(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தட்டுக் கழுவும் வேலைக்கு இத்தனைப் போட்டி இருக்கும் என நான் என்றுமே நினைத்தது கிடையாது. வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பம் பரோட்டா கடையில் வாரா வாரம் மாறும் தட்டுக் கழுவும் பிஹாரி வேலைக்கார பையன்கள் நினைவுக்கு வந்தனர். 10 ரூபாய் பரோட்டாவைத் தின்று விட்டு அவர்களை நான் விரட்டிய விரட்டிற்குதான் இங்கு இருக்கின்றேனோ என சமயங்களில் தோன்றும். சாம பேத தான தண்ட முறைகளைப் பயன்படுத்தி இந்த ஐநூறு ஈரோ பெறுமான வேலையப் பெற நான் பட்ட பாடு இருக்கே அது சொல்லி மாளாது.
வாழ்க்கையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒரு ஆறு மாதங்கள் ஆவது, ஐரோப்பாவில் ஆங்கிலம் பேசாத நாடு ஒன்றில் மாணவனாக வாழ வேண்டும். இந்த வேலையைக் கூட, ஏதோ நான் கலெக்டர் வேலையைத் தட்டிப்பறிந்து கொண்டதைப்போல இந்த உணவக மேலாளர் அடிக்கடி சீண்டுவான். செய்கூலி சேதாரம் எல்லாம் பார்த்தால் கால்படி கூடத் தேறாது என்பதால் பல்லைக் கடித்துக் கொண்டு இருந்துவிடுவதுண்டு.
“ஐரோப்பாவின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு காரணம் என்னவென்று நினைக்கிறாய்” ஆஹா சீண்டுகின்றான் எனத் தெரிந்தது.
“அரபு, ஆப்கானிஸ்தான் அகதிகள், அப்புறம் இந்த கருப்பர்கள்”, இந்தியர்கள் எனச்சொல்லுவதைத் தவிர்த்துவிட்டேன்.
“எங்களது சமுதாயம் சார்ந்த மறுமலர்ச்சிகளை உன்னைப்போன்றோர்
பயன்படுத்திக்கொள்கின்றனர்” எனது மேலாளர் சொன்ன உன்னைப்போன்றோரில் அவன் கண்களுக்கு இந்தியர்களாக தெரியும் அனைவரும் அடங்கிவிட்டனர்.
நான் இருக்கும் புறநகரப்பகுதி காலங்காலமாய், வலதுசாரி அரசியல் அனுதாபிகளைக் கொண்டது. வெளியில் இருந்து வந்தவர்களை உள்ளே விட்டதில்தான் அத்தனைப் புனிதமும் போய்விட்டது என்ற கருத்து சன்னமாக அனைவரிடமும் பரப்பப்பட்டும் வருகின்றது. சிறுபான்மையினர் அதிகமாகும்பொழுது, பெரும்பான்மையினர் தகவமைத்தலில் ஒன்றாகத்தான் சேர்வார்கள். வலதுசாரி தேசியம் பேசுபவர்கள் பழம்பெருமையை உசுப்பேற்றி மக்களைத் தன்பக்கம் ஈர்ப்பார்கள். முசௌலினி கூட, ரோம சாம்ராஜ்யத்தை மீளுருவாக்கம் செய்வோம் எனச்சொல்லித்தான் பதவிக்கு வந்தாராம்.
அகதிகள், மாணவர்கள், தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலைப்பார்க்கும் கூலிகள் எல்லோரும் வெளியில் இருந்து வந்தவர்கள். இதில் ஏதோ ஒரு தென்னிந்தியாவின் ஆனந்தா சாமியார் வேறு முகாம் போட்டு இருக்கிறார். தடை செய்யப்பட்ட பொருட்கள் ஆசிரமத்தில் கிடைப்பதால் பக்தி படுவேகமாக பரவிக்கொண்டிருக்கின்றது என்ற பேச்சு வேற.
10 சதவீதத்திற்கு மேல் இருக்கும் வந்தேறிகளால் நிச்சயம் இந்தப்பகுதியின் பொருளாதாரம் மேம்படுகின்றது. பணப்புழக்கம், உணவகங்கள், குடியிருப்புப் பகுதிகள் என 15 வருடங்களுக்கு முந்தையதைக் காட்டிலும் கண்டிப்பாக இந்தப் பகுதி பெரும் வளர்ச்சி அடைந்திருக்கின்றது என்பதை மண்ணின் மைந்தர்கள் உணர்வதில்லை.
“இந்த முறை, அகதிகளை வெளியேற்றும், வெளிநாட்டவர்களின் வருகையை குறைக்கப்போகும் வலதுசாரி கட்சிதான் ஆட்சிக்கு வரப்போகிறது, நீ எல்லாம் உன் பிச்சைக்கார நாட்டிற்குத் திரும்ப ஓடிவிட வேண்டும்” என மேலாளர் போதையில் நக்கல் அடிக்க கக்கூஸில் வைத்து அவனை மூக்கில் மூன்று முறை குத்தினேன்.
வேலை போன பிறகு கொஞ்ச நாள் இந்தி தெரியாமலேயே ஒரு பஞ்சாபி கடையில் வேலைப்பார்த்தது சிரமமாகத் தெரியவில்லை. கூலிகள் மட்டுமே தேவைப்படும் இந்த நாட்டில், என் மேலாண்மை படிப்பிற்கு வேலைக் கிடைக்கும் எனத் தெரியவில்லை. ஒரு மாதம் வேலைத் தேடியதில் எதுவும் சரிப்பட்டு வராததால் தமிழ்நாட்டிற்கேத் திரும்பினேன். ஆண்ட பரம்பரையை மீட்போம், வந்தேறிகளை விரட்டுவோம் என எனக்குப்பிடித்த திரைப்பட இயக்குனர் ஒருவர் கையை உயர்த்தியபடி வசீகரமாக இருந்த போஸ்டர் என்னை வரவேற்றது. அவரது வசீகரத்தில், நான் மூக்கில் குத்திய உணவக மேலாளரின் முகம் நிழலாடியதையும் சொல்லித் தான் ஆகவேண்டும்.
வந்த ஒரு மாதத்தில் ஒட்டு மொத்த ஐரோப்பிய வாழ்க்கையில் சந்தித்த மேலாளர்களை விட அதிகமான வந்தேறிகளை விரட்டும் தமிழ் பேசும் மானேஜர்களை சந்தித்துவிட்டேன்.
மூக்குவிடைப்பு சாதி ஒன்றின் தலைவரான எனது சூனாபானா மாமா கூட, தமிழ் தேசியம் பேச ஆரம்பித்துவிட்டார். எனது அப்பாவைத் தவிர, எனது சொந்தங்கள் அவரின் பேச்சை வைத்தக் கண் வாங்காமல் கேட்டுக்கொண்டிருந்தனர். முதன் முறையாக தமிழ் தேசியம் சார்ந்த உணர்வு பயமாக மாறியது.
– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு:http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.