“நாங்க புறப்படறோம்…”
“அப்படியா, சரி…”
“நிச்சயமா நீங்க வரலியா?”
“நான்தான் எத்தனையோ தடவை சொல்லிட்டேனே இன்னொரு முறை காரணத்தை சொல்லட்டுமா?”
“வேணாமே…காரணத்தை கேக்க கேக்க எனக்கு உங்கமேல எரிச்சல்தான் அதிகம் ஆகும்…வர்றோம்…”

கனகம் தன் அக்காவுடன் நகரத்தில் அந்த பிரசித்திப் பெற்ற கோயிலுக்கு வாடகை காரில் புறப்பட்டாள். அவளுடைய கணவன் செந்திலுக்கும் அவளுக்கும் கோயிலுக்குப் போய்வருவதில் முற்றிலும் கருத்து முரண்பாடுஉண்டு என்பதை நீங்கள் ஏற்கெனவே ஊகித்து இருக்கலாம்.
சில வருஷங்களுக்பு முன்பு செந்தில் அவளுடன் நிறைய கோவில்களுக்கு போய் வந்ததுண்டு. இப்போது போக மறுப்பதோ, போவதற்கு வெகுவாக தயங்குவதோ திடீரென ஏற்பட்ட மாற்றமில்லை. அவனைப்பொறுத்தவரை காரணம் சரியானதே.
“உங்களுக்கு பக்தி ரொம்ப குறைஞ்சு போச்சு…” இப்படியும் கனகம் இடித்துக்காட்டி, உசுப்பிவிடுவதுண்டு. செந்தில் மௌனம் சாதித்திடுவான்.
பக்தி – ஒருவருடைய பக்தியை எப்படி எடை போடுவது? பாடும் பக்திப் பாடல்களாலா? சொல்லும்தோத்திரங்களாலா? செய்யும் சடங்குகளாலா? போய்வரும் கோயில்களின் எண்ணிக்கையிலா? கோயில்களில்சேரும் கூட்டம் பக்தியைப் பொறுத்ததா? இல்லை, மக்கள்தொகையைப் பொறுத்ததா? அல்லது இரண்டையுமேசார்ந்ததா? இது செந்திலுக்கு விளங்காத ஒன்று. பக்தி என்பது ஒருவரின் கடவுள் நம்பிக்கையையும், அவரவர் சொந்த எண்ணத்தையும் அனுபவத்தையும் பொறுத்ததல்லவா? இது ஒரு புது கருத்தில்லை. காலத்துக்கு ஏற்பமாறி வரும் கருத்தாயிற்றே. யாருமே பக்தியை இன்னொருவர்மீது திணிக்க முடியாது, எடை போடவும் முடியாதுஎன்பதுதான் செந்திலின் அசைக்க முடியாத எண்ணம்.
கோயில்கள் போய்வருவதில் செந்திலுக்கு நாட்டம் வெகுவாகக்குறைந்ததற்கு முக்கிய காரணம் பலகோயில்களில் பரவியுள்ள ஊழல் என்றால் பலர் அவன் சொல்வதைக்கேட்டு கோபப்படலாம், சிலர் சிரிக்கலாம், மற்றும் சிலர் ஏளனம்கூட செய்யலாம்.
ஒரு முறை கோயிலுக்கு போனபோது –
“சார், இன்னும் அரைமணியிலே அர்ச்சகர் வந்துடுவார். நீங்க எல்லாம் அவர்கூடவே போய் சுவாமிதரிசனம் ரொம்ப சுலபமா செஞ்சுட்டு வரலாம்…” என்று சொல்லி
உற்சாகப் படுத்தினார் அந்த மனிதர்.
முன்பின் தெரியாத அவர் அந்த கோயிலில் ‘பக்தர்களுக்கு உதவுவதற்காகவே’ இருப்பவராம்.
“ரொம்ப நல்லது…உங்க உபகாரத்துக்கு ரொம்ப நன்றி…”
“இதல்லாம் ஒண்ணும் பிரமாதமில்லை…சுவாமி தரிசனம் முடிச்சுண்டு வாங்கோ…”
அவர் வாக்கியத்தை முடித்ததாக படவில்லை. “முடிச்சுண்டு வாங்கோ…அப்பறமா நாம பேசிக்கலாம்…” என்று முடித்திருக்க வேண்டும் என்று செந்தில் நினைத்தான்.
அர்ச்சகருடன் போனாலும் ‘சிறப்பு கட்டணம்’ செலுத்திய பிறகுதான் தெய்வதரிசனத்துக்கு உள்வரிசையில் நகர முடிகிறது. இது நிர்வாகத்தின் கட்டளை.
கோயிலை நாடும் அனைவருக்கும் தெய்வம் பொதுவே என்ற எண்ணத்தை ஒருவழியாக மாற்றி, விதவிதமான சிறப்பு கட்டண ஏற்பாடுகளை அமைத்து, பக்தரிடையே ‘கட்டணம் கொடுக்க இயன்றவர், இயலாதவர்’ என்ற பாகுபாட்டைத் திணித்தபின், கோயில் போனால் பக்தி நிலை பண்படும் என்றும் செந்திலால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
தெய்வ தரிசனத்துக்குப் போனவர்கள் கோயில் பிராகாரத்தை வந்தடைந்தபோது, முன்னால் அவர்களைவழியனுப்பியவர் நின்றிருந்தார் – கையில் பிரசாத பைகளுடன். “சுவாமி பிரசாதம்…” பைகள் கை மாறின; பக்தர்களின் ரூபாய் நோட்டுகள் அவர் கைக்கு ஏறின.
“நீங்க கோயிலுக்கு வெளியே போகச்சே, ஸ்கூட்டர்ல அந்த அர்ச்சகர் வருவார். அவருடைய கோயில்காரியம் முடிஞ்சு, வீட்டுக்கு போற நாழி…” இந்த வாக்கியத்தையும் முடிக்கவில்லை. கவிஞர் கண்ணதாசனின்பாடல் வரி நினைவுக்கு எட்டுகிறதே- ‘சொல்லாத சொல்லுக்கு விலை ஏதுமில்லை.’
அவர்கள் வெளியே வந்ததுமே, விர்ரென்று ஸ்கூட்டரில் வந்த அர்ச்சகர் லாவகமாக அருகில் கைக்குஎட்டும் அளவு தூரத்தில் நிறுத்தினார். அவர் கைக்கு பக்தர்களின் ரூபாய் நோட்டுகள் சேர்ந்ததும் அவருடையவண்டி விரைந்து மறைந்தது.
அவசரவசரமாக அர்ச்சகருடன் போய் செய்த தெய்வதரிசனம் திருப்திகரமாவே இல்லை என்று உணர்ந்தபோதும், அந்த அனுபவமே ஒரு வியாபாரத்தன்மையாக இருந்ததை நினைக்கின்றபோதும் , நம்ம ஊர்கோயில்கள் ஏன் இப்படி ஊழல்களங்களாகின என்ற கசப்பான உண்மையை செந்திலால் ஏற்க முடியவில்லை. யாரிடம் சொல்லி முறையிடுவது? தான் மட்டுமே புகார் செய்தால் நிலமை மாறுமா? புரியவில்லை.
இன்னொரு முறை வேறொரு கோயிலில் –
“இந்தாங்கோ…அம்பாள் பிரசாதம்…” சொல்லிக்கொண்டே, அம்பாள் பாதத்தின் கீழே இருந்த ஒருசிறிய வெள்ளிக்காசை குங்குமத்துடன் கனகத்தின் கையில் மெல்ல போட்டார் அர்ச்சகர். கனகம் வெள்ளிக்காசை கண்களில் ஒத்திக் கொண்டு பத்திரப் படுத்திக் கொண்டாள். அவள் முகம் திருப்தியால் மலர்ந்தது. செந்திலும் கனகமும் சன்னதியிலிருந்து நகர முற்பட்டபோது, அர்ச்சகரின் குரல் அவர்களை தடுத்தது.
“இருநூறு ரூபாய்…அம்பாள் அனுக்கிரகம்…” சிரித்துக் கொண்டே கேட்டார். கோயில்களில் இப்படிஎல்லாம்கூட பணம் கேட்கும் வழிகளும் உண்டா என சிறிது ஆச்சரியப்பட்டான் செந்தில். தன் சட்டைப்பையில் தேடிய போது இருநூறு ரூபாய் இல்லை. “என்னிடம் இப்போ இல்லையே” என அசட்டு சிரிப்பை செந்தில்உதிர்த்தபோது, அர்ச்சகர் “அதனால என்ன, அடுத்த தடவை கொடுங்கோ” என்று பதில் வரும் என செந்தில் எதிர்பார்த்தான். ஆனால், அர்ச்சகர் கனகத்திடம் கேட்டு அவர் கொடுத்த வெள்ளிக்காசை திரும்ப வாங்கி மீண்டும் அம்பாள் பாதத்தில் வைத்தார். கனகத்தின் முகம் இருண்டது.
யார் இரு நூறு ரூபாய் தருகிறாரோ அவருக்குதான் அம்பாள் அருளாமே! தெய்வத்தின் அருளை விலையாக்கும் அளவு நமது கோயில்கள் நலிந்துவிட்டனவே என்ற எண்ணம் செந்திலுக்கு மிகுந்த மனஇறுக்கத்தைத் தந்தது.
செந்திலின் மனநிலையை புரிந்துகொண்டது போல அம்பாள் பாதங்களின் கீழே வைக்கப்பட்ட அந்த வெள்ளிக்காசு பளபளக்க சிரித்தது.