வேறு வேறு அணில்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 9,002 
 
 

கதை ஆசிரியர்: வண்ணதாசன்.

சிலம்பாயி இப்படி பூப்போல வந்து நிற்கிறாள்.

போகன்விலாச் செடியின் அடித்தூர் காட்டுக் கொடிகளைப் போலத் திருகி வளர்ந்து, அதன் நிழலிலேயே பதுங்கியிருக்க ஒரு நெளிந்த தாறுமாறான வட்டத்தில் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்த மூன்று வண்ணத்துப் பூச்சிகளை மட்டும் நெடு நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு பேச்சுத் துணைக்கு ஒருத்து அதுவும் ‘இந்த வீட்டுக்குள் எவள் வந்து பெருக்குமாரை எடுத்துக் கூட்டுகிறாண்ணு பார்க்கேன் ‘ என்கிறமாதிரி ஒரு வருஷத்துக்கு முன்னால் சொல்லி விட்டுப் போன சிலம்பாயி வந்திருப்பது, இன்றைக்கு முழுவதும் புஸ்தகத்தைப் படித்துக் கொண்டு நாற்காலியோடு தைத்துப் போட்டது மாதிரி கிடக்க வேண்டியவனுக்குப் பெரிய மாறுதல் தான்.

அந்த ஆச்சரியம் தெரியும்படியான குரலிலேயே ‘உள்ளே வா சிலம்பாயி ‘ என்று சப்தம் கொடுத்தேன்.

‘ஆமய்யா ‘ என்று சொல்லும் போது கேட் திறக்கிற சத்தமும் அவளுடைய குரலின் மேல் விழுந்தது. வெற்றிலை போட்டிருக்கிறாள். சாராயம் குடித்திருக்கிறாளா என பேச்சுக் கொடுக்கும் போதுதான் தெரியும் வெற்றிலை, லேசான சாராய வாசனை (சிலம்பாயிடம் கேட்டால் ‘சுவர் முட்டி ‘ என்று அல்லது ‘பழரசம் ‘ என்று பேர் சொல்வாள்) இந்தச் சிரிப்பு மூன்றும் இல்லாமல் அவள் இல்லை. இது தவிர அவளுடைய கைப்பிள்ளையும் துப்புரவுக் காரியத்துக்கான பிரப்பங் கூடையும் இருக்கும்.

கூடையையும் செருப்பையும் ஒரே இடத்தில் வைத்தால் என்ன ஆகிவிடும் சிலம்பாயி ஒரு போதும் அப்படிச் செய்வதில்லை. ஒவ்வொன்றுக்கும் ஒரு இடம் தேர்ந்திருக்கிறாள். செருப்பைத் தென்னை மரத்துக்குப் பின்பக்கம் மறைவாய் போகன்விலாச் செடிக்கு அடியில் கழற்றிப் போட்டுவிட்டு அங்கேயிருந்ட்து இந்தப் பக்கம் வந்து கொய்யாச்செடிக்கு அடியில் கூடையை வைப்பாள். இதை அங்கேயோ அதை இங்கேயோ அவள் என்றைக்கும் வைத்ததில்லை. அதே போல வாசல் பெருக்கிற வாரியலை கக்கூஸ் கழுவ உபயோகிக்கிறதில்லை. எல்லாவற்றிலும் இப்படித் திட்டமாக இருக்கிறவள்தான் அன்றைக்கு அப்படி ஒரு சண்டையும் போட்டாள்.

‘அம்மாவங்க இல்லையா ‘ சிலம்பாயி செருப்பைக் கழற்றி வைத்த பின்பு முதல் கேள்வியாகக் கேட்கும் பொழுது அவளுக்கும் சிரிப்பு வந்து விட்டது. நானும் சிரித்துக் கொண்டே சொன்னேன்.

‘ஏன் மல்லுக்கு நிக்க ஆள் வேணுமா உனக்கு ‘

‘போங்க சாமி. வீடு ஆளரவமே இல்லாம ஊமையாக்கிடக்கேண்ணு கேட்டேன். பள்ளிக்கூட லீவுக்கு ஊருக்குப் போயிருக்கிறாங்களாக்கும். ‘

‘அப்ப தெரிஞ்சுக்கிட்டு தானே கேட்கற. ‘

‘எதைச் சாமி தெரியாமச் செஞ்சு போட்டம். எல்லாமே தெரிஞ்சு செய்யுறதுதான் ‘

இந்தப் பதிலில் சிலம்பாயி சட்டென்று இது வரையிலிருந்த கிண்டலை எல்லாம் தாண்டி வேறிடத்துக்குப் போயிருந்தாள். கேள்விக்குப் பிந்திய சிறிய இடைவெளியில் மறுக்க முடியாத யூகங்களுக்கு அனுமதித்து சற்று குனிந்திருந்தாள்.

அன்னிக்கு அம்மாவங்க கை மாத்தா ரூபா கேட்டதுக்கா என்னை சண்டை பிடிச்சாங்க. எதுக்குன்னு எனக்கும் தெரியும். உங்களுக்கும் தெரியும். எதையும் கோர்க்காமல் துண்டு துண்டாக ரிப்பன் பறக்க விடுவது போல சிலம்பாயி சொல்லிக் கொண்டே போனாள்.

அவள் இன்னும் கீழே குனிந்த படி இருந்தாள். தரையில் காக்கை நிழல் பறந்து போய்த் தெருவில் விழுந்தது. தென்னை மரத்தில் சர சரவென்று தலை கீழாக அணில் இறங்கி தரைக்கு ஒரு சாண் உயரத்தில் நின்று தீவிரமாகப் பார்த்தது. வெயிலுக்கு எல்லாம் கட்டுப்பட்டிருக்க பின்னால் நிற்கிற இலவமரத்தின், தெரியாத ஒரு கிளை ‘அக்காவ் ‘ என்று விம்மிக்கொண்டு எய்த கருப்புக்குரல் எங்கிலும் செருகியது.

உண்மை எந்தக் கைத்தாங்கலுமின்றி நடந்து போவது போல அவள் சொல்லிவிட்டாள்.

சிலம்பாயி அடுத்த மாதம் சம்பளத்தை இந்த மாதம் கேட்பதோ ‘இதுதான் கடைசித்தரம் ‘ என்று சொல்லிக்கொண்டே ஒவ்வொரு தடவையும் கொடுப்பதும் எல்லாம் வழக்கமாக நடப்பது, என்னையும் பக்கத்தில் வைத்துக் கொண்டே சிலம்பாயி கேட்பாள். ‘ஏங்க அய்யா, அம்மாவங்க கொடுக்கிற நாலு ரூவாயை வாங்கிட்டுக் கப்பல் ஏறி சீமைக்கா போயிரப் போரேன் ‘ அவள் கேட்பதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் நான் சொல்வேன்.

‘ இவ்வளவு பேசிவிட்டு நீ ரூபாயைக் கண்டா வேண்டாம்னு சொல்லிட்டுப் போகப்போறியோ ?

‘சுளுவா நான் சொல்லிட்டுப் போயிருவேன். ஆனால் தூத்துப் பெருக்க ஆளில்லாமல் நீங்கதான் தவியாத் தவிச்சு நிக்கணும். ‘

‘ஒண்ணும் நிக்காது. உனக்குக் கொடுக்கிறதை இன்னொருத்தருக்குக் கொடுத்தா சொடக்குப் போட்டுக்கிட்டு ஆள் வரும் பார்த்துக்கோ. ‘

‘வந்த பிறகுல்லா சிலம்பாயி அருமை தெரியும் கூட்டிப் பெருக்கின தரையில் ஒரு குத்துச் சோறு வச்சுச் சாப்பிடுகிற மாதிரி கண்ணாடியால்லா இப்ப நான் வச்சிருக்கேன். பச்சைப் பிள்ளை உள்ளங்கை சிவக்காம தாழ்ந்து போகலாம். ஒர் கல்லுமுள்ளு இல்லாம அப்படியில்லா வச்சிருக்கேன் ‘ நாற்பதா நாற்பத்தைந்தா ‘ என நிதானிக்க முடியாமல் முகம் மாறி மாறி இளகிக் கொள்ள வார்த்தை பளிச்பளிச்சென்று சந்தோஷமாக வரும்.

வார்த்தை வருகிறபடிக்கே வேலையும் இருக்கும். அன்றைக்கு முழுவதும் எத்தனை இலை உதிர்ந்ததோ அதுதான் கிடக்கும் முந்தின நாள் கிழித்த தினசரிக் காலண்டர்தான் ஜன்னல் வழி எறிந்த மாத்திரைத் தகடு இன்றைக்கிருக்காது. வெளவால் கடித்த கொய்யா கிடந்ததென்றால் அது முந்தின இரவில் விழுந்ததாக மட்டும் இருக்கும்.

‘துட்டுக்கு செய்யுற வேலையா இது. அம்மாவங்க தர்ர நாலு ரூபாயை வச்சுக் கைப்பிள்ளைக்கு தினம் ரொட்டி வாங்கிப் போட முடியுமா இல்லை சீனியம்மாவுக்கு உள்ளாங்கழுத்துச் சங்கிலி பண்ணி போட முடியுமா ? பேசாம நிழல்ல வீட்டுக்குள்ளே உட்கார்ந்து தக்காளிக் கூடை பின்னிக்கிட்டு கிடக்கிறவ எல்லாம் உச்சாணியிலே ஏறிப்போய் உட்கார்ந்திட்டாங்களா வீட்டில இருக்க இருக்க அடிதான் உதைதான். கச்சரா தான் ஒரு திருப்பு கழுத்தைக் கட்டிக்கிட்டு சினிமாப்பாத்துட்டு வந்தால் மட்டும் ஆயிடுச்சா. மறுபடியும் வீட்டுக்குத் தானே வரணும். வீட்டில என்ன இருக்கு அப்படி இழுத்துப் பிடிச்சு உட்கார வைக்கிற மாதிரி. இப்படி வெளியில வந்தாலாவது கூட நாலு ஜனம் ரெண்டு செடி கொடி, கண்ணுல மொகத்தில் படும். ‘

சிலம்பாயி செடி கொடியை எல்லாம் பற்றிப் பேசுகிறது ஆச்சரியமான ஒன்று. மூன்று நேரம் சாப்பிடுகிறவர்களுடன் மட்டுமே சம்பந்தப் பட்டதுதான் இந்தப் பூ செடி கொடி விஷயமெல்லாம் என்று சட்டம் ஒன்றுமில்லை எனத் தோன்றும்படி நடந்து கொண்டிருக்கிறாள்.

தந்தி ஆபீஸ் கட்டிடத்திலுள்ள மயில் மாணிக்கம் கொடி வீசி உரக்கடைக்காரர் வீட்டு முகப்பில் நட்சத்திரச் சிவப்பில் பூத்திருப்பதற்கும் டி.எஸ். பி. வீட்டுக் கல்வாழை வரிசையாக எதிர் வீட்டில் முளைத்திருப்பதற்கும் அவள்தான் காரணம்.

மற்றவை எல்லாமாவது பூக்கிறவை. எங்கள் வீட்டுக்கு அவள் கொண்டு வந்து கொடுத்தது ஒரு செடி. பார்ப்பதற்குச் செங்கீரைத் தண்டு மாதிரி இருக்கிற அதை அவள் தான் ‘பேப்பர்மில்காரங்க ‘ வீட்டிலே இருந்து கொண்டு வந்தாள்.

‘ஒடிச்சு வச்சாலே வளந்திரும்னு சொன்னாங்க பேப்பர் மில்லு வீட்டு அம்மா. இங்கன நட்டுவச்சுப் பார்ப்பமா ? என்று சொல்லும்போது எங்களுக்கு எந்த நம்பிக்கையுமில்லை. ஆனால் அவள் நம்பியபடியும் சொன்ன படியும் கருஞ்சிவப்பு இலைகளுடன் மிகவும் வித்தியாசமாக அந்தத் தாவரம் வளர்ந்ததைப் பார்த்து விட்டுச் சிலம்பாயி சொன்னாள்.

‘இப்படி குளச்சையாத் திமிரிக்கிட்டு நிக்கிறதைப் பார்த்தா இது மலங்காட்டுல அருவிக் கரையில் வளர்ற ஜாதியாத் தெரியுது. இங்க உள்ள செடியெல்லாம் கையைக் கட்டுக்கிட்டுல்லா நிக்கும் ஒரு மாதிரியா ‘

இந்த அபிப்பிராயத்தின் வலுவான ஈர்ப்பில் படித்துக் கொண்டிருந்த ஆங்கில தினசரியை ஒதுக்கிக் கொண்டு அவளைப் பார்த்ததும் அவள் ‘சரிதானே என்கிற மாதிரி என்னைப் பார்த்ததும் எல்லாம் சந்தோஷமாயிருந்தது. ஷேவ் பண்ணிக் கொண்டிருக்கும்போது, பையனுடைய காலணிக்குப் பாலிஷ் போடுகையில் என்று அநேக காலைகளின் சந்தோஷமான ஒரு பகுதியாக சிலம்பாயியும் இருந்தாள்.

சந்தோஷம் குறைய ஆரம்பித்ததெல்லாம் தன்னுடன் தன் கைக் குழந்தையைக் கூட்டிக் கொண்டு வருவது போலவே மூத்தமகள் சீனியம்மாவையும் கூட்டிக்கொண்டு வரத் தொடங்கியபோதுதான்.

சிலம்பாயி வேண்டவே வேண்டாம் என்று சொல்ல இவள் சொல்வதற்கு எதிராகச் செய்வதே பழக்கமாகக் கொண்டிருந்த லாடாண்டி அவனுடைய தங்கச்சி மகனுக்கு சீனியம்மாவைக் கட்டி வைக்க முதலில் அப்பா சொல்படி சந்தோஷமாகவே முறைப்பையனைக் கட்டிக் கொண்ட சீனியம்மாள் ஒரு ஏழெட்டு மாதம் மட்டுமே அவனுடன் இருந்து விட்டு பிடிக்கவில்லை என்ற ஒரே சொல்லோடு திரும்பி வந்துவிட்டாள்.

சீனியம்மாவுக்கு மிஞ்சிப் போனால் பதினாறு பதினேழுதான் இருக்கும் என்றாலும் அது இந்தக் காலத்துப் பதினாறு பதினேழு என்று சொல்லும்படி பார்வையும் நடவடிக்கையும் இருக்கும்.

‘அக்கா இடுப்பில தங்கச்சி இருப்பதைப் பார்த்தால் சிலம்பாயிதான் பேரன் பேத்தி எடுத்திட்டாளோண்ணு நினைச்சேன் ‘ என்றுதான் அநேகம் பேர் சொன்னார்கள். அப்படித் தோன்றும் படியாக சிலம்பாயியுடன் சீனியம்மாளும் வந்து கொண்டே இருந்தாள். ‘அவளை எதுக்குப் புறத்தாலேயே கூட்டிக்கிட்டு அலையுத. வீட்டில இருக்கச்சொன்னா என்ன ? ‘ யாரோ கேட்டிருப்பார்கள் போல.

‘வீட்டில என்ன. உலைப்பானை பொங்கி வடிகஞ்சி வழிஞ்சி ஓடிக்கிட்டா இருக்கு. குடிச்சுக்கிட்டு அக்கடாண்ணு படுத்துக் கிடக்கதுக்கு. போங்க சாமி. இங்க வந்தாலாவது பருக்கையும் தண்ணியுமனாலும் ஆளுக்கு ரெண்டு மடக்குப் பகிந்து குடிச்சிக்கிடலாம் ‘

சிலம்பாயி அப்படிச் சொல்லி வாயை அடைத்து விட்டாள் என்றாலும் அதற்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமாகச் சீனியம்மா பற்றிக் கேள்விப்பட்டதெல்லாம் வேறெப்படியெல்லாமோ ஆகிவிட்டது.

சீனியம்மாவுக்கும் ஒரு சானிட்டரி இன்ஸ்பெக்டருக்கும் ஆதியிலிருந்தே பழக்கம் என்று முதலில் பேச்சு வந்தபோது கூட ஒன்றுமில்லை. சினிமாக் கொட்டகையை விட்டு வரும்போது சீனியம்மாவை முன்னிட்டு அந்த சானிட்டரி இன்ஸ்பெக்டருக்கும் இன்னொரு இளந்தாரிப் பையனுக்கும் அடிதடி வந்து போலீஸ் ஸ்டேஷன் வரை போனதாகத் தெரிந்ததும் ‘இனிமேல் சிலம்பாயியை வேலைக்கு வச்சிகிறதுக்கு லாயக்கில்லை ‘ என்று மிகவும் பாதுகாப்பான ஒரு யோசனை இந்த வரிசையிலுள்ள பெண்களிடம் உண்டாகிவிட்டது. இப்படி தீர்மானித்துக் கொண்டு விட்ட மறுநாளோ ரெண்டாம் நாளோ தான் சிலம்பாயி இங்கே சண்டை போட்டதும் சண்டை முற்றி அவளை நின்று கொள்ளச் சொன்னதும் எல்லாம் நடந்தது.

‘ஒழுங்காக் கழுவி விடுகிறதாக இருந்தால் கழுவி விடு. இல்லாட்டி நிண்னுக்க ‘ என்று தான் பின்னால் பேச்சே ஆரம்பித்தது. சிலம்பாயி பதில் சொன்ன மாதிரி தெரியவில்லை.

‘தண்ணி ஊத்துங்கம்மா ‘ என்ற குரல் வந்தது. பிரஷ் தேய்க்கிற சரசரப்பு சலார் சலார் என்று தண்ணீர் வீச்சு. அடங்கினது மாதிரி பினாயில் வாசனை.

‘தொட்டித் தண்ணி பூராவும் உனக்குத்தான் சரியாகப் போகும் போல ‘– மறுபடியும் உசுப்பிவிடுகிற குரல் தொட்டிப் பக்கத்திலிருந்து.

சிலம்பாயிக்கு நிஜமாகவே அதிகப் பணம் தேவைப்பட்டிருக்கவேண்டும்.

‘இருவது ரூபா இருந்தா வேணுங்கம்மா. சம்பளத்தில் கழிச்சுக்கிடுங்க. ‘

‘கேட்கிற நேரம் எல்லாம் உருவி உருவிக் கொடுக்க இங்கே என்ன அச்சடிக்கவா செய்யுது ? ‘

‘மாசாமாசம் முழுச் சம்பளத்தைக் கூடப் பிடிச்சிக் கிட்டாச் சரிதான். ரொம்ப அவசரம். ‘

‘இருபது ரூபாயைத் தூக்கி உங்கிட்டேக் கொடுத்துட்டு அப்புறம் உன்னை யாரு தேடி அலையறது ? ‘

‘பத்து ரூபாயாவது கண்டிப்பாத் தரணும், இல்லேண்ணு சொல்லிரப் படாதும்மா. ‘

‘பத்து பைசா கூட இல்லை ‘

இந்த இடத்தில் சிலம்பாயி காயம்பட்டுவிட்டாள்.

‘பிச்சைக்கு வந்தா நிக்கிது உங்ககிட்டே. பாடுபடுகிறவ ஒரு ஆத்திர அவசரத்துக்குக் கேட்டா உண்டு இல்லைண்ணா அமர்ந்த வார்த்தையாச் சொல்லாம இது என்னம்மா பெரியபேச்சு. ‘

‘எப்படி பேசணும்னு நீ ஒண்ணும் சொல்லிக் கொடுக்க வேண்டாம். போய்ச் சேரு. ‘

‘பின்னே இங்கேயாவா காத்துக்கிடக்கப் போகுறோம் ‘

‘இந்தாங்க, இவகிட்டே நாலு ரூபாயைக் கொடுத்து அனுப்புங்க. இவ இல்லாட்டா இவ அக்கா. ‘

இந்த இடத்தில் நான் ரூபாயுடன் சேர்ந்து கொள்ள சிலம்பாயி அதற்கப்புறம் எதுவுமே சொல்லாமல் ரூபாயை வாங்கிக் கொண்டு போய் விட்டாள். எங்களைப் போலவே அவளுடைய மகளை உத்தேசித்து இந்த வரிசை வீட்டில் நான்கு பேருமே நிறுத்திவிட அதற்கப்புறம் வெகு சீக்கிரமாகவே மூக்கம்மாள் வந்து அந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டாள்.

மூக்கம்மாள் வருகிறதும் தெரியாது. போகிறதும் தெரியாது. என்றைக்காவது பப்பாளி இலையில் மிஞ்சின சோற்றைக் குத்துக்காலிட்டு உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். மாரியம்மன் கோவிலுக்கு மூக்கம்மா அக்கினிச்சட்டி எடுத்துப்போனதாகச் சொன்னார்கள். இவ்வளவு அமைதியானவளும் அக்கினிச்சட்டி உக்கிரமும் எப்படிப் பொருந்திக் கொண்டது என்று தெரியவில்லை. இந்த அமைதிக்குச் சரியாகத்தான் வேலையும் இருந்தது. ஒன்றும் சுகமில்லை.

பேசத் தெரியாத அப்பாவி வேலைக்காரி கிடைப்பதை விட வேலையில் சுத்தம் இந்தக் காலத்தில் முக்கியம் என்று நாங்களும் பழகிக்கொள்ள அநேகமாகச் சிலம்பாயியை மறந்தே போன ஒரு தினத்தில் தான் இப்படி அவள் வந்து நிற்கிறாள். அதுவும் எப்பேர்பட்ட சொல்லுடன்.

‘எதைச் சாமி தெரியாமச் செஞ்சு போட்டம். எல்லாமே தெரிஞ்சு செய்யுததுதான். ‘

அவள் குனிந்திருப்பதையே பார்த்திருக்கப் பார்த்திருக்க இதுவரை அவளைப் பார்க்க முடியாத நாட்களின் கனத்தையெல்லாம் அவள் முகம் தாங்கியிருப்பது போல இருந்தது. வெற்றிலைச் சாறு கசிகிற அந்தக் கடைவாயில் சொல்லாமல் நிறைய விஷயங்கள் தேங்கியிருப்பது போல ஒரு சின்னஞ்சிறு எச்சில் குமிழ் உதடு அமுங்கிப் பொருந்திய கோட்டில் துடித்துக் கொண்டிருந்தது.

‘வேறென்ன சிலம்பாயி ‘ என்றேன்.

‘எல்லாரும் நல்லா இருக்கீங்கள்ளா அய்யா ‘ என்று கேட்டுச் சிரித்தாள்.

ஒன்றும் சொல்லாதபடி அவளின் முதிர்ந்த பார்வையை என்னிடமே தங்கும்படி அசையாமல் வாங்கிக் கொண்டிருந்தேன்.

‘வேறு ஒண்ணுமில்லைய்யா…இந்த மூக்கம்மா மாப்பிள்ளைக்கு நேத்து ராத்திரி மாரடைப்பு மாதிரி வந்து பொழைக்க மாட்டாமுண்ணு பெரியாஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போயிருக்காங்க. நல்லதோ கெட்டதோ அந்த அப்பிராணி வேலைக்கு வருகிறதுக்கு முன்ன பின்னே ஆகும். வீட்டோட வீடா இந்தப் பக்கத்திலேயும் எல்லாத்தையும் கழுவிப் பெருக்கிட்டுப் போயிருவோம்ணு பட்டுது. ஏதோ அவளுக்கு நம்மால ஏண்ட உதவி ‘ மிக அதிகமாக உதிர்ந்து கிடந்த அசோக மரத்து சருகுகளில் நடந்து, அவளுடைய அடுத்த காரியமாகக் கூடையை வைப்பதற்கும் குனிந்த சமயம் சிமெண்ட் நடை தளத்தில் குறுக்காக ஓடி வந்து ஒரு அணில் தென்னையில் ஏறியது.

சற்றுமுன்பு சரசரவென்று இறங்கி ஓடியதும் இப்போது மேலே ஏறிப்போவதும் ஒரே அணில்தானா வெவ்வேறா என்று தெரியவில்லை.

ஒன்று என்று தீர்மானிக்கத்தான் விருப்பமாக இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *