(1974ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மெல்ல மெல்ல ஒளி மங்குகின்றது. இன்னும் இருள் சூழத் தொடங்கவில்லை. முத்துமாரி அம்மன் கோவிலுக்கு முன்னால் ஒரு சிறு கூட்டம். வேலப்பன், நாகையா, கண்ணாயிரம், சக்கரபாணி, இன்னாசி இன்னும் பலர். எல்லோருடைய கண்களிலிருந்தும் கோபத்தின் ஜுவாலை வீசுகின்றது.
அழுக்கேறிய கறுப்பு நிறத் துப்பட்டி ஒன்றால் உடலைப் போர்த்து மூடிக் கொண்டு யாழ்ப்பாணச் கருட்டைப் புகைத்தபடி ஒரு மூலையில் அமர்ந்திருக்கும் மூக்கையாக் கிழவரை நோக்கித் தங்கள் ஆத்திரத்தைக் கொட்டிக் கொண்டிருக்கின்றனர்.
‘என்ன தலைவரே, நீங்க உங்க பாட்டுக்கு உக்காந்திருந்தா என்ன முடிவு? இதை விடலாமா?
‘கண்ணகையட காதலும் இந்தமாதிரித் தானே. அதுக்கு அப்படீன்னா இதுக்கு வேற நீதியா?’
‘பாவம் கண்ணகை. என்ன மாதிரி துடிச்சா. அவ செத்தாவோ பொழைச்சாவோ’.
‘இதால மட்டும் கவுரவம் போவாதா?’
‘அதுவும் கத்தோலிக்கச் சிங்களத்தி’.
‘தலைவரெ ஒரு சொல்லு சொலிடுங்க. இன்னிக்கு ராத்திரியே அந்தச் சிங்களத்தியைத் தீர்த்துக் கட்டுறம்’.
எல்லோரும் மிகவும் ஆத்திரத்தோடுதான் பேசினார்கள். இத்தனைக்கும் கிழவர் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.
அந்த எஸ்டேட்டின் உரிமையாளர் கனகசபையின் மகன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த ஒரு சிங்களப் பெண்ணைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டான். இன்று தம்பதிகள் எஸ்டேட் பங்களாவுக்கு வருகின்றார்கள். தடபுடலான விருந்து.
இதுதான் தொழிலாளர்கள் – தமிழ்த் தொழிலாளர்கள் முக்கியமாக இவ்வளவு ஆக்ரோஷத்தோடு கூடியிருப்பதற்குக் காரணம்.
‘சத்து அமதியா இருங்கப்பா’ என்று சொல்லி விட்டு மூக்கையாக் கிழவர் கோவிலின் பின்புறத்துக்குப் போகிறார்.
அங்கே ஒரு குறிப்பிட்ட இடத்தைக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு நின்றவருக்கு என்னவென்று தெரியாத ஏதோவொன்று நெஞ்சுக் கோறையை நெரித்து நசுக்குவது போல இருக்கின்றது.
அந்த இடத்தில் தான்…அது நடந்தது.
அங்கே தான்…கண்ணகை விரித்த கூந்தலோடு விழுந்து புரண்டாள்.
கனத்த நெஞ்சோடு தெற்குப் புறமாக நிமிர்ந்து பார்க்கிறார் கிழவர்.
முதலாளியின் பங்களாவில் வெண்ணிற பல்புகள் ஒளி வெள்ளத்தைக் கக்கிக் கொண்டிருக்கின்றன.
அதைப் பார்த்ததும் சங்கிலிக் கோர்வை போல நினைவின் தடங்கள் நீள்கின்றன.
முத்துமாரி அம்மன் கோவில் கட்டி முடிக்கப் பட்டுச் சங்காபிஷேகம் நடைபெற்ற போதும் இதே மாதிரியாக மின்சார பல்புகள் மின்னிப் பிரகாசித்தன.
அந்தத் தோட்டத்தில் வேலை செய்யும் தமிழ்த் தொழிலாளர்கள் அனைவரும் இந்துக்கள். அவர்களுக்கு ஒரு கோவில் அவசியம் என்றும் அதைத் தானே தன்னுடைய செலவில் கட்டித் தருவதாகவும் முதலாளி சொன்ன போது தொழிலாளரின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
முத்துமாரி அம்மன் கோவில் கட்டி முடிக்கப் பட்டு விட்டது. சங்காபிஷேகமும் அவரின் செலவிலேயே நடைபெற்றது.
தமிழ்த் தொழிலாளரைப் பொறுத்தவரையில் முதலாளி இப்போது ‘குன்றின் மேல்’ நின்றார். சைவப் பழமாகவும் தமிழபிமானியாகவும் அவர்கள் அவரை மதித்தனர்.
‘தமிழ்’, ‘தமிழன்’ என்றெல்லாம் முதலாளி அடிக்கடி சிந்திய ‘முத்துக்களை’ அப்படியே ஏற்றுக் கொண்ட தொழிலாளர்கள் அந்தத் தோட்டத்தில் வேலை செய்யும் சிங்களத் தொழிலாளரைத் தங்கள் எதிரிகளாகவே கருதினர். இதனால் அந்தத் தோட்டத்தில் இரண்டு தொழிற் சங்கங்கள் இயங்கி வந்தன.
சிங்களத் தொழிலாளரின் சங்கத்துக்குச் சிறிசேன தலைவர். அடுத்ததுக்கு மூக்கையாக் கிழவர்.
அந்தத் தோட்டத்தில் சம்பள உயர்வு கோரி இரண்டு வேலை நிறுத்தங்கள் மாத்திரம் நடைபெற்றிருக்கின்றன. ‘நம்ம முதலாளிக்கு எதிராக நாங்கள் ஸ்ட்ரைக் போட முடியாது’ என்ற தமிழ்த் தொழிலாளர்கள் அதில் சேர மறுத்துவிட்டனர்.
வேலை நிறுத்தங்கள் தோல்வியடைந்தன.
இந்த நிலையில் யாருக்குமே தெரியாமல் கண்ணைகைக்கும் ஜினதாசவுக்கும் இடையில் வளர்ந்து வந்த காதலைப் பற்றி எப்படியோ முதலாளி தெரிந்து கொண்டார்.
உடனடியாக மூக்கையாவையும் இன்னாசியையும் பங்களாவுக்கு அழைத்தார்.
‘விசயம் முத்திப் போயிடிச்சு. அடுத்த மாசம் மாலை மாத்துறதா தீர்மானிச்சிருக்காங்க. இது தமிழனாப் பொறந்த நம்ப எல்லாருக்குமே ஒரு சலெஞ்சு. இதை விட்டா நம்ப கவுரவம் போயிடும்’
நான்கு நாட்களுக்குப் பின் முத்துமாரி அம்மன் கோவிலுக்குப் பின்னால் ஜினதாசவின் தலையும் முண்டமும் வெவ்வேறாகக் கிடந்தன.
விரித்த கூந்தலோடு விழுந்து புரண்டழுதாள் கண்ணகை.
‘ஈரமத்த சனங்களோட உறவே வேணாம்’ என்று உதறிவிட்டுச் சென்றவள் தான், அதன் பிறகு என்ன நடந்ததோ தெரியாது.
பழைய சம்பவங்களை அசை போட்டுப் பார்த்த பின் கோவிலின் முன்புறத்துக்கு வருகிறார் கிழவர்.
கூடியிருந்தவர்களை ஒரு முறை நோட்டம் பார்த்து விட்டு நிதானமாகச் சொல்லத் தொடங்கினார்.
‘தம்பியவை, கோவப் பட்டாப்பல ஒண்ணும் வராது. தொழிலாளரைப் பிரிச்சு வைச்சா முதலாளிக்குத்தான் லாபம். நாம எல்லோருமே சேர்ந்து ஒரு ஸ்ரைக் போட்டா அவரால என்ன பண்ண முடியும்? அதனால தான் தமிழ், சைவம் எண்டெல்லாம் சொல்லி சிங்களத் தொழிலாளரோட சேரவிடாம நம்ம பிரிச்சு வைச்சாரு. இதால நாம் இருந்த மாதிரித்தான் இருக்கோம். அவருதான் மூணு தோட்டம் வாங்கிட்டாரு. அவருட மவன் கட்டிக்கிட்ட பெண் பணக்காறி. அவ பேரில ரெண்டு தோட்டம் இருக்கு. அதனால அவங்க ஒரே ஜாதி. தொழிலாளர் தான் நம்ம ஜாதிக் காரங்க. இத்தினி நாளும் இருட்டிலே இருந்தோம். இனிமேல் வெளிச்சத்துக்கு வருவோம். இப்பவே வாங்க. எல்லாருமா போயி சிறிசேனாட சங்கத்தில சேர்ந்துடுவோம். அவங்கதான் நம்ம ஜாதிக் காரங்க’
எல்லோரும் அருகிலுள்ள பாதையில் கிழக்கு நோக்கிப் போகின்றார்கள். அந்தத் திசையில் தான் சிறிசேனாவின் வீடு இருக்கிறது.
– இதழ் 74, ஆகஸ்ட் 1974 – மல்லிகைச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூன் 2002, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.