திருதராஷ்டிரனிடம்இருந்து, தர்மபுத்திரருக்கு அழைப்பு வந்தது. “மாளிகை கட்டி கிருஹப்பிரவேசம் செய்திருக்கிறான் துரியோதனன். அதற்கு நீங்கள் எல்லாரும் வர வேண்டும்…’ என்று அழைத்திருந்தான்.
இந்த அழைப்பிதழை தர்மனிடம் கொடுத்து, “தர்மம் வெல்லும்’ என்று சொல்லி விட்டு போய் விட்டார் விதுரர்.
அழைப்பிதழைப் பெற்று, அங்கு போவதற்குத் தயாரானார் தர்மர். தம்பி பீமனை கூப்பிட்டு, “நீயும் வருகிறாயா?’ என்று கேட்டார். “தாங்கள் போவதானால் நானும் வருகிறேன்…’ என்றான் பீமன். இப்படியே அர்ஜுனன், நகுலனிடமும் கேட்டார்; அவர்களும் ஒப்புக்கொண்டனர்.
கடைசியாக சகாதேவனிடம் போனார் தர்மர். அப்போது, வெளியில் எதையோ பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் சகாதேவன். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, “இங்கு யாருமே இல்லையே… எதைப் பார்த்து சிரிக்கிறாய்?’ என்று சகாதேவனிடம் கேட்டார் தர்மர்.
“ஓ அதுவா… அதோ, அங்கே வஞ்சனை என்ற அசுரன் இருக்கிறான். அவன், ஏதோ ஒரு உத்தேசத்துடனிருக்கிறான். அவனைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது…’ என்றான்.
“சரி சரி… பெரியப்பா அழைப்பு அனுப்பியிருக்கிறார். நாங்கள் போகிறோம். நீயும் வர வேண்டும்…’ என்றார் தர்மர். வஞ்சகம் தன் வேலையை செய்ய ஆரம்பித்து விட்டது என்று நினைத்த சகாதேவன், அவர்களோடு புறப்பட்டு விட்டான்.
அரக்கு மாளிகை கட்டி, அதில் பாண்டவர்களை இருக்கச் செய்துவிட்டு, மாளிகைக்கு தீ வைத்து கொளுத்த ஏற்பாடு செய்திருந்தான் துரியோதனன். ஆனால், அவனுடைய வஞ்சக எண்ணம் நிறைவேறவில்லை. அரக்கு மாளிகையிலிருந்து தப்பி விட்டனர் பாண்டவர்கள்.
தர்மரிடம், “தர்மம் வெல்லும்’ என்று சொன்னது உண்மையாகி விட்டது. மாளிகை எரிந்ததும் பாண்டவர்கள் ஒழிந்தனர் என்று சந்தோஷப்பட்டான் துரியோதனன். பிறகு தான், பாண்டவர்கள் தப்பித்து விட்டனர் என்பது துரியோதனனுக்கு தெரிந்தது.
வஞ்சகம் என்பது, ஏதோ அப்போதைக்கு சந்தோஷத்தைக் கொடுக்கலாம். ஆனால், அந்த சந்தோஷம் நிரந்தரமானதல்ல என்பதுதான் இதன் கருத்து. அதனால்தான், “வஞ்சனை செய்யாதே!’ என்றனர்.
வஞ்சனை, ஏமாற்றுதல் இதெல்லாம் முடிவில் தனக்குத் தானே தேடிக் கொள்ளும் துக்கம். வஞ்சனை செய்வாரோடும் இணங்க வேண்டாம் என்று கூட, சொல்லிஇருக்கின்றனர். நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
– வைரம் ராஜகோபால் (ஏப்ரல் 2012)