எப்படிப் போவாள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: February 27, 2022
பார்வையிட்டோர்: 5,591 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பிறர் அறியாமல் அன்பு செய்த காதலனும் காதலி யும் மணம் செய்து கொள்ளலாம் என்று எண்ணினார்கள். காதலன் பரிசம் போட்டுக் கல்யாணம் செய்வதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்யத் தொடங்கினான். ஆனால் காதலியின் தாய் தந்தையருக்கு அவளை வேறு யாருக்கோ மணம் செய்து கொடுக்க வேண்டுமென்ற விருப்பம் இருந்தது. காதலியின் உயிர்த்தோழி இதை உணர்ந்தாள் குறிப்பாகத் தலைவிக்கு இன்ன தலைவன் மேல் அன்பு அமைந்திருக்கிறது என்பதைப் புலப்படுத்தினாள். அவர் கள் அந்தக் குறிப்பை உணரவே இல்லை.

ஒரு தலைவனிடத்தில் தன் நெஞ்சைப் பறிகொடுத்த தலைவி வேறு ஒருவனை மனத்தாலும் நினைப்பாளா? கற்பிலே சிறந்து நிற்பவள் அவள். ஆகவே காதலர் இருவரும் என்ன செய்யலாம் என்று ஆராய்ந்தார்கள் . உயிரைவிட நாணம் சிறந்தது. அதைவிடக் கற்புச் சிறந்தது. ஊரார் பழி கூற, தன் நாணம் அழிய தலை வனோடு புறப்பட்டு விடுவதென்று தலைவி தீர்மானித்தாள். தலைவன் சொன்னது தான் அது. அதற்கு அவள் இணங் கினாள்; அவள் தோழியும் இணங்கினாள்.

குறிப்பிட்ட நாளில் தலைவன் தலைவியை அழைத்துக் கொண்டு போய்விட்டான். அவள் போன பிறகுதான தம்முடைய அறியாமையை நினைந்து வீட்டில் உள்ள வர்கள் வருந்தினார்கள். தலைவியைப் பெற்ற நற்றாய் நைந்தாள்; அவளை ஊட்டியும் சீராட்டியும் தாலாட்டியும் வளர்த்த செவிலித் தாயும் புலம்பினாள். வீடே அலமந்து நின்றது. தலைவியின் இளமையையும், மெல்லிய இயல்பையும் ஒருத்தி சொல்லி வருந்தினாள். அவள் பேதைமையை யும் வெள்ளை உள்ளத்தையும் ஒருத்தி சொல்லி அரற்றினாள்.

அது நல்ல வேனிற்காலம். குறிஞ்கி நிலத்தில் இருந் தது அவர்களுடைய ஊர். அழகான மலைப் பக்கம். அவர் கள் ஊரை அடுத்து நெடுந் தூரத்துக்கு அப்பால் குறிஞ்சி நிலமாக இருந்த பகுதி இப்போது பாலை நிலமாகி விட்டது. நல்ல மழை பொழிகிற வரைக்கும் அங்கே வெப்பம் தாங்க முடியாது. காடும் காட்டைச் சார்ந்த இடமும் முல்லை என்று சொல்வார்கள். மலையும் மலையைச் சார்ந்த இடமும் குறிஞ்சி நிலம் ஆகும். வேனிற் காலத் தில் அதிக வெப்பத்தில் முல்லை நிலத்தில் சில பகுதியும் குறிஞ்சி நிலத்திற் சில பகுதியும் தம்முடைய வளப்பத்தை இழந்து நிற்கும்; பாலை நிலமாக மாறும். தமிழ் நாட்டில் இயற்கைப் பாலைவனம் இல்லை. வேனிலின் கொடுமையால் சிலகாலம் பசுமை இழந்து வளமிழந்து நிற்கும் இடங்கள் மாத்திரம் உண்டு. சில காலங்களில் மாத்திரம் பாலை நிலம் உண்டாவதால் தமிழ் நாட்டில் நிரந்தரமாக அதற்கு இடம் இல்லை. குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம் நெய்தல் என்று ஐந்து வகை நிலங்கள் இருந்தாலும், இயற்கையில் பாலை அமையாமையால் பூமியை நானிலம் என்று சொல் வார்கள். நான்கு வகைப்பட்ட நிலம் என்ற பொருளில் அவ்வாறு சொல்வது வழக்கம். பாலை நிலமும் இயற்கை யாக இருந்தால் ஐந்நிலம் என்று சொல்லலாம். அது இல் லாமையால் நானிலம் என்று சொல்வது தான் பொருத்த மானது.

குறிஞ்சி நிலம் வேனிற்காலத்தில் பாலையாக மாறி நின்றால் முன்பு அங்கே வாழ்ந்திருந்த விலங்குகள் தம் திறமெல்லாம் குறைந்து நிற்கும். குறிஞ்சி திரிந்த பாலை நிலம் மேலே சொன்ன காதலர் இருவரும் போகும் வழியில் இருந்தது. அதைக் கடந்து தான் அவர்கள் போக வேண்டும்.

இந்த விஷயத்தைத் தலைவியின் தாய் நினைத்துப் பார்த்தாள். அந்தச் சிறிய பெண், நேற்றுப் பிறந்த பெண், கொடி போலத் துவளும் பெண் அவ்வளவு கடுமை யான பாலை நிலத்தின் வழியாக எப்படிப் போவாள்!’ என்ற நினைவு தாய்க்கு உண்டாயிற்று. பாவம்! ‘நம் மகள் பெண் ; ஆண்மையின் துணையை அவாவும் பருவம் அவளுக்கு உண்டு என்பதை அவள் தாய் மறந்துவிட்டாள். எத்தனை காலமானாலும் அவள் குழந்தையாக , தன் கண் காணிப்பில் வளரும் கன்றாகவே இருப்பாள் என்பது அவள் எண்ணம், என்ன பேதைமை!

அந்தத் தாய் பாலை நிலத்தின் கொடுமைகளை நாலு பேர் சொல்லக் கேட்டிருக்கிறாள். அவற்றையெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கிறாள். அவள் வயிறு பகீரென்கிறது. தன் மகளின் இயல்பை நினைக்கிறாள். ”உலகம் அறியாத பெண் ஆயிற்றே! அவளா இப்படித் துணிந்து போனாள்? “அம்மா! அம்மா!’ என்று அறுபது நாழிகையும் ஒட்டிக் கொண்டு வாழ்கிறவள், ஒன்றும் அறி யாத பெண் – அவளா பிரிந்து போனாள்? நம்பத் தக்கதாக இல்லையே! ஆனால் அந்தப் பெண் பிரிந்து போனது என்னவோ உண்மைதான்.

பாலை நிலத்தில் அவள் போவதாகக் கற்பனை செய்து பார்க்கக்கூடத் தாய் நடுங்கினாள். வேனிற்காலம் மற்ற இடங்களிலெல்லாம் வரும்; சில காலம் இருக்கும்; போய் விடும். பாலை நிலத்தில் ஆண்டு முழுவதுமே வேனிற் காலமாகத்தான் இருக்கும் போல் தோன்றுகிறது. பல இடங்களுக்குப் போய் அங்கங்கே உள்ள மக்களைப் பார்க் கும் அரசன் நிலையாக இராசதானி நகரத்திலே இருப் பான். அப்படி இந்த வேனில் என்ற அரசனுக்கு இராசதானியே பாலை நிலந்தானோ? அங்கே வேனில் நிலை யாக நிற்குமென்று சொல்கிறார்களே. அப்படி நின்ற வேனிலில் என்ன வளப்பம் இருக்கும்? முன்பு இருந்த புல்
பூண்டுகளெல்லாம் எரிந்து மயானம் போல அல்லவா ஆகிவிடும்? குறிஞ்சி நிலப் பகுதியாக இருந்த இடம் அது அப்போதெல்லாம் காந்தள் படர்ந்து குலைகுலையாகப் பூத்திருக்கும். நிலையாக நின்ற வேனிற் காலத்தில் காந்தள் வளர்வதாவது! அது காய்ந்து போயிருக்குமே! தழைத்த காந்தளைக் காண அங்கே வழியில்லை; உலர்ந்த காந்தளைக் காணலாம்.

காந்தள் உலர்ந்தது; மரங்கள் வாடிக் கருகின; கதிரவன் அழலையே வாரிச் சொரிகிறான். அங்கே நிற்க நிழல் ஏது? எங்கே பார்த்தாலும் நெருப்புப் போலத் தகிக்கிறது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் நீண்ட இடம் முழுவதும் அழல் பரவியிருக்கிறது. இந்த அழல் அவிர்கின்ற நீள் இடையிலே மனிதன் தங்க நிழல் கிடைக் காது என்பது கிடக்கட்டும். மலைச்சாரலிலும் அதை யடுத்த காடுகளிலும் வாழ்ந்திருந்த விலங்குகள் அங்கே இப்போது எப்படி வாழ்கின்றன?

பாலை நிலத்தைப் பற்றிக் கதை கதையாகப் போய் வந்தவர்களெல்லாம் சொல்லிக் கேட்டவள் அன்னை. ஆகவே அவர்கள் கூறிய செய்திகளெல்லாம் இப்போது நினைவுக்கு வருகின்றன. நேரே பாலை நிலத்துக்குப் போய்ப் பாராவிட்டாலும், காதினாலே கேட்ட செய்தி களெல்லாம் இப்போது அவளுடைய அகக் கண்ணிலே ஒரு பெரிய பாலை நிலத்தைப் படைத்து நிறுத்தின.

பாலை நிலத்தில் வேனில் நிலையாக நிற்கிறது. காந்தள் உலர்ந்து போயின. எங்கே பார்த்தாலும் அழலே அவிர் கின்ற நீண்ட இடம் அது. வளம் இருந்த காலத்தில் விலங்கினங்கள் பல வாழ்ந்திருந்தன. அவற்றில் பல இப் போது மங்கி மடிந்தன. வேனிலின் கொடுமைதான் காரணம். சில சில, உடம்பில் உயிரைத் தாங்கிக்கொண்டு பிழைத்திருக்கின்றன.

இரண்டு புலிகள் : ஒன்று பெண்; ஒன்று ஆண்; நல்ல காலத்தில் அந்த இடத்தில் இன்புற்று வாழ்ந்தவை அவை. பாலை நிலமான பிறகும் அவை அங்கேயே இருக்கின்றன. பிற வளப்பங்கள் இல்லாமற் போனாலும் ஆணும் பெண்ணும் உறவு செய்யும் அன்புக்கு இன்னும் பஞ்சமில்லை. பெண் புலி இப்போது கருவுற்றிருக்கிறது. அதனுடைய வயிற்றிலே குட்டிகள் வளர்ந்தன. சுருவுயிர்க்கும் காலம் வந்தது. இயற்கை தன் வேலையை யாருக் காக நிறுத்தப் போகிறது? குட்டிகளைப் பெண் புலி ஈன்றுவிட்டது. குட்டிகளைக் காவல் காத்துக் கொண்டு நின்றது. அதன் குட்டிகளுக்கும் அதற்கும் இரை வேண்டுமே! இரையைத் தேடி நல்ல இடத்துக்குப் போகலாமென்றால் அதனால் முடியவில்லை. ஆண் புலி அருகில் இருந்தது கொஞ்ச தூரம் புலிகளும் குட்டிகளும் சென்றன பெண்புலிக்குக் காலோ சோர்கிறது. கால் மடிந்த அந்தப் பெண் புலி தங்குவதற்கு நிழலே இல்லை. நிழலான இடம் பெறாமல், கால் மடிந்து வாடிய பெண் புலிக்கு, ஈன்று நின்ற பிணவுப் புலிக்கு, பசி மிகுதியாகி விட்டது. பசியினால் வேதனையுற்றுத் துள்ளியது அதைப் பார்க்கச் சகிக்கவில்லை ஆண் புலிக்கு. எப்படியாவது அதற்கு இரையைத் தேடி அளித்துவிட்டுத்தான் வேறு காரியம் பார்ப்பது என்ற முடிவுக்கு வந்தது ஆண்.

அதற்கு அங்கே என்ன இரை கிடைக்கப் போகிறது? மானா , மரையா? நரிகூட இல்லாமல் உயிரற்ற நிலப்பரப் பாக அல்லவா ஆகிவிட்டது அது? பகலின் வெம்மை சிறிது அகன்றது. மாலை மெல்லத் தலையை நீட்டியது. பெண் புலிக்குப் பசித்தழல் அதிகமாகிவிட்டது. புறத்தே உள்ள அழல் குறைந்தது; ஆனால் அதன் வயிற்றிலே பசி யழல் மூண்டு கொழுந்துவிட்டது. இப்போது இருட்டி விட்டது; பொருள்கள் புலப்படாமல் மயக்கத்தை உண் டாக்கும் மாலை வந்தது. ஆண் புலி இரை தேடப் புறப் பட்டது. யாராவது அந்தப் பக்கத்தில் உள்ள கரடுமுரடான வழியிலே சொல்வார்களென்று எண்ணி அந்த நெறிக்கு அருகே பதுங்கியிருந்தது. வெயிலின் கொடுமை தாங்கா மல் எங்கேனும் தங்கிவிட்டு வெயில் தாழ்ந்தவுடன் நடக் கத் தொடங்கிய பிரயாணிகள் அந்த நேரத்தில் அங்கே வரவுங் கூடும். யாராவது அப்படி அவ்வழியே வந்தால் அவர்களை அடித்துப் பசி கூர்ந்த பெண் புலிக்கு அளிக்க லாம் என்று ஆண்புலி பதுங்கியிருந்தது.

அந்த வழி குறுகிய சிறு நெறி; யாரோ சிலபேர் நடந்து சுவடுபட்ட ஒற்றையடிப் பாதை. அதை வழியென்று சொல்வதே தவறு. சோலையோ சாலையோ ஒன்றும் இல் லாத அந்தச் சுடுகாட்டில் எப்போதோ என்றோ ஒருவர் இருவர் போவார்கள். அவர்கள் அடிச்சுவடுபட்டுத் தட மான வழி அது; பொலிவற்ற புன்மையான அதர்; சிறிய நெறி. அந்த வழிக்கு அருகில் தான் புலி பதுங்கியிருந்தது.

தாயின் உள்ளத்தே நின்ற பாலையின் கோலம் இது. ‘புலி வழங்குவோரைச் செகுக்கும் பொருட்டுப் பார்த்து உறையும் சிறு நெறியிலே இந்தப் பெண் எப்படிப் போ வாள்! அதற்கு ஏற்ற மன வன்மையும் உடம்பு வன்மையும் அவளுக்கு ஏது?’ என்று நினைக்கும்போதே அவள் தலை சுழன்றது.

ஒரு நாள் நடந்த நிகழ்ச்சி அப்போது தாய்க்கு நினைவுக்கு வந்தது. தலைவி எப்போதும் தாயின் பக்கத் திலே படுத்துத் துயில்பவள்; அவளுடைய அணைப்பிலே பயமின்றித் துயில்பவள். அன்று அவளை இறுக்கிக் கட்டிக் கொண்டு படுத்திருந்தாள் தாய். அப்போது தன் கையைக் கொஞ்சம் தளர்த்தினாள், தலைவி பருவம் வந்த பெண் அல் லவா? அவள் நகில்கள் பருத்திருந்தன; உயர்ந்திருந்தன. தொய்யில் முதலியவற்றால் அலங்காரம் செய்து கொண்டிருந்தாள். அந்த இள நகில்கள் இறுக அணைப்பதனால் நோவை அடையும் என்று தாய் நினைத்தாள். அதனால் கையைச் சிறிதே நெகிழ்த்தாள்.

அவள் தன் மகளைத் தனியே விட்டுச் செல்லவில்லை; அவள் படுக்கையை விட்டுத் தனியே வேறு படுக்கையில் படுக்கவும் இல்லை; திரும்பியும் படுக்கவில்லை; கையைக்கூட எடுக்கவில்லை. இறுக்கி அணைத்த கையைக் கொஞ்சம் தளர்த்தினாள். ‘இந்த இளைய பெண்ணின் மார்பை நம் முடைய முரட்டுக் கை உறுத்துமே!’ என்ற நினைவினால் நெகிழ்த்தாள். அவ்வளவு தான் அதற்கு அவள் எவ்வளவு அமர்க்களப்படுத்திவிட்டாள்!

அவள் பெரிய கண்களில் நீர் துளித்தது; அழத் தொடங்கி விட்டாள். ஒன்றோடு ஒன்று மாறுபட்டு அமர் புரியும் பெரிய குளிர்ச்சியான கண்கள் – பேரமர் மழைக்கண் – ஈரமடையும்படி கலுழ்ந்தாள். பெருமூச்சு விட்டாள். அதில் தான் எத்தனை வெப்பம்! அவள் எத்தனை மென்மை யானவள்! அவள் அழுதபோது, ”அடி பைத்தியமே! நான் எங்கே போய்விட்டேன்? உன் பக்கத்திலே தான் இருக்கி றேன்” என்று தாய் சொல்வி ஆறுதல் செய்தாள். “பின்னே ஏன் இறுக்கிக் கட்டிக் கொள்ளவில்லை?” என்று மகள் விம்மினாள். தாய் அவள் தலையைக் கோதிச் சமா தானம் செய்தாள். கன்னங் கறேலென்று நெய்ப்போடு கூடிய அழகான அவள் கூந்தல் தாயின் நினைவுக்கு வந்தது. மிக மிக அறியாப் பெண் மடப்பத்திலே பெரியவள்; அவள் அறியாத் தன்மை எவ்வளவு பெரியது!

அப்படி இருந்தவள் எப்படிப் பிரிந்து சென்றாள் எவ்வாறு அவளுக்குத் துணிவு வந்தது? மையீர் ஓதியை உடைய பெருமடத் தகையினளாகிய அவள் கொடிய பாலை நிலத்திலே போக எப்படி வல்லவளாவாள்?

தாய் இப்படியெல்லாம் நினைத்து ஏங்கினாள். பாலை நிலமாயினும் அங்கே இன்பம் தரும் காதலன் உடன் செல்கிறான் என்பதை அவள் நினைக்கவில்லை. புலிக்கும் தன் மனைவியைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும் போது அறிவுடைய காதலன் ஒருவன் பின் சென்ற அக்காதலியை அவன் பாதுகாத்து நலம் செய் வான் என்பதை நினைக்கும் அளவுக்கு அவள் உள்ளம் விரியவில்லை. காந்தள் தீந்தாலும், அழல் அவிர்ந்தாலும், புலி கொலை சூழ்ந்தாலும் இத்தனைக்கும் இடையிலே அந்தப் பாலை நிலத்திலும் ஆண் பெண் உறவிலே தோற் றும் அற்புதமான அன்பு ஒளி விடுவதை அவள் தெரிந்து கொள்ளவில்லை. ஈன்று சோர்ந்திருந்த பெண் புலிக்கு இரை தேடி நிற்கும் ஆண் புலியின் உள்ளத்திலே அந்த அன்பு சுடர்வதை அவள் நினைத்தாளா? புலியின் கொடுமையையே நினைத்தாள். அதன் அன்பை நினைக்கவில்லை. வழியின் சிறுமையையே நினைத்தாள்; துணையின் பெருமையைச் சிந்திக்கவில்லை. மகள் உடம்பின் மென்மையையே நினைவு கூர்ந்தாள். அவள் காதலின் உரத்தை உணரவில்லை. தன் அணைப்புத் தளர்ந்ததற்கு மகள் வருந்தியதை எண்ணி ஏங்கினாள். தன் தலைவனது இன்ப அணைப்பிலே இன்னல்களை மறந்து செல்வாள் என்பது அவள் பேதை நெஞ்சிற் புலப்படவில்லை! ஆகவே அவள் வருந்திப் புலம்புகிறாள்.

நின்ற வேனில் உலந்த காந்தள்
அழல் அவிர் நீள் இடை நிழல் இடம் பெறாஅது,
ஈன்றுகால் மடிந்த பிணவுப்பசி கூர்ந்தென,
மான்ற மாலை வழங்குநர்ச் செகீஇய
புலியார்த்து உறையும் புல்லதர்ச் சிறுநெறி
யாங்குவல் லுநள்கொல் தானே? யான்தன்
வனைந்தேந்து இளமுலை நோவ கொல்என
நினைந்துகைந் நெகிழ்ந்த அனைத்திற்குத் தான்தன்
பேர் அமர் மழைக்கண் ஈரிய கலுழ
வெய்ய உயிர்க்கும் சாயல்
மையீர் ஓதிப் பெருமடத் தகையே.

நிலை பெற்று நின்றுவிட்டாற் போல் அமைந்த கோடையையும், வாடிப்போன காந்தட் செடியையும் உடைய , வெப்பம் பரவிய நீண்ட இடமாகிய பாலை நிலத் தில், தங்குவதற்கு நிழலுள்ள இடத்தைப் பெறாமல் குட்டி களை ஈன்று நடக்க முடியாமல் கால் சோர்ந்துபோன பெண் புலி பசி மிகுந்திருக்க, மயக்கத்தைச் செய்யும் மாலைக் காலத்தில் வழிப்போவோரைக் கொல்லும் பொருட்டு ஆண் புலி பார்த்துத் தங்கும் பொலிவற்ற வழியையுடைய சிறிய பாதையில் போவதற்கு எப்படி வன்மையுடையவளாவாள்?– நான், அலங்காரஞ் செய்து உயர்ந்த தன் இளைய நகில் துன்புறுமோ என்று எண்ணி என் கையைத் தளர்த்திய அந்த அளவுக்கே . தான் தன்னுடைய பெரிய போரிடுகின்ற குளிர்ச்சியையுடைய கண்கள் நீரால் ஈரமுடையனவாய் அழ, வெம்மையாகப் பெருமூச்சு விடும், மென்மையையும் கருமையான நெய்ப் பையுடைய கூந்தலையும், பெரிய மடப்பமாகிய தன்மையை யும் உடைய என் மகள்.

யான், என நெகிழ்ந்த அனைத்திற்கு, தான் கண் கலுழ , உயிர்க்கும் சாயல் மடத்தகை , புலி செகீஇய உறையும் நெறி யாங்கு வல்லுநள் என்று கூட்டுக.

உலந்த – பட்டுப்போன. காந்தள் – வேலிக்காலில் வளரும் செடி; கண்வலிப் பூ என்று இதன் பூவைச் சொல் வார்கள். அழல் – வெப்பம். இடை- இடம். மடிந்த – சோர்ந்த. பிணவு – பெண்; இங்கே பெண்புலி கூர்ந்தென – மிக . மான்ற – மயங்கிய. வழங்குநர் – நடப்பவர்களை . செகீஇய- கொல்லும் பொருட்டு. புல் அதர் – புன்மையான வழி. நெறி – பாதை யாங்கு – எப்படி. வல்லுநள் – சக்தி யுடையவள். வனைந்து – அலங்காரஞ் செய்து, அனைத்திற்கு அந்த அளவுக்கு . அமர் – போரிடுவதுபோல் உள்ள . மழை – குளிர்ச்சி . ஈரிய – ஈரம் உள்ளனவாகி. கலுழ-அழ. வெய்ய – வெப்பமாக. சாயல் -மென்மை . மை – கருமை . ஈர் ஓதி – ஈரமான (நெய்ப்பையுடைய) கூந்தல். மடம் – பிள்ளைமை ; இளமை. தகை – தன்மையை உடையவள்.

துறை : இது, மகட்போக்கிய தாய் சொல்லியது.

‘தன்னுடைய மகள் காதலனுடன் ஒருவரும் அறியாமல் வீட்டை விட்டுப் போய்விட அவளைப் பிரிந்து நின்ற தாய் சொல்லியது’ என்பது இதன் பொருள்.

இதனைப் பாடியவர் பூதனார் என்னும் புலவர் இது நற்றிணையில் 29-ஆவது பாட்டு.

– மனை விளக்கு (சங்கநூற் காட்சிகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1951, அமுத நிலையம் லிமிடெட், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *