கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 14, 2024
பார்வையிட்டோர்: 2,749 
 
 

கொஞ்சம் அழுக்கேறிய ஞாயிறு பிற்பகல் அது. ஒரு நண்பரைச் சந்தித்துவிட்டு வெறிச்சோடிக்கிடந்த டவுன் பஸ்ஸில் ஏறி அமர்ந்த நொடி, டவுன் ஹாலின் ஜனத்திரளில் கண்களை கலக்க விட்டபோது, மனசு ஏதேதோ பழைய நினைவுகளில் தேர் போல அசைய ஆரம்பித்திருந்தது.கால முன்னோட்டத்தில், பின்னோடிய நாட்களை இழுத்துக் கொண்டே திரிவதும், இளைப்பாறும் ஏதாவது ஒரு நிமிசத்தில், அந்த பழைய நினைவுகளை எடுத்து போர்த்திக் கொள்வதும், விசித்திரமான கதகதப்புதான்.

பஸ் புறப்பாட்டில் குலுங்கி என்னைக் கலைத்துவிட்டது. நிமிர்ந்து அமர்ந்துகொண்டேன். எப்போது வண்டி புறப்படும் என்று இருந்தது. புழுக்கம் பொங்கி வழிந்து, பயணிகளை வேர்வையால் நனைத்துக் கொண்டிருந்தது.

“இப்படி அவசியம் போய்த்தான் ஆகணுமா..? உங்களைப் பார்க்க யார் வர்றா..? அவங்கவங்களுக்கு அவங்கவங்க வேலை. உங்களுக்கு மட்டும்தான் ஊரோட வேலை. ஒருநாள் லீவுன்னாலும் வீட்டுல தங்கறது இல்ல. ஏதாவது ஒரு சாட்டு, வெளியிலே ஓட…” கிளம்பும்போதே, ராதா புலம்பித்தான் வழியனுப்பி வைத்தாள். அவளைப் போன்ற இயல்புச் சராசரிக்கு அத்தனையும் சரியாகத்தான் தோன்றும். என்னால் அப்படி மனிதர்களுடனான கணுவை, அத்தனை எளிதாய் விடுவித்துக் கொள்ள முடிவதில்லை.

கோபமும், ஆற்றாமையும், எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் என்னைச் சுற்றிய மனிதர்கள் மீது எனக்கும் இருக்கிறதுதான். ஆனாலும், அவை என்னை அவர்களிடமிருந்து பிரித்தெறியப் போவதில்லை என்றாலும் குறைப்பட்டுக் கொண்டே, பயணப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்.

தல்லாகுளத்தில் அப்பா வழி பெரியப்பா, எழுபதைத் தொடப் போகிறார். கொரோனா வந்து குணமாகி இருப்பதாய் தகவல் வந்தது. இரண்டு வாரமாய் கிளம்பி கிளம்பி ஒத்திப் போடப்பட்ட பயணத்தை இன்று விடாப்பிடியாய் செய்து முடித்தபோது, மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி. அலைச்சல்தான். வீட்டில் இருந்திருந்தால் கோழிக்கறி குழம்பும், நெத்திலி பொரிச்சதையும் ஆற அமர ருசித்து இருக்கலாம்தான். ஆனால், அத்தனை நாள்களையும் ஓய்வே தின்றால், உறவுக்கு என்ன ஒதுக்க..?

பஸ் கிளம்பினால் போதும் போல் இருந்தது. இரண்டாம் திருப்பத்தில் பஸ் நின்றபோதுதான் நெரிசலில் நீந்திக்கொண்டு ஏறியவரைப் பார்த்ததும், கண்கள் அரை அங்குலம் விரிந்து போனது.

அவர் என்னைப் பார்க்கவில்லை. முன்பக்கம் காலியாக இருந்த இருக்கையிலேயே கண்ணைப் பதித்துக்கொண்டு, முண்டிக்கொண்டு இருந்தார். ஆள் நிறையவே மாறியிருந்தார். மடிப்பு கசங்காத சட்டையும், படிய வாரிய தலையும், சீவி சீர் படுத்திய கிருதாவுமாய் இருப்பார் எப்போதும். அந்த நேர்த்தி இப்போது இல்லை. இந்த முதுமைதான் மனிதனை என்னென்ன செய்கிறது..?

“சாரங்கபாணி அண்ணே, ஆத்துல எப்போ முழுசா தண்ணி ஓடும்..?” அவரின் முழங்கையைப் பற்றிக்கொண்டு ஊஞ்சலாடிக் கொண்டே அவரின் நடை வேகத்துக்கு நான் குதித்தோடிக் கொண்டே மூச்சிரைத்தது, இன்னும் கூட நினைவாக இருக்கிறது. “அதோ, கிழக்கால உச்சியில இருக்கிற மலையில ஒரு கிழவி நெல் உலாத்திட்டு இருக்கு. அந்தக் கிழவி நெல்லை எல்லாம் உலாத்தி எடுத்த பிறகாலதான் தண்ணி இறங்கும்…” என்பார், கண்ணுக்கே தெரியாத மலையைக் காட்டி.

விவரம் தெரியும் வரைக்கும், வைகை ஆத்தில் நீர் வற்றிப் போனால், கண் தன்னாலே கிழக்கே வெறிப்பதும், அந்த முகமறியா கிழவியை வஞ்சு சபிப்பதுமாய் இருந்ததையும் நினைத்தால், சிரிப்பு வந்தது. சாரங்கன் அண்ணனைப் போல எளிய விசுவாசிகள் அந்நாளில் இயல்பாய் காணக் கிடைத்தார்கள். மன சுத்தமும், கை சுத்தமும் பெரிதாய் வரப் பெற்றவர்கள். அப்பாவிற்கு சாரங்கன் அண்ணன்தான் வலக்கரம்.

காலையில் இருந்து மாலை வரைக்கும், வீட்டில் இருந்து கழனி வரைக்கும், அத்தனை இடத்திலும் அவரின் தேவையும் அடையாளமும் இருந்துகொண்டே இருக்கும்.
மேலூரில் ஹைஸ்கூலில் சேர்ந்த நாளில் பள்ளிக்கூடம் விடும் முன்னே, சைக்கிளில் காத்திருப்பார். சுருட்டி மடித்துவிட்ட சட்டையும், கிணி கிணி என பெல் இசைத்துக் கொண்டே சைக்கிள் விடும் நேர்த்தியும், எனக்கு இன்னும் அடர்த்தியாய் மனசிற்குள் பூசி மெழுகியதுபோல்தான் இருக்கிறது.

கல்லூரிப் படிப்புக்கு பெங்களூர் சென்றுவிட்டுத் திரும்பி வந்தபோது, அப்பாவுக்கும் அவருக்கும் ஏதோ மனத்தாங்கல் என்றும், அதில் வீட்டை விட்டு தொடர்பைத் துண்டித்துக் கொண்டு போய்விட்டார் என்றும் தெரிந்தது. நிஜமாகவே வருத்தமாக இருந்தது. காலப்போக்கில் அவரின் நினைவுகள் நீர்த்துப் போய்விட்டன. புதிது புதிதாய் வந்து சேர்ந்த மனிதர்கள், சாரங்கபாணி அண்ணனை நினைவடுக்கில் அடித்தள்ளி இருந்தார்கள். இன்று பார்த்தபோது பரவசமாக இருந்தது.

கண் கொத்தியாய் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தேன். அவர் நிறுத்தத்தில் இறங்கும்போது நானும் இறங்கிக் கொள்ள, அப்போதுதான் என்னைப் பார்த்தவர் கண்களில் அத்தனை ஆச்சர்யம்.”தம்பி…” என்ற அழைப்பிலேயே உச்சி முகர்ந்து இருந்தார். இருவரும் பழைய நினைவைக் கிளறிக் கொண்டே டீக்கடைக்குள் புகுந்திருந்தோம். பக்கத்தில் பார்த்தபோது இன்னும் வயதாகி இருந்தார்.

சாப்பிடச் சொன்னேன். மறுக்காமல் தலையசைத்தார். “அப்பா நல்ல மனுசன்தான். வெள்ளந்தி. ஆனால், சிலநேரம் எடுப்பார் கைப்பிள்ளை. மில்லுல ஏதோ தகராறு. அதை மனசில வச்சிட்டு என்னையப் பத்தி பொல்லாப்பு சொன்னவனுக பேச்சைக் கேட்டுட்டு என்னை விரட்டிப்புட்டாரு. என்ன, சும்மா அனுப்பியிருந்தா மனசு ஆறியிருக்கும். விசுவாசம் இல்லைனு சொல்லால அடிச்சுப்புட்டாரு. அந்த பழிச்சொல்லைத்தான் சுமக்க முடியாமயே திரிஞ்சேன் பல வருசம். சுமத்துனவரு போயிட்டாரு. சுமை இன்னும் மனசுக்குள்ள கனத்துக்கிட்டேதானே இருக்கு…”

அதன்பிறகு அவர் பேசவில்லை.

உண்ணுவதில் கவனமாய் இருந்தார். நேரம் தப்பிய நேரத்தில் வந்திருந்ததால், ஆறிக்கிடந்த சாப்பாட்டைக் கூட அத்தனை விருப்பமாய் பதவிசாய் மிச்சம் வைக்காமல் அள்ளித் தின்ற அந்த நறுவிசுதான் அவரின் உண்மை முகம். கசங்கிய சட்டையும், பழுப்பேறிய அழுக்கு வேஷ்டியும், அவர் இன்னும் அதிகாரம் செய்யும் இடத்துக்கு வரவே இல்லை என்று சொல்லாமல் சொல்ல, எனக்கு வருத்தமாக இருந்தது.

உண்டு முடித்து, கை அலம்பி, வேஷ்டி முனையில் கைகளைத் துடைத்துக் கொண்டு பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். “இப்போ என்னண்ணே பண்றீங்க..? கல்யாணம், காட்சி…” என்று ஆரம்பித்து நிறுத்திக் கொண்டேன். மெயின்ரோட்டில் புழுதி கிளப்பிய வாகனத்தையே பார்த்துக் கொண்டிருந்தார், சில வினாடிகள். “என்ன மாதிரி ஆளுக்கெல்லாம் அதெல்லாம் எங்கே..? நினைவு தெரிஞ்ச நாள் முதலா, உங்க அப்பாகிட்டதான் வேலை செஞ்சேன். பொதி சுமக்கிற கழுதைக்கு தனிசுகம் எதுக்குன்னு அவரும் நினைச்சாரோ தெரியல, என் நல்லது கெட்டது பத்தி கவலைப்படல. வெறுங்கையோட வந்தபிறகு எதை வச்சு முழம் போட..? அப்புறம் கொஞ்சநாள் மேலூர் காண்ட்ராக்ட்காரர் கைத்தடியா சுத்தினேன். அவர் செத்தபிறகால, பட்டாமணியாரு, ஜவுளிக்கடைக்காரருனு சின்ன சின்னதா வாழ்க்கை ஓடுச்சு. காலமும் ஓடிருச்சு…”

அவர் கைகளைப் பற்றிக்கொண்டே அமர்ந்து இருந்தேன். வேலையாட்கள் எல்லாம் வந்து போகிறார்கள். விசுவாசிகள் மட்டுமே நெஞ்சில் நின்று போகிறார்கள். பணத்துக்கு வேலை செய்யும் போதே களவாடும் மனிதர்கள் பெருகிப்போன இந்நாளில், சாரங்கனைப் போல விசுவாசிகளைச் சந்தித்த கடைசித் தலைமுறை என்னுடையது என்று யோசித்தபோது மனசு வலித்தது. வழிப்போக்கனாய் நகர்ந்து கொண்டே இருக்கும் இவரின் வாழ்க்கை எதை நோக்கி நீந்துகிறது என்று சிந்தித்தபோது விசனமாய் இருந்தது.

“இப்போ என்னண்ணே செய்றீங்க..? காலகாலத்துல குடும்பம், வருமானம்னு இருந்திருக்கலாம். விசுவாசம்லாம் தண்ணி மாதிரிண்ணே. தாகமெடுக்கும்போது மட்டும்தான் ராஜமரியாதை. தேவை தீர்ந்ததும், கால் அலம்பிட்டு போயிடுவானுக. சுயநல உலகத்துல சுயமே இல்லாம இருக்கிறது எத்தனை அவஸ்தை..? உங்களை மாதிரி நல்ல மனுசன் யாருக்குமே தேவைப்படாம போறது எத்தனை வேதனை..?”

அமைதியாக என் கைபிடித்து அமர்ந்திருந்தவரின் உடல் இறுகியது. மெதுவாய் என் கையில் இருந்து தன் கையை விடுவித்துக்கொண்டவர், கைகளாலேயே தலையைத் தடவி சரிசெய்து கொண்டார். சட்டை சுருக்கத்தை நீவி நேராக்கிக் கொண்டார். “கிளம்பறேன் தம்பி. காரைக்குடியில, எங்க தூரத்து சொந்தம் ஒருத்தர். மலேசியால செட்டில் ஆயிட்டாரு. புள்ளி கட்ட மட்டும்தான் வந்து போறது. அவர் கொட்டாரம், வயலு வாய்க்கால் அத்தனையும் என் மேற்பார்வையிலதான். சாவிக்கொத்தே என்கிட்டதான் இருக்கு…” சட்டைப் பையைத் தட்டிக் காட்டினார்.

“காசி தியேட்டரை இடிச்சிட்டு இப்போ காம்ப்ளக்ஸ் கட்டுறாங்க இல்லே, நம்ம செட்டியார்தான் காண்ட்ராக்ட் எடுத்திருக்காரு. அங்கேதான் இப்போ இருக்கேன். அத்தனை பொறுப்பும் என் கையிலதான். ஒருவேளை சாப்பிடாம செட்டியார் வீட்டம்மா வெளியே அனுப்பாது. இன்னும் செத்தநாழி நின்னுட்டு இருந்தா ஃபோன் வரும் பார்… ‘சாரங்கா, ஏன் சாப்பிட வரலை’னு. அப்படியொண்ணும் கதியத்துப் போகல வாழ்க்கை…” அவர் என்னை சமாதானம் செய்தாரா, இல்லை தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டாரா என்றுதான் புரியவில்லை.

தன்னைச் சுற்றி ஒரு உலகம் இருப்பதாய் நம்பச் சொல்கிறார், அல்லது அவர் அந்த நம்பிக்கையில் இருக்கிறார். அதை விரிசல் செய்ய மனமின்றி அமைதியாக நின்று கொண்டிருந்தேன்.

“சந்தோசம்ணே. எங்க வீட்டுக்கும் வந்து ரெண்டொருநாள் இருந்துட்டு போங்கண்ணே…” என்றேன் ஆத்மார்த்தமாக.கூர்ந்து பார்த்தவர் கண்களில் ஒரு வெளிச்சம் மின்னலடித்தது. “வாரேன் அப்பு. அந்தா அந்த மலைக்குப் பிறகாடி இருக்கிற கிழவி, நெல் உலாத்திட்டு இறங்கிப் போகட்டும், அப்புறம் வாரேன்…” என்றார் ஏகாந்தமாய். நான் அவர் கைகளைப் பற்றி புறங்கையில் முத்தமிட்டேன். விசுவாசத்தின் வாசனை வேர்வையை விஞ்சி இருந்தது.

– Oct 2022

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *