வட்டியும் முதலும்…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 22,743 
 
 

ஐநாக்ஸில் ‘ஏக் தீவானா தா’ ஷோ! தியேட்டர் முழுக்க பெண்களும் பையன் களுமாக டீன் டிக்கெட்டுகள். படம் திரையில் ஓடிக்கொண்டு இருக்கும் போதுகூட மொபைல் மூலம் மெசேஜ், சாட் என்று பரபரப்பாக இருக் கிறார்கள். இன்டர்வெல்லில் ஆளுக்கொரு பக்கம் ”க்ராஷ் மாமா… நோ சான்ஸ்ரா!” என பேசிக்கொண்டு திரிகிறார்கள். ஷேர் ஆட்டோவில் ஏறினால் திமுதிமுவென இன்னொரு காலேஜ் கூட்டம். அத்தனை பேர் கையிலும் மொபைல்கள். கணிசமாக 3ஜி. இதிலும் பாதிப் பேர் இன்பாக்ஸைத்தான் மேய்ந்துகொண்டு இருந்தார்கள். ”மச்சி… கேம்பஸ்ல நான் விப்ரோதான். கன்ஃபார்ம்!” என்றது ஒரு ஷார்ட்ஸ். ”குல்லு… நீ கிங்ஃபிஷர்ல போய் மாட்டிக்காதரி… அங்க மல்லையாவுக்கே வேலை இல்லையாம்!” என்றது ஒரு த்ரீபோர்த். இப்படியே தி.நகர் வரை கச்சேரி.

வீட்டுக்குப் போகிற வழியில் திருச்சியில் பொறியியல் படிக்கிற என் சித்தப்பா பையன் அருண் போன் பண்ணி, ”அண்ணே… இன்டன்ஷிப் சென்னைல… அடுத்த வாரம் வர்றேண்ணே’ என்றான். அவன் எப்போது பேசினாலும் கல்லூரிபற்றியும் எதிர்காலம்பற்றியுமே பேசுவது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. வீட்டுக்கு வந்து படுக்கும்போது பார்த்தால், எதிர் ஃப்ளாட் தினேஷ் இன்னும் சிஸ்டத்தில் உட்கார்ந்திருக்கிறான். தினேஷ் நள்ளிரவு வரை ஃபேஸ்புக்கில்தான் கிடப்பான். எதிர் ஃப்ளாட்டில் இருந்து எனக்கு சாட்டிங்கில் வந்து, ” ‘அரவான்’ ரிசல்ட் என்ன பிரதர்?’ என்பான். ஏதேதோ ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு, ”இன்னைக்காச்சும் லைக் போடுங்க பிரதர்!’ என ஓட்டு கேட்பான். ஜன்னலில் மங்கலாக அவன் உட்கார்ந்திருப்பதும் அவன் அப்பா திட்டிக்கொண்டு இருக்கிற சத்தமும் கேட்கிறது.

அப்போது, ‘ஏதுமற்ற பருவம்’ என்ற வார்த்தை என் தூக்கத்தைக் கெடுக்க ஆரம்பித்திருந்தது. அதற்கு முதல் நாள் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, சட்டென்று அவர் சொன்ன இந்த வார்த்தையைக் கேட்கும்போதே ‘அடடா’ என இருந்தது. எத்தனை அழகான சொற்சேர்க்கை. இப்போது நினைவில் அந்த வார்த்தை மறுபடி மறுபடி வருகிறது. இந்த வார்த்தையின் அர்த்தம் தரும் அலாதியான ருசியை இந்தத் தலைமுறையினர் அறியவே மாட்டார்கள் இல்லையா?

ஏதுமற்ற பருவம் என்றால் என்ன? பொறுப்புகள், துயரங்கள், லட்சியவாதங்கள்… ஏதுமற்ற பருவம். அடுத்த நிமிடம்பற்றிய எந்த நிர்பந்தங்களும் இல்லாத, ஆனால் மிகுந்த பரபரப்பான பருவம். டிகிரி முடித்துவிட்டு, வேலை இல்லாமல் குட்டிச் சுவர்களில் சித்தப்பாக்கள் ‘பாலைவனச் சோலை’ ஓட்டிக்கொண்டு இருந்த பருவம். நண்பர்களின் காதல்களுக்குக் கவிதைகள் எழுதித் தருவதும் கல்யாண சாகசங்களில் ரத்தம் சிந்துவதுமாக அண்ணன்கள் வாழ்வாங்கு வாழ்ந்த பருவம்.

‘சிப்பி’ டெய்லர் கடையிலும், ‘விடியல்’ போட்டோ ஸ்டுடியோவிலும், ‘ராயல்’ டீக்கடையிலும், சிவகங்கைப் பூங்காவிலும் கதைகள் கதைத்துக் காத்திருந்த பருவம். சாயங்காலம் பள்ளி விடுகிற வாக்கில், பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டு, சுத்துப்பட்டுக்குப் போகிற எல்லாப் பெண்களையும் பஸ் ஏற்றி அனுப்பிவிட்டு, எங்கே போவதென்று தெரியாமல் நாங்கள் நின்ற பருவம். ஏலக்கா போட்டுக்கொண்டு, குடித்த பீர் வாசம் போகிற வரை ஊர் சுற்றிய பருவம். நள்ளிரவுக்கு மேல் படுத்து, பிற்பகல் எழுந்த பருவம். பத்தாவதிலும் ப்ளஸ் டூ-விலும் அட்டெம்ப்ட்டுகள் அடித்து, மாட்டுக்குத் தண்ணி காட்டி, க்ரைம் நாவலுக்கு வாசகர் கடிதங்கள் எழுதிய பருவம். நண்பனின் தங்கச்சியை சைட் அடித்தவனை மேப் போட்டுத் தூக்கியதும் அதே தங்கச்சியின் தோழிக்குக் கடிதம் எழுதி செருப்படி வாங்கியதுமான பருவம். பச்ச முட்டை, கொண்டைக் கடலை தின்று ஏராள எக்சர்சைஸ் பண்ணி யும் உடம்பு ஏறாத பருவம். கல்யாண வீடு, எழவு வீடு என எங்கெங்கும் சைட்

அடித்துத் திரிந்த பருவம். கீரந்தங்குடி, வலங்கைமான், நாச்சியார்கோவில், அடவங்குடி, கூத்தாநல்லூர், திருவிழா, சந்தனக்கூடு என மைக்செட் கட்டுகிற இடம் எல்லாம் குரூப் கட்டிய பருவம்.

கருக்கலில் கும்பகோணம் சந்தைக்குக் காய்கறி எடுத்துப்போகிற காளிதாஸுடன் ஒருநாள், வடபாதிமங்கலம் சர்க்கரை ஆலைக்கு லோடு அடிக்கிற சங்கரோடு ஒருநாள், ஆச்சமங்கலம் பஸ்ஸில் ரூட் அடிக்கிற சாகுனுடன் ஒருநாள் என மனம் போன போக்கில் தினம் போகிற பருவம். செவ்வாய்க் கொழுக்கட்டைக்கு தெருப் பொம்பளைகள் எல்லாம் அம்சத்தா வீட்டில் கூட, ‘அங்க என்னடா நடக்கும்?’ என இரவெல்லாம் விழித்துத் திரிந்த பருவம். ரஜினி கட்சியா… கமல் கட்சியா? எனப் பட்டிமன்றம் நடத்திய பருவம். சேர்மனுக்கு நிற்கும் நண்பனின் அப்பாவுக்காக ஆட்டோவில் மைக் கட்டிக்கொண்டு, ‘நமது சின்னம் ஏணி… ஏணி… ஏணி…’ என எக்கோவில் பேசிக்கொண்டு சாப்பிடாமல்கொள்ளாமல் அலைந்த பருவம். ‘ஆடி வெள்ளி’ படத்தை, அலைமோதும் பெண்கள் கூட்டத்துக்காகவே அஞ்சாறு தடவை பார்க்கிற பருவம். சுருக்கமாகச் சொன்னால்… சும்மாயிருந்த, சுகமாயிருந்த பருவம்!

இந்த ஏதுமற்ற பருவத்தில்தானே வாழ்வின் எல்லா சுவாரஸ்யங்களும் ஆச்சர்யங்களும் நமக்கு அறிமுகமாகின. முதன்முதலில் எனக்கு ‘பிட்டு’ படத்தை அறிமுகப்படுத்தியது குரு அண்ணன்தான். அப்போது அவன் கேட்டரிங் முடித்துவிட்டு சும்மா இருந்தான். ‘சாம்பியன்’க்கு வாசகர் கடிதம் எழுதுவதில் இருந்து ‘கண்மணி’க்கு நாவல் அனுப்புவது வரை எழுத்தாளனாக உருவாகும் வெறியுடன் இருந்தான். அவன் எழுதிய சிறுகதை ஒன்றை, மாவட்ட அளவில் சிறந்த கதையாகத் தேர்ந்தெடுத்து பரிசு அறிவித்திருந்தது ஓர் அமைப்பு. திருவாரூரில் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு என்னையும் அழைத்துப்போனான். சாயங்காலமே போய்விட்டோம். வேறு ஏதேதோ கலை நிகழ்ச்சிகள் நடந்துகொண்டு இருந்தன. ”பரிசுலாம் குடுக்க 11 மணி

ஆகிரும்ப்பா” என்றார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் ஓரமாக வந்து உட்கார்ந்தபோது, எதிர்ச் சுவரில் இருந்து எங்களைப் பார்த்துக் கண்ணடித்தது பேபி தியேட்டர் போஸ்டர். அப்போது திருவாரூரில் பேபி தியேட்டர்தான் ‘அந்த’ப் படங்களுக்கு ஃபேமஸ்.

‘ஷிராக்கோ’ எனப் போட்டு ஒரு வெள்ளைக்கார ஷகிலாவின் கிளாமர் போஸ்டர். அதை ஒரு கணம் உற்று நோக்கிய குரு என்னிடம் திரும்பி, ”வாடா தம்பி படத்துக்குப் போவோம்… உன்னை வாழ்க்கையோட அடுத்தகட்டத்துக்குக் கொண்டுபோறேன்!’ என்றான். எனக்குப் பரவசத்தில்தொண்டை கம்மியது. அது வரை ஒளித்து ஒளித்து ப்ளாக் அண்ட் ஒயிட் பருவ காலமும் ‘சரோஜாதேவி’யும்தான் படித்திருக்கிறேன். மனசு படபடக்கக் கிளம்பினோம். கூட்டத் தைக் கடக்கும்போது, ”எங்க கிளம்பிட்டீங்க?” என எதிரே வந்தார் இன்னோர் எழுத்தாளர் அண்ணன். ”இல்லண்ணே… பரிசு தர நேரம் ஆகும்போல இருக்கு. பக்கத்துலதான் பெரியம்மா வூடு இருக்கு. போயிட்டு வந்துர்றோம்!’ எனத் தங்குதடை இல்லாமல் அடித்துவிட்டான் குரு. அந்த அண்ணனும், ”போயிட்டு வாங்க… போயிட்டு வாங்க. நானும் பக்கத்துலதான் நம்ம சின்ன தாத்தா வூடு இருக்கு… ஒரு எட்டு போயிட்டு வந்துரலாம்னுதான் கௌம்புறேன்!’ என எதிர் திசையில் நடந்தார்.

பயங்கர த்ரில்லாகி தியேட்டரில் உட்கார்ந்தால், ஏதோ பழைய மம்முட்டி படம். ”என்னடா குரு?’ என்றால், ”வெயிட்ரா தம்பி… வரும்’ என்றான் அண்ணன். இன்டர்வெல் வரைக்கும் சமாசாரம் வரவே இல்லை. கடுப்பாகி வெளியே தண்ணி குடிக்க வந்தோம். சங்கிலி கட்டிய குவளையோடு இருக்கும் தண்ணீர் பீப்பாவை நெருங்கினால், அவசர அவசரமாகத் தண்ணி குடித்துக்கொண்டு இருந்தார் ‘சின்ன தாத்தா’ வீட்டுக்குப் போவதாகச் சொன்ன எழுத்தாளர் அண்ணன். எங்களைப் பார்த்ததும் குவளையை அந்தரத்தில் விட்டுவிட்டு, சட்டை நனைய ‘யு டர்ன்’ போட்டு எகிறினார். செகண்ட் ஆஃப் ஆரம்பித்தது. மறுபடியும் மம்முட்டி டார்ச்சர். டென்ஷன் எகிறும்போதே சட்டென்று திரைக்குப் பக்கத்தில் ஒரு சிவப்பு லைட் ஒளிர்ந்தது. மொத்த தியேட்டரும் அமைதியானது. குரு என் தோளை அமுக்கி, ”ம்ம்ம்ம்…’ என்றான். ஸ்க்ரீனில் பாடாவதி பிரின்ட்டில் ஓட ஆரம்பித்தது ‘அஜால் குஜால்’ சினிமா. எனக்கு மேனி சிலிர்த்தது. எதுவுமே விளங்கவில்லை!

முன்னாடி கொத்துக் கொத்தாக மறைக் கும் தலைகளைத் தாண்டிப் பார்க்க முயலும்போதே, பிட்டு முடிந்து மம்முட்டி என்ட்ரி ஆகிவிட்டார். இப்போது பச்சை லைட் ஒளிர, கண்டபடி திட்டிக்கொண்டே கலைய ஆரம்பித்தது கூட்டம். ”ஏமாத்திட்டானுவோடா…’ என ஒரு குரூப் சீட்டை எல்லாம் தூக்கிப்போட்டு அடிக்க ஆரம்பிக்க, நாங்கள் அவசரமாக வெளியேறினோம். கூட்டத்தில் பார்த்துக்கொண்டபோது, எழுத்தாளர் அண்ணனும் சரி… நாங்களும் சரி… எதுவுமே நடக்காதது மாதிரியே நடந்துகொண்டோம்!

அதன் பிறகு சில பல முறைகள் பிட்டு படம் பார்க்கப் போனபோது எல்லாம் எனக்கு விசித்திரமான அனுபவங்களே நடந்தேறின. ஒரு நண்பர் செம பில்டப்போடு அழைத்துப்போன தியேட்டரில், படம் முழுக்க மாட்டுக்குப் பிரசவம் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். ‘அல்லடு மஜ்ஜாக்கா’ என்ற பெயரே ஒரு சைஸா இருக்கே எனப் போன இடத்தில் சிரஞ்சீவி – லட்சுமி நடித்த மாமியார் மருமகன் குடும் பச்சித்திரம் போட்டார்கள். இன்னொரு தியேட்டரில், எந்தக் கொடூரனும் கற்பனை யில்கூட நினைத்துப் பார்க்க முடியாத காட்சியாக, பழம்பெரும் அந்த நடிகையை ஒரு ஆட்டோ டிரைவர் ரேப் பண்ணுகிற சீனைப் போட்டார்கள். 20 செகண்டுகளில் தெறித்து ஓடி வந்தோம். என்னோடு வந்த நண்பர் சங்கிலியாக ஐந்து சிகரெட்டுகளைப் பிடித்து வீசினார். இன்னோர் இடத்தில் அது வரை காணாத வகையில் அரிய காட்சியைப் போட்ட இரண்டாவது நிமிடம் தியேட்டரைச் சுற்றி வளைத்தது போலீஸ். ”லைசென்ஸ் வாங்கலைன்னா தேட்டர்காரய்ங்களப் புடிங்கப்பு. நாங்கள் லாம் சிட்டிசன்ஸ்…’ என ஒரு பெருசு பேசி, மொத்தப் பேரையும் வெளியேவிட வைத்தார்.

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பலான படம் என்பது தமிழ்நாட்டின் கலாசார நிகழ்வுகளில் ஒன்று. அது ஒரு வைபவம். யாருக்கும் தெரியாமல் தியேட்டருக்குப் போவதே தனி சேஸிங். உள்ளே போனதும் யாரும் யாருடனும் பேசிக்கொள்ளாமல் பேரமைதியோடு இருப்பார்கள். சில பேரெல்லாம் சின்ஸியராக உட்கார்ந்து முகத்தை மறைத்து இங்கிலீஷ் பேப்பர் படித்துக்கொண்டு இருப்பார்கள். பையன்கள், வாத்தியார்களையோ சொந்தக்காரர்களையோ பார்த்துத் திடுக்கிடுவார்கள்.

அநேகம் பேரின் ஏதுமற்ற பருவம் இதனாலும் நிறைந்தது. அதன் பிறகு வி.சி.டி. வந்தது. நண்பன் வீட்டில் யாரும் இல்லையென்றால், அங்கே கூடுவது. அது பெரிய பிராசஸ். காசு போட்டு டெக் வாடகைக்கு எடுக்க வேண்டும். தெருவே தூங்குகிற வரைக்கும் காத்திருக்க வேண்டும். அப்படியும் கரெக்ட்டாக கேஸட் போடும் போதுதான் கரன்ட் போகும். அல்லது வி.சி.டி. மக்கர் பண்ணும். நேரம் பார்த்து பங்காளிகள் வருவார்கள். அந்தக் கருமத்தைப் பார்ப்பதற்குள் தாவு தீரும்!

இப்போது பாலியல் குறித்து எந்த ஆச்சர்யமும் சுவாரஸ்யமும் இல்லை. நெட்டைத் தட்டினால் ஆபாசப் படங்கள் கொட்டுகின்றன. போகிற இடங்களில் எல்லாம் இம்மாதிரியான டி.வி.டி-க்களைக் குவித்துவைத்திருக்கிறார்கள். ”அர்ச்சகர் சி.டி. பார்ட் த்ரீ வந்திருக்கு. நித்யானந்தா சி.டி. பார்ட் டூ இருக்கு…’ எனக் கொடுமை பண்ணுகிறார்கள். எந்த அழகியலும் த்ரில்லும் இல்லாத பருவத்தைக் கடந்துகொண்டு இருப்பவர்கள்… பாவம்தான்!

எங்களது ஏதுமற்ற பருவம் திருவிழாக்களாலும் கலைகளாலும் நிறைந்திருந்தது. கட்டாரி மாமா நாடகம் எழுதி, எங்கள் மொத்த குரூப்பையும் கலைஞர்கள் ஆக்கினார். வழக்கமான வள்ளித் திருமணம், மயான காண்டம், ராமாயணத்தை எல்லாம் ஏறக்கட்டிவிட்டு, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘ஜெயிப்பது நிஜம்’, ‘நீயின்றி நானில்லை’ எனச் சமூக நாடகங்களை மாமா அடித்துவிட, டெரரானது ஊர். நாடார் வீட்டில் ரிகர்சல் நடக்கும். ”சாதி என்னய்யா சாதி… காதல்தான்யா கடவுளோட நீதி’ என டி.ஆர். பாணி வசனங்களை நாங்கள் பேச, தலையாரி வரைக்கும் பிராது போகும்.

வீட்டில் இருந்து அக்காக்களின் பாவாடை தாவணிகளைக் கொண்டுவந்து பொம்பளை வேஷம் போடுவோம். வெள்ளை சட்டை போட்டு கண்ணாடி போட்டால், அவன் டாக்டர். கலர் சட்டை போட்டு கண்ணாடி போட்டால், கலெக்டர். துண்டைத் தோளில் போட்டு வண்டி மசையால் மீசை வரைந்தால், பண்ணையார். கக்கத்தில் துண்டை வைத்தால், வேலைக்காரன். வெங்காயத் தாமரையை ஒட்டவைத்தால் சாமியார். வேலை இல்லாத அத்தனை பேரும் கூடிக் கும்மியடிப்போம். ட்ரூப்பில் நான்தான் ஸ்டார் டான்ஸர். அக்கம்பக்கத்துத் திருவிழாக்கள் அத்தனைக்கும் கிளம்பிவிடுவோம். அபிவை நண்பர்களின் டிஸ்கோ நடைபெறும் என போஸ்டர் போட்டு அதில் டிஸ்கோ என்ற எழுத்தை மட்டும் தலைகீழாக எழுதியிருப்போம். தீ மிதி, கரகாட்டம், வாழைத்தார் ஏலம், பாம்பே சர்க்கஸ், கலர் பாயாசம், பீமபுஷ்டி அல்வாக்களுக்கு நடுவே கழிந்த அந்தப் பருவம் ஏதுமற்றதா என்ன? எல்லாம் நிறைந்தது. திருவிழாக்களுக்குப் போய்விட்டு சைக்கிள்களில் கூட்டமாகத் திரும்புகிற பின்னிரவுகளை இப்போது நினைத்தாலும் மனதை மின்மினிகள் மொய்க்கின்றன. அப்புறம் இளைஞர் மன்றம்… மார்கழியில் சிவன் கோயிலைச் சுத்தம் செய்வதில் இருந்து கார்த்திகையில் சொக்கப்பனைக்குத் தயார் செய்வது வரை கூடுவோம். அம்மா குளத்தை ஏலம் விட்டு மீன்பிடி நடக்கிற வரை… ஒவ்வொன்றும் திருவிழாதான்!

இப்படி எதுவுமே இப்போது இல்லை. ஏதுமற்ற பருவம் என்ற ஒன்றே இந்தத் தலைமுறைக்கு இல்லை. அவர்கள் எப்போதும் பிஸியாக இருக்கிறார்கள். அவர்களது நாட்கள் எப்போதும் அவர்களது திட்டங்களாலோ, மற்றவர்களின் திட்டங்களாலோ நிரம்பி வழிகின்றன. நிறையப் பேருக்கு அதிகபட்சம் கூடுகிற இடம் ஒயின்ஷாப், பார்ட்டி என்றாகிவிட்டது. கொஞ்சம் அப்பாவித்தனம், ரசனை, அழகியல், மனம் வெறுமையாகக் கிடக்கிற சுகம், அடுத்த கணம்பற்றி அறியாத சுவாரஸ்யம் இதெல்லாம் வேண்டும் இல்லையா? வெற்று அறிவாலேயே அடைத்து ரொப்பிய ஒரு சமூகத்தை உருவாக்கிக்கொண்டு இருக்கிறோமோ என பயமாகஇருக்கிறது எனக்கு!

டிப்ளமோ முடித்துவிட்டு வேலை எதுவும் இல்லாமல், எதைப் பற்றியும் யோசிக்காமல் ஆறு மாதம்போல் சும்மாவே இருந்தேன். வேலை தேடுகிறேன் எனச் சொல்லிவிட்டு, திருச்சியில் என் வகுப்புத் தோழன் ஒருவனின் அறையில் தங்கியிருந்தேன். அப்போது படிப்பதற்கு புரட்சிகரமான புத்தகங்களை எடுத்துக்கொண்டு, தினமும் பக்கத்தில் உள்ள ஒரு சர்ச்சுக்குப் போய், அங்குள்ள தோட்டத்தில் உட்கார்ந்துகொள்வேன். சாயங்காலம் வரை அங்கேயே உட்கார்ந்திருப்பேன். அங்கே தினமும் காலை 10 மணிபோல் ஒரு பெண் வருவாள். அவளுக்கு வலது காலும் கையும் இல்லை.

ஒரு தாங்குக் கட்டையோடு விந்தி விந்தி வருவாள். ஒரு பையில் மெழுகுவத்தி பாக்கெட்டும் தேன் மிட்டாய் பாக்கெட்டும் எடுத்துவருவாள். உள்ளே போய் அதைத் தந்துவிட்டுப் போய்விடுவாள். மறுபடி சாயங்காலத்துக்கு முன் வருவாள். இப்போது பை நிறைய பூக்கள் எடுத்து வருவாள். அவளைப் பார்த்த முதல் கணமே மனம் என்னவோ ஆகிவிட்டது. இப்போதுகூட ஒரு தேன் மிட்டாயின் இனிப்பும் மல்லிப் பூவின் வாசமும் மெழுகுவத்தியின் தீரவே தீராத சிறு வெளிச்சமுமாக அவளது உருவம் எனக்குள் இருக்கிறது. இதுவரைக்கும் அவள் பெயர்கூடத் தெரியாது. ஒருநாள் அவள் வரும்போது கேட்டைத் திறக்க யாரும் இல்லாமல் நின்றாள். நான் போய்த் திறந்துவிட்டேன். ‘தேங்க்ஸ்’ எனச் சொல்லிவிட்டுப் போனாள். அதுதான் எனக்கும் அவளுக்குமான ஒற்றை வார்த்தை. அன்றில் இருந்து அவள் வரும்போது நான் கேட் பக்கத்திலேயே நின்று, திறந்துவிடுவேன். போகும்போது அந்த ரோடு முனைவரைக்கும் கூடவே நடந்துபோவேன். அங்கிருந்து உள்ளே பிரியும் ஒரு தெருவில் இறங்கி நடந்து போய்விடுவாள்.

எங்கோ தொடுவானத்தில் இருந்து என்னைப் பார்க்கத்தான் அவள் வருவதைப் போல இருந்தது. பார்த்தறியா பரிசுத்தம்போல்… அடைய முடியாத பேரன்பின் அரூபம்போல்… ஒரு மூன்று மாதங்கள் எந்த மாற்றமும் இல்லாமல் இதுதான் நடந்தது. சில நாட்களாக அவள் வரவில்லை. காத்திருந்து பார்த்து, ஒரு நாள் அவள் போகும் தெருவில் இறங்கி நடந்தேன். நான்கைந்து தெருக்கள் தள்ளி ஒரு வீட்டு வாசலில் அவள் நின்றாள். என்னைப் பார்த்து சிரிப்பதைப் போல இருந்தது. அவளைப் பார்த்த கணம் சட்டென்று மனம் துடித்தது. உடல் வியர்த்து ஏதோ ஆனது. தடதடவெனத் திரும்பிப் பார்க்காமல் மூச்சடைக்க அங்கிருந்து திரும்பினேன். அதன் பிறகு திருச்சியில் இருந்தும் வந்துவிட்டேன். எவ்வளவோ நாட்கள் ஆகிவிட்டன… நேற்றுகூட பெசன்ட் நகர் சர்ச்சுக்குப் போய் மெழுகுவத்தி ஏற்றியபோது, தோளில் சணல் பையோடு கடந்து போன ஒருத்தி அவளைப் போலவே இருந்தாள். எங்கேயோ பார்த்த ஏதுமற்ற பருவத்தின் சாயலில்!

(போட்டு வாங்குவோம்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *