ஊர்க்காவல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: January 9, 2021
பார்வையிட்டோர்: 12,688 
 
 

இந்த ஊர் சபையின் முன் நமது அரசு அறிவிப்பது என்னவென்றால் இந்த ஊரின் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக வளவன் நியமிக்கபட்டுள்ளார். இது நமது அரசரின் ஆணை ! பறைஒலிக்கிறது.

வளவன் தனது வாட்டசாட்டமான உடலை நிமிர்த்தி நின்று நரைத்து போன தனது மீசையை திருகிக்கொண்டு நின்றார். அவரது அருகே பத்து பதினைந்து வீர்ர்கள் பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்தனர். அறிவிப்பு முடிந்தவுடன், ஊர்தலைவரை பார்த்து தலைவணங்கிவிட்டு கூட்டத்து முன் நின்றவர், அன்புள்ளமக்களே, என்னை பற்றி அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். நான் நமது அரசரின் படையில் சாதாரண படைத்தலைவனாக பதவி ஏற்றேன், அதன் பின் இருபத்தி ஐந்து வருடங்களாக அவரிடம் பணி புரிந்து வந்தேன். அதன் பின் அரசர் இந்த ஊருக்கு பாதுகாப்பு அதிகாரியாக என்னை நியமித்திருக்கிறார். நான் நமது நாட்டுக்கும் அரசருக்கும், உங்களுக்கும் உண்மையானவனாக இருப்பேன் என்று இங்கு உறுதி கூறுகிறேன்.

படபடவென கைதட்டல்கள் ஒலித்த்து. அரசர் வாழ்க வாழ்க… மக்கள் மெல்ல கலையத் தொடங்க ஆரம்பித்தனர்.

பாராட்டுக்கள் !வளவனாரே. எதிரில் ஊர்தலைவர் பாராட்டுதலை தலையசைத்து ஏற்றவர் எங்கே உங்கள் மகன் அறிவழகனை காணோம்?

அவன் உறையூருக்கு திருவிழாவிற்கு போயிருக்கிறான், உங்கள் செல்வாக்கை உபயோகித்து அவனுக்கு அரசரின் படையில் ஏதாவது வேலைக்கு சேர்த்துவிட்டால் நன்றாக இருக்கும் குலைந்து பேசினார் ஊர்த்தலைவர்.

கண்டிப்பாக செய்கிறேன், உங்களை மாதிரி ஆட்களுக்கு செய்து கொடுப்பதற்குத்தானே இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன்.

அப்புறம் நம் வீர்ர்களுக்கு இந்த ஊரில் ஒரு வேலை கொடுத்திருக்கிறேன். நீங்கள் என்னமோ ஏதோவென்று பயந்துவிடாதீர்கள். வளவன் மெல்ல ஆனால் அதிகாரத் தோரனையில் சொன்னார்.ஊர்த்தலைவர், சரிங்க, சரிங்க, தலையாட்டினார்.

நல்ல இருள் சூழ்ந்த நேரத்தில் மாட்டு வண்டி ஒன்று உருளை சத்தம் ஒலிக்க ட்டக்..ட்டக் என்று அசைந்து வந்து கொண்டிருந்தது. அதை ஒட்டி மாட்டின் கழுத்தில் கட்டி இருந்த சலங்கை மணி மாட்டின் தலையசைப்பில் கிணிங்க்..கிணிங்க..சத்தமிட்டது.

மாட்டு கழுத்துல மணி எல்லாம் கட்டி சத்தம் வர்றமாதிரி பண்ணறே? வண்டிக்குள் இருந்த ஆள் அலுத்துக் கொண்டான். நான் என்ன பண்ணறது வண்டிக்காரன் வண்டியை கொடுக்கும் போது மாட்டுக்கு மணிகட்டியிருக்கா இல்லையான்னு பாக்கமுடியுமா? வந்துட்டோம், கொஞ்ச தூரம்தான். அலுத்தவனுக்கு பதில் சொல்லி விட்டு மாட்டின் பின்புறத்தை கால்களால் நெம்பினான்.

மாடுகளுக்கு புரிந்தது, ஓட்டிக் கொண்டிருப்பவன் நம்முடைய எஜமானன் கிடையாது என்று. காரணம் மாட்டு வண்டி ஓட்டி தன்னுடைய மாட்டை இப்படி கால்களால் உதைக்க மாட்டான்.

அந்த இருளில் பாதை ஓரத்தில் ஒரு ஆள் விளக்கு ஒன்றை அங்கும் ஆட்டி நின்று கொண்டிருந்தான்.அதை பார்த்தவுடன் மாட்டு வண்டியில் வந்தவன் மாட்டின் மூக்கணாங் கயிறைபிடித்து நிறுத்தினான். மாடுகள் வலியின் வேதனையில் சற்று முணங்கி நின்றன.

வண்டியில் இருந்த இருவரும் குதித்து, அவனை நோக்கி நடந்தனர். விளக்கை காட்டி நின்றவன், இவர்களை தொடர்ந்து வர சமிக்ஞை காட்டி நடந்தான். இவர்கள் அவன் பின்னால் நடந்தனர். வழி குறுகலாய் இருந்தது. நடையில் மரத்தின் வேர் முடிச்சுகளும், கற்களும் பெரிய இடைஞ்சலாய் இருந்தது. முன்னால் சென்றவன் விளக்கின் வெளிச்சத்தில் நடந்தாலும் பின்னால் நடந்த இருவருக்கும் அந்த வெளிச்சம் போதாமையால் தடுமாற்றத்துடனேயே அவன் பின்னால் சென்றனர். சிறிது தூரத்தில் குடிசை ஒன்று தென்பட்டது, அதனுள் இருந்து மினுக்..மினுக். என்ற வெளிச்சம் தெரிந்தது. இப்பொழுது விளக்கு வைத்திருந்தவன் நடை வேகமானது, பின்னால் வந்த இருவரும் ஓட்டமும் நடையுமாகவே இவனை பின் தொடர்ந்தனர்.

இவர்களின் அரவம் கேட்டு குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்த பெரும் வீர்ர்கள் என்பது அவர்கள் உருவத்திலேயே தெரிந்தது. இருவருக்கும் வணக்கம் சொல்ல ம்ம்.. ஒற்றை சொல்லில் முடித்துக் கொண்டவர்கள் தன் கையை நீட்டினர். வண்டியில் வந்த இருவரும் முன் வந்து கையில் கொண்டு வந்திருந்த மூட்டையை கொடுத்தனர். அதை அப்படியே தரையில் வைத்து விட்டு விளக்கு வைத்தவனை பார்த்து ஒருவன் மூட்டையின் மீது வெளிச்சம் பாய்ச்சும்படி சைகை காட்ட விளக்கு அந்த மூட்டை மேல் காட்டப்பட்டது. இரு வீர்ர்களும் அப்படியே சம்மணமிட்டு உட்கார்ந்தனர். ஒருவர் அந்த மூட்டையை விரித்து பார்க்க ஆபரணங்களும், வைரங்களும் கண்ணை பறித்துக் கொண்டு இருந்தது. நின்று கொண்டே பார்த்துக் கொண்டிருந்த மூவருக்கும் கண்கள் விரிந்தன.

ஆனால் முகத்தில் எந்த பிரதிபலிப்பையும் காட்டாத இருவரும் மூட்டையை இறுக்கிக் கட்டி எழுந்தனர் சரி. நீங்கள் போகலாம் என்று சைகை செய்து விட்டு விறுவிறுவென அந்த குடிசைக்குள் புகுந்து கொண்டனர்.

அதுவரை அமைதியாய் விளக்கு வைத்திருப்பவன் பின்னால் வந்து கொண்டிருந்த இருவரும், இவர்கள் மாட்டு வண்டி நிறுத்தி வைத்திருந்த இடம் வந்ததும், யாரப்பா இவர்கள், பார்த்தால் இராஜ களை தெரிகிறது, ஆனால் இந்த காட்டுக்குள் குடிசையில் இருக்கிறார்கள். விளக்கை கையில் வைத்திருந்தவன் இவர்களை முறைத்து விட்டு அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு? வந்த வேலை முடிஞ்சுதா, போய்க்கிட்டே இருங்க. சொல்லிவிட்டு அவர்களுக்கு எதிர்பாதையில் நடக்க ஆரம்பித்து விட்டான். அவன் அங்கிருந்து நகரவும், அந்த விளக்கு வெளிச்சமும் அவனுடனேயே சென்றுவிட இவர்களை சுற்றி மீண்டும் காரிருள் சூழ்ந்து கொண்டது.

சரி போலாம் வா மாட்டு வண்டியில் ஏறி உட்கார்ந்து வந்த வழியாக மாடுகளை திருப்பி ஓட்டிக் கொண்டு சென்றனர்.

மறுநாள் ஊர்தலைவரும், பாதுகாப்பு அதிகாரியும் உட்கார்ந்து பொது மக்களின் குறைகளை கேட்டுக் கொண்டிருந்தனர்.

நல்ல உடை அணிந்த ஒரு குடும்பத்தவர்கள் ஊர்தலைவரை பார்க்க நின்று கொண்டிருந்தனர்.

இங்கு வாங்க, உங்களுக்கு என்ன பிரச்சினை?

ஐயா வீட்டுல இருந்த நகைநட்டு எல்லாம் காணாம போயிடுச்சுங்க.

இது எப்ப நடந்தது?

தெரியலீங்க, நாங்க நகை எல்லாம் வச்சிருந்த இடத்தை நேத்துத்தான் திறந்து பார்த்தோம், அங்க ஒண்ணைகூட காணோம்.

ஊர்த்தலைவர் பாதுகாப்புஅதிகாரி வளவனை பார்க்க அவர் அவர்களிடம் உங்க வீட்டுபக்கம் இரண்டு மூணு நாள்ல புதுசா யாராவது தென்பட்டாங்களா?

யோசித்து நின்றவர்கள், ஒரு பொம்பளை தான் ஜோசியம் பாக்கறேன்னு எங்க வீட்டுக்கு வந்தது. மற்றபடி யாரும் வரலீங்களே.

சரி நம்ம நாட்டுக்காரிதானா? அந்த பொம்பளை?

ஆமாங்க நம்ம நாட்டுக்காரியாத்தான் தெரிஞ்சது, நல்லா ஜோசியம் சொல்லுச்சுங்களே.

என்ன சொல்லுச்சு? வளவன் புன்னகையுடன் கேட்டார்.

நம்ம நாட்டுக்கு நேரம் சரியில்லை, பக்கத்து நாட்டுக்காரன் குழிபறிக்க பாப்பான், அப்படீன்னு சொன்னது

சரி நீங்க கவலைப்படாம போங்க…விடை கொடுத்த வளவனின் முகத்தில் சிந்தனை ரேகைகள்.

ஊர் தலைவர் கவலையுடன் வளவனின் முகத்தை பார்த்தார். திடீரென்று திருட்டு அதிகமாகி இருப்பதாக மக்கள் புகார் கொண்டு வருகிறார்கள். இதற்கு ஏதேனும் செய்தே ஆகவேண்டும்,

பார்க்கிறேன், அக்கம் பக்கம் ஒற்றர்களை அனுப்பி வைக்கிறேன்.

உறையூரில் ஊர்த் தலைவர் பையன் அறிவழகன் அத்தையின் வீட்டில் உற்சாகமாய் நான்கு நாட்கள் தங்கி தேர்திருவிழாவை பார்த்தாகிவிட்டது. இனி வீட்டுக்கு கிளம்ப வேண்டும், என்று முடிவு கட்டினான். என்ன தான் அத்தை என்றாலும் “விருந்தும் மருந்தும் மூன்று நாள்” பழமொழி உண்டே. நாலாவது நாளில் கிளம்பினான்.

ஊர்த்தலைவர் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார், நீ உருப்படற மாதிரி தெரியலை, வயசு பதினெட்டு ஆச்சு, எப்படியாவது ராஜா படையில சேர்ந்து முன்னுக்கு வரணும்னு பாடா பட்டுகிட்டு இருக்கேன், நீ என்னடான்னா ஊர் ஊரா சுத்திகிட்டு இருக்கே.

நானா போகமாட்டேனெங்கிறேன் அறிவழகன் தந்தையிடம் முறைத்தான்.

வளவனை போய் பார், உனக்காக சிபாரிசு செய்வதாக சொல்லியிருக்கிறார்.

வளவன் அதுயார்? முகத்தை உயர்த்தினான்.

உனக்கு தெரியாதில்லையா? நம்ம ஊருக்கு புதுசா வந்திருக்கற பாதுகாப்பு படைத்தலைவர்.

சரி பாக்கிறேன், சொல்லி விட்டு சென்றவன் சிபாரிசு கேட்கபோகிறேன், குதிரையில் சென்றால்தான் மரியாதை. நினைத்துக் கொண்டு, லாயத்தில் கட்டியிருந்த குதிரைகளில் ஒன்றை அவிழ்த்துக் கொண்டு அதன் மீது ஏறி விரட்டினான்.

அறிவழகனை அப்படி உற்று பார்ப்பார் என்று நினைக்கவில்லை. ஆளை பார்த்தால் திடமாகத்தான் தெரிகிறாய், உன்னுடையது சொல் புத்தியா? சுயபுத்தியா?

அவனுக்கு சுர்ரென்று கோபம் வந்தது, என்னுடையது சுயபுத்திதான்,

அப்படியா? அதையும் பாக்கலாம் உனக்கு சில வேலைகள் தருகிறேன், எப்படி செய்கிறாய் என்று பார்த்துத்தான் அடுத்த முடிவு.

வணிக சந்தையில் ஒருவன் துணிகளிலும் பீங்கான் தட்டுக்களிலும் வரைந்த ஓவியங்களை விற்றுக் கொண்டிருந்தான். அத்தனையும் கண்ணை கவருபவையாக இருந்ததால், அவனை சுற்றி அதிக கூட்டம் இருந்தது. வாங்குபவர்களை விட அதை பார்வையிட்டவர்களே அதிகம். அதிலும் பெண்கள் அதிகமாக அந்த ஓவியங்களை ஆர்வத்துடன் பார்த்தனர். பொழுது சாய்ந்து விட்டதால், தான் கொண்டு வந்திருந்த ஓவியங்களை எல்லாம் ஒரு பையில் போட்டு மூளையில் வைத்து விட்டு ஒரு ஓரமாய் படுத்துக்கொண்டான். நேரம் அதிகம் ஆக குளிரில் நடுங்கியவன் ஒரு சாக்குபையை எடுத்து போர்த்திக் கொண்டான். அப்பொழுதும் நடுக்கம் நின்றபாடில்லை. அந்த இடத்தில் இவன் மட்டுமே இப்படி தெருவில் படுத்து கிடந்ததை பார்த்த எதிர்வீட்டு உரிமையாளர் அவனிடம் வந்தவர் தம்பி ஏன் இப்படி குளிருல கிடக்குறே என்றார்.

ஐயா நான் தொலை தூரத்துல இருந்து வர்றேன், எனக்கு இந்த ஊர்சத்திரம் எங்கிருக்குன்னு தெரியாது, அப்புறம் இத்தனை படத்தையும் எடுத்துட்டு போறது எப்படீ?

தம்பி வாங்க, எதிர் வீடுதான் என்னுடையது. இந்த பொருள் எல்லாம் இங்கேயே இருக்கட்டும் திருட்டு எல்லாம் ஒண்ணும் நடக்காது.

காலையில் எதிரில் பார்த்தால் அங்கிருந்த பொருட்கள் களவாடப்பட்டிருந்தன. குய்யோ முய்யோ என்று கூப்பாடு போட்டான் வியாபாரி.

இராத்திரி படுக்க இடம் கொடுத்தவருக்கோ தர்மசங்கடமாகிவிட்டது. அவன் பேசாமல் தெருவிலேயே படுத்திருப்பான், அவனை வீட்டுக்கு வந்து படுக்க சொல்ல, இப்பொழுது தான் பொறுப்பாகிவிட்டோமே என்று பரிதவித்தார்.

சிறிது நேரத்தில் வீர்ர்கள் வியாபாரியை அழைத்து சென்று பாதுகாப்பு அதிகாரியின் முன் நிறுத்தினர்.

தொலைந்து போன பொருட்களுக்குண்டான தொகையினை பாதுகாப்பு அதிகாரி கஜானாவிலிருந்து எடுத்து கொடுத்தார். அவன் அதை பெற்றுக் கொண்டு அந்த ஊரைவிட்டு வெளியேறினான். அரசாங்க வீர்ர்கள் பின் தொடர்வதை அறியாமலேயே. இவனுடைய பொருட்களை கொள்ளையடித்து சென்றவன் அடுத்த ஊரில் இவனுக்காக காத்திருந்தான். இருவரும் கிடைத்த வருமானத்தை பங்கு போட பிரிக்கும்போது சுற்றி வளைத்த வீர்ர்களால் கைது செய்யப்பட்டனர்.

இருவரையும் கொண்டு சென்று விசாரித்ததில் அந்த வணிகர் வீட்டில் கொள்ளையடித்தது இவர்கள்தான் என்பது நிச்சயமானது. ஆனால் அந்த நகைகள் என்னவாயிற்று என்பதற்கு அவர்கள் நாங்கள் கொள்ளையடித்து வரும் போது நால்வர் அதை பறித்துக் கொண்டனர். அதனால் தான் இந்த வியாபார திருட்டை தொடங்கினோம் என்றனர்.

பெரிய திருட்டு ஒன்று அந்த நகரில் நடக்கப்போவதாக வதந்தி உலாவந்தது.

அன்று நள்ளிரவு ஒரு வணிகர் வீட்டில் கன்னம் வைத்து கள்வன் ஒருவன் உள்ளே நுழைந்து கிடைத்தவற்றை எல்லாம் திருடிக் கொண்டு வெளியேறினான். திருடிய பொருட்களுடன் அந்த ஊரைவிட்டு தப்பி செல்லும் நோக்கத்துடன் சென்று கொண்டிருந்தவனை, நால்வர் கத்தியை காட்டி மிரட்டினர்.

கள்வன் பயந்து போய் எல்லாவற்றையும் அவர்களிடன் கொடுத்து விட்டான். அவர்கள் அவனை அடித்து உதைத்து விட்டு வேகமாக சென்றனர்.

அடிபட்டு விழுந்திருந்த கள்வன் சடாரென எழுந்து அவர்களை பின்தொடர ஆரம்பித்தான். அவர்கள் அறியாமலேயே.

அந்த நால்வரும் ஊர் எல்லைக் கோட்டருகே இருந்த ஒரு வீட்டிற்குள் சென்றனர். அதில் இருவன் மட்டும் வெளியே வந்து அங்கு நின்று கொண்டிருந்த மாட்டுவண்டியில் ஏறினர். வெளியே போகும் மாட்டு வண்டியை தொடர்வதா? இல்லை உள்ளேயே பதுங்கி இருக்கும் மற்ற இருவரை வேவுபார்ப்பதா என்று ஒருகணம் திகைத்தவன், சரி வீட்டுக்குள் இருப்பவர்கள் எப்படியும் உடனே வர வாய்ப்பில்லை, நாம் இந்த மாட்டுவண்டியை தொடர்வது நல்லது என்று முடிவு செய்து மாட்டு வண்டியை தொடர்ந்து நடந்தான் .இருளில் மாட்டு வண்டிக்கு பின்னால் அடையாளம் வைத்து நடப்பது கள்வனுக்கு சிரமமாயில்லை.

அடுத்த இரண்டு மணிகளுக்குள் அங்கு நடந்தது பரபரப்பாயிருந்தது. அந்த காட்டுக்குள் குடிசையில் இருந்த இருவரும் சுற்றி வளைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆபரணங்களை கொடுக்க சென்ற இருவரும் வழிகாட்டியாய் இருந்த விளக்கு வைத்திருந்தவனும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுவிட்டனர். மாட்டு வண்டி இருந்த வீட்டுக்குள் இருப்பவர்களும் சுற்றி வளைக்கப்பட்டு விட்டனர்.

உன் பையன் அறிவழகனை நான் அரண்மனைக்கு கூட்டிட்டு போயிடறேன் சொல்லிக்கொண்டிருந்தார் வளவன். அவனுக்கு படையில வேலை வாங்கி கொடுக்கறதுக்கா கேட்டவரை பார்த்து சிரித்த வளவன் என்கூட துணைக்கு வச்சுக்கத்தான்.

துணைக்கா? மெல்ல இழுப்புடன் கேட்ட ஊர்த்தலைவரை ஏன் உதவிதளபதியா இருந்தா வேண்டாங்குதா?

உதவிதளபதியா? வாயை பிளந்தவர் அப்படீன்னா நீங்க?

தளபதிதான். உங்க ஊர் காட்டுக்குள் எதிரி நாட்டு இளவரசர்கள் தங்கி இருக்கறதாவும், முடிஞ்ச அளவுக்கு கொள்ளை அடிச்சுட்டு அவங்க நாட்டுக்கு கொண்டு போக ஏற்பாடு நடக்கறதாகவும் எங்களுக்கு கிடைச்ச தகவலை வச்சி நானே களத்துல இறங்கறதுக்காக இங்கவந்தேன். உன் பையன் கள்வனா நடிக்க சொன்னேன், ஏன்னா அவனுக்கு இந்த ஊரை பத்தி நல்லா தெரியுமில்லையா.! நல்லாவே ஒற்று வேலை செஞ்சான். அவனை கூட்டிட்டு போய் பயிற்சி கொடுத்து பெரிய வீரனாக்கி உங்கிட்ட அனுப்பறேன்.

எல்லாம் உங்க தயவு..தளபதியை பார்த்து வழிந்தார் ஊர்த்தலைவர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *