(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“பஜனை மடம் கிருஷ்ணையரா பாடுகிறார்?”
“ஆம்!”
“இன்னும் இந்த ஊரிலேதான் இருக்கிறாரா?”
“வேறே போக்கிடம்?”
‘ரகுபதி ராகவ ராஜாராம், பதீத பாவன சீதாராம்’ என்ற நாமாவளி ஜாலராச்சத்தத்துடன் தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்தது. கிருஷ்ணையருடைய குரல் சிறிது கீச்சுக் குரல். ஆகையால் பலர் பாடினாலும் அந்தக் குரல் தனியே எடுத்துக் காட்டியது. தனுர்மாச பஜனை வழக்கம்போல் இந்த வருஷம் நடைபெறுகிறது. பல வருஷங்களாக, எனக்கு நினைவு தெரிந்த கால முதல், கிருஷ்ணராயபுரத்தில் இந்தப் பஜனையைக் கேட்டு வந்திருக்கிறேன். ஸ்ரீராம நவமி, கோகுலாஷ்டமி, ராதாகல்யா ணம் என்று அவ்வூர்ப் பஜனை மடத்தில் ஒவ்வொரு விசேஷமும் நடக்கும் போது பக்கத்து ஊர்களிலிருந்து பாகவதர்களும் பஜனைக்காரர்களும் வந்து கூடுவார்கள். ஆறு நாளோ, பத்து நாளோ, பன்னிரண்டு நாளோ ஊர் முழுவதும் பஜனை மயம். கிருஷ்ண நாமமும் ராம நாம மும் மூலைக்கு மூலை கேட்கும். குழந்தைகளெல்லாம், “கிருஷ்ணா ராமா கோவிந்தா – ஹரே – ராமா கிருஷ்ணா கோவிந்தா” என்று கைத்தாளம் போட்டுக் கொண்டு கூத்தாடும்.
என் இளமைக் காலத்தில் அந்த ஊரில் நான் இருந்தேன். ஐந்தாறு வருஷங்கள் சேர்ந்தாற்போல இருந்தேன்.
என் தகப்பனார் அந்த ஊரில் வேலை பார்த்தார். பிறகு மாற்றலாகிவிட்டது. இளமையில் இருந்த ஊராகையால் அது சொந்த ஊரைப்போலாகிவிட்டது. அதோடு, மற்ற ஊர்களைக் காட்டிலும் அந்த ஊரின் ஒவ்வோர் அம்சமும் என் உள்ளத்திலே பதிந்திருந்தது. அப்படிப் பதிந்த படத்தில் கிருஷ்ணையர் உருவமும் ஒன்று.
இருபது வருஷங்கள் ஆகிவிட்டன, நான் இந்த ஊர்ப் பக்கம் வந்து. என் நண்பன் அடிக்கடி எழுதுவான்; “இந்த ஊரில் எனக்கு அபார அபிமானம் என்று அளக்கிறாய். ஒரு தடவையாவது வந்து நாலு நாள் இருந்து விட்டுப் போக மாட்டேன் என்கிறாய்” என்று எழுதுவான். எனக்கு வரவேண்டும் என்று ஆசைதான். அகண்ட காவேரியின் கரையில் பழைய தமிழ் நாட்டுக் கிராமத்துக்கு உதாரணமாக விளங்கிய அந்த ஊரில் நாலு நாள் என்ன, நாற்பது வருஷம் இருந்தாலும் நல்லது தான். தெய்வ பக்திக்கும் நல்ல மனிதர்களின் சுகவாசத் துக்கும் ஏற்ற இடம் அது.
ஆனால், நான் கர்நூலிலல்லவா இருக்கிறேன்? விதி என்னை அங்கே இழுத்துக்கொண்டு போய்த் தள்ளி இருக் கிறதோ கர்நூலில் பெரிய வியாபாரக் கம்பெனியில் மானேஜராகக் கை நிறையச் சம்பளம் வாங்கிக்கொண் டிருக்கிறேன். கௌரவத்துக்கோ, அந்தஸ்துக்கோ, சௌகரியங்களுக்கோ குறைவு ஒன்றும் இல்லை. தமிழ் நாட்டில் அமைதியான கிராமத்தில் வந்து பார்க்கும் போது தான் என்னுடைய நகர வாழ்வின் பயனற்ற தன்மை புலப்படுகிறது. சதா யந்திரம் போல் உழைத்துக் கொண்டேயிருந்தால் போதுமா? மனச் சாந்தியுடன் அமைதியான முறையில் ஓடாமல் உழலாமல் வாழ வகை யில்லையே! கடபுடா சத்தத்துக்கிடையில், காசு பணத்தின் கணகண சத்தத்துக்கிடையில், மனிதனுக்கு ஓய்வேது, ஒழிவேது? அமைதியேது, ஆனந்தம் ஏது?
இந்தக் கிராமவாசிகளைப் பார்த்தால் எனக்கு எவ் வளவு பொறாமையாக இருக்கிறது! அவசர அவசரமாகச் சாப்பிட வேண்டுமா? படபடப்பாகக் காரியம் செய்ய வேண்டுமா? வருகிற தபாலையும் போகிற தபாலையும் பார்க்க வேண்டுமா? இன்றைக்குப் பம்பாய், நாளைக்குச் சென்னை என்று பயணம் கட்ட வேண்டுமா? – ஒன்றும் இல்லை. காலையில் சுகமாகக் காவேரியில் நீராடிவிட்டு, வரும் போது ஆண்டவன் திருக்கோயிலில் அரஹரா என்று சொல்லிக் கொஞ்சம் தியானமும் செய்துவிட்டு, வீட்டுக்கு வந்து அமைதியாக விவசாயமோ , வியாபாரமோ கவனிக்கலாம். என் நண்பன் திருக்கண்மாலி இருக்கிறான். அவனும் பணம் சம்பாதிக்கிறான்; நானும் சம்பாதிக்கிறேன். அவன் பணம் அமைதியாக வருகிறது; தேங்காயில் இளநீர் நிறைவது போல நிறைகிறது. என் பணம் சலசலப் போடு வருகிறது; ஓட்டைத் தொட்டியில் விழும் குழாய்த் தண்ணீர் போல.
“நந்த குமார கிருஷ்ணா – நவநீத சோர கிருஷ்ணா வேணுவிலோல கிருஷ்ணா – விஜய கோபாலகிருஷ்ணா!”
என்னுடைய சிந்தனையை மறுபடியும் இந்தக் குரல் கலைத்தது. கிருஷ்ணையரின் கீச்சுக் குரல் தான் அது. ஆனால் இருபது வருஷங்களுக்கு முன் நான் கேட்ட மிடுக்கு அதில் இல்லை; உருக்கம் இருந்தது. பழைய கம்பீரம் இல்லை; கரகரப்பு இருந்தது. உற்சாகம் இல்லை; ஓய்வு இருந்தது.
திருக்கண்மாலியை மறுபடியும் கேட்டேன்: “ஏன், கிருஷ்ணையர் இன்னும் அப்படியே இருக்கிறார்? அவர் இன்னும் உஞ்சவிருத்திதான் எடுக்கிறாரா?”
“அன்றிருந்த மேனிக்கு அழிவில்லை.”
“அவருக்கு ஒரு பிள்ளை இருந்தானே; அவன் இப்போது எங்கே இருக்கிறான்?”
“அவன் எங்கே இருக்கிறானோ, கடவுளுக்குத்தான் வெளிச்சம்.”
மறுபடியும் என் உள்ளம் இருபது வருஷங்களுக்கு முன் ஓடியது.
என் தகப்பனார் வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தார். கிருஷ்ணையர் ஜால்ராவைத் தட்டிய படியே உஞ்சவிருத்தி எடுத்துக் கொண்டு வந்தார்.
“என், கிருஷ்ணையரே, எங்கே ஒரு வாரமாகக் காணவில்லை?” என்று என் தகப்பனார் விசாரித்தார்.
“என் தங்கையைப் பார்க்கப் போயிருந்தேன்.”
“இந்தச் சனிக்கிழமைப் பஜனை நீங்கள் இல்லாமல் சோபிக்கவே இல்லை” என்றார் என் தகப்பனார்.
“ஒருத்தருக்காக ஒன்று காக்க முடியுமா? எப்போதுமே என்னை எதிர்பார்க்க முடியுமா?” என்றார். கிருஷ்ணையர். அந்தப் பேச்சு இன்னும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அவர் பேச்சுக் கணீர் என்று ஒலித்தது. அதில் ஒரு முறுக்கு இருந்தது.
“என்ன அப்படிச் சொல்லுகிறீர்களே பஜனை மடத்தில் நீங்கள் இல்லாமல் என்ன நடக்கும்? கீழ்க் கடைகளெல்லாம் ஒன்றுக்கும் பிரயோசனம் இல்லை. இந்தப் பஜனை மடம் உங்களுக்காக அமைந்துவிட்டது. நீங்களும் இதற்காகவே அமைந்திருக்கிறீர்கள்.”
“அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். யாருக்காக யார் இருக்கிறார்கள்? ஏதோ பகவான் கிருபையினால் இன்னும் நாலைந்து வருஷம் இந்த உஞ்ச விருத்தியையும் பஜனையையும் பண்ணிக்கொண்டிருக்கலாமென்று இருக்கிறேன். பிறகு பகவான் கிருபை இருந்தால் இந்த விருத்தியையே போக்கி விடலாம்.”
என் தகப்பனாருக்கு அவர் சொன்னது விளங்க வில்லை. மனைவியை இழந்த கிருஷ்ணையர் தன்னந் தனியாகவே வாழ்ந்து வந்தார். நாலைந்து வருஷம் என்று அவர் போட்ட கெடு எதைக் குறிக்கிறதென்று விளங்க வில்லை. அவர் அவ்வளவு காலந்தான் ஜீவித்திருப்பாரென்று எண்ணுகிறாரா?
“சே சே! அப்படிச் சொல்லாதீர்கள். நீங்கள் தீர்க்காயுசாசுப் பகவத் பக்தி பண்ணிக்கொண்டு வாழ வேண்டும்” என்று என் தகப்பனார் சொன்னார்.
“வாழலாம். பகவான் மனசு வைத்தால் காலையில் எழுந்து ஜாலராத் தட்டி ஊர் சுற்றும் வேலையை விட்டு விட்டு வீட்டில் இருந்தபடியே பஜனை பண்ணிக்கொண்டு வாழலாம். வாழ முடியுமென்று தான் நம்புகிறேன்.”
விஷயம் விளங்காமல் மயங்கிய என் தந்தையார், “நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று தெரியவில்லையே!” என்றார்.
“என் பையனை என் தங்கை வீட்டில் விட்டிருக்கிறேன். அவன் படித்துக் கொண்டிருக்கிறான். நாலைந்து வருஷத்தில் படிப்பு முடிந்துவிடும். பிறகு ஏதாவது ஒரு வேலை கிடைக்காதா? அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைத்துக் குடியும் குடித்தனமுமாக வாழப் பண்ணினால் நமக்கு என்ன குறைவு? ராஜரிஷி போல இருக்கலாம்.”
இதை அவர் சொல்லும் போது எடுப்பான தொனியிலே சொன்னார். அவர் உள்ளம் எவ்வளவு உறுதியான கற்பனையைச் செய்தது என்பதை அது காட்டியது. முகத்திலே மலர்ச்சி; உடம்பிலே சுறுசுறுப்பு; வார்த்தையிலே முறுக்கு.
***
மறுபடியும் வெளியிலே பஜனை ஒலி கேட்டது. அந்தப் பழைய தொனி எங்கே? இப்போதுள்ள குரல் எங்கே? அது விளக்கு; இது நிழல். அது உருவம்; இது படம். அது உடம்பு; இது எலும்புச் சட்டகம்.
பஜனைக் கூட்டம் என் நண்பன் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டது. என் நண்பன் மனைவி குடத்தில் நீர் கொண்டு வந்து பஜனைக்காரர்களுடைய காலில் விட்டாள். பிறகு மரக்கால் நிறைய அரிசியைக் கொண்டு வந்து ஒரு பிடி எடுத்துக் கூட்டத்தின் தலைவராக இருந்தவ ருடைய செம்பில் போட்டுப் பாக்கியை அருகில் ஒருவர் எடுத்துவந்த கூடையிலே போட்டு விட்டுக் கூட்டத்தை வலம் வந்து நமஸ்கரித்து உள்ளே சென்றாள்.
இவ்வளவு நேரமும் வாசலில் கூட்டம் நின்றிருந்தது. நான் நன்றாகக் கவனித்துப் பார்க்க முடிந்தது. பார்த்தேன்; கூட்டத்தின் தலைவரைத்தான் கூர்ந்து பார்த்தேன் கிருஷ்ணையரா இந்த நிலையில் இருக்கிறார்! உடம்பு மெலிந்து போய், எலும்பு தெரிந்தது. மயிர் நரைத்துப் போயிருந்தது. மீசையுந் தாடியும் அடர்ந்து வளர்ந்திருந்தன. அவற்றின் நடுவிலே அவர் முகம் அடையாளமே தெரியவில்லை. அங்கே நின்ற பொழுது இடையிலே “ராமா!” என்று சொல்லிப் பெருமூச்சுவிட்டார்.
உடம்பில் மெலிவும் ஓய்வும் எனக்குத் தெளிவாகப் புலப்பட்டன. ஆனால், முகத்தில் மாத்திரம் ஒருவகையான பொலிவு இருந்தது. இளமைக் காலத்தில் நான் பார்த்த காட்சியில் அவர் உஞ்சவிருத்திப் பிராமணராகத் தென்பட்டார். இப்போது முனிவரைப் போலத் தோற்றினார். உடம்பு இளைத்திருந்ததே ஒழிய உள்ளம் இளைத்தவராகத் தோற்றவில்லை.
கூட்டம் நகர்ந்தது. என் உள்ளமும் கூடவே நகர்ந்தது. கிருஷ்ணையர் ஏன் இன்னும் உஞ்ச விருத்தித் தொழிலை விடாமல் இருக்கிறார்? அவருடைய பிள்ளை எங்கே? ஒருகால் இளம்பிராயத்திலே இறந்து போய் விட்டானோ – அவரைப் பார்ப்பதற்கு முன் எனக்கு அவ்வளவு வேகம் உண்டாகவில்லை. பார்த்த பிறகு அவரைப்பற்றி முழு விவரமும் தெரிந்துகொள்ளும் ஆவல் அதிகரித்தது. ‘அவரையே கேட்கலாமா? அவரோடு பழகுபவர்களைக் கேட்கலாமா?’ என்று யோசித்தேன்.
மறுபடியும் என் நண்பன் திருக்கண்மாலியையே கேட்கலாமென் றெண்ணினேன்.
“கிருஷ்ணையரைப் பார்த்தால் வசிஷ்ட மகரிஷி மாதிரியல்லவா இருக்கிறது? அவர் முகத்தில் சாந்தம் நிலவுகிறது. அதனூடே துக்கத்தின் சாயையும் தோன்றுகிறது. அவர் பிள்ளை இருக்கும் இடம் தெரியவில்லையா?” என்று கேட்டேன்.
“கிருஷ்ணையர் இப்போதென்ன, எப்போதுமே தபஸ்வி. அவரிடம் யாருமே மரியாதையாகவே பழகுகிறார்கள். அவருடைய பிள்ளை, இருப்பதாகத்தான் கேள்வி. அவனைப்பற்றி யாரும் இப்போது பேசுவதில்லை; அவரும் சொல்வதில்லை. உனக்கு அதைப்பற்றி ஏனப்பா கவலை?” என்றான் அவன்.
பல வருஷங்களுக்கு முன் என் தகப்பனாரிடம் அவர் பேசிக்கொண்டிருந்த காட்சிதான் எனக்கு அவ்வளவு ஆவலை எழுப்பியது. அவர் ஆசாபங்கம் அடைந்து. விட்டாரா? ஏன்? – அந்தப் பழைய நிகழ்ச்சியை நண்பனிடம் சொன்னேன். அவனுக்கு ஒருவாறு என் ஆவல் புலப்பட்டது.
“அதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. சில வருஷங்களுக்கு முன் அவர் வேறே எங்கோ போயிருந்தாராம். கிட்டத்தட்ட ஒரு வருஷம் அவர் இங்கே வரவே இல்லை. பிறகு வந்தார். அது முதல் இப்படியே இருந்து வருகிறார். அதைப்பற்றி ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவருடைய பரமானந்த சிஷ்யன் ஒருவன் இருக்கிறான். எப்போதும் அவருடனே இருந்து பஜனைப் பத்ததியைக் கற்றுக்கொள்கிறான். அவனைக் கேட்டுப் பார்; ஏதாவது தெரியலாம்.”
ஒரு விஷயம் எளிதிலே புலனாகாவிட்டால் அதைப் பற்றிய ஆராய்ச்சி அதிகமாகிறது. அந்த விஷயம் மர்மமுடையதாக, அருமையானதாகத் தோற்றுகிறது. கிருஷ்ணையர் வாழ்க்கையிலே ஒரு பெரிய மர்மம் இருப்பதாக நான் ஊகித்தேன். அது சாமான்யமாக இராது; அவர் வாழ்க்கைப் போக்கையே மாற்றியிருக்க வேண்டும்.
நடராஜன் சொன்னான்:- அவன் தான் கிருஷ்ணையருடைய பரமானந்த சிஷ்யன். “இவருடைய பிள்ளை வேலையாக இருக்கிறான். போலீஸ் இலாகாவில் வேலையாம். அவனைப்பற்றி இவர் மிகவும் பெரிய பெரிய கோட்டைகளை யெல்லாம் கட்டியிருந்தார் தம்முடைய பிற்கால வாழ்வை அவனுடன் கழிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் பகவான் இவரை இந்த ஊருக்கே உரியவராக ஆக்கியிருக்கும் போது, இவராக ஒன்று செய்ய முடியுமா?”
“ஏன் அப்படி ஆயிற்று?” என்று கேட்டேன்.
“இவருக்கு அவனிடத்தில் ஆசை. அவனுக்கு மனைவிமேல் ஆசை.”
“விஷயத்தைத் தெளிவாகச் சொல்லப்பா.”
“பையனுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் ஆயிற்று. போலீஸ் இலாகாவில் உத்தியோகமும் ஆயிற்று. இவர் அவனோடு போய் வாழலாமென்று தான் நினைத்தார். அவன் தனியே குடித்தனம் நடத்தும் போது சிலதடவை போய்விட்டும் வந்தார். அவருடைய பிள்ளை, ‘நீங்கள் கிருஷ்ணராயபுரத்திலேயே சுகமாக இருங்கள். நான் ஊர் ஊராகச் சுற்ற வேண்டியிருக்கும். உங்களுக்கு வீண் அலைச்சல் எதற்கு? மாசம் மாசம் செலவுக்குப் பணம் அனுப்பிவிடுகிறேன்’ என்றானாம். வெகு காலமாக நம்பிக்கையோடு காத்திருந்தவர் இவர். ‘அலைச்சல் என்னப்பா? உன்னோடு இருப்பது தான் எனக்குச் சௌக்கியம். இனிமேல் எனக்கு ஊர் நீ இருக்குமிடந்தான்’ என்றாராம். அவன், ‘உங்களுக்குச் சௌக்கியமாக இருந்தால் போதுமா? எங்களுக்குச் கௌக்கியம் வேண்டாமா?’ என்றானாம். அந்த வார்த்தையை இவர் கேட்டுத் திடுக்கிட்டுப் போனாராம். போலீஸ் இலாகாவுக்கு ஏற்ற ஆசாமிதான் அவன்.”
போலீஸ் இலாகா என்றால் எல்லோருமே அப்படித் தான் இருக்கிறார்களா? கர் நூலிலும் ஒரு போலீஸ் சூபரிண்டெண்டெண்ட் இருக்கிறார். அவரைப் பற்றி ஊரே புகழ்கிறதே! எத்தனை பேருக்கு உபகாரச் சம்பளம் கொடுக்கிறார்! எத்தனை ஏழைகளுக்குத் தானம் செய்கிறார்! தமிழ் நாட்டவராகையால் எனக்கு நன்றாகப் பழக்கமாகி விட்டார். ராமராமி ஐயர் என்றால் கர்நூலில் தெரியாதவர்களே இல்லை. அவருடைய தான தர்மத்தைப் பாராட்டாதவர்களும் இல்லை. அவர் மாதிரி ஒரு பிள்ளை இவருக்கு இருந்திருக்கக் கூடாதா? இவரைக் கண்ணிலே வைத்து இமையிலே மூடுவாரே! உலகமே விசித்திரமானது. அவருக்கு இவரைப் போல ஒரு தந்தை இல்லை; இவருக்கு அவரைப்போல ஒரு தனயன் இல்லை. கொடாக் கண்டனுக்குக் கர்ணனைப் போன்ற பிள்ளையும், சாதுவுக்குப் பிடாரி போன்ற மனைவியுமாக இணைக்கும் விதியை வியப்பதா? வைவதா?
“ராமா!” – காவிரியிலிருந்து வந்துவிட்டார் கிருஷ்ணையர். அவரைக் கண்டவுடன் எனக்கு என்னவோ தோன்றியது; கீழே விழுந்து நமஸ்காரம் செய்தேன். “யார், தெரியவில்லையே!” என்றார். இன்னாருடைய பிள்ளையென்று சொன்னேன்.
“அவரா? மிகவும் நல்லவராயிற்றே! இப்போது எங்கே இருக்கிறார்?”
“பகவானுடைய பாதார விந்தத்தைச் சேர்ந்து விட்டார்.”
“அப்படியா? நீ எங்கேயப்பா இருக்கிறாய்?” என்று ஆதரவோடு கேட்டார்.
“கர் நூலில் இருக்கிறேன்.”
“கர் நூலா!” – சிறிது நேரம் அவர் யோசனை செய்தார். பிறகு, “குழந்தைகள் உண்டா?” என்று க்ஷேம சமாசாரம் விசாரிக்கலானார். நான் யந்திரத்தைப் போலப் பதில் சொன்னேனே ஒழிய, அவரை ஒன்றும் கேட்க வில்லை. கேட்கவேண்டுமென்ற ஆசை மாத்திரம் இருந்தது. நடு நடுவிலே கேட்க முயன்றேன். வாய் வரவில்லை. கடைசியில் துணிந்துவிட்டேன். “உங்கள் பிள்ளை இப்போது எங்கே இருக்கிறார்?” என்று கேட்டேன்.
“ராமா….என்ன கேட்கிறாய்? என் பிள்ளையா? ராமனா?….இதோ இருக்கிறானே!” என்று மடத்தில் இருந்த ராம படத்தைக் காட்டினார்.
“உங்களுக்கு ஒரு பிள்ளை இருப்பதாக அப்பா சொல்லி யிருக்கிறார். அவரையல்லவா கேட்கிறேன்?”
“ஏன் அப்பா, அந்தப் பழைய குப்பையைக் கிளறுகிறாய்? மறந்து போன சமாசாரம்; வாந்தி யெடுத்த ஆகாரம்; கிழிந்துபோன துணி” என்று சொல்லி “ராமா” என்று மறுபடியும் பெருமூச்சு விட்டார்.
“என்னை க்ஷமிக்க வேண்டும். உங்கள் மனசைப் புண்படுத்துவதற்காக நான் கேட்கவில்லை. என் மனசிலே, இதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல், அடக்க அடக்க அடங்கவே இல்லை. தெரிந்து கொண்டு என்ன செய்யப்போகிறேனென்று கேட்கலாம். நான் உங்களுக்கு ஒன்றும் செய்யப்போவதில்லை. என் மனசிலுள்ள ஆவலைத் தணித்துக்கொள்வேன்; அவ்வளவுதான்” என்றேன்.
என்னுடைய விநயமான வேண்டுகோள் அவர் மனசை இளக்கியிருக்க வேண்டும். “ராமா” என்று பெருமூச்சு விட்டார். பிறகு சொல்ல ஆரம்பித்தார்.
“அவனுக்கும் ராமனென்று பெயர் வைத்தேன். ஆனால் என் ராமன் தான் எனக்கு நிலைத்தான். அந்தக் காலத்தில் பைத்தியக்காரத்தனமாக நான் என்ன என்னவோ கோட்டை கட்டினேன். உஞ்ச விருத்தி செய்து ஜீவனம் செய்வதை இழிவாக நான் மனசுக்குள் எண்ணி னேன் உலகம் என்னைத் தாழ்வாக எண்ணிற்றென்று தோன்றியது. பிள்ளைக்கு உத்தியோகமாகி விட்டால் , பிறகு இந்த வேலையை விட்டு விடலாம் என்று நினைத்தேன். அவனுக்கு நல்ல இடத்தில் கல்யாணமாயிற்று. மாமனாரே உத்தியோகமும் பண்ணி வைத்தார். நான் அவனுடன் இருந்தால் அவன் உலகத்தார் கண் முன் தாழ்வாகத் தோற்றலாம் என்று எண்ணினானோ, என்னவோ? யார் அறிவார்கள்? என்னை இங்கேயே இருக்கச் சொன்னான். மாசம் மாசம் பணம் அனுப்புவதாகச் சொன்னான். அப்போது தான் என் ராமன் எனக்கு நல்ல புத்தியைக் கொடுத்தான். இவ்வளவு காலமும் நான் உஞ்சவிருத்தி எடுத்து வருகிறேன். பகவந்நாம பஜனை செய்து வருகிறேன். பெரியவர்கள், சாதுக்கள் செய்து வந்த காரியம் அது. ஸ்ரீ ராமனுடைய சந்நிதியில் பஜனை செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருந்தும், அதன் மகிமை எனக்குத் தெரியவில்லை. எந்தக் குறைவும் இல்லாமல் நான் இங்கே வாழ்ந்து வருகிறேன். அப்படியிருக்க, நான் பெற்ற பிள்ளையிடத்திலே யாசகம் வாங்குவதா? அவன் எனக்குப் பணம் அனுப்புவது எதற்கு? தன்னுடன் நான் வந்து வாழக் கூடாது என்பதற்காகக் கொடுக்கும் லஞ்சம் போல அல்லவா இருக்கிறது? போலீஸ்காரன் தொடராமல் இருக்க அவனுக்குக் கொடுக்கும் மாமூல் போல இது இருக்கவில்லையா? போலீஸ் இலாகாவில் அவன் கற்றுக் கொண்டது இது என்று நினைக்கிறேன். நான் ஊரார் முன் பாகவதனாக இருக்கிறேன்; பிச்சைக்காரனாக இருக்கவில்லை. எதனாலும் எனக்குக் குறைவே இல்லை. இது எனக்கு முன்பெல்லாம் தெரியவில்லை. என் பிள்ளையின் மூலம் எனக்கு உண்மை புலனாயிற்று. ஸ்ரீராம் கைங்கரியமே என் உத்தியோகம். என் ராமனை மறக்காமல் அவன் பிரபாவத்தைப் பஜனை செய்வதைக் காட்டிலும் உத்தமமான வாழ்க்கை உண்டா? ராமன் – என் கோதண்டராமன் – என் சீதாராமன் – என் கல்யாண ராமன்…” அவருக்கு மேலே பேச வரவில்லை. நாக்குத் தழுதழுத்தது.
நடராஜன் வந்து அவரைப் பிடித்துக் கொண்டான். ராமபிரானை நினைத்து அவர் உருகிப் போய் அவசமாகி விடுவது வழக்கமாம்.
என் மனசுகூட உருகுகிறது. அவருடைய பிள்ளைக்கு ராமன் என்று பெயர் வைத்ததாகச் சொன்னாரே; அது என் நினைவில் இருந்தது. நடராஜனை மெல்ல அழைத்துக் கேட்டேன்: “இவர் பிள்ளை எங்கே இருக்கிறார், தெரியுமா?”
அவனும் மெல்லச் சொன்னான்; “கர் நூலில்” என்றான். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அந்த ஊர்ப் போலீஸ் சூப்பரிண்டெண்ட் ராமசாமி ஐயர் – ஆம், அதே கான தாமசீலர் – என் அகக் கண்முன் வந்து நின்றார்.
“அவரா! அட ராமா!” என்று நானும் ராமனைத் தான் ஆச்சரியத்தால் அழைத்தேன்.
அட ராமா! என்ன விசித்திர உலகம் இது!.
– பவள மல்லிகை (சிறு கதைகள்), முதற் பதிப்பு: செப்டம்பர் 1951, அமுத நிலையம் லிமிடெட், சென்னை