a+a=2a ஆயின் கதை + கதை = இரு கதைகளல்ல

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 2,137 
 

(1970 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘பொறி காணலவனொடு மீனமுங் குறையாச், செறி மாண் கழிசூழ் புளியந்துருத்தி மட்டக்களப்பு’ எனப் புலவராற் பாடப் பெற்ற மட்டக்களப்பின் அவாசிக் கண்ணதாய கல் முனையிலே பகுதிக் காரியாதிகாரி கந்தோரில் எழுத்தராகக் கடமையாற்றிய சிவஞானம் அவர்கட்கு அதே புலவரால் ‘நிரை கழலரவ நிறைமொழி பெறீஇக் கோணா தோங்கிய கோணமாமலை’ எனப் பாடப் பெற்ற திரிகோணமலையின் குண திசைக் கண்ண தான தம்பலகாமம் பகுதிக் காரியாதிகாரி கந்தோருக்கு மாற்றம் கிடைத்தது.

இந்த மாற்றம் அவர் எதிர்பார்த்ததே. கல்முனை யைச் சேர்ந்த பாண்டிருப்பை, சிவஞானம் ஜனனபதி யாகக் கொண்டிருந்தாலும் ஊரிலே அவர் ஆறாண்டு கட்குமேல்-அதாவது பொதுவிதியை மீறி இரண்டாண்டு கள்–உத்தியோகம் பார்த்து விட்டார். ஆகவே அடுத்த வருடத் தொடக்கத்தில் அவர் மாற்றப்படுவது தவிர்க்க முடியாததொன்று. ஆகவே மூன்று மாதங்கட்கு முன் னால், அவர் மாற்றம் பெறுபவராகக் குறிக்கப்பட்ட போது. தான் அங்கத்தவராகவுள்ள தொழிற் சங்கத்தை நாடி அதன் துணையோடு தம்பலகாமத்திற்கு மாறிக் கொள்வதற்கான ஒழுங்குகளைச் செய்திருந்தார். ஏனென் றாற் கொழும்பு போன்ற பெரிய பட்டினங்களின் வீட்டுக் கஷ்டம் ஏற்கனவே அவர் அனுபவித்த ஒன்று. தம்பல காமத்துப் பச்சைப் பெருமாள் அரிசியின் சுவையையும் கோணசரின் மகிமையையும் அவர் மனைவி கேள்விப்பட்ட டிருக்கிறாள். மலை நாட்டுக் குளிர் அவரது தொய்வு நோய்க்கு ஒத்து வராது என்பது அவரது கிழட்டுத் தாயாரின் வைத்திய சாஸ்திரம். எல்லாஞ் சேர்ந்து தம்பல காமத்தை அவர் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களாக அமைந்தன.

ஆகவே தம்பலகாமத்திற்கு மாற்றக் கட்டளை கிடைத்தபோது சிவஞானம் அதிர்ச்சியோ, ஆனந்தமோ அடையவில்லை. ‘என் கடன் பணி செய்து கிடைப்பதே’ என்ற வாக்கை யுணர்ந்த கர்மயோகி போலப் புதிய இடத்திற்குப் போவதற்கு அவர் ஆயத்தமாகிக் கொண்டி ருந்தார். சிரேஷ்ட பாடசாலைத் தராதர வகுப்பிற் படித்துக் கொண்டிருந்த தன் மூத்த மகனை மட்டக் களப்புப் பட்டினத்தின் விடு திப் பாடசாலையிற் சேர்ப்ப தற்கான ஒழுங்குகளைச் செய்தார். அடுத்த மூன்று பிள்ளைகளையும் மனைவியையும் தம்பலகாமம் கொண்டு செல்வது அவரது திட்டம். ஏற்கனவே தம்பலகாமம் சென்று குடியிருக்க வீடும் எடுத்திருந்தார். இப்போது அம்மி தொடக்கம் அலுமாரி வரையுள்ள தன் பொரு.. களையெல்லாம் கட்டி ஏற்றிப் புது இடத்திற்குக் கொண்டு போவதற்கான ஒழுங்குகளைச் செய்து கொண் டிருந்தார். ஊரை விட்டுப் போக இன்னமும் ஒரு வாரமே இருந்தது. சிவஞானத்தின் அயல்வீட்டுக்காரரூம், இனத்தவருமான ஆசிரியர் சிவசேகரததிற்குத் தம்பலகாமம் கள்ளிமேடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு மாற்றக் கட்டளை கிடைத்தது. ஆசிரியர் தனக்கு மாற்றம் வருமென எதிர்பார்க்கவேயில்லை. ஏனென் றால் அவர் எம். பி.யின் கையாள்! எனவே மாற்றக் கட்டளையினால் அதிர்ச்சியடைந்த சிவசேகரம் கட்டளையைக் கையில் எடுத்துக் கொண்டு நேரே எம்.பி.யிடம் சென்றார். எம் பி. சொன்னார், “பத்து ஆண்டுகட்குமேல் உள்ளூரிற் கடமையாற்றிய, நாற்பது வயதுக்குட்பட்ட ஆசிரி யர்களை எல்லாம் வெளி மாகாணங்கட்கு மாற்ற வேண்டும் என்ற கொள்கையை அரசாங்கம் மிகக் கண்டிப்பாகக் கடை.ப்பிடிக்கின்றது. நான் உங்களுக் காக. எவ்வளவோ வாதாடினேன். கடைசியாய் மலை நாட்டிற்குத் தூக்கி எறியப்பட’ இருந்த உங்களுக்குத் திரிகோணமலைப் பகுதிக்கு மாற்றச் செய்தேன். எதற்கும் சில நாட்கள் அங்கே போங்கள். நான் வேறு வழி பார்க்கிறேன்” வேறு வழியின்றி வீட்டுக்குத் திரும்பிய ஆசிரியரிடம், அவரைப் போலவே மாற்றம் பெற்ற இன்னோர் ஆசிரியர் ”தன்னுடைய ஆட்களை எல்லாம் உள்ளுக் கெடுக்கத்தான் எங்களைத் தூக்கி எறிந்திருக்கிறான்’ என்று வத்தி வைத்தார். ”நான் இந்த மாற்றத்தைப் ‘புறொட்டெஸ்ற்’ பண்ணத்தான் போகிறேன்” என்று ஆக்ரோஷமாக வேறு சொல்லி வைத்தார். அவரது பேச்சில் ‘எடுபட்ட’ சிவசேகரம் ஆத்திரத் தோடும் கோபத்தோடும் பஸ்ஸில் இருந்து இறங் கினார். கிளாக்கர் சிவஞானம் தன் வீட்டு விறாந்தையில் தன் வீட்டுப் பாவனைப் பொருட்களையும் தட்டுமுட்டுச் சாமான்களையும் வைக்கோற் பிரிகளினாற் சுற்றியும் கட தாசிகளைத் திணித்தும் சிக்காராகக் கட்டிக் கொண்டு இருந்தார். அந்த வேலையில் காரியாலயப் பீயோன் அவருக்கு உதவி செய்து கொண்டு இருந்தான். இங்கிருந்து மட்டக் களப்பிற்குப் பொருட்களை லொறியில் கொண்டு சென்று, அங்கு இறக்கி மீண்டும் ரெயிலில் ஏற்றுவது சிரம மாகவும், பொருட்கட்குச் சேதம் விளைவிப்பதாகவும் இருக்கும்’ என்பதை உணர்ந்திருந்த சிவஞானம், இங்கு இருந்து லொறி மூலமே நேரடியாக அவைகளைக் கொண்டு செல்வதற்கான அனுமதியைத் தன் கந்தோர் மேலதிகாரிகளிடமிருந்து பெற்றிருந்தார். நாளைக் காலை சாமான்களை ஏற்ற லொறி வந்து விடும்.

பஸ்ஸிலிருந்து இறங்கிய ஆசிரியர் தன் வீட்டிற்குச் செல்லாமல் படலையைத் திறந்து கொண்டு நேரே சிவஞானத்தின் வீட்டிற்கு வந்தார். நிர்விசாரமாகத் தன் பொருட்களைக் கட்டிக்கொண்டு இருந்த கிளாக் கரைப் பார்க்க அவருக்கு எரிச்சலாகவும், ஆத்திர மாகவும் இருந்தது. “வாங்க மாஸ்ரர்” என்று வர வேற்ற சிவஞானத்திடம் ”எனக்கும் தம்பலகாமத் திற்கு மாற்றம் வந்திருக்கிறது” என்று ஆற்றாமை யோடு சொன்னார்.

“அப்படியா! மெத்தச் சந்தோஷம். இங்கேயும் அடுத்த வீட்டுக்காரராக வாழ்ந்தது போல அங்கேயும் வாழ்ந்து விடலாம். எப்போ புறப்படுகிறீர்கள்?” என்று ஆனந்தமாகவே கேட்டார் சிவஞானம். ”நான் போகப் போவதில்லை. மினிஸ்ரர் வரை சென்று ‘புறெட்டெஸ்ற்’ பண்ணுவேன்” என்று ஆத் திரததோடு சொன்னார் சிவசேகரம்.

“அது உங்க விருப்பம் மாஸ்ரர். ஆனால் நாட்டின் எந்தப் பகுதியிலும் சேவை செய்யத் தயார் என்று நாம் எல்லோரும் உத்தியோகம் கிடைத்தபோது ஒப்புக் கொண்டிருச்கிறோம்.” “அது நீங்கள் தான். அதற்காகத்தான் நாங்கள் அரசாங்கச் சலுகைகளை எல்லாம் இழந்து மிஷன் பாடசாலையில் ஆசிரியராகச் சேர்ந்தோம். இப்போ பாடசாலைகளையெல்லாம் அரசாங்கம் எடுத்துக் கொண்டதினால் எங்களை கண்டபடி, இஷ்டம் போலத் தூக்கி எறியப் பார்க்கிறார்கள். தானும் ஒரு கை பார்க்கிறேன்” என்று ஆக்ரோஷ்த்தோடு பேசி விட்டு ஆசிரியர் தன் வீட்டை நோக்கி நடந்தார்.’

அன்றிரவு மாற்றலாகிச் செல்லும் கிளாக்கருக்கு அவருடைய காரியாலய உத்தியோகஸ்தர்கள் கல்முனை வாடி வீட்டிலே பிரியாவிடை விருந்தளித்துக் கௌரவித் தார்கள். காரியாதிகாரியும் அவரது கந்தோர்ச் சேவக னும், எழுத்தர்களும், காணிவிருத்தி ஓவசியர்களும் ‘எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை’ என்ற பாரதி யின் சமத்துவத்தை நுரை பொங்கும் பீயர் கிளாசுகளின் கிளர்ச்சியிற் பெற்றார்கள். சொற்பொழிவுகள் –பாட் டுக்கள்–ஆட்டங்கள் சுவையான விருந்து… வாந்தி… சிலருக்குத் தலைக் கோழி கூவியபோதும் இரவு இன்னமும் இளமையாகவே இருக்கிறது” என்ற நினைவு. கேளிக்கை!

அன்றிரவு ஆசிரியர் சிவசேகரத்துக்கு நித்திரையே வரவில்லை. நினைவுகளும் கற்பனைகளும் அவரைக் குடைந்தன.

வீட்டை விட்டுப் போனாற் கரவாகு வெட்டையிற் பயிராக இருக்கும் நாலு ஏக்கர் வேளாண்மையை யார் கவனிப்பது?

மனைவியையும் பிள்ளைகள் நால்வரையும் தம்பல காமத்திற்கே கூட்டிக்கொண்டு போனால் இங்குள்ள வீடுவாசல் ‘அலக்கழிந்து’ விடாதா? அருமையாக நட்டுப் பாடுபட்டு வளர்த்த பத்துக் கறுத்தக் கொழும்பானும் அடுத்த வருடம் காய்க்குமே. அவை களின் கதி என்ன?

எம். பி. சொல்லுகிறபடி அங்கு போய் வேலையை ஒப்புக்கொண்டு விட்டாற் திரும்பிவர எத்தனை வருடங்களாகுமோ?

எங்கட்கென்று முறையான மாற்றத் திட்டம் இருக் கிறதா? தப்பித் தவறிக் கஷ்டமான இடத்துக்குப் போய் விட்டாற் பிறகு ‘அகப்பட்டவனுக்கு அட்ட மத்துச் சனி’ என்பதுதானே வாத்தியாரின் கதை. பொலநறுவைப் பகுதிக்குச் சென்ற புண்ணியமூர்த்தி பத்து ஆண்டுகளாக அங்கே தானே மட்டையடிக் கிறான்?

என்றெல்லாம் அவர் நினைத்துக்கொண்டேயிருந் தார். ஒரு கட்டுச் சொக்கலால் பீடியை ஊதித் தள்ளிய பின்னரும் ஒரு முடிவுக்கும் வர அவரால் முடியவில்லை . கோழி கூவிய போதுதான் முதலில் ஒரு மாதம் நோட்டீஸ் தரவில்லை’ என்ற காரணத்தைக் காட்டிப் ‘புறொட்டெஸ்ற்’ பண்ண வேண்டும். போயா கழிந்த அடுத்த நாள் ‘புறொட்டெ ஸ்ற்’ கடிதத்தோடு மட்டக்களப்புக் கல்விக் கந்தோருக்குப் போக வேண்டும்’ என்று தீர்மானித்தார். அத்தோடு கொழும்பிலே தொழிற்திணைக்களத் தில் வேலையாக இருக்கும் தன் ஒன்றுவிட்ட * கொழும்பு தெரிந்த’ மைத்துனத்துக்குத் தன் மாற்றம் சம்பந்தமாக ஒரு நீண்ட கடிதமும் எழுதி முடிக்கை யில் மணி மூன்றரை அடித்தது.

போயா தினம் கழிந்த மறுநாள் சாயந்திரம் கிளாக்கர் கட்டி வைத்திருந்த பொருட்களை எல்லாம் உற்சாகத்தோடு லொறியில் சுற்றிக் கொண்டிருந்தார். அந்த லொறியிலேயே அவரது வேலைக்காரப் பையனும் செல்வதாக ஏற்பாடு. அடுத்த நாள் மாலையில் அவரும் குடும்பத்தினரும் ரயில் மூலம் தம்பலகாமம் செல்ல இருந் தனர் பக்கத்து வீட்டுக்காரருக்கும் உறவினருக்கும் பிரியா விடை சொல்லியாகி விட்டது.

அன்று காலையில் ஆசிரியர் சிவசேகரம் வித்தியா கந்தோருக்குச் சென்றிருந்தார். பவ்வியமாக ஒடுங்கிச் ‘சப்ஜெக்ற்’ கிளாக்கருக்கு ஐயா போட்டு தன் குறையை வெளியிட்டார். கிளாக்கர் வித்தியாதிபதி -யிடம் கதையுங்கள் என்று வழி விட்டார்.

வித்தியாதிபதி இரக்கமுள்ளவர், நல்லவர் என் றெல்லாம் பெயரெடுத்தவர் தான். ஆசிரியர் சொன் னதையெல்லாம் மிக்க அனுதாபத்தோடு கேட்டு விட்டுச் சொன்னார். “என்னால் ஏதுமே செய்ய முடியாது. பத்து வருடம் ஊரில் சேவை செய்தவர் களை வெளியே அனுப்ப வேண்டும் என்பது அரசாங் கத்தின் கண்டிப்பான உத்தரவு. வேண்டுமானால் இரண்டு வாரங்கட்கு மாற்றத்தை ஒத்திப் போடு கிறேன். அதற்குமேல் என்னால் ஏதுமே செய்ய முடி யாது” என்று கையை விரித்தார்.

ஆசிரியர் மேலே ஒன்றும் பேச முடியாதவராகச் சற்று நேரம் மௌனமாகவே நின்றார். பின்னர் ஏதோ இரக்கப்பட்டுப் பார்த்துச் செய்யுங்கள் ஐயா” என்று கும்பிடு போட்டுவிட்டு வீட்டுக்கு மீண்டார். வழியிலே சிவஞானம் கிளாக்கரின் சாமான் லொறியைக் கண்டார். வீட்டிலே உடனடி யாகக் கொழும்புக்குப் புறப்பட்டு வரும்படி அவர் மைத்துனன் கொடுத்திருந்த தந்தி அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தது. அதைக் கண்டதும் நாளைக்கு கொழும்புக்குப் போகக் காசு ‘புரட்டு வதை’யிட்டு அவர் மனம் சிந்திக்கத் தொடங்கியது.

அடுத்த நாள், படுக்கை வசதிகளோடு கூடிய இரண் டாம் வகுப்புப் பெட்டியில் சிவஞானம் தன் குடும்பத்தா ரோடு தம்பலகாமத்திற்கு பயணமாகிக் கொண்டிருந் தார். அவரை வழியனுப்பி வைக்க மட்டக்களப்புப் புகையிரத ஸ்தானத்திற்குக் கல்முனையிலிருந்து ஒரு ‘வான்’ நிறைய நண்பர்களும் சக உத்தியோகத்தர்களும் வந்திருந்தனர். கூவென்று நீளக் குரலெடுத்துக் கூவிவிட்டு ரயில் ஓடத் தொடங்கிற்று. கைகளை ஆட்.டி நண்பர் களைப் பிரிந்த பின்னரும் சிவஞானத்தின் பிள்ளைகள் யன்னலுக்கு வெளியே தலையை நீட்டி வெண்மணற் பரப்பினிடையே குண்டுகளிலும் குழிகளிலும் தேங்கி யிருந்த மழைத் தண்ணீரையும், மார்கழி மழையிற் தலை முழுகி நிற்கும் நாவற் புதர்களையும் ‘புதினம்’ பார்த்துக் கொண்டிருந்தார்கள். சித்தாண்டியைக் கடந்த பின்னர் சிவஞானத்தின் மனைவி சோற்றுப் பொட்டலத்தை அவிழ்க்கத் தொடங்கினாள். அதைத் தெரிந்த கிளாக்கர் ‘பூபே’ப் பக்கமாகப் போய்விட்டு வந்தார். மட்டக்களப்பு வாவியின் ஒட்டி மீன் குழம்பும், மட்டு இறால் பொரிய லும் அன்று அவருக்குத் தேவாமிர்தமாக இருந்தன. பாசம் யாரை விட்டது! ஆயின் சாப்பாடானதும் குறட்டை விட்டு நித்திரை செய்யத் தொடங்கி விட்டார்.

கொழும்புப் பெட்டியில் பிரயாணஞ் செய்து கொண் டிருந்த சிவசேகரம் இலாக்காவில் வேலை பார்க்கும் தன் மைத்துனன் தன் ‘கக்கிசங்கட்கு’ ஏதாவது வழி செய்வான் என்று நம்பினார். ஆயின் அந்த நம்பிக்கையையே தன்னுள் நம்பிக்கை யீன மாக்கிக் கொண்டு மறுகினார். மனத்திலே சாந்தி யில்லை. உணவைப் பற்றிக் கவலைப்படவில்லை. தன் ஆசனத்திற் கொட்டுக் கொட்டென்று விடியுமட் டும் விழித்துக் கொண்டேயிருந்தார்! விடிந்தது. அந்த அதிகாலையிலேயே ரயில் தம்பல காமத்தை அடைந்து விட்டது. புகையிரத நிலையத்திலே சிவஞானத்தின் வேலைக்காரப் பையன் காத்துக் கொண் டிருந்தான். ரயிலிலிருந்து இறங்கியதும் எல்லாரும் வாடகைக் காரில் ஏறிக்கொண்டு ஏற்கனவே வாடகை கொடுத்திருந்த வீட்டிற்குச் சென்றார்கள். லொறியிற் கொண்டு வந்திருந்த பொருட்களில் முக்கியமானவற்றை பிரித்து ஏற்கனவே வேலைக்காரப் பையன் வீட்டை ஓரள வுக்கு ஒழுங்கு பண்ணியிருந்தான். கிளாக்கரது மனைவி உ….டனடியாக அடுக்களையை ஒழுங்கு பண்ணத் தொடங் கினாள். அவளுக்குச் சற்று நேரம் உதவி செய்த சிவஞானம் பிரயாண அலுப்பினாற் கட்டிலில் விழுந்து படுத்துவிட்டார். இரண்டு நாட்கள் கழித்துத்தான் அவர் வேலைக்குப் போக வேண்டும்.

கொழும்புக் கோட்டைப் புகையிரத நிலையத்திலே சிவசேகரத்தை அவர் மைத்துனன் வழி பார்த்திருந் தான். அவரைக் கண்டதுமே, அவரது விஷயத்திற் காகத் தான் இரண்டு நாள் விடுமுறை பெற்றிருப்ப தாகச் சொன்னான்.

இருவரும் அவனது அறைக்குச் சென்று குளித்து உடை மாற்றியதும் கல்விக் கந்தோருக்குச் சென் றனர். அலுவலகத்திலே வாசலில் வாத்தியார் நிற்க மைத்துனன் மட்டும் உள்ளே சென்றான்.

திரும்பியவன், வெள்ளவத்தையிலே ஒருவரைக் காண வேண்டும் என்று ஆசிரியரை அங்கிட்டுச் சென் றான். வாடகைக் காரின் மீற்றரை வாசித்தபோது ஆசிரியருக்குப் பகீரென்றது.

அன்று மாலையில் இருவரும் கொட்டாஞ்சேனை யில் ஒரு கிளாக்கரை வீட்டிற் சந்தித்தனர். இரவு பத்து மணியாகும் வரை மூவரும் மேல் நாட்டுக் குடி வகைகள் பரிமாறப்படும் ஒரு ஹோட்டலில்… சிவசேகரம் பில்லுக்குப் பணங் கொடுத்தார்! இப்படியாக மூன்று நாட்கள் எங்கெங்கோ சென்ற னர். எவர் எவரையோ கண்டனர். கையிலிருந்த பணம் முழுவதும் கரைந்தது. இனி மேலும் கட்டி வராதெனக் கண்ட சிவசேகரம் ஊருக்குத் திரும்பி னார். கோட்டைப் புகையிரத நிலையத்தில் அவரை வழியனுப்புகையில் ஒரு மாதம் பொறுத்துக் கொள்ளுங்கள். ஸ்பெசலிஸ்ரிடம் மெடிக்கல் ரெஸ்ற் பண்ணி யதாக மெடிக்கல் சேட்டிபிக்கற் எடுத்து அந்தக் கிர வுண்டில் மாற்றம் எடுக்கலாம்’ என்ற புதிய உத்தி யைச் சொன்னான்.

ஆங்கிலப் புது வருடத்துக்கு அடுத்த நாள் கிளாக்கர் சிவஞானம் கந்தோருக்கு சென்று வேலை பாரம் எடுத்துக் காண்டாகதோச சேவகன் அவருக்கு வாடிக்கை யாகப் பால், மீன், அரிசி எல்லாமே கொடுப்பதற்கு வியாபாரிகளைப் பிடித்துக் கொடுத்தான். மூன்று பிள்ளைகளும் மஹா வித்யாலயத்திற் சேர்க்கப்பட்டார் கள். வீடு-கந்தோர்-விளையாட்டு – பிள்ளைகள் – குடும் பம் எனச் சிவஞானத்தார் தம்பலகாமத்திலே தம் வாழ்க் கையை அமைத்துக் கொண்டு விட்டார்.

கொழும்பிலிருந்து ஊருக்குமீண்ட சிவசேகரத்திற்கு உள்ளூர்ப் பாடசாலைக்குப் போவதற்கே வெட்க மாக இருந்தது கொழும்பிலே நடந்த வேலைகளைப் பற்றித் துளைத்துக் கேட்கும் ஆசிரியர்கட்கு என்ன பதில் சொல்வது? என்று அவருக்கு விளங்கவில்லை. ஆகவே இந்த வாரம் பாடசாலைக்குப் போவதில்லை எனத் தீர்மானித்துக் கொண்டவராய்க் ‘கசுவல் லீவிற்கு’ விண்ணப்பித்துக் கொண்டார்! நாலாந் திகதி அவரது மாற்றம் பதினைந்து நாள் பின் போடப்பட்டதாகத் தெரியப்படுத்திய ‘டிடெ மென்ற்’ கட்டளை கிடைத்த போதுதான், தனது பெயர் எந்தப் பாடசாலைச் சம்பளப் பட்டியலிலும் சேர்க்கப்பட்டிராது என்ற உண்மை அவருக்குத் தெரிந்தது. ‘சப்ஜெக்ற்’ கிளாக் விளையாடியிருக் கிறான் என்று புறு புறுத்துக் கொண்டார்!

எடுத்த பணத்தையும் கொழும்பிற் பாழாக்கியா யிற்று. இந்த மாதச் சம்பளமும் வராதே எனக் கவலைப்பட்ட சிவசேகரம் அடுத்த வாரமும் பாட சாலைக்குப் போகவில்லை! எப்படியோ பொங்கல் கழிந்தது! மாட்டுப் பொங்கலன்று, கரவாகுவெட்டை வயல், கறுத்தக் கொழும்பான் மாமரங்கள், வீடுவாசல், பிள்ளைகளின் படிப்பு இவற்றிற்கெல்லாம் ஆயிரம் ஆயிரம் தடவைகள் கருத்தான கருத்துக்களை உதிர்த்து விட்டுத் தன் வீட்டை விட்டுப் பிரிகையில் உண்மையாகவே அவர் அழுது விட்டார். சுதந்திரத் தினத்தையொட்டிய ‘போயா’வில் மீண்டும் வீட்டுக்கு வருவதாக கண்ணீரோடு மனைவியிடம் கூறினார்.

அவரை ஏற்றிக் கொண்டு வந்த ரயில் அதிகாலை யில் தம்பலகாமத்தை அடைந்தது. புகையிரத நிலையத்திலிருந்த பெட்டிக் கடையில் ஒரு கிளாஸ் தண்ணீர் வாங்கி முகங் கழுவி வாய் கொப்பளித்துப் ‘பிளேன் ரி’ வாங்கிக் குடித்துவிட்டுப் பாடசாலையை நோக்கி நடந்தார். பாடசாலையை அடைந்தபோது ஏழரையாகி விட்டது! சற்று நேரத்தில் ஊரவரான பாடசாலைத் தலைமை ஆசிரியரும் பாடசாலைக்கு வந்துவிட்டார். அறிமுகம் செய்து கொண்டு பேசியபோது பாட சாலை அறையிலேயே தங்கலாம் எனவும், பக்கத்தே. யுள்ள மலையாளத்தான் கடையிற் சாப்பிடலாம் எனவும் தலைமை ஆசிரியர் அபயம் அளித்தார். பாட சாலை வளவிற்குச் சம்பளமற்ற காவற்காரன் கிடைத்து விட்டான் எனத் தலைமை ஆசிரியர் நினைத்திருக்க வேண்டும்! – – எட்டு மணி. பாடசாலை தொடங்கியது. முதல் வகுப்பு மாணவர்கள் ‘புது ஐயா புது ஐயா’ என்று உத்சாகத்தோடு அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். ஆயின் சிவசேகரத்தால் அவர்களோடு ஒட்ட முடியவில்லை! தன் தொழிலோடும் ஒன்ற முடியவே யில்லை ! அவர் மனதிலே கரவாகு வெட்டை வயல்… கறுத்தக் கொழும்பான் மாங்கன்றுகள் மனைவி… பிள்ளைகள்…சீட்டுக் –காசு வசூலிப்பு எத்தனை எத்தனையோ! |

பாடசாலை முடிந்தது! வெளியிலிருந்து உத்தியோ கம் பார்க்க அங்கே வருபவர்கட் கெல்லாம் அன்ன தாதாவாக இருந்த ராமன் நாயரின் கடையிலே மதியச் சாப்பாட்டை முடித்துக் கொண்டார் வேறு வழி ஃய இல்லாததினால்!

சாப்பாடானதும் பாடசாலைக்கு வந்து ஆசிரியர் மேசையோடு மாணவர் டெஸ்கை இணைத்து தலைப் பக்கத்துக்கு உயரமாக்கிக் கொண்டு படுத்தவர் பிர யாணக் களைப்பினாலும் மனச் சோர்வினாலும் நித்திரையாகி விட்டார்.

அவர் எழுந்தபோது பறங்கிகளால் இட மாற்றம் பெற்று, மாறிவந்த இடத்தையே தன் சொந்தமாக்கிக் கொண்ட கோணேசரின் கொண்டல் சேர் கோபுரம் தென்னை மரங்கட்கு மேலாற் தூரத்தே காம்பீரித் தது. அந்திச் செம்மையின் பொன்னொளி கோபுரக் கலசங்களிற் தெறித்து இரவாச வித்தை புரிந்து கொண்டிருந்தது. சோம்பர் முறித்தபடி கிணற்றடிக் குச் சென்று முகம் கழுவித் துண்டினாற் துடைத்த படி பாடசாலையின் தெருப்படலைக்கு வந்தார் சிவசேகரம்.

கந்தோரிலிருந்து வீடு திரும்பி உடை மாற்றிக் கொண்டு, கிளப்பிற்கு விளையாடச் சென்று கொண்டி ருந்த சிவஞானம் ஆசிரியரைத் தெருவிலே சந்தித்ததும், “மாஸ்ரர் எப்போ வந்தீர்கள், வாங்க வீட்டுக்குப் போக லாம்” என்றார்.

“இன்றைக்குத்தான் வந்தேன். இன்று வியாழக்கிழமை. வேண்டாம். இன்னொரு நாளைக்கு வரு கிறேன்.”

“அப்படியா, உங்கள் இஷ்டம். எல்லாம் வசதிதானே? நான் மீண்டும் சந்திக்கிறேன்” என்று கூறிவிட்டு தடத் தார் சிவஞானம்.

ஆசிரியர் மீண்டும் பாடசாலைக்கு வந்து தான் காலையிற் கொண்டுவந்த தினசரியைப் புரட்டத் தொடங்கினார். அதிற் படிப்பதற்கு இன்னமும் என்ன தான் இருக்கின்றதோ! அதற்குள் இருட்டிவிட்டது. மாணவன் ஒருவன் தலைமையாசிரியர் கொடுத் தனுப்பிய குப்பி விளக்கை அவரிடம் கொண்டு வந்து கொடுத்தான.

ஆசிரியர் தீக்குச்சியைக் கிழித்து விளக்கை ஏற்றினார். ஆயின் மன இருளை விலக்க முடியவில்லை . சுவரில் மாட்டப்பட்டிருந்த கலண்டரில் போயா வோடு ஒட்டி வரும் விடுதலைத் தினங்கள் தான் நினைவில் ஒளியேற்றுகின்றன!

துண்டை விரித்து மீண்டும் சாய்கிறார். தூரத்தே கூவிக் கொண்டோடும் ரயில் சப்தம் நெஞ்சைப் பிளக் கிறது. அந்த ரயிலில் ஏறிக் கொண்டு அவ்வூரையே தலை முழுகி விட்டுத் தன் ஊருக்கு மாற்றலாகிச் செல்லும் சுபதினத்தை எண்ணிப் பார்க்கிறார்…

அடுத்த வீட்டுச் சிவஞானம் கிளாக்கரின் ரேடியோ வில் ‘தமிழர் சால்பு’ பற்றிப் பேராசிரியர் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று முழக்குவது ஆசிரியர் காதுகளிற் கேட்டதோ என்னவோ அது எனக்குத் தெரியாது.

– இளம்பிறை 1970

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *