நிறுத்தினர். படைத்தலைவனோடு கோமளமாகிய ஸுந்தரனும் வந்து நிற்பது அவசியமாயிற்று. குடிசையிலிருந்த வயோதிகனும், இளங்குமரர் இருவரும், அவர்களோடு பாலசிங்கனும், அரசனுக்கு அபாயமான ஸமயத்தில் செய்த மஹோபகாரத்தின் நிமித்தமாக, அவர்களையும் சில ப்ரதானிகள் அழைத்துவந்து அரசனெதிரில் நிறுத்தினர். எல்லப்பனும் அரசனெதிரில் இருந்தான். பாலசிங்கன், “நானே என்னை இன்னானென்று வெளியிட்டு மரணதண்டனை அடையவேண்டும்” என்று ஆயத்தமாக இருந்தான்.
குடியானவன்போல் மாறுவேஷம் பூண்டிருந்த பாலசிங்கனை இன்னானென்று கோமளம் அறிந்துகொண்டாள். ஆண் வேஷத்தில் இருந்தமையால் அவளை இன்னாளென்று பால சிங்கன் அறியவில்லை. இலங்கைச் சேனையோடு வந்து சிறைப்பட்ட தேவராயனைக் கோமளம் இன்னானென்று தெரிந்து கொண்டாள். தனது துன்பத்துக்குக் காரணமானவன் அவனேயென்பது அவளுக்குத் தெரியாது. தன் கணையாழி அவன் கையில் இருப்பதைக் கண்டு அவளக்கு அதிசயம் உண்டாயிற்று. கோமளத்துக்கு ஆண்வேஷத்துக்குரிய உடைகளைச் சவதரித்துக் கொடுத்தவனாகையால், எல்லப்பன் மாத்திரம் அவளைத் தெரிந்துகொண்டான்.
வயோதிகனும் இளங்குமரர் இருவரும் “இவன் ஸுந்தரனை ஒத்திருக்கிறான். அவனேதான், வேறல்லன். இறந்து போனான் என்றெண்ணினோமே: மீண்டும் உயிர்பெற் றெழுந் தானோ! ஸுந்தரனேயாயின் இவன் நம்மைக் கண்டு கொள்ளாமல் இருப்பானா? இதென்ன அதிசயம்!” என்று தங்களில் ஒருவரோடொருவர் பேசியிருந்தனர்.
இன்னொன்று சொன்னால் தன்னை மன்னித்து விடவார்களென்று அஞ்சி, பாலசிங்கன், வாய்திறவாமல், தனக்கு எப்போது அரசன் மரணதண்டனை விதிப்பானென்று எதிர்பார்த்திருந்தான். இவ்வாறிருக்கையில், பகைவர் படைத்தலைவனான பாகு பலி, சோழனைப் பார்த்து, “மஹா ராஜனே, சிறை பிடித்தவர்களை ஈடுகொடுத்து மீட்கவிடாமல் நீங்கள் எங்களைக் கொலை செய்தாலும் செய்வீர். ஆதலால் இறப்பதற்கு நான் துணிந்திருக்கிறேன். ஆயினும் ஒரு விண்ணப்பம் செய்துகொள்ளுகிறேன்” என்று சொல்லி, ஸுந்தரனை இழுத்து எதிரில் விட்டு, இவன் இந்த நாட்டில் இருப்பவன். எங்கள் சேனையில் சிறைப்பட்டு இரண்டு மூன்று நாளாய் இந்த யுத்த ஸமயத்தில் என்னிடம் எடுபிடியாளாக இருந்தவன். உண்மையும் உள்ளன்பும் உள்ளவன். கடப்பாடறிந்து கருமம் நடத்துகின்றவன்.
பகைவனிடம் பணிவிடை செய்திருந்தது தவிர, உங்கள் நாட்டினருக்கு ஒரு தீங்கும் செய்தவனல்லன். ஈடு கொடுத்து இவனை மாத்ரம் மீட்டுவிட எனக்க விருப்பம் உண்ட. இவனக்குமாத்ரம் ப்ராணபிக்ஷை கொடுக்கவேண்டும்” என்று ப்ரார்த்தித்தான்.
மாறுவேஷத்திலிருந்த கோமளத்தைத் தன் மகளென்று அறியாமல் பராக்ரமசோழன் “இவனை இதற்று முன் பார்த்திருக்கிறேன். பார்த்த இடமும் ஸமயமும் நினைவில்லை. இவனைப் பார்க்கப் பார்க்க எனக்கு அன்பு மேலிடுகின்றது” என்றெண்ணிக்கொண்டே, “அப்பா, உன் உயிரைக் கொடுத்தேன். இன்னும் வேறு விருப்பம் இரந்தால், சொல்லிக்கொள். இந்தப் பாகுபலியின் உயிரை வேண்டினாலும் கொடுக்கிறேன்” என்ற சொன்னான்.
உடனே கோமளம், அரசனுக்க வந்தன பூர்வமாக நமஸ்காரம் பண்ணி எழுந்து, க்ஷணநேரம் மௌனமாக இருந்தாள். எல்லாரும் அவள் முகத்தையே இமை கொட்டாமல் பார்த்திருந்தார்கள்.
அப்போது பாகுபலி “அப்பா, எனக்காக ப்ராணபிக்ஷை கேட்க வேண்டாம். இனி உயிரோடிருக்க எனக்கு விருப்பம் இல்லை” என்றான்.
கோமளம் “ஐயா, வேறு கார்யம் இருக்கிறது” என்றாள். அதைக் கேட்டு பாகுபலி அதிசயங்கொண்டு அசைவற்றிருந்தான்.
கோமளம், “மஹாராஜா!” என்று விளித்து, தேவராயனைக் காட்டி, “கையிலிருக்கும் கணையாழியை அவர் எவ்விடத்தில் எங்ஙனம் பெற்றார் என்பதை அறிவிப்பதே அடியேன் விரும்புகின்ற வரம்” என்றாள்.
அரசன் “ஏட, அம்மோதிரம் உனக்கு எங்கே கிடைத்தது? எங்ஙனம் கிடைத்தது? உள்ளதை உரைக்காவிட்டால் உன்னை வதைத்துவிடுவேன்” என்றான்.
அவ்வளவில் தேவராயன் முதலிலிருந்து முடிவு வரையில் நடந்ததை நடந்தபடியே சொல்லிவிட்டான்.
அதைக் கேட்ட பாலசிங்கன், “ஐயோ கோமளம்! என் உயிரே, என்அரசியே, என் நாயகியே, ஓ கோமளம் கோமளம், உன்னை இனி எப்போது காண்பேன். நான் பாவி, யான் சண்டாளன்” என்று கதறியழுது, அரசனெதிரில் விழுந்து “படுவான், இந்தப் பாவியின் சதிவஞ்சனையால் மோசம் போனேன். எல்லப்பனுக்குக் கடிதம் எழுதிக் கற்பரசியான கோமளத்தைக் கொல்வித்தேன். நான் பாவி, இனி க்ஷணநேரமும் உயிரோடிருக்கலாகாது. என்னைக் கொலை செய்வதே தகுதி. என்னைச் சித்ரவதை செய்வதானாலும், எனக்கு ஸம்மதமே” என்று அலறினான்.
கோமளம் முண்டாசை எடுத்தெறிந்து சொக்காயைக் கழற்றிவிட்டாள். எல்லாரும் ஆநந்தக் கண்ணீர் சொரிந்தனர். கண்கெட்டவன் மீண்டும் கண் பெற்றதுபோல், பாலசிங்கன் பரவச மாகிநின்றான். அவனை அரசனும் மருகனாக அங்கீகரித்தான்.
அதுவே தக்க ஸமயமென்று, குடிசையிலிருந்து வந்த வயோதிகன், இளங்குமரர் இருவரையும் இட்டுககொண்டு அரசனெதிரில் வந்துநின்று, “மஹாராஜா, அடியேன் நெடுநாள் முன்னர்த் தங்கள் ஸேவையிலிருந்த வீரப்பன். விச்வா ஸகாதகனென்று வீணில் பழிசுமத்தி என்னை நீக்கிவிட்டீர்கள். அதனால் வஞ்சந்தீர்க்கக் கருதி எவர்க்கும் தெரியாமல் உங்கள் குமாரர்கள் இருவரையும் கொண்டுபோய்க் காட்டில்வைத்து என் பிள்ளைகள்போல் வளர்த்திருந்தேன். இவர் மூத்தபிள்ளை பாரந்தகர்: இவர் இளையபிள்ளை விக்ரமர்” என்று சொல்லி, அவர்களை அரசன் கையில் ஒப்பித்தான்.நிதியைக் கண்ட நித்யதரித்ரனைப் போல், அரசன் ஆநந்தமடைந்து, வீரப்பனைத் தழுவிக்கொண்டான்.
– அபிநவ கதைகள் (1921)
ஆஹா என்ன அருமையான கதை , சோழத்தின் வீரத்தை படித்தாலும், அன்பை படித்தாலும், அடையும், இன்பத்திற்கு ஈடு இல்லை