விசுவாசம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 13, 2012
பார்வையிட்டோர்: 8,265 
 
 

சாமானிய மக்கள் வாழும் குடிசைகளின் பக்கமாகக் கேட்ட அந்தக் குரைப்புச் சத்தம் வித்தியாசமாக இருந்தது. இதற்குமுன் எப்போதும் கேட்டறியாதது போன்ற ஒரு வசீகரத் தன்மை கொண்டு மக்களை ஈர்த்தது. முதலில் அது வழக்கமாக எப்போதும் கேட்டதுதான் என்பது போல மக்கள் அதைப் பொருட்படுத்திக் கொள்ளாமல் இருந்தார்கள். பின் சத்தம் வேறு மாதிரி இருக்கவே அது பற்றி ஆறிய ஆவல் கொண்டவர்களாகத் தங்கள் குடியிருப்புகளின் தட்டிப்படல்களையும், சாக்குப் படுதாக்களையும் திறந்து கொண்டு வெளியே வந்து பார்த்தார்கள். ஒட்டிய வயிறுகளுடன் எலும்பும் தோலுமாய்ப் பஞ்சடைந்து கண்களோடு காட்சி தந்த அவர்கள் செவிக்கு சத்தம் மட்டும்தான் கேட்டதே தவிர அது எங்கிருந்து வருகிறது என்பது தெரியவில்லை.

சத்தம் வரவர மிக அருகில் கேட்பதாக இருந்தது. தெருமுனையில் அதன் தோற்றம் தெரிய பலரும் அதை ஆவலுடன் பார்த்தார்கள். செம்பழுப்பும் கருமையும் கலந்த நிறத்துடனும் இவர்களைப் போலவே வத்தலும் தொத்தலுமாக மெலிந்த தோற்றத்துடனும் காட்சி தந்த அது அது பாட்டுக்கு குரைத்துக் கொண்டு போனது. தலையை மட்டும் உயர்த்தி இருபுறமும் இருந்து, குடியிருப்புகளைப் பார்த்துக் குரைத்தது. அது என்ன குரைத்துக் கொண்டு போகிறது? ஏன் குரைத்துக் கொண்டு போகிறது? என்பது எவருக்கும் புரியவில்லை. என்றாலும் அதன் குறைப்பு எல்லோரையும் கவனிக்க வைப்பதாய் இருந்தது.

தினம் அது காலை மாலை இரண்டு வேளையும் வந்து குரைத்து விட்டுப்போனது. காலையில் மக்கள் அனைவரும் வேலைக்குப் போகும் முன்பும், மாலையில் வேலை முடிந்து திரும்பிய பின்னுமாக அது வந்து குரைத்து விட்டுப் போனது. முதல் சில நாட்கள் தெருவோடு குரைத்துக் கொண்டு போன அது பிறகு, வீடு வீடாக நின்று வீட்டிலுள்ளவர்களை நோக்கி ஏதோ சொல்ல முனைவது போல குரைக்கத் தொடங்கியது. மார்கழி மாதத்தில் வீட்டுக்கு வீடு வந்து சேதி சொல்லி விட்டுப் போகும் குடுகுடுப்பைக்காரனைப் போல இதுவும் வீடு வீடாக ஏறி இறங்கிக் குரைத்து விட்டுப் போவதை மக்கள் விசித்திரத்துடன் பார்த்தார்கள். சிலர் இதன் குரைப்பில் ஏதாவது சேதி இருக்கலாம் என்றார்கள்.

அது எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது, இவ்வளவு காலம் எங்கே தங்கியிருக்கிறது? என்பது பற்றியெல்லாம் எவருக்கும் தெரியவில்லை. சிலர் இவ்வளவு காலமும் அது ஊர் முகப்பின் வண்டிப்பாதையோரம் இருந்த இலுப்பை மரத்தடியிலோ அல்லது இடிந்து போய்க் கிடக்கும் பொதுச் சாவடியின் குட்டிச் சுவர் ஒரத்திலோ படுத்துக் கிடந்ததாகச் சொன்னார்கள். வேறு சிலர் அது ஊர்ப்பொதுக் கழிப்பிடமாக விளங்கிய குளத்து மேட்டுப் புளியத் தோப்பிலேயே பலகாலம் திரிந்து கொண்டிருந்ததாகவும் பின் ஊருக்குப் புதிதாக வந்திருந்த தாடிக்கார சந்நியாசி தோப்புக்குச் சென்ற போதெல்லாம் இதுவும் உடன் சென்றதாகவும் அதிலிருந்துதான் ஏதோ அருள் வாக்குப் பெற்றது போல் ஊருக்குள் வந்து குரைத்துக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள்.

அதன் பூர்வீகம் என்னவாயிருந்த போதிலும் அதன் குரைப்பு சிறப்பாயிருப்பதாகப் பலராலும் பாராட்டப் பெற்றது. அதன் தோற்றத்திற்குச் சற்றும் பொருத்தமில்லாத கணீர்க்குரலில், சீரொழுங்கான ஓசைநயத்தில், ஆற்றொழுக்குப் போன்ற வெளிப்பட்ட அதன் குரைப்பு பலருக்கும் பிடித்திருந்தது. அதன் குரைப்பைக் கேட்பதற்கென்றே பலர் காலையில் கண் விழித்து தெருத் திண்ணையிலே அமர்ந்து அதன் வருகைக்காகக் காத்திருந்தார்கள். அதன் குரைப்பைக் கேட்ட பிறகே மற்ற தங்கள் அன்றாட வாழ்வின் அலுவல்களைத் தொடர்ந்தார்கள் அல்லது இரவு படுக்கச் சென்றார்கள்.

வீடுவீடாக நின்று குலைத்து விட்டுப்போன அது ஒருநாள் மாலை வேளையோடு வந்து குரைத்து வீட்டிலுள்ளவர்களின் ஆடையைப் பற்றித் தெருவுக்கு இழுத்தது. சிலருக்கு அது பிடிக்காமல் தங்கள் ஆடைகளை விடுவித்துக் கொண்டு அதை விரட்டினார்கள். சிலர் என்னதான் செய்கிறது பார்ப்போம் என்பது போல அதன் இழுப்புக்கு இணங்கி தெருவுக்கு வந்தனர். அது ஒவ்வொரு வீடாகப் போய் இப்படிப் பலரைத் தெருவுக்கு இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தியது. பிறது எல்லோரையும் பார்த்து மறுபடியும் குரைத்து சிலரின் ஆடைகளைப் பற்றி இழுத்துக் கொண்டு தெருவில் நடந்தது. முன்னே செல்லும் அதை பலரும் ஒருவருக்கொருவர் கேள்விக் குறியோடு நோக்கியபடி பின் தொடர்ந்தார்கள்.

எல்லோரையும் அழைத்துக் கொண்டு சென்ற அது ஊர்ப் பொது மைதானத்தின் அரச மரத்தை அடைந்து அங்கிருந்த மண்மேடையில் ஏறியது. சுற்று முற்றும் எல்லோரையும் ஒரு முறை பார்த்து மீண்டும் குரைப்பைத் தொடங்கியது. அதன் குரைப்பைக் கேட்டவர்கள் அது மிக அழகான, சிறப்பான குரைப்பு என்றும் சாமானிய மக்களின் நலனுக்காகவே அது குரைக்கிறது என்று இதுபோன்ற குரைப்பை தாங்கள் யாரும் இதற்குமுன் எப்போதும் கேட்டதில்லை என்றும் பாராட்டினார்கள். அதோடு குரைப்பின் நடு நடுவே அடிக்கடி கை தட்டியும் விசிலடித்தும் ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

இப்படிப் பலரும் அதன் குரைப்புக்குச் செவிசாய்க்க நாளாவட்டத்தில் அக் குரைப்பைக் கேட்பதற்கான கூட்டம் பெருகியது. எங்கும் அதன் குரைப்பு பற்றியே பேச்சாயிருக்க அக்குரைப்பின் பேரால் மன்றங்கள் தொடங்கப்பட்டன. எல்லோரும் மந்திரத்தால் கட்டுண்டவர்கள் போல் அதன் குரைப்புக்கு ஆட்பட்டு அதன் குரைப்பைக் கேட்பதிலேயே பித்தாய்த் திரிந்தார்கள்.

ஒருநாள் தன் குரைப்பை முடித்து கீழே இறங்கிய அது மறுபடியும் எல்லோரது ஆடையையும் பிடித்து இழுத்து விட்டு வேறொரு திசை நோக்கி நடக்கத் தொடங்கியது. மக்கள் முதலில் புரியாமல் நின்று திகைத்தாலும் பிறகு ஏதோ முக்கிய சேதியாகவே அது அழைப்பதாகக் கருதி அதன் அழைப்புக்குக் கட்டுப்பட்டவர்கள் போல எல்லாரும் பின்னால் நடந்தார்கள்.

சாமானியர்களின் குடியிருப்பையொட்டியிருந்த அறுவடையாகிக் காய்ந்த பொட்டல் வெளிகளையும் பண்படுத்தப்படாது கரம்பாய்க் கிடந்த அது பூங்கா போன்று குளிர்ந்த மலர்ச் செடிகளுக்கும் பசிய புல்தரைப் பரப்புக்கும் மத்தியில் சுற்றிலும் முள் கம்பிவேலியால் பாதுகாக்கப்பட்டு பிரும்மாண்டமான தோற்றத்தோடு தெரிந்த அடுக்குமாடி பங்களா நெருங்கியது. எல்லோரும் தன்னைப் பின்தொடர்ந்து வருகிறார்களா என அடிக்கடி திரும்பிப் பார்த்து உறுதிப் படுத்திக் கொண்டபடியே நடந்து வந்த அது பங்களாவின் முகப்பை நெருங்கி ஆவேசமாகக் குரைத்தது.

பிறந்ததிலிருந்து எப்போதுமே இந்தப் பக்கம் வந்தறியாதவர்கள், அப்படியே வந்திருந்தாலும் இந்த பங்களாவை நிமிர்ந்து பார்த்தோ, அல்லது அதை எதிர்த்தோ ஒரு சிறு முணுமுணுப்பைக் கூட வெளிப்படுத்தாதவர்கள், அது இப்படித் துணிந்து பங்களாவை நோக்கிக் குரைப்பதை அச்சத்துடன் பார்த்தார்கள். வயிற்றுத் தோல்கள் எம்பிஎம்பி ஒட்ட எலும்புகள் புடைக்க குரைத்துக் கொண்டிருந்தது. அது அடிக்கடி இவர்களைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தது. எல்லோரும் பின்னால் கட்டுக் கோப்பாய்த் திரண்டிருப்பதைப் பார்க்க அது முன்னிலும் தீவிரமாகக் குரைக்கத் தொடங்கியது.

நீண்ட நேரம் எந்த அரவமும் இல்லாது அமைதியாயிருந்த பங்களாவின் உட்புறமிருந்து திடீரென குலைபதறச் செய்யும் வகையில் பயங்கரக் குரைப்புச் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து பங்களாவின் உட்புறக் கதவு திறக்கப்பட வாட்ட சாட்டமான தோற்றம் கொண்ட நான்கு பிராணிகள் முன்புற வரவேற்பு அதை வழியாக இவர்களை நோக்கிப் பாய்ந்தன.

நன்கு வளர்ந்த கன்றுக் குட்டியின் உயரத்துக்கு மினுமினுக்கும் சருமத்தோடு கொழுகொழுவென்று தோற்றத்தில், பிளந்த வாயோடும், இரைக்கும் மூச்சோடும் பாய்ந்த அவைகளைக் கண்டு மக்கள் அதிர்ந்து பின்வாங்கி ஒட யத்தனித்தார்கள். பிறகு நல்ல வேளையாக அவை சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பதைக் காண ஆறுதலடைந்தாலும் நடுக்கத்தோடே நின்றார்கள். கூடவே தங்களைத் திரட்டிக் கொண்டு வந்த அது என்ன ஆயிற்றோ என்றும் பதற்றதோடு அதைத்தேட அது அவர்களின் கால்களுக்கிடையே புகுந்து ஒளிந்து பீதியுடன் நோக்கியது. வாலைப் பின்னங்கால்களுக்கிடையே இடுக்கிக் கொண்டு, உடம்பைக் கூனிக் குறுகியபடியே இவர்களைப் பார்த்து பொருமியது. அதன் தோற்றத்தைக் காண இவர்களுக்குப் பரிதாபமாயிருந்தது.

வரவேற்பு அறையில் நுழைந்த பங்களாப் பிராணிகள் அங்குள்ள பஞ்சுமெத்தை இருக்கைகளில் ஏறி கம்பிரமாக அமர்ந்து அவ்வப்போது இவர்களைப் பார்த்து குரைத்துக் கொண்டிருந்தன. சும்மாயிருக்கக் கூடாது என்பதற்காக பேருக்கு இதுவும் பதிலுக்குக் குரைத்தாலும் அதன் குரைப்பில் முன்னே மாதிரித் தெம்போ ஆவேசமோ இல்லை. இரண்டொரு முறை லேசாகக் குரைத்து விட்டு அது சமானியர்களின் குடியிருப்பை நோக்கித் திரும்பியது.

பின்னால் வந்த சாமானியர்கள் அதைப் பரிதாபத்தோடு பார்த்தார்கள். இந்த நிலையிலேயே இருந்தால் எந்த நாளிலும் அதால் பங்களாப் பிராணிகளுக்கு ஈடு கொடுக்க முடியாது என்றும் அவற்றுக்குச் சமமாக இதை வளர்க்க வேண்டுவது மிகவும் அவசியம் என்றும் கருதினார்கள். எனவே குரைப்பு முடிந்தாலும் வழக்கம் பால் இனி தனியே போக விடாமல் அதைத் தங்கள் பொறுப்பில் வைத்துப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் முடிவு செய்தார்கள். என்றாலும் தங்களைப் போலவே வெறும் கூழ், கஞ்சி, பழைய சோறு முதலானவைகளை மட்டுமே உண்டு வந்தால் அதைப் பங்களாப் பிராணிக்கு நிகராக உருவாக்க முடியாது என்பதால் பொது நிதியொன்று திரட்டி அதற்கு கறிசோறு, பிஸ்கோத் முதலானவைகளை வாங்கித் தரவும் திட்டங்கள் விடுத்து அது தங்குவதற்கும் ஒரு சிறு குடிலை ஏற்பாடு செய்தார்கள்.

இவ்வாறு சாமானிய மக்கள் தந்த ஊட்டத்திலும் ஆதரவாளர்கள் தந்த நிதியிலும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது அது. தோற்றமும் படிப்படியாக பங்களாப் பிராணிகளுக்கு நிகராக மெருகேறியது.

இந்த மாற்றத்திற்குப் பிறகு அது மீண்டும் சாமானியங்களைத் திரட்டிக் கொண்டு போய் பங்களாவை நெருங்கி தன் குரைப்பைத் தொடங்கியது. வரவேற்பு அறையில் போடப்பட்ட மெத்து மெத்தான இருக்கைகளில் இருந்தபடியே பங்களாப் பிராணிகளும் இதைப் பார்த்தன. இதன் தோற்றம் அவைகளுக்கு எப்படியிருந்ததோ முதலில் அவை நேச பாவத்தோடு இதைப் பார்த்து வாலை ஆட்டி மொறுவின. ஆனால் இது அதைச் சட்டை செய்யாமல் தன் குரைப்பைத் தொடங்க பதிலுக்கு அவைகளும் குரைக்கத் தொடங்கின. இப்படி இது குரைக்க, அவையும் குரைக்க மாற்றி மாற்றி இந்தக் குரைப்புப் போர் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. பின் பங்களாவின் உட்புறமிருந்து ஒரு கனத்த குரல் அதட்டல் போட்டு அவைகளை அடக்கியபடியே வெளியே வர இதுவும் அடங்கித் திரும்பியது.

இப்படியாக அவ்வப்போது இந்தக் குரைப்புப் போர் நடைபெற இது பகுதியெங்கும் பிரபலமாகியது. பத்திரிகைகளும் இதுபற்றி எழுத சமானிய மக்கள் மேலும் மேலும் இந்தக் குரைப்புப் போரைக் காண ஆவல் கொண்டு திரண்டதுடன் இதற்கு ஆதரவாக பொருளுதவியும் செய்தார்கள். நாளுக்குநாள் திரளும் மக்கள் கூட்டம் பங்களாவையே முற்றுகைக்குட் படுத்தியது போல் இருந்தது. பங்களாவாசிகளுக்கு இது எப்படியிருந்ததோ குரைப்புப்போர் நடந்து கொண்டிருந்த ஒரு நாளில் பங்களாவின் பொறுப்பாளர் வெளியே வந்தார். பங்களாப் பிராணிகளைப் பார்த்து ஒரு அதட்டல் போட்டு அடக்கி விட்டு இதை நோக்கி “த்தோ… த்தோ…” என்று அன்பொழுகும் குரலில் ஓர் அழைப்பு விடுத்தார்.

பட்டென்று ஒரு கணம் தன் குரைப்பை நிறுத்திய இது, தன்னைச் சுற்றியிருந்த சமானிய மக்கள் அனைவரையும் ஒரு முறை பார்த்தது. பிறகு அது முன்னிலும் வேகமாக அவரைப் பார்த்து குரைக்கத் தொடங்கியது. பங்களாவாசி முயற்சியை விடாமல் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தார். இந்தக் காட்சியைச் சுற்றியிருந்த சாமானியர்கள் பெருமையோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். பங்களாவாசியே நேரில் வந்து அழைத்தும் அதைச் சட்டை செய்யாமல் தன் பாட்டுக்கு குரைத்துக் கொண்டிருந்த அதன் கொள்கை உறுதியையும் மனத் திட்பத்தையும் மக்கள் மிகவும் பாராட்டினார்கள். குரைப்பு முடிந்து குடியிருப்புகளுக்குத் திரும்பிய பிறகு சமரசமற்ற அதன் நேர்மையைப் புகழ்ந்து அதற்கு விழாக் கொண்டாடி பூரிப்பும் மகிழ்ச்சியும் பொங்க அதற்கு மாலை அணிவித்தார்கள்.

இந்தச் சம்பவத்திற்கு பிறகு சாமானியர்களுக்கு அதன் மேல் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது. தங்களுக்காக குரல் கொடுக்கவும், தங்கள் வாழ்வை வளமாக்கவும் அது தன்னையே அர்ப்பணித்துக் கொண்டதாகக் கருதி அதை மேலும் கூடுதல் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவுசெய்தார்கள். என்றாலும் இனி அது போகுமிடமெல்லாம் தாங்களும் கூடவே போக வேண்டிய அவசியமில்லை என்றும் கருதினார்கள். இதுவும் முன்னைப் போல எப்போதும் இவர்களை அழைத்துக் கொண்டில்லாமல் அதுபாட்டுக்கு அவ்வப்போது தனியே போய்க் குரைத்து விட்டு வந்தது.

அன்று வழக்கத்துக்கு மாறாக அது வெகுநேரம் குரைப்பதைப் பார்த்த பங்களாவாசி எழுந்து வெளியே வந்தார். ஏற்கெனவே பலமுறை அதை அழைத்துப் பார்த்து அலுத்துப் போன அவர் சிறிது நேரம் நின்று அதையே பார்த்துவிட்டு உள்ளே சென்றார். திரும்பி வரும்போது அவர் கையில் பெரிய இறைச்சித் துண்டு இருந்தது. நேரே அதைக் கொண்டு வந்து, விடாமல் குரைத்துக் கொண்டிருந்த அதன் முன் வைத்தார். இதைப் பார்த்த பங்களாப் பிராணிகள் கோபமடைந்தவை போல் சங்கிலிப் பிடிக்குள் பாய்ந்தன.

குரைப்பைச் சற்று நிறுத்தி தன் முன்னே வைக்கப்பட்ட இறைச்சித் துண்டையே சிறிது நேரம் பார்த்த இது அதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் தன் குரைப்பைத் தொடங்கியது. எப்படியாவது அதைச் சமாதானப்படுத்த வேண்டும் என்றும் பங்களாவாசி மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலிப்பதாய்த் தெரியவில்லை. சிறிது யோசனை செய்து மீண்டும் உள்ளே சென்ற அவர் மேலும் இறைச்சித் துண்டுகளோடு வெளியே வந்து அவற்றைப் பங்களாப் பிராணிகளின் முன் போட்டார். அவை மிகுந்த ஆர்வத்தோடு ஆவேசத்தோடும் அவ்விறைச்சித் துண்டுகளைக் கடித்துக் குதறி சுவைத்து உண்பதைக் காண இதன் நாக்கில் நீர் ஊறியது. குரைப்பதைச் சற்று நிறுத்தி இறைச்சித் துண்டையே சிறிது நேரம் பார்த்தது. கூடவே சற்று முற்றும் திரும்பி சாமானியர்கள் யாரும் தென்படுகிறார்களா என்றும் ஒரு நோட்டம் விட்டது. பிறகு உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே மெல்ல காலால் அதைத் தன் பக்கம் இழுத்து. அதையே சற்று நேரம் பார்த்து மீண்டும் சுற்றிமுற்றும் ஒரு முறை பார்த்துவிட்டு பிறகு அவ்விறைச்சித் துண்டை முன்னங்கால்களில் அழுத்தியபடியே வாயால் கடித்து இழுத்து ருசித்து தின்னத் தொடங்கியது.

ஒரு வெற்றிப் புன்னகையோடு உள்ளே சென்ற பங்களாவாசி மேலும் சில இறைச்சித் துண்டை சுத்தமாய்க் கடித்து விழுங்கிய பிறகு அது சுற்றுமுற்றும் பார்த்து மீண்டும் குரைக்கத் தொடங்கியது. அதைப் பார்த்து சிரித்த பங்களாவாசி அடுத்த துண்டைப் போட்டார்.

இதன் பிறகு அது அடிக்கடியோ அல்லது வழக்கத்திற்கு முன்னதாகவோ வந்து குரைக்கத்தொடங்கியது. தன்னோடு எப்போதாவது வரும் ஒரு சில சாமானியர்களும் கலைந்து போகும் வரைக்கும் காத்திருந்து இறைச்சித் துண்டுகளுக்காகக் குரல் கொடுத்தது. முதலில் இறைச்சி வரத் தாமதமானால் முன்னிலும் வேகமாகக் குரைத்தது. இதற்கு இப்படி இறைச்சித் துண்டுகள் போடுவதைப் பார்த்து, அது தங்களுக்குப் போட்டியாக வந்து விட்டது போல் கோபத்தோடும் ஆத்திரத்தோடும் குரைத்த பங்களாப் பிராணிகள் நாளடைவில் அதைத் தங்கள் சக பிராணிபோலக் கருதி ஏற்றுக் கொள்ளத் தொடங்கின. இருந்தாலும் அதற்கான கவனிப்பு மட்டும் வெளி முற்றத்திலேயே நடந்தது.

குரைக்கிற நாட்களில் போடுகிற இறைச்சித் துண்டுகளை மட்டும் வயிறாரத் தின்று சென்று கொண்டிருந்த அது அன்று தின்று முடித்த பிறகும் போகாமல் வரவேற்பு அறையையே பார்த்துக் குரைக்கத் தொடங்கியது. சிறிது நேரம் அதன் குரைப்புக் காரணம் புரியாது குழம்பிய பங்களாவாசி அதன் பார்வை நிலை குத்திய இடத்தைப் பார்த்து அதைப் பார்த்து மெல்லச் சிரித்தார். அறையில் பங்களாப் பிராணிகள் கம்பீரத்தோடு அமர்ந்திருந்த மெத் மெத் என்ற இருக்கைகளின் பக்கத்தில் காலியாகவும் சில கிடந்தன.

இது உறுதியான பிறகு அவர் தன் பணியாளர்களை அழைத்து எதுவோ சொன்னார். அவர்கள் உரிமையோடு வந்து இதைத் தட்டிக் கொடுத்து எழுப்பி பங்களாவின் பின்புறம் அழைத்துச் சென்றார்கள்.

இதுவும் எதிர்ப்பு எதுவும் காட்டாமல் நீண்ட நாள்கள் அவர்களோடு பழக்கப்பட்டது போல வாலை ஆட்டியும் குழைந்தும் நேச பாவத்தோடு உடன் சென்றது. பணியாளர்கள் வெது வெதுப்பான நீரில் நன்கு சோப்புப் போட்டுக் கழுவி அதைக் குளிக்க வைத்தனர். இரண்டு மூன்று முறை இப்படிக் கழுவி அதன் கடந்த கால அழுக்குகளைப் போக்கியதாகத் திருப்தியற்ற பின் பிறகு கடைசியில் அதை நோய்க்கிருமிகள் அண்டாத மருந்து நீரில் குளிப்பாட்டி தேங்காய்ப் பூ துவாலையால் துவட்டினர். பிறகு அதன் மீது வாசனைத் திரவியங்கள் அடங்கிய நீர்மம் பூசப்பட்டது. எல்லாம் முடிந்த பிறகு பணியாளர்கள் ஏற்கெனவே எண்ணெய் போட்டுத் துடைத்துப் பளபளப்பாக்கி சுவரில் மாட்டியிருந்த சங்கிலிகளுள் ஒன்றை எடுத்து அதன் கழுத்தில் மாட்டினார்கள். இவ்வாறாக அது “ஞானஸ்நானம்” அளிக்கப்பட்டது போல் அனைத்தும் முடித்து அழைத்து வரப்பட்டு முன்புறம் வரவேற்பு அறையில் ஏற்கெனவே பங்களாப் பிராணிகள் அமர்ந்திருந்த இருக்கைகளுக்குப் பக்கத்தில் காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்த்தப்பட்டது.

ஏதோ தன் வாழ்க்கை இலட்சிய நிறைவேறிவிட்டது போன்ற பூரிப்புடனும் மகிழ்ச்சியுடனும் பட்டுப்போன்று வழவழக்கும் வெல்வேட் இருக்கையில் மெத்து மெத்தென்ற பஞ்சு மெத்தையில் கழுத்தில் மாட்டிய சங்கிலியோடு அமர்ந்து அது சக பிராணிகளைப் பெருமையோடு பார்த்தது. சக பிராணிகள் எதுவும் புரியாது முதலில் அதற்கு எதிர்ப்புக் காட்டினாலும் பங்களாவாசி வந்து அவற்றையும் தடவிக் கொடுத்து சமாதானம் செய்த பிறகு அவை ஏதோ எல்லாம் புரிந்தது போல் சகஜ பாவத்துக்கு வந்து அதனோடு நட்பு பாராட்டின. இதற்குப் பிறகு இதுவும் பங்களாப் பிராணிகளுள் ஒன்றாகவே பாவிக்கப்பட்டு அதற்கேற்ப எல்லா சவரட்சணைகளும் அதற்கும் நடந்தன. அதுவும் கழுத்தில் மாட்டிய சங்கிலியோடு எல்லாவற்றையும் மகிழ்ச்சியாக ஏற்று முறைப்படி வரவேற்பு அறை இருக்கையில் வந்து அமர்ந்து மற்றப் பிராணிகளைப் போலவே அதுவும் தன் கடமையை ஆற்றத் தொடங்கியது.

கொஞ்சநாளாய்த் தங்கள் குடியிருப்பு பக்கமே வராமல் எங்கோ அது காணாமல் போயிருப்பதைக் கண்டு சாமானிய மக்கள் அது எங்கே போயிக்கும் என்று முதலில் குழம்பினார்கள். ஒரு வேளை பங்களாவாசிகள் அதை ஏதும் செய்திருப்பார்களோ என்றும் இவர்களுக்கு அச்சம் ஏற்பட்டது. இந்த அச்சத்தில் அதைத் தேடவும் அது பற்றி செய்தியறியவுமான முயற்சியில் அவர்களுக்குக் கிடைத்த தகவல் திகைப்பூட்டுவதாக இருந்தது.

பங்களாவில் உள்ள காவல் பிராணிகளின் எண்ணிக்கை ஒன்று கூடியிருப்பதாகவும், அதன் தோற்றம் இதேபோன்று இருப்பதாகவும் இதுவும் அப்பிராணிகளோடு சேர்ந்து மெத்திருக்கைகளில் அமர்ந்து அவ்வழியாகப்போவோர் வருவோரையெல்லாம் குரைத்துக் கொண்டிருப்பதாகவும் சிலர் சொன்னார்கள். முதலில் நிச்சயம் அது இதாயிருக்காது என்று கருதிய அவர்கள், தொடர்ந்து பலபேரும் இவ்வாறே வந்து சொல்லவே நம்பமாட்டாமல் எதற்கும் நேராகத்தான் போய்ப் பார்த்து விட்டு வருவமே என்று எல்லோரும் ஒன்றாய் திரண்டு சென்றார்கள்.

முன்கம்பி வேலிக்கு இருப்பால் இருந்த முகப்பு வாயிலை இவர்கள் நெருங்கியதுமே வரவேற்பு அறையிலிருந்து குரைப்புச் சத்தம் பலமாகக் கேட்டது. அறையில் வரிசையாகப் போடப்பட்ட இருக்கைகளிலிருந்து எல்லாம் குரைத்துக் கொண்டிந்தன. அவற்றுக்குப் பக்கத்தில் இதுவும் கம்பீரமாய் அமர்ந்து அவற்றைப் போலவே குரைத்துக் கொண்டிருந்ததைக் காண இவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அடையாளமே தெரியாமல் முற்றும் அவற்றைப் போலவே மாறியிருந்த அல்லது மாற்றப்பட்டிடிருந்த அதைத் காண முதலில் அதுவா இது என்று இவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டாலும் அதுதான் இது என்று உறுதியாய் அறிய இவர்கள்ஆத்திரமடைந்தார்கள்.

தங்களை அடையாளம் தெரியாமல் குரைப்பதாகக் கருதிச் சிலர் தங்களை அடையாளம் காட்டவோ அல்லது பழைய நட்பை வெளிப்படுத்தவோ அதை மேற்கொண்ட முயற்சிகளோ அல்லது நோக்கி ‘த்சோ த்சோ…’ என்று அழைத்ததோ எதுவும் அதனிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. அது ஏற்கெனவே முன்பின் பழக்கப்பட்டதாகவோ வத்தலும் தொத்தலுமாகத் தெருவேயும் வீடு வீடாகவும் குரைத்துக் கொண்டு போனதாகவோ எந்த நினைவையும் காட்ட விரும்பாததைப் போலப் பார்க்கப் போனால் அப்படியெல்லாம் எதுவுமே நிகழவில்லை என்பது போல எல்லாவற்றோடும் சேர்ந்து தீவிரமாகக் குரைத்துக் கொண்டிருந்தது அது.

இவர்களுக்கு வயிறு உடம்பெல்லாம் நமநமவென்று எதுவோ ஏற ரத்தம் சூடாவதைப் போலிருந்தது. கையில் கிடைக்கும் எதைக் கொண்டாவது கொண்டு அதைத் தாக்கி அழிக்க வேண்டும் என்று ஆவேசம் பொங்கியது. ஆத்திரம் தீரும் அந்த முனைப்பில் இவர்கள் குனிந்து கற்களைத் தேடி எடுத்து அதை நோக்கி வீச அது முன்னிலும் மூர்க்கமாகக் குரைத்தபடியே இவர்களை நோக்கிப் பாய்ந்தது. பங்களாப் பிராணிகளும் அதற்குத் துணையாக அதனோடு சேர்ந்து பாய்ந்து கொண்டிருந்தன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *