வாழ்விழந்தும் விருந்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 6, 2013
பார்வையிட்டோர்: 8,088 
 
 

மேடும், பள்ளமுமாக, வளைந்து நெளிந்து சரிவாய் காட்சியளிக்கும், தேயிலை தோட்டத்தை ஒட்டியதாகக் காணப்படும், கோத்தகிரியில் உள்ள பல்கீஸ் பாத்திமாவுடைய பங்களா வீடு.

சூரிய வெளிச்சம் நன்கு பளிச்சிடுகிறது, ஆனாலும் குளிர் உடலை குத்தித் துளையிடும் நவம்பர் மாதம் அது. பங்களா வீட்டின் முன்பிருந்து இரண்டு குவாலீஸ் கார்கள் புறப்பட்டன. கடினமான மேட்டை ஏறி வென்றிட்ட கார்கள், தார் சாலையினை அடைந்தது. பின்னர் மெதுவாய் மலையிலிருந்து இறங்கி, திருப்பூர் நகருக்குள் நுழைந்த கார், அங்கிருந்து பறக்காத குறையாய் தாராபுரம் நகரை கடந்து கீரனூர்.உதகை இல்லத்தின் முன்பு நின்றது.

காரிலிருந்து மணப்பெண் பல்கீஸ், அவளது அத்தா கனிசாகிப், அம்மா பெளஜியா, அண்ணன்கள் முஸ்தபா, கலீல், நன்னீமா ராபியா, அண்ணி ஜீபேரியா என ஒரு பெரிய பட்டியல் இறங்கியது. இன்னொரு காரிலிருந்து லக்கேஜ்ஜீகள் இறக்கப்பட்டு, பின் அனைவரும் ஒன்று சேர்ந்து உதகை இல்லத்திற்க்குள் பிரவேசித்தனர்.

*******************

ரஹீம்,ஜாபர்,மன்சூர்,ரகுமான்,குதுப்தீன்,அக்கீம்,ஹபீப் என தொடரும் வாலிபர்கள் கூட்டத்தின் நடுவில், சற்று வளர்ச்சி குன்றியவனாக தென்பட்டான் பஷீர் அகமது.

கீரனூர் கடைவீதித் தெருவில், உமர் டீக்கடை அருகே நின்றிருந்தது அந்தக் கும்பல். அனைவரின் தலையிலும் நூல் தொப்பிகள். அந்த வழியாக கடந்து செல்லும் பெரியவர்கள் பலருக்கும் ஸலாம் சொல்லியும், ஒரு சிலருடன் கட்டித் தழுவி முஸாஃபா செய்யவுமே பஷீருக்கு போதும் போதுமென இருந்தது.

அருகிலிருக்கும் மசூதியிலிருந்து, தொழுகைக்காக பாங்கின் ஒலி கேட்டதும், அந்தக் கும்பல் அங்கிருந்து இடத்தைக் காலி செய்து, பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பேக்கரி முன்பு பைக்குகளை நிறுத்தியது.

மச்சான், இன்னைக்கு விட்டா முடியாது, நாளாநாளைக்கு நிக்காஹ், நாளைக்கெல்லாம் உன்னை வெளில விட மாட்டாங்க, ஸோ இப்பவே ட்ரீட் வச்சிட்டு போயிடுடா, டைம் வேற இல்லை சீக்கிரம் என்றான் கூட்டத்திலிருந்த மன்சூர், பஷீரிடம்.

டேய்! டேய்! ட்ரீட்னதும், பேக்கரிக்குள்ள கூட்டிட்டு போயி, க்ரீம் பண்ணு, டீ வாங்கிக் கொடுத்த்றப் போறாண்டா, செத்த அவன்கிட்ட தெளிவா சொல்லுடா, என்றான் ஹபீப்.

யே அத்தாவ்! இருக்கறத கெடுத்தறாதிகடா, பொண்ணு தாரதே பெரிய விசயம், இதுல நீங்க வேற, உம்ம்ம்….! சோழி சுத்தம்டா, அதெல்லா இன்னொரு நாள் பார்க்கலாம், ஆள விடுங்கடா, என்றவாறு தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு தெற்க்கு நோக்கி புறப்பாட்டான் மணமகன் பஷீர் அகமது.

**********************

கனிசாகிபும், அவரது சம்மந்தி நூருல்லாவும், காலை ஏழு மணிக்கெல்லாம் வெளியில் புறப்பட்டு விட்டனர். மறுநாள் நிகழவிருக்கும் திருமணத்திற்க்காக ஊர் அழைப்பு விடுக்க. என்னதான் இரண்டு மாதங்களுக்கு முன்பே சொந்த பந்தம், ஊர் ஜனம் என எல்லோருக்கும் பத்திரிக்கை வைத்து அழைப்பு கொடுத்திருந்தாலும், இப்படி கல்யாணத்திற்கு முதல் நாள் ஊர் முழுக்க பொது அழைப்பு விடுப்பது கீரனூர் வழக்கம்.

உதகை வீட்டிற்க்குள் டின் கணக்கில் முறுக்கு, பேனியான், லட்டு என திண்பண்டங்கள் நுழைந்து கொண்டிருந்தன.

இவ்வில்லத்திற்கு சற்று தள்ளி இருக்கும், திருமண மஹாலின் முகப்பில் எண்ணற்ற தோரணங்களும், செயற்கை நீரூற்று அமைக்கும் பணிகளும் செவ்வனே நடக்க, பின் வாயில் வழியாக பழனி சந்தையில் இருந்து வந்திறங்கிய காய்கறி, மளிகைப் பொருட்கள், சமையல்காரர் ஹாஜி.காதர் தலைமையில் கொண்டு செல்லப்பட்டன.

பல்கீஸின் வீடும், பஷீரின் வீடும், அலங்காரத் தோரணைகளாலும், சீரியல் செட் பல்புகளாலும், நாசருடைய பந்தல் அமைப்பாலும் விஷேசமாக ஜொலித்தன.

இரவு ஏழு மணி, நூருல்லாவின் வீடு கூட்டமாய் இருந்தது, மணமகன் பஷீருக்கு தலைப்பாக்கட்டு, நழுங்கெடுத்தல் வைபோக நிகழ்வு, சீராய் போய்க்கொண்டிருந்தது.

பல்கீஸ் வீட்டில் முக்கியமானவர்கள் யாரும் இல்லை, அனைவரும் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று விட்டனர். விடிந்தால் கல்யாணம், தனிமையில் இனிமையாக கற்பனையில் மூழ்கியிருந்தால் மணப்பெண்.

*************************

இரவு மணி 8:30, மசூதி கடைவீதித் தெரு, ஜேஜேவென ஒருவித பரபரப்பு. ஃபேண்ட்,சர்ட் அணிந்து டை கட்டிய அந்த ஒருவரையும், அவரோடு காக்கி உடை அணிந்திருந்த இருவரையும் சுற்றி வளைந்திருந்தது கூட்டம்.

இந்தா, அவரே வந்துட்டாரு ஸார், அவருகிட்டயே பேசுங்க, என்றார் கூட்டத்தில் ஒருவர்.

கூட்டத்திற்குள் நுழைந்திட்ட நூருல்லா என்ன ஏதுவென விசாரித்துக் கொண்டே, எதிரே தென்பட்ட அதிகாரிகளை நோக்கினார்.

உங்க பேரு என்ன பாய்….என்றார் தாசில்தார் அதிகாரி இராம்குமார்.

ஸார்ர்ர்ர்ர்….. நூருல்லாங்க, நீங்க! ஸார்?

நான் பழனி டவுன் தாசில்தார் இராம், இவர் பழனி காவல் எஸ்.பி சுந்தர், இன்னொருத்தர் எஸ்.ஐ கோபாலன்.

சரிங்க ஸார், என்ன விசயம் என்றார், நூருல்லா பயம் கலந்த முகத்தோடு.

உங்க பையனுக்கு கல்யாணம் பண்ணப் போற பொண்ணுக்கு வயசு பதினாறுதான் ஆகுது, அதனால சட்டப்படி இந்தக் கல்யாணம் செல்லாது என்றார், எஸ்.பி. சுந்தர்.

பாய் பொண்ணோட அப்பா, எங்க? அவர வரச் சொல்லுங்க முதல்ல, என்றார் தாசில்தார்.

சார் அவரு பழனி போயிருக்கறாரு, இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துருவாரு, நீங்க நம்ம விட்ல வெயிட் பண்ணூங்க, எதுவானாலும் பேசிக்கலாமே சார் ப்ளீஸ், என்றார் நூருல்லா.

நூருல்லாவின் ஹோண்டா பைக்கை பின் தொடர்ந்தவாறு, பள்ளிவாசலின் வலது ஓர தெருவில் சென்றது அந்த மூவரின் வாகனம்.

மணி 9:20 ஆகியது, கனிசாகிபு பதற்றத்தோடு தெற்குத் தெரு வீட்டினுள் நுழைந்தார்.

********************

சார், நாளைக்குக் கல்யாணம், ஊரே தெரியும், ஏகப்பட்ட செலவு, சொந்தக்காரங்களாம் வந்து இறங்கிட்டாங்க, இந்த சமயத்துல இப்புடி கல்யாணம் நின்னுச்சுனா, ஊருக்குள்ள எப்படி தலைய காட்டுறது? கொஞ்சம் பெரிய மனசு வைங்க ஸார் ப்ளீஸ்…ப்ளீஸ் என கெஞ்சலானார், மணப்பெண்ணின் தந்தை.

முடியாது பாய்…, உங்க செளரியத்துக்கு நாங்க இல்ல, எங்களுக்கு புகார் வந்திருக்கு, நீங்க கல்யாணத்த நிறுத்தறதுதான் உங்களுக்கு சேஃப்டி என்றார் சுந்தர் எஸ்.பி.

சார் ப்ளீஸ், விசயம் எங்கேயும் தெரிய வேணாம், உங்களுக்கு ஆகறத நாங்க செய்யறோம், என் நெஞ்சில் கை வைத்தவாறு, குரல் தாழ்த்திக் கூறினார் நூருல்லா..

நோ,நோ சான்ஸ், அதுக்கெல்லாம் வளையற ஆளுகயில்ல நாங்க என்றார், தாசில்தார்.

எப்படி முடியும்?

பல்கான ஒரு தொகையை நூருல்லாவின் அண்ணன் சேட் ஹாஜியாரிடம் வாங்கியாயிற்றே மூவரும்.

நூருல்லாவிற்க்கும், அவரது அண்ணனுக்கும் சில வருடங்களாக சொத்துப் பிரச்சனை முத்திக் கொண்டுள்ளது.

****************************

மறுநாள் மதியம் இரண்டு மணி, மசூதிக்கு அருகிலுள்ள மண்டபத்தில் விருந்து தடல்புடலாக ஆடம்பரமாக நடந்து கொண்டிருந்தது.

கடைவீதித் தெருக்களில் காத்திருந்த காவல் துறையினர், திருமணம் ஏதும் மசூதிக்குள் நடைபெறாததை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு, விருந்தில் கலந்து சாப்பிட்டுவிட்டு, ஒரு பெரிய கேரியரில் பார்சலை ஸ்டேசனுக்கு எடுத்துக் கொண்டு, மூணு மணிக்கெல்லாம் ஜீப்பில் ஏறி சென்றுவிட்டனர்.

மணி இரவு எட்டு….,

எப்படியோ விசயம் கமுக்கமா முடிஞ்சது, நீங்க பொண்ணக் கூட்டிக்கிட்டு கோத்தகிரி போயிடுங்க. ஒரு வாரம் கழிச்சு அங்கயே சிம்பிளா ஒரு வலிமா விருந்து போட்டறலாம், அப்பறம் பையன் சென்னை போயிடுவாப்புல கூடயே பொண்ண அனுப்பி வைச்சடலாம் என்ன சொல்றீங்க கனி?

உம்ம்ம்ம்….சரிங்க சம்மந்தி…சரிங்க… அப்பறம் வேறெதும் பிரச்சனை என்று இழுத்தார் கனிசாகிபு, நூருல்லாவிடம்.

வேறென்ன இருக்கு? அப்படியே ரெண்டு பேரும் மைசூர், ஹைதராபத்துனு சுத்தீட்டு வரட்டும். அப்படி இப்புடினு ஒரு வருசம் ஓடிப்போயிடும்., அதுக்கப்புறம் நாம, ஃபர்முலாட்டிஸ்க்காக நிக்காஹ் ரிஜிஸ்டர்ல, ஹஜ்ரத்த வைச்சு பதிஞ்சுக்கலாம் சரிங்களா, கவலைய விடுங்க கனி பாய்…

உம்ம்ம் சரி, சரி எப்படியோ அதிகாரிகளுக்கும், ஊர்காரங்களுக்கும் விசயம் ஏதும் தெரியாம போனதே நல்லாதாப் போச்சு, ஆனா யாரு இப்புடி கம்ப்லைன்ட் பண்ணிருப்பாங்கனு புலப்பட மாட்டேங்குது சம்மந்தி எனக்கு, என்றார், கனிசாகிபு.

ச்சே,ச்சே, அதவிடுங்க ஊர்க்காரங்களுக்கு வாயடைக்க விருந்து போட்டு கல்யாணம் நிக்காத மாதிரியும், நைட்டோட நைட்டா ஹஜ்ரத்த வச்சு நிக்காஹ் எழுதி ஆபிஸர்களுக்கு கல்யாணம் நடக்காத மாதிரியும் சமாளிச்சுட்டோம், இப்போதைக்கு அதை நினைச்சு சந்தோசப்படுங்க கனி.

அப்பறம், ஒருவேளை விசயம் ஆபிஸர்களுக்கு தெரிய வந்துச்சுனாலும் பிரச்சனை இல்லைல, நாமதான் இன்னும் நிக்காஹ் புக்ல பதிவு செய்யலல. நமக்குத் தேவை பொண்ணு சம்மதம்தானே தவிர இந்த கவர்மெண்ட் சம்மதம் இல்லை. நாலு சாட்சி வச்சு கல்யாணம் நடந்தா போதும் சம்பந்தி பிரிஞ்சுக்கோங்க. நம்ம ஷரீத் சட்டப்படி இது தப்பு இல்லை, அப்பறம் இவனுகள்ட இப்போதைக்கு அடக்கி வாசிப்போம், பின்னடி பார்த்துக்களாம். எப்படியும் பணத்துக்கு பணியறவனுகதான், பார்த்துக்களாம் கன்சாகிபு கவலைய விடுங்க.

உம்ம்ம்ம் சரி நூருல்லா என்று பெருமூச்சு விட்டு எழுந்தார் கனிசாகிபு.

இவருக்கோ எப்படியோ கல்யாணம் முடிஞ்சது, கெளரவம் காப்பாத்தியாச்சுங்கற நிம்மதி. நூருல்லாவுக்கோ கெளரவம் போகலைங்கற நிம்மதியும், சேட் ஹாஜியார ஜெயிச்சுட்டோம்ங்கற நிம்மதியும் அதிகமா மனசுக்குள்ள ஓடியது. நூருல்லாவுக்குத் தெரியும் நம்ம அண்ணனைத் தவிர வேற எவனும் இப்புடி பண்ணிருக்க மாட்டானுகனு.

**********************************

இளஞ்சிறுசுக ரெண்டும், வாழ்கை இழந்து நிக்குதுக, ஆனாலும் இந்த தெற்குத் தெருக்காரனுக கெளரவத்த காப்பாத்திக்க, இப்புடி விருந்து வைக்குறானுக பாருடானு…. இழுத்தார் மேற்குத்தெரு குத்தூஸ் இராவுத்தர், கிண்டலாக.

விசயம் என்ன ஏதேனு தெரியாம இருக்கறேயப்பா நீ, என்றார் டீக் கடை உமர்.

என்ன சொல்ற எனக்கொன்னும் புரியலையேப்பா உமரு.!

ஹேய், நன்னாம்பா, என்ன இப்புடி விவரம் தெரியாம இருக்காப்புல உங்க மச்சான், கொஞ்சம் சொல்லுப்பா அவருக்கு என்றார், உமர்.

என்ன மச்சா, இப்புடி இருக்கீங்க என இழுத்துக் கொண்டே, தனது கையிலிருந்த டீ டம்ளரை கீழே வைத்துவிட்டு தொடர்ந்தார் நன்னாம்பா.

கல்யாணம் எங்க நின்னுச்சு? அந்த ஆபிஸருகலாம் போனப் பின்னால, நம்ம பேஷ் இமாம் அஜ்ரத்து, காரியதரிசி எல்லாரையும் நைட்டோட நைட்டா கூப்பிட்டு, நாலு பேர்த்த சாட்சியா வச்சு நிக்காஹ் எழுதி முடிச்சுட்டாங்க, தெரியாதா என்றார் நன்னாம்பா.

அட இதென்னப்பா கூத்து? இது எத்தனை மணிக்கு நடந்துச்சு? நைட் பதினோரு மணி வரைக்கும் நாம கடைவீதில தான இருந்தோம், என்றார் இராவுத்தர்.

உம்ம்க்கும்… அது நடு இராத்திரி ரெண்டு மணிக்குப்பா, என இழுத்து முடித்தார் நன்னாம்பா…..

விசயம் எங்கும் தெரியாது என நிம்மதியாய், உறங்கச் சென்றார் நூருல்லா. ஆனால் அது, ஊட்டி மலை ஏறி சேட் ஹாஜியாரிடமே சென்றுவிட்டது, ஊராரின் வாய்களால்.

அடிக்கின்ற காற்றில் எல்லாமே வெளிச்சத்திற்கு வந்துதான் ஆகும். ஊர் வாயினை அடைத்திடவா முடியும்?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *