2C –பஸ் ரூட்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 10, 2017
பார்வையிட்டோர்: 7,079 
 
 

கரூர், பழையபஸ் ஸ்டாண்ட், லைட்ஹவுஸ் தியேட்டர், திருமாநிலையூர், சுங்ககேட், மில்கேட், தாந்தோனிமலை, அரசுக்கலைக் கல்லூரி, காளியப்பனூர் கலெக்டர் ஆபீஸ், RTO ஆபீஸ் எல்லாம் தாண்டிய பின் வெங்கக்கல்பட்டியைக் கடந்து செல்லும் அத்தனை வாகனங்களும் வேகத்தைக் கூட்டி விடும். அதற்கு அப்பால் செல்லாண்டிபட்டி அல்லது வெள்ளியணை வரை வேகத்தைக் குறைக்கத் தேவையில்லை. மணவாடி, கல்லுமடை, காலணி என நின்றுச் செல்பவை பெரும்பாலும் 2ம் நம்பர் கொண்ட அரசுப் பேருந்துகளும், தனியார் டவுன் பஸ்ஸுகளும் தான்.

அப்பொழுது கூட்டம் அதிகமாக இருந்தால் போதும் மணவாடி, கல்லுமடை, அடுத்து வரும் காலணியில் என எந்தப் பேருந்துகளுமே நின்று செல்லாது. கலெக்சனுக்காக சில தனியார் பஸ் நிற்குமளவிற்குக் கூட அரசுப் பேருந்துகள் நிற்காது. இந்த ஐந்து –ஆறு வருடத்தில் தான் சில தனியார் டெக்ஸ் கம்பெனிகள் ஸ்டாஃப் பஸ் விடுகின்றன. முன்னரெல்லாம் பாளையம், குஜிலியம்பாறை மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள கிராமங்களிலிருந்து, தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் கரூர் வந்து செல்கின்றனர். கட்டிட வேலைக்கு, டெக்ஸ் வேலைக்கு, பஸ்பாடி கட்டும் வேலைக்கு, தையல் காண்ட்ராக்ட் வேலைக்கு, கொசுவலை பேக்டரிகளுக்கு, சாயப் பட்டறைகளுக்கு என வந்து போகின்றனர். டவுன் பஸ்ஸுகளுக்கு சரியான கல்லா கட்டும். சனிக்கிழமைகளில் உங்கள் உறவினர் யாரையாவது பார்க்க இந்த வழியில் உள்ள ஊர்களுக்கு வர விரும்பினால், நல்லது நீங்கள் வர விரும்ப வேண்டாம். எப்போதும் இருக்கும் வியர்வைப் புழுக்கத்தோடு, சரக்கு வாசனையும் கலந்து குடலைப் புரட்டும். ஆனாலும் இளையராஜா, டீ.ராஜேந்தர், எஸ்.ஏ. ராஜ்குமார் இருக்கும் பொழுது கூரையைத் தட்டிக் கொண்டே ஒவ்வொரு ஸ்டாப்பாக பார்த்து வந்தால் உங்கள் ஊர் வெள்ளியனையோ, கூடலூரோ, பாளையமோ வந்துவிடும்.

அதே திங்கள் காலையில் நீங்கள் கரூர் செல்ல வேண்டுமாயின் சிறந்த வழி பால் டெம்போ, ட்ராக்டர் போன்ற எதிலாவது லிஃப்ட், இல்லை இல்லை வாடகைக் கொடுத்துப் போகலாம், வாடகை என்பது பஸ் கட்டணம் தான். ஆனால் நின்று கொண்டே போக வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் டூவீலரில் ஓசிப் பயணம் போக விரும்பினால் கண்டிப்பாக உங்களுக்கு முனீஸ்வரனின் அருள் உண்டு, அங்கு இறங்கி குழாயில் கால் கழுவி, கையைக் குவித்துக் கொஞ்சம் தண்ணீர் அருந்தியும் கொள்ளலாம். பின்னர், காணிக்கையிட்டு சாமி கும்பிட்டவுடன். அகண்ட கண்ணாடியில் உங்கள் முகம் பார்த்து சந்தனம், குங்குமம் வைத்துக் கொள்ளலாம், நீங்கள் வேலை வெட்டி இல்லாதவராக இருந்தால் அங்கிருக்கும் பூசாரியிடம் “ஏதாவது வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறதா” என்று குறி கேட்கலாம். அப்பொழுது தாராளமாக நீங்கள் எந்த கம்பெனியை மனதில் நினைத்தும் கேட்கலாம் நம்ம ஊர் “ராயல் கோச்சிலோ, வீகேஏ பாலிமர்சிலோ, சபரி டெக்ஸ்டைலிலோ அல்லது அதையும் தாண்டி இன்ஃபோசிஸிலோ, டீ.சீ.எஸிலோ அல்லது க்ரிண்ட்லேஸ் பேங்கிலோ கூட வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறதா?” என்று கூட கேட்கலாம், அவரும் சோளியை உருட்டிக் குறி சொல்லுவார். அதனால் உங்களுக்குக் கட்டாயம் வேலை கிடைக்கும் என்று சொல்லவில்லை.அது தான் அவருடைய வேலை என்று சொல்கிறேன். அந்தப் பூசாரி மிகவும் நல்லவர், சிரித்த முகமும் கூட, எப்பொழுதுமே நல்ல சகுனம் தான் சொல்லுவார். ஆனால் அவருக்கு உங்கள் கனவு நிறுவனத்தின் பெயர் வாயில் நுழைய வேண்டும். மற்றபடி நிற்காத வாகனங்களில் நீங்கள் பயணிக்கும் பொழுது கன்னத்தில் போட்டுக் கொள்ளலாம்.

முனீஸ்வரன் கோயில், செல்லாண்டிபட்டி ரயில் பாலத்திலிருந்து, CC பாலத்திற்கு இடையே உள்ள …………………….. 30 வருடம் முன்பு வரலாறு தெரியாத, 26 வருடம் முன்பு வெயிலில் காய்ந்த, அடுத்த ஆண்டு விலங்குகளுக்கு பலி கொடுக்க ஒரு பீடமும், 23 வருடம் முன்பு சிறிய கூடாரத்தின் முன் சில வேல்களுடனும், 20 வருடத்திற்கு முன்பு சிறிய கான்கிரீட் கோயிலாய் – போர்வெல் வசதியுடன், அருகில் ஒரு பொட்டிக் கடையுடனும், 18 ஆண்டுகளுக்கு முன்பு கிடா வெட்டி சமைக்க ஒரு சமையற்கூடமும், அடுத்த இரண்டாண்டுகளில் எதிரே ஒரு குதிரை வீரனாகவும், அதற்கும் அடுத்த ஆண்டே அருகில் ஒரு பிள்ளையார் கோயிலும் அதற்கடுத்த ஆண்டே ஒரு நிழற்குடையுமாக மாறிய எல்லை காக்கும் அவ்வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு முனீஸ்வரன் கோயில். எல்லா புதிய வண்டிகளுக்கும் அங்கே தான் பூஜை பரிகாரங்கள் நடைபெறும், தனியார் பேருந்துகள் எல்லாம் வெள்ளிக்கிழமை தோறும் வீடு திரும்புகையிலோ அல்லது கரூர் செல்கையிலோ தேங்காய் உடைப்பார்கள். உழவர் சந்தைக்கு இருந்து வரும் முதல் லோடு எழுமிச்சை நம் கோயிலுக்குத் தான். மற்ற நாட்களில் எல்லாம் பயணிகளிலிருந்து ஓட்டுனர் வரை சல்யூட் போடுவது போலவோ, ஃபிளையிங் கிஸ் போலவோ கண்களை ஒற்றிக் கொள்வார்கள். சாலை விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் அங்கு வந்து பொங்கல் வைப்பார்கள். பலர் கிடா வெட்ட நேர்ந்து கொள்வார்கள். அவர்கள் இறந்தவர்களோடு தொடர்பு உடையவரா?, அல்லது பிழைத்தவர்களோடு தொடர்பு உடையவரா? இல்லை அக்கோயிலுக்கு முறை செய்ய வந்த உண்மையான பாத்தியம் உடையவர்களா? என்று ஆராய முடியாது. எல்லாருமே பக்தர்கள் தான் என்று விட்டுவிடுவோம்.

முனீஸ்வரனிடம் கேட்கப்படும் வேண்டுதல்களில் பெரும்பான்மையானவை நமது பயணத்தில் எந்த விபத்தும் நிகழாதிருக்க வேண்டும் என்பது தான். அந்த தொழில் நகரின் அசுர வளர்ச்சியை அங்கு சென்று வந்து கொண்டிருக்கும் அதிவேகப் பயணங்களும் சாத்தியப் படுத்திக் கொண்டிருந்தன. இதில் செட்டிநாடு சிமெண்ட் பேக்டரிக்கு செல்லும் லாரிகளின் எண்ணிக்கை வேறு. ஆக இக்கதை இதைப் பற்றியது தான், சாலை விபத்துகள்; பெரும்பாலும் ஒவ்வொரு சனிக்கிழமையிலோ, வெள்ளியிலோ மணவாடிக்கு பக்கத்துல ஒரு “ஆஸ்ஸிடென்ட்” என கதை சொல்லும் அக்காக்களை நீங்கள் வெள்ளிக் கிழமை கோயில்களிலோ, சனிக் கிழமை சந்தைகளிலோ அல்லது கடைத் தெருவிலோ பார்க்கலாம். அந்தப் பகுதியில் அவசர சிகிச்சை செய்யப்படும் என்று போர்டு வைக்கும் MBBS டாக்டர்களுக் கெல்லாம் உடனடியாக அரசு வேலைக் கிடைத்தது. அதனால் விபத்தென்றால் ஒரே வழி பத்து கிலோமீட்டர பறந்து கரூர் செல்வது தான். அங்கு நிகழும் விபத்துகளில் பெரும்பாலும் இரண்டு சக்கர வாகனத்தில் வருபவர்கள் தான் மரணித்துப் போவார்கள். சில சமயம் பேருந்தில் தொங்கியபடி வருபவர்கள், குடித்து விட்டு அப்பகுதியில் உள்ள மரத்திலோ, சின்ன பாலத்திலோ அல்லது வேறு வாகனத்திலோ முட்டிச் சாகும் சொகுசுக் கார்களும் உண்டு. அந்தப் பகுதிகளில் மட்டும் நிகழும் விபத்துகளில் பெரும்பாலும் பிழைக்கும் எண்ணிக்கைக் குறைவு தான்.

வெங்கக்கல்பட்டியைத் தாண்டியதும் பொதுவாக எல்லோரும் ஆக்ஸிலேட்டரில் அழுத்தம் கொடுத்து விடுவார்கள். ஏனென்றால் தொழில் நகரான கரூரில் டவுன் பஸ்ஸுகளும், மஃப்சல் பஸ்ஸுகளும் மந்தைகளைப் போல பயணிகளை அடைத்து வைக்க எடுத்துக் கொள்ளும் கூடுதல் வெய்ட்டிங் நேரத்தையும்; நகரில் ஊர்ந்து செல்லும் நேரத்தையும் கனக்கிட்டு, இந்தப் பகுதியில் வேகமாகப் பேருந்தை விரட்டினால் தான் சமன் செய்து வெள்ளியனையிலோ, கூடலூரிலோ, பாளையத்திலோ வரும் மினிபஸ்களின் பயணிகளுக்கு கனெக்‌ஷன் கொடுக்க வேண்டும். இதில் தனியார் பேருந்துகளின் மத்தியில் போட்டி வேறு. வெங்கக்கல்பட்டியில் இருக்கும் ஒரு கோழிப் பண்ணையைக் கடந்ததும் சாலையானது மேட்டில் ஏறும் அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் தான் விபத்துப் பகுதி. அந்த மேட்டிலிருந்து வேகமாகக் கீழிறங்கி ஒரு சின்ன வாய்க்கால் பாலம் வழியாகத் தூக்கிப் போட்ட மறுபடியும் மேடேறி வளைந்தபடி மணவாடியைக் கடந்து செல்லும் சாலையில் தான் விபத்துகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அங்கு இறந்தவர்களின் துஷ்ட ஆவிகள் அங்கே தான் உலாவுகின்றன என்ற கட்டுக் கதைகள் வேறு. சிலர் வாகனங்களில் செல்லும் பொழுது வெள்ளையாக, புகை போல ஆவிகள் கடப்பது போலவும், சில மனித உருவில் லிஃப்ட் கேட்பது போலவும் தோன்றும், தனித்து இருசக்கர வாகனத்தில் செல்லும் சிலருக்கு திடீரென்று டபுள்ஸ் போவது போலே தோன்றும் அப்பொழுது நீங்கள் திரும்பிப் பார்க்கக் கூடாது என்று பொதுவாக அறிவுறுத்தப் பட்டிருக்கும், நீங்கள் CC பாலத்தைக் கடந்து செல்கையில் முனீஸ்வரன் கோயில் உங்கள் கண்ணில் படும் நேரம் மறுபடியும் நீங்கள் தனியாக உங்கள் பயணத்தைத் தொடர்வீர்கள். ஆனால் இந்த பயத்திற்காக யாரும் இவ்வழியே பயணிப்பதைத் தவிர்க்க முடியாது, ஏனென்றால் நாம் போய் தான் ஆகவேண்டும், வெள்ளியணை பெரிய குளத்திலிருக்கும் தண்ணீர் வருடா, வருடம் நிரம்பியும், காய்ந்தும் தான் போகிறதே தவிர அம்மடை வழியே பாசனத்திற்கு திறந்துவிட யாரும் இல்லை. கிணறு இல்லாத தரிசாகவே சாலையின் இரு மருங்கிலும் உள்ள பெரும்பான்மையான ஊர்களில் நிலங்கள் இருக்கின்றது.

ஆவிகள் என்பது கட்டுக் கதை என்று சொல்லி விட முடியாது, நான் அந்த வழியாக செல்லும் போதெல்லாம் அந்த துஷ்ட ஆவிகள் இருக்குமே என்று தான் கவனமாக செல்லுவேன். யாரும் அந்தப் பகுதியில் நடந்து சென்றால் மட்டும் வேகமாக அவர்களைக் கடந்து விடுவேன், அவர்கள் மனிதர்கள் தானா என்று சந்தேகம் வந்துவிடுவதால்.இல்லைத் தெரிந்த அளவுக்கு கந்த ஷஷ்டி கவசம் பாடுவேன். டு டு டு டு டு டு டு டு டு டு, டகு டகு, டிகு, டிகு, டிங்கு, டிங்குகு வரை. அதற்குள் மணவாடியைக் கடந்து விடுவேன். அதே சமயம் இப்படி பாடிக் கொண்டே இரவில் வரும் வேளை வண்டியில் காலைத் தூக்கியும் வைத்தவாறே தான் வர வேண்டும், அதுவும் வேகமாக. ஏனென்றால் இரவில் தான் நிறைய பாம்புகள் சாலையைக் கடக்கின்றன, இந்தப் பகுதியில் பாம்புகள் மிக அதிகம் என்பதால் வெள்ளைக்காரனே குஜிலியம்பாறையில் பாம்புக்கடிக்கென மருத்துவமனை கட்டியிருக்கிறான் தெரியுமா??. நானே இது வரை 5-6 பாம்புகளில் வண்டியை ஏற்றியிருக்கிறேன் எல்லாமுமே அந்தப் பகுதியில் தான்.

அந்த இடத்தில் நிகழும் விபத்துகள் மிகவும் கோரமாகவே நிகழ்ந்து வந்தாலும், அங்கு செல்லும் யாவரும் மெதுவாக செல்வதேயில்லை. ஆனாலும் முனீஸ்வரனைக் காணும் பொழுது ஒவ்வொரு முறையும் நன்றி சொல்வதை நாங்கள் வழக்கமாய் வைத்திருக்கிறோம். திடீரென்று அந்தப் பகுதியில் நிகழும் விபத்துகள் குறைய ஆரம்பித்தன. அதாவது முனீஸ்வரன் கோயிலைக் கடந்தும், ஏன் ஊருக்குள்ளேயும் கூட விபத்துகள் நிகழ ஆரம்பித்து விட்டன. ஆனால் அந்த விபத்துப் பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தன. சில மாதங்களாக எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருந்தது. இதற்கும் என் நண்பன் தங்கவேலுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று தெரிய வரும் போது நான் அவ்வளவு எளிதாக நம்பவில்லை, ஒரு சந்தேகம் மட்டுமே இருந்தது. சில வருடங்கள் கழித்து இன்று அவனிடம் போனில் பேசும் போது தான் நம் சந்தேகம் சரிதான் என்று தோன்றியது.

தங்கவேல் ஒரு மினிபஸ் கம்பெனியின் செக்கர் பணியில் இருந்தான். அவன் என் பள்ளி நண்பன், எங்களுக்குள் பெரிய தோழமை சரித்திரம் இல்லாது போனாலும். எங்கே போனாலும், பார்த்தாலும் “நீ எப்படியிருக்கிற? அவள் எப்படியிருக்கிறா? இன்னும் அவ உனக்கு செட் ஆகலையா?” என்று கேட்கும் பள்ளி மாணவர்களில் அவனும் ஒருவன். அவன் எப்படி இந்த சாலை விபத்துகள் குறையக் காரணம் ஆனான் என்று தெரிய வேண்டுமாயின். அவன் எப்படி வாழ்க்கையில் உயர்ந்தான் என்று நீங்கள் அறிய வேண்டும். தினமும் கரூர் சென்று பிழைப்பதெல்லாம் ஒரு வாழ்க்கையா என்று நொந்து கொள்ளும் பிரஜை தான் என்றாலும், தொழில் தொடங்குவதற்கு ஒரு தைரியம் வேண்டும் அல்லவா? அவனுக்கு அந்த தைரியத்தை அவன் சார்ந்த அச்சமூகம் கொடுத்திருக்கிறது. அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் அவ்வூரில் பெரும்பான்மையானவர்கள்.

அவர்கள் வீடு மணவாடிக்கு முன்னே, சரியாக அந்த விபத்துப் பகுதியில் மையத்தில் உள்ள தோட்டத்தில் அமைந்திருக்கும். ஹாலோ பிளாக்குகளை வைத்து தன் வீட்டிற்கு பின் புறம் சில கட்டுமானங்கள் செய்து நாட்டுக் கோழிப் பண்ணை ஒன்றை ஆரம்பித்தான். பண்ணை தொடங்கிய காலத்திலேயே எல்லோர் கவனமும் பெற்றது. அங்கே போவோர் வருவோரெல்லாம் அந்தப் பகுதியில் புதிதாய் வந்திருக்கும் கோழிப் பண்ணையை பற்றி பேச ஆரம்பித்தனர். வெங்கக்கல்பட்டியிலே முன்னர் இருந்தது பிராய்லர் கோழிப் பண்ணை. ஆனால், தங்கவேல் வைத்திருப்பது நாட்டுக்கோழிப் பண்ணை. இரண்டாம் கையாக ஒரு பஜாஜ் எம்.80 ஒன்றும் வாங்கியிருந்தான். என்ன நேரமென்று தெரியவில்லை, அவனுக்கு வியாபாரம் நல்லபடியாக போக ஆரம்பித்தது. அந்த இடம் அவ்வழியாக போவோர் வருவோரால் பேசப்பட்டு, அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது.

இரண்டு பள்ளிகள் அங்கே புதிதாய் திறக்கப்பட்டன, ஒன்று அந்தக் கோழிப் பண்ணைக்கு அருகிலும், மற்றொன்று சாலைக்கு மறுபுறமும் தொடங்கப்பட்டது. அந்த மண்னின் ராசி இரண்டு பள்ளிகளுமே வெகு சீக்கிரமாக நல்ல பெயர் எடுத்தன. பள்ளியில் மாணவர்கள் வரவை கணக்கிட்டு ஒரு பெட்டிக் கடையும், பஞ்சர் கடையும் வந்தது. பள்ளி பிரபலமாக ஆரம்பித்தது, எல்லாப் பேருந்துகளும் கட்டாயம் நிற்க வேண்டும் என்று ஆணையும் வந்தது கலெக்டரிடமிருந்து. பண்ணையும் நல்லபடியாக போக ஆரம்பித்தது, ஆனால் அவன் பண்ணையைப் பற்றி எல்லோரும் பேசுவது சுவாரஸ்யமாகவே இருந்தது. பள்ளி இருக்கும் பகுதி என்பதால் வேகமாக வரும் வாகனங்கள் தணிக்கை செய்யப் பட்டன. அதே சமயம் அங்கு உலவிய பேய்க் கதைகளும் குறைய ஆரம்பித்தன. பைக்கில் வருவோர் சிகெரட் பற்ற வைத்து ஆசுவாசம் அடையுமிடமாக அந்த பெட்டிக் கடை திகழ்ந்தது. கலெக்டர் ஆபிஸ் அருகிலேயே இருப்பதாலும், 2008ல் ஏற்பட்ட ஷேர் மார்கெட் வீழ்ச்சியின் தொடர்ச்சியாக பங்கு வர்த்தனையில் ஏற்பட்டிருந்த பெரும் சரிவின் பொருட்டு தங்கள் முதலீட்டை நிலங்களில் அசுர வேகத்தில் நிலத்தில் பாய்ச்சினர். இப்பொழுது தங்கவேலின் பண்ணையைச் சுற்றிலும் வீட்டு மனைகள்.

முனீஸ்வரன் கோயிலும் மிகச் சிறப்பாக வளர்ந்து விட்டது. கடைசியாக நான் அவ்வூருக்கு சென்ற போது, அந்தக் கோயிலின் பின்புறம் ஏதோ ஒரு கட்டடம் கட்டப்பட்டு வந்தது. புறவழிச் சாலையும் வெங்கக்கல் பட்டி வழியாக வந்துவிட்டது. ஆனால் நேற்று கூடலூரைச் சேர்ந்த என் நண்பன் ’அருள்’ வண்டி ஓட்டிய படியே என்னுடன் பேசி வந்தான். இப்பொழுது எங்கேயடா இருக்கிற என்று கேட்டேன், “மணவாடிக்கு கொஞ்சம் முன்னாடி” என்றான். “வண்டியை ஓட்டியபடியே பேசுவது ரிஸ்குடா” என்று கண்டித்தபடி போன் இணைப்பை துண்டித்தேன். சற்று நேரம் கழித்து வீடு சென்ற என்னை அழைத்த அவனிடம், “இப்போது சாலை விபத்துகள் எப்படி?” என்று கேட்டேன்.

“அத ஏன் கேக்குற!! தெனமும் ஒன்னுரெண்டு நடக்குது எல்லாமே ஸ்பாட்லயே ஆயிடுது” என்றான். அதிகமாக “எந்தப் பகுதியில நடக்குது?”என்று அவனிடம் நான் கேட்க, “அவன் அதே வெங்கக்கல் பட்டிலயிருந்து மணவாடிக்கு இடையில தான் நெறைய நடக்குது. ஒரு பயலும் மெதுவாப் போறதில்லை, பத்தாதைக்கு இந்த பைபாஸ் ரோட்டுல வர்ற வண்டிகளாலத் தான் பெரிய பிரச்சினை” என்றான். “இப்போலாம் லைனுக்கு தனியா அந்தப் பக்கம் போறதுக்கே பயமா இருக்கு தெரியுமா?? நெறைய ஆவிங்கள்ளாம் சுத்துதாம், கொஞ்ச காலம் எந்த ஆக்ஸிடெண்டும் பார்க்காம இருந்தேன், ஆனா இப்போ?? போன வாரம் ஒரு காட்டான் மாறி என்னை முந்திக்கிட்டு போனான். வந்த வேகத்துல நேரா போயி அந்த வாய்க்கா பாலத்துல முட்டி, ஓட்டி வந்தவனுக்கு செம அடி, கூட வந்தவன் ஸ்பாட்டாயிட்டான்!! அந்தச் சத்தம் கூட இன்னும் எங்காதில கேட்குது” என்று தான் பார்த்த காட்சியை விளக்கினான்.

நான் அவனிடம், “ டே!! ஆவிகளால எல்லாம் ஒரு கெடுதலும் நடக்காது, எல்லாம் பைபாஸினால் வந்த வினை, காவேரில இருந்து மண் எடுத்துப் போகும் லாரிலாம் இந்தப் பக்கமாத்தான வருது?? “ என்று கேட்டேன், ஆமோதித்தான். “ஏன் இந்த தங்கவேல் பயலும் கோழிப் பண்ணைய நிறுத்திட்டானோ?” என்று சந்தேகத்துடன் கேட்டேன். “ஆமாடா!! உனக்கும் தெரிஞ்சு போச்சா?”, “கிரவுண்டு வெல ஏறிக்கிட்டே போதும்ல, அழகா வித்துட்டு, வெள்ளைக் கதர் சட்டை மாட்டிட்டு ஜாலியா வாழலாமே!! தவிர வெள்ளியணையிலயே மூணு வாத்துக் கறிக் கடை வந்துருச்சு அதுவும் டாஸ்மாக் பக்கத்துல. இதுல போயி கறிக்கோழி விக்குறதுக்குன்னு எவ்வளவு நாள் தான் இருக்கமுடியும்? அதனால அவனுக்கும் தொழில் சுத்தமா படுத்துகிச்சு” என்று அவன் தரப்பு ஞாயங்களை எடுத்து வைத்தான் அருள். அப்படித் தான் ரொம்ப நாட்களாக தீராமல் இருந்த என் சந்தேகம் ஊர்ஜீதமாகியது. ஆம் தங்கவேல் தான் அங்கு இது நாள் வரைக்கும் வண்டிகள் மெதுவாக செல்லவும், விபத்துகள் குறையவும் காரணமாக இருந்திருக்கிறான். அந்தப் புதிய பள்ளியும், கிராமச் சாலையும், பேருந்து நிறுத்தமும் கூட ஒரு பட்டாம்பூச்சி தேற்றம் போலே ஏதேச்சையாக அவனே காரணம் ஆனான். அதற்கு அவன் நிர்வாகம் செய்து வந்த தொழிலின் பெயரை பிளெக்ஸ் போர்டில் அடித்து, இருட்டிலும் பளிச் என்று தெரியும் பச்சை வண்ணத்தில் வடிவமைத்தது தான். அது தான் அவன் வெற்றிக்குக் காரணம் என்பது புரிந்தது

அந்தக் கடையின் பெயர் “நமீதா நாட்டுக்கோழிக் கடை”. ஃபிளக்ஸ் போர்டின் இரு புறமும் சிவப்பு ஆடையணிந்த நமீதாவின் கவர்ச்சியில் “இங்கே நாட்டுக் கோழி கிடைக்கும்” என்ற வாசகம் விளம்பரமாக நட்டு வைக்கப் பட்டிருந்தது.

– Sep 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *