வியாபாரிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 21, 2022
பார்வையிட்டோர்: 1,999 
 
 

அசோக் – ஈவினிங் டீக்குப்பிறகு. தொழிற்சாலையின் ஒதுக்கில் பாதுகாப்பாய் அமைக்கப்பட்டிருந்த ‘ஸ்மோக்கிங்க பூத் திற்குப் போய்விட்டு. லேபரட்டரிக்குத் திரும்பினபோதுதான் அந்த அசம்பாவிதம் நடந்தது.

குடுவைக்குள் கொதித்து ஆவியாகிக் கொண்டிருந்த அமிலம் பட்டென்று கண்ணாடியை உடைக்க என்னவோ ஏதோ வென்று திருமபுவதற்குள் அது அவனது முகத்தில் தெறித்தது.

“ஐயோ!” என்று கண்களைக் பொத்திக் கொண்டு அலறினான். கண்கள் திகுதிகுவென எரிந்தன. பிசைந்தன, அரித்தன.

அலறல் கேட்டு அக்கம் பக்கத்தவர்கள் ஓடிவந்தார்கள்.

அவனால் பேசமுடியவில்லை. உடைந்து கிடந்த உபகரணங்களைப் பார்த்ததுமே அவர்களுக்கு விபரம் புரிந்தது. உடன் பதறிக் கொண்டு முதலுதவி அறைக்கு அழைததுச் சென்றனர்.

சேஃப்ட்டி மானோஜர், புரொடக்ஷ்ன் மானேஜர், பர்சனல் மானேஜர், ஜி.எம்.. என்று எல்லோருக்கும் தகவல் பறந்தது. அவர்களும், ஜெனரல் ஷிஃப்ட் முடிந்து கிளம்பிக் கொண்டிருந்த தொழிலாளர்களும் அதே வேகத்தில் வந்து குழுமினர்.

“என்னாச்சுப்பா…?”

“கண்ணில் அமிலம்…

“ஓ… காட்! டிஸ்டில் வாட்டர் எடு! கமான் – க்விக்! கண்களை நன்றாகக் கழுவு!”

“பண்ணிகிட்டிருக்கோம் சார்!”

குலோத்துங்கன் பதிலளித்துவிட்டு பக்கெட்டில் தண்ணீர் பிடித்து வந்தான்.

“அசோக்! பக்கெட்டிற்குள் முகத்தை அமிழ்த்தி, கண்கள் விரியத் திறந்து பார்!”

“முடியலே சார்!“

“டிரை பண்ணுப்பா”

“முடியலே சார். என்னை விட்டுருங்க!”

“சரி. அண்ணாந்து படுத்துக்கோ. நாங்களே கண்களைத் திறந்து” சேஃப்டி ஆபீசர் அவனைப் படுக்க வைத்தா. சலைன் வாட்டரால் அவனது கண்களைச் சுத்தம் பண்ண முயன்றார்.

“ஐயோ…வேணாம் சார்! எரிச்சல் தாங்க முடியலே!”

“கொஞ்ச நேரம் பல்லைக் கடிச்சுட்டு பொறுத்துக்போப்பா..சரியாப் போகும்!”

போகவில்லை. வலி அதிகமாயிற்று. துடித்துப போனான். அதற்குள் ஆம்புலன்ஸ் பதறிக்கொண்டு வந்தது.

“அசோக்… ஏறுப்பா! குலோ! நீயும் துணைக்குப் போய் வா!”

“எந்த ஆஸ்பத்திரிக்கு…?!”

யாரோ கேட்டார்கள்.

“கவர்ன்மென்ட்டிற்கா?”

“நோ…நோ! அங்கே போனால் கவனிக்க நாதி இருக்காது. சிட்டியில் பிரைவேட் ஆஸ்பத்திரிக்கே விடுங்க!”

ஆம்புலன்ஸ் தலை விளக்கைப் போட்டுக் கொண்டு பறந்தது.

சேஃப்டி மானோஜர் பர்சனல் மானேஜரிடம், “ஸம்வாட் ஸீரியஸ்! நீங்க ஆஸ்பத்திரிக்குப் போன் பண்ணிச் சொல்லிடுங்க!”

“இதோ…!”

போனை எடுத்த ரிசப்ஷனிஸ்ட் “ஆக்ஸிடெட்ணட் கேஸா…?” என்றாள் அலட்சியத்துடன். நேரத்தில் வீட்டிற்குக் கிளம்ப முடிய வில்லையே என்கிற வெறுப்பு அவளுக்கு. “ஆக்ஸிடெண்ட்டையெல்லாம் ஏன் சார் இங்கே அனுப்பறீங்க..? போலீஸ் கேஸானால் தலை வலி! பேசாம கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்கு அனுப்பக் கூடாதா…?”

“நான் சொல்றதைக் கேளும்மா. விபத்து வெளியே நடக்கலை. இதில் எந்த க்ரைமும் இலை. எதிர்பாராமல் நடந்த அசம்பாவிதம்! உங்க சீஃப்கிட்டே கொடு நான் பேசறேன்.”

அவள் சீப்பைக் கனெக்ட் பண்ணி, “சார்! ஆக்ஸிடெண்ட் கேஸாம். “ என்றாள்.

“முடியாதுன்னு சொல்லி அனுப்பிடு. ஏற்கெனவே பாவ புண்ணியம் பார்த்து அட்டெண்ட் பண்ணி கோர்ட்டுக்கு நாயா அலைஞ்சிட்டுருக்கிறது போதும்!”

“பார்ட்டி லைன்ல இருக்கார். நீங்களே பேசுங்க!”

“சார்! நான் கம்பெனியோட பர்சனல் மானேஜர் பேசறேன்” என்று விபரம் சொன்னார். “வி வில் செட்டில் யுவர் பில் இம்மீடியட்லி ப்ளீஸ் டேக் கோ ஆஃப் ஹிம்!”

“தென் ஓ. கே. அனுப்பி வைங்க!”

அரை மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் அந்த ஆஸ்பத்திரியை அடைந்தது. வாட்ச்மேன் “என்னாச்சு…?” என்றான் வழியை மறித்துக கொண்டு.

“விபத்து!”

“விபத்தா..இருங்க கேட்டுச சொல்றேன்!”

“போன் பண்ணியிருக்கு, தள்ளுப்பா!” என்ற குலோத்துங்கன் ரிசப்ஷனுக்கு விரைந்தான். அங்கு அரட்டையில் இருந்த பெண்ணிடம் விபரம் படபடக்க.

“ஓ! அந்த கேஸா.. வந்துருச்சா…? அந்தரூம்ல கிடத்துங்க!” சொல்லிவிட்டு அரட்டையிலிருந்து தொடர்ந்தாள்.

குலோத்துங்கன் அசோக்கைக் கைத்தாங்கலாகக் கொண்டு போய் பெஞ்சில் கிடத்தினான். அங்கு மாத நாவல் படித்துக கொண்டிருந்த நர்ஸ்.

“என்ன விஷயம்…?” என்றாள்.

சொன்னான்.

“எனக்கு நாழியாச்சு. வேற நர்ஸ் வருவாங்க. அவங்ககிட்டே சொல்லுங்க!”

“ப்ளீஸ் சிஸ்டர்! ப்ளீஸ்..”

அவள் ஒரு ப்ளீஸும் பண்ணவில்லை. தன் டம்பப் பையைத் தோளில் போட்டுக் கொண்டு போய்விட்டாள்.

அசோக் வேதனையில் துடித்துக கொண்டிருந்தான். “அம்மா…ம்மா” என்று அரற்றினான். குலோத்தங்கனுக்கு அவனைப் பார்க்கப் பார்க்க மனம் பதறிற்று. கைகளைப் பிசைந்து கொண்டு, “அசோக்! கொஞ்சம் பொறுத்துககோ. இதோ டாக்டர் வந்துட்டிருக்கார்!“ என்று கண்ணில் பட்ட டாக்டரிடம் ஓடினான். பரம் ஒப்பித்தான்.

“ஸாரி… எனக்கு வேற கேஸ் இருக்கு. டூட்டி டாக்டர்ட்ட சொல்லுங்க!”

“அவரைக் காணோமே!”

“தென் வெயிட்! வந்திருவார்.”அவர் கழண்டு கொண்டார்.

அதற்குள் வாச்சைப் பார்த்தபடி நர்ஸ் ஒருத்தி நுழைய “சிஸ்டர்!” என்ற அவளிடம் ஓடினான்.

“கொஞ்சம் பொறுங்க. நான் இன்னும் சார்ஜ்ஜே எடுக்கலே. லாக் புக்கை படிச்சிட்டு…”

“பேஷண்ட் துடிக்கிறான்.”

“அதுக்காக நாங்க என்ன பண்ண முடியும்…? டாக்டர் வரட்டும்!”

“ப்ளீஸ் ஸிஸ்டர்! வலி பொறுக்காம அழறான்.”

“அதான் டூட்டி டாக்டர் வரட்டும்னேனில்லே…?” அவள் எரிந்து விழுந்தாள்.

பக்கத்து அறையிலிருந்தே சீனியர் டாக்டர் சப்தம் கேட்டு உள்ளே வந்து, “என்ன இங்கே கலாட்டா…?” என்றார்.

“கலாட்டா இல்லே சார். இவன் கண்ணுல அமிலம் விழுந்து.. டாக்டர் உடனே ஏதாச்சும் செஞ்சாகணும். இல்லென்னா…”

“செய்யலாம். செய்வாங்க. டாக்டர் வரட்டும்!”

“ஸார்… நீங்க!”

“ஐ ஆம் லிட்டில் பிட் பிஸி! தவிர, எனக்கு அப்பாற்பட்ட கேஸ் இது! தொடக்கூடாது!”

“டாக்டர்! மனிதாபிமான அடிப்படையிலே…”

“மனிதாபிமானமா… ஹாஹ்ஹா. நால்லாச் சொன்னீங்க! மனிதாபிமானம் பார்த்தால் நாங்க உயிரைவிட வேண்டியதுதான்! சம்பளம் ரெய்ஸ் பண்ணி மூணு வருஷமாச்சு. பிரமோஷன் இல்லை. ஆனா, இருபத்து நாலு மணி நேரமும் உழைக்கணும். கேட்டால், இஷ்டமானால் இரு மரியாதையில்லை. இல்லாட்டி போ! சீனியருக்கு அங்கே மதிப்பில்லை”.

“உங்களுக்கு ஆயிரம் பிரச்னையிருக்கலாம். அவற்றை எங்க மேலதான் தீர்த்துக்கணுமா…?” அவனுக்கு எரிச்சலாய் வந்தது. “கவர்ன்மென்ட் ஆஸபத்திரிக்குப் போனால் கவனிப்பு இருக்காதுன்னுதானே இங்கே கொண்டு வந்தோம். இங்கேயும் இப்படியா…?”

“அதுக்காக? நாங்க என்ன பண்ண முடியும்? என் வார்டை மட்டும் தான் நான் பார்க்கணும்னு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!”

அசோக், “ஐயோ… எனக்கு முடியலேடாட” என்று கண்களைப் பிடித்துக் கொண்டு அரற்றினான். தேம்பினான். அவனது கண்கள் வெம்பிப் போயிருந்தன.

“அசோக்.. கசக்காதடா.. கசக்காதே!”

“வலி உயிர் போகுதடா.. மூச்சு முட்டுது. எனட்ககு சுகர் இருக்கு. பி.பி. கம்ப்ளெயிண்ட் இருக்கு. சீக்கிரம் கவனிக்கலேன்னா…”

குலோத்துங்கனுக்குக் கோபம் கோபமாய் வந்தது. “இவர்களெல்லாம் டாக்டர்களா இல்லை எமன்களா…?”

அதற்குள் டூட்டி டாக்டரே வந்தார். “என்னாச்சு தம்பி..?” என்றார் முகம் கழுவியபடி பேச்சில் சிகரெட் வாசம் இருந்தது.

“ஆக்ஸிட் பட்டிருச்சு சார்.”

“ஏன் ஆக்ஸிட் கிட்டே போகணும்?”

“அது வந்து.. சாம்பிள் டெஸ்ட் பண்ணிட்டிருந்தப்பபோ…”

“கேர்புல்லா இருக்கிறதில்லையா? அப்புறம் கண்ணுபோச்சு, காது போச்சுன்னு ஓடிவரது” என்று அவனது கண்களைப் பிடித்து அழுத்திப் பார்க்க, அசோக் “அம்மா” என்று அலறினான்.

“ஏம்ப்பா கத்தறே..? இப்போ என்ன பண்ணினேன்? சும்மா தொட்டதுக்கே இத்தனை ஆர்ப்பாட்டமா…?”

“வலி தாங்கலே சார்”.

“ஆக்ஸிட் பட்டா வலிக்கத்தான் செய்யும். அதுக்கு யார் என்ன பண்ண முடீயும்? ஸிஸ்டர்! இவருக்கு பைல் போடு!”

“டாக்டர்! ப்ளீஸ்.. டிலே பண்ணாம டிரீட்மெண்டை ஆரம்பிங்க!”

“இருப்பா! அவசரப்பட்டா முடீயுமா? பார்மாலிடிஸெல்லாம் இருக்கில்லே! சரியா ரிஜிஸ்டர் பண்ணாம கைவச்சு, நாளைக்கு ஏதாவது ஓண்ணு ஆச்சுன்னா யார் பதில் சொற்து?”

அந்த நர்ஸ் சாவகாசமாய் வெளியே போய் பதினைந்து நிமிடம் கழித்து பைலுடன் வந்து “உங்க பெயரென்ன… ஊரேன்ன.. அப்பா பெரேன்ன. வயசென்ன…” என்று வெறுப்பேற்றினாள்.

“கையெழுத்து போடுங்க!”

“ஏன் சிஸ்டர்? இப்போ இதுவா முக்கியம். பேஷண்ட்? துவண்டு போய்க் கிடக்கிறான். இந்த நேரத்துல…”

“மிஸ்டர்! என்ன டோன் உயருது.. எந்த நேரத்துல எதைச் செய்யனும்னு எங்களுக்குத் தெரியும். நீங்க முதல்ல வெளியே போங்க!”

“அதுகில்லை சிஸ்டர். சிகிச்சை…”

“சிகிச்சை! நாங்க பண்ணமுடியாது. அதுக்கு ஐ ஸ்பெஷலிஸ்ட் வரணும். !”

“எப்போ வருவார்…?”

“போன் பண்ணியிருக்கு, வந்திருவார். அதுக்குள்ளே பார்மாலிடீஸை முடிக்க அனுமதியுங்க. முதலில் ரிஜிஸ்ட்ரேஷன் பீஸ் கட்டிட்டு வாங்க! வேஷண்டை வார்டுக்கு கொண்டு போகணும்!”

அவர்கள் பீஸிலேயே குறியாயிருந்தனர்.

குலோத்துங்கன் ஓடிப்போய் பீஸ் கட்டிவிட்டு வந்தபோது, அவர்களது பார்மாலிடீஸெல்லாம் முடிந்திருந்தது. அசோக்கின் மூச்சும்.

– வானத்ததை தொட்டவன் (மினனூல் வெளியீடு: http://www.freetamilebooks.com)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *