வெளி வந்த திறமை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 12, 2023
பார்வையிட்டோர்: 1,588 
 
 

சங்கரன் பொள்ளாச்சியில் ஒரு கலைப்பிரிவு பட்டதாரி, படிக்கும்பொழுதே நல்ல “கற்பூர புத்தி” என்று சுற்றியிருந்தவர்கள் சொல்வார்கள். அது போக நல்ல பரோபகாரி, யாருக்கும் ஏதாவது உதவி என்றால் ஓடிப்போய் செய்வான். இருந்தும் என்ன பயன்? அவனும் பட்டம் வாங்கி விட்டு ஒரு வருடமாய் வேலை தேடிக்கொண்டிருக்கிறான்.

சங்கரன் அன்று ஒரு கம்பெனிக்கு இண்டர்வியூவிற்கு செல்ல வேண்டும்.அவன் இருப்பதோ பொள்ளாச்சியில் இருக்கும் ஒரு சின்ன கிராமம். அவனை நேர்முக தேர்வுக்கு அழைத்த கம்பெனியோ கோயமுத்தூரிலிருந்து அவினாசி செல்லும் பாதையில் இருந்தது. .காலை ஏழு மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து பஸ் பிடித்து எட்டரை மணிக்கெல்லாம் உக்கடம் வந்து விட்டான். அங்கிருந்து அந்த கம்பெனி இருக்கும் முகவரிக்கு எந்த பேருந்து செல்லும் என்ற விவரம் கேட்டு, நின்று கொண்டிருந்த அந்த பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து கொண்டான். அவனது பக்கத்து சீட் காலியாக இருந்தது. பஸ் இன்னும் சற்று நேரத்தில் கிளம்புவது போல உறுமிக்கொண்டிருந்தது.

அப்பொழுது.பஸ்ஸை நோக்கி வேகமாக முப்பது வயது மதிக்கத்தகுந்த ஒரு பெண் ஓடி வந்தாள். பஸ் அதற்குள் கிளம்பி கொஞ்ச தூரம் முன் வர வேகமாக வந்த பெண் பின் புறமும் ஒரு பஸ் வருவதை கவனிக்காமல் இதை நோக்கியே வந்தவளை பின் புறம் வந்த பஸ் மோதி நின்றது. அவ்வளவுதான் இந்த பஸ் சட்டென்று நிற்க, பஸ்ஸுக்குள் உட்கார்ந்திருந்த ஓரிருவர் இறங்கி அந்த பெண்ணுக்கு உதவ விரைந்தனர். சங்கரனும் இறங்கி அந்த பெண்ணிடம் ஓடினான். அந்த பெண் காலில் இரத்த காயம் ஏற்பட்டிருந்தது. இரத்த பெருக்கும் அதிகமாக இருந்தது. அதனால் எழ முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள். அங்கிருந்த ஒரு பெண் அவளை கைத்தாங்கலாய் பிடித்து பஸ் ஸ்டாண்டிலிருந்த ஒரு பெஞ்சில் உட்கார வைத்தாள்.

அந்த பெண்ணின் கையில் இருந்த “பைல்” சற்று தள்ளிப்போய் விழுந்திருந்த்து. அதில் இருந்த காகிதங்கள் எல்லாம் சிதறி காற்றில் பறக்க முயற்சித்து கொண்டிருந்தது. சங்கரன் கீழே கிடந்த காகிதங்களை பொறுக்கி அந்த “பைலுக்குள்’வைத்து அந்த பெண்ணிடம் கொண்டு வந்து கொடுத்தான். அந்த பெண் அடுத்து என்ன செய்வது என்ற திகைப்பில் இருந்தாள். எழுந்து நடப்பது சிரம்ம். சுற்றி இருந்தவர்கள் ஆளாளுக்கு ஏதோவொரு யோசனை சொன்னார்களே தவிர உதவி செய்வதாக தெரியவில்லை.

சங்கரன் அந்த பைலை கொடுத்து விட்டு “மேடம்” உங்களுக்கு சிரமம் இல்லையின்னா உங்களை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன், அங்க ட்ரீட்மெண்ட் பண்ணிட்டு அப்புறம் நீங்க எங்க போகணுமோ அங்க கொண்டு போய் விட்டுடறேன். பணிவாய் சொன்னான்.

அந்த பெண்ணின் முகத்தில் சட்டென்று ஒரு மலர்ச்சி தோன்ற ரொம்ப தாங்க்ஸ் சொன்னவுடன் இவன் சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த ஆட்டோவை கூப்பிட்டான். அந்த பெண்ணின் கையை பிடித்து ஆட்டோவில் ஏற்றியவன் ஹாஸ்பிடல் போப்பா என்று சொன்னான்.

ஹாஸ்பிடலில் இரத்த பெருக்கத்தை கட்டுப்படுத்தி காயத்துக்கு மருந்து போட்டு வலி தெரியாமல் இருக்க மாத்திரையும் கொடுத்தார்கள். அந்த பெண் மாத்திரை சாப்பிட வேண்டி இருவரும் அங்கிருந்த “காண்டீனுக்கு” சென்றனர். காப்பி வந்தது. அதை வாங்கி வாயில் ஒரு மாத்திரை போட்டு குடித்த பின்னால்தான் அந்த பெண் சற்று தெளிவடைந்தது போல் காணப்பட்டாள். என் பேர் “சுலக்க்ஷ்னா” நான் ஒரு டெகரேசன் கன்சல்டன்சி” வச்சிருக்கேன். இன்னைக்கு ஒரு கம்பெனிக்கு ஆர்டர் வாங்கறதுக்காக வந்தேன், பத்து மணிக்குள்ள போயிட்டா அந்த கம்பெனி எம்.டியையே நேரா பார்த்து பேசிடலாம், அதை ஞாபகம் வச்சுட்டே இந்த பஸ்ஸை பிடிக்க வந்து, பின்னாடி வந்த பஸ்ஸை கவனிக்க மறந்துட்டேன்.

ஏங்க மேடம் இந்த வேலைக்கு ஆள் வச்சுக்க்கூடாதா? சுலக்க்ஷ்னா சிரித்தாள். நாங்க “கன்சல்டென்சி” வச்சிருக்கேன்னு சொன்னவுடனே ‘ஆள் பலம்’ படை பலம் இதை பத்தி கேட்கறீங்க, அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை. என்னோட ஆபிசுல ஒரு பொண்ணு மட்டும் இருக்கும். வர்ற போன் கால் அட்டெண்ட் பண்ணி எனக்கு மெசேஜ் கொடுத்துடும், நான் மத்ததை எல்லாம் பார்த்துக்குவேன்.

சட்டென்று ஞாபகம் வநதவளாக சாரி உங்க பேர்.. என் பெயர் சங்கரன்..பணிவாய் சொன்னவனிடம் ஐயோ உங்க வேலைய கெடுத்துட்டேன், என்னை மன்னிச்சுங்குங்க, பதட்டத்துடன் சொன்னாள்.

அவன் பரவாயில்லை மேடம்..நான் ஒரு கம்பெனி இண்டர்வியூவிற்காக போயிட்டிருந்தேன். அவினாசி ரோட்டுல இருக்கற ஒரு கம்பெனியில. இண்டர்வியூ பத்து மணிக்கு அதுக்குள்ள உங்களுக்கு இப்படி ஆகவும் நான் உங்களோட வந்துட்டேன். குரலில் கூடுமானவரை வருத்தம் தெரியாதவாறு சொன்னான். காரணம் அந்த பெண் வருத்தப்பட்டு விடுவாளோ என்ற காரணத்தால்.

நினைத்தது போலவே அந்த பெண் அவனுக்காக வருத்தப்பட்டவள். அநியாயமா உங்க வேலைய கெடுத்துட்டேன், மீண்டும் ஆரம்பிக்க, மேடம் அதை விடுங்க, இப்ப உங்களால எழுந்து மெல்ல நடக்க முடியும்னு நினைக்கிறேன், நீங்க எங்க போகணும்னு நினைச்சிங்களோ அங்க போக முடியுமான்னு பார்க்கலாம், ஒரு ஆட்டோவோ, கால் டாக்சியோ பிடிச்சிட்டு வரவா !

அந்த பெண் சிறிது நேரம் யோசித்துக்கொண்டே இருந்தவள் சங்கரன் இன்னைக்கு என்னால உங்க “இண்டர்வியூ ஸ்பாயில்” ஆயிடுச்சு, ஆனா அதே நேரத்துல நான் இப்ப உங்களுக்கு ஒரு வேலை தர்றேன், எனக்கு பதிலா அந்த கம்பெனியை நீங்கதான் பார்க்க போறீங்க என்ன சொல்றீங்க? ஐயோ மேடம் “டெகரேசனை” பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாதே !.

இங்க வாங்க அவனை பக்கத்தில் உட்காரவைத்து அவர்கள் செய்யும் “டெகரேசன்”வேலைகளை சங்கரன் பொறுக்கி எடுத்து கொடுத்த காகிதங்களை காட்டி விளக்கினாள். அரை மணி நேரம் பொறுமையாய் கேட்ட சங்கரன் இப்ப கொஞ்சம் புரியுது,

இது போதும், நான் உங்க பக்கத்துலதான் இருப்பேன், ஏதாவது சந்தேகம் வந்தா நான் சமாளிக்கிறேன். வாங்க என்னோட, அவனை அழைத்துக் கொண்டு நொண்டி நொண்டி நடந்தவள் கைபேசியில் கால் டாக்சியை கூப்பிட்டாள். வந்து நின்ற கால் டாக்சியில் ஏறிய இருவரும் அவள் சொன்ன அட்ரசுக்கு வண்டியை விடச்சொன்னாள்

அந்த கம்பெனியில் ஓரளவுக்கு இவர்கள் சொன்னதை காது கொடுத்து கேட்டார்கள். உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறோம் என்று சொன்னார்கள். அடுத்து சுலக்ஷ்னா ஒரு ஐடியா நீங்கள் இண்ட்ர்வியூ போக நினைத்த கம்பெனிக்கு போய் பார்க்கலாமா? அவள் கேட்க சங்கரனும் உற்சாகமாய் தலையாட்டினான்.

சங்கரன் அந்த கம்பெனிக்குள் நுழைந்தவுடன் அங்கு உட்கார்ந்திருந்த இளைஞர்களையும்,இளைஞிகளையும் பார்த்தான். கிட்டத்தட்ட இருபது பேருக்கு மேல் இருக்கும், அனைவரது கண்களிலும் இந்த வேலையாவது கிடைக்குமா என்ற ஏக்கம். நான் கூட நேரத்தில் வந்திருந்தால் இவர்களுடன்தான் இருந்திருப்பேன்.

மனம் எண்ணினாலும், வந்த வேலைக்காக சுலக்ஷனாவிடம் வாங்கி வைத்திருந்த விசிட்டிங்க் கார்டை அந்த கம்பெனி மேனேஜர் காரியதரிசியிடம் நீட்டினான். பத்து நிமிட்த்துக்குள் அழைப்பு வர சுலக்ஷனாவுடன் உள்ளே நுழைந்தான்.

அரை மணி நேரம் சுலக்க்ஷனாவும் இவனும் மாறி மாறி விளக்க அவர்கள் அரை மணி நேரம் காத்திருக்க சொன்னார்கள். “அரை மணி” ஒரு மணி நேரமாக போனது. பொறுமையாக் காத்திருந்தார்கள். அதன் பின் “எம்.டி”.அறைக்கு அழைக்கப்பட்டு அவர்கள் விவரித்த “டெக்ரேசனில்”அவர்களது அலுவலகத்தை அமைத்து தரும்படி ஒரு டைப் அடிக்கப்பட்ட ஆர்டரை நீட்டினார்கள்.

வெளியே வந்த சங்கரனின் மனம் மகிழ்ச்சியாக இருந்தது. நான் உங்க வேலையை கெடுத்ததுமில்லாமல், இந்த கம்பெனி ஆர்டரையும் பிடிச்சுட்டேன்னு கோபமில்லையே சிரித்துக்கொண்டே கேட்டாள் சுலக்க்ஷ்னா.

இலை மேடம், எனக்கு இங்க வேலை கிடைச்சிருந்தா கூட இவ்வளவு சந்தோஷப்பட்டிருக்க மாட்டேன், என்னாலயும் இப்படி ஒரு ஆர்டரை பிடிக்க முடியுமான்னு ஆச்சர்யமாயிருக்கு, அதுவும் உங்க கிட்டே அரை மணி நேரம் கத்துகிட்டதை வச்சே.

அதுக்காக ரொம்ப மகிழ்ச்சியடையாதீங்க, வெற்றியை மாதிரி தோல்வியும் வரும், ஆனா அதை பத்தி கவலைப்படாமே முயற்சி பண்ணிகிட்டே இருக்கணும். சரி நீங்க என் கன்சல்டன்சியில வேலை செய்ய விருப்பமா?

நோ ..மேடம், நான் இன்னும் கத்துக்கணும், உங்க கிட்டே ஆறு மாசம் வேலை செஞ்சு கத்துக்கறேன். அதுக்கு பின்னாடி நீங்க எனக்கு “கமிஷன் பேசுல” வேலை கொடுக்கணும், என்ன சம்மதமா ? சிரித்துக்கொண்டே கேட்டான்.

நிச்சயமா ! இப்ப இந்த ஆர்டர் பிடிச்சு கொடுத்ததுக்கான கமிசன் உங்க அட்ரஸ் தேடி வரும். அவனிடம் விலாசம், மற்ற விவரங்களை வாங்கி கொண்டாள் சுலக்க்ஷனா.

வீடு திரும்பிக்கொண்டிருந்த சங்கரனுக்கு சமுதாயத்தில் ஜெயித்து விடமுடியும் என்ற தன்னம்பிக்கை வந்திருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *