ஏழை வயிறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 21, 2022
பார்வையிட்டோர்: 1,701 
 

“இதுக்கு நீ சம்மதிச்சுதான்ய்யா ஆகணும்!” மூன்று மாத கர்ப்பத்திற்கு பங்கம் வராதவாறு ஒருக்களித்து அமர்ந்திருந்த பார்வதி கெஞ்சினாள்.

“அதெல்லாம் முடியாது. சினிமாப் பைத்யம் பிடித்து அலையாதே!” மெய்யன் சாப்பிட்டு ஏப்பம் விட்டபடி கைகழுவினான். வேட்டியை உதறி கட்டிக்கொண்டு பாய்விரித்தான்.

“எனக்கு ஆசையாய் இருக்கய்யா. நான் என்ன நகை நட்டு வேணும், பட்டு புடவை வேணும்னா கேட்கிறேன்? நம்ம கருமபுச் சாறு வண்டியை படம் பிடிக்கிறேங்கிறாங்க. புடிச்சால் என்ன குறைஞ்சு போகுமாம்!” என்று அவனுடைய கால்களை அமுக்கி விட்டாள்.

“அவங்க சும்மாவா கேட்கிறாங்க…? இருநூறு ரூபா வாடகை! நூறு ரூபா அட்வான்சாவே தந்துட்டாங்க, சரின்னு சொல்லுய்யா. வர வெள்ளிக்கிழமை ஒருநாள்தானே! சூட்டிங்கு பார்க்கணும்னு எனக்கும் ரொம்ப நாளாய் ஆசைய்ய. நடிகைகளையெல்லாம் நேரில் பார்க்கலாம்!”

“விவரம் புரியாம பேசாதடி நம்ம ஏவாரம் போவும். அண்ணைக்கு கோயில்ல திருவிழா இருக்கு. செமத்தியா ஜூஸ் ஓடும்!”

“ஓடட்டும்யா. யார் வேணாண்ணாங்க. ஏவாரம் பாட்டுக்கு ஏவாரம்! அவங்க பாட்டுக்கு ஒரு பக்கம் படம் புடிக்கட்டும். சூட்டிங்க பார்க்கறதுக்கு சனங்க கூடும. நமக்கு ஏவாரம் கூடுமே!”

அவன் யோசனையுடன் படுத்திருந்தான்.

பெண்டாட்டியின் பேச்சை அவனால் தட்டமுடியவில்லை. கர்ப்பமானவள். ஏற்கனவே இரண்டுமுறை உண்டாகி நிலைக்காமல் போயிற்று. இம்முறையாவது குழந்தை பிழைக்க வேண்டும. உருப்படியாய்ப் பிறக்க வேண்டும். அதற்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுககத் தயார்!“

அதற்கு அவளுடைய ஆசைகளையெல்லாம் நிறைவேற்ற வேண்டும். அவளுடைய மனதில் சஞ்சலங்கள் கூடாது. அது கருவைப் பாதிக்கும். இன்னொரு முறை கரு கலைந்தால் அதை இருவராலுமே தாங்கிக் கொள்ள முடியாது.

“என்னய்ய சொல்றே..?”

“சரி. உன் இஷ்டம்!”

பார்வதிக்குச் சந்தோஷம் பிடிபடவில்லை. வெள்ளிக்கிழமை எப்போது வரும என்று காத்திருந்தாள். அன்று விடியற்காலையிலேயே எழுந்து ரெடியாகி விட்டாள். கணவனுக்கும் வாடகை துணி வாங்கி பளபளவென உடுத்திப் பூரித்துப் போனாள்.

அவர்கள் கிளம்புவதற்கும் வேன் ஒன்று அவசரமாய் வந்துநிற்பதற்கும் சரியாயிருந்தது. “இன்னுமா ரெடியாகலே..?”

“நாங்க ரெடிங்க”

“ஏறுங்க வண்டியிலே.”

கடைவீதியில் அந்த நேரத்திலேயே ஜனத்திரளாயிருந்தது. கோவிலின் முற்றத்தில் ஆரம்பித்து தெரு முழுக்கத் தோரணங்கள்! நாதஸ்வரம் பந்தல் போட்டு மங்களம் பாடிற்று. ஸ்பீக்கர்களின் சீர்காழி. இரண்டு பக்கமும் இளநீர்க்கடை, பாத்திரக்கடை, துணி, சோப்பு, சீப்பு, கண்ணாடி! அவற்றை பார்க்கப் பார்க்க அவளுக்கு வியப்பாயிற்று. இத்தனை கடைகளுக்கும் இருநூறு வீதம் வாடகை என்றால்… அம்மாடி!”

படம் பிடிப்பவர் பெரிய பணக்காரராய்த் தானிருக்க வேண்டும்!”

“மளமளன்னு தொழிலைக் கவனிங்க!”

“இதோ ஆச்சுங்க. பார்வதி! நீ மிசினைத் துடைச்சு வை. நான் மண்டிக்குப் போய்க் கரும்பு ஏத்தி வரேன்!”

சரியென்று உருளையைத் தொட்டுக் கும்பிட்டாள். துணியால் துடைத்துப் பொட்டு வைத்தாள். ஆயில் ஊற்றினாள். ஐஸ் கட்டிகளை ரப்பர் பைக்குள் போட்டு உடைத்து உதிர்த்தாள்.

அதற்குள் படப்பிடிப்பு வேன் வந்து ஜெனரேட்டர் ஓட ஆரம்பித்திருந்தது. காமிராக்கள், டிராலி! ஷேடுகள்! தாடிக்காரர் ஒருவர் கழுத்தில் தொங்கின சாதனத்தை கண்ணில் வைத்து அண்ணாந்து பார்த்தார்.

கார்கள் ‘சர்சர்’ரென வந்து நின்றன. நின்ற கார் ஒன்றிலிருந்து கும்பலாய் சிலர் இறங்கினர். மேக்கப் சாமான்களும், காஸ்ட்யூம்களும் பையன்களால் ஒதுக்கப்பட்டன.

கப்பல் மாதிரி கார் ஒன்று வந்து நிற்க, அதிலிருந்து நாயகன் ஜவடாலுடன் இறங்கினார். ஜனங்களுக்கு கையெடுத்துக் கும்பிட்டு விட்டு வையன் தூக்கி வந்து நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.

அவருடைய தலைக்கு மேல் குடை விரிந்தது. யாரோ ஒரு பையன் டைரக்டராக ருக்க வேண்டும். அவரது காலைத் தொட்டு வணங்கனிர் பேப்பரை விரித்து என்னவோ சொல்ல ஆரம்பித்த போது வேறோரு கார்!.

அதிலிருநது அன்ன நடையுடனும் ஜொலிக்கும் தாவணியுடனும் ‘அட.. அது நடிகை நர்மதா இல்லை…?’ பார்வதி அதிசயத்துடன் நின்றிருந்தாள் ‘அடா அடா… என்ன அழகு!‘

நர்மாதாவின் தலை கொள்ளாமல் பூ! அவளுடைய தலையலங்காரமும, உதட்டுச சாயமும், கழுத்து நகைகளும் அவளை கவர்ந்திருந்தன.

மெய்யன், வண்டியில் கரும்புக் கட்டுகளை இறக்கி பட்டை சீவ ஆரம்பித்தான். “என்ன புள்ளே அங்கே வேடிக்கை..?”

“அங்கே பாருய்யா.. அந்தம்மா எத்தனை செகப்பு!”

“எல்லாம் மேக்கப்பா இருக்கும். நீ மெஷினை ஸ்டாட்ட் பண்ணு!”

கயிற்றை சொண்டி இழுக்க, அவனது மனது ஒரு நிமிடம் பின்னோக்கி ஓட ஆரம்பித்தது.

அவனது ஊர் புதுக்கோட்டைப் பக்கம். வறட்சியான கிராமம். மழை வருடத்திற்கு வருடம் ஏமாற்றிக் கொண்டேயிருக்க, வயிற்றுப் பிழைப்பிற்கு வேண்டி மெட்ராஸிற்கு ஓடி வந்திருந்தான்.

அந்த நாட்களில் மெஷினெல்லாம் இல்லை. கையால்தான் சுற்றவேண்டும். பெரியவர் ஒருவரிடம் வேலைக்குச் சேர்ந்து வெயிலில் கஷ்டப்படுவான். அவர், கரும்பை மட்டுமில்லை – அவனையும் சேர்த்து பிழிந்தெடுககவே, வாடகைக்கு மெஷின் எடுத்துத் தனியாய் விற்க ஆரம்பித்தான்.

படிப்படியாய் முன்னேறி, பாங்க் லோனும், பார்வதியின் நகையும் சேர்ந்து இந்த மெஷினைச் சொந்தமாய் வாங்குகிற வரையாயிற்று.

கரும்புச்சாறு வியாபாரம் நிரந்தரமில்லை. ஆறு மாதம் பிழியலாம். குளிர் நாளில் போனியாகாது. அந்தச் சமயத்தில் அவர்கள் ஊருக்கு போய் கூலி வேலை பார்ப்பர். வெயில் ஆரம்பித்ததும் திரும்ப வந்து தொழிலை கவனிப்பர். சம்பாதிப்பதையெல்லாம் கோடையிலேயே பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேய்யன் மெஷினைத் தொட்டு வணங்கிவிட்டு கரும்பை உருளைக்கிடையே செருகின போது புரடக்ஷன் மானேஜ ஓடி வந்து “எல்லாம் தயாரா..?”

“தயாருங்கய்யா.”

“நீங்க பாட்டுக்கு ஜோலியைக் கவனிங்க. காமிராவை பார்க்கக்கூடாது யதார்த்தமா இருக்கணும்! கம்பெனிகாரங்களுக்கெல்லாம் ஜுஸ் கொடுங்க மொத்தமா எவ்ளோ ஆச்சுன்னு சொன்னால் சாயந்திரம் கணக்கைத் தீர்த்து விடறேன். என்ன தெரிஞ்சுதா..?”

“சர்ங்கய்யா.

“ஹீரோவும் ஹீரோயினும் இங்கே வந்து கரும்புச் சாறு குடிக்கிற மாதி ஷாட்! அப்புறம் வில்லன் வருவார். அவங்களுக்குள்ளே சண்டை நடக்கும்!”

“நிஜ சண்டைங்களா..?”

“ஏய்… சும்மாரு புள்ள.. !”

மானேஜர் அவளின் முந்தானை விலகின இடுப்பை ஒரு மாதிரி பார்த்துவிட்டு பாக்கை வாயில் கொட்டிக் கொண்டு நடந்தார்.

படப்பிடிப்பு ஆரம்பித்தது. கிளாப்படிக்கப்பட்டு பாடல் ஒலிக்க, ஹீரோவும் ஹீரோயினும் வாயசைத்துக் கொண்டு தெருவில் ஆடிக்கொண்டே வரவேண்டும். பாடல் ஆரும்பித்து காமிரா ஸ்டார்ட்டாகி, “ரெடி டேக்” என டைரக்டர் கத்த, ஹீரோ ஸ்டெப் தவறவிட்டார்.

அடுத்த முறை ஹீரோயின்! அப்புறம் காமிராக் கோணம் பிரச்னை. இப்படியே நாலு வரி பாட்டையே நாற்பது நிமிடத்திற்கு நீட்டினர்.

பார்வதிக்குச் சலிப்பாய் வந்தது. வெயிலில் நிற்கமுடியவில்லை. தலையைச் சுற்றிற்று. காலையில் சாப்பிடாமல் வந்ததில் பசி வயிற்றை கிள்ளிற்று. கண்களை செருகிக் கொண்டு வந்தது.

நேரம் ஆக ஆக கூட்டம் மொய்க்க ஆரும்பித்தது. யார் யார் கம்பெனிக்காரர்கள். யார் வெளியாட்கள் எனத் தெரியவில்லை. ஜூஸ் ரெடியாக ஆக, போனியாயிற்று. கருமபும் கரைந்து சக்கையாயிற்று.

ஆனால் பணம் சேரவில்லை. மெய்யன் ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் எழுதிவைக்க ஆரம்பித்தான். அவனுக்கே கை அசந்து போயிற்று. பரவாயில்லை – இன்று நல்ல வருமானம்தான் என மனது சந்தோஷப்பட்டது. தேற்றிக் கொண்டது.

பார்வதி வியர்த்து வியர்வையில் குளித்துப போயிருந்தாள். உடல் தளரத் தளர சினிமா ஆசை போயிற்று. சூட்டிங் என்றால் இதுதான்… இப்படியா இழுத்தடிப்பார்கள் என்கிற சலிப்பு வந்தது.

அவளுடைய நிலமை அவனைக் கவலை கொள்ளச் செய்தது. “நீ வீட்டுக்கு போ புள்ள போய் இளைப்பாறு.”

“வேணாய்யா. நானும் போயிட்டா நீ தனியாய் என்ன பண்ணுவாய்…எப்படிச் சமாளிப்பாய்…?”

“பரவாயில்லை. நான் சமாளிச்சுகிறேன். புள்ளைத்தாய்ச்சி நீ கஷ்டப்படக்கூடாது. இம்முறையாவது குழந்தை நிலைக்கணும். ரிக்ஷா புடிச்சு நீ முதல்ல கிளம்பு!”

“என்னய்ய அங்கே பேச்சு… தொழிலை கவனி! இங்கே நாலுகிளாஸ் கொடு!”

“எனக்கு ரெண்டு!”

“இங்கே மூணு!”

“இதோ ஆச்சுங்க” என்று கிளாஸ்களை எடுத்துக கொண்டு பக்கத்து பைப்படிக்கு கழுவப் போனவள் அப்படியே சரிந்து விழ – மெய்யன் பதறிப் போனான்.

கரும்புகளைப் போட்டுவிட்டு “பார்வதி” என்று ஓடி அணைத்துக கொண்டான். “பார்வதி.. உனக்கு என்னாச்சு… சொல்லு புள்ள! என்ன பண்ணுது?”

அவள் லேசாய் கண் திறந்து. “எனக்கு ஒண்ணுமில்லைய்யா. சும்மா மயக்கம். அவ்ளோதான்! நீ போய் தொழிலைக் கவனி!”

“யோவ்! ஜுஸ் தரமுடீயுமா முடியாதா?”

“கூப்பிடறாங்க போய்யா!”

“உன்னை இந்த நிலமைல விட்டுட்டு… நான் எப்படி..?”

அதற்குள் புரடக்ஷன் மானேஜர் ஆவேசத்துடன் ஓடிவந்து, “ஏய்! ங்கே என்ன பண்றே…? உன்னால் அங்கே படப்பிடிப்பு லேட்டாகுது.வா!”

“ஐயா.. என் பெண்டாட்டி…!”

“அவளைப் பார்த்தால் ஷாட் என்னாகறது! கழுத்தறுக்காம வா! ஹீரோ வெயிட் பண்றார்.”

“ஐயா.. உங்க கால்ல விபந்து கேக்கறேன்.. அவ பிள்ளைத் தாய்ச்சியா..”

“ஆமா… பிள்ளை தாய்ச்சி! கை நீட்டி அட்வான்ஸ் வாங்கும் போது அதைபத்தி யோசிக்சிருக்கணும்!” என்று இழுத்துப் போய் மெஷினிடம் நிறுத்தினார்.

அவனுடைய கைகள் கரும்பில் இருந்தாலும் கண்களும் நினைப்பும்! பார்வதியின் மேலேதானிருந்தன. பாவிப் பெண்! சினிமா சூட்டிங்குன்னு அலைஞ்சாள். ஆசைபட்டாள்! ஆனால் அதை பார்க்கக்கூட குடுதது வைக்கலியே… ! சூட்டிங்க பார்க்காட்டியும் போகுது. உடம்பு நோகாமலிந்தாலாவது போதுமே! வெயிலில் கிடக்கிறாளே! கடவுளே… குழந்தை.. !

அரைமணி நேரம்தான் அவனால் பொறுக்க முடிந்தது. தரையில் விழுந்து கிடக்கும் பார்வதியைப் பார்க்கப் பார்க்க, ‘சூட்டிங்காவது கீட்டிங்காவது. எனக்கு பெண்டாட்டிதான் முக்கியம்” என்று எல்லாவற்றையும் போட்டுவிட்டு ஓட ஆரம்பித்தான்.

ரிக்ஷா பிடித்து குடிசைக்குள் கிடத்தி முகத்தில் தண்ணீர் தெளித்து அவள் கண் திறக்கவும்தான் மெய்யனுக்குச் சமாதானமாயிற்று.

“இந்தா புள்ளே! கஞ்சி குடி! தெம்பா இருக்கும்.”

குடித்ததும் அவள் எழுந்து அமர்ந்தாள். தலைசுற்றலெல்லாம் இப்போது குறைந்திருந்தது. கண்கள் தெளிவு பெற்றிருந்தன.

“எப்படி புள்ளே இருக்கு..?”

“பரவாயில்லைய்யா. வாப் போவோம்.”

“எங்கே?”

“கரும்பு பிழியத்தான். கைநீட்டி காசு வாங்கிட்டோமே?”

“வேணாம். நீ படுத்திரு. நான் போறேன்.”

“சரி கிளம்புய்யா. உனக்குச் சோறு ஆக்கி எடுத்து வரேன்!”

மெய்யன் தன் மனதைத் தேற்றிக் கொண்டு கடைவீதிக்கு வர, அங்கே கண்ட காட்சி அவனைத் திகிலடையச் செய்தது.

அப்போது சண்டை காட்சி எடுத்தார்கள் போலும். ஹீரோவின் டூப் தாவி வில்லன் மேல் பாய்ந்தார். “ஏழைகள் வயிற்றில் அடிக்கும் பாவியே… நீ ஒழிந்து போ” என்று சொல்லிச் சொல்லி அடிக்க, காமிரா அவர்களை பின் தொடர்ந்தது. கூட்டம் கெக்கலித்தது. ஹீரோயின் விசிலடித்தாள். கூட்டம் கைதட்டிற்று அங்கிருந்த பாத்திரக் கடைகளெல்லாம் நசுங்கின. காய்கள் சொதம்பின. கலர் பவுடர்கள் புகை கிளப்பின. பிளாஸ்டிக் சாமான்கள் தெறித்து விழுந்தன. வில்லன் ஓடிக் கொண்டேயிருந்தான். சைக்கிள் வண்டியைப் பிடித்து தள்ளினான்.

பாட்டில்களை உடைத்தான். அப்பயே ஓடி ஓடி… கரும்புச் சாறு மெஷினிடம் வந்தவன் இந்த பக்கமும் அந்த பக்கமும் நகர, ஹீரோ விடவில்லை.

காமிராவிற்குப் பின்னாலிருந்து டைரக்டர் சைகைகாட்ட, வில்லன் சட்டென மெஷினை தூக்டக தள்ளி விட மெய்யனுக்கு பக்கென்றாயிற்று. படப்பிடிப்பிற்கு வேண்டி அவர்கள் முன்பே அதன் போல்ட்டு நட்டுகளைக் கழற்றி வைத்திருக்க வேண்டும்.

தள்ளின வேகத்தில் மெஷின் பார்ட் பார்ட்டாய் தரையில் சிதறிற்று. “ஐயா..” என்று மெய்யன் அலறிக் கொண்டு சீனுக்குள் நுழைய, இரண்டு முரட்டுகரங்கள் அவனை பிடித்து இழுத்தன.

அதற்குள் மெஷினின் இரும்பு ராடுகள் துவசம் செய்யப்பட்டன. வில்லன் அவற்றை அடித்து நொறுக்க, உருளைகள் நசுங்கி ஓடின.

“ஐயா… என்னோட மெஷின்!”

“அட சும்மாயிருய்யா!”

“ஐயோ! வண்டியை உடைக்கிறாங்களே கேட்பாரில்லையா…?”

“கொஞ்சம் பொறுத்துக்கய்யா.சீன் இப்போ முடிஞ்சிரும்!”

“ஐயோ… என்னை விடுங்க! அது என் உயில்! என் தெய்வம்! பாங்க் லோட் போட்டு வாங்கினதுய்யா. உடைக்காதீங்கய்யா.. உடைக்காதீங்கய்யா! என் வயிற்று பிழைப்பை கெடுக்காதீங்கய்யா..”

மெய்யன் ஓடி ஹீரோவிடம் கெஞ்ச “கட் கட்”

“யார்ய்யா இவனை உள்ளே விட்டது? எனக்கு டயமாச்சு! இழுத்துப போங்கய்யா”

ஹீரோ கத்தவும் நான்கு தடியர்கள் அவன் மேல் பாய்ந்து குண்டுக் கட்டாய் தூக்கிப் போயினர். அவன் முரண்டுபிடிக்க “ஏய்.. என்ன வம்பு பண்ணுகிறாயா… பணம் பத்தாயிரம் வாங்கிட்டு இப்போதகறார் பண்ணினால் என்ன அர்த்தம்?”

“பணமா…பத்தாயிரமா… என்னங்கய்யா சொல்றீங்க..?”

“ஏய்… ! ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்கிறாயா? புரடக்ஷன் மானேஜர் உன்னிடம் பத்தாயிரம் தரலை?”

“இல்லைங்கய்யா”

“பொய் சொல்றான். ஃப்ராடு! சினிமாகாரன்தானே கூப்பாடு போட்டு பணம் புடுங்கலாம்னு திட்டம் போடறான். விடாதீங்க!” என்று ஆளுக்காள் அவனை அடித்துத துவசம் பண்ண—

ஹீரோ மறுபடியும் “ஏழைகளோட வயித்துல அடிக்காதே!” என்று டயலாக் பேசிக்கொண்டு வில்லன் மேல் பாய்ந்து சண்டை போடுவதும் “காட்சி பிரமாதம்” என்று டைரக்டர் பாராட்டுவதும்-

அடிதாங்காமல் நொந்து போய் குற்றுயிரும் குலையியுருமாய்க் கிடந்த மெய்யனின் காதுகளிலும் விழவே செய்தது.

– வானத்ததை தொட்டவன் (மினனூல் வெளியீடு: http://www.freetamilebooks.com)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *