”சம்பத்து இங்கே வா!”
சீஃப் எடிட்டர் கூப்பிட்டார்.
”என்ன சார் புது அசைன்மெண்ட்டா? நடிகையா, பண விவகாரமா, இல்ல பக்தியா?”
இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்டாக ஆகப்போவதாய் மார்தட்டிக்கிளம்பின சம்பத் இப்போது கைகட்டி கொடுக்கிற வேலையச் செய்து கொண்டிருந்தான். நடிகையின் நாயைப்பேட்டி எடுத்தாலும் மனசுக்குள் என்னமோ கறுப்பு கண்ணாடி, தொப்பி வாயில் பைப் என்ற கெட்டப் வந்து போய்க்கொண்டிருந்ததென்னமோ உண்மை.
”சம்பத்து! அதான் தஞ்சைப்பக்கத்துல ஒரு பழைய கோவில் இருக்கதாமில்ல, அந்த கோவிலும் குளத்தைப்பத்தியும் அடிபடுதே அவ்வளவு! என்னபா நம்ம பத்திரிகையில ஒண்ணுமே காணோமே?”
”ரொம்ப எழுதிட்டாங்க சார்! வாரம் ஒரு டீவி சானல்லயும் காட்டறான்! நமக்கு தோதுப்படாது சார்”
”யோவ்! சரியா வருமா இல்லியானு சொல்ல வேண்டியது நானு. நடிகை பிரா பத்தி எழுதச்சொன்னா துடியா பரப்பே! கிராம கோவில்னா சரிப்படாது இல்ல?”
யோவ் அந்த கிளு கிளுப்பு நடிகையோட ப்ரத்யேக ஃபோட்டோ ஒண்ணு வாங்கியா! அவள இப்பாத்தாலே எனக்கு இப்பவும் ஜிவ்வுனு ஏறுதய்யா – இப்படி அறுபதிலும் ஜொள்ளு விடும் கிழம் என்னை வெறுப்பேத்தியது
”இல்ல சார், நம்ம ராவ் இருக்காருல்ல அவரு பண்னட்டுமே…. எனக்கு எழுத ஒண்ணும் ஆகப்படாது. அதன் எல்லாரும் மேகசின் மேகசின்னா எழுதி தாள்ளிட்டாங்களே!”
”அப்பா சம்பத்து! எல்லோரும் எழுதின விஷயம் என்ன தெரியுமா? அந்தக்குளத்துல வேண்டிகிட்டா அப்படியே நடக்குமாம். நீயும்தான் பாக்காத டாக்டரில்ல. குழந்தை இன்னும் பொறக்கல. போய்யா போய் வேண்டிகிட்டு வா!”
சம்பத்தின் வீக் பாயிண்டில் அடித்தார்.
ஊர் பஸ் ஸ்டாண்டில் இறங்கினான்.
கூகிள் செய்து இடத்தை தெரிந்து வைத்திருந்தான்.
இந்த இடத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவு. இன்னும் பஸ் போக்குவரத்து கூட வரவில்லை. நேற்று வரை யாரும் அறிந்திராத கோவிலுக்கு இன்று ஹிமாலய வளர்ச்சி புகழ்.
“சார் வண்டி டாக்சி, கோவிலுக்கு போறீங்களா? வாங்க வாங்க.”
அவனுடன் இறங்கிய இருபது பேரும் வெவ்வேறு வண்டியை நோக்கிச்சென்றனர்.
“ஒரே ஃப்ளாட் ரேட் சார்! இருநூறு ரூபாய்!”
”5 கிலோமீட்டருக்கு இருநூறு ரூவாயா?”
”சார் போற இடம் அப்படி! இந்தக்கோவிலுக்கு இன்னும் நெரய கொடுக்கலாம், அதுக்குப்போய் கணக்கு பாக்கற?”
காலேஜில் எகனாமிக்ஸ் அவனுக்கு அவ்வளவாகப்புரிந்ததில்லை. இன்று இந்த இடத்தின் வளர்ச்சியைப்பார்த்தபோது புரிந்தது. வெறும் சாப்பாட்டுக்குக்கூட சவாரி எதிர்பார்த்து சோர்ந்து
நின்றவர்கள் இன்று பள பள ஷர்ட், கூலர்ஸ் காலில் ஷூ. காரை நிறுத்தி..ம்ம்
பணப்புழக்கம் என்ன என்ன மாற்றங்களைக்கொண்டு வருகிறது!
“ஒரு நாளைக்கு எவ்வளவு சவாரி போகும்?”
”அது போகும் சார் இருவது முப்பது”
”கோவில் சாத்திடுவாங்களே பன்னண்டு மணிக்கு. அப்ப கூடவா இருவது முப்பது சவாரி போகும்?”
”நடை சாத்தினா என்ன? குளம் இருக்கில்ல! கூட்டம் அங்கதானே சாயுது! இருட்டர வரை நாள் முழுக்க கூட்டம்தான்!”
சம்பத்துக்கு ஆச்சரியமாக இருந்த்து.
”குளத்துல இறங்கிக்குளிக்க முடியுமா?”
”அய்யே சார் அது வெறும குட்டைதான். சுத்தி வேலி போட்டிருக்கும் இறங்க முடியாது. கை கால் கழுவிட்டு சாமி தரிசனம் செஞ்சு நேர்ந்துக்கிட்டு குளத்துல வேண்டுதல் வெச்சு காசு போடுவாங்க. வேண்டுதம் அப்படியே பலிச்சுடும்!”
’இதென்ன சோழர் காலத்து குளமா?”
”அதெல்லாம் தெரியாது சார்! ஆனா போன வருஷம் வரைக்கும் சிதிலமாக்கிடந்தது. கோவில்ல விளக்கேத்தக்கூட வழியில்லாம இருண்டு கெடக்கும். ஆனா உள்ள சாமி ரொம்ப ரௌத்திரம்னுவாங்க. பார்வையாலேயே எரிச்சுடும். சார் கோவில் வந்துடுச்சி!”
கும்பாபிஷேகத்துக்கு தயாராக புதுப்பொலிவுடன் கோவில் கோபுரம் பச்சை, நீலம் மஞ்சள் சிகப்பு என்று மின்னிக்கொண்டிருந்த்து. புதிதாகப்போடப்பட்ட சிமிண்ட் ப்ளாட்ஃபாரத்தில் பூக்கடைகள், பொம்மை, கலர் கோலப்பொடி, தாயத்து, மஞ்சள் கயிறு தலைக் குஞ்சலம், கை வளையல்கள் விற்கும் கடைகள் ஒரு மினி மைலாப்பூர் இருந்தது.
“அண்னா வாங்கோ இன்னிக்கு ஸ்பெஷல் பூஜை! சுவாமிய கிட்ட நின்னு தரிசனம் பண்ணலாம். டிக்கட் வெறும் ஐநூறுதான்! அண்ணாக்கு ஒண்ணு போட்டுடலாமா? ஆத்துல அழச்சிண்டு வரலியா?”
சம்பத்துக்கு எரிச்சலாக வந்தது.
இதில் கவர் செய்ய என்ன இருக்கும்? வெறு கமர்ஷியலான இடம் அதைத்தவிர ஒண்ணும் இல்லை. அவனை கோவிலை விட அந்தக்குளம்தான் ஈர்த்த்து.
”சுவாமிகளே கோவில் இருக்கட்டும் குளத்தைப்பத்தி சொல்லுங்க”
”பேஷா! குளம்னு சொல்றதைவிட இது ஒரு தெய்வீக தீர்த்தம்! காசித்தண்ணி பாவத்தப்போக்கறது. இது வேண்டிக்கறத கொடுக்கும்! அண்ணா! நீங்க வேண்டுதலுக்காக வந்திருக்கீங்கன்னா சுவாமிய வேண்டிண்டு இந்தக்குளத்துல காசைப்பொடுங்கோ,. காசு தரையைத் தொடறதுக்குள்ள நடந்துடும், பாத்துக்குங்கோ!”
குளத்தை எட்டிப்பார்த்தான். அழுக்கும் பாசியுமாக ஒரு கிணறு போலத்தான் இருந்தது.சுற்றி கட்டப்பட்ட முள் வேலி. பாசி விலகியிருந்த இடத்தில் எல்லாம் பள பள வென காசுகள் தெரிந்தன. கண்களை இடுக்கிக்கொண்டு பார்த்தான். ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய்.. சிதறிக்கிடந்தன.
”சுவாமிகளே ரொம்ப கொஞ்சமாத்தானே தண்ணி இருக்கு! இவ்வளவு கூட்டத்துக்கு இன்னேரம் காசு ரொம்பி வழிஞ்சிருக்கணுமே?”
”அண்ணா! இது கடவுள் சொத்து! அதை அவன் எடுப்பனா இல்ல தண்ணீரில கரைய வெப்பானா யாமறியொம்!!”
சம்பத் கோவில் எதிரிலேயே இருந்த ஒரு வீட்டின் அறையை வாடகைக்கு எடுத்தான்.
”சுவாமி நான் நாளைக்காலையில வரேன்.கோவில் புராணத்தைச் சொல்லுங்க…..”
தூக்கம் வரவில்லை. ஒரு வேளை காசு போட்டால் நெனச்சது நடக்குமோ? போய்ப்போட்டுப்பார்த்தால் என்ன? சே! ராத்திரி பேய் நடமாடும் ராப்பொழுது! இதுவா கடவுளை வேண்டும் நேரம்! ஆனா நல்லதுக்கு ஏது நேரமும் காலமும்! போட்டுத்தான் பார்க்கலாமே!
கைகளில் கொத்தாக சில்லரை எடுத்துக்கொண்டு குளத்தடிக்கு சென்றான்.
கடவுளே எனக்கு ஒரு மகனோ மகளோ நீதான் அருள வேண்டும் ”அம்மா!” குளத்துக்குள் இருந்து அலறல் சத்தம்!
மேலே ஏறி வேலியைத்தாண்டி குதித்தவனுக்கு வயது பத்து இருக்கும், மெலிந்த தேகம். கையில் சில்லரை மூட்டையின் கலகலப்பு. கண்ணில் பயம். மூட்டையை முதுகுக்குப்பின்னால் வைத்திருந்தான்.
”யாருடா நீ? என்ன வேலை இது? ”
சம்பத் அதட்டலாகக் கேட்டான்
”ஐயா சாமி! கோவில் சாமி சொன்னாரு, நா எடுத்தாந்து கொடுப்பேன். வாரம் ஒரு தடவை இப்படி! ராத்திரில யாரும் வர மாட்டாங்க. நீங்கதான் கல்லு மாதிரி அத்தனை காசுங்கள என் தலையில் போட்டுடீங்க!”
பண்ணினது தப்பு என்று கூடப்புரியாமல் தன் வலி பற்றி புலம்பினான்.
”சரி சரி போ!.”
“வாங்கோண்ணா கும்பல் குறையட்டும் நாம நிதானமா பேசலாம்!”
“சுவாமி நேத்து பையன் சொன்னானா?”
”நீங்கதானா அது? வரேன் பேசலாம்”
எதுவுமே நடக்காதது போல தட்டுடன் சென்றார். தட்டில் ஐநூறுக்கு மேல் விழுந்திருந்தது.
வைரக் கடுக்கனுக்காக இந்த திருட்டு போல இருக்கு! எப்படி தடுப்பது? கவர் ஸ்டோரி போடலாம்,ஆனா எடிட்டர் ஒத்துக்கணுமே! பையனைப்பிடிச்சப்ப ஒரு ஃபோட்டோவாவது எடுத்திருக்கணும். இப்ப ப்ரூஃபே இல்லியே!
”அண்ணா! நாந்தான் காச எடுக்கச்சொன்னேன். எனக்காக இல்ல, கோவிலுக்காக! அப்புறம் பிள்ளைகளுக்காக!”
”பிள்ளையே கடவுள் கொடுத்த வரம். அதுங்கள வளர்க்கரதுக்கு கடவுள் அக்கவுண்டிலேயேவா?”
”அண்ணா என் புள்ள இல்ல! வெட்டியான் எசக்கி புள்ள! அதான் குளத்துல காசு எடுத்தானே அவனுக்காக!”
”புரியலையே!”
”இந்தக்கோவில் போன வருஷம் வரை அனாதியாக மூளியா இருந்தது. எனக்கு கோவில்தான் கதி. சாப்பாட்டுகே வழியில்லாமத்தான் இருந்தேன். அப்போ அந்த ஆண்டவன் அருளா, இல்ல என்னோட ராசியானு தெரியல. நம்ப ஊர் எம் எல் ஏ ஒரு பெரிய சிக்கல்ல மாட்டிண்டார். இங்க நேர்ந்துண்டார். என்னமோ தப்பிச்சுட்டார்.
அவர் இங்க வந்தபோது கோவில் நெலமைய சொல்லிப்புரிய வெச்சேன். அவரும் தன்னோட டீவியில இந்த கோவில் ராசியானது அது இதுன்னும் குளம் கேட்டதெல்லாம் கொடுக்கும்னும் ப்ரொக்ராம் போட ஆரம்பிச்சார். இப்போ இந்தக்கோவில் குளம் பத்தி பேசாத ஆளே கிடையாது.!”
”சரி சுவாமி அது தப்பில்ல. ஆனா நீங்க பண்றது அயோக்கியத்தனம் இல்லியா? தட்சிணை நெறயக்கிடக்கறது. கோவில் சீர் திருத்தவும் பணம் கொட்டறது. அப்புறம் எதுக்கு இந்த திருட்டு?”
”அந்தக்காசு எனக்கில்லை. பாதிய உண்டில்ல போட்டுருவேன் மீதிய அவன் படிப்புக்கு கொடுத்துடுவேன்.”
”ஊரான் வீட்டு நெய்யெ என் பொண்டாட்டி கையே வா?”
”அண்ணா இந்த கிராமத்துல எரிக்கறதுக்கு மெஷீன் வந்துடுத்து. வெட்டியானுக்கு வேலயும் போச்சு. வேற வீட்டு வேலைக்கு போகலாம்னா இவனையும் இவன் குடும்பத்தையும் இந்த கிராமங்கள்ல யாரும் வீட்டுக்குள்ள சேக்கமாட்டெங்கறா. பொணத்துக்குப்போட்ட சந்தனக் கட்டையும் துணி மணியும் எவ்வளவு நாள்தான் தாங்கும், இந்தப்பையன் நன்னா படிப்பான். இவன மாதிரி இன்னும் நெறய விவசாயிக்குழந்தைகள் படிக்க முடியாம திண்டாடறாங்க.இந்தக்குளத்துக்காசு இதுக்கு உபயோகப்படும்னு யோசிச்சேன்.
ஊரான் வீட்டு நெய்தான். நாம வரி கட்டறோம். படிப்புக்கு அது செலவழிக்கப்படும்னு. அந்த ஊரான் வீட்டு நெய்ய யாரு எடுக்கறாங்க.. பாத்தேன், நல்லதுக்கு பாபம் இல்லேனு தோணித்து….தப்பா?”
இந்த வேதம் புதிது!
தட்டில் நூறு ரூபாய் போட்டான் சம்பத்.
– அக்டோபர் 28, 2015