இலக்கியச்சந்திப்பொன்றில் ஒருமுறை ஒரு பெண் எழுத்தாளர் (பெண்ணியவாதி) “பொதுவாக இந்த ஆண் எழுத்தாளப் பிசாசுகள் பெண்களை வர்ணித்து மாயிறதிலேயே தங்கள் சக்தியிலே பாதியை விரயம் பண்றாங்கள். நீங்களே பாருங்கள் நாங்கள் ஆண்களையோ இல்லை பெண்களையோ வர்ணித்து எழுதிக்கொண்டா இருக்கிறோம்” என்று எகிறிக்குதித்தார்.
சபையில் ஆண்கள் பக்கமிருந்து எதிர்க்குரல்கள் வந்தன.
“நிஜத்தில் பெண்கள் அப்பிடியில்லை என்கிற ஆதங்கத்திலதான் ஆண்கள் அப்பிடி மாய்ந்து மாய்ந்து பன்னுறாங்களோ………. அவ்வகைப் புனைவுகளை நீங்கள் ஏனொரு வகைப்பட்ட மஜிகல்-ரியலிசமாகக் கொள்ளப்படாது.”
“ஒட்டுமொத்தமாக அப்படிச்சொல்லமுடியாது அனுராதா ரமணன் எழுதுவாரே”
“தங்களைத்தவிர இன்னொரு பெண்ணை அழகியென்று ஒத்துக்கமாட்டீங்களே…அதனால இன்னொருத்தியை வர்ணித்து எழுதுவது உங்களுக்குக் கஷ்டமாகத்தானிருக்கும்.”
அந்த விஷயத்தையிட்டான விவாதப்பிரதிவாதங்கள் இந்தத்திசையில் இன்னும் வளரலாம். ஆனால் நடப்பில் நமக்குள் ஒரு தேவதையோ, பசாசு குடிபுகுந்தவளோ ஒரு பெண்ணின் நினைப்பு வந்து முட்டாமல் ஒரு நாளாவது கழிவதுண்டா?
அனாதியிலிருந்தே அநியாயத்துக்கு எல்லாப்போழ்தும் அவர்கள்தானே எம்மை ஆகர்ஷிக்கிறார்கள். ஆயிரம் பெண்களைத்தான் கடந்து சென்றாலும், அதில் ஒன்றோ இரண்டோ மனதில் நிற்கிற, அவனை ஆக்கிரமிக்கிற தொந்தரவுசெய்கிற ஒன்றைப்பற்றி அவன் எழுதுவான்தானே, அதில ஆச்சர்யப்பட என்ன இருக்கு. அப்படி எழுதினால்த்தான் என்ன குடியாமுழுகிப்போய்விடும்?
இந்தப் பீடிகையெல்லாம் எதற்காகவாம்? அதாவது இப்போது நானும் அப்படி என்னை ஈர்த்த ஒரு அசாதாரண அழகைப்பற்றித்தான் சொல்லப்போகிறேன். நான் அதைப் பதிவுசெய்யாவிட்டால் அந்தக்கணங்கள், அந்தப்பார்வை, எந்தன் ரசனை, அந்தப் பெண்ணின் படைப்பு இருப்பு அனைத்துமே விரயம் என்பேன்.
இனி வருகிறாள் என் அழகி பராக் ! பராக் ! பராக் !
அது அலெக்ஸாண்டிரா பிளாட்ஸ் என்னும் இடத்தில் பெர்லின் தொலைக்காட்சிக்கோபுரம், சர்வதேசமணிக்கூண்டுகள் அமைந்துள்ளதும், பல இடங்களுக்கும் கிளைத்துச்செல்லும் டிராம் தொடருந்துகளின் தரிப்பு நிலையங்கள், ஒரு கார்ணிவெலைப்போல சிறு சிறு பழக்கடைகள், ஸ்நாக் பார்கள் என்பன செறிவாகவுள்ள ஒரு நடை வலயத்தில் அமைந்துள்ள ஒரு KFC உணவகம். மக்கள் கூட்டம் எப்போதும் மிதமாக இருக்கும். என் பணியிடையே ஒரு கோழித்துண்டு கடித்து காப்பி, கப்புச்சினோ, கபிறிசொனோவோ குடித்து இழைப்பாறவேண்டி அங்கு அடிக்கடி போவேன்.
அப்படிப்போய் வந்துகொண்டிருந்த நாளொன்றில் தான் அந்த அழகியை எதேச்சையாகப்பார்த்தேன். முதற்பார்வையிலேயே அவளின் கண்கள்தான் என் மனதில் பதிந்துபோயின. கண்களின் கருமைக்கும் குண்டுத்திரட்சிக்கும் காபூல் திராட்சையைச் சொல்வார்கள், அதை நான் இன்னும் பார்க்கவில்லை. அவளைக்கந்தர்வப்பெண் என்பதிலும், காணாத பொருளை உவமிப்பதிலும் எனக்கு உவப்பில்லை. இவளது சற்றே வெளிப்புடைத்த படைப்பில் ஆயிரத்தில் ஒருவருக்கே அபூர்வமாய் வாய்க்கும் காந்தம் கலந்தவகைக் கண்கள். அவளது அகவைகளும் ஒரு இருபதைத் தாண்டியிருக்காது. அநேகமாக இன்னும் படிப்பைத் தொடர்பவளாக இருக்கவேண்டும். கோடைவிடுமுறையில் இங்கே அமயமப் பணியாளராகச் சேர்ந்திருக்கலாம். அவளின் விளைந்த கோதுமைப்பயிர் நிறத்து மேனிக்கு KFC யின் கடுங்காப்பி நிற உடலும், மஞ்சள் கொலரும் வைத்தசீருடை இன்னும் எடுப்பைச் சேர்த்தது. நான் சாப்பாட்டை எடுத்தானதும் என் தட்டைத் தூக்கிக்கொண்டு என் விண்ணாணம் பார்க்கும் வழக்கத்தால் வாசல்பக்கமாக பெரிய கண்ணாடிச்சுவரின் பக்கமாகப் போய் அமருவது வழக்கம்.
அந்தப் பெண்ணுக்கு ஒரு ஸ்நேகிதன். ஹூம் ஒருவன் முந்திக்கொண்டுவிட்டானா…………. என்றாலும் அத்தனை நஷ்டமில்லை. கொஞ்சக்காலம் விரயமானதோட சரி. அநேகமாக நான் அங்கே போகும்வேளைகளில்தான் அவனும் அவளைத் தரிசிக்க வருவான். அவன் வந்ததும் அவள் தன் போர்மனிடம் பெர்மிஷன் பெற்றுக்கொண்டு தனக்கும் அவனுக்குமாகக் கொறிப்பதற்கும் குடிப்பதற்கும் ஏதாவது எடுத்துக்கொண்டு முன்னுக்கு வந்துவிடுவாள். விலாட்டுமாம்பழமெனக் கோலங்காட்டும் கன்னங்களிலும் லேசான மங்கோலியச்சாயல். மீடியம் என்று சொல்லக்கூடிய சின்னப்பெண் அவள். பாதங்களின் நுனிகள் ஒன்றையொன்று லேசாக நோக்கும் வண்ணம் ஒருங்குவித்தொரு வாத்து நடையில் அவள் வருகையில் அப்பிடியே தூக்கி இடுப்பில் வைத்துக் கொள்ளலாம் போலத்தோணும்.
நான் அமரும் இடத்துக்குப் பக்கத்திலுள்ள இருக்கைகள் அனைத்தும் தொடருந்தின் பகுப்பறைகள்போல பகுக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்வதுதான் அந்த இணைக்கும் பிடிக்கும். அந்தப்பையன் வெகுகண்ணியமான காதலன், பகுப்பறைதானே என்றுவிட்டு மொசுக்கென்று அவள்மேல் விழுந்து சில்மிஷங்கள் பண்ணமாட்டான். முதுகில் சுமந்து வந்த தனது கனதியான முதுகுப்பையை தனக்கும் அவளுக்குமான இருக்கைகளுக்கிடையில் வைத்துவிட்டு அவளருகில் அமர்ந்து வெகுசமர்த்தாகப் பேசிக்கொண்டிருப்பான்.
அவளுக்குச் சரளமான ஜெர்மன் கொப்புளிக்கும். அவனோ சிறு சிறு வார்த்தைகளில் ஜெர்மனில் பதிலளித்தாலும் மிகைவிகிதம் வங்காளத்தில்தான் பேசுவான். எனது ஊகம் அவன் அண்மையில்தான் கிழக்கு வங்காளத்திலிருந்தோ, பங்களாதேஷிலிருந்தோ இங்கு வந்திருக்கவேண்டும். இளம் பசங்கள் தமக்குள் சிரித்துச் சிரித்து ஜாலியாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். இன்னும் அந்தப்பெண்ணின் வயலெட் நிறஉதடுகள் அவள் பேசுகையிலும் சிரிக்கையிலும் இளம் றோஸாக மாறிப்பின் அவள் நிறுத்தியதும் வயலெட்டாகியொரு மாயத்தையும் நிகழ்த்திகொண்டிருக்கும். அவளுக்கும் பார்த்தவரை அலைக்கும் தன் கண்களின் மகாத்மியம் தெரியாமலிருக்குமா, தேர்ந்தவொரு நடிகையைப்போல் அவற்றை மிதமாக அங்குமிங்கும் சுழற்றியும் மலர்த்தியும், அபிநயத்துக் கொண்டுந்தான் பேசுவாள். எனக்கும் பார்க்கப்பார்க்க அந்தக்கண்களின் ஒவ்வொரு சுழற்சியிலும் அவள் அழகாகிக்கொண்டே போவதாகப்படும்.
ஒருநாள் அவர்களின் உரையாடல் ஸ்படிகமாக என் காதில் விழுந்தது.
அவன் சொன்னான்:
“ஹேய்…உனக்கு 30 நிமிஷங்கள் தானே அனுமதி என்றாய்…இப்போ 45 நிஷங்களையும் கடந்தாகிவிட்டது, உன் ஃபோராபைட்டர் (Foreman) கத்தமாட்டானா?”
“ம்ம்ம்…அவன் கிடந்தான், வரும்போது பயலுக்கு ஒண்ணு கொடுத்திட்டுத்தான் வந்திருக்கேன், அந்தத் தியக்கத்திலிருந்து அவன் விடுபடுறதாவது என்னைத்தேடுறதாவது…இப்போதைக்குத் தேடவே மாட்டான் டியர்”
அதுக்குப் பிறகு அவளைத்தேடி அந்தப்பையன் வந்ததை நான் பார்க்கவில்லை.
பி.கு: அந்தக்கண்களை அநியாயத்துக்கு அப்பிடியே விட்டுவிடுதல்தான் தகுமா? அதன்பின் ஒரு வருஷ காலமாக அவளுடன் நான் வினைக்கெட்டலைட்டந்து அவளை ஒரு மலரைப்போல் கொய்தேனோ, ஒரு வேட்டை விலங்கின் இரையைப்போல அமுக்கினேனோ, அமுக்கி கடிமணம்புரிந்தது இக்காதையின் இரண்டாவது காதை காண்டம்.
குமுதம்-தீராநதி நவம்பர் 2011