வேடிக்கை மனிதர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 14, 2012
பார்வையிட்டோர்: 8,086 
 
 

வீட்டிலிருந்து அவசரமாய் வெளியேறி, வீதியில் வந்த முச்சக்கரவண்டியை நிறுத்தி, திருகோணமலை பஸ் நிலையத்திற்கு பதறியடித்து ஓடிவந்த இம்தியாஸ் இறங்கி நின்று பார்த்தபோது கண்டிக்குச் செல்லும் முதலாவது பஸ்வண்டி புறப்படுவதற்குரிய எந்தவொரு அறிகுறியுமின்றி அமைதியாக நின்றிருந்தது.

முச்சக்கரிக்கு காசைத்தந்துவிட்டு பஸ்ஸை நோக்கியபடி யோசனையுடன் நின்றிருந்தான். இறங்கிய இடத்திலிருந்து நின்று பார்க்கும்போதே பஸ்ஸினுள் அதிக ஆட்கள் இல்லாதிருப்பது தெளிவாகத் தெரிந்தது. தூங்கியெழுந்த தெருநாயொன்று தலையைச் சிலுப்பிச் சோம்பல் முறித்தபடி எழுந்துசெல்ல அருகிலிருந்த தேனீர்க்கடையின் வானொலி, ‘நீ போகும் வழி தேடி வருவேனே பின்னாலே’ என்று சத்தமாய்ப் பாடிக் கொண்டிருந்தது.

‘ஒருவேளை முதல் பஸ் போய் இப்போது நிற்பது கண்டிக்குப்போகும் அடுத்த பஸ்ஸோ? இல்லையே… முதல் பஸ் 6.30க்குத்தானே?’ கைத்தொலைபேசியில் நேரத்தைப் பார்த்துக் கொண்டான். இன்னும் 10 நிமிடங்கள் இருந்தன. அப்படியும் சந்தேகம் தீராமல் பொதுச்சந்தைக்கு எதிரேயிருந்த மணிக்கூட்டுக்கோபுரத்தின் உச்சியைப் பார்த்தான். அது வழக்கம்போல வேறொரு நாட்டின் நேரமொன்றைச் சரியாகக் காட்டிக் கொண்டிருந்தது.

பஸ்ஸினுள்ளே அவன் ஏறிப்பார்த்தபோது அங்கொன்றும் இங்கொன்றுமாக இரண்டொருவர் மட்டும் அமர்ந்திருக்க ஏனைய இருக்கைகள் எல்லாம் ஆட்களின்றி வெறுமையாகக் கிடப்பது தெரிந்தது. யன்னலோரமாக ஓர் வசதியான இருக்கையைத் தேர்ந்தெடுத்து அவன் அமர்ந்து கொள்ள சற்றுமுன்தான் உதித்திருந்த செம்மஞ்சள் நிறச் சூரியன் பஸ் கண்ணாடிகளில் துண்டுதுண்டாய் உடைந்து தெரிந்தான்.

ஆட்கள் போதாது என்பதால் எப்படியும் இப்போதைக்கு பஸ்ஸை எடுக்கப்போவதில்லை என்பதைப் புரிந்ததும், ‘சே! இப்படித் தெரிந்திருந்தால் அழகாய்ச் சாப்பிட்டு விட்டே வந்திருக்கலாம். பாவம் மதிவதனி’ என்று கவலை வந்தது. அதிகாலையில் எழுந்து அழுகின்ற மூன்றுமாதக் கைக்குழந்தையுடன் போராடிக் கொண்டே பரபரக்கச் சமைத்துத் தந்திருந்தாள். அந்தச் சாப்பாட்டைக் கூட நேரமாகிவிட்டது என்று சாப்பிடாமல் வைத்துவிட்டு வந்ததை நொந்து கொண்டான்.

செல்போன் சிணுங்கியது. அவள்தான் எடுத்தாள்.

‘ஹலோ! மதி! ஆங்.. கேட்குது சொல்லு! ஓகே 6.30 பஸ் கிடைச்சுட்டுது! ஆனா எப்ப போகுமோ தெரியல்ல. ஸ்டாண்டுலதான் நிக்கிறேன். ஓமோம். சாப்பிட்டுட்டே வந்திருக்கலாம். அதைத்தான் இப்ப நினைச்சிட்டு… யாரு வந்தது? பள்ளித் தலைவரா? ம்ம்! இப்ப அங்க நிக்கிறாரா? இல்லையா? என் நம்பரைக் குடுத்திருக்கலாமே நீ… சரி, அவரே எடுக்கிறாராமா? ஓகே..ஓகே! இப்ப வெளிக்கிட்டா நான்
12மணிக்கெல்லாம் கண்டிக்குப் போயிடுவேன் ஆ? சரிசரி, போனதும் எடுக்கிறேன்.. யசோ எப்பிடியிருக்கு? தூக்கமா ஓ! சரிசரி பை!’ என்று போனை அணைத்துவிட்டு நிமிர்ந்தான்.

பஸ்ஸின் வெளியே சில இளைஞர்கள் நின்றிருந்தனர்.

‘பஸ் எத்தனைக்குப் போகும், தம்பி?’
பஸ்ஸின் முன்புற நுழைவாயில் வழியாக இறங்கிச் சென்று கண்டக்டர் போலிருந்த ஒரு இளைஞனிடம் சென்று கேட்டான், இம்தியாஸ்.

‘கொஹாட்டத ஐயே? நீங்க நுவரதானே போறது? அதிங்… எந்த நாளும்..ஆறு அரைக்குப் போறதுதானே ஐயா! …இன்டைக்கு ஆக்கள் கொஞ்சங் வர இருக்குது! ஏறி ஸீட்ல ஒக்காந்து இருங்க! இன்னம் ரெண்டு மூணு சீட் மட்டுந்தான் இருக்கிறதி… ஆ! நுவர..!நுவர..! மாத்தளே..மாத்தளே..!’

‘ரெண்டு மூணு சீட் மட்டுமா? பஸ்ஸே போறதுக்கு ஆக்களில்லாமப் பேயடிச்சுக் கிடக்கு.. கதையப்பாரு…இவனுகளுக்கு ஆக்கள் இல்லையென்றாலும் இந்தப் பந்தா மட்டும் போகாது’ என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டான். பஸ்ஸின் பின்னிருக்கையிலிருந்த யாரோ ஒருவர் யன்னல் வழியாக வெற்றிலைச் சாறைப் புளிச்சென்று துப்பினார்.

‘ஆ! கடலை! கடலை!! தண்ணிப் போத்தல்…பெப்பர்மின்ட்!’
பஸ்நிலையத்தின் முன்புறமிருக்கும் முஸ்லீம் ஹோட்டலில் இருந்து கடகடவென்ற காதைப்பிளக்கும் ஒலியுடன் கொத்து ரொட்டி வாசனை வந்தது.

‘தம்பி, நான் போய் டீ ஒன்டு குடிச்சிட்டு வாரேன்..இப்ப போக மாட்டீங்கதானே?’ என்று முன்கடையை நோக்கி நடந்தவனை, ‘ஐயா..போக வேணாம்! இந்தா இப்ப பஸ் போறது ஒங்களுக்கு சாப்புட …ஹபரணைக்கு பஸ் நிப்பாட்டுறான்.. இப்ப வாங்க ஐயா!’ என்று கூப்பிட்ட கண்டக்டர் பையனை அவன் பொருட்படுத்தவில்லை.

‘இவன்கள் இப்படித்தான் சொல்லுவான்கள். பஸ் எடுக்க எப்படியும் ஏழு மணியாகிடும்!’

தேனீர்க்கடையை நோக்கி ஒரு பத்து மீற்றர் கூட நடந்திருக்கமாட்டான். திடீரென்று ஓர் இயந்திர உறுமல் கேட்டது. ஆச்சரியமாய் திரும்பிப் பார்த்தபோது கண்டி பஸ்ஸின் சாரதி இருக்கையிலே ஒருவன் அமர்ந்திருந்து ஸ்டியரிங் சில்லை வட்டமாய்த் தொட்டுத் தொட்டு கும்பிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டான்.

‘ ஆ! நுவர.. நுவர..மாத்தளே..’
இரண்டொரு தடவை சத்தமாய் ஹோன் அடித்துக் குலுங்கிவிட்டு நகரத் தொடங்கியது பஸ்வண்டி. முதலில் நம்பவே முடியாமல் திகைத்து பின் சுதாரித்து ஓடிச்சென்று பஸ்ஸின் முன்புற நுழைவாயிலில் தொங்கிக் கொண்டிருந்த அந்த கண்டக்டர் பையனுடன் ஒட்டிக் கொண்டான். பஸ்நிலையப் பிரதான வாயிலைக் கடந்து மெல்லத் திரும்பி அது நின்றபோது இன்னும் சில பயணிகள் ஓடிவந்து பின்புறக் கதவு வழியாக ஏறிக் கொண்டார்கள். பஸ்ஸைத் தொடர்ந்து, ‘ஆ!

கடலை..கடலை..கச்சான்.. தண்ணிப்போத்தல்!’ களும் சிறு ஓட்டத்தில் கூடவே வந்தன.

‘தண்ணிப்போத்தல்! தண்ணீ! ஒண்ணு?’
‘ ச்சே! சில்லறை தாங்க நானா! விடிய வெள்ளனையோட ஆயிரத்தை நீட்டினா..? கடலைப் பக்கட் கொஞ்சம் தரவா?’

‘ கந்தளே போற ஆக்கள்..முன்னுக்கு
வாங்க! நுவர மாத்தளே மட்டும் அந்த
ரெண்டு ஸீட்ல இருங்க..அம்மா எங்க போர? ஆ? சரி, இருங்க..முன்னுக்கு வாங்க… சந்திக்கா.. ஏறவாணாம்.. வாணாம்! சந்தில நிக்காது..! ரைட்! ரைட்!’

பஸ் புறப்பட்டு வேகம் பிடித்தது.

‘என்ன புதினமிது? அரைவாசி இருக்கைகள் கூட நிறைந்திராத வெறும்
பஸ்ஸை எப்படி இன்றைக்கு மட்டும் நேரத்துக்கே எடுத்தான்கள்?’ ஆச்சரியம் நீங்காமலே ஓடிக்கொண்டிருந்த பஸ்ஸின் பின்புறமிருக்கும் தனது இருக்கையை நோக்கி நகர்ந்தான், இம்தியாஸ்.
பசி வயிற்றை கிள்ளியது.

மக்கெய்ஸர் மைதானத்தைத்தாண்டிய பஸ் நகரசபைச் சுற்றுவட்டத்தில் திரும்பிக்கொண்டிருந்தபோது, ‘ஆ! எப்படி இப்ப? நான் சொன்னதிங்தானே? டீ குடிக்கப் போக வேணாம் என்டு…’ நடுவழியில் நின்று கலாய்த்தான் கண்டக்டர் பையன்.

‘ அட! இல்லடாப்பா….! உன்ட பஸ்..ஆக்களேயில்லாம வெறும் சீட்டாக் கிடக்குது..இப்ப போக மாட்டீங்களென்டு நினைச்சன்’ என்றான் இம்தியாஸ் அசடு வழிய.

‘இல்லே ஐயா! அதிக்கு எல்லாம் ஆக்கள் இருக்கு! அந்தா தாடி வச்சிட்டு இருக்கிறதுதானே மூணுபேர் பின்னால! அவங்கட ஆக்கள் எல்லாம் ஒரு இருவது பேர் நுவரக்கு வாறது. பாருங்க..போஸ்ட் ஒபிஸ் சந்தியில கொஞ்சம் தாடி ஆக்கள் இப்ப ஏறுது. மத்த அவங்கட ஆக்கள் எல்லாம் கந்தளே வரைக்கும் ஒவ்வொரு இடத்திலே நிக்குற நேரத்துக்கு வந்து ஏறுறது.’

அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வேகம் குறைந்து தபால்நிலைய பஸ்தரிப்பிலே நின்றது பஸ். அங்கு வெண்ணிறத் தொப்பி மற்றும் முழங்கால்வரை நீண்டிருக்கும் வெண்ணிற அங்கிகள் அணிந்த நீண்ட தாடி ஆண்கள் பலர் தோளிலே பெரிய பயணப்பொதிகளைச் சுமந்தவாறு சிறுகூட்டமாக நின்று
கொண்டிருந்தார்கள்.
பஸ் நின்று கண்டக்டர் பையன் வெளியில்

இறங்கியதும் அந்தத் தாடி மனிதர்கள் அனைவரும் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். ஓரிரு நிமிடங்கள் நீடித்த சிங்களமொழி உரையாடலின் பின்பு பஸ்ஸினுள்ளே எல்லோரும் ஏறிவந்தார்கள். ஆட்களில்லாத வெற்று இருக்கைகள் அனைத்திலும் தோளிலே சுமந்துவந்த பயணப்பைகளைப் போட்டு இடம்பிடித்தார்கள். பின்பு இம்தியாசுக்கு முன்னாலும் பின்னாலுமிருந்த மீதி இருக்கைகளில் அமர்ந்து கொண்டார்கள்.

‘அஸ்ஸலாமு அலைக்கும் ஹாஜி’

‘அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி….’

‘அப்படி உக்காருங்க ஹாஜி!’ ‘பரவாயில்ல சீதேவி நான் இங்கினக்கயே இருக்கிறேன்..அல்ஹம்துலில்லாஹ்’ ‘ சுபஹானல்லாஹ்’ ‘மாஷா அல்லாஹ்’ என்பது போன்ற உரையாடலும் அத்தர் நறுமண வாசனையும் பரவிச்செல்ல மீண்டும் கிளம்பி வேகம் பிடித்தது பஸ்.

ஜெற்றிப் பொலீஸ் சுற்றுவட்டத்தில் திரும்பி உள்துறைமுக வீதிக்கு வந்ததும் மீண்டும் சிணுங்கியது இம்தியாசின் செல்போன். அதிலே புதிய இலக்கம் ஒளிர்ந்திட இயர்போனை பொருத்திக் கொண்டு,

‘ஹலோ! யாரு’ என்றான்.

‘ ஆ! தம்பி நாந்தான் பள்ளித்தலைவர் பேசுறேன். அஸ்ஸலாமு அலைக்கும்…!’

‘ஆங்..அலைக்கும் ஸலாம்! சொல்லுங்க தலைவர்!’

‘தம்பீ, உங்களுக்கிட்டக் கொஞ்சம் பேசலாம் என்டுதான் வீட்டுக்கு வந்தேன். அந்தப் புள்ள மதிவதனி நீங்க இப்பதான் கண்டிக்குப் பயணம் போறதாச் சொல்லிச்சு. அந்தப் புள்ளயிட விசயமாத்தான் கண்டிக்குப் போறீங்கபோல..’

‘ஓமோம்.. இப்ப பஸ்லதான் இருக்கிறேன். ஏதும் அவசரமா கதைக்கணுமா..அப்படியென்டா இறங்கி ஆட்டோ பிடிச்சி வாறேன். இப்பதான் பஸ் இன்னர் ஹாபர் ரோட்டுக்கு வந்திருக்கு..? இறங்கவா?’

‘ இல்ல.. இல்ல! அல்லாட காவல், நீங்க போற பயணத்தை நல்லபடியா செய்து முடிங்க தம்பீ.! நா இஞ்ச உங்கட விசயமா பள்ளி மற்ற ஆக்களோட கதைச்சுப் பார்த்தேன். அவங்கட கதையப் பாத்தா…?’

‘பார்த்தா? என்ன சொல்லுங்க நானா?’

‘இல்ல.. போன்ல எல்லாம் கதைக்க
ஏலுமோ தெரியல்ல..இப்ப நீங்களும்
நம்மட மார்க்கத்துக்கு வந்து ரெண்டு மூணு வருசமாகிட்டுது. அதுவுமில்லாம நீங்க இந்த ஊர்லயே நம்மட புள்ளைகளோடேயே ஒரே ஸ்கூல்ல படிச்சு ஒண்ணா விளையாடி ஒண்ணுக்குள்ள ஒண்ணாக் கிடந்த ஆள் தம்பி, அதால எங்களுக்கு உங்கள்ல சந்தேகம் எதுவுமில்ல. ஆனா அந்தப் புள்ள மதிவதனிட விசயமும் அந்த புள்ளய நீங்க வீட்ல வச்சிருக்கிறதும்தான் கொஞ்சம் பிரச்சினையாயிருக்கு…’

பஸ் மட்கோ சந்திப் புகையிரதக் கடவையில் நின்றிருக்க ரயிலின் இரைச்சலில் அவரது
பேச்சு தெளிவின்றி இடறியது.

‘ ஹலோ! அதுதான் அந்தப்பிள்ளையும் நம்ம மார்க்கத்துக்கே மாறி வர்றதுக்குச் சம்மதிச்சுட்டுதானே தலைவர்? நான் முந்தா நாளிரவு அந்தப்பிள்ளை மதியையும் முன்னுக்கு வச்சுத்தானே உங்களிட்ட..ஹலோ..! ஹலோ!’

‘தம்பி, சிக்னல் கிளியரில்லாம இருக்கு. நீங்க கட் பண்ணுங்க.. நான் பிறகு எடுக்கிறேன் என்று சட்டென போனை வைத்து விட்டார்.

மதிவதனி, சரவணபவனின் கடைசித் தங்கை சஹானாவுடன் ஒன்றாகப் படித்தவள். அவனது பயோலொஜி டியூட்டரி இருந்த அதே மரியாள் வீதியில்தான் மதிவதனியின் அண்ணன் பாலா மாஸ்டரின் கணிதபாட டியூட்டரியும் இருந்தது. ஏஎல் படித்து விட்டு ரிசல்ட்ஸ் வரும்வரை காத்திருந்த காலத்தில் பின்னேரங்களில் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீதியுலா வருவது பையன்களின் வாடிக்கை. அந்தக் காலங்களில் மதிவதனி தனது அழகினால் இளைஞர்கள் பலருக்கும் கனவு மங்கையாக இருந்தவள்.

அவளது பகட்டில்லாத அழகு மட்டுமல்ல அமைதியான சுபாவமும் எல்லாவற்றுக்கும் மேலாக அவளது இனிமையான குரலும்தான் அதற்குக் காரணம். அப்போதெல்லாம் பாடசாலை விழாக்கள், ஊர்க் கொண்டாட்டங்கள், கோயில் திருவிழாக்கள், இசை நிகழ்ச்சிகளிலெல்லாம் மதிவதனியின் இனிய பாடல்கள் ஒலிக்காதிருந்தது கிடையாது. ‘மாணிக்க வீணையேந்தும் மாதே நீ கலைவாணி’ என்று அவள் பாடுவது இன்று நினைத்தாலும் காதுகளில் தேன் பாய்ச்சுமே…

பஸ் கண்ணாடி யன்னலினூடாக வீசிய காற்று முகத்தில் கவிதைபாட பழைய நினைவுகளில் மூழ்கி அப்படியே தூங்கிப்போனான், இம்தியாஸ்.

மீண்டும் அவன் கண்விழித்தபோது பஸ் ஏதோ ஒரு தரிப்பில் நின்று புறப்பட்டது.
புறப்படும்போது இருந்ததைப் போலன்றி ஆசனங்கள் ஏறக்குறைய நிரம்பியிருந்தன. இரண்டொரு இருக்கைகள் மட்டும் எங்கோ வழியில் நின்று இனிமேல் ஏறப்போகும் தாடிமனிதர்களின் சகபாடிகளுக்காகக் காத்திருந்தன.

‘அஸ்ஸலாமு அலைக்கும் அமீர் சாப்!’

கோரஸாக எழுந்த குரலால் சற்றுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். ஒரு 70 வயது மதிக்கத்தக்க வயோதிபரும் அவரைப் போலவே தோளிலே பயணப்பையுடன் இன்னும் சிலரும் பின்கதவு வழியாக ஏறிவந்து கொண்டிருந்தார். ஆசுவாசப் பெருமூச்சுடன் அந்த மனிதர் அமர்ந்த பின்பே மற்றவர்களும் மரியாதையுடன் உட்கார்ந்தார்கள்.

‘ஹாஷிம் ஹாஜி சாப், எல்லாரும் ஏறிட்டாங்களா?’

‘ஓ! கந்தளாய் பேராத்துப் பள்ளியில மட்டும் ஒரு நாலு பேர் நிக்கிறாங்க சாப்! அவங்களும் ஏறிட்டா சரியாயிரும்…
இன்ஷால்லாஹ்!’

‘அல்ஹம்துலில்லாஹ்!

அல்ஹம்துலில்லாஹ்!’ என்றார் திருப்தியுடன்.

அந்த மனிதரை இதற்கு முன்பு இம்தியாசுக்கு எங்கோ சந்தித்ததைப் போலவும் அவரது முகம் நன்கு பரிச்சயமான முகம்போலவும் தோன்றியது. அவரது பயணப்பையை பவ்யமாக வாங்கி அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து யன்னலோரமாக இருந்த வேறு இருக்கையொன்றிலே மெதுவாக அமர்த்தினார்கள்.

அவர்களில் பலர் இளைஞர்களாகவும் சிலர் நடுத்தர வயதினராகவும் இருக்க மீதிப்பேர் வயோதிபர்களாக இருந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் அருகருகேயுள்ள இருக்கைகளிலே ஒன்றாக அமர்ந்திருந்து தங்களுக்கிடையே பல பாஷைகளிலும் பேசிக் கொள்ளலானார்கள். சிலர் ஏனைய பயணிகளுக்கு இடையிலே அமர்ந்து இருந்த போதிலும் மற்றவர்களைக் கண்டு கொள்ளாமல் பொதுவாகத் தங்களுக்கிடையிலே மட்டுமே பேசிக் கொண்டிருந்தார்கள்.

இப்போது அந்த பஸ் ஏறத்தாழ அவர்களின் பிரத்தியேக வண்டி போலவே தோற்றமளித்தது. ‘அவர்களின் தயவில்தான் நாங்கள் சிலர் அதிலே ஏறிக்கொண்டு பயணிக்கிறோம்’ என்று கூறினால் யாரும் கேள்வி கேட்காமல் நம்பிவிடுவார்கள் போலிருந்தது பஸ்ஸின் நிலைமை.

இம்தியாசின் அருகாமையிலும்
அவர்களில் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் புதிதாய் ஏறிய ஒருவர். அவரது கையிலே பிளாஸ்டிக் மணிகளாலான ஓர் சிறிய மாலை ஒன்று இருந்தது. அதைக் கையில் வைத்து வாய்க்குள் எதையோ முணுமுணுத்தவாறு உருட்டிக்கொண்டேயிருந்தார். அவரது விழிகள் இரண்டும் அரைத்தூக்கத்தில் மூடியிருந்தது. அவரது மேலங்கியிலிருந்து வந்து கொண்டிருந்த கடுமையான அத்தர் வாசனை முதலில் சுகந்தமாக இருந்த போதிலும் போகப்போக அவனுக்குத் தலையை வலிப்பது போலிருந்தது.

பஸ் இடையிடையே நின்று ஹபரணைச் சந்தி, தம்புள்ள சந்தை போன்ற இடங்களுக்குச் செல்லும் பயணிகளை ஏற்றிக் கொண்டது. அப்படி ஏறிக் கொண்டவர்கள் கம்பியைப் பிடித்தபடி நின்று கொண்டு பயணம் செய்தார்கள். இருக்கைகளில் அமர்ந்திருக்கும் பிரயாணிகளை ஒருவித ஏக்கத்துடன் பார்த்தவாறு நின்றிருந்த அவர்களின் உடல்கள் வெறிபிடித்து விரையும் பஸ்ஸின் வேகத்திற்கேற்ப முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருந்தன.

பஸ் கப்பல்துறையை ஆயுர்வேத ஆஸ்பத்திரியைத் தாண்டிக் கொண்டிருந்தது.

‘எக்ஸ்க்யூஸ்மீ தொர! கொஞ்சம் தள்ளி இருக்கிறீங்களா? நான் ஏன்ட பேக்கை ஓசக்க போடணும்’ என்றபடி எழுந்தார் பக்கத்திலிருந்தவர். அதற்கு அவருக்கு இடத்தைக் கொடுத்துவிட்டு மீண்டும் அமர்ந்தபோது. இம்தியாசைப் பார்த்து முதன் முதலாக சிநேகமாகப் புன்னகைத்து, ‘ஜஸாக்கல்லாஹு ஹைராஹ்’ என்றார் அவர்.

அவன் புரியாமல் விழித்தான்!

‘ இல்ல.. தேங்ஸ் சொன்னேன்’ என்றார் சிரித்தபடி. அவரது பற்கள் வெகுசுத்தமாக பளிச்சென்றிருந்தன. வெளித்தோற்றத்தை வைத்து அந்தத் தாடி மனிதரை ‘அவர்’ என்று கூறினாலும் அவரது அடர்த்தியான மார்புவரை நீண்டிருந்த தாடியை நீக்கிவிட்டுப் பார்த்தால் இம்தியாசை விட கூடிப்போனால் நான்கு அல்லது ஐந்து வயதுமட்டுமே அதிகமான ஓர் இளைஞன்தான் தெரிவான்.

‘ஏன் நானா, ‘நன்றி’ என்று தமிழிலேயெல்லாம் சொல்ல மாட்டீங்களா?’

‘அப்படியில்ல தொர, உங்களப் பாத்திட்டு முஸ்லீம் என்று நெனைச்சுட்டேன்!’

‘ அட! நான் முஸ்லீம் இல்லையென்று இப்ப யார் சொன்னது?’

அவர் என்னை ஒருமுறை மேலிருந்து கீழ்வரை உற்றுப் பார்த்துவிட்டு அமைதியாகி யோசனையிலாழ்ந்து விட்டார்.

‘ என்ன நானா, ஏதும் பிழையாச் சொல்லிட்டனா?’

‘ இல்லல்ல….உங்கட கதையைப் பார்த்திட்டு…?’ என்று இழுத்தார் அவர். வேறு எதையோ சொல்ல வந்துவிட்டுச் சமாளிப்பது போலிருந்தது அவரது பார்வை.

‘என்ன யோசிக்கிறீங்க… சொல்ல வந்ததைச் சொல்லிடுங்க!’ நான் விடவில்லை.

‘இல்ல தொர, ஏன்ட பேர் பாசில். நான்
ப்ரைவெட் பேங்க் ஒண்டில மனேஜரா இருக்கிறேன். நாங்க எல்லாரும் கம்பளைக்கு மஹல்லா வேலையாப் போயிட்டிருக்கிறோம். தம்பீ உங்கட பேரென்ன.. என்ன செய்யிறீங்க?’

இம்தியாஸ் சொல்லி முடித்தான்.

‘ அல்ஹம்துலில்லாஹ்! தம்பீ, நான் சொல்றனென்டு பிழையா நீங்க நினைக்கப்படாது. நம்ம முஸ்லீமென்டு மத்தவங்களுக்குத் தெரியிறதுக்கு தனியா அடையாளம் வேணும். உங்களைப் பார்த்த சீருக்கு நான் குறிப்பில்லாமத்தான் இருந்தேன். முகத்தை வச்சுத்தான் முஸ்லீமென்டு..ஓரளவு வெளங்கிச்சு..ஆனா கதையைப் பார்த்துத்தான் பொறகு கொஞ்சம் சக்காயிருச்சு… ‘

‘சரி, முஸ்லீமென்டு தெரியிறதுக்கு நான் எப்படியிருக்கணும் பாசில் நானா? இப்படி டெனிம் ஜீன்ஸ் டீ சேர்ட்லாம் போடக்கூடாதா…இல்ல தமிழ்லதான் ஒழுங்கா பேசக்கூடாதா… ஹாஹா!?’

அவரும் லேசாய் சிரித்துக் கொண்டார்.

‘சேச்சே! அப்பிடிச் சொல்ல வரல்ல தொர, ஒரு ஆம்புளைய பாத்தாக்கா தோற்றத்துலயே இவரு இஸ்லாத்தை நம்புறவரு…பின்பற்றுவரு அப்பிடியெண்டு தெரியிற மாதிரி இருக்கணுமென்றுதான் நம்ம ரஸுருல்லாஹ்…’

‘அப்படியென்டால் நீங்க போட்டிருக்கிற இந்த நீளமான உடுப்புத்தான் முஸ்லீம்களுக்குரிய அடையாளமா என்ன?’

அந்தக் கேள்வி அவருக்கு ரசிக்கவில்லை. வாய்க்குள் எதையோ முணுமுணுத்தவாறு வெளியே பார்த்து யோசித்துக் கொண்டிருந்தார். பஸ்ஸின் யன்னலை ஊடறுத்து வீசிய தம்பலகாமத்தின் வயல்வெளிக் காற்று தலைமுடியை அலைக்கழித்துக் கொண்டிருக்க அவர் திரும்பும் வரை காத்திருந்தான், இம்தியாஸ்.

‘தம்பி, ஒங்களுக்குச் சொல்லத் தேவையில்லை.. நம்ம மார்க்கத்துல ஆம்பளைகளுக்கு வேறயா பொம்பளைகளுக்கு வேறயா இன்னன்ன மாதிரின்னு உடுத்திக்கொள்ளணும் என்று தெளிவாச் சொல்லியிருக்குத்தானே? அதைச் செய்தா சரிதான்.’

‘ஓம் நானா, அதன்படிதான் நானும் உடுத்திருக்கிறேன் என்றுதான் நெனைக்கிறேன். ஆனா நான் போட்டிருக்கிறது நீங்களெல்லாம் போட்டிருக்கிற மாதிரி பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மக்கள் போடுகின்ற ஜுப்பா கிடையாது. பாருங்க, நம்மட ஆக்கள்ல சிலபேர் சாரம் சேட் போடுறாங்க, டீ சேட் ஜீன்ஸ் போடுறாங்க, சிலபேர் உங்கள மாதிரியும் போடுறாங்க.. அரபு நாடுகளில வேறொருவிதமா… இதில இதுதான் முஸ்லீம்களுக்குரிய ஆடை என்று எதை எடுத்துக் கொள்றது…?’

பாசில் நானாவால் பதில் சொல்ல முடியவில்லை.

‘இங்க பாருங்க நானா, பேசுகிற மொழியும் உடுத்துகின்ற ஆடைகளும் மனிதர்கள் நமது வசதிக்குத் தக்கபடிதான். நான் தமிழன் அதனால் தமிழை மட்டுந்தான் பேசுவேன் என்றோ நான் சிங்களவன் சிங்களத்தை மட்டுந்தான் பயன்படுத்துவேன் என்றெல்லாம் சொல்லிட்டு இந்தக்காலத்தில வாழமுடியுமா?’

‘ பேசிக்கிற பாஷைக்கு வேணுமென்டா நீங்க சொல்றது சரி தம்பி, ஆனா இது உடுப்புக்குச் சரிவருமா? நமக்கென்று ஒரு கலாச்சாரம் பாரம்பரியம் இல்லியா என்ன?’

‘ சரி, ஒரு பேச்சுக்கு நீங்க காலைல வோக்கிங் போக வேண்டியிருக்கு என்று வைச்சுக் கொள்வோமா… இப்ப நீங்க போட்டிருக்கிற இந்த உடுப்பு அதுக்குச் சரிவருமா? டீ-சேட் பொட்டம் போட்டுத்தானே ஆகணும்? நம்ம பிள்ளைகள் ஸ்கூல்ல புட்போல், கிரிக்கட், நீச்சல் பயிற்சிக்கு போனா அந்தந்த விளையாட்டுக்கு அவசியமான உடுப்புகளை அணியத்தானே வேணும்?’

‘இப்ப நீங்க சொல்றதப் பார்த்தாக்கா…. டீவில காட்டுறாங்களே… நீச்சல் போட்டி, பீச்-வொலிபோல்! அப்ப அதுக்கெல்லாம் போறதென்டா பிகினி உடுப்புலதான் போகணுமா?’ என்று கேட்டார் பாசில், அதிரடியாக.

‘ஆ! நல்லாக் கேட்டீங்க நானா?’ என்று அவரையே சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் இம்தியாஸ்.

அவனுடைய யோசனையைப் பார்த்து மடக்கிவிட்ட திருப்தியில் அவர் உள்ளுக்குள் சிரிப்பது நன்றாகப் புரிந்தது.
அதற்குள் பஸ் ஓரிடத்தில் நின்றது.

‘அனுஹய பகின்ட முள்ளிப் பொத்தானை இறங்குங்க! ஆ.. நுவர.. மாத்தளே நுவர மாத்தளே!’ சிலர் ஏறி இறங்கிக்கொள்ள மீண்டும் இரைச்சலுடன் புறப்பட்டது.

‘என்ன தம்பி, பதிலையே காணல்ல…?’

‘ம்ம்! அதுமாதிரி விளையாட்டுக்கெல்லாம் நாம போகணுமா இல்லையான்னு தீர்மானிக்கிற விஷயம் இன்னும் நம்ம கையிலதானே இருக்கு? ஆனா, நீச்சல் மாதிரிப் போட்டியில கலந்து கொள்றது என்று முடிவெடுத்திட்டோமென்றால் சேட், சாரம், ஜுப்பாவெல்லாம் உடுத்திக்கொண்டு நிச்சயமா நீந்த முடியாது!’

‘சரி தம்பி, உடுத்துறத வுடுங்க! இன்னும் எத்தனையோ விசயம் இருக்கே! ரஸுலுல்லாஹ் சொன்ன சுன்னத்தான விசயங்கள்… ஆண்கள் தாடி வச்சுக் கொள்வது, தொப்பிகள் அணிந்து கொள்வது..இதெல்லாம் செய்யக்கூடியதுதானே?’

‘ஓம். அதெல்லாம் செய்யக் கூடியதுதான். ஆனால் அதை மட்டுமே செய்து கொண்டிருந்தால் போதுமா நானா? ஒரு முஸ்லீம் முதலில் தனது நற்செயல்களால் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதிலே அக்கறை செலுத்தக் கூடாதா? உதாரணமா பாருங்க, நம்ம மார்க்கத்திலதான் சுத்தம் பற்றி அதிகமாகச் வலியுறுத்திச் சொல்லியிருக்கு இல்லையா?

‘நெசம்தான்.. ‘சுத்தம் ஈமானின் (இறை நம்பிக்கையின்) பாதி’ என்று சொல்லியிருக்கிறாங்க நம்ம ரஸுலுல்லாஹ்..’

‘ம்ம்! ஆனால் சுத்தம் என்றால் தங்களோட உடம்பை மட்டும் கழுவிக்கழுவி வைச்சுக்கொள்றாங்களே தவிர, நம்மில் எத்தனை பேர் தெருவில் காறி எச்சில் துப்புகின்றோம் …வீட்டுக்குப்பையை வீதியில் கொட்டுகின்றோம் தெரியுமா? பொலித்தீன்களை ஷொப்பிங் பேக்குகளை பிளாஸ்டிக் போத்தல்களையெல்லாம் ஓடைக்குள்ளேயும் கழிவுநீர்க் கான்களுக்குள்ளேயும் கொஞ்சமும் யோசிக்காமல் போடுகின்றோம்..பார்த்தீங்களா?

அவர் அவன் சொல்வதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

‘நம்ம மட்டுமா அப்படிப் போடுறம்? எல்லா ஜாதிச் சனங்களும்தானே போடுதுங்க.. சுத்தமில்லாம பொறுப்பில்லாம நடந்துக்குதுங்க… நீங்க ஏதோ நம்ம சனங்கள் மட்டும்தான் என்ட மாதிரிச் சொல்றீங்களே?’

‘உண்மைதான்! நம்மட நாட்டுல எல்லாரும் செய்றதைத்தான் நாங்களும் செய்யுறோம். அதுலயும் நாம ஒருபடி மேலதான்! எல்லா இனமக்களும் குடியிருக்கிற ஒரு டவுனை எடுத்துப் பாருங்க.. மற்ற வீதிகளை விட நம்மட சனங்கள் குடியிருக்கிற வீதிகளும் சந்துகளும்தான் அதிகமான கழிவுக்குப்பைகளால நிரம்பியிருக்கும். இந்தக் கசப்பான உண்மையை ஒத்துக்கொள்ளத்தான் வேணும்’

அவர் அதை ஏற்றுக்கொள்வதைப்போல தலையாட்டினார்.

‘ஆனா, மத்தவங்ளோட மார்க்கங்களில சுத்தம் இறைநம்பிக்கையின் பாதி என்றளவுக்கெல்லாம் சொல்லல்லையே நானா? நம்மட மார்க்கத்துலதானே சுத்தத்தை ஆதாரமான நம்பிக்கையின் அரைவாசியோட சம்பந்தப்படுத்தியிருக்காங்க. அப்படியென்றால் நாமதானே மத்தவங்களை விட முன்மாதிரியாக சுத்தம் பேணணும்?’

‘நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான் தம்பி. இருந்தாலும் இந்த அற்ப துனியாவோட விசயங்கள திருத்திறதுக்கு அதிகமா ஈடுபடப்போனா நாளைக்கு மறுமை நாள்ல நாம நஷ்டவாளி ஆகிவிடுவோம். அதால..’

‘என்ன..? எனக்கு விளங்கயில்ல?’

‘இல்ல பாருங்க, இந்த உலகம் வந்து
மறுமைக்கான விளைநிலமென்டு கண்மணி ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சொல்லியிருக்கிறாங்க. நாம தனித்தனியா ஒவ்வொருவரும் நம்மளை மறுமையில கிடைக்கப்போற ஜன்னத்துல் பிர்தவ்சுக்காக தயார் செய்துக்கிட்டு வந்தாலே எல்லாம் சரியாகிடும்…இதைத்தான் அல்லா.. ஜெல்ல..சுபஹானல்… தம்பீ! என்ன தம்பி, திரும்பிட்டீங்க..இதென்ன காதில இயர்போனைப் போடுறீங்க..?
அவருக்கு பதில் சொல்ல

அவகாசமில்லாமல் மீண்டும் பள்ளித் தலைவர் போனில் வந்திருந்தார்.

‘ ஆ! சொல்லுங்க தலைவர் ! இப்ப
தெளிவா கேக்குது! எக்ஸ்க்யூஸ்மீ..! ஒண்ணுமில்ல அது இங்க பஸ்ல பக்கத்துல ஒருவர்.. சரி, நீங்க சொல்லுங்க!

‘……………..’

‘மதிவதனியும் நம்ம மார்க்கத்துக்கு வாறதில நம்ம பள்ளி ஆக்களுக்கு என்ன பிரச்சினை? ‘

‘…………….’

‘ சரி, பிழையா நினைக்கல்ல.. பரவாயில்ல சொல்லுங்க!’

‘…………………?’

நான் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. அருகிலிருந்த தாடிக்காரர், போனில் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் என்னையே இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

‘சரி தலைவர், நீங்க எல்லாரும் இப்ப எதைச் சந்தேகப்படுறீங்க? மதியும் அந்தப் பிஞ்சுப் புள்ளையும் என்னைத் திருப்பியும் பழையபடி ஆக்கிடுவாங்க என்றுதானே? ஓகே, நீங்க சொல்ற மாதிரி அயலுக்குள்ளேயே நம்மட ஒரு பிள்ளையை நான் கட்டியிருக்கலாம்தான்.. ஏன் இப்ப கூட நீங்க காட்டுற பிள்ளைய நான் கட்டுறேன்.

ஆனா..’

‘………’

‘ப்ளீஸ்.. நான் சொல்றதையும் கொஞ்சம் கேளுங்க! நான் நிச்சயமாகக் கட்டுறேன். ஆனா.. வன்னி அடிபாட்டுல சிக்கி புருசனையும் அவன்ட தாய் தகப்பனையும் குடும்பத்தையும் பறி கொடுத்திட்டு கைப்பிள்ளையோட யாருமே இல்லாம வந்து நிக்கிறவ மதிவதனி. அவளை உங்கட அயலுக்குள்ள யாராவது ஒரு நல்ல தொழிலோடு இருக்கிற பொடியன்கள்ல ஒருத்தனைக் கட்டச் சொல்லுங்களேன் பார்ப்போம்..!’

‘………..’

‘ என்ன தலைவர் சத்தமேயில்ல? பார்த்தீங்களா? மாட்டாங்கதானே? இப்படி இளம் வயதில வாழக்கையை பறிகொடுத்திட்டு பிள்ளையோட நிக்கிறவளை நாமே கைவிட்டா அவள் எங்கதான் போவாள் சொல்லுங்க? நீங்க கேட்டபடி மதி இருந்த கட்டுகஸ்தோட்டை பள்ளிவாசல்ல இருந்து கடிதம் எடுத்திட்டு வாறேன். அதுக்குத்தானே நானா, இப்ப நான் அங்கே போயிட்டிருக்கிறேன். அதன் பிறகு நாங்க சேர்ந்து இருக்கிறதில பிரச்சினை இல்லதானே?’

‘……………………….’

‘ஆங்! அதுவா? அது… ஒரு பெரிய கதை! கடைசிச் சண்டை நடந்ததுதானே…அதுல உயிர்தப்பி
பிள்ளையோட ஓடி வவுனியாவுக்கு வந்து சேர்ந்திருக்கிறா. அங்க மதியிட அப்பாவோட முதல் சேர்வையரா வேலை செய்த முஸ்லீம் பெரியவர் கண்டு கண்டிக்கு கூட்டி வந்திருக்கார். அங்க அவர்ர குடும்பத்தோட வீட்டுல தங்க வச்சி உதவியெல்லாம் செஞ்சிருக்காரு. அந்த மனிசன்ட குடும்பத்தாக்கள்ட உதவியையும் நல்ல குணத்தையும் பார்த்திட்டு அங்க இருக்கும் போதே நம்ம மார்க்கத்துக்கு வாற ஐடியாவுலதான் இருந்திருக்கா மதி.’

‘……………….’

‘ஓமோம் நானா! அங்க உள்ள பள்ளிவாசல்ல அதுக்குரிய எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தபோதுதான் பொலீஸ் பிரச்சினையாகி இங்க டரிங்கோவுக்கு வர வேண்டியதாகிட்டுது அவளுக்கு! இங்க அதுகள்ற குடும்பமே அவளைச் சேர்க்காம துரத்தி விட்டதெல்லாம் உங்களுக்கும் தெரியும்தானே? அப்படிப் பரிதவிச்சு நின்று கொண்டிருந்தவளைத்தான் நான் கட்டிக் கொள்றதுக்கு இப்ப உங்களுக்கிட்ட கேக்கிறேன்…’

‘……………………’

‘ ஓகே..அதுக்கு என்ன செய்யுறது நானா? ஏதோ படிக்கிற காலத்துல வயசக்கோளாறுல படிப்பிச்ச ஸ்கூல் மாஸ்டரை விரும்பி வன்னிக்குப் போயிட்டாள். இப்ப அவள்ற புருசனும் இல்ல.. கடைசிச் சண்டையில மாட்டி எல்லாத்தையும் பறிகொடுத்திட்டு வந்திருக்கிறாள். இங்க, நாங்களும் சந்தேகப்பட்டுச் சேர்க்காம இருந்தா பாவம் அவள் என்னதான் செய்வாள் சொல்லுங்க, தலைவர்?’

‘……………………….’

‘ சரி சரி, நான் விசயத்தை முடிச்சிட்டு இன்றைக்கு நைட் பஸ்ல திரும்புறன். நீங்கதான் யோசிச்சு ஒரு நல்ல முடிவெடுக்கணும். ஆ…! சரிசரி வைங்க’ என்று செல்போனை அணைத்தபோது அவனையே திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தார் பாசில்.

‘யாரு..அது? ஏதும் ஊர்ப் பிரச்சினையா?

‘சேச்சே! இது வேற பிரச்சினை!’

‘ தமிழ் புள்ளயக் கலியாணஞ் செய்யப் போறீங்களா? நான், நீங்க பேசுனதைக் கேட்டுட்டுத்தான் இருந்தன் தம்பீ.. யாரு அது தெரிஞ்ச ஆக்களா?’

‘ம்ம்! அந்தப்புள்ள என்ட தங்கச்சிட க்ளாஸ்மேட்!’

‘உங்கட வீட்டுல சம்மதமா அதுக்கு?
அந்தக் குட்டியை உங்க வீட்ல சேர்ப்பாங்களா? ‘

‘சே! இதென்னது நானா, பொம்பிளைப் பிள்ளையப்போய் குட்டி அது இதுன்று சொல்றீங்க…? சரி…முதல்ல என்னையே சேர்ப்பாங்களோ தெரியாது!’

அதன் பிறகு சிறிதுநேரம் அவர்கள்
இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இம்தியாஸ் வெகுநேரமாய் யோசனையிலாழ்ந்திருந்தான்.

‘ தம்பீ இம்தியாஸ், கவலைப்படாதீங்க!
எல்லாம் அல்லாஹ்ட ஒதவியால சரியா வரும். ரஸுலுல்லாஹ் கூட யுத்தத்துல ஸகீதான தோழர்களோட விதைவைகளைத் திருமணஞ் செய்திருக்கிறாங்க..’

‘ அதெல்லாஞ் சரிதான், ஆனா இதே போல ஒரு பொம்புளையச் செய்ய விடுவீங்களா நானா?’

‘ ஆ! என்ன தம்பீ சொன்னீங்க?’ என்றார்
பதறியடித்து.

‘இல்ல ஒண்ணுமில்ல, எனக்கு போன் கோல் வர முந்தி நீங்க என்னமோ சொல்லிட்டிருந்தீங்களே? அதைப்பத்திப் பேசுவோமே, பாசில் நானா’ என்று பேச்சை மாற்றினான், இம்தியாஸ்.

‘ ஓ அதுவா? அதான் தம்பி, இந்த அற்ப உலகத்தினுடைய சீரழிவுகள்ல சிக்கிடாம நாம நிறைய அமல்களை செய்து நம்மட கப்றுக்குத் தேவையானதை சம்பாதிச்சுக்கணும்’

‘நீங்க சொல்றது சரிதான் நானா. ஆனா நீங்க அமல்கள் என்று சொல்றது எதை?’

‘ என்ன தம்பி, புரியாத
ஆளாயிருக்கிறீங்க? இரவிலும் பகலிலும் பர்ளான சுன்னத்தான தொழுகைகள்ல அதிகமாக ஈடுபடுறது, நோன்புகள் நோற்கிறது, ஏழைகளுக்கு ஸகாத் கொடுக்கிறது, தீன் மார்க்கத்தை அடுத்தவருக்கும் எத்திவைக்கிறது…’

‘ஓகே..ஓகே! அப்படியென்டா இந்த உலகம் எப்படியாவது போகட்டும். நம்ம மட்டும் தனித்தனியா சொர்க்கத்துக்குப் போக வழி தேடுனாப் போதும் அதுதானே நீங்க சொல்ல வாறது?’

‘ இல்ல அப்பிடியில்ல!’

‘வேற எப்பிடி? இங்க பாருங்க நானா,
இந்த உலகத்துல மனுசனாய்ப் பிறந்த ஒவ்வொருத்தனுக்கும் சில கடமைகள் இருக்கு! முதல்ல சமூகத்தில உள்ள சீர்கேடுகளைப்பற்றி அறிஞ்சு கொள்ள வேணும் பிறகு அதில இருந்து தன்னையும் மற்றவர்களையும் எப்படி மீட்கலாம் என்று யோசிக்கணும். அதுக்குத்தான் நமக்கெல்லாம் இறைவன் அறிவை தந்திருக்கின்றானே தவிர சீர்கேடுகளையெல்லாம் கண்டும் காணாம ஓதுங்கிப்போய் தப்பிக்கிறதுக்கில்ல?’

‘அதைத்தானே தம்பீ நாங்களும் சொல்றோம். எல்லாரும் இறைவன்ட வழியில வந்து அமல்கள்ல ஈடுபட ஆரம்பிச்சா இந்த ஒலகத்தில பூரா பிரச்சினைகளும் மெல்ல மெல்லக் காணாமப் போயிடுமே. துனியா வாழ்க்கையில யாருக்குத்தான் பிரச்சினைகள் இல்ல. ஆனா அல்லாஹ்ட பாதையில ஒருவன் கொஞ்சநாள் சரி இறங்கிட்டானென்டா மனசுக்கு ஒரு நிம்மதி உண்டாகும். அவர்ட பிரச்சினைகளெல்லாம் அவனோட கிருபையால ஸோல்வ் ஆகும் தெரியுமா? ‘

‘அடடே அப்படியா? அப்ப இங்க பஸ் முழுக்க உங்களோட வந்திருக்கிறவங்க எல்லாருமே அதுக்குத்தான் வந்திருக்கிறாங்களா?’

‘ ஆங் ! இல்ல ..அதுவந்து..’ விழித்தார் பாசில் நானா.

‘ சரி, நம்ம நாட்டில இப்ப திடீரென்று பெற்றோல் டீசல் விலையெல்லாம் கூடிப்போய் இருக்கு! பஸ்கட்டணம், லைட்பில், பாண், மரக்கறி, மற்ற சாமான்கள்ற விலையும் கூடி வாழ்க்கைச் செலவு சமாளிக்கவே முடியாதளவுக்கு ஆகிட்டுது..இந்தப் பிரச்சினையால பாதிக்கப்படுகின்ற கூலிவேலை செய்து பிழைக்கிற ஒருவன் அல்லது மீன்பிடிக்கிற ஒருவன் சிறு அரசாங்க உத்தியோகத்தன் தன்ட பிள்ளை குட்டிகள்ற சாப்பாட்டு நெருக்கடியில இருந்து எப்படித் தப்புறது சொல்லுங்க நானா? அவன் தன்னைப்போல பாதிக்கப்பட்ட மற்றவங்களோட ஒண்ணு சேர்ந்து போராடுறதா அல்லது உங்களோட வந்து பஸ் ஏறுறதா?’

‘ சேச்சே! அதுகளுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? அரசியல் பிரச்சினைகளை நம்மட மார்க்கத்தோட கொண்டு சேர்க்கப்படாது, தெரியுமா?’

‘ அரசியலும் பொருளாதாரமும்தானே நானா நம்மளோட வாழ்க்கையைத் தீர்மானிக்குது. அப்படியிருக்க எப்படி..? சரி, நீங்க மூச்சுக்கு மூச்சு சொல்லிட்டிருக்கீங்களே நம்ம ரஸுலுல்லாஹ் ரஸுலுல்லாஹ் என்று அவங்க எப்படியானவங்க தெரியுமா உங்களுக்கு?’

‘சொல்லுங்களேன் தம்பி, கேப்பம்’
‘ரஸுலுல்லாஹ் தனியே
பள்ளிவாசலுக்குள்ளே அமர்ந்து இறைவணக்கத்தில் மட்டும் ஈடுபட்டுக் கொண்டு இருக்கவில்லையே.. அவர்கள் தாங்கள் வாழ்ந்த சமூக அவலங்களைச் சென்று பார்த்தார்கள்… தோழர்களோடு சேர்ந்து எதிரிகள்மீது யுத்தங்கள் செய்தார்கள்… பகைவர்களோடு பேச்சுவார்த்தை நடாத்தினார்கள், ஒப்பந்தங்கள் புரிந்தார்கள். இதெல்லாம் அரசியல் இல்லையா?’

திடீரென ஒரு பெரிய குலுக்கலுடன் நின்றது பஸ்.

பஸ் ஒரு புறமாய்ச் சரிந்து நின்றிருக்க, நடந்தது என்னவென்று பார்க்க பஸ்ஸின் அத்தனை யன்னல்களிலும் தலைகள் முளைத்தன.

‘ஐயோ! டயரெக்க கியா மல்லி!’ என்றபடி சாரதி இறங்கிப் பின்னே செல்ல, ‘கட்டிய ஒக்கோம கருணாகரலா பகிண்டகோ! ஆக்கள்..எல்லாரும் எறங்குங்க…டயர் மாத்திறது’ என்ற கண்டக்டரின் குரல் கேட்டது.

அது ஒரு குடியிருப்புகளில்லாத சனநடமாட்டம் குறைவான வயல் பிரதேசம். நெடுஞ்சாலை வெய்யிலில் கொதித்துக் கொண்டிருந்தது. வேறுவழியின்றி எல்லோரும் இறங்கி வீதியோரத்தில் பச்சைக் குடை ஒன்றை விரித்து வைத்தது போல் நின்றிருந்த நிழல்வாகை மரத்தினடியில் செல்ல சிலர் சற்றுத் தள்ளியிருந்த ஒரேயொரு சிறு தேனீர்க்கடையை நாடினார்கள்.

அதுவரை இம்தியாஸோடு பேசிக்கொண்டு வந்தவரான பக்கத்து சீட் பாசில் நானா அவனைத் தனது சகாக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்களில் பலர் நன்கு படித்தவர்களாகவும் உயர் பதவியில் இருப்போராகவும் காணப்பட்டார்கள். ஒருவரையொருவர் விசாரித்தறிந்து அளாவளாவிக் கொண்டிருந்தார்கள்.
பஸ்ஸின் பின்புறமிருந்து உலோகச் சாவிகளின் உராய்தல் ஒலிகள் கேட்க ஆரம்பித்தன.

அப்போது தாடிமனிதர்களின் தலைவர் போன்றிருந்தவர் திடீரென எழுந்து நின்று, ‘இறுக்கமான ஆன்மீகப் பின்பற்றுதலின் அவசியம்’ பற்றிய போதனையொன்றைச் செய்ய ஆரம்பித்தார்.

மரத்தினடியில் அது நிகழ்ந்து கொண்டிருக்கும் போது பஸ்ஸின் சாரதியும் கண்டக்டரும் மிகவும் சிரமத்துடன் பஸ்ஸின் உதிரிச் சக்கரத்தை தனியாக மாற்றிக் கொண்டிருந்தார்கள்.

அது ஒரு சனநடமாட்டம் குறைவான இடமென்பதாலும் பஸ்ஸில் சாதாரண பயணிகள் குறைவு என்பதாலும் போதிய
உதவியின்றி அவர்கள் இருவரும் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது.

‘எக்ஸ்க்யூஸ்மீ, பாசில் நானா!’

‘ ஷ்ஷ்! எங்க தம்பீ! போறீங்க? இருங்க,
இது முடிய ஒரு கூட்டுத் துஆ ஒன்று இருக்கு.. கலந்துக்குவோம்’ என்றார் அவனது பக்கத்துசீட்!

‘என்ன? ஏன் திடீரென்று துஆ?’

‘அது வந்து…இதே போல இனி வழியில எந்தக் கரைச்சலும் வராம இருக்கிறதுக்கு அல்லாஹ்வுக்கிட்ட..’

‘ஓ! அப்படியா? இருங்க நானா, அந்தா அவங்க ரெண்டு பேரும் பாவம் டயரை மாத்திறதுக்கு தனியாக் கஷ்டப்படுறாங்க. வேற ஆக்களும் இல்லப் போலிருக்கு..கொஞ்சம் ஹெல்ப் ஒன்று கொடுப்போம்!’ என்றபடி அவர்களிடமிருந்து விலகி வீதியில் நின்ற பஸ்ஸை நோக்கி நடந்தான் இம்தியாஸ்.

அருகிலிருந்த சிறுமரக்கிளையில் டீ சேர்ட்டைக் கழற்றிக் கொழுவி ஜீன்ஸை மடித்துக் கொண்டு சாரதியுடன் நின்று டயரை மாற்றுவதற்கு உதவ ஆரம்பித்தான். அவனைப் பார்த்துவிட்டு வேறு சிலரும் உதவிக்கு வந்தனர்.
அவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து வெய்யிலில் நின்று வியர்வை வழிய டயரை மாற்றிக் கொண்டிருக்கும் போது நிழல்வாகையின் கீழ் நின்று இனி வரப்போகும் இடையூறுகளுக்காக துஆச் செய்து கொண்டிருந்தார்கள், அந்தத் தாடி மனிதர்கள்.

ஒருவழியாக முக்கால் மணிநேரத்தில் பஸ் பயணத்திற்குத் தயாராகி விட்டது.
வேலைமுடிந்த களைப்பிலே சாரதி கண்டக்டர் உட்பட அனைவரும் சாலையோரமிருந்த ஓர் இளநீர் கடையை நோக்கிச் சென்றனர். இளநீரைக்குடித்துக் கொண்டிருக்கும்போது பஸ்ஸின் சாரதியும் கண்டக்டரும் இம்தியாசின் மீது மிகவும் மதிப்புடன் நடந்து கொண்டார்கள். அவனது கண்டிக்குச் செல்லும் பயணத்தின் அவசரத்தை விசாரித்து வீணாகிய நேரத்தை எப்படியும் இனிவரும் ஓட்டத்தில் பிடித்துவிடலாம் என்று உறுதியளித்தார்கள்.

பஸ் மீண்டும் புறப்பட்டது.

‘என்ன தம்பி, கையெல்லாம் க்ரீஸ் போல? நல்லாக் கழுவியிருக்கலாமே’ என்றார் பாசில்.

‘ஓமோம்! சோப் எதுவுமில்ல!

பரவாயில்ல உங்கட கையெல்லாம் நல்ல சுத்தமா இருக்குத்தானே?’

அப்போது வயதான மனிதர்கள் இரண்டுபேர் முதுமையால் தள்ளாடி நின்றபடி பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் சுகவீனமுற்றிருந்தவர் போலத் தோன்றியது இம்தியாசுக்கு. அவர் நிற்கவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் தடுமாறுவதை பஸ்ஸில் இருந்த தாடி மனிதர்கள் உட்பட அத்தனை பேரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

யன்னலோரமாக இருந்ததால் இம்தியாசினால் சட்டென எழுந்திருக்க முடியவில்லை. அப்படியும் அருகிலிருந்தவரிடம் கூறிவிட்டு அவன் இடம்தர முனைந்த போது பின்புறமிருந்த ஒரு வயதான பெண்மணி சட்டென எழுந்து அந்த வயோதிபரின் கையைப் பிடித்து தனது இடத்தில் அமரச் செய்து விட்டு எழுந்து நின்று கொண்டார். அந்தப் பெண்மணியும் வயதான ஒருத்தி என்பதால் பஸ்ஸின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாது தள்ளாடினார்.

அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.

அந்தப் பெண்மணியிடம் தாடிமனிதர்கள் தமது சகாக்களுக்காக பிரயாணப்பைகளை வைத்து இடம் போட்டு வைத்திருந்த இருந்த இரண்டு சீட்களைக்காட்டி அதிலே தற்காலிகமாக அமர்ந்து கொள்ளுமாறு சைகை காட்டினான் இம்தியாஸ்.

‘அணே எப்பா மகத்தயோ! மங் அலுத்ஓய லங்க பகிணவா நே! ஓண நெஹ மகத்தயா!’ மறுத்தாள் அந்தப் பெண், அந்தத்தாடி மனிதர்களைப் பார்த்தபடி. ஆனால் அவர்களோ ஒன்றுமே அறியாதவர்களாய் யன்னலுக்கு வெளியே பார்த்தபடி இருந்தார்கள்.

‘பரவாயில்ல! நீங்க உட்காருங்க. அவங்கட ஆக்கள்ற இடம் வாறதுக்கு இன்னும் நிறையத் தூரமிருக்குக்கு! வாடிவென்ன அம்மே!’ என்று இம்தியாஸ் எவ்வளவோ வற்புறுத்தியும் கூட அந்தப் பெண்மணி ஏனோ அவற்றில் இருக்கத் தயங்கினாள். பின்பு அவன் தனது இருக்கையைக் கொடுத்து அதில் வயதான அந்தப் பெண்ணை அமரவைத்து விட்டு நின்று கொண்டே வந்தான்.

வயல்வெளிகளினூடாக வீசிய காற்று பஸ்ஸினுள்ளிருந்த அனைவரையும் கிறங்கடித்துக் கொண்டிருக்க சரியாக இருபது நிமிடங்களில் பஸ் கந்தளாய் மணிக்கூட்டுக்கோபுரச் சந்திக்கு வந்து சேர்ந்தது. இம்தியாசின் கால்கள் லேசாக வலி கண்டன.

‘இறுங்கு! உண உண இறுங்கு!’

‘கந்தளே ஹந்திய ஒக்கோம பகிண்ட!’ என்ற கண்டக்டரின் அதட்டலின் பின்பு பஸ் மீண்டும் விரைந்தது. கந்தளாய் ரயில் நிலையத்தைக் கடந்து போட்டங்காட்டுச் சந்தியில் திரும்பி பேராற்றுப் பள்ளிவாசலின் முன் நின்றது.

அதிலே ஒரே ஒரு தாடிக்காரர் மட்டும் ஏறி உள்ளே வந்தார்.

‘ என்ன இது? நீங்க மட்டும் ஏறியிருக்கீங்க? மத்தவர் ரகீம் சாப் எங்க?’ என்று வந்தவரிடம் கேட்டார் அவர்களின் அமீர் சாப்.

‘அதுவா? அவருக்குக் விடிய சுபஹோட கடுமையான வீசிங் மாதிரி வந்திட்டுது. நிலைமை கொஞ்சம் மோசமா இருந்திச்சு.
ஒடனே பள்ளியில நைட்அவுட் நிண்டிருந்த குருநாகல் வேன் ஒண்டுல ஆள ஊருக்கு அனுப்பியாச்சு அமீர் சாப்! ஆள ஹொஸ்பிட்டல்ல சேர்த்திருக்காம். இப்ப கொஞ்சம் நல்லமாம் அவர்ர மகன் கோல் எடுத்தாரு இப்ப கொஞ்ச முந்தி!’

‘ அப்படியா? யால்லாஹ்!…

அல்ஹம்துலில்லாஹ்!’ என்றார் தலையை ஆட்டிக்கொண்டு அமீர் சாப்.

மீண்டும் பஸ் கிளம்பிய போது இருவருக்காக இடம் போடப்பட்டு வைத்திருந்த இருக்கைகளில் கடைசியாக ஏறிய தாடிக்காரர் மட்டுமே அமர்ந்ததனால் மற்றைய இருக்கை வெறுமையாக இருந்தது.

இப்போது இம்தியாசுடன் அருகேயிருந்து பேசிக்கொண்டு வந்த மனிதரான பாசில் நானா பஸ்ஸில் நின்று கொண்டு பயணிக்கும் இம்தியாசையும் அந்த வெறும் இருக்கையையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டேயிருந்தார். அவனோ அவரைக் கவனிக்காமல் பஸ்ஸுக்கு வெளியே எதிர்த்திசையில் வேகமாய் ஊர்வலம்போகும் மரங்களையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனாலும் அவனது கவனத்தைத் தன்பக்கம் திருப்புவதற்காக அவர் கையை அசைத்து சைகை செய்து கொண்டிருப்பது இம்தியாசின்
ஓரக்கண்ணில் லேசாகத் தெரிந்தது. ஆனாலும் அந்தப்பக்கம் திரும்பாமலே நின்று கொண்டிருந்தான். நீண்ட நேரம் நின்று வந்ததால் கால்வலி உயிரை எடுத்தது.

சிறிது நேரத்தில் தனது முதுகில் வேறு யாரோ தொடுவதை உணர்ந்து அவன் திரும்பியபோது வயதான தாடிக்காரர் அமீர் சாப் நின்றிருந்தார்.

‘ பரவாயில்ல, அந்த சீட்டில இருங்க தம்பீ..! எங்கட ஆள் ஒருவர் வரயில்ல.. சுகமில்லாம வீட்டுக்குப் போயிட்டாரு’ என்று உற்சாகமாகக் கேட்டுக் கொண்டார்.

‘ அடடா! எனக்காக எழும்பி வந்திருக்கீங்க போல இருக்கே..அமீர் சாப்? மிச்சம் நன்றி! ஆனால் ஒண்ணு. நான் நின்றுட்டு வரத்தான் விரும்புறேன்! தேங்ஸ்’ என்று சற்று முன்னே தள்ளிப்போய் சாரதிக்குப் பக்கத்திலே நின்று கொண்டான், இம்தியாஸ் எனப்படும் முன்னாள் சரவணபவன்.

பஸ் புதிய பாதையில் விரைந்து கொண்டிருந்தது.

– Published in Mallikai Magazine on March 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *