வயோதிபமும் சேரியலிஸ சிந்தனைகளும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: November 7, 2023
பார்வையிட்டோர்: 3,916 
 
 

பகுதி – 1

எனது புதிய முதுமக்கள் குறைகேள் / நலன்விசாரிக்கும் ஊழியம் தொடர்பாகப் பல விசித்திர மனிதர்களையெல்லாம் சந்திக்கநேரும் என்பது எதிர்பார்த்ததுதான்,

சென்றவாரம் நான் சந்தித்த ஒரு விசித்திரமான ஒரு ஜெர்மன்கார முதியவரின் பெயர் Peter Birlem என்பது. அவரது முதல் விசித்திரம் அவருக்குத் தான் யாரென்பது அடிக்கடி மறந்துபோகும். தன் பெயர், தான் பிறந்த ஊர், மனைவிகள், பிள்ளைகள் பெயர் எல்லாமும் மறந்துபோகும்.


அங்கே சிறிய ஏரி இருக்கு, அவ்வேரியை வந்தடையும் கால்வாய்கள் இருக்கு, கோதுமை வயல்வெளி / பண்ணை எல்லாம் இருக்கு, பாரவுந்து தட்டாமல் முட்டாமல் போகக்கூடிய அகலமான ஒழுங்கைக்குள் எங்களுடைய பெரிய வீடிருக்கு என்றெல்லாம் சொல்லுவார். ஆனால் ஊரின் பெயர் மட்டும் ஞாபகம் வராது. விரைவுத்தொடரியில் (S-Bahn) கடைசிநிலையத்தில் இறங்கி 15 நிமிடங்கள் பேருந்தில் போனால் தன் வீடுவந்துவிடும் என்பார். பெர்லினின் கிழக்குப்பிராந்தியத்தில் அவர் சொன்ன குறிப்புகளின்படி தொடருந்து முடிவிடங்களில் லேக்ஸ் அமையும் இடங்களாக Google இல் தேடியபோது ஒருநாள் அது Marienweder என்பதை நானாகக் கண்டுபிடித்தேன், ஆமோதித்தார், ஆனால் இவ்வளவு மறதிக்காரர் Mona என்கிறபெயரை மட்டும் அவர் ஒருபோதும் மறப்பதில்லை. அடிக்கடி ‘அந்த அழகி எப்படி இருக்கிறாள்’, ‘சாப்பிடுகிறாளா’, ‘ஆரோக்கியமாக இருக்கிறாளா’ என்றெல்லாம் கரிசனையாக விசாரிப்பார். பிரிந்துவிட்ட அவரது காதல் இணையோ என்றெல்லாம் என்னைப்போல் எண்ணிவிடாதீர்கள். தன்னைத் தன் Opa (பாட்டன்) பள்ளிக்கூடத்துக்கு இட்டுச்சென்ற குதிரையாம் Mona! அவள் நினைவில் இன்னமும் உருகுகிறார்.


சென்ற மே மாத இறுதியில் அவரது பிறந்தநாள் வந்திருந்தது. அவர் வதியும் Polimar எனும் பராமரிப்பு நிலையத்தினரோ, அல்லது வேறுயாரோ அவருக்கு முகப்பில் 70 என்று வரையப்பட்ட பிறந்தநாள் வாழ்த்து அட்டையொன்றை வழங்கியிருக்கவேண்டும், அன்றுபோய் அவருடன் அமர்ந்து ஒரு அரைமணிநேரம் உரையாடியிருக்கையில் திடீரென அவருக்கு அந்த அட்டை கண்ணில்பட்டது.

“இங்கே எந்தக் கிழத்துக்கு 70 வயது.” என்றார்.

நான் “உமக்குத்தான் 70 வயது ” என்றேன்,

“அப்படியா…70 ஆச்சா…அப்போ நான் யார்…எனக்கு என்ன பெயர்” என்றார் திடுக்கிட்டு.

“நீர்தான் திரு. Peter Birlem” என்று நான் சொல்லிமுடியவும்”

“நான் எதுக்கு இங்கே இருக்கிறேன்“ என்றார்.

“அப்போ எங்கே இருக்கச்சௌகரியம்…இங்கு உமக்கேதும் அசௌகரியமா” என்றேன்.

“இங்கே ஒரு குறையுமில்லை, என்ன எப்போதாவது ஒரு நாள்தான் Roulade தருகிறார்கள்” என்றார் குழந்தைகள்போல் மன்னையைத் தூக்கிவைத்துக்கொண்டு.

(Roulade ஐரோப்பாவில் அநேகமாக விருந்துகளில் பரிமாறப்படும் ஒரு சுவையான உணவு, அதன் மூலம் ஃப்ரான்ஸ் என்கிறது சமையற்கலைக்களஞ்சியம். கெட்டியான தசைஇறைச்சியை பூரியைப்போலத் தட்டையாகத்தட்டி அதற்குள் பலவகை பீற் மற்றும் செந்நிறக்கோவா / கீரையன்ன மரக்கறிவகைகள், பாற்கட்டி, வெங்காயம், மிளகு, வெஞ்சனங்கள் பொதித்து சுருட்டி உலோக இழையால் வரிந்து கட்டிக் கணப்பில் வெதுப்புவது. பின் குறுக்காக வில்லைகளாக அரிந்து விதவிதமான சோஸுகளுடன் பரிமாறப்படும்.)

மறுபடியும் “எனக்கு என்ன பெயர்…” என்றார்

பெயரைச் சொல்லிவிட்டுப் பேச்சின் திசையைமாற்ற “Birlem நீர் இம்முறை ஓரிடமும் விடுமுறை உல்லாசப்பயணம் போகவில்லையா” என்று கேட்டேன்.

“ஏன் இல்லை இப்போதுதான் போய்விட்டு வந்தோமே…இப்படித்தான் வடக்கே…” என்றுகொண்டு மேற்கே கையை நீட்டிக்காட்டினார்.

“எங்கே போனீர்கள்….எந்த இடம்…அங்கே என்னவென்னவெல்லாம் பார்த்தீர்கள்…. எனக்குச்சொல்லவே இல்லையே”

“எந்த நகரத்துக்கும் இல்லை”

“பின்னே எங்கே… ஏதும் கிராமமா…”

அவருக்கு அந்த இடம் ஞாபகம் வரவே இல்லை. எனக்குத்தெரிந்த பெர்லினுக்கு வடக்காகவுள்ள பத்து பதினைந்து இடங்களைச் சொல்லிப்பார்த்தேன். எதுவும் அவர்போன இடமல்ல. அப்படியே காரில்

மலையும் மடுவுமான ஒரு காட்டுப்பிரதேசத்தில் மரங்களினூடாகப் புகுந்து புகுந்து பயணித்ததையும் அங்கே கூடாரமடித்து இருந்ததையும் நினைவுகூர்ந்தார். அவ்விடத்தில் பக்கத்தில் ஸ்றோபெரி பழங்கள் வரைந்திருந்த ஒரு ஐஸ்கிறீம் விற்கும் கூண்டு இருந்ததாகவும் அவர்கள் பரிமாறிய Rum சேர்த்த ஐஸ்கிறீமை மீண்டும் நினைவுகூர்ந்து “லெக்கர் லெக்கர் லெக்கர்” என்றார். (லெக்கர்=> அருஞ்சுவை)

“அப்படி லெக்கர் ஐஸ்கிறீம் உங்கள் நாட்டிலும் இருக்கல்லவா” என்றார்.

“எங்கள் நாட்டிலும் கிடைக்கும்…ஆனால் நாங்கள் ஐஸ்கிறீமுடன் மதுவெல்லாம் சேர்க்கமாட்டோம்” என்றேன்.

சற்று மௌனமாக இருந்துவிட்டு ” நாங்கள்போன அந்த ஐஸ்கூண்டு இன்னமும் அங்கேதான் இருக்கா….?” என்றார்.

“நிச்சயம் இருக்கும், சரி…அங்கே யாருடன் போயிருந்தீர்கள்…” என்று கேட்டேன்.

“பப்பாதான் எங்களைக் கூட்டிப்போனார் என்றார்.

சரியாய்ப்போச்சு…என் கணித்தலின்படி அது ஒரு 50 அல்லது 60 வருடங்களுக்கு முன்னான சமாச்சாரத்தின் நனவிலித்தோய்தல்.

“சரி, மதியம் இன்று என்ன சாப்பாடு” என்று விசாரித்தேன்.

“எனக்கு டயறி எழுதும் பழக்கம் இருந்த காலத்தில் கேட்டிருந்தால் டப்பெனப் புரட்டிப் பார்த்துவிட்டுச் சொல்லியிருப்பேன், இனிமேல் கஷ்டம், சொல்லமுடியாது” என்றார்.

“சரி எப்போது டயறி எழுதுவதை நிறுத்தினீர்…”

“நான் பத்தாவது படிக்கும்போது காற்பந்து மைதானத்தில் என் புத்தகப்பையைத் தொலைத்துவிட்டேன்…அந்தப்பையோடு என் டயறியும் தொலைந்துபோயிற்று…அதன்பிறகு நான் டயறி வாங்கவுமில்லை, எழுதவுமில்லை”

அன்று அவரை அருகிலிருந்த ஒரு பூங்காவுக்கு அழைத்துப் போவதாகக்கூறியிருந்தேன். தன் மின்னுருளியிருக்கையை அவரே ஓட்டிக்கொண்டுவருவார். அவரது மூன்றாவது தளத்திலிருந்து தரைக்கு மின்னுயர்த்தியில் இறங்கவேண்டும். இறங்கினோம். அதற்குள் ஒரு இளம்பெண்ணும் எங்கள்கூடச் சேர்ந்திறங்கினாள். அவளிடம் கண்களில் விஷமத்துடன் “ இளைய அழகியே உனக்கு நிற்பதற்கு முட்டிகள் வலிக்குமல்லவா…இப்படி என் மடியில் அமர்ந்துகொள் ” என்றுவிட்டுத் தன் தொடைகளைத் தட்டிக்காட்டினார்.

அவளின் எதிர்வினை எப்படி இருக்குமோவென்று நான் பயந்துகொண்டிருக்க இவரின் சில்மிஷங்கள் அறிந்தவளாயிருக்கவேண்டும், சடக்கெனச் சொன்னாள்: “உங்கள் உபகாரத்துக்கு நன்றி மெஸூர்…ஆனால் நான் ஆயுதங்கள் வைத்திருப்பவர்கள் மடியில் அமர்வதில்லை.”

(மெஸூர்-> ஃப்ரெஞ் வழக்கில் திருவாளர்/கனவான்)

இப்படி அவரும் நானும் பேசிக்கொண்டே சென்றோம். அது கோடைகாலமாதலால் களிசானும் வெய்ஸ்டும் மட்டும் அணிந்திருந்த, மிகையாகத் தசைகள் வைத்திருந்த ஒரு பெண் அப்பாதையில் தன் உடலைத்திருகி முறுக்கி நடந்து எங்களை முந்திக்கொண்டு போனாள். அவளின் அங்கஅசைவுகளைக் கண்டதும் கிழவருக்கு வாலிபமும் ‘கீலா’வும் குதிகொண்டெழும்பின. வாயில் விரலைவைத்து சீட்டி அடித்தார்.

அவள் திரும்பவும்

“சூடான இம்மதியத்தில் பட்டிறகு வண்ணத்து எவ்விடம் நோக்கிப்பறக்குதோ…” என்றார் கவித்துவமாக.

‘தனியாக நடக்கவே முடியாத உமக்கு அது நிரம்பத்தான் முக்கியம்’ என்றிருந்தது அவளின் பார்வை. “ சேர்ந்து பறப்போமா மெஸூர்………” என்றுவிட்டு இவர் பதிலுக்குக்காத்திராமல் விரைந்தாள் அவள்.

பின் எங்களுக்கு எதிர்த்திசையில் வந்துகொண்டிருந்த இன்னொரு பெண்ணிடம் “குடென் டாக்” என்றார். (வந்தனம்) அவளும் பதிலுக்கு “குடென் டாக்” எனவும் தொடர்ந்து,

“நலமாயிருக்கிறியா………..என் அன்பே” என்றார். அவளும் உபசாரத்துக்கு

“நான் நலம்…….நீர்” எனக்கேட்கவும்

“என்றாலும் நீ அன்றைக்கு என்னை அப்பிடிப்பாதியில் விட்டுவிட்டுப்போயிருக்கக்கூடாது…” என்றார் ஒருவித கண்டிக்கும் தொனியில். (கட்டிலில் என்று அர்த்தம்).

அவள் கைக்குட்டையால் வாயைப்பொத்திக்கொண்டு குலுங்கிக் குலுங்கிச்சிரித்தாள். எந்தப்பெண்ணுடன் பேசவும் அவருக்கு கூச்சமோ வெட்கமோ இருப்பதில்லை.

நாம் பூங்காவை அடைந்ததும்.

“சரி…..சிகரெட் புகைப்போமா..” என்றார் அத்துடன் நூறாவது தடவையாக.

“இல்லை நான் புகைப்பதில்லை” என்றேன்

“அப்போ உனக்கு அவ்வளவு செலவிருக்காது…அந்தக்காசையெல்லாம் எங்கே பதுக்கி வைத்திருக்கிறாய்” என்று தமாஷ் பண்ணினார்.

“காசு இல்லாதபடியால்த்தான் நான் சிகரெட்டே பிடிப்பதில்லை” என்றேன் பதிலுக்கு,

“ஓ…அப்படியானால்…நீ பாவம்” என்று சொல்லிச்சிறிது நேரம் எனக்காக இரங்கிவிட்டு

“ஆனால்…எந்நேரமும் சிரித்துக்கொண்டிருக்கிறாயே…எப்பிடி” என்றார்.

“அட நீரொன்று…… சிகரெட் இல்லாததுக்கெல்லாம் மூஞ்சியைத்தொங்கப்போடக் கட்டுபடியாகாதப்பா” என்றேன்.

எப்படிப் புரிந்துகொண்டாரோ தெரியவில்லை. மீண்டும் சிகரெட் பக்கெற்றை எடுத்து முகர்ந்துபார்த்தார்.

“சரி…சரி…நீர் உம் சிகரெட்டைப்புகைத்துக்கொண்டிரும்…நான் அருகிலுள்ள குடிப்பதற்கான நீர்த்தாரையில் தண்ணீர் குடித்துவிட்டு வருகிறேன் ” என்றுவிட்டுக் கிளம்பினேன்.

“தாராளமாகக் குடித்துவிட்டுவா…ஆனால் வரும்போது பேன்களை மட்டும் அழைத்து வந்திடாதே” என்றார்.

ஒருவேளை பேன்கள் எம் தோலில் நீக்கமறப் பற்றிக்கொண்டிருப்பதால்த்தான் இப்படி எல்லோரும் ’காரமெல்’ நிறத்தில் இருக்கிறோமோ என்னவோ…

நான் திரும்பி வருவதற்கிடையில் அவர் ஒரு மாதிடம் தன் உரையாடலைத் தொடங்கிவிட்டிருந்தார்.

நான் வந்ததும் அம்மாதிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டு உரையாடலை நிறுத்திவிட்டு “என்ன பேன்களை அழைத்து வருகிறாயா” என்றார்.

“அங்கே பேன்கள் இல்லை…கரடிகள்தான் நின்றன, அவை Peter Birlem வீட்டுக்கென்றால் தாங்கள் வரமாட்டோமாம் ” என்றேன்,

“அவைக்கு அவ்வளவு பயம்” என்றார் மென்நகையுடன்.

“இருக்காதா பின்னே…”

அவரைத் திரும்ப அழைத்துவருகையில் ’இன்று என்ன நாள்’ என்று விசாரித்தார். “செவ்வாய்க்கிழமை” என்றேன்.

“அப்படியானால் நாம் சற்றே விரைந்து நடப்போம்” என்றார்.

நான் ‘சரி’ என்றாலும் அவரால் ஆர்முடுகவெல்லாம் (accelerate) முடியாது.

“எதுக்கு” என்றேன்.

“புதன் ஆகிச்சென்றால் நீ போயிடுவாய்…அப்புறம் நான் தனித்துப்போயிடுவேன் அதுதான் ” என்றார்.

“நான் போனபின்னால் உன்னுடைய அம்மா அப்பாவெல்லாம் வந்து பார்த்தாலும் பார்க்கலாம்……….. ஆமா அவர்களெல்லாம் எங்கே” என்றேன்.

“கனகாலமாய் என்னையும் வந்தும் பார்க்கேல்லை…செத்திருக்கவேணும்” என்றார் வெகுஇயல்பாய்.

பேசிக்கொண்டே அவரது பராமரிப்பகத்தை அடையவும் எனக்கு அவருடனான அன்றைய பணிவேளை முடிவடைந்தது. புறப்பட ஆயத்தமானேன். அப்போது அவசரமாக ஜன்னலூடு எட்டிக் கீழேபார்த்தவர்

“நிழலில் நிறுத்தியிருந்த என் கார் எங்கே…நீ கொண்டுபோய்விட்டாயா…” என்றார்.

“ இல்லையே திரு. Peter Birlem, நான் உமது காரை எடுக்கவில்லையே ” எனக்குத்தான் என் டிராம்வண்டி இருக்கே, விட்டுவீதியாய் பயணிக்க “என்றேன்.

“ சரி…அப்போ…நீ என் காரைக்கொண்டுபோ…” என்றார் தயாநிதியாய்…

(இன்னும் பேசுவோம்)

வயோதிபமும் சேரியலிஸ சிந்தனைகளும்.

பகுதி – 2

அன்று நான் அந்த ஹோமுக்குப்போனபோது Peter Birlem வதியும் தளத்திலுள்ளவர்கள் எல்லோரும் மியூஸிக்குப் போயிருந்தனர், Peter Birlem மட்டும் தனது அறையிலேயே முடங்கித். தன் கதிரையில் அமர்ந்து அண்டங்காக்கா மாதிரித்தலையை ஏறுகோணத்தில் சரித்துவைத்து நான்போன பிரக்ஞையே இல்லாமல் யோசித்துக்கொண்டிருந்தார்.

“நீர் ஏன் மியூஸிக்குப் போகவில்லை? ” எனக் கேட்டேன்.

“இப்படித்தான் ஒரு நாள் கொயரில் நான் பாடியபோது என் இசை ஆசிரியை ‘ Birlem வாயைமூடு’ என்றார்…அதுக்குப்பிறகு நான் பாடுவதற்கு வாயைத்திறப்பதில்லை” என்றுவிட்டு மீண்டும் மௌனமானார். அதன் பிறகெல்லாம் பெண்கள் கோரஸ் ஒலிக்கும் அந்த அறையைக் கடக்கும்போதெல்லாம் “வேலையற்ற சாத்தான்கள்” என்றுவிட்டு விரைந்து கடந்துவிடுவார்.

சரி அபாரமான சிந்தனை வசப்பட்டிருந்தமாதிரி இருந்திச்சே…‘உம் ஆழ்ந்த சிந்தனை என்ன மார்க்கத்தில் சென்றுகொண்டிருந்தது’ என்று உசாவினேன்.

“நான் இரண்டுதடவைகள் திருமணம் செய்தது உனக்குத்தெரியுந்தானே” என்றார். ஏதோ இரண்டுக்கும் நானே சாட்சிக்கையெழுத்திட்டவன் மாதிரி “ ஆம் ஆம் ஆம் அதிலென்ன சந்தேகம் ” என்றேன். அவர்களில் யாரை முதலில் மணமுடித்தேன் என்பதை நினைவுபடுத்தமுடியவில்லையே…அதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

தனக்கு இளமைக்காலங்களில் தந்தையாருடன் ஒத்துப்போகமுடியவில்லை என்பதை முன்பே எனக்குச் சொல்லியிருக்கிறார். ஒருநாள் இவர் நிறைய நண்பிகளை அழைத்துவந்து சத்தமாக இசையைவைத்து அலுப்புக்கொடுக்கவும் கடுப்பாகிப்போன தந்தையாருக்கும் இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தந்தையார் கோபத்தில் எம்மவரைப்போலவே “Peter நீ இனிமேல் இந்த வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கப்படாது” எனத்திட்டியிருக்கிறார்.

Birlem ஓடிப்போய் ஒரு Wohnwagen / Automobile Caravan ஐ வாங்கிவந்து பின் வளவுள் நிறுத்தி வைத்து அதற்குள் வாழத்தொடங்கியிருக்கிறார். அதற்குள் வாழ்ந்தபோதுதான் தனக்கு Helga வுடனான உறவு ஏற்பட்டதென்றும்,

சிறிதுகாலம் அவளுடன் அக் Caravan க்குள் வாழ்ந்த கதை எல்லாம் எனக்குச் சொல்லியிருக்கிறார்.

“அப்போ இருவருக்கும் குளியல், கழிப்பறை வசதிகள் Caravan க்குள் சௌகரியமாக இருந்திருக்காதே” என்றேன்.

“வீட்டின் இன்னொருதிறப்பு என்னிடந்தானே இருந்தது…அதெல்லாம் பின்கதவால் அப்பப்ப போய் ஜோராய்க் குளிச்சிடுவோம்.” என்றார்.

“அப்போ Caravan இல் குடிபோகமுன்னும் வேறொருத்தியுடனும் அப்பாவின் வீட்டில் வாழ்ந்தியா………..?”

“இல்லையே…”

“அப்போ Helga தான் உன்னுடைய முதல் மனைவி.”

“நீ சொன்னால் சரியாய்த்தான் இருக்கும்…கில்லாடி நீ” என்றார்.

“இவ்வளவுகால வாழ்க்கையில் உனக்கு ஒருவர்கூட நண்பர்கள் இல்லையா…..?”

“பலபேர் இருந்தார்கள்…அனைவருமே என்னை நோகடித்தார்கள்…அனைவரையும் விட்டொதுங்கிவிட்டேன் ” என்றார்.

“நோகடித்தார்கள் என்றால் எப்படி…”

“Klemens….என்னுடைய விலையுயர்ந்த Stieffel ஐ எடுத்துப்போனான், திருப்பித்தரவே இல்லை.”

(Stieffel என்பது: நாஜிகள் அணிவதைப்போன்ற குதிரை மற்றும் மோட்டார்பைக் சவாரிகளின்போது கால்களின் பாதுகாப்புக்காக அணியும் முழங்கால்வரையிலான அதிநீளச்சப்பாத்து,)

“Klemens ஒருநாள் நான் இங்கே இருப்பதை எப்படியோ அறிந்துகொண்டு வந்தான், எதுக்கு இன்னும் என் Stieffel ஐத் திருப்பித்தரவில்லை என்று ஆவிவிட்டேன்…அன்று போனவந்தான் திரும்ப வரவே இல்லை.”

(ஆவிவிடுதல்-> விலங்கைப்போல் பிளிறுதல்)

“உமது Martina வாவது அப்பப்ப வந்து உம்மைப் பார்ப்பாளா…?”

“யார் அது Martina…?”

”உமது மகள்தான்“

“(Bloede Kuh) அக்குழுவன் மாட்டின் கதையை எடுக்காதே…”

கிழவருக்கும் மற்றவர்களோடு இணங்கிப்போகும் வல்லபமும் மிகக்குறைவு என்பதை அவருடன் பழகிய இரண்டொரு நாட்களுக்குள் உணரமுடிந்தது.

இப்படியாக நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் Polimar நிலையத்தின் (Dienst-Leiter) பணி ஆய்வாளர் Frau.Stanowski எம்மிடம் அனுமதி பெற்றுக்கொண்டு எம் அறைக்குள் நுழைந்தார். நுழைந்தவர் முதலில் குளிப்பறைக்குள் சென்று அது துப்புரவாக உள்ளதா என்பதை ஆராய்ந்தார்.

Birlem “என்னதான் பார்க்கிறாய் Frau.Stanowski” என்று அவரை விசாரிக்கவும் அவர் “இவள் Stefanie இந்தப்பக்கமாய் வந்தாள் காணவில்லை அதுதான் பார்த்தேன்” என்றார். Stefanie சுகாதாரத்தொழிலாளி. இளம்பெண், நீலச்சீருடையில் டன்லப் றப்பர்ப்பொம்மையைப்போல ‘கும்’மென்றிருப்பாள். Stefanie அறைக்கு வந்தாளானாள் Birlem அவள் போகுமட்டும் ஜொள்ளுஜொள்ளாய் வடித்தபடி அவளைப் பார்த்துக்கொண்டிருக்கும்.

“Stefanie யானால் நீங்கள் அவளை என் கட்டிலில் உள்ள போர்வைக்குள் தேடுங்களேன்…அதிலதானே நாங்கள் கிடந்தோம்…குளியலறையில் தேடுவது வீண்” என்றார் Birlem.

இன்னொரு நாள் இவரது கட்டிலின் உறைகளையும் தலையணையையும் மாற்றிப்போடுவதற்கு வந்த செவிலி உறைகளை மாற்றியானதும் தனக்கு நாரி உளைவதாகச்சொல்லி இடுப்பைப்பிடித்துக்கொண்டு உடம்பைப் பக்கவாட்டில் வளைத்துத் தளர்த்தினாள். அதைப்பார்த்ததும் Birlem உடம்பு சூடானது,

“உதுக்கு என்னட்டை ஒரு மருந்திருக்கு 4 நிமிஷத்தில சுகமாகும் “ என்றார்.

செவிலி “என்ன” என்பதாக அவளைப்பார்க்கவும்

“சும்மா என் மடியில் உட்கார்ந்துக்கோ…அப்போ நான் ஒரு மாஜிகல் கதிரை உனக்குள்ள அனுப்புவன், மாயம் செய்ததைப்போல உடனே உன்வலி குணமாகிடும்” என்றார். “நீ கதிரை அனுப்புவதாகச் சொல்லிவிட்டு எதை அனுப்புவாயென்று தெரியாதா மெஸூயூ”

அவருக்கு வலிச்சம் காட்டிவிட்டு அறையை விட்டகன்றாள் செவிலி.

ஒரு நாள் ஜன்னாலூடு எட்டிக்கீழே பார்த்துவிட்டு “சீக்கிரம் புறப்படு நாம் கீழேபோவோம்…ஒரே இளங்குட்டீஸ்களின் கூட்டமாயிருக்கு, இருவருமாய்ப்போய் சைட் அடிக்கலாம் ” என்று என்னையும் துணைக்கு அழைத்தார். அப்போது நேரம் 11 மணிதானிருக்கும். எந்தக்கல்லூரியும் விட்டிருக்காது, எங்கே வந்தார்கள் குட்டீஸ் இப்போ…எதுக்கும் Birlem

சொன்னால் சரியாயிருக்கும் என்ற நினைப்பில் அவரைக்கீழே அழைத்துப்போனேன்.

அந்த Polimar நிலையத்தின் முன்னால் உள்ள விசாலமான நடைமுற்றத்தில் (Prominade) வியாபாரிகள் காலநிலை உவப்பாயிருக்கும் நாட்களில் ஜவுளி, பழங்கள், ஐஸ்கிறீம், pastry எனக்கடைகள் விரிப்பார்கள். அன்று அப்படிச் சில பெண்கள் விரித்த ஆயத்த ஆடைகள் விற்கும் கடை ஒன்றில் வர்ணம் வர்ணமாய் ஆடைகள் தொங்கிக்கொண்டிருக்கவும் மேலேயிருந்து நோக்கிய Birlem க்கு அவையெல்லாம் குட்டீஸ்களின் கூட்டம்போல ஒளிர்ந்திருக்கிறது.

குட்டீஸை எதிர்பார்த்து வந்தவருக்கு முழு ஏமாற்றம். தன் நடைவண்டியையும் மெதுவாகத் தள்ளிக்கொண்டு கடையையும், கடைக்காரப்பெண்களையும் ஒருசேர வருடிக்கொண்டு அவர் செல்லவும் ஒரு துடுக்குப்பெண் இவரை வம்புக்கிழுத்தாள்.

“மெஸியூ…என்ன தேடுகிறீர்கள்…”

எரிச்சலில் இருந்தவர் திட்டியான தன் மார்பைப் பொத்திப்பிடித்துக்கொண்டு

“எனக்கு அளவான ஒரு பிறேஸியர், இருக்குமாவென்று பார்க்கிறேன் ” என்றார்.

“உனக்கான பிறேஸியர் இங்கே கிடைக்காது, மெஸியூ……வேணுமானால் “உன் களிசானைக் கீழே இறக்கிவிடு…பார்த்து உன்னுடையதை முழுவதும் பொதியக்கூடிய இன்னர்-பான்ட் இருந்தால் இலவசமாகத்தாறேன்” என்றாள்.

“ஹையோ…நான் லைவ் (நியூட்) ஷோ காட்டுவதைவிட்டு நாளாச்சே என் அன்பே… ” என்றது Birlem.

Polimar எனப்படும் அந்த முதியவர்களுக்கான ஹோமில் 5 தளங்கள் உள்ளன. அவை முறையே 1.Darss, 2. Hiddensee, 3. Usedom, 4. Rügen, 5. Sylt எனப்படும். அத்தனையும் ஜெர்மனியின் அழகான ஊர்களின் பெயர்கள். பின்னவை இரண்டும் சிறு தீவுகள். அப்போது Birlem இன் அறையுள்ள Usedom தளத்தின் கழிப்பறைகளுக்கு புதிய (Water Closets / Comets) பொருத்தும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அதனால் அப்பணி ஆய்வாளர் Frau.Stanowski, Birlem மிடம் தயவாகக் கேட்டார் இன்றைக்கு Hr. André யின் குளியலறையில் சில திருத்தப்பணிகள் செய்கின்றோம், அதனால் இன்றைக்கு மட்டும் Hr. André ஐ உனது குளியலறையைப் பாவிக்க அனுமதிப்பாயா?

“முடியாவே.…முடியாது…ஊஹூம்.”

“ஏன் அப்படி…?”

“இது எனது அறை, அதை கண்டவர்கள் எல்லாம் பாவிக்க அனுமதிக்க முடியாது” என்றுவிட்டு என்னிடம் தாழ்சுருதியில்,

“அவனது மூஞ்சியைப் பார்க்கவே எனக்குப்பிடிக்காது” என்றது.

“Hr. André ஒன்றும் கண்டவர் கிடையாது, இந்நிலையத்தில் உன்கூட வாழும் ஒருவர் Birlem.

“எந்தச் சைத்தானும் இங்கு வேண்டாம்.”

ஒருநாள் Birlem மிடம் விளையாட்டுக்குப்போல “எனக்கென்ன பெயர் சொல்லு பார்ப்போம்” என்று கேட்டேன். . உதட்டைப்பிதுக்கியது.

“அட இத்தனை நாட்கள் உனக்காக வந்துபோகிறேனே…உனக்கு என்னபெயர்…மனைவி குழந்தைகள் யாராவது இருக்காங்களாவென்று கேட்க ஏன் உனக்குத் தோன்றவில்லை…எனக்குப்பெயர் மூர்த்தி ” என்றேன்.

“இன்றைக்கு மோடி வந்திராவிட்டால்…பதிலாக ஒரு கேடியோ கோர்க்கியோ வந்திருப்பான். வாறவன் பெயரையெல்லாம் கேட்டுவைச்சு நான் என்ன செய்யலாம் சொல்லு” என்றது.

பெம்மானுக்கு ஏன் நண்பர்களே கிடையாது என்பது புரிந்தது.

Birlem முடன் இவ்வாறு பேசிக்கொண்டு இருக்கையில் திடீரென்று பிரதான வீதியில் இரண்டு ஆம்புலன்ஸ் வண்டிகள் கூவிக்கொண்டு விரைந்தன.

ஆம்புலன்ஸ் சத்தத்தைக்கேட்டுக் கலவரமானவர் என்னிடம் “எட்டிப்பார்…எட்டிப்பார் ஆம்புலன்ஸ்கள் இங்கேயா வருகின்றன என்று பார் பார் பார் “ என்று பதட்டப்பட்டார்.

ஆம்புலன்ஸுக்கு மனுஷன் இவ்வளவுக்குப் பயப்படுவான் என்பது எனக்கும் அன்றைக்குத்தான் தெரியும்.

எதுக்கு அம்புலன்ஸுக்கு இத்தனை பயம் என்பது அவரது விளக்கத்தின் பின்பே எனக்குப்புரிந்தது.

அந்த முதுமக்களில்லத்திலிருந்து சுகவீனம் காரணமாக ஆம்புலன்ஸிலிருந்து எடுத்துச்செல்லப்பட்ட எவரோ எப்போதோ இறந்துபோயிருக்கிறார்கள். அதனால் அந்த வண்டிகள் தன்னை

ஏற்றிக்கொண்டு செல்லத்தான் வருகின்றனவோ என்கிற பயக்கெடுதிதான் அவருக்கு…வேறொன்றுமில்லை.

அடுத்த நாள் சென்றபோது…இரவு பயங்கரமாகக் கனவுகள் ஏதும் கண்டிருப்பார்போலும் ” “இரவிரவாய் முன்விளக்கை அணைத்துவிட்டு ஏராளம் பாரவுந்துகள் உறுமிக்கொண்டு என்வீட்டுக்கு எதுக்கு வந்தன ” என்று கேட்டார்.

இனிமேலும் அவர் இரவுகளில் பாரவுந்துகள், எருமைகள், பிஸாசுகள், சைத்தானுகள் வந்தன என்பாராயின் ஒரு உளவியலாளரை அவரிடம் அனுப்பிவைப்பதாக இருக்கிறேன்.

இன்னொருநாள் நான் Birlem ஐப் பார்க்கச்சென்று கொண்டிருந்தேன். அந்த ஹோமுக்கு 300 மீட்டர் தூரத்தில் ஒரு கியோஸ்க் இருக்கிறது. அதில் ஒரு காப்பி வாங்கிக்குடித்துக்கொண்டிருக்கையில் அந்த Polimar Home இலிருக்கும் ஒரு கிழவர் என் எதிரில் வந்து அமர்ந்தார். ஒரு முறை அவர் தன் பேச்சில் தனக்கு 86 வயது என்று சொன்னது ஞாபகம். ஓரளவு தம்பாட்டில் நடந்து திரியக்கூடிய முதியவர்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்குள்ளாக வெளியே சென்று வர அனுமதியுண்டு.

அவருக்கும் ஒரு காப்பியை வாங்கிக்கொடுத்துவிட்டு “ உங்களுக்கு வேறும் ஏதாவது வேணுமா” என்று உபச்சாரத்துக்காகக் கேட்டேன்.

“ம்…வேண்டும், எனக்கு இசை வேண்டும்” என்றார். எனக்குப்புரியவில்லை,

“என்ன மாதிரியான இசை வேண்டும்” என்று கேட்டேன்.

“என் மரணத்தை அறிவிக்கும் இசையைகொண்டுவா, அல்லது எனக்கு மரணத்தைக்கொண்டுவா.” என்றார்.

உள்ள முடி அத்தனையையும் அதிலேயே பிய்த்துப்போட்டிருக்கவேண்டும் போலிருந்தது எனக்கு. என்னிடமும் அத்தனை முடிகள் இல்லை என்பது எத்தனை சின்னப் பிரச்சனை!

வயோதிபமும் சேரியலிஸ சிந்தனைகளும்.

பகுதி – 3

இன்றும் Polimar பராமரிப்பகத்தில் பணி.

முதலில் Peter Birlem இன் அறைக்குப் போனேன். மனிதர் வெகு உற்சாகமாக என்னை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். நான் அறைக்குள் நுழைந்தவுடன்

“நான் இன்றைக்கு அதிகாலையிலேயே எழுந்துவிட்டேன்…தெரியுமோ ” என்றார்.

“ஏனாக்கும்…?”

“யாரோ என் கண்ணில் மேலும் கீழுமாக கறுப்பு நிறத்தில் கொழுப்புமாதிரி பட்டையாக எதையோ பூசிவிட்டார்கள்…மேலே தூங்கமுடியவில்லை” என்றார்.

“உமது தோழி எவளாவது வந்து உமக்கு மைதீட்டியிருப்பாள் ” சீண்டினேன்.

“அட நீயொன்று…அது என் கண்ணாடியில் அல்லவா பூசியிருந்தது” என்றார்.

அப்போது அங்கே அவரது செவிலி வரவும் அவளிடம் “ Birlem சொல்வது நிஜந்தானா” என்று கேட்டேன். அவள் அவருக்குப் பின்னால்போய் நின்றுகொண்டு அவரது தலைக்குமேல் ‘வட்டம்’ போட்டுக்காட்டினாள்.

“சரி…ஏதோ வாசித்துப்பிடுங்குகிறவர் மாதிரி…இனிமேல் கண்ணாடியோடு தூங்காதீரும்…” என்றேன்.

வழமையான முகமனுக்குப்பிறகு ஒருவித உரிமையுடன்

“தோழர் இன்று என்ன எனக்குக் கொண்டுவந்தாய்…?” என்றார்

“செப்டெம்பர் மாதத்தின் வெயிலைத்தான் ஏராளம் கொண்டுவந்திருக்கிறேன்” என்றுவிட்டு அவருக்கு நான் எடுத்துப்போயிருந்த திராட்சைக்குலையையும் பியர்க்குப்பியையும் கொடுத்தேன். முதலில் பியர்க்குப்பியை எடுத்து அதன் குளிர்ச்சியைக் கன்னத்தில் வைத்து அனுபவித்துவிட்டு “மிக்க நன்றி” என்றபடி அதற்கொரு முத்தம் கொடுத்துவிட்டு “இதை இப்போதே நான் குடிக்கவா” என்றார்.

“இப்ப எதுக்கு மதிய உணவுக்கு முன்னதாகக் குடித்தால் கொஞ்சம் பசி எடுக்கும்” என்றேன்.

Saatkrähe

“அதுவும் சரிதான்” என்றுவிட்டு அதைக்குளிர்பதனப்பெட்டியுள் வைத்து மூடிவிட்டு கோடைக்கான மேலங்கி ஒன்றை எடுத்து அணிந்துகொண்டார்.

வெளியே உலாத்தப் புறப்பட்டோம். வெளியே முகத்தில் வெயில் பட்டதும்

“எனக்குச் சீக்கிரம் Winter வந்துவிடவேண்டும்…….. போலிருக்கு” என்றார்.

“ஏனோ…” என்றேன்.

“பனியைப் பார்க்க ஆசையாயிருக்கு, அதைக்கைகளில் அள்ளவேண்டும் போலிருக்கு ”

“இப்போதுதான் கோடைமுடிகிறது…இனி Herbst (இலையுதிர்காலம்) வந்துதானே Winter வரும் அள்ளலாம்” என்றேன்.

“ஏன் அப்படி…” என்றார் வெள்ளந்தியாய்.

‘மூன்றாம்பிறை’யில் கமல் ஸ்ரீதேவிக்கு அளித்தபதில் ஞாபகத்துக்கு வரவும் “அது அனாதியிலிருந்தே அப்படித்தான்” என்றேன்.

“அப்பச்சரி…” என்றார்.

Polimar பராமரிப்பகத்திற்கு அணுக்கமாக Marzahner Park என்றோரு பூங்கா அமைந்திருக்கிறது. அதை நோக்கியே நடந்தோம்.

“நாட்டிலே என்ன விஷேசம்” என்றார் நடப்புகளின் பெரும் ஆய்வாளன்போல.

முதல் வாரந்தான் அஞ்ஜெலா மேர்கல் மீண்டும் அதிபர் தேர்தலில் ஜெயித்து வந்திருந்தார்.

“அஞ்ஜெலா மேர்கல் மீண்டும் வந்துவிட்டார் தெரியுந்தானே…” என்றேன்.

“என்ன…போனவள் மீண்டும் வந்துவிட்டாளா…” என்றார் ஆச்சரியத்துடன்.

“அவர் ஓரிடமும் போகவில்லை…அவரே தொடர்ந்து ஹவுஸில் இருக்கப்போகிறார் ” என்றேன்.

“யார் அந்தச்சிறுக்கி அஞ்ஜெலா…பொல்லாத வீம்புக்காரியாக இருப்பாளோ?” என்றார் Birlem.

உலகவிஷயங்களை இவ்வாறு யாம் அலசிக்கொண்டு சென்றுகொண்டிருக்கையில் பெர்லினுக்கு சுற்றுலா வந்தவர்களாயிருக்கவேண்டும் ஆணும் பெண்ணுமாக இரு இளைஞர்களின் வழிநடத்தலில் இருபத்தைந்து வரையிலான பள்ளிச்சிறுவர்கள் வரிசையில் எங்களை முந்திக்கொண்டு சென்றார்கள். Birlem அவ்வழிகாட்டிகளைச் ‘ஹலோ மெஸூர், மெடம்’ என்று சத்தமாகக் கூப்பிட்டார். நான் அவர்களிடம் என்னதான் கோளாறு வலிக்கப்போகிறாரோ என்ற அச்சத்தில் இருந்தேன். அவர்களும் குழந்தைகளை அப்படியே ‘நில்லுங்கள்’ என்றுவிட்டு அவரிடம்வந்து மரியாதையுடன் “என்ன பெரியவரே’ என்று விசாரித்தனர்.

“நீங்கள் குழந்தைகளை வழிநடத்திச்செல்லும் முறை சரியில்லை, தயவுசெய்து வரிசையின் முன்னாக ஒருவரும், கடைசியில் ஒருவருமாக நின்று குழந்தைகளை அழைத்துச்செல்லுங்கள். நீங்கள் முன்னே சென்றுகொண்டிருந்தால் பின் தொடரும் குழந்தைகளுக்கு எது நடந்தாலும் உங்களுக்குத் தெரியாதல்லவா” என்று கண்டிக்கும் குரலில் சொல்லவும் அவர்களும் சிரித்தபடி நன்றிசொல்லிவிட்டு அப்படியே நடத்திச்சென்றனர்.

வழிநடத்துபவர்களில் அந்தப்பெண் பம்பாய் மிட்டாய் வர்ணத்தில் தலைக்குச்சாயம் பூசியிருந்ததைக் கவனித்துவிட்ட Biirlem

“அவள் தலையிலுள்ள பேன்கள்தான் பாவம்” என்றார்.

“புரியலையே…”

“அந்தப்பேன்கள் எல்லாம் நாம் இன்னும் அவள் தலையில்தான் இருக்கிறோமா…இல்லைத் தவறிப் பஞ்சுமிட்டாய்ப் பெட்டி எதுக்குள்ளும் விழுந்துவிட்டோமோவென்று ஏங்கித் தவிக்கப்போகுதுகள்” என்றார்.

பூங்காவுக்குள் போய் மரவாங்கொன்றில் அமர்ந்தோம். Birlem சிகரெட் ஒன்றைப் பொருத்தினார்.

“Birlem நீரும் மழலையர் பள்ளிக்குச் சென்றிருக்கிறீரா” என்று கேட்டேன்.

“இல்லை, அது என் பப்பாவுக்குப்பிடிக்கவில்லை…நான் தனிப்பிள்ளைதானே…அதனால் தனியாக ஒரு ஆசிரியை நியமித்து என்னை வீட்டிலேயே கவனித்துக்கொண்டார்.”

“அதுக்கெல்லாம் நிறைய பொருண்மியப் பின்னணி இருந்திருக்கவேணுமே…. பப்பா என்ன பணியிலிருந்தார்….”

“எங்களுக்குப் பொருண்மியக் குறைகளிருக்கவில்லை, போருக்கு முன்னிருந்தே எங்கள் நிலங்களிலிருந்து கரியைவெட்டி எடுத்துக்கொண்டிருந்தார்கள், அந்தவகையில் எங்களுக்கு ஆண்டாண்டு நிறையப்பணம் வந்துகொண்டிருந்தது.” என்றார்.

“சரி…சின்னவயதில் நிறைவேறாத ஆசைகள், விருப்பங்கள் இப்படி ஏதும் உமக்கு இருந்தனவா?”

“எனக்கொரு தம்பியோ தங்கையோ பெற்றுக்கொடு என்று நான் பலதடவை பப்பா,மமாவிடம் கேட்டேன், எவ்வளவு முயன்றும் அவர்களால் அது முடியவில்லை” என்றுவிட்டு உதட்டைப்பிதுக்கினார்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது விமானமொன்று இரைச்சலுடன் வானில் சென்றுகொண்டிருந்தது. தலையை நிமிர்த்தி அண்ணார்ந்து அதைப்பார்க்க முயன்றார் Birlem. அன்றையநாள் மப்பும் மந்தாரமாயும் இருந்ததால் ஒன்றுந்தெரியவில்லை. அதன் இரைச்சல் கடந்து போனபின்னால் “ நான் ஒரு தடவையாவது விமானத்தில் பறந்ததில்லை தெரியுமோ…மூர்த்தி.” என்றார்.

விமானத்தில் பறக்காததை விடவும் அவர் என் பெயரை ஞாபகம் வைத்துச்சொன்னதுதான் எனக்கு ஆச்சரியம்.. யாழ்ப்பாணத்தில் பிறந்ததிலிருந்தே தொடரியிருப்புப்பாதை அருகில் வாழ்ந்திருந்த ஒரு தோழி ஒருமுறை என்னிடம் “ நான் ஒரு தடவைகூட ரயிலில் போனதில்லை ” என்றிருக்கிறார். சந்தர்ப்பங்கள் எல்லோருக்கும் அமைவதில்லை தமிழகத்தில் நாகையருகில் வாழும் ஒரு மூதாட்டி. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் “ நான் இன்னும் ரயிலையே பார்த்ததில்லீங்க ” என்றதும் ஞாபகத்துக்கு வந்தது.

வெளியுலகத்தொடர்புகள் குறைந்த கிழக்கு ஜெர்மனியில் வாழநேர்ந்த பலரும் இவரைப்போலவே அன்னாசி, மாம்பழம், வாழைப்பழம், மாதுளை, பப்பாளி, மங்குஸ்தான், றம்புட்டான், கொடித்தோடை, பலா / டோறியான், , தேங்காய், கிவி போன்ற பழங்கள் எதையுமே கண்ணாலே காணாதவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

“விமானத்தில் பறப்பது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை இன்னும் இந்தியாவிலும் ஆபிரிக்கநாடுகளிலும் ரயிலையோ விமானத்தையோ கண்டிராத பலர் இருக்கிறார்கள்” என்று சமாதானம் செய்தேன்.

“மெய்யாலுமோ…” என்றவர் கொஞ்சம் திருப்தியடைந்ததைப்போல் இருந்தது.

“நாங்கள் பறக்க விரும்பியபோது அவர்கள் எம்மைப் பறக்க அனுமதிக்கவில்லை……….. இப்போது எங்கேயாவது பறக்கலாம் போலத்தெரிகிறது, இந்த உலோகாயத உலகத்தில் ஒரு உருளியிருக்கைக்காரனை எவர்தான் கூட்டிப் போக முன்வருவார்கள்…?”

Birlem ‘அவர்கள்’ என்றது கிழக்கு ஜெர்மன் அரசாங்கத்தை.

“சரி…முடிந்தவரை முயல்வோம்…ஒருவேளை சந்தர்ப்பம் அமையலாம்…… பெர்லின் சர்வதேச விமானநிலையம் திறக்கட்டும், ஒரு

நாள் நீரும் நானும் ஹாம்பேர்க் வரைபோய் திரும்பிவருவோம்” என்று நம்பிக்கையூட்டினேன்.

புன்னகைத்தார்.

“சரி…இதைப்போல் வேறும் நிறைவேறாத ஆசைகள், விருப்பங்கள் இப்படி ஏதும் இருக்கிறதா?” என்றேன்.

“வேறெதையும் பெரிதாகச் சொல்லமுடியாது ” என்றவர் கண்களைமூடிச் சற்று யோசித்துவிட்டு “வேண்டுமானால் நான் ஒருபோதும் கடற்பரப்பில் Surfing செய்ததில்லை என்பதைச் சொல்லலாம்” என்றார். (Surfing on Segel boat > பாய்மர மிதவைச் சறுக்கல்)

“இவ்வளவும் உனக்காகச் செய்த பப்பா உன்னை Surfing க்கு மட்டும் அனுமதிக்கவில்லையா என்ன….” என்றேன்.

“இல்லை இல்லை…பப்பாவுக்கு இதில் பங்கொன்றுமில்லை, Birlem க்குத்தான் நீந்தவே தெரியாதே, Surfing….. செய்வதெப்படி…?” என்றுவிட்டு அவரே குலுங்கிக்குலுங்கிச் சிரித்தார். நான் அவரைப் பார்த்துக்கொண்டிருக்கவும் “உனக்குத்தான் Lichtenberg இல் Siegfried Strasse யிலிருக்கும் பேருந்துச்சாவடி தெரியுமே…அதன் அருகில் அப்போது நீச்சல்தடாகங்கள் இருந்தன. நீந்தப்பழகப்போவதாக சொல்லிவிட்டு நேராகப்போய் 5 மீட்டர் ஆழமுள்ள தடாகத்தில் மற்றவர்களைப்போல் உயரமான தளத்தில் ஏறித் தலைகீழாகக் குதித்தேன், மேலேவரத் தெரியவில்லை, முக்குளித்துத் ‘தனி’ வாசித்துக்கொண்டிருக்கையில் என்னைக் கவனித்துவிட்ட நீச்சல்பயிற்றுனன் பாய்ந்துவந்து என்னைத்தூக்கி எடுத்து ‘இந்தப்பக்கம் இனிமேல் தலைகாட்டப்படாது’ என்று எனக்கு மண்டைபூராவும் கொட்டி எச்சரித்து வீட்டுக்கு விரட்டிவிட்டான். அதன் பின்னர் நீந்துவதற்காக நான் தடாகங்களுக்கோ, கடலுக்கோ போனதேயில்லை” என்றார்.

“நீர் போயிருந்த தடாகத்தில் பயிலுனர்களுக்கான வேறு ஆழங்குறைவான தடாகங்கள் இருந்திருக்குமே…….?”

“இல்லாமல் எப்படி…எல்லாம் இருந்திருக்கும், அதையெல்லாம் தேடிப்பார்க்கும் பொறுமை எனக்கு இருந்தால்த்தானே…இப்ப தெரிஞ்சென்ன ” என்றுவிட்டு மீண்டும் குலுங்கிச் சிரித்தார்.

பப்பாவுக்கு புகைப்பழக்கம் இல்லை, அவருடைய சிற்றுந்தில் முன் ஆசனத்தில் ஏறியமர்ந்துகொண்டு புகைத்தேனாகில் என்னைப் ‘பின்னுக்குப்போடா பன்றிக்குப்பிறந்த பன்றி’ என்று விரட்டுவார்…அப்படி

விரட்டினான்பா அந்த நீச்சல்பயிற்றுனன் ” என்றுவிட்டு மீண்டும் குலுங்கினார்.

“இப்போ எதுக்காம்…?”

“அன்றைக்கு 2 மீட்டர் உயரப்பன்றிகளும் இருக்கோ பப்பா…….. என்று கேட்டுவிட்டேன்…………. இருக்கும் தேடிப்பார்த்துக்கொண்டு ‘நிதானமாக வீட்டுக்கு வா’ என்று என்னைப் பாதிவழியில் வண்டியால் இறக்கிவிட்டுவிட்டார்…கல்நெஞ்சன்.”

“ஏதோ ஒரேபிள்ளையானபடியால் அன்று தப்பித்தீர்………என்னுடைய அப்பாவானால் அதிலவைத்தே என்னை வகுந்து போட்டிருப்பார்” என்றேன்.

என் அப்பாவுக்குப் பக்கத்தில் அமர்ந்துகொண்டு நான் புகைவிட்டிருப்பேனாகில் என் பிடரிக்கு எப்படியான பூரணகும்பமரியாதை நடந்திருக்கும் என்பதை நினைத்துப்பார்த்தேன். எனக்கும் சிரிப்பு வந்தது.

“இப்போ எதுக்குச்சிரிகிறாய் ” என்றார் Birlem.

“நாம் இவ்வாறு பழமைபாடுகள் பேசிக்கொண்டிருக்கையில் எமக்கருகாக கரியநிறத்தில் இரட்டைவால்க்குருவியின் தோற்றத்தில் ஆனால் ஒரு குயிலளவு பருமனுடைய ஒரு பறவை தத்திக்கொண்டு வந்தது. அணுக்கத்தில் அதன் இறக்கைகளின் மறைவுப்பகுதியும் நெஞ்சும் பால்வெள்ளையாயிருந்தன. சற்று நேரத்தில் அதைத்தேடிக்கொண்டு அதன் இணையும் வந்து சேர்ந்தது. ‘அட இவைகள் வருமென்று தெரிந்திருந்தால் கொஞ்சம் விதைகள் வாங்கிக்கொண்டு வந்திருக்கலாம்………..ம்ம்ம்ம் அந்தப்பறவைக்கு என்னபெயர்’ என்று கேட்டார். ஜெர்மனில் அதற்கு என்ன பெயரென்று எனக்கும் தெரியவில்லை. Magpie யின் சாயல்கள் கொஞ்சம் இருந்தன. எங்களூர் ‘இரட்டைவால்க்குருவி’யின் சாயல். பூங்காவின் ஒரு பக்கமாக விளையாடிக் கொண்டிருந்த பையன்களிடம் ‘அந்தக்குருவிக்கு என்ன பெயர்’ என்று கேட்டோம். ‘அது Estel’ என்றுவிட்டுக் கேலியாகச் சிரித்தார்கள். ‘ம்ம்ம்ம்……இரண்டு பெரிசுகளுக்கும் Estel ஐத்தெரியவில்லையாம்’. கூகிளில் Estel ஐத்தேடியபோது அதை Eurasian Magpie என்றும் அதன் உயிரியல் பெயர் Pica Pica என்றுங்கூறியது.

Eurasian Magpie

“ பார்த்தியா எவ்வளவு பெரிய விளையாட்டுமைதானம், பள்ளிகளுக்கும் விடுமுறைக்காலம் மூன்றேமூன்று சிறுவர்கள்தான் விளையாடுகிறார்கள்” என்றார் வருத்தமாக.

“என்ன…மீதிப்பேர் வீட்டிலிருந்து தொலைக்காட்சி, கணினி, ஐ-பாட், இணைவலை விளையாட்டுக்கள் எதிலாவது கண்ணாடியைப் போட்டுப் பூஞ்சிப் பார்த்தபடி விளையாடிக் கொண்டிருப்பார்கள்” என்றேன்.

பொழுதும் ஏறிக்கொண்டிருந்தது. 12:00 மணி, அவரை மதியபோசனத்துக்கு எதிர்பார்க்கப்போகிறார்கள். நாம் மெல்ல எழுந்து தத்தத்தொடங்கினாலே அங்கு நேரத்துக்குப் போகலாம்.

“கிளம்புவோம் ” என்றேன்.

“அதற்கிடையில் இன்னொன்று புகைக்கட்டுமா” என்றுவிட்டு சிகரெட் பெட்டியை எடுத்து முகர்ந்தார்.

மனிதர்களிடம் ஏதாவது கொறிப்பதற்கு இருக்கும் என்கிற நினைப்பில் வழியில் இரண்டு காகங்களும் எங்கூடத்தத்திக்கொண்டு பின் தொடர்ந்தன. இங்கத்தைய காகங்கள் நம்மவூர்க் காகங்களைப்போல் கருமை இல்லை, வெண்சாம்பல் நிறம். அவற்றின் தொண்டையும் வயிற்றுப்பகுதியும் பழுப்பு கலந்த வெண்ணிறத்தில் இருக்கும். கரைவதும் மிகக்குறைவு. சும்மா சும்மா குருவிகளைப்போலத் தம்பாட்டுக்கு வந்து போய்க்கொண்டிருக்கும். உபத்திரவம் எதுவுமில்லை. வழமையில் காகத்தைக்கூட விநோதமாகப் பார்க்கும் Birlem இன்றைக்கு அக்காகங்களைக் கண்டதும் “இவை என்ன அந்த Estel களின் அம்மா அப்பாவா” என்றார்.

“இல்லையே வடிவாகப்பார்த்துச் சொல்லும்”

“ஆஹா…எனக்குத்தெரியுமே…இதுதான் Rabe (காகம்)” என்று ஒரு சிறுவனுக்குரிய குதூகலிப்புடன் சொல்லிவிட்டு “ எனக்குக் காகத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லேன்” என்றார். உடனே மனதில் எதுவும் வரமறுத்தது.

பாட்டி வடைசுட்ட கதையைக் கொஞ்சம்மாற்றி ஒரு பாட்டி ’டோனட் ’ விற்றுக் கொண்டிருந்ததாகச் சொன்னேன்.

என்னை மடக்குவதுபோல் ”பாட்டிமாரையும் வேலைசெய்ய அனுமதிப்பார்களா” என்றார்.

“இது பலநூறு வருடங்களுக்கு முந்திய கதைதானே…சட்டக்கெடுபிடிகள் அத்தனை இருந்திருக்காது” என்றேன். ‘ஆமோ’ என்றார். என்னோடு சேர்ந்த பிறகு Birlem மும் இப்போ படுபுத்திசாலியாகிவிட்டார், ஆதலால் பெம்மான் எக்குத்தப்பாக ” நரி எப்படிக் கதைக்கும்” என்று கேட்டுக் கதையை நிராகரித்துவிடுவாரோ என்ற பயமும்கூட வந்தது. நல்லகாலம் அவர் ஏனோ அன்று அத்தனை ஆழத்துக்குப் போகவில்லை.

மிகுதித் தூரத்துக்கு எதைச்சொல்லலாம் என்று சிந்திக்கையில் என்.எஸ்.கிருஷ்ணன் “இந்த ஊரில் எத்தனை காக்காக்கள் இருக்கு சொல்லுபார்க்கலாம்” என்று ஒரு புதிர் போட்டு அதை எஸ்.பாலச்சந்தர் நடித்துக்காட்டியது ஞாபகம் வந்தது.

“காகங்கள்பற்றிய ஒரு ஜோக் இருக்கு சொல்லட்டுமா?” என்றேன்.

“சொல்லு…. சொல்லு…. சொல்லு…. நீ நல்லாவே சொல்லுவாய்”

“ஒருமுறை எங்கள் ஊருக்கு வந்தவொரு ‘பரதேசி’ என்னிடம் இந்த ஊரில் எத்தனை காக்காக்கள் இருக்கு சொல்லு பார்க்கலாம் என்று புதிர்போட்டான், நல்லாய் யோசித்துப்பார்த்துவிட்டு தொள்ளாயிரத்து தொண்ணூத்து ஏழு என்றேன்.”

“அதெப்படி அவ்வளவு கரெக்டா சொல்றே…எண்ணிப்பார்க்கையில் எட்டுப்பத்து அதிகமாயிருந்திச்சின்னா…என்றான் பரதேசி”

“அதிலென்ன அதிசயம்…அவையெல்லாம் வெளியூரிலிருந்து இங்கே விருந்தாட வந்தவையாயிருக்கும் என்றேன்”

“அப்ப…கொறச்சலா இருந்திச்சின்னா…”

“ அட…….. நம்மவூர்க் காக்காக்கள் வெளியூருக்கு விருந்தாடப்போயிருக்கும்பா…… என்றேன்……..பரதேசி வாயடைத்துப்போனான் ”

“அப்பச்சரி…நீ சாமர்த்தியசாலி” என்றுவிட்டுப் புன்னகைத்தார் Birlem.

‘இன்னொன்று தன் உணவை அதுதட்டிப்பறித்தாலும் உலகத்திலேயே காகம் ஒன்றுதான் பகிர்ந்துண்ணும் பறவை’ என்பதைச்சொல்லி அவை எங்கேயாவது உணவைக் கண்டுவிட்டால் தானே தனித்து உண்ணாமல்…கரைந்து தம் சுற்றத்தவர் அனைவரையும் அழைத்தே உண்ணும்’ என்று அதன் குணத்தைப்பற்றி ஒரு சிற்றுரையாற்றிவிட்டு. ’பராசக்தி’யில் வரும் சிதம்பரம் எஸ்.ஜெயராமனின் ‘ஆகாரமுண்ண எல்லோரும் நீங்க அன்போடு ஓடிவாங்க’ என்றபாடலை மெட்டைக்கொஞ்சம் மாற்றி சொற்களிடையே கார்வை சேர்த்து ஒரு மெலோடிராமாப் பாடலைப்போல இழுத்துக்காட்டவும் Polimar பராமரிப்பகம் வந்துவிட்டது

என் திவ்யகீதம் நிறைகையில் அதன் சந்தங்கள் உருக்கியதோ, இல்லை மனிதனிடங்கிடையாத காக்கையின் அருங்குணம் நெகிழ்த்தியதோ, அல்லது அடுத்த செவ்வாய்க்கிழமை வரையில் அவரைவருத்தப்போகும் தனிமையின் துயரத்தை நினைத்தாரோ…விடைபெறுகையில் Birlem இன் கண்கள் பனித்திருந்தன.

– ஜீவநதி சஞ்சிகை (இலங்கை) Feb. 2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *