சென்னை ராஜதானி என்ற பெயருடன் இந்த இடம் இயங்கிக் கொண்டிருந்த நாளில், அந்த அரசில் குமாஸ்தா உத்தியோகம் பார்த்து ஓய்வுபெற்றவரும், பூதப்பாண்டி மாசிலாமணியின் புதல்வனுமான, முத்துக்கருப்பன். வாக்குச் சாவடி ஒன்றின் வரிசையில் நின்றுகொண்டிருந்தார். ஆனால், வாக்களிக்க முடியவில்லை.
நாட்டில் நடந்த முதல் வாக்கெடுப்பு அது. அதன்பிறகு, எப்போதுமே அவர் வாக்களிக்க முடியாது போய் விட்டது.
முத்துக்கருப்பனால் ஏன் வாக்க ளிக்க முடியாமல் போய்விட்டது என்பதைச் சொல்லும் முன், இன்னும் சிலரை உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.
ராட்டு என்கிற ராதாகிருஷ்ணன். இவன் வாக்குச் சாவடியில் வாக்களித்துவிட்டு வரும்போது, காலில் அடிபட்டு, வீடு வந்து சேர்வதற்குள் ரத்தம் அதிகமாகக் கசிந்து, மயக்க நிலைக்கு உள்ளானான். வழக்கமாக தேர்தல் சமயத்தில் குடும்பத்தைத் தனது சொந்த ஊருக்கு அனுப்பி விடுவது வழக்கம். எனவே, வீட்டில் யாரும் கிடையாது. வாக்கெடுப்பு நாள் காரணமாக தினமும் அவனை வந்து பார்க்கும் நபர்களும் யாரும் வரவில்லை. எனவே, அடுத்த நாள் தான் மருத்துவமனையில் சேர முடிந்தது.
மருத்துவமனையில் அந்த வீங்கின காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று சொல்லி, அது முடிந்து, வீடு திரும்ப பத்து நாளாகி விட்டது. அதற்குள் தேர்தல் முடிவு கள் வெளியாகி, ராதாகிருஷ்ணன் வாக்களித்து மகிழ்ந்த நபர் வெற்றி பெற்றுவிட்டார். மருத்துவமனையில் அவர் வந்து பார்த்து ஆறுதல் கூறினார். வைத்தியச் செலவையும் ஏற்றுக்கொண்டார். இதற்கிடையே இந்தப் பத்து நாளில் ஊர் சென்ற அவனது மனைவி, அங்கே ஒரு லாட்டரிச் சீட்டு வாங்கியதில் அதற்கு ஒரு பெரிய தொகை பரிசாக விழுந்தது. ராட்டு என்கிற ராதா கிருஷ்ணன் பின்னாளில் பெரும் அரசியல் கட்சிப் பிரமுகராக ஆனான்(ர்).
சலீம் என்கிற சதுரூதீன். தமிழில் சிறுகதைகள் எழுதி வருபவர். தேர்தலில் வாக்களித்துவிட்டு வீடு திரும்பும் வழியிலேயே மயக்கம் ஏற்பட்டு உண்டு, இல்லை என்று ஆகிவிட்டது. நாகூர்மீரான் என்ற நண்பர் உதவியுடன் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தாலும், அடுத்த நாளே பேட்டையில் ஏற்பட்ட ஒரு பெரும் கலவரத்தில் சிக்கி, மீண்டும் மயக்கமுற்றார். என்ன இப்படி அடிக்கடி மயக்கம் வருகிறதே என்று டாக்டரைக் கலந்து ஆலோசித்தால், அவர் ஈ.சி.ஜி. எடுக்கச் சொன்னார். எடுத்துப் பார்க்க, அது இதய நோயைக் காட்டிற்று. சிகிச்சைக் கான செலவு மிக அதிகமாகத் தெரிந்தது.
நல்லவேளையாக சலீம் வாக்களித்து ஜெயித்த எம்.எல்.ஏ. எல்லாச் செலவையும் ஏற்றுக்கொண்டார்.
ஆதியப்ப நாயக்கன் தெருவில் தினக்கூலியாக வேலை பார்த்து வந்த நாகபூஷணம் என்னும் தொழிலாளி, தேர்தல் நாளன்று வேலைக்கு வரவில்லை. ‘‘ஏன் வரலே? இது உன் அப்பன் ஆபீஸாய்யா? என்ன நினைச்சுட்டி ருக்கே?’’ என்று கடை முதலாளி சத்தம் போட்டதற்கு, தன் சட்டைப் பையிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்துக் காட்டி, ‘‘யோவ்.. நீ தர இம்மாம் துட்டுக்கு அதிகம்யா! சூடு… நூறு ரூபா… நூ ஏமய்யா இஸ்தாவு?’’ என்று நாகபூஷணம் கத்த, கடை முதலாளி மௌனமானார்.
நாகபூஷணம், இப்போது நன்கு பரவி வருகிற ஓர் அரசியல் கட்சியின் தொழிலாளர் தரப்பு பிரமுகர்.
மணி ஐயர் அந்த வட்டத்தில் பிரபலமான தற்கு அவருடைய ஓட்டல் வேலையைத்தான் சொல்ல வேண்டும். அந்த வேலையின் அத்தனை நுணுக்கங்களையும் அறிந்தவர். பணியாளர், மேஸ்திரி எல்லாம் அவரே! வாடிக்கை யாளரிடம் பேசுவதற்கு அவரிடம் பாடம் கற்க வேண்டும். ஆனால், வேலை செய்யும் ஒன்றிரண்டு பணியாளர்களிடம் எவ்வித விட்டுக்கொடுத்தலும் இல்லாது நடப்பது அவரது முறை. ஓட்டல் தவிர, வேறு எதிலும் நாட்டம் இல்லாதிருந்த அவரை மனம் மாற்றியவன் கிஷோர் என்ற வட இந்திய இளைஞன்.
முனிசிபல் தேர்தலில் அந்த கிஷோர் நிற்க, அவ்வட்டாரத்தில் கணிசமான அளவு குடியேறி யிருந்த வட இந்தியர்கள் காரணம். மணி ஐயரை மிகவும் நாடினான் அவன். அப்படி நடந்த தேர்தலில் அவன் ஜெயித்தது ஒரு புறம் இருக்க, வட இந்தியாவில் ஒரு மாகாணத்தில் மட்டுமே தெரிந்த ஓர் அரசியல் கட்சியின் கிளை தெற்கே தோன்ற, அதன் முக்கிய அங்கத்தினராக மணி ஐயர் ஆனார். எல்லாரிடமும் மரியாதையுடன் பேசினார். மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்றவனையும் மரியாதையுடன் பேசலானார்.
வடசென்னையின் மையப் பகுதியில் வாக்காளர் மிகுதி. ஓட்டு வேட்டையில் ஈடுபட்டி ருந்த அந்த வேட்பாள ரின் பார்வையில் எதிராஜன் அகப்பட்டார். அவர் வேலையில் இருந்துகொண்டே நாடகத் திலும் நடித்துப் பணம் பண்ணும் விற்பன்னர். ஒரு நாடகத்துக்குத் தலைமை வகித்தவர் பொறுக்க முடியாமல் ஒரு சமயம், ‘‘யோவ்… வக்கீல் வேஷமாய்யா உனக்கு?’’ என்று மேடையி லேயே கேட்டு விட்டபடியால், நாடகத் துறையைக் கைவிட்டார். வெற்றி லைப் பாக்குக் கடை கள், வாடகைக்கு இடம் பிடித்துக் கொடுத்தல் போன்றவை அவருக்குக் கை வந்தன. இரண்டாவது சொன்ன வேலை இருக்கிறதே, அதற்காகத்தான் வேட்பாளர் தனக்கு வேண்டிய ஒருவரை எதிராஜிடம் அனுப்பி வரவழைத்தார்.
வந்ததும் மிகவும் தெளிவாகக் கூறினார்… ‘‘நான் சொல்றதை அப்படியே செய்து வரணும். உன்னைப் பத்தி நல்லாத் தெரியும். நீயும் உன் குடும்பமும் கவலை இல்லாம இருக்க நான் செய்யறேன். சம்மதம்னா சொல்லு… இல்லே போ! இடக்குமடக்கா யார்கிட்டேயாவது எதையாவது சொன்னே, வெட்டிப் புடுவானுக பாத்துக்க!’’
சொன்னது தெளிவாக இருந்த படியால், எதிராஜன் புரிந்து கொண்டு அவருக்காக உழைத்தார். இப்போது நல்ல பெயருடன் நாலு பேருக்கு வேலை வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு உயரிய பொறுப்பான இடத்தில் வேலை!
சிவம் என்னும் இளைஞன் பார்த்து வந்த வேலை சாதாரண மானதுதான். ஓவர்சியர், இன்ஸ் பெக்டர், சூப்பர்வைசர் என்பதான பதங்களைப் பிரயோகித்து அம் மாதிரிப் பதவியில் தான் இருப்ப தாக ஊரில் பறைசாற்றினாலும், பட்டணத்தில் அம்மாதிரி பம்மாத் துக் காட்டுவது கஷ்டம். துறைமுகப் பகுதியில் மேஸ்திரி வேலை என்று சொல்வது அவனைப் பொறுத்த வரை எண்ணிப் பார்க்க முடியாது. மேஸ்திரி வேலையானாலும், தொழிலாளருடன் பழகும் வேலை. அதுதான் வேலை செய்தது. ஆட்சியிலுள்ள அரசியல் கட்சித் தலைவர் அந்த வட்டத்துக்கு வர, தனது படைகளுடன் ராஜோப சாரம் செய்து, அவர் கருணையைப் பெற்றான். இன்னொரு சமயம் எதிர்க் கட்சித் தலைவர் வருகை தர, அதே வரவேற்பு பெற்றார். எப்படியோ… அந்தப் பகுதியில் தான் தவிர்க்கப்பட முடியாதவன் என்று நிரூபித்து, கடந்த தேர்தலில் அந்த வட்டத்தில் வாக்களித்தான்.
அந்த வட்டத்தின் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் கிடையாது. இப்போது அவர் ஒரு கௌரவ மாஜிஸ்டிரேட்!
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு கள்ளச் சாராய கேஸில் சம்பந்தப்பட்டுள்ளான் என்று குறிப்பிட்ட ஒருவனைப் பற்றி அவனது சொந்த ஊரில் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். கந்துவட்டிக் காந்தி என்றும், கள்ளக் கையெழுத்து மன்னன் என்றும் தெரியப்பட்ட அரசியல் வாதி. ஆரம்பத்தில் நடைபாதை வியாபாரி களிடையே பிரபலமானவர். காலையில் வந்து அவர்களுக்குத் தேவையான பணம் கொடுத்து உதவி, மாலையில் தகுந்த முறையில் அதைப் பெற குறைந்தபட்ச உதவியாளரையும், தேவைப்பட்ட அடியாட்களையும் அழைத்துச் சென்றவர். இன்று கிட்டத்தட்ட ஒரு எம்.எல்.ஏ. செல்வாக்கு. அடியாட்கள் எல்லாரும் உதவியாளர்களாக மாறிவிட்டனர்.
இன்று, நடைபாதைக் காய் கறிக் கடைக்காரர்கள் உள்பட அனைவரையும் கைகூப்பி வணங்குகிறார். இளைஞர்கள் அவரது சேவை, பணிவு, இவற்றைக் கண்டு வியக்கின்றனர். கடைக்காரர்களில் வயதானவர் களுக்கு மட்டுமே கந்துவட்டி காந்தி என்ற பெயர் தெரியும்.
சரி, முதலில் கூறிய முத்துக் கருப்பன் என்பவருக்கும், இவர்களுக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்கலாம்.
இவர்கள் எல்லாரும் தேர்தல்களில் முத்துக்கருப்பன் பெயரில் கள்ள ஓட்டுப் போட்டவர்கள். மற்றபடி, வேறு எந்தத் தொடர்பும் இல்லை!
– 18th ஏப்ரல் 2007