கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: December 27, 2022
பார்வையிட்டோர்: 3,346 
 
 

(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘அக்பர் பாதுஷாவின் மகனாகப் பிறந்த பிறகு நீ உன் இஷ்டப்படி நடப்பதற்கு இடமில்லை.’

‘சக்கரவர்த்தியின் மகன் என்றால் எனக்கு உணர்ச்சிகள் இருக்கக் கூடாதா?.

‘ராஜாங்கத்தின் நிபந்தனைகளுக்குட்பட்டுதான் அந்த உணர்ச்சி களுக்கு இடமுண்டு.’

‘ராஜகுமாரனாகப் பிறந்ததற்காக நான் மனிதன் என்ற சுதந்திரத்தை இழக்க முடியுமா?’

‘ஸலீம், நீ விஷயத்தை ஆலோசனை செய்து பார்க்காமல் பேசுகிறாய். ஒரு சாம்ராஜ்யத்திற்குப் பலமான அஸ்திவாரம் போட்டுக் கட்டடம் ஏற்றிவரும் சக்கரவர்த்தி நான். எனக்கு மகனாகப் பிறந்த நீ, நான் போட்டிருக்கும் திட்டத்திற்கு விரோதமாகக் காரியம் செய்வது-முதலில், என் மகள் என்ற முறையிலேயே உனக்கு அழகன்று: இரண்டாவதாக, யுவராஜா என்ற முறையில் தப்பு. நீ உன்னிஷ்டப்படி நடப்பதென்றால் நான் ராஜ்ய பாரம் நடத்த முடியாது. உன்னுடைய ஒவ்வொரு செய்கையும் என்சாம்ராஜ்ய சிருஷ்டியுடன் தொடர்பு கொண்டது. நல்லதானாலும் கெட்டதானாலும் நீ செய்வது அதைப் பாதிக்கும். தந்தைக்கும் மகனுக்கும் உள்ள சம்பந்தத்தை அறுக்க முடியுமா? இப்போதுள்ள சக்கரவர்த்திக்கும் இனி வரப்போகும் சக்கரவர்த்திக்கும் இடையே இருக்கும் சம்பந்தத்தையும் அறுக்க முடியாது.’

அக்பர் பாதுஷா ஸலீமைத் தன் அறைக்கு வரவழைத்து உட்கார வைத்துக்கொண்டு அந்தரங்கமாக அவனுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்.

மாவை நேரம். ஸலீம் ஜன்னலடியில் உட்கார்ந்து கொண்டு தூரத்தில் தெரிந்த யமுனா நதிக்கரையைக் கவனிப்பவன் போல பார்வையைத் தூரச் செலுத்தி யோசனையிலாழ்ந்திருந்தான். அக்பர் அவனுடைய

முகத்தை உற்றுக் கவனித்துக்கொண்டு அவன் மனதை மாற்றுவதற்கான காரணங்களை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.

திடீரென்று ஸலீம் தன் முகத்தைத் தகப்பனார் பக்கம் திருப்பி, ‘என் இஷ்டத்தை தான் பூர்த்தி செய்துகொள்ளமுடியாவிட்டால் ராஜ பதவி எனக்கெதற்கு?’ என்று கேட்டான்.

‘உனது இஷ்டத்தைப் பூர்த்தி செய்துகொள்வதற்கா ராஜ பதவி? இல்லை. அதில் உனது இஷ்டம் என்பது தனியாக இருக்க முடியாது. ‘அந்தப் பதவி எனக்கு வேண்டாம். அவ்வளவு தானே? அதிலும் ஏதாவது கட்டாயம் உண்டோ?’ என்று ஸலீம் வெடுக்கென்று கேட்டான். அக்பர் முகம் கொஞ்சம் சிவந்தது. ஆனால், தனது கோபத்தை உடனே அடக்கிக்கொண்டு அமைதியாகவே பதில் சொன்னார்.

‘ஸலீம், நான் சொல்லுவதை நீ கொஞ்சம் நன்றாகக் கேட்கவேண்டும். இன்று மொகலாயர் ஹிந்துஸ்தானத்தில் ஒரு விசித்திரமான நிலைமை யில் இருக்கிறார்கள். கேவலம் மிருக பலத்தால், ஆள் கூட்டத்தால், ஜனங்களின் மேல் ஆதிக்கம்கொண்டு விட்டார்கள். ஆனால், இந்த வெற்றி என்றும் நிலைக்காது. இது நிரந்தரமாக நிற்க வேண்டுமானால் ஜனங்களைப் பல ராஜ தந்திர முறைகளில் வசப்படுத்தவேண்டும். அவர்களுடைய எதிர்ப்பைச் செயலற்றுப் போகும்படி செய்யவேண்டும்.

“அதற்காக நீங்கள் செய்ததெல்லாம்-செய்வதெல்லாம்-போதாதா? ராஜ்யப் பொறுப்பற்ற நான் ஏன் அதில் ஈடுபட்டு என் வாழ்க்கை யின்பத்தை இழக்கவேண்டும்? நீங்கள் என்னையும் இப்படி நிர்பந்தம் செய்வது முறையா?’ என்று ஸலீம் மனங் கலங்கி கொஞ்சம் கெஞ்சும் பாவனையாக கேட்டான்.

‘பார்க்கப் போனால், முறையென்பது என்ன ஸலீம்?’ என்று கேட்டார் அக்பர்.

‘கூடாது. கூடாது! நீங்கள் இந்த விஷயத்திவ் என்னைக் கட்டுப் படுத்தக்கூடாது. அனார்க்கலி இல்லாமல் என்னால் இருக்க முடியாது!’

அனார்க்கலியை நீ மணந்துகொள்வதில் அநேக சங்கடங்கள் இருக் கின்றன. ராஜ தந்திர முறையை அனுசரித்து நீ இப்பொழுது ஒரு ராஜபுத்திர பெண்ணை மணந்து கொள்ளவேண்டியது அவசியமாக இருக்கிறது. உன் தாயார் ஒரு ராஜபுத்திர ஸ்திரீயாக இருப்பது மொகலாய சாம்ராஜ்யத்திற்கு ஒரு அடிப்படையான பலம். உன் மனைவியும் அதாவது வரப்போகிற ராணியும் ராஜபுத்ர ஸ்திரீயாக இருந்தால் ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை சம்பூர்ணமாகும். என் திட்டம் வெற்றிபெற்று விடும். மொகலாயர்கள் ஹிந்துக்களாகிவிடுவார்கள். இந்தியருடன் கலந்து விடுவார்கள். அனார்க்கலியை நீ மணப்பது வருங்காலத்தில் ராஜ்யபாரத்திற்கு மிகவும் இடைஞ்சலாக இருக்கும். ஆகையால் ஸலீம், அனார்க்கலியைக் பற்றிய எண்ணத்தை நீ அகற்றிவிடவேண்டும். அது மிகவும் அவசியம். இனி மேல் நீ அனார்க்கலியைக் காண முடியாது.” இந்த ராஜ்யம் எனக்கு வேண்டாம்; எனக்கு அனார்க்கலிதான் வேண்டும்!” என்று ஸலீம் உறுதியாகச் சொன்னாள்.

‘ஸலீம்,நானும் இளைஞனாக இருந்தவன்தான். உன் தாயை, ஒரு காலத்தில், நானும் காதலித்துக் கைபற்றியவன்தாள். நான் அனுபவத்தின் பேரில் சொல்லுகிறேன்; தெரிந்துகொள். வாழ்க்கையில் காதல்மட்டும் பிரதானமானதன்று. சரித்திரக் கீர்த்திதான் சிறந்தது. அதுதான் உன் பெயரை எக்காலத்திற்கும் பொன் எழுத்தில் பொறித்து நிறுத்தும்.’

‘அந்தக் கீர்த்தி எனக்கு வேண்டாம். அனார்க்கலியின் காதல் எனக்கு மேலானது.’

***

தன் மகனின் பிடிவாதத்தைப் பார்த்து அக்பர் மனம் கலங்கிப்போனார். ஆனால், ஸலீமுக்கும் அனார்க்கலிக்கும் இடையே இருந்த காதலின் ஆழத்தையும் மேன்மையையும் அவர் அறிந்திருந்தார். தன் அரண்மனையி லிருந்த அந்த அழகிய முஸ்லீம் பெண்ணின்மேல் தன் மகனுக்கு அப்பேர்ப்பட்ட பற்று ஏற்பட்டதைக் குறித்து அக்பர் விசனப்பட்டது முண்டு, ஸலீமுடைய முதற் காதலைத் தான் அப்படி பங்கப்படுத்த வேண்டியிருந்ததே என்று மிகவும் பரிதாபப்பட்டார்.

ஆனால், அக்பர் பாதுஷாவின் கண் முன் சாம்ராஜ்யக் கனவு ஒன்று தான் நின்றது. அதற்கான வழிகளில்தான் அவருடைய மனது ஓடிற்று. மொகலாய ஏகாதிபத்தியத்திற்கு முக்கிய இடரான ராஜபுத்திரர்களை எப்படியாவது சமரஸ முறையில் கைக்குள் போட்டுக்கொள்ள வேண்டு மென்பது அவரது முதல் கொள்கை, அதன் பூர்வாங்கமாகத்தான் அவர் ஸலீமின் தாயை ராஜபுத்திர குலத்திலிருந்து மணந்து கொண்டார். ஸலீமும் மான் பாயை மணந்துவிட்டால் ராஜபுத்திர எதிர்ப்பு செயவற்றுப் போகும். பிறகு மான் சிங்கையும் தோடர் மாவையும் இரு கரங்களாக வைத்துக்கொண்டு ஹிந்துஸ்தானத்தின் மக்களை ஒன்றுபடுத்தி விடலாம் என்பது அவர் கனவு.

***

இந்த மகத்தான ஆசைக்குத் தன் மகன் கொண்ட காதல் ஒரு இடையூறாக வந்து மூண்டது அக்பருக்குக் கோபத்தை உண்டாக்கிற்று. சரித்திரத்தி லேயே நிரந்தர மாக பரிமளிக்கப் போகிற தன் வேலைக்குத் தடையாக அனார்க்கலி என்ற ஒரு சிறு பெண் தோன்றியது அவருக்குப் பிடிக்க வில்லை. அந்த இடையூறை ஒரு முள்போல அகற்றி எறிந்துவிட வேண்டியதுதான் என்று தீர்மானித்தார்.

‘ஸலீம், இதில் சம்பந்தப்பட்டிருப்பது உன் கீர்த்தியன்று, என் வாழ்க்கையின்பம், என் ஆசை, என் ஜீவிய தத்துவம் – அது உன்னாலா அழியவேண்டும்? என் மனக் கோட்டையை இடித்துத் தள்ள நீயா – என் தலைமகனான நீயா – முற்படவேண்டும்? என்னைக் காட்டிலும் உனக்கு அனார்க்கலி மேலா – நேற்று முளைத்த பெண்?’ என்று அக்பர் உணர்ச்சியுடன் பேசினார்.

‘என்னைக் காட்டிலும் உங்களுக்கு உங்கள் கீர்த்தி மேலா? அதற்கு என்னையும் என் காதலியையும் பலியிடப் பார்க்கிறீர்களே?’ என்று ஸலீம் சட்டென்று குறுக்கிட்டு கேட்டான்.

அக்பர் திகைப்படைந்து போனார். ஆனால், தன்னுடைய தீர்மானத்தை மாற்ற வேண்டுமென்ற எண்ணமே அவருக்கு ஏற்படவில்லை.

‘அதுதான் முதலிலேயே சொன்னேனே – என் கீர்த்தி சுயநலத்தில் முளைப்பதன்று. அதில் எனக்கு மட்டும் திருப்தியென்பதில்லை. ஹிந்துஸ்தானமே நிம்மதியடையும்; சீரடையும். அதில்தான் என் ஆசை, அதில்தான் என் உயிர். அதை வளர்த்தால் நீயும் உயர்வடைவாய். சரித்திரம் உன்னை வாயாறப் புகழும்.

‘எனக்குப் புகழ் வேண்டாம். பெருமை வேண்டாம், பதவியும் வேண்டாம்-‘

‘நான்கூட வேண்டாமா?’ என்று கோபத்துடன் கேட்டார். ஸலீமுக்கு அக்பர் சொன்னது காதில் ஏறவில்லை.

‘அனார்க்கலி தான் வேண்டும்!’ என்று ஸலீம் நிதானமாக, தீர்மானத் துடன் சொன்னான்.

‘உன்னைப் பெற்ற தகப்பன் அன்பு உனக்கு வேண்டாமா!’

‘நீங்கள் கேட்கும் கேள்வியை நான் திருப்பித்தான் கேட்க வேண்டும். என்மேல் – நீங்கள் பெற்றெடுத்த பிள்ளைமேல்-உங்களுக்கு அன்பு இல்லையா?’

‘அனார்க்கலியை மறந்துவிடு. மான்பாய் அவளைவிட அழகானவன்.’

‘அனார்க்கலியிடம் அழகுமட்டுமில்லையே!’

‘பின்?’ என்று அக்பர் ஆச்சரியத்துடன் கேட்டார்.

‘அவள் என்னை அடிமையாக்கிக் கொண்டு விட்டாள். இனிமேல் வேறு யாராலும் என்னை அவளிடமிருந்து மீட்க முடியாது.’

‘அவளே அடிமை என்பதை மறந்துவிட்டாயா உன் மோகத்தில்?’

‘அவன் உங்கள் அடிமையாயிருக்கலாம். என் ஹிருதயத்தின் அரசி!’

‘உன் அரசியை நீ மறுபடி சந்தித்தால்தானே? சரி, நீ போகலாம்!’ என்று அக்பர் அடங்காத கோபத்துடன் சொன்னார்.

ஸலீம் மறுவார்த்தை சொல்லாமல் எழுந்து வெளியே போனான். எப்பொழுது போகச் சொல்லப் போகிறார் என்று துடித்துக் கொண்டிருந் தான். அனார்க்கலியின் அழகு சொட்டும் முகம் அவனைக் கையெடுத்துக் கூப்பிட்டது.

அக்பருக்கு யோசனை ஓடவில்லை. இளம் காதலர்களின் இன்பக் கனவு வெகுநேரம் அவருடைய மனதில் தோன்றித் தோன்றி அவருடைய உறுதியைச் சோதனை செய்தது. கடைசியாக மனோதிடம் கொண்டு அனார்க்கலிக்குச் சொல்லியனுப்பினார்.

பதுமையே பெயர்ந்து வருவதுபோல வந்தாள் அனார்க்கலி. ஒடிந்து விழுவது போன்ற வாட்டமான தேகமுடையவள். ஜ்வாலை விட்டெரிந்த நல்ல சிவப்பு மேனி, தந்தத்தைக் கடைசல் பிடித்ததுபோன்ற முகவெட்டு. நாசி, வாய், அங்கங்கள். மூடிய உதடுகள் ஒரு மாதுளை மொக்குப் போலவே சிவப்பாகக் கோடியில் கூர்ந்து இருந்தன. கை கால் விரல் களில் மருதாணிக்காவி கிளிமூக்குச் சிவப்பாக இருந்தது. சரிகை மயமான பட்டாடை உடுத்திருந்தாள். வெண்மையான மஸ்லின் துணியை முக்காடாகப்போட்டு முகத்தை மூடி உடலையும் போர்த்திக் கொண்டிருந்தாள். பாதங்களும் கைகளும்தான் வெளியில் தெரித்தன. கால் சதங்கை மெல்ல ஒலிக்க அவள் உள்ளே வந்து நின்ற கொஞ்ச நேரத்திற்குப் பிறகுதான் அக்பர் அவளைப் பார்த்தார்.

‘குழந்தாய் அனார்க்கலி/ மிகவும் முக்கியமான விஷயமாக உன்னை இங்கே வரவழைத்தேன்.’

‘உத்தரவு வந்தவுடனேயே புறப்பட்டு வந்து விட்டேன், மகராஜ்!’

‘நீ ஸலீமை உண்மையாகக் காதலிக்கிறாயா?’ என்று அக்பர் அவள் முகத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டு கேட்டார்.

வெட்கத்தாலோ கோபத்தாலோ அனார்க்கலியின் முகம் சிவந்து விட்டது. தலை குனிந்து கொண்டு பதில் சொல்லாமல் நின்றாள்.

‘நீ அவனைக் காதலிப்பது உண்மையானால் அவனுக்காக நீ எது வேண்டுமானாலும் செய்வாயல்லவா?’

அக்பரின் கேள்வி அனார்க்கலிக்கு சந்தேகத்தை உண்டாக்கிற்று. ஸலீமின் அனுமதியின்றி முதலில் ஒன்றும் அஜாக்கிரதையாக வார்த்தை கொடுத்துவிடக் கூடாதென்று தீர்மானித்துக் கொண்டாள்.

‘தான் என்ன செய்யவேண்டும். மகராஜ்?’ என்று கேட்டாள்.

‘அவனுடைய நன்மையைத்தான் நான் கோருவேன் என்பது உனக்கு நிச்சயம்தானே?’ என்று அக்பர் கேட்டார்.

‘அதற்கு நான் என்ன பதில் சொல்லட்டும்?’ என்று அனார்க்கலி தரையைப் பார்த்துக்கொண்டு சொன்னான்.

அவள் சாதுரியத்தைக் கண்டு அக்பர் ஆச்சரியமடைந்தார்.

‘நீ உண்மையில் கெட்டிக்காரிதான்! ஆகையால் தீயே நிலைமையை நன்றாக அர்த்தம் செய்துகொள்ளுவாய்-நான் அதிகம் சொல்ல வேண்டிய தில்லை என்று நினைக்கிறேன்… அவன் நன்மையை உத்தேசித்து…. என்ன… நீ அவனை மறந்துவிட வேண்டும், அனார்க்கலி!’ என்றார் அக்பர்.

அனார்க்கலி உலுக்கி விழுந்ததை அக்பர் கவனித்ததும் கவனிக்காதது போல வேகமாக மேலே பேசினார்.

‘அவன் என் மகன் என்ற காரணத்தால் உன்னை மணப்பதிற்கில்லை என்றதை மட்டும் உனக்குச் சொல்லுகிறேன். நீ அவனை மறக்க வேண்டும்’.

அனார்க்கலி அமைதி கொண்டு விட்டாள் ஒரு கணத்தில்.

‘தான் யார், அவரை மறக்கவோ அல்லது நினைவில் வைத்துக் கொள்ளவோ?’ என்று நிதானமாகச் சொன்னாள்.

‘அப்படி யென்றால்?’

‘அவ்விஷயத்தில் ராஜகுமாரர் எனக்கு உரிமை கொடுக்கவில்லை.’

அக்பருக்கு அவளுடைய பதில் திருப்தி அளிக்கவே இல்லை. அவர் முகம் சிவந்தது.

‘பெண்ணே! நீ என்ன சொல்லுகிறாய்?’ என்று அதட்டிக் கேட்டார்.

‘நான் இந்த விஷயத்தில் சொல்லுவதற்கு ஒன்றுமே இல்லை!”

‘நீ சொல்லாவிட்டால் நான் சொல்லுகிறேன் கேள், உனக்கும் ஸலீமுக்கும் இனிமேல் சந்திப்பு கிடையாது!’

‘அது ராஜகுமாரர் மூலம் எனக்குத் தெரியலாமே! என்னை வரவழைத்ததெதற்கு? உத்தரவானால் நான் போகிறேன்’.

அக்பரின் கோபம் இன்னும் அதிகரித்தது.

‘ராஜகுமாரனுக்கும் உனக்கும் ஒரு சம்பத்தமும் கிடையாது. நீ என் அடிமை-‘

‘நான் உங்கள் அடிமையா! என் மனது உங்கள் அடிமை அன்று! அது ராஜகுமாரர் அடிமை!’ என்று அனார்க்கலி குறுக்கிட்டு, முகம் ஜ்வலிக்கக் கூறினாள்.

‘நீ அதிகப்பிரசங்கியான பெண்ணாய் இருக்கிறாய்! நீ ஸலீமை விடமாட்டாயா?’

அக்பர் அத்த மாதிரி கேட்டது அனார்க்கலிக்குக் குத்தினது போலிருந்தது.

‘விடமாட்டேன்!’ என்று மெய்ம்மறந்து கூறினாள்.

‘நீ அறியாப்பெண். உன் இச்சையைப் பூர்த்திசெய்து கொள்வதற்காக ஒரு ராஜகுமாரனை அவனுடைய ஆசனத்திலிருந்து கீழே இழுக்கிறாய். ‘இல்லை, ஷாஹன்ஷாஹ்! அவர்தான் என்னை அன்பின் உன்னத ஆசனத்தில் ஏற்றி உட்காரவைத்திருக்கிறார்.’

‘நீ அவனைக் காணமுடியாது இனிமேல்!”

‘பாதகமில்லை!”

‘ஆகவே மணக்கவும் முடியாது”

‘நான் கேட்கவில்லையே, மணமே வேண்டாம். அவர் நினைவு எனக்குப் போதும்.. அது போகாது. அதை யார் தடுக்க முடியும். ஷாஹன்ஷாஹ்?’

‘நான் உன் நினைவே இல்லாமல் நீயே இல்லாமல் செய்து விட்டால்?’

‘இவ்வளவுதானா உங்கள் சாமர்த்தியம்! நான் இல்லாமற்போனால் என்ன? உலகத்தில் அனார்க்கலி – மாதுளை மொக்கு – இருக்கும்வரை, என் நினைவு ஸலீமின் ஹிருதயத்திலும் உலக இலக்கியத்தின் ஹிருதயத் திலும் மறையாது! இன்று நீங்கள் என்னை அழித்துவிட்டாலும் உலகத்தில் மாதுளை மொக்கைப் பற்றிய கதை மறையாது!’

அனார்க்கலி மெய்ம்மறந்து சிறிது நேரம் அப்படியே ஸ்தம்பித்துப் போனாள். பிறகு திரும்பி அந்தப்புரத்தின் பக்கம் போய் விட்டாள்.

அக்பர் திகைத்துப்போய் நின்றார். போர்முனையில் கூட இப்பேர்ப் பட்ட எதிரியை அவர் சந்தித்ததே கிடையாது. அவருடைய வெற்றி களின் இறுதியில், ஒரு பெண்ணின் கையில் அவர் அடைந்த இந்தத் தோல்வி அவருக்குத் தாங்கமுடியாததாகப் போயிற்று. வெட்கமும் ஆத்திரமும் பொங்கி எழுந்தன. அவருடைய மனது தடுமாறிற்று. உரக்கப் பேசலானார்:

‘இல்லை! நான் தணியமுடியாது! இவ்வளவு காலத்திற்குப் பிறகு இந்தச் சின்ன காரணத்தால் என் ஆசை வீணாவதா? கூடாது? பாவம், ஸலீமின் ஆசை மண்ணாகிறது. ஆனால், என்ன செய்கிறது? காதலுக்கு இங்கே இடமில்லை! என் வழியிலிருக்கும் இந்த முள்ளைக் கூசாமல் எடுத்தெறிந்துவிட வேண்டியதுதான்!’

எங்கும் இருள் சூழ்ந்துவிட்டது. ஒரு நட்சத்திரம் வானத்திலிருந்து உதிர்ந்து விழுந்து அந்தகாரத்தில் மறைந்தது.

இளவரசன் ஸலீமின் முதற்காதலியின் பெயர் அனார்க்கலி – மாதுளை மொக்கு.

– 1943

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *