வைரவர் கோவிலடிக் கிணறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 5, 2022
பார்வையிட்டோர்: 3,153 
 
 

யாழ்ப்பாணத்தில் நல்லூர் பருத்தித்துறை வீதியில் முக்கியமான நாற்சந்தி. அரசடி சந்தி. ஒரு காலத்தில் அங்கு ஒரு செழித்து வளர்ந்த அரசமரம் இருந்தது அனால் அதன் கீழ் புத்தர் சிலை இருக்கவில்லை, அதற்குப் பதிலாக வம்பளக்க மரத்தின் அடியை சுற்றி சலவைக் கற்கள் இருந்தன. இப்போது அந்த மரம் அங்கு இல்லை. அந்த இடத்தில் பாரதியார் குடிபுகுந்து விட்டார். ஆனால் அந்த சந்தியில் இருந்து கந்தர்மடத்தடி சந்திக்கு போகும் வீதியின் பெயர் இன்றும் அரசடி வீதி என்றே இருக்கிறது/ அந்த அரசமரத்தின் வரலாறு பற்றி நாங்கள் ஆராய முன் அந்த சந்திக்கு அருகே உள்ள தேநீர் கடையின் சொந்தக்காரர் சங்கரப்பிள்ளையார் பற்றி ஒரு சில வார்த்தைகள். அவர் நயினாதீவை சேர்ந்த் உயர் சாதி என்பதால் அவருக்கு சுய கொளரவம் இருந்தது. அதனால் அவர் உயர்சாதி மக்களுக்கு மட்டுமே தன் கடைக்குள் வந்து இருந்து உண்ண அனுமதித்தார். சில சாதி குறைந்த மக்களும் அந்த பகுதில் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் வேலை செய்த களைப்பில் வந்து சுருட்டு, சிகரெட் பீடி, பற்ற அவரிடம் தீ பெட்டி கேட்டால் சங்கரர் தன் கையால் கொடுக்மாட்டார், காரணம் அவரின் விரல்கள் தீ பெட்டி கேட்டவர் கையில் பட்டு தன் கை அசுத்தமாகி விடும் என்ற ஒரு எண்ணம் சங்கரப்பிள்ளைக்கு. ஆகவே கடைக்கு வெளியில் ஒரு கயிறு தொங்கும் . அதன் ஒரு முனையில் நெருப்பு இருக்கும், அந்த நெருப்பில் பீடி, சுருட்டை இரண்டு யானை மார்க்க லேபல் போட்ட தீ பெட்டி கிடைக்காதவர்கள் பற்ற வைத்து ல்லுவார்கள். அவர் தேநீர் கொண்டு வந்து கொடுக்கும் போது மூக்கு போனியில் சங்கரர் கொடுக்க மாட்டார். அவர்கள் வெளியில் கயிற்றில் தொங்கும், வெட்டிய நோனா மார்க் பால் டின்னில் தேநீர் அருந்த வேண்டும். அப்படி சாதி வேற்றுமை ஒரு காலம் இருந்தது.

அந்த அரசடி சந்தியில் சங்கரின் பராமரிப்பில் ஒரு வைரவர் கோயில் இருந்தது. அதற்கு முன்னால, ஒரு பழைய ஆழமற்ற கிணறு. அந்தக் கிணற்றுத் தண்ணீர் உப்பு கசப்பு இல்லாத நல்ல தண்ணீர். இந்தக் கிணறு யாழ்பாணத்தை ஆண்ட சங்கிலியன் என்ற அரசன் காலத்தில் வெட்டிய கிணறு. போர்த்துக்கேயர்களுடன் அவன் வண்ணை வீரமஹா காளி அம்மன் கோவில் வீதியில் போர் புரியும் போது, அவனுடைய வீரர்கள் இந்த கிணற்றில் வந்து தண்ணிர் குடித்து சென்றதாக அந்த ஊர் சனங்கள் சொல்வார்கள். அந்தச் சுற்றாடலில் உள்ள கிணறுகளில் சற்று உப்பு தன்மை உள்ளவை . இன்னொரு நல்ல தண்ணீர் கிணறு, அருகாமையில் உள்ள வண்ணை வீரமஹா காளி அம்மன் கோவில் கிணறு. வைரவர் கொவிலடி கிணற்றைப் போல் நல்ல நீர் உள்ள கிணறு . கோவில் கிணற்றிலும் கீழ் ஜாதி மக்களை தண்ணீர் அள்ள விடுவது கிடையாது ஏனென்றால் கோவில் உரிமையாளருக்கு சொந்தமான கிணறு.அதில் ஒரு பலகையில் எழுதிஇருக்கிறது “இந்தக் கிணறு கோவில் கிணறு. அசுத்தமானவ்ரகள் தண்ணீர் அள்ளக் கூடாது” அந்த அறிவிப்பை பார்த்து தானோ என்னவோ சங்கரப்பிள்ளையர், வைரவர் கோவிலடி கிணற்ருக்கு அருகே ஒரு எச்சரிக்கை பலகை போட்டு இருந்தார்” உத்தரவின்றி இந்த கிணற்றில் தண்ணீர் அள்ள கூடாது” என்று அந்த பலகையில் எழுதி இருந்தது. அந்த வைரவருக்கு சங்கரப்பிள்ளை அடிக்கடி பொங்கி படைப்பார் ஏனென்றால் வைரவர் சங்கரப்பிள்ளை கடையின் காவல் தெய்வம் .

காலப்போக்கில் யாழ்ப்பாண சமூகத்தில் தீண்டாமை சற்று குறைந்து கொண்டே வரத் தொடங்கியது ஆமாம் தட்டார் தேரு, சிவியார் தெரு, பறங்கித் தெரு போன்ற சாதி பெயரில் உள்ள வீதிகள் எல்லாம் பெயர்கள் மாறத் தொடங்கின . இலங்கைக்கு 1948 சுதந்திரம் கிடைத்த பின் கீழ் சாதி மக்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள் சற்று குறைய தொடங்கின அதனால் தமிழ் நாட்டில் தோன்றிய ராமசாமி பெரியார் இயகத்தை பின் பற்றி சில முற்போக்கு கொள்கை உள்ள பத்திரிகைகள் வரத் தொடங்கின அதோடு அந்த கொள்கை உள்ள சில குழுக்களும் யாழ்ப்பாணத்தில் தோன்றின.

சங்கரப்பிள்ளையின் வைரவர கோவிலடி கிணறு, நல்லூர் திருவிழாவுக்கு காவடி எடுத்து வருபவர்கள் எல்லோரும் அங்கு தண்ணீர் குடிக்க ஆரம்பித்தனர். சங்கரப்பிள்ளையருக்கு காவடி எடுத்து வருபவர்கள் என்ன சாதி என்று தெரியாததால் தன்னுடைய அனுமதி இல்லாமல் அந்த கிணற்றில் தண்ணீர் அள்ளி குடிக்கக் கூடாது என்று நீண்ட கைற்றுடன் இருந்த வாளியை தன் கடைக்குள் கொண்டு போய் வைத்து விட்டார் . வைரவர் கோபிப்பார் அதனால் நான் அனுமதிக்க மாட்டேன் என்பார் கேட்பவருக்கு.

***

ஒரு நாள் வைரவர் கோவிலடி கிணற்றை சுற்றி ஒரே கூட்டம். எல்லோரும் கிணற்றுக்குள் ஓன்று மிதப்பதை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நானும் போய் பார்த்தேன்.

“ஏன் ஐயா கிணற்றை சுத்தி இவ்வளவு கூட்டம் யாரும் விழுந்து தற்கொலை செய்து விட்டார்களோ. “? கூடத்தில் நின்ற என் அப்பாவுக்கு தெரிந்த ஆறுமுகத்தாரை கேட்டேன்.

“என்ன தம்பி உமக்கு தெரியாதா. சங்கரப்பிள்ளையரோடை கோபித்துக் கொண்டு ஒரு செத்த தெரு நாயை இந்த கிணற்றுக்குள் போட்டு விட்டாங்கள் யாரோ” என்றார் உயர் சாதியை சேர்ந்த ஆறுமுகத்தார்.

“யார் இதை செய்தவர்கள் மாமா?” நான் கேட்டேன்.

“வேறு ஆர் இந்த கொம்யூனிஸ்ட் குழுக்கள் தான். அவர்கள் தான் சாதி வேற்றுமைக்கு எதிரிகள்”.

“இந்த கிணற்றில் பரிசுத்தம் போய்விட்டது மாமா. இனி ஆரும் இந்த கிணற்று தண்னீர் குடிக்க முடியாது . இனி என்ன செய்யப் போகிறார் சங்கரப்பிள்ளையர்” என்று அறுமுக மாமாவின் வாயை நான் கிண்டினேன்.

“இனி என்ன, இந்த கிணற்றை சுத்தப்படுத்த வேண்டும் கன காலமாய் இந்த கிணறு சுத்தம் செய்யவில்லை பாசி படர்ந்து போயிருக்கிறது” அறுமுக மாமா சொன்னார்.

இதுதானோ என்னவோ செத்த தெரு நாயை கிணற்றுக்குள் யாரோ போட்டுவிட்டார்கள் கிணற்றை சங்கரப்பிள்ளையர் சுத்தப்படுத்தட்டும் எண்டு” என்று என் மனதுக்குள் நினைத்தேன்.

“அது இருக்கட்டும மாமா இப்ப இந்த கிணற்றை சுத்தப்படுத்த போவது யார்?” என்று நான் கேட்டேன்.

“எங்கட வேளாள சனங்கள் இந்த கிணற்றுக்குள் இறங்கி சுத்தம் படுத்துவது கிடையாது எண்டு எனக்கு தெரியும் அதனால் இந்த பகுதியில் இருக்கும் வீட்டுக்கு கிணறுகளை சுத்தப்டுத்துவது உயர் சாதி அல்லாதவர்கள் அனேகர் வாழும் அரசு வெளியில் இருக்கும் கந்தன் என்பவனை எனக்கு தெரியும், அவனுக்கு தொழில் கிணறுகள் சுத்தம் செய்வது விறகு வெட்டுவது, தென்னை மரம் ஏறி தேங்காய் பிடுங்குவது வீடுகளின் வளவில் உள்ள தோட்டத்துக்கு, பாத்தி கட்டி தண்ணீர் பாச்சுவது தான்.

“அவன் தான் மாமா எங்கள் வீட்டுக்கும் வந்து கிணறு சுத்தம் செய்கிறவன் . தேங்காய் பிடிங்கிறவன், விறகு வெட்டிறவன், அப்பாவுக்கு வை சி சி கு சுருட்டு வாங்கி கொண்டு வந்து கொடுக்கிறவன், அவன் நல்லவன்.

“அது தான் தம்பி நானும் யோசிக்ஜிறன் சங்கரப்பிள்ளையருக்கு கிணற்றை கழுவ யாரை சிபார்சு செய்வது எண்டு” ஆறுமகத்தார் சொன்னார்.

“மாமா எனக்கு ஒரு யோனை வருகுது சொல்லட்டுமா”.

“சொல்லு தம்பி உனக்கு ஆரையும் தெரியுமே”.

“மாமா நீங்கள் சொன்ன அரசவெளி கந்தனை பிடிச்சால் என்ன, அவனுக்கு இது தான் தொழில், கிணறு சுத்தப் போடுதும் எல்லா உபரணங்களும் அவனிடம் இருக்கு அவன் மகனோடு வந்து செய்வான் கோயில் கிணறு எண்ட படியால் காசும் அதிகம் வாங்க மாட்டான்”.

”நீ என்னடா தம்பி விசர் கதை கதைக்கிறாய் இது கோவில் கிணறடா சங்கரப்பிள்ளையர் உண்டை யோசனைக்கு ஓம் படுவரோ தெரியாது”.

“நான் ஒண்டு சொல்லறன் மாமா”.

“என்ன சொல்லு தம்பி”.

“எண்டை அப்பாவுக்கு சங்கரப்பிள்ளையரை நீண்ட காலமாக தெரியும் சங்கரப்பிள்ளை அப்பாவிடம் உதவிகள் பெற்றிருக்கிறார் அதனால என் அப்பாவை கொண்டு நான் கந்தனை கொண்டு வைரவர் கோவில் கிணற்றை கழுவ சொல்லி சங்கரப்பிள்ளையரோடு பேச சொல்லுறன்”.

“அது நல்ல யோசனை நீ அப்படி செய் தம்பி ” என்றார் ஆறுமுகத்தார்.

***

நான் இந்த விஷயத்தை அப்பாவிடம் அவர் சந்தோசமாக இருக்கும் நேரம் பார்த்து சொல்ல முடிவெடுத்தேன் இதை கெதியிலை அப்பாவுக்கு சொல்லி கிணற்றை சுத்தப்படுத்த வேண்டும் அதே சமயத்தில் அந்தக் கிணற்றில் மற்றவர்களும் தண்ணீர் அள்ளி குடிக்க இனி விட வேண்டும் என்ற ஒரு தீர்மானம் என் மனதில் வந்துவிட்டது ஓரளவுக்கு தமிழ் திராவிட கழக இலக்கண நூல்களை வாசித்து பெரியார் அறிஞ்சர் அண்ணாதுரையின் கொள்கை என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது அது என் அம்மாவுக்கு தெரியும் சில சமயம் அவள் என்னுடம் வாதாடுவாள்.

அன்று மத்தியானம் அப்பா மதிய போசனம் அருந்திவிட்டு வாயில் சுருட்டுடன் ஈஸிசேரில் மதராஸ் ஹிந்து பேப்பரை வாசித்துக்கொண்டிருந்தார் எனக்கு தெரியும் அது தான் நல்ல நேரம் அப்பாவோடு பேசுவதுக்கு என்று. நான் போய் அவருக்கு பக்கத்தில் நின்றேன்.

“என்ன இந்திரன் இங்கே வந்து நிக்கிறாய்” என்று என்னை அப்பா கேட்டார்.

“ஓமப்பா ஒரு முக்கிய விஷயம் உங்களுடன் பேசவேண்டும்”

“என்ன விஷயம் சொல்லு எதும் உனக்கு படம் பாக்க காசு வேணுமே”

“எனக்கு காசு ஒண்டும் வேண்டாம் அப்பா இந்த வைரவர் கோயில் கிணறு பற்றிய விஷயம் பற்றி உங்களிடம் நான் பேச வேண்டும்”.

ஓம் நானும் கண்டனான் அந்த கிணற்றை சுற்றி கூட்டிம் நிண்டு பார்த்துக்கொண்டிருந்ததை ஒரு ஆள் வந்து எனக்கு சொல்லிச்சு அந்த கின்றுகுளை நாய் ஒண்டு செத்து கிடக்காம். இனி என்ன அதை எங்கடை வீட்டு கிணறை சுத்தப் படுத்தும் கந்தனை கொண்டு சுத்தப் படுத்த வேண்டியதுதானே” என் அப்பா சொன்னார்.

“அதுதான் பிரச்சனை அப்பா . அந்த்=கிணற்றுக்குள் இறங்கி அந்த செத்த நாயை வெளியே எடுத்து கிணற்றை சுத்தப்படுத்துவதுக்கு எங்களுடைய சங்கரப்பிள்ளையருடைய அனுமதி தேவை

“அது பிரச்சனை இல்லை கந்தன் தான் இந்த அயலில் உள்ள வீடுகளில் உள்ள கிணறுகளை சுத்தப்படுத்துதுவது அவன் என்று சங்கரப்பிள்ளையருக்கு தெரியும் அம்மன் கோயில் கிணற்றையும் அவன் தான் சுத்தப்படுத்தியவன் “ அப்பா சொன்னார்

“அப்படியா அப்பா அது போதும் நீங்கள் அவர் சங்கரப்பிள்ளையருகு சொல்லி கந்தனைக் கொணடு அந்த கிணற்றை சுத்தப் படுத்த சொல்லுங்கள். நீங்கள் அவருக்குப கன உதவி செய்திருக்கிறீர்கள். மாநகரசபை `அவருடைய கடையை அகற்றும்படி சொன்ன போது நீங்கள் தானே மேயருடன் கதைத்து அதைத் தடுத்து நிறுத்தியது, அதனால் நீங்கள் சொன்னால், அவர் ஓம் என்பார்”

“சரி இந்திரன் உந்த விசயத்தை என்னிடம் விடு நான் பேசி தீர்த்து வைக்கிறன்” அப்பா சொன்னார்.

எனக்குத் தெரியும் என் அப்பா சொன்னால் அதை செய்து முடிப்பார் என்று.

***

நான் எடுத்த முயற்சி வீண் போகவில்லை. சில மணி நேரத்தில் அப்பா சங்கரப்பிள்ளையரோடு பேசி அவரின் சம்மதம் பெற்று என்னிடம் வந்து சொன்னார் “சரி இந்திரன் நீ போய் கந்தனை அந்த கிணறை சுத்தப்படுத்த சொல்லு சங்கரப்பிள்ளையர் ஒம் எண்டிட்டார் இனி பிரச்சினை இல்லை”

எனக்கு ஒரே சந்தோசம் வைரவர் கோவிலடி பிரச்சினையை தீர்த்து விட்டேன் என்று. சில மணிகளில் கிணற்றை சுத்தப்படுத்தும் உபகரணங்களுடன் கந்தன் தன் மகனுடன் கிணற்நோக்கிப் போவதைக் கண்டேன். அவனுக்குப் பின்னால் நானும் போய் சுத்த படுத்துவதை பார்த்துக்கொண்டிருந்தே. சங்கரப்பிள்ளையர் அவனுக்கு அப்படி செய் இப்படி செய் என்று ஓடர் கொடுத்து கொண்டு இருந்தார் . 3 மணி நேரத்தில் கிணறு சுத்தப்படுத்தப்பட்டது . அழுகிய நிலையில் உள்ள நாயின் உடலை வெளியே கந்தன் எடுத்தான் . ஒரே மணம் . அதோடு கிணற்றில் இருந்த குப்பைகள் எல்லா வற்றையும் வெளியே கொண்டு வந்து ஒரு தன் தளுள்வண்டியில் ஏற்றினான். கொண்டூஸ் என்ற பொட்டாசியம் பெர்மாங்கனேட் இரசாயன தூள்களை கிணற்றுக்குள் கந்தன் தூவினான் நீரை பரிசுத்தமாக்க. நான் .கந்தன் செய்வதை பார்த்துக் கொண்டிருந்தேன் ஏனென்றால் இதை ஆரம்பித்தவன் நான். அதனால் நன்றாக செய்து முடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் இதில் மேல் ஜாதி கீழ் ஜாதி என்பது பிரச்சினை இல்லை இது ஒரு பொதுக் கிணறு ஆக்க வேண்டும் என்பது என்னுடைய ஆர்வம்

“உங்களுக்கு எல்லாம் இப்ப திருப்தி தானே சங்கரப் பிள்ளை மாமா” நான் கேட்டேன். ஆறுமுக்த்தார் என்னை பார்த்து கண் சிமிட்டினார்.

“ஓம் எனக்கு தெரியும் தம்பி நீ தான் உன் அப்பரிடம் சொல்லி என்னோடு பேச சொல்லி ஒழுங்கு செய்தனி” சங்கரப்பிள்ளையர் சொன்னார்.

“சங்கரப்பிள்ளை மாமா இந்தக் கிணற்றுக்குள் செத்து கிடந்தது வைரவருடைய வாகனம் .நீங்கள் இந்த கிணற்றில் எல்லா சனங்களையும் தண்ணீர் குடிக்க விடாத படியால் வைரவரின் வாகனம் கோபப் பட்டு கிணறறறுகுள்ள விழுந்து தற்கொலை செய்துவிட்டுது”.

‘நீ சொல்றது உண்மையா தம்பி?” அவருக்கு வைரவர் மேல் அவ்வளவு நம்பிக்கை.

“உண்மை தான் மாமா இது உங்களுக்கு புரியாது வைரவர் இந்த செய்தியை உங்களுக்கு தண்டை வாகனத்தை கொண்டு மறைமுகமாக சொல்லி இருக்கிறார் இனியாவது யோசியுங்கள் இந்தக் கிணற்றை பொதுக்கிணறாக இனயாவது மாற்றுங்கள். மாற்றும் போது அந்த எச்சரிக்கை போர்டை எடுத்து விடுங்கள்” என்றேன்.

சற்று நேரம் யோசித்துவிட்டு சொன்னாள் “தம்பி இப்ப எனக்கு புரியுது நீ சொன்ன மாதிரி வைரவர் எனக்கு ஒரு செய்தியைச் சொல்லி விட்டார் என்று. இனி இது பொதுக்கிணறு. இந்த போர்ட் வேண்டாம்” என்று போய் அந்த எச்சரிக்கை போர்டை பிடுங்கி எடுத்தார் சங்கரப்பிள்ளை.

பிறகு சங்கரப்பிள்ளையர் கந்தனைபை பார்த்து கேட்டார் “கந்தா மூன்று மணி நேரம் இந்த கிணற்றை சுத்தப் படுத்தனாய் என்ன கூலி கேட்கிறாய்” என்று.

அவன் சொன்னான் “சாமி எனக்கு பணம் வேண்டாம். இது வைரவர் கோயில் கிணறு நான் செய்த வேலை வைரவருக்கு எனது அர்ப்பணமாக இருக்கட்டும்”

அவரால் அவன் சொன்னதை நம்ப முடியவில்லை.

நான் சொன்னேன் அவரைப் பார்த்து பார்த்து “இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் சங்கரப் பிள்ளை மாமா, குறைந்த சாதி சனங்களடடமும் நல்ல மனம் உள்ளவர் இருக்கத்தான் செய்கிறார்கள்” என்று.

அவர் உடனே சொன்னார் “தம்பி நீ எனக்கு ஒரு உண்மையைச் சொல்லிப் புரிய வைத்துவிட்டாய் உனக்கு நன்றி உன் அப்பருக்கும், கந்தனுக்கும் என் நன்றிகள்” என்றார் சங்கரப்பிள்ளையர்.

அப்போது நல்லூர் கந்தசாமி கோவில் மணி ஓசை கேட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *