கசங்கியத் தாளில் எழுதப்பட்டிருந்த கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 4, 2023
பார்வையிட்டோர்: 533 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கையில் சிக்கும் தாள்களில் எழுதப்பட்டிருப்பதை எல்லாம் படிக்கும் கார்த்திக்கு அன்றும் ஒரு கசங்கிய காகிதம் சிக்கியது,

அந்த சிக்கிய காகிதத்தில் எழுதப்பட்டிருந்ததை அவனுடன் நீங்களும் வாசியுங்கள்.

ஒத்திப்போடுவது என்பது தப்பித்தலுக்கான வழி. முடிவு யாருக்கு வேண்டுமோ அவரை, ஓர் உறுதியற்ற நிலையிலேயே அல்லாட வைத்தல்.

அது நேரடி நிராகரித்தலை விட அதிகமான வலியைக் கொடுக்கக்கூடும்.

கிடைக்குமா கிடைக்காதா என்றத் தவிப்பை நீட்டிக்க வைத்து சில நாட்களோ, மாதங்களோ ,வருடங்களோ,கழித்து சாதகமான முடிவை சொன்னால் பிரச்சினை இல்லை, ஒரு வேளை எதிர்மறையாய் இருந்தால் பீலிபெய் சாகாடும் போல ஆகிவிடுமே!! சில முடிவுகளை வெட்டு ஒன்று துண்டு இரண்டு என எடுக்க முடியாது.

ஆம் என்பதற்கும் இல்லை என்பதற்கும் இடையில் கோடிக்கணக்கான புள்ளிகள் இருக்கின்றன. அத்தகைய ஒரு புள்ளி தான் ஒத்திப்போடல்.

அம்முவிற்கும் எனக்கும் ஒன்றரை தலைக்காதல் ஓடிக்கொண்டிருக்கிறது. அவளுக்கு என்னை அப்படியே பிடித்து இருக்கின்றது. எனக்கும் முழுதாகத்தான் பிடித்து இருக்கின்றது, ஆனால் கடந்தகாலங்கள் நிகழ்காலங்களுக்கு மொழிப்பெயர்க்கப்பட வேண்டியிருப்பதால், பிடித்ததில் பாதி காணாமல் போய்விடுகிறது. எனக்குப் பெண்களைப்பிடிக்கும்,

அதுவும் சாண் ஏறி முழம் சறுக்கினாலும், மீண்டும் மீண்டு வரும் ஃபீனிக்ஸ்களை அதிகமாகவேப் பிடிக்கும்.

பதின்மங்களிலும் ஆரம்ப 20 களிலும், கட்டினால் இவளைக் கட்டனுமடா என்ற வகையில் கற்பனைசெய்து வைத்திருந்த லட்சியக் கனவு தேவதைதான் அம்மு. இடையில் வந்த சிலப்பல மாதிரி அம்முக்களால், தற்கொலை செய்து கொண்ட கனவு லட்சிய தேவதை மீண்டும் உயிர்த்தது கடைசி சில மாதங்களாக.

ஆண்கள் பக்கம் பக்கமாக எழுதி சொல்லும் உணர்வுகளை பெண்கள் ஒரு வரியில் எழுதிவிடுவார்கள். ஒரு இனிய மாலைப்பொழுதில் கண்ணுக்குக் கண்ணாகப் பார்த்து காதலிக்கின்றேன் என்ற ஒரு வார்த்தை கவிதையையும் எழுதி விட்டாள்.

எனக்கு வந்த நிராகரிப்பான “உங்களை நான் பிரண்டாத்தான் நினைச்சேன்” மாதிரியான கேனைத்தனமான விசயங்களை எல்லாம் சொல்லி அம்முவைத் தட்டிவிட விருப்பம் இல்லை.

உண்மைகளை அப்படியே சொல்லலாம், கொஞ்சம் தற்குறிப்பேற்றி கதைகளாகவும் சொல்லலாம். பெண்கள் மென்மையானவர்கள் என்று சொல்வதும் ஆணாதிக்கம்

என்றாலும், அம்மு உண்மையிலேயே மென்மையானவள், மழலைக்கு ஊசிப்போடும் பொழுது, கொஞ்சம் மழலைத்தனங்களை முகத்தில் கொண்டு வந்து, வலிகுறைவாக இருக்கும்படி ஊசி போடுவது எப்படி என்பது மருத்துவருக்குத் தெரியும்.

சில வரிகள் கொண்ட கீழ்க்காணும் ஓர் உருவகக்கதை எழுதினேன்,

தலைமுறையாய் தொடரும் கிளிகளின் ஏமாற்றத்தை தவிர்க்க இது இலவமரம், இங்கிருப்பது எல்லாம்
இலவம் பஞ்சின் காய்கள் என்று அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. அதன் பின்னரும் கிளிகளின் வருகை தொடர்ந்ததைப்
பார்த்த மரம், இந்தக் காய்கள் என்றுமே கனியாகாது என்றும் எழுதிவைத்தது. அப்படியும் ஒரு கிளி வந்து காத்துக் கொண்டிருந்தது..
இந்தக் கிளியைக் காயப்படுத்தக் கூடாது என நினைத்த மரம், இலவங்காய்களைப் பழுக்கவைக்கவும் இல்லை,
பஞ்சாக மாற்றவும் இல்லை. Indefinitely wait shall continue!!

கதையை அவளின் மின்னஞ்சலுக்கு அனுப்பினேன். மனதில் இருந்து வரும் பதில்கள் சடுதியில் வரும், உடனடியாக அம்முவிடம் இருந்து மின்னஞ்சல்

“அவனுக்காக சிந்திய முதல் துளி கண்ணீர் கூட அழகுதான்… :)”

கடைசியில் இருக்கும் சிரிக்கும் பொம்மை ஏகப்பட்ட அர்த்தங்களைக் கொடுத்தது.

படித்து முடித்த கார்த்திக்கு இது சிறுகதையா, வெறும் நாட்குறிப்பா, தொடர்கதையின் ஓர் அத்தியாயமா எனத் தெரியவில்லை. வழக்கமாகப் படித்தவுடன் காகிதங்களைத் தூக்கி எறிந்துவிடுபவன், இந்தக் கசங்கிய காகிதத்தை சீர்படுத்தி பத்திரப்படுத்திக் கொண்டான்.

– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு:http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *