கப்பல் தலைவன் காதலி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: May 26, 2022
பார்வையிட்டோர்: 18,486 
 
 

(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பயங்கரமான பெரிய சப்தத்துடன் சுழற் காற்று வீச ஆரம்பித்தது. அன்று கடலுக்குக் கொம்மாளந்தான். அலைகள் மலைபோல் உயர்ந்து கரையில் திட்டுத் திட்டாக இருந்த பாறைகளின் மேல் மோத ஆரம்பித்தன. கண்ணைப் பறிக்கும் மின்னலும் காதைத் துளைக்கும் இடி முழக்கமும் மனத்திற்கு நடுக்கத்தைத் தந்தன.

இப்படிப்பட்ட இரவில் அச்சத்தைக் கொடுக்கும் இந்தக் கடற்கரைக்கு அருகிலுள்ள கற்பாறைகளுள் ஒன்றின்மேல் நின்று கடலைப் பார்த்துக்கொண்டிருக்கும் பெண்மணிக்கு என்ன மனோதைரியம் இருக்கவேண்டும்! இந்த வேளையில் நிர்மானுஷ்யமான அந்தக் கடற்கரையில் இந்தப் பெண்மணிக்கு என்ன வேலை இருக்கும்?

உண்மையில் சுந்தரிக்கு இப்போது தன் நினைவே இல்லை. இந்த இருட்டில் கடற்கரையில் தனியாக இருக்கிறோமே, புயலடிக்க ஆரம்பித்து விட்டால் என்ன செய்கிறது என்ற பயம் அவள் மனத்தில் இல்லை. அவள் கண்பார்வையும் மனமும் நடுக்கடலில் அகப்பட்டுத் தத்தளித்துக்கொண்டிருந்த கப்பலின்மேல் இருந்தன.

ஆம்; கடலில் ஒரு கப்பலின் விளக்குகள் தெரிகின்றன. காற்றில் கப்பல் இங்கும் அங்கும் அசைந்தாடுவதையும் அவ்விளக்குகள் காட்டுகின்றன. கப்பல் கவிழ்ந்தால் அதில் உள்ளவர்கள் கதி என்ன ஆகும் என்ற எண்ணமே சுந்தரியின் மனசில் நிறைந்திருந்தது. சமுத்திரத்தில் எப்படிக் கப்பல் தத்தளித்துக்கொண் டிருந்ததோ அப்படியே அவள் மனமும் தத்தளித்தது.

சுந்தரி அந்தக் கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தவள். குழந்தைப் பருவத்தில் தாயை இழந்தவள். அவள் தகப்பன் விஷ்ணுதத்தன் தன் ஒரே மகளை அருமையுடன் வளர்த்துவந்தான்.

சுந்தரிக்கு இப்போது பத்தொன்பது வயசு ஆகிறது. மின்னற்கொடி ஒன்று ஆகாயத்திலிருந்து இறங்கிப் பெண்ணுருவம் கொண்டு வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அவளது அழகிய உருவம்.

பொழுது போகாவிட்டால் சுந்தரி கடற்கரைக்குப் போய் விடுவாள். கடலின் அழகைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தால் போதும்; அவளுக்கு அன்ன ஆகாரம் வேண்டியதில்லை. அப்படி அவள் கடற்கரைக்குப் பொழுது போக்குக்காகப் போகும் நாட்களில் ஒரு தினந்தான் முன் சொன்னபடி புயற்காற்று அடிக்க ஆரம்பித்தது.

துடிக்கின்ற மனத்துடன் சுந்தரி கப்பலையே பார்த்துக்கொண்டிருந்தாள். திடீரென்று கண்ணைப் பறிக்கும் மின்னல் ஒன்று தோன்றிற்று; இடி இடித்தது; தடதட என்று மழை கொட்டத் தொடங்கிற்று. மறுநிமிஷம் கடலில் கப்பலைக் காணவில்லை.

சுந்தரி திடுக்கிட்டு எழுந்தாள். சிறிது நேரம் கப்பல் இருந்த இடத்தையே பார்த்துக்கொண்டிருந்து விட்டு, “ஐயையோ, முழுகிவிட்டது!” என்று தனக்குள் சொல்லிக்கொண்டு ஊரை நோக்கி ஓடினாள்.

சிறிது நேரத்தில் கிராம ஜனங்கள், கையில் விளக்குகளையும் பனை ஓலைக் குடைகளையும் பிடித்துக் கொண்டு கடற்கரையில் கூடிவிட்டார்கள். தெய்வச் செயலாய்க் கரையேறுகிறவர்களைக் காப்பாற்றலாம் என்பதே அவர்கள் நோக்கம். வெகு நேரம் வரையில் அவர்கள் முயற்சி பயனளிக்கவில்லை. இந்தப் புயற் காற்றில் சமுத்திரத்தில் அகப்பட்டுக்கொண்ட எவன் தப்பி உயிருடன் கரையேறப் போகிறான்?

குளிரினால் உடல் நடுங்க, ஜலம் சொட்டச் சொட்ட, சுந்தரி ஒரு கற்பாறையின்மேல் நின்று கொண்டிருந்தாள். ஒரு பெரிய அலை “ஹோ” என்ற சத்தத்துடன் புரண்டு வந்து அவள் பாதங்களை நனைத்துவிட்டுத் திரும்பிச் செல்ல ஆரம்பித்தது. சட்டென்று கீழே பார்த்த சுந்தரியின் கண்களுக்கு ஒரு வெள்ளை உருவம் தெரிந்தது. மனம் பதைபதைக்கக் கீழே குனிந்து கையை நீட்டி அதைப் பிடித்துக் கொண்டாள். அந்த உருவமும் அலையுடன் திரும்பிப் போகாமல் நின்றது. சுந்தரி, “ஓடி வாருங்கள்! காப்பாற்றுங்கள்!” என்று தன்னையும் அறியாமல் கூவினாள். பிரம்மாண்டமான அலையொன்று அவளை நோக்கி வந்துகொண்டிருந்தது. வாய் விட்டுக் கத்தவும் அவளுக்குச் சக்தியில்லை.

“சுந்தரி ! சுந்தரி!” என்று கத்திக்கொண்டு அவள் தந்தையும் இன்னும் சிலரும் ஓடி வருவதை அறிந்தாள். அதற்குமேல் என்ன நடந்ததென்று அவளுக்குத் தெரியாது.

2

மறுநாள் காலை எட்டு மணி இருக்கும். கிராம சபைத் தலைவர் திருச்சிற்றம்பலனார் கையில் கம்பை ஊன்றிக்கொண்டு மெள்ள நடந்து வைத்தியர் தணிகாசலம் வீட்டை அடைந்தார்.

வைத்தியர் வரவேற்கத் திருச்சிற்றம்பலனார் இருமிக்கொண்டே சுந்தரியால் கடலிலிருந்து காப்பாற்றப்பட்ட இளைஞனைப்பற்றி விசாரித்தார். ஏனென்றால் அவனை வைத்தியர் வீட்டில் தான் விட்டிருந்தார்கள். இருவரும் உள்ளே சென்றார்கள்.

வந்தவர்களைக் கண்டதும் படுத்துக்கொண்டிருந்த அவ்விளைஞன் எழுந்து உட்கார்ந்தான். அவனைப்போல் அழகும், திடகாத்திரமான தேகமும் உடைய இளைஞனைப் பார்த்ததில்லை என்று தமக்குள் சொல்லிக்கொண்டு திருச்சிற்றம்பலனார், “உன் பெயர் என்ன, அப்பா?” என்று கேட்டார்.

“மஹேந்திரன்” என்று பதில் கிடைத்தது. “முழுகிப்போனது எந்தக் கப்பல்?”

“அரசருக்குச் சொந்தமான ‘கரிகாலன்’ என்ற கப்பல்; அரசருடைய கப்பற் படையைச் சேர்ந்தது. இலங்கைத் தீவை அரசர் வென்றுவிட்டார். நான் முழுகிப்போன கப்பலின் தலைவன். நாங்கள் மட்டுமே முதலில் புறப்பட்டு வந்தோம். மற்றக் கப்பல்கள் நல்ல காலமாகத் தப்பித்துக் கொண்டன. அவை இப்பொழுதுதான் இலங்கையை விட்டுப் புறப்பட்டிருக்கும். என்னைப்போல் பிழைத்தவர்கள் எத்தனை பேர்?”

“நீ ஒருவன் தான் பிழைத்தாய்.”

“அடடா! நாங்கள் மொத்தம் தொண்ணூறு பேர் இருந்தோமே; எல்லாருமா போய்விட்டார்கள்?” என்று வருத்தத்துடன் கூறிவிட்டு மஹேந்திரன், “நான் எப்படி உங்களுக்கு நன்றி செலுத்தப் போகிறேன்?” என்றான்.

“எங்களுக்கு நீ நன்றி செலுத்த வேண்டிய நியாயமே இல்லை. ஆண்பிள்ளைகள் அத்தனை பேரும் பேந்தப் பேந்த விழித்துக்கொண்டிருந்தபோது உன்னை ஒரு பெண் காப்பாற்றினாள். அவள் பிராணன் கூடப் பாதி போய்விட்டது. அவளைப் போய்ப் பார்க்கவேண்டும்” என்று திருச்சிற்றம் பலனார் எழுந்தார்.

“அப்படியா! ஒரு பெண்பிள்ளையா என்னைக் காப்பாற்றினாள்?” என்று மஹேந்திரன் ஆச்சரியப்பட்டுவிட்டு, திருச்சிற்றம்பலனாரைப் பார்த்து,

“இலங்கையை வென்றபின அரசர் எனக்கு வைரங்கள் பதித்த பதக்கம் ஒன்று பரிசளித்தார். அதை ஒரு தங்கச் சங்கிலியில் கோத்துக் கழுத்தில் அணிந்திருந்தேன். கப்பல் கவிழ்ந்தபோதுகூட அது என் கழுத்திலே தான் இருந்தது. சங்கிலியிலிருந்த திருகைக் கழற்றினாலொழிய அதைக் கழுத்திலிருந்து அகற்ற முடியாது. அது எங்கேயோ போய்விட்டது. யார் கையிலாவது அகப்பட்டதா?” என்று கேட்டான்.

திருச்சிற்றம்பலனார் தமக்கு ஒன்றும் தெரியாதென்றும், விசாரித்துப் பார்ப்பதாகவும் கூறிவிட்டு வெளியே சென்றார்.

‘அந்தப் பெண்ணை விசாரித்தால் அகப்பட்டு விடும்’ என்று மஹேந்திரனுக்குத் தோன்றிற்று.

ஆனால் வெளியே சொல்லவில்லை.

மறுநாள் சாயங்காலம் உடம்பு சற்றுக் குணமானபின் மஹேந்திரன், வைத்தியர் தணிகாசலத்துடன் வெளியே காற்று வாங்குவதற்காகப் புறப்பட்டான்.

“என்னைக் காப்பாற்றின பெண்மணியைப் பார்க்க வேண்டும்” என்று வைத்தியரிடம் வீட்டை விட்டுப் புறப்படும்போதே கூறினான்.

“அதற்கென்ன, பார்த்தால் போகிறது” என்று சொல்லிவிட்டுத் தணிகாசலம் அவனைச் சுந்தரி வீட்டுப்பக்கம் அழைத்துச் சென்றார்.

சுந்தரி வீட்டில் இல்லை. “சரி, நாளைக்குப் பார்த்துக் கொள்வோம்” என்று இருவரும் கடற்கரைப் பக்கம் சென்றார்கள்.

கடற்கரையில் ஒரு பாறையின் மேல் உட்கார்ந்து கொண்டு கடலைப் பார்த்துக்கொண்டிருந்த ஓர் உருவம் மஹேந்திரன் கண்களைக் கவர்ந்தது. அவள் அழகு அவனைப் பிரமிக்கச் செய்தது. மஹேந்திரன் எதை அவ்வளவு ஆவலுடன் பார்க்கிறான் என்று அவன் பார்வை சென்ற இடத்தை நோக்கிய வைத்தியரும் திடுக்கிட்டு, “ஆ, அதோ இருக்கிறாளே சுந்தரி!” என்று சொல்லிவிட்டு மஹேந்திரனிடம், “இவள் தான் உன்னைக் காப்பாற்றியவள்” என்று கூறினார்.

மஹேந்திரன் மனசில் ஆச்சரியமும் சந்தோஷமும் எழுந்தன.

சுந்தரி இவர்களைக் கண்டதும் எழுந்து நின்றாள். “ஏனம்மா, சுந்தரி, சௌக்கியமா? நீ கடலிலிருந்து காப்பாற்றினாயே அவர்தாம் இவர்!” என்று தணிகாசலம் அவனை அறிமுகம் செய்வித்தார். மஹேந்திரனுக்கு என்ன பேசுவது என்று முதலில் தெரியவில்லை.

“உன் உயிரையும் பொருட்படுத்தாமல் என்னைக் காப்பாற்றினாயாமே! உனக்கு நான் எப்படி என் நன்றியறிதலைக் காட்டப் போகிறேன்?” என்று சமாளித்துக்கொண்டு கூறினான்.

சுந்தரி வெட்கத்துடன் நின்றாள். அவளுக்கு ஒன்றும் பேசத் தெரியவில்லை.

மஹேந்திரன் மறுபடியும், “ஏனம்மா, நீ என்னைக் கடலிலிருந்து எடுத்தபோது என் கழுத்திலிருந்த சங்கிலியையும் வைரப்பதக்கத்தையும் பார்த்தாயா?” என்று கேட்டான்.

சுந்தரிக்குத் தூக்கி வாரிப்போட்டது. “என் பதக்கத்தை நீதான் எடுத்துக் கொண்டாய்” என்று அவன் தன்மேல் குற்றம் சாட்டுவது போல் இருந்தது.

“வைரப் பதக்கமா? சங்கிலியா? எனக்கு நினைவில்லையே! நான் ஒரு பாவத்தையும் அறியேனே?” என்று தலையை அசைத்தாள்.

3

மறுநாள் காலையில் மஹேந்திரன் சுந்தரியின் வீட்டை அடைந்தான். அவனால் அவளைப்பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. எவ்வளவு முயன்றாலும் சுந்தரியின் உருவம் அவன் மனக் கண்முன் இருந்து போகமாட்டேன் என்றது.

வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண் டிருந்த சுந்தரி இவனைப் பார்த்ததும் பயந்து போனாள். இருந்தாலும் அவளையும் அறியாமல் அவள் மனம் ஒருவிதச் சந்தோஷத்தை அடைந்தது.

“நான் நாளைக்கு ஊருக்குப் புறப்படப்போகிறேன்” என்றான் மஹேந்திரன். ‘நாம் ஊருக்குப் போனால் இவளுக்கு என்ன வந்தது?’ என்று அவன் நினைக்கவில்லை.

“இதற்குள் போகிறீர்களே!”

“ஆமாம், வேலை இருக்கிறது; என்ன செய்கிறது? உங்களையெல்லாம் விட்டுப் போகவேண்டுமே என்று இருக்கிறது…”

சுந்தரி ஒன்றும் பேசவில்லை. அதனால் துணிந்து, “…..அதிலும் உன்னை விட்டுப் போக வேண்டுமே!” என்று முடித்தான்.

சுந்தரி ஒருமுறை அவனை உற்றுப் பார்த்து விட்டுத் தலையைத் திருப்பிக்கொண்டாள். ஆனால் அந்தப் பார்வை ஒன்றே மஹேந்திரனுக்குப் போது மானதாக இருந்தது. சுந்தரி அன்று முழுவதும் அவனுடன் பேசியிருந்தாலும் அவனுக்கு அவ்வளவு திருப்தி ஏற்பட்டிருக்காது.

“சுந்தரி! சுந்தரி!! நான் எங்கே போனாலும் உன்னை மட்டும் மறக்க மாட்டேன்” என்று தன் காதலை வெளியிட்டான். சுந்தரியும் அவன் கருத்தை அறிந்து கொண்டாள். அவள் கண்களில் நீர் நிறைந்தது. எங்கே மஹேந்திரன் பார்த்துவிடுவானோ என்று தலையைக் குனிந்துகொண்டாள்.

மஹேந்திரன் ஆத்திரத்துடன், “சுந்தரி, வாய் திறந்து ஒரு வார்த்தையும் பேசமாட்டாயா?” என்றான்.

“உங்கள் – பதக்கத்தை – நான் – எடுக்கவில்லை” என்று நாக் குழறக் கூறினாள் சுந்தரி.

மஹேந்திரன அவளருகில் நெருங்கினான். “நான் உன்னைச் சந்தேகிக்கவில்லை. முதலில் சந்தேகித்தது உண்மைதான். என்னை மன்னித்து விடு. நான் போய் வருகிறேன். சீக்கிரம் திரும்பி வருவேன்” என்று காதல் நிறைந்த கண்களுடன் கூறினான்.

4

அவன் திரும்பி வருவதற்குள் சுந்தரியின் வீடு பாழடைந்ததுபோல் ஆகிவிட்டது. விஷ்ணுதத்தன் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறான்.

விஷ்ணுதத்தனுக்கு வயசாகி விட்டது. அவன் தலைவலி, கால்வலி என்று இதுவரையில் கீழே படுத்ததில்லை. இப்போது திடீரென்று கடுமையான நோய் வந்ததும் இனிப் பிழைக்க மாட்டோம் என்று தெரிந்துகொண்டான். தாயற்ற தன் மகள், தானும் போனபின் என்ன கதியாவாள் என்ற கவலை அவன் வியாதியை அதிகப்படுத்திவிட்டது.

சாகும் தறுவாயில் தன் மகளைப் பக்கத்தில் கூப்பிட்டான். அவள் வந்ததும், “சுந்தரி, என் கண்ணே, நான் உன்னைத் தன்னந்தனியாக விட்டுப் போகிறேனே!” என்று அழுதுவிட்டு, “நான் உனக்குப் பணம் காசு ஒன்றும் வைக்கவில்லை. ஒரு விலை உயர்ந்த வஸ்து மட்டும் வைத்திருக்கிறேன். அதோ பார், அந்த மூலையில் தரையைத் தோண்டிப் பார்த்தால் அகப்படும். அதை எங்காவது கொண்டுபோய் விற்றுப் பணமாக்கிக்கொள். அது உனக்கு எப்படிக் கிடைத்தது என்பதை மட்டும் ஒருவருக்கும் சொல்லாதே” என்று கூறிக் கண்களை மூடிக்கொண்டான். பிறகு திறக்கவே இல்லை.

தந்தைக்குச் செய்யவேண்டிய சடங்குகளையெல்லாம் சுந்தரி செய்தாள். பிறகு தன் தகப்பன் இறக்கும் தறுவாயில் கூறிய வார்த்தைகள் நினைவிற்கு வந்தன; கதவை மூடிக்கொண்டு விஷ்ணுதத்தன் குறிப்பிட்ட இடத்தில் தோண்டிப் பார்த்தாள். ஒரு கலயம் அகப்பட்டது; அதன் வாயைச் சுற்றிக் கட்டியிருந்த துணியை எடுத்துவிட்டுக் கலயத்துக்குள் கையைவிட்டு அதில் இருந்ததை எடுத்தாள். பாம்பு,
தேள் – ஏதாவது இருந்திருந்தால்கூடச் சுந்தரி அவ்வளவு பயந்து போயிருக்கமாட்டாள். அதற்குள்ளிருந்து வெளியே வந்த தங்கச் சங்கிலியும் வைரப் பதக்கமும் அவள் உயிரையே வாட்டிவிட்டன! வாய் விட்டுப் புலம்பினாள்; தலைமயிரைப் பிய்த்துக் கொண்டாள்.

மறுநாள் விடியற்காலையில் சூரியன் உதிக்குமுன் சுந்தரி தன் ஊரை விட்டுத் தலைநகரை நோக்கிப் பயணமானாள். மஹேந்திரனிடம் அவன் நகைகளைச் சேர்க்காத வரையில் அவள் மனசிற்கு நிம்மதி ஏது?

5

“ஹா, சுந்தரியா?” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு மஹேந்திரன் சுந்தரியை வரவேற்றான். விசாலமான அறைகளையும் அலங்காரங்களையும் பார்த்துச் சுந்தரி மயங்கி நின்றாள். மஹேந்திரன் வீடு பெரிய அரண்மனை போல் காணப்பட்டது; மஹேந்திரன், அவள் இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டு மூச்சு விடாமல் பேசினான்; “ஆ, என் கண்ணே, என்னைத் தேடிக்கொண்டு வந்துவிட்டாயா? உன் தந்தை சௌக்கியமா?”

சுந்தரி தன் தந்தை இறந்து விட்டதைக் கூறினாள். மஹேந்திரனும் துக்கித்தான்.

“உங்கள் நகைகள் அகப்பட்டுவிட்டன!” என்று சுந்தரி கூறினாள்.

“அகப்பட்டுவிட்டனவா? யார் எடுத்து வைத்திருந்தது? எப்போது அகப்பட்டன?”

“சொன்னால் எடுத்தவரை மன்னிப்பீர்களா?”

“சுந்தரி, அரசன் கொடுத்த பதக்கத்தைத் திருடினது சாதாரணக் குற்றமல்ல. இருந்தாலும் உனக்காக மன்னித்துவிடுகிறேன். யார் செய்த வேலை இது?”

அவன் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் சுந்தரியின் மார்பில் ஓர் ஈட்டிபோல் பாய்ந்தது. என்ன பதில் சொல்வது? தன் தந்தையைக் காட்டிக் கொடுப்பதா? சாகும் தறுவாயில் அவர் கூறிய வார்த்தைகள் நினைவிற்கு வந்தன. குற்றமற்ற யார் மேலாவது பழி போடலாமா? சே, பாவம்! மகா பாவம்! கடைசியில் விம்மி விம்மி அழுதுகொண்டு, “நான் தான் திருடினவள். என்னை மன்னிக்க வேண்டாம். தண்டியுங்கள்” என்றாள்.

மஹேந்திரன் திடுக்கிட்டு எழுந்து நின்றான். பிறகு தன் காலடியில் உட்கார்ந்து அழும் பெண்மணியைத் தூக்கி நிறுத்தினான்.

“சுந்தரி, என் கண்ணே! ஏன் வருந்துகிறாய்? நான் தான் அப்போதே உன்னை மன்னித்துவிட்டேனே! என் உயிரையே காப்பாற்றின நீ, என் நகைகளை எடுத்துக் கொண்டதற்காகக் கோபிப்பேனா? வருந்தாதே; இதென்ன அசட்டுத்தனம்?” என்று தேற்றினான்.

அப்போது, “எஜமான்!” என்று வணக்கத்துடன் கூப்பிட்டுக்கொண்டே அரண்மனைச் சேவகன் உள்ளே வந்தான்.

“என்ன விசேஷம்?” என்றான் மஹேந்திரன்.

“அரசரிடமிருந்து உத்தரவு வந்திருக்கிறது. லக்ஷத்தீவுகளைப் பிடிப்பதற்காகப் படை திரட்ட வேண்டுமாம். தங்களைக் கையோடு அழைத்து வர வேண்டுமென்று உத்தரவு” என்று கூறிவிட்டுச் சேவகன் வெளியே போனான். அவன் வெளியே போனவுடன் கதவைத் திறந்துகொண்டு அழகுள்ள ஒரு யௌவன மங்கை உள்ளே வந்தாள். அவளைக் கண்டதும் மஹேந்திரன், “கமலினி, நான் லக்ஷத்தீவுகளுக்குப் போகவேண்டும். இதோ உனக்கு ஒரு சகோதரி வந்திருக்கிறாள். நான் வரும் வரையில் அவளை நீதான் சரியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். எங்கே, அவளுக்கு ஓர் அறை தயார் செய் பார்ப்போம்”என்றான். கமலினி சுந்தரியைப் பார்த்துப் புன்னகை செய்துவிட்டு வெளியே போனாள்.

“நான் போய் வருகிறேன். உத்தரவு கொடு” என்று மஹேந்திரன் சுந்தரியைக் கேட்டான்.

“போய் வெற்றியுடன் திரும்பி வாருங்கள்” என்றாள் சுந்தரி,

மஹேந்திரன் உடைவாளை எடுத்து இடுப்பில் செருகிக்கொண்டு அரண்மனைக்குப் புறப்பட்டான்.

6

சுந்தரி தனியாக உட்கார்ந்துகொண்டிருக்கையில் ஒரு தோழி உள்ளே ஏதோ வேலையாக வந்தாள். சுந்தரி அவளக் கூப்பிட்டாள்.

“இங்கே கமலினி என்று ஓர் அம்மாள் இருக்கிறாளே, அவள் யார்?”

“அவர்கள் தாம் எஜமானியம்மாள்!” என்று கூறி விட்டுத் தோழி போய்விட்டாள். சுந்தரி இடிவிழுந்தவள் போலானாள்.

“அவர் எஜமானர்! அவள் எஜமானியம்மாள்! ஓ, ஈசா! இதென்ன உலகம்! கல்யாணமானவர் இப்படி என்னை வஞ்சித்தாரே! இதுவும் உன் சம்மதமோ!” என்று அவள் மனம் புழுவாகத் துடித்தது.

கமலினி மறுபடியும் சுந்தரி இருந்த இடத்திற்கு வந்தபோது அங்கே சுந்தரி காணப்படவில்லை.

தோழிகளை விசாரித்தாள். ஒருவராலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவர்களுக்குத் தெரிந்தால் தானே?

நான்கு மாசங்கள் ஆகிவிட்டன. ராஜராஜ சோழன் வெற்றியுடன் லக்ஷத் தீவுகளிலிருந்து திரும்பிவந்தான். அவனுடன் மஹேந்திரனும் வந்து சேர்ந்தான்.

மஹேந்திரன் வீட்டுக்கு வந்தவுடன் கமலினி வருத்தம் நிறைந்த முகத்துடன் அவனை வரவேற்றாள். மஹேந்திரன் முதல் முதலாகக் கேட்ட கேள்வி சுந்தரியைப் பற்றியதே.

“சுந்தரி எங்கே ?”

“ஐயோ, அண்ணா! அதை என்னவென்று சொல்லுவேன்! நீ போனவுடன் மறுபடியும் வந்து பார்த்தேன். அவளைக் காணவில்லை. திரும்பி வரவே இல்லை” என்றாள் கமலினி.

“நான் இல்லாத இடத்தில் தனக்கு மட்டும் என்ன வேலை என்று எங்கேயாவது போயிருப்பாள். நான் வந்து விட்டேனென்று தெரிந்தால் உடனே வந்து விடுவாள். ‘ஆ, சுந்தரி! வருவாயல்லவா?'” என்று மஹேந்திரன் ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு கூறினான். ஆனால் அவன் மனசில் மட்டும் நம்பிக்கை இல்லை.

“ஆம்; மதனி திரும்பி வருவாள். இன்றைக்கு வராவிட்டால் என்றைக்காவது வருவாள்” என்றாள் கடலினி.

அவள் மனசில் துக்கம் நிறைந்திருந்தது. கண்களிலிருந்து முத்துப்போல் இரண்டு நீர்த்துளிகள் சிந்தின.

– காளியின் கண்கள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1943, கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *