“ஆண்டவா…இன்னைக்கும் கால்வயித்து கஞ்சிக்கு பங்கம் வராம பக்கத்துணையா இருந்து காப்பாத்துப்பா..!”வானத்தை பார்த்து கும்பிட்டபடியே கோணிப்பையை கக்கத்தில் இடுக்கியபடியே நடந்தார் நடேசன்.
நாலு மா சொந்த வயலை சொத்தாக கொண்ட சிறுவிவசாயி அவர்.ஆண்டவன் புண்ணியத்தில் ‘தின அறுவடை’யில் அரைவயிற்று கஞ்சி குடிக்க வழிகோலியது அவரது தகப்பன் தங்கவேலு தான்.
பின்னே…கிராம பிரதான சாலையில் முதல் வாய்மடை பங்கை அவர் வாங்கிச்சேர்க்காவிட்டால் இந்த தின அறுவடை சாத்தியமாகி இருக்குமா..?
இவரைப்போன்ற சிறு விவசாயிகள் இலவசமின்சார போர்வெல் வைத்திருக்கும் பெரிய பண்ணைகளிடம் ,ஏவல் வேலை செய்யவேண்டும்,அவர்கள் கண் அயர்ந்த வேளை நண்டு மோட்டை வைத்து தனது காட்டை நனைத்து நையவிட வேண்டும்.மா வுக்கு ரெண்டு கலம் தந்துடறேன்னு ஒப்பந்தம் போட்டாலும் எந்த பெருவிவசாயியும் தன் வயல் நடவு விழாமல் ,சேடை பாய்ச்ச கூட அனுமதிப்பதில்லை…அவர் நிலத்தில் என்ன ரகம் நெல் போட்டாலும் அதையே இவர்களும் நடவேண்டும் .பண்ணைக்கு முன் அறுவடை செய்ய அவர்கள் மனதில் இடமிருக்காது…கொஞ்சம் பிந்திப்போனால் அங்கே களத்தில் இடம் இருக்காது..!வைக்கோல் போரை இடம் மாற்றி தலைகூட்டனும்…கூலங்கருக்காய் அள்ளித்தூற்றனும்…எல்லாம் கூலியில்லா மாரடி தான்…அப்புறம் அறுவடை செய்து களம் சேர்த்தால் ,பண்ணைக்கண்ட பகுமானத்துக்கு மேல் கண்டுமுதல் போகக்கூடாது…’அடேய்..சாணிக்கூலத்தை எங்கேடா கொட்டுன…என்னுதவிட உனக்கு விளைவு கூடுதலா இருக்கே..?”என நோகடிப்பார்கள்.
வாய்க்கால் வெட்டு,வாங்கெல அறிதல்,மடைமாற்றல் போதாதென்று ஆடு,மாடு காவலென்றும் அல்லாடி அண்டி பிழைப்பதே சிறுவிவசாயி பிழைப்பு…
வாய்க்கால் தண்ணீயை பார்த்து வருசக்கணக்கா ஆச்சு…பூமியை பொத்து போர் குழாய் முன்னூறு அடிக்கு போச்சு…வாய்க்கால் மேல் மண்ணை சிரட்டயால நீக்கி நீருற்று ஆக்கி…நூல்துண்டை மேல போத்தி வடிகட்டி வாய்வச்சு குடிச்ச காலம் கானலாச்சு…வெளிப்பட்டது நீண்ட பெருமூச்சு…நடந்தார் நடேசன்
வயல் தலைமாட்டுக்கு வந்ததும் கண்களால் நோட்டம் விட்டார்.இன்றைய அறுவடைக்கு பங்கமில்லை…எட்டு மாசகாலமாச்சு வயலுல மண்வெட்டி இறங்கி…விளைந்து காய்ந்த விழல்காடு ஒன்றை தீக்குச்சிக்கு விஸ்வரூபமெடுக்க ஆயத்தமாக இருந்தது…அதற்கிடையில் தலைநுழைத்து அருகம்புல்லும்,சீலைப்புல்லும் தேடி நிண்டிக்கொண்டிருந்தன ஆடுகள்.
சரசரத்து போகும் சர்ப்பங்களுக்கும் நல்ல அறுவடைதான் .ஏழைகளுக்கு ஈயாத பண்ணை முதலாளிகளை பதம்பார்த்து கொளுத்த எலி இனங்கள் பொத்தடித்து புழங்கியது இவரது தரிசுக்காட்டில் தான்.
இரண்டு தடவை ஆள்விட்டு கிரானி ராவுத்தர்கூட கேட்டுப்பார்த்தார்..’ஓரக்கால் தரிசு மேய்ச்சலுக்கு வர்ற வாயில்லா சீவன் வரப்பு தாண்டி லாவுது…பெரிய பெரிய மோட்டை போட்டு எலிப்படையெடுக்குது…சும்மா கெடந்து என்ன சாதிக்குது…சேர்த்து வெதச்சு..பாடுபட்டு ஆளுக்கு கொஞ்சம் எடுத்துக்கலாம்னு… ஒத்துக்கொள்ளலியே…அப்ப சரயின்ன தலையாட்டி இருந்தா இன்னைக்கு தினம் அரைவயிற்று கஞ்சிக்கு அரிசி அரசாங்கம் போடுது…’மேந்தொட்டுக்க ‘யாரு கொடுப்பா…
ரோட்டோர வயலாக வாங்கிச்சேர்த்த தகப்பனுக்கு தலைக்கு மேலாக ஒரு கும்பிடை போட்டு சனி மூலையிலிருந்து அறுவடையை தொடர்ந்தார்…மளமள வென சாக்குக்கோணி நிறைய நிறைய…சந்தோச ஊற்றெடுத்தது…
வயல் தலைமடையில் மதுகு கட்டின மகராசனுக்கு மனதுக்குள் கும்பிடுபோட்டபடியே தலைக்கு ஏற்றினார் மூட்டையை…நல்ல செழுமையான அறுவடைதான் காயலான் கடைக்காரன் கமிஷன் அடிக்காக கொடுத்தான்னா…’கட்டிங்’குக்கும் பங்கமில்லை…
“யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க…”ராகத்தோட பாட்டுப்பாடியபடியே நடேசன் நடக்க,சுதிதப்பாமல் தாளம்போட்டபடியே போனது கோணிப்பைக்குள் அவர் சேகரித்த வெற்று ‘மதுபாட்டில்கள்’.!