வினையால் ஒரு வெள்ளைப்புறா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 19, 2022
பார்வையிட்டோர்: 3,978 
 
 

லெப்… ரைட்…லெப்… ரைட்…அந்தப் பயிற்சி முகாமின் எண்திசைகளிலும் எதிரொலித்த வண்ணம் இருந்தது. அது பயிற்சி முடித்து வெளியேறும் பொருட்டு ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்ச்சி. மேடையிலே முப்படைத் தளபதிகளுடன் பிரிகேடியர் கபில ரட்னாயக்கவும் கம்பீரமாக நிற்கிறார். அவர் நாட்டின் வடபகுதியான யாழ்ப்பாணத்திலுள்ள அரியாலைப் பகுதியில் பிரிகேடியராகப் பணிபுரிகிறார். நாட்டில் ஏற்பட்ட இனப் பிரச்சினையால் அவசர கால சட்டத்தின் கீழ் சிவில் நிர்வாகப் பொறுப்புக்களையும் அவ்வப் பிரதேசங்களுக்குரிய பிரிகேடியர்களே கவனிக்க வேண்டியிருந்தது.

“சமன்! எங்கட ஏரியாவில் இருக்கிற குடும்ப விபரம் எல்லம் எடுத்தாச்சா?”

“ஓம் சேர். எல்லோருக்கும் ஐ.சி. கொடுக்க வேணும். நாளைக்கு கொடுக்கிறதா கிராம நிலதாரிட்ட சொல்லியிருக்கு சேர்.”

“ஸ்கொட்டில நாலு பேரை வரச் சொல்லு. நான் வெளிய போக வேணும்.”

அவர் தமக்குத் தேவை ஏற்படும்போது பிக்கப்பில் எங்கும் போய்வர முடியும். அவர் பகுதியில் வசித்த அதிபர் ஒருவர் மீது அவருக்கு ஒரு கண். அதிபரின் கணவர் வெளிநாடு ஒன்றில் பணிபுரிகிறார். அதிபரை ஒருமுறையாவது அடைந்துவிட வேணும் என மனதிலே நெடுநாளாக ஆசை. அதிபருக்கு இரு பிள்ளைகள். ஒருவன் ஓ.எல் படிக்கும் மாறன். மற்றவன் ஆண்டு ஆறில் பயிலும் மனோ .

மாறனுடைய நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அரியாலை முகாமில் அவனை தடுத்து வைத்திருந்தார்கள். ஒவ்வொரு நாளும் அதிபர் சாப்பாடு எல்லாம் கொடுத்துவிட்டுப் போவார். பல வழிகளிலும் முயன்றும் அவனை விடுவிக்க முடியவில்லை.

பியந்த…! இனிப் போதும் வீட்டில தேடுவாங்க. நீ போ……. நண்பனின் பேச்சைக் கேட்கக்கூடிய நிலையில் பியந்த இந்த உலகில் இல்லை. அவன் போதை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான். அவன் ஒரு போதைப்பிரியனாகப் படிப்படியாக மாறி வருகிறான். வீட்டிலே ஸ்பெஷல் கிளாஸ் என்ற போர்வையில் தாய் மாலினியை ஏமாற்றி வெளியில் நண்பர்களுடன் சேர்ந்து போதைப் பொருள் பாவிப்பதில் ஈடுபடுவது தினசரியாகி விட்டது. வாழ்வில் பாதியை இழந்த நிலைக்கு அவன் வந்துவிட்டான். அவனுக்கு வீட்டுக் கஷ்டங்கள் ஒன்றும் தெரியாது. தந்தை பெருந் தொகைப் பணத்தை வீட்டுக்கு அனுப்பிவைப்பார். இதைவிட அவ்வப்போது லீவில் வரும்போது நகைகளாகவும், பணமாகவும், பொருட்களாகவும் ஏராளமாகக் கொண்டு வருவார். அவனுக்கு இவற்றைப் பார்க்கும்போது தந்தையின் தொழிலையே தானும் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை உள் மனதில் எழும்.

மனதிலே எழுந்த சோகத்தை அதிபரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை . பிரிகேடியரிடம் பலமுறை சென்று பேசிப் பார்த்தார். பலன் ஒன்றும் இல்லை. அவரின் வார்த்தைப் பிரயோகங்கள் அதிபருக்குப் புதிராகவே இருந்தது. அப்போதுதான் பிரிகேடியரின் உள் நோக்கம் புரிந்தது. இப்படிப்பட்ட கீழ்த்தரமான அதிகாரிகளால் தான் இன்னும் எம் பிரச்சனை தீர்ந்தபாடில்லை என மனதினில் எண்ணிக் கொண்டார்.

திடீரென ஒருநாள் மாறன் வீட்டிற்கு வந்தான். “அம்மா! என்னை விட்டுட்டாங்கள். எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. என்ர ஐ.சி.யை உங்கள வந்து இண்டைக்குப் பின்னேரம் எடுக்கட்டாம்..”

“ஜயா எங்க?”

“மே ஒபீசெக்கே இன்னவா!”

“சேர் குட்ஈவினிங்”

“எண்ட…எண்ட… கோமத?”

“நல்லா இருக்கிறம் சேர். ரொம்ப நன்றி சேர். மகன்ர ஐ.சி. வேணும். எதுக்கு நன்றி? நாங்க செய்யறத செஞ்சிட்ட. இனி நீங்கதான் செஞ்ச வேணும்.”

“என்ன சேர் செய்ய வேணும்?”

“எனக்கு நீங்கதான் வேணும்.” அதிபர் தமிழ்க் கலாசாரத்தில் ஊறிவளர்ந்தபடியால் அன்று முதல் காணாமற் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

பட்டியலை எல்லோரும் பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந் தனர். யார்? யார்? எந்த ஊர்? என்று ஒன்றும் புரியவில்லை . கொழும்பு பஸ் நிலையத்தில்தான் அந்தப் பெயர்ப்பட்டியல் தொங்கிக் கொண்டிருந்தது. ஆனால் விடயம் மட்டும் புரிந்து செய்தி பரவத் தொடங்கியது. கொழும்பு-பதுளை பிரயாணப் பாதையில் புளத்சிங்கள என்ற கிராமத்தால் அந்தத் தனியார் பஸ் போய்க் கொண்டிருந்த போது குண்டு வெடிப்பில் பஸ்சில் பிரயாணம் செய்த அனைவரும் இறந்துவிட்டார்கள் என்பது மட்டும் ஊர்ஜிதமாகிக் கொண்டிருந்தது. க.மாலினி என்ற பெயரை அந்தப் பட்டியல் பரிதாபமாகத் தாங்கிக் கொண்டிருந்தது. பரபரப்பாகச் செய்தி பரவியது.

செய்தியை அறிந்த ஊர் மக்கள் திகைத்தனர். அதிபரும் பிள்ளைகளும் எங்கே போயிருப்பார்கள்? அதிபரின் பரிதாப மரணத்தை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். அதே போல்

மாறனும் மனோவும் எங்கே போனார்கள் என்பதும்?

அவர்களின் பந்து வீச்சுக்கு ஈடு கொடுத்து பியந்தவால் துடுப்பெடுத்தாட முடியாமல் சரியாகக் களைப்புத் தொட்டது. வேகமாக வந்த பந்து ஒன்று அவனின் தலையைத் தட்டிச் சென்றது. அதன் பின் அவனுக்கு நினைவு இல்லை. உடன் அவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான். அவசர சிகிச்சைப் பிரிவு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

இயங்கிக் கொண்டிருந்த வோக்கியை நிறுத்திவிட்டு சிவந்த கண்களும் தொங்கிய தலையுமாகக் காட்சி தந்தார் கபில ரட்ணாயக்கா. செய்திகளின் சிதறல்கள் அவர் இதயத்தை துளைத்துச் சென்றன. சீரான வாழ்வு சிலந்தி வலையாக ஒரு நொடியில் அறுந்ததை எண்ணி மனம் கலங்கினார். பஸ் குண்டு வெடிப்பில் மனைவி மாலினி இறந்தது ஒரு செய்தி. மகன் பியந்த போதைப் பழக்கத்தாலும் விபத்தினாலும் இனிச் சுயமாகச் சிந்தித்துச் செயற்பட முடியாமல் சித்த சுவாதீனமுற்றவனாக மாறிவிட்டான் என்பது மற்றச் செய்தி. இனி நான் மட்டும் வாழ்ந்து என்ன பயன் என எண்ணினார். கலைந்த தேனீக்களாக அவர் மனம் சம்பவங்களைச் சுற்றிச்சுற்றி வந்தது. வீணான பெண்ணாசையும், அதிகாரமும் எனக்கு வினையாக முடிந்ததோ என எண்ணினார்.

எண்ணி முடித்த வாக்குகளின் பெறுபேறுகளின்படி பழைய அரசு மண் கவ்வ புதிய அரசு பதவியேற்றது. புரியாத புதிருக்கு விடை காணும் முயற்சியில் புதிய அரசு முனைப்புடன் செயற்பட்டது. புத்தாண்டுடன் போர் நிறுத்தம் புரிந்து கொண்டார்கள்.

சமன் இன்றைக்கு எங்கட போடரில் இருந்து அவங்கட பொயின்ருக்குக் கிட்டப்போய்க் கதைக்கலாம் எண்டு யோசிக்கிறான்.

ஓம் சேர். அவையளும் நேற்று வந்திட்டுப் போனவைதானே.

அப்ப என்னோட நீயும், காமினியும், ரஞ்சித்தும் ஆம்ஸ் இல்லாமல் வாங்கோ,

ஓ.கே. சேர். சென்றியில அவையோடை கதைச்சுப் போட்டுப் போவோம்.

நல்லது சேர்.

அவர்கள் எதிரே தெரிந்த காவலரணை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார்கள். அந்தக் காவலரணுக்கருகில் பச்சை வரி உடையில் சிரித்த முகங்களுடன் இரு உருவங்கள் அவர்களை வரவேற்கக் காத்திருக்கின்றன. பிரிகேடியர் நெருங்க நெருங்க எங்கோ பரிச்சயப்பட்ட முகங்களாக! ஓ! இது மாறன் மற்றது மனோ. அவரின் மனதில் மங்கலாகப் பழைய சம்பவங்கள். கைலாகு கொடுப்பதற்காக பிரிகேடியர் நகர்ந்த வேளை அந்தத் திடீர் சத்தம் எல்லோர் கவனத்தையும் திசை திருப்பியது. மிதிவெடியில் ஒரு காலை இழந்த நிலையிலும் மாறனின் கைத்தாங்கலில் கபில ரட்னாயக்கா நிமிர்ந்து நிற்கிறார்.

இணைந்த இரு கைகளின் இறுக்கத்திலும் சமாதானத்திற்கான சரித்திரம் வலுப்பெற்றது.

– என் மாதாந்திர ஓய்வூதியம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2012, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *