வேப்ப மரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 29, 2013
பார்வையிட்டோர்: 21,381 
 

நான் என்னவோ வேப்பமரந்தான். முன்பெல்லாம் காற்று அடிக்கும் ; என் கிளைகள் பேயாடும். மழை பெய்யும் ; வாசனை ஒன்றை விசிறுவேன். சித்திரை பிறக்கும் ; என் மலர்கள் தேனீக்களை அழிக்கும். நான் வெறும் வேப்பமரமாகத்தான் இருந்தேன்.

ஆனால் இப்பொழுது யோகம் அடிக்கிறது ; நான் தெய்வமாகிவிட்டேன். எனக்கு வந்திருக்கும் பெருமையை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. நாள் தவறாமல் யாராவது இங்கு வருகிறார்கள். மரக்கடை வியாபாரி ஒருவன் மட்டும் என்னை முறையாக அறுத்துப் பலகையாக்கினால் 20 பலகையாகும் ; வியாபாரத்துக்கு அறுத்தால் 25 ஆகும் என்று சொல்லிக் கொண்டிருந்தான். இப்பொழுது வருபவர்கள் எல்லாம் என் உடம்பைச் சுற்றி மஞ்சள் பூசிக் குங்குமம் இடுகிறார்கள். சாம்பிராணிப் புகை போடுகிறார்கள். அகலில் நெய்விளக்கு வைக்கிறார்கள். வெற்றிலை பாக்குத் தேங்காய் பழம் வைத்துக் கும்பிடுகிறார்கள். வெள்ளிக்கிழமைதான் கூட்டம் தாங்கவில்லை. ஏராளமாக மாவிளக்குப் படைக்கிறார்கள்.

இந்த யோகம் ஒரு மாதமாக அடிக்கிறது. ஆனால் இந்தப் பங்களாக்காரருக்கு என்னால் தொந்தரவு இல்லை என்று சொல்லிவிட முடியாது. எப்போதுமே ஒருவிதம் இல்லாவிட்டால் ஒருவிதம் என்னால் தொந்தரவுதான். வேப்பம் பழத்தைத் தின்று காக்கை எச்சமிட்டதோ, சின்னச் செடியாய் முளைத்து நான் ஆளானதோ இப்பொழுது இருக்கிறவருக்குத் தெரியாது. அப்பொழுதெல்லாம் அவர் சின்னப் பையன் தகப்பனார் இருந்தார். பல் குச்சிக்கு வேப்பங்கிளையைத் தெருவில் போகிறவர்கள் ஒடிக்க ஆரம்பித்ததிலிருந்து வம்பு ஆரம்பித்துவிட்டது.

வேப்பமரம் ஒன்று இருக்கிற விஷயம் நகரசபையார் வெளியிட்ட ஏல நோட்டீசைப் பார்த்த பிறகு தான் இவர் கவனத்துக்கு வந்தது. அதற்குப் பிறகு என் விஷயத்தில் இவருக்குத் திடீரென்று அக்கறை பிறந்தது. வக்கீல் வீட்டுக்குப் போய் நகரசபை ஆணையாளரைப் பார்த்துப் பேசினார். முடிவாக, பிளான் சங்கிலி எல்லாம் எடுத்துக் கொண்டு அதிகாரி ஒருவர் வேலியோரம் வந்து அளந்து பார்த்தார். அவர் என்ன சொன்னரோ என்னவோ, ஏலப்பேச்சு அதற்கு அப்புறம் அடங்கிப் போய்விட்டது.

ஆறு மாதத்துக்கு முன்பு மற்றொரு சங்கடம் முளைத்தது. எனக்கு அது சங்கடமாகத் தெரியவில்லை. ஆனால் மற்றவர்கள் அப்படி நினைத்தால் தானே? முளைப்பதும், இலை விடுவதும், கிளையாவதும் மலர்வதும் நாமாகச் செய்கிற காரியமா? அவை எல்லாம் தாமாக நடக்கின்றன. விரும்பினால் கூட, நம்மால் தடைபடுத்த முடியாது. ரோட்டுப் புறமாகப் போகாதே என்று ஒரு கிளைக்குச் சொல்லிக் கொண்டே இருந்தேன். அது கேட்கவே இல்லை. அந்தக் கிளை பழுக்க ஆரம்பித்ததும் கவலையாகத்தான் இருந்தது. ஆனால் கவலைப்பட்டு என்ன பயன்? நாளடைவில் கிளை பட்டுப்போய்விட்டது.

ஒருநாள் யாரோ பிச்சைக்காரன் மரத்தடியில் தகாக் குவளையையும் கழியையும் வைத்துக்கொண்டு படுத்துக் கொண்டிருந்தான். நல்ல வெயில் வேளை! பலமான காற்று ஒன்று அடித்தது. மளமளவென்ற ஓசையுடன் நிமிஷத்துக்குள் அங்கே பெரிய கும்பலும் கூக்குரலும் ஆகிவிட்டன. அந்தக் கலவரத்தில் முதலில் ஒன்றுமே தெரியவில்லை. பிறகு தலையில் காயம்பட்ட ஓர் இளைஞனைத் தூக்கி ரிக்ஷாவில் ஏற்றிக்கொண்டு சிலர் சென்ற பொழுது தான் விஷயம் புரிந்தது. கீழே சென்று கொண்டிருந்த இளைஞன் தலையில் கிளை விழுந்து, ஆபத்தை உண்டாக்கிவிட்டது! ஆனால் நான் பிறந்து வளர்ந்ததற்கோ, தெருப்புறம் கிளை நீண்டு சென்றதற்கோ நானா பொறுப்பு? இந்தச் சின்ன விஷயம் இந்தக் கும்பலுக்குத் தெரியவில்லை. அடுத்தாற் போல பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்த பிச்சைக்காரனுக்கு ஒன்றும் நேரவில்லையே என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?

ஒரே கும்பலாக விழுந்தடித்துக் கொண்டு பங்களாவுக்குள் நுழைந்தார்கள். பங்களாக்கார அம்மா பயந்து போய் முன் ஹாலுக்கு வந்தாள். ஆளுக்கு ஒருவராக, நெருப்புக் கக்க, தாறுமாறாகப் பேசினார்கள். “”””மரத்தை வெட்டிவிட்டு மறுகாரியம் பார்க்கிறீர்களா? இல்லை, நாங்களே வெட்டி விடட்டுமா?”” என்று அதட்டிக் கேட்டபோது அந்த அம்மாளுக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. “”””ஐயா வந்தவுடன் சொல்லிச் செய்யச் சொல்லுகிறேன்”” என்றாள். அதற்கு ஏற்றாற்போல, பங்களாக்காரர் இரண்டு நாளுக்குள் வெட்டிவிடுவதாக உறுதி கூறியபின் கூட்டம் கலைந்து, ஒருவன் மட்டும், “”””இப்பொழுதெல்லாம் வெட்ட வேண்டாம். ஓர் ஆளைக் கொன்ற பிறகு வெட்டலாம்”” என்று அவருடைய உறுதிமொழியைக் கிண்டல் செய்துகொண்டே போனான்.

வீட்டுக்காரருக்கு ஒரே கோபம். மனத்துக்குள்ளாக என்மேல் பாய்ந்தார் ; கும்பல்மேல்
பாய்ந்தார். இளைஞன் மேல் பாய்ந்தார். இரண்டு நாள் வரையில் இந்தப் பாய்ச்சல் ஓயவில்லை.
மூன்றாவது நாள் நகரசபையிலிருந்து மரத்தை வெட்டி விடும்படி ஓர் அவசர உத்தரவு வந்தது. உத்தரவு வந்த பிறகு இந்தப் பாய்ச்சல் எங்கோ மறைந்துவிட்டது. ஏலம் போடுகிற முயற்சி தோற்றுவிட்டதால் நகரசபையார் இந்த வேலையில் இறங்கிவிட்டதாக அவர் நினைத்துக் கொண்டார். பழையபடி வக்கீல் வீட்டுக்குப் போய், பதில் நோட்டீஸ் கொடுக்க ஏற்பாடு செய்தார். ஆனால் வக்கீல் மட்டும் இதெல்லாம் பயன்படாதென்று சொல்லியும் இவருக்கு வீம்பு வந்துவிட்டது. என்ன ஆனாலும் வெட்டப்போவதில்லை என்று முடிவு செய்துவிட்டார்!

நாளைக்கு நடப்பது இன்று யாருக்குத் தெரிகிறது?

அடுத்தநாள் மாலை ஐந்து மணிக்கு பங்களாக்காரர் பங்களா முகப்பில் உட்கார்ந்திருந்தார். திடீரென்று ஒரு பெரிய கும்பல் பங்களாவுக்குள் ஆரவாரத்துடன் நுழைந்தது. உடனே அவருக்கு விஷயம் விளங்காமல் இல்லை. இருந்தாலும் ஊமையனைப் போல் கண்ணை உருட்டினார்.

“”””அந்தப் பையன் சாகவில்லை. யாராவது செத்தாலொழிய மரத்தை வெட்ட மாட்டீர்களாக்கும் என்று பலவாறாகக் கும்பல் இரைந்தது. கோடாலிக்காலம் வரவில்லை. என்மேல் வஞ்சனை இல்லை”” என்று ராஜதந்திரத்தை கடைபிடித்தார்.

அவர் பேச்சு எடுபடவில்லை. கும்பலின் அட்டகாசமும் கொதிப்பும் ஏறிக்கொண்டிருந்தன. எந்த நிமிஷம் என்ன ஆகுமோ என்று அவருக்குத் திகிலாக இருந்தது. அந்தச் சமயத்தில் அத்தனை பேர் கவனத்தையும் இழுக்கக்கூடிய பெரிய சத்தம் தெருப்புறத்தில் கேட்டது. கும்பல் முழுவதும் பறந்துவிட்டது. பங்களாக்காரரும் பின் தொடர்ந்தார்.

ஒரு பஸ் நடைபாதை மீதேறி என்மீது முட்டிக்கொண்டு நின்றது. வண்டியை விட்டுப் பிரயாணிகள் கலவரத்துடன் இறங்கி கொண்டிருந்தார்கள். அதற்குள் இங்கிருந்து போன கும்பல், வீதிக் கும்பல் ஆக எல்லாமாகச் சேர்ந்து கொண்டுவிட்டன. பத்து நிமிஷம் ஒரே குழப்பம்.

“”””இந்த மரம் மாத்திரம் இல்லாவிட்டால் என்ன கதியாயிருக்குமோ!”” என்று ஜனங்கள் என்னைப் போற்றத் துவங்கிவிட்டார்கள். அதற்குப் பிறகுதான் விஷயம் விளங்கிற்று.
தெருவில் வந்துகொண்டிருந்த பஸ்ஸின் டயர் வெடித்துவிட்டது. பிரேக் பிடிக்கவில்லை. டிரைவர் ஏதோ கணக்குப் பண்ணி ஸ்டீயரிங்கை என்னை நோக்கித் திருப்பிவிட்டிருந்தான். என் மீது வண்டி மோதி நின்றுவிட்டது. நல்ல வேளை! பஸ் பிரயாணிகள் 24 பேரில் ஒருவருக்கும் சொற்பக் காயங்கூட ஏற்படவில்லை. “”””மரத்தை வெட்டாததும் நல்லதாகத்தான் போச்சு. இல்லாவிட்டால் இத்தனை பேரும் எமப்பட்டணந்தானே?”” என்று கும்பலின் பழைய சமாச்சாரத்தையும் இதையும் கலந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நான் என்ன, மரந்தானே? பார்த்துக்கொண்டிருந்தேன்! இது நடந்த பிறகு மரத்தை வெட்ட வேண்டுமென்ற பேச்சை யாருமே எடுக்கவில்லை. ஆனால் பங்களாக்காரருக்கு மட்டும் என்னைப் பற்றிய நினைப்பு தடித்துவிட்டது. ஒரு சமயம் என்னை வெட்டிவிட வேண்டுமென்று நினைப்பார் ; மற்றொரு சமயம் கூடாதென்று நினைப்பார். நான் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

ஆனால் இவ்வளவு குழப்பத்துக்கும் முடிவு ஏற்பட்டதே, அதுதான் அதிசயமாக இருக்கிறது. பஸ் வந்து மோதிய மூன்றாம் நாள் மற்றொரு கிளையின் அடிப்புறத்திருந்து பால் விடாமல் வடிய ஆரம்பித்தது. இதை யார் கவனித்தார்களோ, எப்படித்தான் இந்த விஷயம் ஜனங்களிடையே பரவிற்றோ தெரியவில்லை – அன்று முதல் தெய்வமாகிவிட்டேன்! தேங்காய் உடைத்துக் கர்ப்பூரம் ஏற்றும் பெருமை எனக்கு உண்டாகிவிட்டது. வெகு பக்தியுடன் வடிகிற பாலைப் பிடித்துக்கொண்டு போகிறார்கள். பல நோய்கள் குணமாவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். பங்களாக்காரர் இதுவும் ஓர் ஆச்சரியமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறார். நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஒரு விஷயம் : இன்று உச்சிப்பொழுதுக்குப் பிறகு ஒரு விஞ்ஞானி இங்கு வந்தார். அவருடன் ஒரு மாணவனும் வந்திருந்தான். மரத்தில் பால் வடிவதை ஊன்றிப் பார்த்தார்கள். “”””உடம்பில் உள்ள ரத்தம் பாய்ந்து செல்வதைப் போல மரத்திலும் செடியிலும் ஜீவரசம் ஏறுவது இயற்கை. சிரங்கு வந்தால் சரீரம் பொத்துக் கொண்டு ரத்தம் முதலியன வடிகின்றனவே, அதைப் போலவே மரத்தில் பொத்துக் கொண்டு ஜீவரசம் வெளியே வந்துகொண்டிருக்கிறது. அவ்வளவுதான் விஷயம்”” என்று விஞ்ஞானி மாணவருக்கு விளக்கிக்கொண்டிருந்தார். விஞ்ஞானி சொன்னது சரியா? ஜனங்கள் சொல்வது சரியா? எனக்குத் தெரியாது. நான் வெறும் வேப்பமரந்தானே?

Print Friendly, PDF & Email

யார் முதல்வன்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

தவிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)