விடியாத இரவுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 5, 2016
பார்வையிட்டோர்: 7,371 
 
 

சோமசுந்தரம் விரைந்து நடந்தார். வானம் பொத்துக்கொண்டு அழுது வடிந்தது.தலையில் கொட்டும் மழையைவிட எத்தனையோ மடங்கு கண்ணீர் அவர் மனதில் கொட்டிக்கொண்டிருந்தது.’குடைகொண்டு வந்திருக்கலாம்’ இரைந்து பெய்யும் அந்த மழையில் அவர் வாய்விட்டுச்சொன்னது அவரின் காதுகளில் கேட்காமல் தூரத்தில் விழுந்து தெறிக்கிறது.

‘என்ன மழை,என்ன குளிர்,என்ன வாழ்க்கை?’ அவர் மனதில் பல கேள்விகள் தொடர்கின்றன.

‘வெண்ணீறணிந்ததென்ன,வேலைப்பிடித்ததென்ன?’ என்று பக்தியுடன் முருகனிடம் கேள்வி கேட்ட பாடகி சுந்தராம்பாள் மாதிரி,அவரும் கைகூப்பி பரமாத்மாவை வணங்கும் வயதில், தனது மருமகனிடம் கைநீட்டிக் கடன்வாங்கச் சென்றார்.

கடன் கேட்டார்.தர்மசங்கடப்பட்டார். அவர் ஒரு காலத்தில் முன்னுர்று ரு+hபாய் சம்பளத்தில் கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்தபோது, யாழ்ப்பாணம் போகும்போது பாசத்துடனும் ஆசையுடனும் சேர்ட் வாங்கிக் கொண்டுபோய்க் கொடுக்கும்போது மாமாவைச் சந்தோசத்துடன் கட்டிக்கொண்ட மருமகனின் உறவை நினைத்துக்கொண்டு கடன் கேட்கச் சென்றார்.

நினைவுகள் உறுத்துகின்றன.

மனிதத்தையிழந்த மனிதர்கள், உதட்டில் உறவை வைத்துக்கொண்டு,உள்ளத்தில் அன்னியமாகிப்போன இரத்தத் தொடர்புகளின் பொய்மையின் அழுத்தம் அவமானத்தைத் தந்தது.

சோமசுந்தரம் தனது நடையை எட்டிப்போட்டார்.

அவர் வாய் விட்டழுதாலும் இந்த லண்டன் நகரில் யாரும் அக்கறைப்படப்போவதில்லை.

ஊரில் ஒரு காலத்தில்’சோமசுந்தரம் மாஸ்டர்’ என்று மரியாதையுடன் அழைக்கப் பட்டவர்.இன்று அறிமுக அட்டையற்ற ஒரு அனாதை. ஓரு தமிழ் அகதி.அவர் தவழ்ந்த தமிழ் மண்ணிண் வேரிலிருந்து தூக்கியெறியப் பட்ட ஒரு சிறு மரம். அவரால் புரிந்துகொள்ளமுடியாத உலகத்தின் நடுவில் தவிக்கும் ஒரு நல்ல தமிழ் மனிதன்.

நேரத்தைப் பார்த்துக்கொண்டார்.வேலைக்குப்போக நேரமாகிவிட்டது. இவர் வேலை செய்யும் பெற்றோல் செட்டில் இவருடன் வேலை செய்யும் செல்லத்துரை இவனைப் பார்த்துக்கொண்டிருப்பான். இளவயது செல்லத்துரை,வேலை முடியவிட்டு,வீட்டுக்குப்போனதும்;; செய்வதற்கு என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறானோ தெரியாது. இன்று சனிக்கிழமை. யாரோ இந்தியக் கவர்ச்சி நடிகையொருத்தியின் புதுப்படம் வெளிவந்திருக்கிறதாம். இளைஞர்கள் படையெடுப்பார்கள். தன்னையும் படம்பார்க்க வரச் சொல்லிக் கூப்பிட்டார்கள் என்று நேற்றுச் சொன்னான்.

ஓரு மனிதனின் இளமைத் துடிப்பை,இளம் சினிமா நடிகையின் நெழிவிலும் சுழிவிலும் மறக்கும் இளைஞன் அவனில்லை என்று அவருக்குத் தெரியும்.செல்லத்துரைக்கு முப்பத்திரண்டுவயதாகிறது.’இனித்தான் கல்யாணம்பேசுவார்கள்’ என்று தனது நண்பன் ஒருத்தனுக்குச் சொல்லிக்கொண்டிருந்தான்.

அவனும் இவரைப்போலத்தான் ஒரு தமிழ் அகதியாக லண்டனுக்கு வந்து சேர்ந்தான். அவன் வந்து ஏழு வருடங்களாகின்றன. சோமசுந்தரம் வந்து இரண்டு வருடங்களாகின்றன. சோமசுந்தரம் இரண்டு மாதங்களக்கு முன்தான் இந்த பெட்ரோல் ஸ்ரேசனுக்கு வேலைக்கு வந்து சேர்ந்தார்.அதற்கு முன் எத்தனையோ வேலைகள். செக்கியுரிட்டிக்கார்ட்டாக,கடையில் ஒரு எடுபடியாளாக,என்று பல வேலைகள் செய்திருக்கிறார். ஐப்பந்தைந்து வயதில் வாழ்க்கையைத் திருப்பி அழைப்பது என்பது மிகக் கடினமான முயற்சி என்பது லண்டனில் வாழும் ஒரு ஏழைத் தமிழனாற்தான் புரிந்துகொள்ள முடியும்;.

அவர் இன்று லண்டனில் ஒரு அகதியாகவிருக்கிறார்.ஆனால் உண்மையிலேயே ‘இலங்கையிற் தமிழ்’அகதியானது 1977ம் ஆணடுக் கலவரத்தில் என்று நினைக்கும்போது அவர் நெஞ்சை ஏதோ செய்கிறது.

அப்போது அவர் மலையகத்தில் ஒரு அரச நிறுவனத்தில் கிளார்க்; வேலையிலிருந்தார்.1977 தேர்தலின்பின் அரச இயந்திங்களின் பின் உந்துதல்களால்,தமிழர்களுக்கு எதிராக முடுக்கி விடப்பட்ட இனக்கலவரம் பயங்கரமாக வெடித்தது.அதன் விளைவுகள் எழுத்தில் வடிக்கமுடியாதவை.அன்றிலிருந்து தொடர்கிறது அவர்போல ஆயிரக்கணக்கான தமிழர்களின் துன்பம்.

மனிதர்களுக்குத் துன்பம் வந்தால் ஏழரைச்சனி பிடித்திருப்பதாகச் சொல்வார்கள். தமிழர்களுக்கு,அரசியல்வாதிகளால்ச் ‘சனி’ பிடித்துவிட்டது.இனி எப்போது தீருமோ என்று அவர்போலச் சாதாரண தமிழர்களால் கிரகிக்கமுடியாது.

சோமசுந்தரம் பெட்ரோல் செட்டை எட்டி விட்டார்.இவர் முகத்தில் மழையின் துளிகள். கண்களில் சோகத்தின் துளிகள். சோமசுந்தரம் இவனைப் பரிதாபமாகப் பார்த்தான்.’சரியான மழை’ சோமசுந்தரம், வெறும் கைகளால்த் தன் தலையைக் கோதிக்கொண்டார்.

‘தலையைச் சரியாகத் துடையுங்கோ,இல்iயென்டால் தடிமல் பிடித்துப்போடும்’.

செல்லத்துரையின் குரலிருந்த பாசம் இவரின் இருதயத்தைத் தொட்டது.

சோமசுந்தரத்தின் மூத்தமகன் உயிரோடிருந்தால் அவனுக்கும் செல்லத்துரையின் வயதுதானிருக்கும்.

அவரின் மூத்தமகன், 1986ம் ஆண்டு,இலங்கையின் தமிழ்ப்பகுதிகளில், தமிழ் இயக்கங்கள் ஒருத்தரை ஒருத்தர் பலி எடுத்தபோது அவரின் மகனும் பலியானான்.

அவன் திருதி சோமசுந்தரத்தின் கருவில் கனம் கண்டபோது,’இவன் ஒரு ஆண்பிள்ளைதான்’ என்று அந்தத்தாய் பூரித்தாள். எத்தனை சந்தோசம் அவர்களுக்கு? முருக பக்தையான தாய்,@’குமரேசன் என்று பெயர் வைப்போம்’என்று கணவனிடம் கிசுகிசுத்தாள்.’எங்கள் மகனை ஊருலகம் மதிக்கும் நல்ல மனிதனாய்,கருணையுள்ளம் உள்ளவனாய்,கல்விமானாய் வளர்ப்போம்’அவர் அவளை அணைத்தக்கொண்டு பதில் சொன்னார். எவ்வளவு உயர்வான் கற்பனைகள் அவை?

அவைகளைப்பற்றி நினைத்து என்ன பயன் இப்போது?

சென்ற கால நினைவுகள் சிலவேளைகளில் சித்திரவதையாகத்தானிருக்கின்றன.

அவரின் மகன் தங்களுக்குப் பிடிக்காத இயக்கத்துடன் தொடர்பாகவிருந்ததாக,,பலம் பொருந்திய இன்னமொரு தமிழ் இயக்கத்தினர்,அவனைத் துண்டம் துண்டமாக வெட்டிச் சாக்கில் ஒரு மூட்டையாக்கிக்கட்டி சோமசுந்தரத்தின் வீட்டு வாசலில் எறிந்துவிட்டுச்சென்றார்கள்.

அன்று,அந்தப் பிணத்துண்டங்களைப்பார்த்து வெடித்த அவர் இருதயம் இன்னும் நொந்து கொண்டிருக்கிறது. இறப்புக்கள் இயற்கையின் நியதி, ஆனால் அதை செயற்கையான விதத்தில் சில அதர்மவாதிகள் செய்யும்போது தாங்கமுடியாதிருக்கிறது.அது மிக மிகத் துன்பம் தரும் விடயமாகவிருக்கிறது.

அவர்,மழையில் நனைந்த தலையைத் துடைத்துக்கொண்டு உட்கார்ந்தார்.வெளியே மழை ஓய்ந்து கொண்டிருந்தது. ஆடிமாத அனற் சூட்டைத்தவிர்க்க,வருணபகவான் தெளித்த மழைத்துளிகள் பன்னீராய்ப,; பூமித்தாயை முத்தமிட்டுக்கொண்டிருந்தன.இவர் மனதில் அனலாகிக்கொண்டிருக்கும் துன்பத்திற்க யார் நீர் இறைப்பார்கள்?

வெளியுலகை,இரவு மூடத்தொடங்கிவிட்டது. எத்தனையோ கார்கள், ஊர்வலமாகவந்து,பெட்ரோல் செட்டில் பெற்றோல் போடக் காத்து நிற்கின்றன.இருளில்,பெற்றோல் அடித்துவிட்டுப் பணம் தராமற்பறப்பவர்கள் பலர்.செல்லத்துரை தனது வேலையிற் கவனமாக இருக்கிறான். சோமசுந்தரம் தனது வேலையை ஆரம்பித்தார்.அவர் அவனிடம் வேலையைப் பொறுப்பெடுத்துக்கொண்டு அவனைப் போகவிடவேண்டும்.

‘என்ன ஒருமாதிரியாகவிருக்கிறீர்கள்?’அவன் தனது வேலை அவசரத்திலும், சோமசுந்தரத்தை அவதானித்துக்கேட்டான்.அவர் தனது முகத்தைத் தாழ்த்திக்கொண்டார்.ஒன்றாக வேலை செய்தாலும், இவரின் வயதுக்கு மதிப்புக்கொடுத்து,சோமசுந்தரத்தை மரியாதையாக நடத்துவான்.இவர் முகத்தில் பரவிக்கிடந்த சோகம் இவரின் மனதில் படரும் துக்கத்தைப் பிரதிபலித்தது. அவன் இவரது முகத்தை ஏறிட்டுப்பார்த்தான். அவராக ஏதும் சொல்லமாட்டாரா என்ற எதிர்பார்ப்பு அவன் கண்களிற் பிரதிபலித்தன. இருவருக்குமிடையேயுள்ள வயது வித்தியாசம் இருவருக்குமிடையில்; மரியாதை

என்ற போர்வையில் இடைவெளி பிரித்திருக்கிறதா?

‘என்னத்தைச் சொல்ல…?’ அவர் அவனை நிமிர்ந்து பார்க்காமல்,பெருமூச்சு விட்டார்.முகத்தைத் தாழத்திக்கொண்டால் மனத்துயரரை மறைத்துவிடமுடியுமா?

செல்லத்துரையிடம் எனது துயரைச் சொல்ல முடியுமா?

தனது மகன் படிப்பான், உழைப்பான், குடும்பத்தைப்பார்ப்பான் என்ற எதிர்பார்ப்பையெல்லாம், இவர் பேசும் மொழியைப் பேசும் இன்னொரு ஒரு தமிழன்,துப்பாக்கி முனையில் சுருண்டு விழப்பண்ணியபின்,அவர் ஏற்றிக் கொண்ட பல சுமைகளின் பாரத்தின் அழுத்தத்தை இந்த இளைஞன் விளங்கிக் கொள்ள முடியுமா?

முதுமையில,; தன்னைப்பாதுகாத்து நீர் ஊற்றவேண்டிய மகனை இழந்த துன்பத்தை இந்த செல்லத்துரை தீர்த்து வைப்பானா? வெறும் பரிதாபத்தில் என்னை விசாரிக்கிறான்,அதனால் இவனிடம் பரிகாரம் தேடமுடியுமா?

இந்தப் பெற்றோல் செட்டுக்கு வந்தபோது,செல்லத்தரையின் கனிவு அவரைக்கவர்ந்தது.இவனின் வயதுடைய எத்தனையோ இளைஞர்களை அவர் சந்தித்து விட்டார்.எத்தனை வித்தியாசமான மனிதர்களை ஒவ்வொருநாளும் சந்திக்கவேண்டியிருக்கிறது?

லண்டன் பெற்றோல் செட்டுக்களில்,பத்துப்பதினைந்து வருடங்களுக்குமுன் வேலை செய்த,தலைப்பாகைகள் கட்டிய இந்திய சீக்கியர்களையும் பொட்டுவைத்த குஜராத்தியினத்தவரையும்,இவருக்குத் தெரியாது. சோமசுந்தரம் லண்டனுக்கு வந்தபோது,லண்டனிலுள்ள பெற்றோல் செட்டெல்லாம் இலங்கைத் தமிழ் அகதிகளால் நிரம்பி வழிந்தது.

தாயகத்தில் எவ்வளவோ படித்தும்,கவுரமாகவாழ்ந்து வந்த தமிழினம்,சிங்கள இனவிரோதக்கொடுமையால்,; உலகெங்கும் நாடோடிகளாய்ச் சிதறியோடின.அவர்கள் பெற்ற பட்டத்தின் பெயர் ‘தமிழ் அகதிகள்;.அவர்களிற் பெரும்பாலோர் செய்யும்வேலை,செய்யுமிடம் பெற்றோல்செட்ஸ்.தமிழனின் அறிவும், தெளிவும்,நேர்மையும்,தர்மமும்,பெற்றோல் மணத்தில் ஊறி உலர்ந்துகொண்டிருக்கினறனவா?

சோமசுந்தரத்துடன், இலங்கையில், சட்டம் படித்தவர்கள், மருத்துவம் படித்தவர்கள், கணிதமேதைகள்,கல்லூரி அதிபர்களாக இருந்தவர்களெல்லாம்; வேலை செய்திருக்கிறார்கள்.அவர்களைப் பார்க்க இவர் நெஞ்சு நெகிழ்ந்துவிடும்.

இவர்களின் அருமையான படிப்பும் அறிவும்,இரவில்,பனியில்,குளிரில்,வெள்ளையினத்துவேசத்தில் அழிந்துபோகிறதே என்று பெருமூச்சு விடுவார்.இலங்கைத் தமிழனின்; தன்மானம். உலகச் சந்தையின் மலிவுத் தொழிலுக்குள் அழிகிறதா?

படித்தவர்கள் மட்டுமா இங்கெல்லாம் வேலை செய்கிறார்கள்?

இயக்கத்தில் தலைவர்களாக இருந்தவர்கள், எதிரிகளின் தலையைக் கொய்தவர்கள், தலைவருக்கு வால் பிடித்தவர்கள்,எடுபடியாட்களாகவிருந்தவர்கள், ஒரு தமிழ் இயக்கத்தின் பெயரைச் சொல்லகை; கப்பம்; வசூலித்தவர்கள்,கொள்ளைகளில் ஈடுபட்டவர்கள,என்ற பலர் வேலை செய்கிறார்கள்.

சிலர், சிங்கள் இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டவர்கள்,சித்திரவதை செய்யப்பட்டவர்கள்,சிறையிலிருந்து தப்பிக்கப் பட்டவர்கள்,தப்பியோடியவர்கள்,சிங்கள்இனவிரோதிகளுக்குத்’தலையாட்டிகளாக’விருந்து தகவல்கொடுத்தவர்கள்!

அப்பப்பா எத்தனைவிதமான தமிழர்கள!

காசுக்குத் தன்மானத்தை விற்பவர்கள், காட்டிக்கொடுப்பவர்கள், கள்ளப் பெட்டிசம் போடுபவர்கள், தங்கள் தமக்கைகளின் கல்யாணத்திற்காகத்தன் கனவுகளைக்குழி தோன்றிப்; புதைத்துவிட்டுக் காசுக்குத் தங்களை விற்றுக்கொள்பவர்கள்.கவிதை,கட்டுரை, கதைகள் எழுதிக் கற்பனை உலகில் வாழ்பவர்கள்,நல்ல தமிழராக வாழத்துடிப்பவர்கள், நீதிக்குக் குரல் கொடுப்பவர்கள். நியாயத்துpக்காகத் தெருவிலிறங்கி போராட்டம் நடத்துபவர்கள் என்று எத்தனை ரகமான தமிழர்களுடன் அவர் வேலை செய்திருக்கிறார்?

எப்படியோ நல்ல மனிதர்களாக வாழ நினைத்தாலும்,இளமை,பருவம்,சூழ்நிலை,இரவின் மயக்கம்,என்பன எப்படி ஒரு மனிதனை மாற்றும் என்பதையும்,அவர் காணாமலில்லை. எப்படியான உறுதி கொண்ட மனிதனின் ‘சுயமையைச்’சோதிக்கும் பரிட்சை மண்டபங்கள் இந்த பெற்றோல் செட்டுக்கள்.

இங்கு,இரவில் தனியாகப் பெற்றோல் அடிக்கவரும் இளம் பெண்களைக்கண்டு இரகசியமாகச் சீட்டியடிக்கும் ஒழுக்கவாதிகள், உடம்பிலுள்ளு ஒவ்வொரு கவர்ச்சிப் பகுதியையும்,குளிர் என்றும் பாராமல்,வெளிப்பார்வைப் பொருளாக்கும் பெண்களைக் கண்களால் பாலியல் வதை செய்யும் காமவெறியர்கள்;,இரவு பகலாகக் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தில் நடிகை குஷ்புவுக்குக் கோயில் கட்டத்துடிக்கும் தமிழ் இளைஞர்கள்,என்று பல ரகங்களை அவருக்குத் தெரியும்.

மகளுக்குக் கல்யாணம் செய்யக் கஷ்டப்படும் ஏழைத்தகப்பன் சோமசுந்தரம், இளகியமனம் படைத்த இளைஞன் செல்லத்துiர் போன்ற பலரைக்கண்டவை, லண்டன் முழக்கப் பரவிக்கிடக்கும் இந்தப்.பெற்றோல் செடடுக்கள்.

இப்படியான கூட்டமொன்று இல்லையென்றால் இந்தமாதிரிக் கடினமானவேலைகளைச்செய்ய லண்டனில் யார் இருக்கிறார்கள்? ஏழைத்தமிழனின் உழைப்பில் கோடிசோர்க்கும் பணக்காரர்களில் நிறையத் தமிழர்களும் இருக்கிறார்கள் என்பதும் யதார்த்தம்.

‘என்ன ஒரேயடியாக யோசித்துக்கொண்டிருக்கிறீர்கள்?’ செல்லத்துரை சோமசுந்தரத்தை இன்னொருதரம் கேட்கிறான்.

சோமசுந்தரம் சாமான்களைக்கணக்கில் எடுத்துக்கொண்டிருந்தார்.

பெற்றோல் செட் போட்டவர்கள் கோடிஸ்வரன்களாக இருக்கிறார்கள். அங்கு வேலை செய்பவர்கள் உழைத்து உழைத்து ஓடாய்ப்போய்க் கொண்டிருக்கிறார்கள்.

யோசனைகள் நெஞ்சை அழுத்துகின்றன.

‘நான் இறந்துவிட்டால் எனது குழந்தைகளின் கெதி என்ன?’ நினைவுகள் படர்கின்றன.

‘எனக்கு ஏதும் நடக்கமுதல் எனது மகளுக்குக் கல்யாணம் நடக்கவேண்டுமே’ அவர் வாய்விட்டழத்துடிக்கிறார்.

அவளைக் கரைசேர்க்கவேண்டிய தமயன் பிணக்குவியலாக அவர்களின் வாசலிற் தூக்கியெறியப்பட்டபோது துடித்தாளே அந்தத் தங்கை?

அந்தப்பெண்ணின் சாபம் கட்டாயம் பலிக்கும்.பெண்மையின் சாபம் மிக மிக வலிமையானதில்லையா?இவர்களைக் கொடுமை செய்த அந்தத் தமிழ் இயக்கம் மண்ணோடு மண்ணாகிப்போகும்.

இந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் செய்து வைக்க அவர்படும்பாடு அளப்பரியது.

‘லண்டன் மாப்பிள்ளைகளுக்குச் சரியான விலையேறிக்கொண்டு போகிறது.

கனடாவிலிருந்து ஒரு சம்பந்தம் வந்திருக்கிறது;. அங்கேயும் மாப்பிள்ளைகளின் விலைகள் யானைவிலை குதிரை விலைதான்.

ஆனாலும், வந்த இடம் பரவாயில்லாத இடமென்று சொன்னதால்,சோமசுந்தரம் சீதனக்காசுக்கு ஓடித்திரிகிறார்.

அவர் மவுனமாக வேலையிற்கண்ணாகவிருந்தார். ‘நான் வெளிக்கிடவேணும்’செல்லத்தரை புறப்பட ஆயத்தமானான். சோமசுந்தரம் அவனை நிமிர்ந்துபார்த்தார். காலையிலிருந்த இதுவரை வேலை செய்துகொண்டிருந்ததால்,செல்லத்துரையின் முகம் களைத்துக்காணப்பட்டது.

அவனும் கிட்டத்தட்ட சோமசுந்தரம் மாதிரிதான் குடுப்பப் பொறுப்புக்களுடன் வாழ்பவன்.இப்போதுதான் கடைசித் தங்கச்சிக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டு நிம்மதியாகப் பெருமூச்சு விடுகிறான்.

சோமசுந்தரத்தின் தங்கை மகன் வசதியாகவிருக்கிறான். அவனின் தாயக்குக் கல்யாணம் பேசியபோது, தமயன் என்ற முறையில் சோமசுந்தரம் அந்தக்கல்யாணத்திற்கு நிறையச் செலவளித்தார்.தங்கைக்கு மகன் பிறந்தபோது தனக்கு மகன் பிறந்தமாதிரித்தூக்கிக் கொஞ்சி மகிழ்ந்தார்.அவர் அப்போது செல்லத்துரை மாதிர் ஒரு இளைஞன்.தங்கைக்காக, அவளின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்வார். கொழும்பில் வேலைசெய்யும்போது தங்கைக்கு மகன் பிறந்தான். எப்படியோ மிச்சம் பிடித்து அவனுக்குப்பிடித்த விளையாட்டுச் சாமான்களை வாங்கிக்கொண்டுபோவார்.

இன்று அவனிடம் கடன்கேட்கப்போயிருந்தார்.அவன் கைகளை விரித்துவிட்டான். தனது மகளுக்குக் கெதியில் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்ற இவரின் மனக்கோட்டை சரிந்து விட்டது. இனி எப்போது அவளுக்கு ஒரு நல்ல வரன் வருவான்?

இவரின் தங்கை கொழும்பில் இருக்கிறாள். மகனை லண்டனுக்கு அனுப்ப முயன்றபோது,சோமசுந்தரம்தான் அவளை ஊக்கப்படுத்தியும் கடன் வாங்கிக்கொடுத்தும்,அவளின் மகனான,தனது மருமகனை லண்டனுக்கு அனுப்பி வைத்தார்.அதன்பின் இவரும் லண்டனுக்கு வரும் கட்டாயம் வந்தபோது ஏதோ கஷ்டப்பட்டு வந்து சேர்ந்தார்.

‘லண்டனுக்குப் போனால் எல்லோரும் பணக்காரராகி விடுவார்கள்’ தங்கை சொன்னாள் அவளுக்குத் தமயன் லண்டனுக்குப்போனது பெருமை!

அவள் சொன்னது ஞாபகம் வருகிறது.அவள் சொன்னதை நம்பியது எவ்வளவு முட்டாள்த்தனம் என்று லண்டனுக்கு வந்ததும் அவருக்குத் தெரியத் தொடங்கியது. தூரத்துப் பச்சையை நம்பிய தனது முட்டாளத்தனத்தை வெறுத்தார்.

இலங்கையில் நடக்கும் அரசியற் போராட்டம் எத்தனையோ நல்ல மனிதர்களின் ஆத்மிக ஆசைகளைக் குழிதோன்றிப் புதைத்துவிட்டது.இலங்கையிற் தொடரும் அதர்ம வெறியால் தார்மிக நோக்கங்கள் தலைகெட்டு ஓடிவிட்டன.குடும்ப உறவுகள் சிதைந்து விட்டன. மண்ணிலிருந்து மனிதன் துரத்தப்பட்டதும் ‘மனிதமும் துரத்தப்பட்டு விடுமா?

பணப்பைத்தியம் பிடித்த சில தமிழர் தம்மையே அந்த வெறிக்குள்ச் சிறைபிடிக்கப்பட்டதை லண்டனில் கண்ட சோமசுந்தரம் திடுக்கிட்டார். பாசங்கள் விலைபேசின.பகுத்தறிவு ஏலம்போடப்பட்டது.

செல்லத்தரை தனது ஓவர்க்கோட்டை மாட்டிக்கொண்டு புறப்படத் தயாரான்.

;உங்களுக்குச் சுகமில்லையா?’ அவன் இன்னொருதரம அவரைக் கேட்டான்.இவர் சோர்ந்து போயிருக்கும் நிலையில் அவரைத் தனியாக விட்டுச் செல்ல அவன் மனம் இடம் கொடுக்கவில்லை.

‘ஏன் இந்த மனிசன் பேய்பிடிச்ச மாதிரி இருக்கிறார்?’ அவன் தன்னைத்தானே கேடடுக்கொண்டான்.

அவருக்கு அவனின் பாசக்குரல் மனதை நெகிழப்பண்ணியது.அவனிடம் தனது வேதனையைச் சொல்லியழாவிட்டால் மனம் வெடிக்கும்போலிருந்தது.ஆனால் அந்த இளைஞனிடம் தனது இல்லாமையை உணர்த்த மனம் தயங்கியது.சொற்கள் தொண்டைக்குட் சிக்கின.உணர்வுகள் இருதயத்தைக் குடைந்தன.

‘மிகவும் சேர்வாக இருக்கிறியள்’ அவன் மெல்லமாகச் சொன்னான்.’ என்னைப் பற்றிக் கவலைப்படாமல் நீ வீட்டபோ, உன்ர சினேகிதன்கள் காத்திருப்பான்கள்’அவர் அவனிடம் அன்புடன் சொன்னார். ‘நான் போகப் பிந்தினால் அவர்கள் எனக்காகக் காத்திருக்காமல் படத்திற்கும் போயிருப்பார்கள்…என்ன பிரச்சினை உங்களுக்கு?’ அவன் இவரை உற்றுப்பார்த்தபடி கேட்டான்.

அவர் மறுமொழி சொல்லவில்லாமல் வெளியே இருட்டில் தன் பார்வையையைத் துழாவ விட்டார். உலகம் தன்னை இருள்ப்போர்வையால் இழுத்து மூடத் தொடங்கி விட்டது. பல கார்கள் வந்து பெற்றோல் போட்டுக்கொண்டுபோகின்றன. அவரது கைகள் இயந்திரம்போல் பணமாற்றங்களைச் செய்துகொண்டிருக்கின்றன.

‘ஊரிலிருந்த ஏதும் கடிதம் வந்ததா?’

‘இல்ல தம்பி…’ அவரால் மேற்கொண்டு பேசமுடியவில்லை. தனது இல்லாமையை அவனிடம் சொல்ல மனம் கூசியது.

‘ மருமகனிடம் கடன் கேட்கப்போயிருந்தன்..அவன் ஏலாது என்டு சொல்லிப் போட்டான்.அவன நம்பியிருந்தன்..அதுதான் மனம் சோர்ந்து போயிற்று’அவர் துக்கம் தாளாமற் சொன்னார்.

‘யாரையும் லண்டனுக்குக் கூப்பிடப்போறியளா?’

‘ இல்ல தம்பி, என்ர மகளுக்குக் கல்யாணம் பேசிவந்தது.அதுதான்..நல்ல இடம்..சரியா வந்தா மகள் சந்தோசமாக இருப்பாள் என்று யோசிச்சன்’ ஒரு தமிழ்த் தகப்பனின் தேம்பல் அவனை நிலைகுலையப் பண்ணியது.வெட்கம் விட்டழும் பாசம், இப்படியா தமிழினம் பேரம் பேசவேண்டும்?

செல்லத்துரை ஒன்றும் பேசவில்லை.வெளியில் மழை பெய்யத் தொடங்கி விட்டது.

இருவரும் மவுனத்துடன் மழையை வெறித்துப்பார்த்தனர்.

‘சரி நீ போ..மழை கூடப்போகுதபோலக் கிடக்கு’

‘என்னிட்டக்காசிருந்தா நான் தருவன். என்ர நிலை உங்களுக்குத் தெரியும்தானே..இப்பதான் தங்கச்சிக்குக் கல்யாணம் நடந்தது’.

அவன் குரலில் உண்மையான பரிதாபம்.

இப்படி நான்கு தமிழர்கள் இருந்தால் தமிழ் உலகம் தலைநிமிர்ந்து நிற்கும். தாயகத்தை விட்டு ‘அகதி’யாக அவன் ஓடிவரும்போது,அடிப்படை மனித உணர்வுகளை அவன் அகதியாக்கவில்லை.

‘உன்ர நிலை எனக்குத் தெரியும்..நீ போ அப்பா’ அவர் அவன் முதுகில் பாசத்துடன் தட்டிக்கொடுத்தார்.அவர் மகன் ஞாபகம் வந்தான்.

‘மன்னிச்சுக்கொள்ளுங்கோ’அவன் இருளில் இறங்கிப் போய்விட்டான்.

இந்த இளைஞனை இரண்டு மாதங்களாகத்தான் அவருக்குத் தெரியும்.முன்பின் தெரியாத சோமசுந்தரமும் செல்லத்துரையும் ஒருத்தரை ஒருத்தர் புரியத் தொடங்கினர்.கடந்த இருமாதங்களாக அவர்கள் இருவரும் ஒருத்தருடன் ஒருத்தர் தங்கள் தனிப்பட்ட விடயங்களைப்பற்றிப் பேசிக்கொள்ளவில்லை.

அவன் ஒரு கண்ணியமான இளைஞன் என்பதை சோமசுந்தரத்தின் முதுமையான அனுபவம் கண்டுபிடித்தது.

இரவு நீண்டு கொண்டிருந்தது. வெளியில் ஒருத்தன் பெற்றோல் அடித்துவிட்டுப் பணம் கொடுக்காமல் ஓடிவிட்டான்.இவர்தான் தனது சம்பளத்தில் அந்தப் பணத்தைக் கொடுக்கவேண்டும்.

எடுக்கும் சம்பளமோ மிச்சம் பிடிக்க முடியாத சம்பளம். இந்த இலட்சணத்தில் இந்த அதர்மவாதிகள் இந்தக் கொடுமை செய்கிறார்களே.

வெளியில் ஏதோ ஒரு சத்தம் யாரோ குடிவெறியில் சத்தம் போடுக்கொண்டிருந்தார்கள்.இப்படித்தான் இரண்டு கிழமைக்கு முனனும் பெரிய சத்தம் கேட்டது. காலையிற் பார்த்தால்,யாரோ ஒருத்தன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தான்.போலிசார் வந்து,’ இரவில் இந்தப் பக்கம் சண்டை பிடித்த யாரையும் பார்த்தாயா?’ என்று சோமசுந்தரத்தைக் கேட்டார்கள்.

இரவின் அதர்மங்களை எத்தனைபேர் பார்க்கிறார்கள்?

ஓருசிலர் சேர்ந்து சண்டை பிடிப்பதுபோன்ற சத்தம் கேட்டதாக சோமசுந்தரம் சொன்னார். கொலை செய்யப்பட்டவன்,இந்தப் பெறு;றோல் செட்டுக்கு வந்து சாமான் வாங்கும் ஒரு ஏழை. அவன் ஏன் கொலை செய்யப்பட்டான் என்பது இவருக்குப் புரியாத புதிராகவிருந்தது.

லண்டனில் ஒரு நாயைக் கொடுமை செய்தவனைக் கண்டுபடித்துத் ஜெயிலிற் போட்டு தண்டனை கொடுக்கிறார்கள். ஆனால் அந்த ஏழை கறுப்பு மனிதனைக் கொலைசெய்தவனைக் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

பிரித்தானியாவில்,பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் உள்ள பாதுகாப்பு சில வேளை மனிதர்களுக்கிருப்பதில்லை.லண்டனில் நடக்கும் விடயங்களை அலசிப்பார்த்தால் பைத்தியம் பிடித்துவிடும்.

இரவின் தனிமையில் அவரின் மனதிலுள்ள குடும்ப துக்கம் கொடுரமாக வதைக்கிறது.ஊரில் இவர் மனைவி, தங்கள் மகளின் கல்யாணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்துவதற்கான கனவுகளுடன் செயல்படுகிறாள்.வசதியாக வாழும் சோமசுந்தரத்தின் குடும்பம் உதவி செய்யும் என்ற நம்பிக்கையுடனிருக்கிறாள் அவள்.

நாளைக்கு அவளுக்கு எப்படி ஒரு விரிவான கடிதம் எழுதுவது என்று அவருக்குத் தெரியவில்லை.அவள் கொழும்பிலிருந்துகொண்டு றிவேர்ஸ் சார்ச்சில் டெலிபோன் பண்ணிக் கொண்டிருக்கிறாள்.பல விடயங்களை டெலிபோனிற் சொல்ல முடியாது.அவரின் சிந்தனையைக் கலைப்பதுபோல் டெலிபோன் மணியடித்தது.

‘என்ன இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா?’ செல்லாத்துரை அடுத்தமுனையிலிருந்து கேட்டான்.

‘என்ன தம்பி செய்யுறது? யோசனையும் துக்கமும்தான் ஏழைகளின் பொழுது போக்காய்ப்போச்சு.பணக்காரன் எதையும் வாங்கலாம் நான் ஏழை,யோசிக்கிறதைத் தவிர வேறென்ன செய்ய?’

‘உங்கட மகளுக்கு எத்தனை வயது?’ செல்லாத்துரையின் குரலிற் தயக்கம்.

‘இருபத்தியாறாகப்போகுது’ சோமசுந்தரத்தின் குரலில் கண்ணீர் கலந்திருந்தது.

‘……………….’செல்லத்துரையிடமிருந்து ஒரு கொஞ்ச நேரம் மவுனம்.

‘ஏன் கேட்டாய் தம்பி’

‘எனக்கு வயது முப்பத்திரண்டு….’செல்லத்துரை அடக்கமாகச் சொன்னான்.

இருவரும் கொஞ்ச நேரம் பேசிக்கொள்ளவில்லை.செல்லத்துரை என்ன சொல்லப்போகிறான் என்று சோமசுந்தரம் யோசித்தார்.

‘உங்களுக்குச் சம்மதமென்டால் நான் உங்கட மகளைக் கல்யாணம் செய்யுறன்…நான் சீதனம் கேட்கமாட்டன்..’ செல்லத்துரை இப்படிச் சொல்வதற்குப் பல தடவைகள் ஒத்திகை பார்த்தமாதிரித் தெளிவான குரலிற் சொல்லி முடித்தான்.

சோமசுந்தரத்திற்கு அழுகைவரும்போலிருந்தது.

தமிழ்ச் சமுதாயத்தில் இப்படியும் நடக்குமா? அவர் உணர்ச்சி வசப்பட்டாh.

தமிழ்க்குடும்பங்களில் பெண்களாகப் பிறப்பது,இப்படி பாவத்துக்கும் பரிதாபத்துக்கும் பேரம் பேசப்படவா? கலாச்சாரத்தின் பெயரில், பண்பாட்டின் பெயரில் மனித தொடர்புகள் இப்படி பண்டமாற்றம் செய்யப்படலாமா? உலகம் நின்று நிலைக்க, உயிர்களின் படைப்பைத் தரும் பெண்மை தெய்வீகமில்லையா?தாய்மைதான தர்மத்தின் அத்திவாரமில்லையா?

சோமசுந்தரம் மவுனமாகவிருந்தார்.

‘நான் யாரையோ கல்யாணம் செய்யத்தான்வேணும்,…அம்மா விடமாட்டா…கெதியில கல்யாணம் பேசுவா…மன்னிச்சுக்கொள்ளுங்கோ…உங்களை நான் உங்கள் மனம் புண்பட ஏதும் சொல்லியிருந்தால் தயவு செய்து மன்னிச்சிக் கொள்ளுங்கோ’செல்லத்துரையின் குரலில் நேர்மை.

‘தம்பி…உங்களுக்கு என்ர மகளைத் தெரியாது..’அவர் தடுமாற்றத்துடன் சொன்னார்.

‘கனடா மாப்பிள்ளைக்கு உங்களின்ர மகளைத் தெரியுமா? உங்களைத் தெரியுமா? உங்கள் குடும்பத்தைத் தெரியுமா, நீங்க கொடுக்கப்போகம் சீதனம் மட்டும்தானே தெரியும்? எனக்கு உங்களைத் தெரியுமே..உங்கள் குடும்ப நிலை ஒரளவு தெரியும்…’ஆணித்தரமானகுரலிற் சொல்கிறான் செல்லத்துரை.

‘தம்பி,உங்களுக்கு என்ர குடும்பத்தைப்பற்றித் தெரியாதே’சோமசுந்தரம் என்ற கண்ணியம் கேள்வி கேட்கிறது.மனிதம்,தார்மீகம் என்பவற்றை மதிக்கும் தர்மம் குரல் எழுப்புகிறது.

‘நாங்கள் எல்லோரும் தமிழர் என்பதைத்தவிர எனக்கொன்றும் தெரியத்தேவையில்லை.இலங்கையில் சிங்களவன் எங்களுக்கு கொடுமை செய்யும்போது,எங்களின்ர பட்டங்கள், படிப்புக்கள், சாதிகள், வர்க்கங்கள் பார்த்தா கொடுமை செய்தான்?,கொலைசெய்தான்,அழித்தான்,நாங்க தமிழர்கள் மட்டும் ஏன் எங்கள எப்போதும் பல மாதிரியும் பிரிச்சுப் பார்க்கிறம்?சாதி பார்க்கிறம்,பிராந்தியம் பார்க்கிறம், பட்டம் படிப்பு என்று பார்க்கிறம்’அவனின் கேளிவிகள் நீதிதேவையின் அம்புகளாயப் பாய்ந்தன அவனுடைய தகப்பன் சிங்கள இராணுவத்தால் கொலைசெய்யப்பட்டவர் என்று அவருக்குத் தெரியும்.

சோமசுந்தரத்தால் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

இரவின் அமைதியில் அவர் யோசித்தார்.அவன் டெலிபோனை வைத்துவிட்டான்.அவர் குழம்பிவிட்டார்.

செல்லத்துரை பக்கத்திலிருக்கும்போது,ஏன் ஒரு நல்ல மாப்பிள்ளைக்கு உலகத்தை வலம் வந்தாh.;?

அவரின் மகள் மாலதியை,செல்லத்துரையின் அருகில் மணப்பெண்ணாக வைத்துக் கற்பனை செய்துபார்த்தார்.மாலதி தன் தமயனை இழந்து துடித்தழுதபெண்.இதுவரையும் மகனின் இழப்பால் மனமுடைந்து வாழும் தாய்க்கு அன்பான பணிவிடைகள் செய்துகொண்டு ஏதோ நிம்மதியாக வாழ்கிறாள்.அவளை யார் திருமணம் செய்வார்? எப்படி நடத்தப்படுவாள்? கல்யாண சந்தையில் ஏதோ ஒரு பணவெறிபிடித்த மிருகம் இவளைத் தன் உடமையாக்கப் போகிறதோ என்று சோமசுந்தரம் பயந்துகொண்டிருந்தார்.

அவரின் பிரார்த்தனைக்கு இன்று ஒரு நல்ல பலன் கிடைக்கப்போகிறதா?

மகள் மாலதி அதிர்ஷ்டசாலி.அவர் தனக்குள்ச் சொல்லிக்கொண்டாh.

அவர் இயந்திரம்போல் வேலை செய்துகொண்டிருந்தார். நடு இரவில்,கஞ்சாவெறியில் வந்த ஒரு கறுப்பு இளைஞன் இவரைக் காரணமின்றிக் கன்னா பின்னா என்று திட்டினான். படுமோசமான வார்த்தைகளை அடைமொழிகளாக்கி,இடைக்கிடை பாக்கி,பாக்கி,(பாகிஸ்தானி) என்றும் உரத்துக் கத்திக்கொண்டிருந்தான்.

அவனுக்குத் தன்னைக் கீழ்த்தரமாக நடத்தும் வெள்ளையினத்தவர்களில் ஆத்திரமாகவிருக்கவேண்டும்.அந்த ஆத்திரத்தில், பெட்ரோல் செட்டில்,அர்த்தராத்திரியில் கண்ணாடித் தடைக்கப்பால் இருந்துகொண்டு வாடிக்கையாளரிடம் பணவரவு பட்டுவாடா செய்யும் அப்பாவித்தமிழன் சோமசுந்தரத்தைக் கண்டபாட்டுக்குத் திட்டினான்.

‘நான் பாகிஸ்தானிலிருந்து வரவில்லை,சிறிலங்காவிலிருந்து வந்திருக்கிறேன்’ கஞ்சாவெறியிலிருப்பவனுக்குச் சரித்திரம் சொல்ல சோமசுந்தரம் முயன்றால் அது நடக்குமா?

‘அப்படியானால் நீ ஒரு சிறிலங்கன் பாக்கி’ கஞ்சாவெறியன் கத்தினான்.

இவனுடன் பேசி என்ன பிரயோசனம்? வெறி ஏறிய மூளையில் நல்ல விடயங்கள் ஏறுமா?இவனுக்கும் பணவெறிபிடித்த மருமகனுக்கும்,சீதனப்போராசை பிடித்த கனடா மாப்பிள்ளைக்கும் என்ன வித்தியாசம்?

இவர்களெல்லாம் ஏதோ ஒரு வெறியிற் தங்களை மறந்து விடுகிறார்களே? ஏதோ ஒரு போதையில், கண்ணியத்தை,மனிதத்தை.கவுரவத்தை மறந்துவிடுகிறார்களே?

வெறியில் கத்தியவன் போய்விட்டான். ஆனால் அவன் உதிர்த்துவிட்ட வார்த்தைகள் உருவம்பெற்று, இரவில் மறைந்திருந்து இவரைப் பரிகசிப்பது போலிருக்கிறது.

என்ன வாழ்க்கையிது? மனித மேப்பாட்டுச் சிந்தனைகள், தங்கள் அடையாளத்தையிழந்து,அவமதிப்பை வாழ்க்கையாகிக்கொண்டுவிட்டதே.இரவு நீண்டுகொண்டுபோனது. இயந்திரமாக இயங்கினார் சோமசுந்தரம்.

விடிந்தது.

செல்லத்துரை வேலைக்கு வந்தான். அவன் முகத்தில் தயக்கம்.இவரைப்பார்க்காமல்த் தன் கடமையிற் கண்ணாகவிருந்தான். சோமசுந்தரத்தார்,அவனைப் பார்க்கும்போதெல்லாம் இறந்து விட்ட தனது மகன் குமரேசனின் முகம் ஞாபகம் வருவதைத் தடுக்கமுடியவில்லை.

குமரேசன் உயிரோடிருந்தால் செல்லத்துரைமாதிரி ஒரு நல்ல மனிதனாக,நல்ல தமிழனாக வாழ்ந்திருப்பானா? கவுவரமும் முற்போக்குக்குணங்களுமுள்ள செல்லத்துரைமாதிரி அவனின் சிந்தனைகளும் வளர்ந்திருக்குமா?

சுpங்கள இனவிரோதத்திற்கு எதிராகப் பிறந்த நாட்டை விட்டு ஓடியிருப்பானா? ஓடிய இடங்களில் உண்மைக்காகப் போராடியிருப்பானா?

அவருக்க விளக்கம் தெரியாது.

அவரின் இரவு வேலை முடிந்து விட்டது. வீட்டுககுப்போகப் புறப்படமுதல்,’தம்பி….’என்று செல்லாத்துரையை அழைத்தவர் மேலும் என்ன சொல்வது என்ற தெரியாமல்த் தயங்கினார்.

அவன் இவரைத் தயக்கத்துடன் பார்த்தான்.இவர் மனத்தைப் புண்படுத்திவிட்டேனோ என்ற பாவம் முகத்திற் தெரிந்தது. இருவருக்குமிடையில் ஏதோ ஒரு பெரிய இடைவெளியிருப்பதாக இருவரும் உணர்ந்தாலும்,அதை யார் முதலிற்கடப்பது என்ற யோசனை இருவர் மனதிலும் நிழலாடியது.

‘தம்பி..நீங்க என்னில் பரிதாப்பட்டு உங்கள் முடிவுக்கு வந்தீர்களா?..அல்லது…’ அவர் தயங்கினார்.

‘அல்லது என்றால் என்ன? எனக்கும் யாரோ முன்பின் தெரியாத பெண்ணைத்தானே பார்க்கப்போயினம்?அதை விட எனக்குத் தெரிந்த ஒரு நல்ல மனிதரின்ர மகளைச் செய்யலாமே என்று யோசித்தன்.’அவன் தெளிவாகச் சொன்னான்.

‘கடவுள் இருக்கிறார் தம்பி’

‘கடவுள் இருந்தால் எங்களுக்கு ஏன் இவ்வளவு கொடுமை நடக்கிறது?’ அவன் வெறுப்புடன் சாமான்களை எடுத்துப்போட்டான்.’மனிதன் உண்டாக்கிய கடவுளை மீறி யார் என்ன செய்யமுடியும்?’ அவன் தனக்குத்தானே பேசக்கொள்வதுபோல் சொன்னான்.

‘தம்பி,உங்களைப்போல் நூறு தமிழர்களிருந்தால் எப்படியும் எங்களுக்கு விடிவுவரும்’ சோமசுந்தரம் உணர்ச்சி வசப்பட்டுச் சொன்னார். செல்லத்துரை மறுமொழி சொல்லவில்லை.

முதலாளி வரமுதல்,எத்தனையோ வேலைகள் செய்யவேண்டும்.வாழ்க்கை தொடரும். அவன் ஒரு சாதாரண தமிழன்.தர்மங்களைத் தெரிந்துகொள்ளவும் அதன்படி முடியுமானால் நடந்துகொள்ளவும்; தயங்காதவன் என்பது மட்டும் அவனுக்குத் தெரியும்.

(யாவும் கற்பனையே)

– நாழிகை பிரசுரம் லண்டன்-செப்டம்பர் 1994

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *