அரசியல் நிகழ்ச்சிகளுக்காக ஊர் ஊராக அலைந்தாலும், தமிழ்நேசனின் சோர்வை போக்கும் டானிக்காக, ஷாலினி இருந்தாள்; நான்காம் வகுப்பில் படிக்கும் அவருடைய பேத்தி. மேடை ஏறினால், ஏவுகணையாக மாறி, எதிர்க்கட்சிகளை வசைப்பாடும் தமிழ்நேசன், வீட்டிற்கு வந்தால், பேத்தியின் மிரட்டல்களுக்கு பணிந்து போவார்.
அவரை குதிரையாக்கி, அவர் மேல் உட்கார்ந்து ஷாலினி சவாரி போவது, கண்கொள்ளாக் காட்சி. அன்றும் அப்படித் தான் நடந்தது. அதைப் பார்த்து குடும்பத்தினர் ரசித்தனர்.
“ஸாரே ஜஹான் ஸே அச்ஹா, இந்துஸ்தான் ஹமாரா…’ என்று, ஷாலினி பாடியபடி திரிந்தாள்.
“”எந்த இந்திப் படத்தில் இந்த பாட்டு வருது?” என்று வெகுளியாக கேட்டார் தமிழ்நேசன்.
“”ஐயோ தாத்தா… இது சினிமா பாட்டு கிடையாது. அல்லாமா இக்பால் என்ற பெரிய கவிஞரின் கீதம். இது தான் நம் தேசிய கீதமாக தேர்வாக இருந்தது.”
“”அடடா… அந்த பாட்டுக்கு என்னம்மா அர்த்தம்?”
“”உலகிலேயே சிறந்த தேசம் எங்கள் இந்தியா தான்!”
“”அடடா… இதைத் தான் மகாகவி பாரதியாரும், “பாருக்குள்ளே நல்ல நாடு, பாரத திருநாடு…’ என்று பாடியிருக்கிறார்… பேஷ்… பேஷ்…”
“”ஏன் தாத்தா… “ஸாரே ஜஹான் ஸே அச்ஹா’ கீதம் கூட தெரியாமல், நீங்க எப்படி இவ்ளோ பெரிய தலைவரா இருக்கீங்க… “ஜன கன மன’யாவது தெரியுமா?” என்று சிரித்தாள் ஷாலினி.
தமிழ்நேசனுக்கு தர்மசங்கடம்; கட்சிக்காரர்கள் வந்திருப்பதாக தகவல் வர, நழுவினார்.
அவர்களுக்கான தனி அறை கீழ் தளத்தில் இருந்தது. தொண்டர்களை பார்த்ததும், முதல் கேள்வியாக, “”உங்களில் யாருக்காவது, “ஸாரே ஜஹான் ஸே அச்ஹா’ பாட்டு தெரியுமா?”
இது என்னடா சோதனை என்று, அவர்கள் திகைத்தனர்.
“”அண்ணே… “சோளிகே பீச்சே க்யா ஹே’ தான் எங்களுக்கு தெரிஞ்ச ஒரே இந்திப் பாட்டு…”
“”அடத்தூ… அது அபத்தமான பாட்டு… நான் சொன்னது எவ்வளவு உன்னத கீதம்…”
“”தலைவா… இப்பத்தான் ஞாபகம் வருது… எங்கேயோ, எப்பவோ படிச்சிருக்கேன்…”
“”என்னது?”
“”இந்தியாவிலிருந்து முதல் முறையா ராக்கெட்ல போனாரே…”
“”ராகேஷ் ரோஷனா?”
“”ராகேஷ் ரோஷனுமில்லே, ஹிரித்திக் ரோஷனுமில்லே… ராகேஷ் ஷர்மா…”
“”ஆ… அவர் தான்… அப்ப இந்திய பிரதமரா இருந்த இந்திரா காந்தி, அவர்கிட்டே கேட்டாங்க… விண்வெளியிலிருந்து இந்தியா எப்படி தெரியுதுன்னு. அப்ப அவர், “ஸாரே ஜஹான் ஸே அச்ஹா…’ தான் பாடினார்…”
“”ஏண்டா… இவ்வளவு விஷயம் தெரிஞ்சுருக்கு… இதையெல்லாம் எனக்கு சொல்லித் தரமாட்டீங்களா… நானும் என் பேத்திகிட்டே பேசறதுக்கு பயன்படுமே…” என்று அங்கலாய்த்தார் தமிழ்நேசன்.
“”அவ்ளோ தானா விஷயம் அண்ணே… நாம ஏதோ நீங்க இந்தி கட்சிக்களுங்க கூட கூட்டணி அமைச்சு, மூன்றாவது அணி ஆரம்பிச்சுருவீங்களோன்னு பயந்தோம். அண்ணே… ஒரு வேளை நாம இந்தி கற்று இருந்தா, வடக்கே நல்ல வேலை கெடச்சிருக்குமில்லே…”
“”போடா…ங்க… அவங்களே அங்க வேலை இல்லாம, இங்க பேல்பூரி, குல்பி ஐஸ்கிரீம் விக்கிறாங்க… ஆனா, தப்பு பண்ணிட்டோமோன்னு தோணுது…”
“”என்ன தலைவரே?”
“”தமிழ் மேலே பற்று வளர்க்கிறோமுங்கிற பெயர்ல, இந்தி மேல் துவேஷத்தை வளர்த்திட்டோமோ… என் பேத்தி இந்தி படிக்கிறா… மத்தவங்களை படிக்க விடாம மொழி வெறியால் தடுத்துட்டோமே… ச்சே… கூடுதலா ஒரு மொழி கத்துக்கிட்டா குத்தமா? இந்தியை நுழைய விடமாட்டோமுன்னு சொல்லி, இந்திக்காரங்களை நுழைய விட்டுட்டோமே… எல்லா கட்டடங்களையும் அவங்க வாங்கிட்டாங்க. நம்ம ஆளுங்களுக்கு குடியிருக்க வாடகைக்கு கூட வீடு கிடைக்க மாட்டேங்குது.”
தலைவர் தமிழ்நேசன், இவ்வளவு தீவிரமா யோசிக்க மாட்டாரே என்று தொண்டர்கள் பயந்தனர்.
“”விடுங்க தலைவரே… நீங்க இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட போராளி… நீங்களே இப்படி கலங்கலாமா?”
அதைக் கேட்ட தமிழ்நேசன் தலை குனிந்தார்.
“”என்ன அண்ணே…”
“”இன்னைக்கு ஒரு உண்மையை சொல்லப் போறேன்… அப்பத்தான் என் மனச்சுமை இறங்கும். நான் மொழிப் போராளி கிடையாது… இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த போது, தமிழ் மீது பற்று கொண்ட எத்தனையோ தன்னலமற்ற தங்கங்கள், தன் இன்னுயிரை தியாகம் செய்தனர். ஆனால், நான் யதேச்சையா அப்ப பஜார் பக்கம் போன போது, போலீசார் என்னை கைது செய்து விட்டனர். அதை வைத்தே அரசியலுக்குள் நுழைந்தேன். எனக்கு மாதா மாதம், அரசு உதவி தொகையும் கிடைக்குது. நானும் அரசியல்வாதி என்பதால், வெட்கமில்லாமல் அதை வாங்கறேன்…”
தண்ணி அடிக்காமலேயே தலைவர் இப்படி வாந்தி எடுப்பதை பார்த்த, தொண்டர்களுக்கு அதிர்ச்சி.
“”விடுங்கண்ணே… இதுக்கெல்லாம் கவலைப்பட்டுட்டு… எதிர்க்கட்சிக்காரங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரிஞ்சா பெரிய பிரச்னையாகிடும்…”
“”இல்லேடா… எனக்கு அந்த பயமும் கிடையாது. என் பேத்திக்கு தெரிஞ்சுட்டா… என் இமேஜ் கெட்டுப் போயிடும்…” என்று ஒரு கணம் யோசித்த தமிழ்நேசன் சொன்னார்…
“”நான் ஒரு முடிவு எடுத்துட்டேன்…”
“”அண்ணே… அவசரப்பட்டு அரசியலை விட்டு விலகாதீங்க…” என்று தொண்டர்கள் கெஞ்சினர்.
“”டேய்… டேய்… நான் அப்படி சொன்னேனா? நீங்களே எனக்கு கட்டாய ஓய்வு கொடுத்துருவீங்க போலிருக்கேடா… கொஞ்சம் கேளுங்க… மொழிப் போராட்டத்தில் கலந்து கொண்டதாக, எனக்கு கிடைத்து வரும் உதவித் தொகையை நான் வாங்குவது நியாயமில்லை. இனி, அதை என் மனசாட்சி ஏற்காது. அதனால், இனிமேல் அந்த உதவிதொகை வேண்டாம்ன்னு அரசுக்கு சொல்லிடப் போறேன்,” என்றார் தமிழ்நேசன்.
“”நல்ல முடிவு,” என்றனர் தொண்டர்கள்.
“”டேய்… தீக்கனல் தியாகு… மார்க்கெட் போனா, 30 நாளில் இந்தி கத்துக்கிற புத்தகம் ஒண்ணு வாங்கிட்டு வாடா,” என்ற தமிழ்நேசன், “ஸாரே ஜஹான் ஸே அச்ஹா’ என்று ராகத்துடன் பாட, தொண்டர்கள் மெய்சிலிர்த்து நின்றனர்.
-ஜூலை 2010