கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: March 25, 2023
பார்வையிட்டோர்: 1,512 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1 – 2 | 3 – 4 | 5 – 6


3. குழல் சொன்ன கதை

சுமார் ஆறடி உயரமும் மூன்றடி அகலமும் உள்ள பெரிய சரீரத்துடனும், அதிலிருந்த கடுமையான கன்னக் கதுப்புகளுட னும், அந்தக் கதுப்புகள் வரை ஏறி வளைந்திருந்த அடர்ந்த கரிய மீசையுடனும், சிவந்த பெரும் கண்களுடனும், மானிட அரக்கள் போல் காட்சியளித்த பூதலன், அவனது உலக்கைக் கைகளில் தாங்கி வந்தது வெறும் சிறுவன் சடலம் அல்ல என்றாலும், நடு வயதைத் தாண்டியவனுடைய பலமான உடல் என்றாலும், பூதலன் ஒரு குழந்தையைத் தாய் தூக்குவது போல வெகு லாவகமாகவும் எந்தவிதக் கஷ்டமின்றியும், மிகுந்த எச்சரிக்கையுடனும் பயபக்தியுடனேயே தூக்கி வந்தான். அவன் அடிமேலடி எடுத்து வைத்து மெள்ள அந்த உருவத்தை அந்த மாமணி மண்டபத்தின் ஒரு புறத்தில் இருந்த நீண்ட மஞ்சம் ஒன்றில் மிக லேசாகக் கிடத்திவிட்டு, சற்றுத் தள்ளி அந்த உடலுக்குத் தலைவணங்கி நின்றான். 

அந்தச் சடலத்தை அவன் தூக்கிவந்த போதே அதன் முகத்தில் பட்டுவிட்ட ஒளியால் அது யார் என்பதைப் புரிந்துகொண்ட புலவர் கோவூர் கிழாரும், சோழ இளவல் நலங்கிள்ளியும் பிரமை பிடித்து சில விநாடிகள் நின்றார்கள் என்றாலும், மஞ்சத்தில் அது கிடத்தப்பட்டவுடன் அருகே சென்று, இருவரும் மண்டியிட்டுத் தலைவணங்கினார்கள். பின்பு புலவர் கோவூர் கிழார் நீண்ட நேரம் ஏதோ வாயில் முணுமுணுத்துக் கொண்டிருந்தார். ஆனால், நலங் கிள்ளி மட்டும் சில விநாடிகளில் எழுந்திருந்து, அந்த சடலத்தை கூர்ந்து ஆராய்ந்தான். 

அதன் தலையில் இருந்த நவரத்தினக் கிரீடம் அப்பொழுதும் பெரும் சோபையைக் கிளப்பியிருந்தது. நடுத்தர வயதைச் சற்றே தாண்டிய அந்த சடலத்தின் தலைக்குழல்கள் கலையாமல் மிக ஒழுங் காகக் கன்னங்களில் விழுந்து கிடந்தது. மூடிக் கிடந்த கண்களை யுடைய முகத்திலும் கம்பீரம் சிறிதும் குறையவில்லை. இடையே செறுகப்பட்டிருந்த குறுவாளும், கச்சையில் அப்பொழுதும் தொங்கிக் கொண்டிருந்த பெருவாளும், அப்பொழுதும் அந்த உடலுக்கு உடையவன் போருக்குச் சீறி எழுவானோ என்ற சந்தே “கத்தைக் கிளப்பியது. நீண்ட கைகளில் ஒன்று பஞ்சணையின் ஒரு பக்கத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. கால்கள் இரண்டையும் ஒழுங்காகவே இருக்கும்படி பூதலன் படுக்கவிட்டு இருந்ததால் அந்த உடலுக்கு உடையவன் நித்திரையில் ஆழ்ந்திருப்பது போன்ற பிரமையே அளித்தது. 

நலங்கிள்ளி அந்த உருவத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்த சமயத்தில்,மண்டியிட்ட நிலையில் இருந்து மெள்ள எழுந்த புலவர் கோவூர் கிழார், அவனி சுந்தரியைத் திரும்பி நோக்கினார். சினம் வீசிய கண்களுடன். “இதற்கு என்ன பொருள்?” என்ற சீற்றம் குரலிலும் தொனிக்கக் கேட்டார். 

அவனி சுந்தரியின் கண்களில் எந்தவித உணர்ச்சியும் தெரிய வில்லை. கோவூர் கிழாரின் கோபம் அவள் உள்ளத்தைத் தினையள வும் தொட்டதாகக்கூடத் தெரியவில்லை. அவள் சர்வசாதாரண மான குரலில் பதில் கூறினாள், “புலவர் பெருமானுக்குத் தெரியாத பொருள் எனக்கென்ன தெரியப்போகிறது?” என்று. 

புலவர் பெருமான் மீண்டும் ஒருமுறை மஞ்சத்தையும் நோக்கி அவனி சுந்தரியையும் நோக்கினார். 

“இது யார் தெரியுமா உனக்கு?” என்று வினவினார். 

அவனி சுந்தரியின் அச்சமற்ற கண்கள் கிழாரில் கருமைக் கண்களை நிர்ப்பயமாகச் சந்தித்தன. “தெரியாமலா, உடலை இத் தனை பக்குவப்படுத்திப் புலவர் இல்லத்துக் கொண்டு வந்தேன்?” என்று பதில் கேள்வியும் கேட்டாள். 

புலவருக்கு யாது சொல்வது என்று தெரியாததால் சில விநாடிகள் குழம்பிவிட்டு, “இவன்… இவன்…” என்று இரு முறை தடுமாறினார். 

“புகாரின் மன்னர் கிள்ளிவளவன்…” இதை மெதுவாகவும் மரியாதையாகவும் சொன்னாள் அவனி சுந்தரி. 

“இதன் விளைவு தெரியுமா உனக்கு?” என்று புலவர் மீண்டும் கேட்டபோது, விளைவை நினைத்து அவர் உடல் லேசாக நடுங்கியது. 

“விஷயத்தை முன்பே சொல்லி விட்டேனே.. இன்று.அதோ படுத்துக் கிடப்பவருக்குப் பதில், இவர் புகாரின் மன்னன் ஆகிறார் என்று நலங்கிள்ளியை நோக்கித் தன் கண்களை திருப்பிவிட்டு புலவரை மறுபடியும் நோக்கி, “இன்றுடன் சோழ நாடு இரண்டாகப் பிளக்கிறது” என்றும் தெரிவித்தாள் அவனி சுந்தரி, 

“ஒவ்வொரு நாட்டு மன்னன் இறக்கும்போதும் நாடு இரண்டாகப் பிளக்கிறதா?” என்று கேட்டார் புலவர். 

“பிளப்பதில்லை புலவரே. ஒரு நாட்டின் இரு பகுதிகளை ஆளும் இரு மன்னர்கள் மனம் ஒன்றுபட்டு இருக்கும் வரை நாடு. பிளப்பதில்லை. இருவரும் ஒருவர் பகுதியை இன்னொருவர் விழுங்க முயலாதிருக்கும் வரையில் அது ஒரே நாடாகத்தான் இருக்கும். பிளவு மனதைப் பொறுத்தது; ஆசையைப் பொறுத்தது” என்று உறுதியான சொற்களை உதிர்த்தாள் அவனி சுந்தரி. 

அதுவரை அமைதியாக நின்றிருந்த நலங்கிள்ளி சுடும் கண் களை அந்தச் சுந்தரி மீது பாயவிட்டான். “யார். பகுதியை யார்) விழுங்கப் பார்க்கிறார்கள்? யார் மனதில் மண்ணாசை மண்டிக் கிடக்கிறது?” என்று வினவவும் செய்தான், சினம் மண்டிக்கிடந்த சொற்களால். 

“சோழ மன்னரே…” என்று பதில் சொல்லத் தொடங்கிய அவனி சுந்தரியை, இடையே வெகு உக்கிரத்துடன் தடுத்த நலங் கிள்ளி. “அப்படி அழைக்காதே என்னை” என்று சீறினான். 

அவனி சுந்தரி அவன் உக்கிரத்தைக்கண்டு அஞ்சாமல் அஞ்சன விழிகளை அவன் விழிகளுடன் நன்றாகக் கலக்க விட்டாள். உங் கள் அண்ணன், அதோ மஞ்சத்தில் கிடக்கிறாரே கிள்ளிவளவன், அவர் சடலத்தைக் கண்டதும் நீங்கள் பாமரர்கள்போல் தேம்பித் தேம்பி அழவில்லை. கண்களில் இருந்து ஒரு சொட்டு நீர்கூப் உதிர்க்கவில்லை. உள்ளே குமுறுகிறது எரிமலை. ஆனால் அது வெடிக்கவில்லை. இதுதான் சுத்த வீரர்களுக்கு அடையாளம், அப் படிச் சுத்த வீரரான நீங்கள் உள்ள நிலையை ஒப்புக் கொள்ள, மறுப்பதால் பயனில்லை. பிள்ளையில்லா மன்னன் இறக்கும்போது, அடுத்த இளவல் மன்னர் ஆகிறார். இல்லாவிட்டால்…” பேச்சை அவள் முடிக்கவில்லை. 

“இல்லாவிட்டால்?” சந்தேகத்துடன் எழுந்தது நலங்கிள்ளி பின் கேள்வி. 

அவள் அளித்த பதில் நலங்கிள்ளியை மட்டுமின்றி கோவூரி கிழாரையம் அயர வைத்தது. “உங்கள் அண்ணன் சேர நாட்டின் மீது படையெடுக்கச் செல்லும்போது உங்களுக்கு ஏன் இளவரசு பட்டம் சூட்டினார்?” என்று கேட்டாள், கன்னரர் இளவரசி, 

புலவர் திகைத்தார். “பெண்ணே! உனக்கென்ன சோதிடம் தெரியுமா?” என்று வினவினார் திகைப்பின் ஊடே.

அந்தச் சமயத்தில் நலங்கிள்ளி சீறினாள், “புலவரே! இது உண்மையா?” என்று. 

“ஆம் நலங்கிள்ளி” புலவரின் சொற்களில் துன்பமிருந்தது.

“இதை ஏன் என்னிடம் முன்னமே சொல்லவில்லை?” 

“மன்னர் உத்தரவு அப்படி.” 

இந்தப் பெரிய விந்தையை, மர்மத்தை, அதுவரை அறியாத நலங்கிள்ளி பிரமை பிடித்த கண்களுடன் புலவரை நோக்கினாள். *நலங்கிள்ளி! மன்னர்கள் மரணத்தைக் கண்டு கலங்குவது இல்லை. அதுவும் மன்னரின் மரணம் இயற்கையானது…” என்று ஆறுதல் சொல்ல முயன்ற புலவரை, அவனி சுந்தரியின் சொற்கள் மடக்கின. “இல்லை புலவரே! மரணம் இயற்கையானது அல்ல” என்றாள், அவனி சுந்தரி திடமான குரலில். 

“உடலில் காயமேதும் இல்லை. ஆகையால் போரில் இறக்க வில்லை.'”

“ஆம். போரில் இறக்கவில்லை. கருவூரில் சேரமான் கோட் டையை விட்டுப் போருக்கு வெளிவராதபோது, சுற்றுப்புறங் களில் இருந்த காவல் மரங்களை வெட்ட முற்பட்டார், கிள்ளி வளவர். அங்கும் தங்களைப் போல் ஒரு புலவர் ஆலத்தூர் கிழார், ‘வீரனே! நீ மரங்களை வெட்டும் ஓசை கேட்டும் வெளிவராத சேரனுடன் போரிடுவது உன்னைப் போன்றோர்க்கு அழகோ? என்று கூறினார். அதற்கு ஒரு பாட்டும் புனைந்தார் அவர் சொற் கேட்டு மீண்டும் சோழ நாட்டு எல்லைக்கு வந்தார், மன்னர். குள முற்றத்தின் அரண்மனையில் தங்கினார். அரண்மனையில் மறுநாள் இரவு உயிர் நீத்தார்.” 

“படைகள் என்னவாயின?”

“நாளை வரும்” 

“அதுவும் உன் ஏற்பாடா?”

“ஆம்”. 

“எதற்காக இந்த ஏற்பாடுகளை யெல்லாம் நீ செய்ய வேண் டும்?” புலவர் குரலில் சந்தேகம் பெரிதும் தோன்றிக்கிடந்தது. 

“ஓர் அரசன் மகள் இன்னோர் அரசனுக்கு வேண்டிய கடமை யைச் செய்தாள். உறையூர் மன்னன் நெடுங்கிள்ளியின் அரண்மனை யில் இருந்து புகார் வரப் புறப்பட்டேன். இடையில் குளமுற்றத் துக்கு மன்னர் வந்து அரண்மனையில் தங்கியிருக்கிறார் எனக் கேள் விப்பட்டு அவரைப் பார்க்கச் சென்றேன். அன்று இரவு கிள்ளி வளவர் இறந்தார்.” 

இந்தச் சொற்களை நிர்ப்பயமாகவே உதிர்த்தாள் அவனி சுந்தரி. கிள்ளிவளவன் போரில் மடியவில்லையானால், அரண்மனை யில் மடிந்திருந்தால், அதுவும் இவள் மன்னனைச் சந்தித்த அந்த இரவில் உயிர் நீத்திருந்தால், இதைவிட ஒரு கொலைக் குற்றத்தை யார் இத்தனை துணிவுடன் ஒப்புக்கொள்ள முடியும்? சந்தர்ப்ப சாட்சியங்கள் அவளுக்கு எதிரிடையாக இருந்தும், அவளைக் கொலைகாரியாக்குவதாக இருந்தும். அவனி சுந்தரி நிதானத்தை சிறிதும் இழக்காததைக் கண்ட புலவரும், நலங்கிள்ளியும் ஆச்சரி யப்படவே செய்தனர்.

இதில், புலவருக்கு ஒரு சந்தேகம் ஏற்படவே, கேட்டார்: “மன்னர் ஏன் சாதாரண மரணம் அடைந்திருக்கக் கூடாது?” என்று. 

“இல்லை, அடையவில்லை” 

“யார் சாட்சி அதற்கு?” 

”மன்னரே சாட்சி” 

“மன்னரா?” 

“ஆம் புலவரே! ” 

“எப்படிச் சொல்லுவார், இப்பொழுது?”

“முன்பே சொல்லிவிட்டார்” 

“என்ன உளறுகிறாய்?” நலங்கிள்ளியின் சீற்றம் மிகுந்த சொற்கள் அந்த மாமணி மண்டபத்தை கிடுகிடுக்கச் செய்தன. 

அவனி சுந்தரி அவனைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. மன்னர் கச்சையைப் பாருங்கள். புரியும்” என்றாள் பரம நிதானத்துடன். 

இரண்டே அடிகளில் புலவர் மன்னர் சடலத்தை அடைந்து. வாள் கச்சையைத் தடவினார். ஏதோ ஒரு நீண்ட குழல் அவர் கையில் அகப்பட அதை வெளியில் எடுத்தார். குழல் சொல்லிற்று ஒரு விபரீதக் கதையை, நலங்கிள்ளியும் குழலைப் பார்த்தான். அது வரை நீரை உதிர்க்காத அவன் கண்களில் இரு நீர் முத்துக்கள் கண்களின் முகப்பில் தோன்றின. புலவரோ ஏதோ காணாததைக் கண்டுவிட்டதைப் போல் குழலைத் திரும்பத் திரும்ப உருட்டி உருட்டிப் பார்த்தார். கடைசியாக அவனி சுந்தரியை நோக்கி “ஆம்! நீ சொன்னது உண்மை” என்றார். 

அவர் ஆமோதிப்பதைக் கேட்டதும், அவனி சுந்தரி மன்னன் சலத்தை அணுகி, அவன் மார்புக் கவசத்தை எடுத்து “புலவரே! இதையும் பாருங்கள்” என்று ஓர் இடத்தைச் சுட்டிக் காட்டினாள். அந்த த்தைக் கவனித்த நலங்கிள்ளியின் முகத்தில் துக்கம் கலைந்தது. வறி துளிர்த்தது. அதைக் கண்ட புலவர், அவன் தோளில் கைவைத்து “பொறு; நலங்கிள்ளி பொறு; நாம் ஊகிக் கவும் முடியாத பல மர்மங்கள் மன்னன் மரணத்தில் கலந்து கிடக்கின்றன. முதலில் நின் தமையனுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்” என்றார். 


4. சடங்கும் சதியும் 

அவனி சுந்தரி இத்தனைக்கும் தனது முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டவில்லை. நலங்கிள்ளி வெளியே சென்ற அடுத்த விநாடி, வெளியே தடதட வென்று கேட்ட புரவிக் குளம்பு ஒலிகளில் இருந்து, புதுமன்னன் வெறியுடன் புகாரின் அரண்மனைக்குச் செல்கிறான் என்பதை சந்தேகமறப் புரிந்து கெண்டாள். அதன் விளைவாகப் புலவரை நோக்கி, “மன்னரை அரண்மனைக்குக் கொண்டு செல்லட்டுமா?” என்று வினவினாள். 

“வேண்டாம்” என்றார், புலவர் திட்டமாக. 

“ஏன்?” 

“வெளியே உனக்கு ஆபத்து காத்திருக்கிறது” 

அவனி சுந்தரி புரிந்து கொண்டாலும், புரிந்து கொள்ளாதது போலவே கேட்டாள்,”என்ன ஆபத்து புலவரே?” என்று. 

“நீ இங்கு மன்னன் உடலைக் கொணர்ந்தது தெரிந்தால், மக்கள் உன்னைக் கொலைகாரி என்று தீர்மானிப்பார்கள். இந்தப் புகாரின் சிறப்பான பல இடங்களைக் கடல்கோள் அழித்துவிட் டது. ஆனால் முக்கியமான ஓரிடத்தை அது தொடவும் இல்லை..” 

”எது?” 

“நாளங்காடிப் பூதம் இருக்கும் இடம்” 

“அது இன்னும் இருக்கிறதா?” 

“அது மட்டுமல்ல,அதன் எதிரே அந்தப் பழைய பலிபீடமும் இருக்கிறது”. 

*மக்கள் பூதத்திற்கு என்னைப் பலியிட்டு விடுவார்கள் என்று கூறுகிறீர்களா?” அதைக் கேட்ட அவனி சுந்தரியின் உதடுகளில் இள நகை படர்ந்தது. முகத்தில் ஓர் அலட்சியமும் தெரிந்தது. 

புலவர் அந்தப் புன் முறுவலையும் கவனித்தார். அலட்சிய பாவத்தையும் கவனித்தார்.அவர் முகத்தில் முன்னிருந்த கவலையை விடப் பன்மடங்கு அதிகக் கவலை துளிர்த்தது. இதில் நகைப் பதற்கு ஏதுமில்லை மகளே; திகைப்பதற்குத்தான் இடம் இருக் கிறது. புகாரின் மக்களை நீ அறிய மாட்டாய்…” என்று ஏதோ சொல்லப்போன புலவரை இடைமறித்து, “ஏன் அறியமாட்டேன், கொலைகாரர்கள்” என்றாள், அவனி சுந்தரி. 

புலவர் முகத்தில் வேதனை படர்ந்தது.”இல்லை அவனி சுந்தரி, இல்லை. புகாரின் மக்களைப் போல் பண்புள்ள மக்களை உலகத்தில் நீ பார்க்க முடியாது. ஆனால்; அவர்கள் கிள்ளிவளவனை உயிரைப் போல் நேசிக்கிறார்கள். அவன் வெற்றியுடன் திரும்பி வருவான் என்று திட்டமாக நம்பி, அவனை வரவேற்க ஏற்பாடுகளும் சென்ற பத்து நாளாகக் குதூகலமாக நடந்து வருகின்றன. அவன் இப் படித் திரும்பி வந்திருக்கிறான் என்பதை உணர்ந்தால், அவனை நீ தன்னந்தனியாக அவன் படைக்காவலர் உதவியின்றிக் கொண்டு வந்திருக்கிறாய் என்பதை அறிந்தால், உனக்கு ஏற்படக்கூடிய அனர்த்தத்தை எண்ணவும் எனக்கு அச்சமாயிருக்கிறது. ஆகவே நீ இந்த மாளிகையைவிட்டு அகலாதே. அதோ அந்தப் பூதலனும் வெளியில் தலையைக் காட்டவேண்டாம்” என்று கூறினார் கோவூர் கிழார், வேதனை தம் குரலிலும் நன்றாக ஒலிக்க. அத்துடன் நில்லா மல், தம் இரு கைகளையும் தட்டிச் சீடர்கள் இருவரை அழைத்து. ‘இவர்கள் இருவரும் தங்கத் தனி அறைகளைக் காட்டுங்கள்” என்றும் உத்தரவிட்டார். 

ஆனால், அவனி சுந்தரி நின்ற இடத்தைவிட்டு நகரவில்லை. மன்னவன் சடலம் அரண்மனை செல்லவேண்டும். அதுவரை இங்கேயே இருக்கிறேன். எனக்கும் வேலையிருக்கிறது என்று மிகுந்த பிடிவாதத்துடன் கூறவும் செய்தாள். 

“இப்பொழுது அரண்மனைக் காவலர் வருவார்” என்று எச்சரித்தார் புலவர். 

“வரட்டுமே” 

“அவர்கள் கண்களில் நீ படாதிருப்பது நல்லது.” 

“நான் யார் என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்?”

“புகாரின் காவலரின் கூரிய அறிவை நீ அறிய மாட்டாய். விநாடி நேரத்தில் விஷயங்களை அலசி முடிபோடும் திறன் அவர்களுக்கு உண்டு.” 

“இருந்தால் என்ன?” 

“மன்னன் சடலத்துடன் உன்னையும் அழைத்துச் செல்லலாம்” 

“இது என்ன, புது மன்னர் உத்தரவாயிருக்குமோ?”

அவள் கடைசிக் கேள்வியில் கேலி தொனித்தது: இதைக் கவனித்த கிழார் சொன்னார், “இன்னும் நலங்கிள்ளிக்கு முடி சூட்டப்படவில்லை” என்று. 

“புலவரே! நீர் சொல்வது விந்தையாயிருக்கிறது. முடிசூடி னால்தான் மன்னன் ஆகலாமா? மன்னன் இல்லையேல் இளவல் மன்னன் தானே?” என்று கேட்டாள் கன்னரர் இளவரசி. 

“சம்பிரதாயப்படி நீ சொல்வது சரி. ஆனால்,சூழ்நிலையைப் பார்…” என்று சொன்ன புலவர், திடீரெனத் தமது காதுகளைத் தீட்டிக் கொண்டு எதையோ உற்றுக் கேட்டார். தூரத்தே டம டமவென ஒற்றை முரசு தனிப்பட ஒலித்தது. ஒற்றைச் சங்கும் ஊதப்பட்டது. எங்கும் பெருங்கூச்சல் அலைகளையும் மீறி எழுந் தது. “புகார் உணர்ந்துவிட்டது…” என்று சொல்லிப் பெருமூச்சு விட்டார் புலவர். மகளே! நீ உள்ளே சென்றுவிடு” என்று கெஞ்சவும் செய்தார். 

ஆனால், கன்னர நாட்டு மகள் இருந்த இடத்தைவிட்டு நகர வும் மறுத்தாள். “புலவரே! குளமுற்றத்தில் நடந்தது என்ன என்பதை நான் உங்களுக்கு இன்னும் விவரித்துச் சொல்லவில்லை. அதற்கு இப்பொழுது தேவையும் இல்லை; அவகாசமும் இல்லை. பிறகு சொல்கிறேன். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். இதோ பஞ்சணையில் தூங்கிக் கிடக்கும் மன்னன் வேண்டுகோள் ஒன்று இருக்கிறது. அவர் இட்ட ஆணை ஒன்று இருக்கிறது. அதை நான் மீற முடியாது. அவர் சடலம் அக்கினிக்கு இரையாகும் வரை, நான் அவரைவிட்டு அகல முடியாது. புகார். மக்கள் அல்ல, இந்த நாடே புரண்டு என்மேல் விழுந்தாலும், என்னைச் சிதைத்தாலும், மன்னரை விட்டு நான் அகலமாட்டேன்” என்று திடமாகக் கூறினாள். அவள் திடம் கிழாருக்கு அச்சத்தின் மேல் அச்சத்தை விளைவிக்கவே, அவர் ஏதும் பேச சக்தியற்று நின்றார். 

மன்னனை எடுத்துச் செல்ல அரண்மனைக் காவலர், உப தளபதி யின் தலைமையில் உள்ளே வந்தார்கள். அவர்கள் மன்னன் சடலத்தை அணுகு முன்பு, அவனி சுந்தரி அந்தச் சடலத்தின் அருகில் சென்று நின்று கொண்டு, யாரையும் கிட்டே வரவேண்டாம் என்று தன் வலக் கையை உயர்த்திக் கம்பீரமாக சைகை செய்தாள். அதைக் கண்டதும், முன்னால் வந்த உபதளபதி வியப்பும் கோபமும் நிறைந்த விழிகளை அவள் மீது செலுத்தினான்.”இதற்கு என்ன அர்த்தம் புலவரே?” என்று புலவரை நோக்கியும் சீறினான். 

அவனி சுந்தரி எதற்கும் சலிக்காமல், பூதலனைக் கண் காட்டி அழைத்து, “பூதலா! மன்னரை ஜாக்கிரதையாக எடுத்துக் கொள்” என்று உத்தரவிட்டாள். பூதலன் அந்த மண்டபம் கிடு கிடுக்க நடந்து வந்து, மீண்டும் குழந்தை போல் அரசனைத் தூக்கிக் கொண்டான், “முன்னால் வழிகாட்டி நடவுங்கள்” என்று தளபதியைப் பார்த்து உத்தரவிட்ட அவனி சுந்தரி, மனனன சடலத்தைத் தாங்கிய பூதலனைப் பின்தொடர்ந்தாள். உபதளபதி ஒரு கணம் திகைத்தான், வேற்றொரு நாட்டுப் பெண் தன்னை உத்தரவு இடுவதைப்பார்த்து. பிறகு புலவரை நோக்கினான். அவள் சொற்படி நடக்கும்படி புலவர் கண்ஜாடை காட்டவே, உபதளபதி வழி காட்டி முன் சென்றான். 

வெளியே நின்றிருந்த தேரில் பூதலன் மன்னன் சடலத்தைக் கிடத்த, அவனி சுந்தரி அதன் முன்புறம் ஏறி புரவியின் கடிவாளக் கயிறுகளைப் பிடித்துக் கொண்டாள். பிறகு உபதளபதியை நோக்கி, “முன்னும் பின்னும் ஆட்கள் வரட்டும். மரணச் சங்கு கள் ஒலிக்கட்டும். ஒற்றைத்தாரை ஊதட்டும்” என்றாள். 

உபதளபதிக்குத் தான் எந்த உலகத்தில் இருக்கிறோம் என் பது புரியாததால், அவள் சொன்னபடியெல்லாம் செய்தான். மன்னன் சடல ஊர்வலம் மெள்ளப் புறப்பட்டது. ராச வீதிகள் எங்கும் பந்தங்கள் பெரிதாக எரிந்து கொண்டிருந்தன. மக்கள் மிக ஒழுங்காக இருபுறமும் சூழ்ந்து நின்றார்கள். இடையே வந்த புரவி வீரர் அணிவகுத்து ரதத்தை இரு புறத்திலும் காத்துச் சென்றார்கள். சில தாய்மார்கள் மன்னனைப் பார்த்துக் கதறினார் கள். விஷயத்தைப் புரிந்து கொண்டதுபோல் அரண்மனை வாயிலில் இருந்த பட்டத்து யானையும் பெரிதாகப் பிளறியது. 

புலவர் மாளிகையில் இருந்து அரண்மனை வெகுதூரம் இல்லா விட்டாலும், இந்த பவனி மிக நிதானமாகவே சென்று, சுக்ரோ தயத்திற்குச் சற்று முன்பாக அரண்மனையை அடைந்தது. அரண் மனையை அடைந்த பின்பும் அரசகுமாரியின் உத்தரவின்மேல், பூதலனே மன்னன் சடலத்தைத் தூக்கிக் கொண்டு, உள்ளே சென்று, அங்கிருந்த சோழர் பெருமண்டபத்தின் நடுவில் இருந்த பெருமஞ்சத்தில் அதை வளர்த்திவிட்டு, சற்று விலகித் தலைவணங் கினான். அவனி சுந்தரியும் தனது தலையைத் தாழ்த்தினாள். சுக்ரோ தயத்தில் இருந்த மக்கள் மன்னனை வந்து பார்த்துச் சென்ற வண்ணம் இருந்தார்கள். 

உள்ளத்தே எழுந்த உக்கிர உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு, அன்றும் மறுநாளும் ஈமச்சடங்குகளை நடத்தினான் நலங்கிள்ளி, தனது தம்பி மாவளத்தானுடன். அந்த இரண்டு நாளும் மாவளத் தான் ஏதும் பேசாமல் வாளாவிருந்தான். சடங்குகள் முடிந்த பின்பு மூன்றாம் நாள் அரண்மனை அந்தரங்க அறையில் இருந்த அண்ணன் நலங்கிள்ளியை அணுகினான். ஏதோ ஆழ்ந்த யோசனை யுடன் கடலை நோக்கிக் கண்களை ஓட்டிக் கொண்டிருந்த நலங் கிள்ளி, “என்ன தம்பி?” என்று வினவினான். 

“எனக்கு ஒரு வரம் வேண்டும்” என்றான், மாவளத்தான். 

“என்ன தம்பி?’ 

“துரோகி வந்திருக்கிறான்” 

“ஆம்” 

“தன்னந்தனியாக” 

“ஆம்” 

“அவனை ஒழித்துவிட்டால் என்ன?” 

மாவளத்தானின் இந்த உரையைக் கேட்ட நலங்கிள்ளியின் டுகளில் ஒரு துன்பப் புன்முறுவல் படர்ந்தது.”இது பூம்புகார் தம்பி!” என்று கூறினான், துன்பத்துடன். 

“ஆம் அண்ணா” மாவளத்தான் பதிலில் துடிப்பிருந்தது. 

“இங்கு அறம் இன்னும் சாகவில்லை”

“செத்துவிட்டது” 

“என்ன!” 

விளக்கினான் மாவளத்தான். 

தம்பி சொல்லைக் கேட்ட நலங்கிள்ளி, “இது உண்மையா?” என்று பெரும் பிரமிப்பு கலந்த குரலில் கேட்டதன்றி, இணையில்லாச் சினம் கலந்த விழிகளைத் தம்பி மீது நாட்டினான். 

“முற்றும் உண்மை; சதி அரண்மனையிலேயே நடக்கிறது” என்றான் மாவளத்தான், சூடாக. 

– தொடரும்

– அவனி சுந்தரி, ராணி முத்து, ராணி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *