கபாலி. சாமி பெயர் அது என்பதே மறந்து போயிருந்தது ஜனங்களுக்கு. அவன் பெயர் கபாலி. செல்லமாக கஸ்மாலம். நகரில் புழக்கத்தில் உள்ள அநேக வார்த்தைகளுக்கு அகராதியில் தேடினாலும் அர்த்தம் கிடைப்பதில்லை. சற்று நீண்ட கழுத்தாய் இருப்பான். பல்லால் பீடியைக் கடித்தபடியே சிரிக்கிற கபாலி. மெலிந்த சுருள் மீசை. விளக்குத்திரி போலிருக்கும். லுங்கியை டப்பாக்கட்டு கட்டி, சட்டைக்கு மேல் ஈரிழைத் துண்டை முன்முடிச்சிட்டுப் போர்த்தியிருப்பான். பேசுகையில் கண்கள் தாமே சிரிக்கிறாப் போன்ற ஓர் அமைப்பு. எதற்கெடுத்தாலும், அஞ்சு வார்த்தை தாண்டுமுன் ஒரு த்தா வந்து விழும். அதற்கு அர்த்தம் என்ன? அவனுக்கே தெரியாது. கேட்டால் த்தா என்று சிரிப்பான். கூடவே அந்தக் கண்ணும்.
பிறவித் திருடன். பரம்பரைத் திருடன். ஐயா யாரென்றே தெரியாது. ஆத்தாவைப் பார்த்ததில்லை. ஆத்தாளுக்கே ஐயா யார் என்று தெரியாமல் இருக்கலாம். மனிதக் கடலில் எங்கே யாரை எப்படி ஞாபகம் வைத்துக் கொள்வது. ஆயா என ஒருத்தி. சோறு தின்னாமலேயே மகா குண்டாய் இருந்தாள். ஆலமரத்தடி இட்லிக்கடைக்காரி. அவள் கையால் இட்லி எடுக்க, டாக்டர் மாத்திரை போல இத்துனூண்டாய் இருந்தது இட்லி. மகாப் பொட்டுக்காரி. அசுரகுலப் பெண்கள் எப்படியோ குங்குமத்தைப் பார்த்தாலே ஆவேசப்பட்டு விடுகிறார்கள். கருநுதல் குங்குமம். தி. க. கொடி போல… எதனாலோ அவள் சதா துப்பிக் கொண்டே இருந்தாள். வாயும் நெத்தியும் எப்பவும் அபாய அறிவிப்பு செய்தவண்ணமிருந்தன. புடவை முந்தானையில் வாயைத் துடைத்துக் கொண்டபோது அவள் கனத்த சரீரம்… ஆண்கள் பயந்து முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள்.
தெருவோரம் கதறித் துடித்து கையைக் காலை உதறியபடி கிடந்தானாம் அவன். பால்மணம் மாறா சிசு. குப்பைத் தொட்டியில் சும்மா கிடந்த குழந்தை, அவள் எட்டிப் பார்த்ததில் அழ ஆரம்பித்தது. சிசுவை அவள் எடுத்து வந்தபோது அந்தப் பகுதியில் சாக்கடை விலகி வழிவிட்டதாகப் புராணம். அப்படி வந்தபோதே ஆயாவின் சுருக்குப் பையை அவன் இறுக்கப் பற்றியிருந்ததாகவும் ஒரு கதை உண்டு.
தினசரி யாரும் சொல்லித் தராமலேயே கபாலி அநேக கெட்ட வார்த்தைகள் கற்றுக் கொண்டான். லவ்டா கபாலி. வசவுகளை உரக்க கூச்ச நாச்சமில்லாமல் பேசும்போது ஜனங்களுக்கு உள்ளே ஆனந்தம் பொங்கியது என கவனித்தான். சொல்கிறவர்களுக்கும் கேட்கிறவர்களுக்கும். யாரைப் பற்றிச் சொல்கிறார்களோ அவர்களைத் தவிர. அவர்களும் புதிதான கெட்ட வார்த்தை, எதிராளியைப் பற்றி, புனைந்துரைத்து ஆசுவாசப் படுகிறார்கள். படிச்சாளுகள் தற்குறி வர்ஜியமெல்லாம் இதில் கிடையாது. படிச்சாளுகள், போடா விருந்தாளிக்குப் பொறந்தவனே, என்பது போல நாசூக்காகப் பேசுகிறார்கள். த்தா கிடையாது. ஷிட் என்பார்கள். அவர்கள் பாஷைக்கு அகராதியில் அர்த்தம் உண்டு. கெட்ட வார்த்தைகள் இல்லாத உலகம் வாழத் தகுதியற்றது.
பள்ளிக்கூடம் போனானில்லை என்றாலும் ரூபாய்க் கணக்கில் நிபுணன். காதில், முழுக்கைச் சட்டை கைமடிப்பில், கிழிந்த சட்டைக் காலர் அடியே, அன்டிராயர் நாடாப் பாதைக்குள்(ள்)ள்ளே என அவன் பணம் வைக்கும் இடங்கள் வித்தியாசமானவை. ஷேவிங் பிளேடு வாங்கி நாலாக மடித்து ஒடித்து நகத்தில் ஏற்றி அழுத்தி வைத்துக் கொண்டிருப்பான். பல்லிடுக்கில் ஒரு துண்டு உண்டு. அவசர ஆபத்து என்றால் பயன்படுத்துவான். கீழ்ப்பல் மற்றும் கீழுதடு இடைவெளியில், ஈறு காயம் படாமல், பிளேடை அழுத்தி ஒதுக்கி வைத்திருப்பான். சிலர் புகையிலை ஒதுக்கிக் கொள்வார்கள் இப்படி. கையும் களவுமாய்ப் பிடிபட்டால் த்தா என்று கத்தி, த்தூ என்று துப்புவான். பச்சைப்பாம்பின் ஸ். கால்பிளேடு சர்ரென்று சீறி எதிராளி முகத்தில் பாய்ந்து கீறும். பட்ட இடத்துக்கு கேரண்டி கிடையாது. குறி என்று கிடையாது. முகம், அதுதான் குறி. முகத்தில் எங்கும் அது பாயலாம். கண்ணில் கூட.
டவுண் பஸ்சில் அவன் ஜேப்படி என்று ஏறினால் அவனைக் காட்டிக் கொடுக்க கண்டக்டர்களே பயந்தார்கள். ”பாத்து முன்னால போங்க, எடம் இருக்கு பார், எடம் இருக்கு பார்.” அவன் தலையாட்டி ஒரு சலாம் போல மையமாய்க் கண்டக்டரைப் பார்த்துச் சிரித்தான். என் திறமைக்கு சோதனை வைக்கிறியா லவ்டா என்று அந்த சவாலை ஏற்றுக் கொண்டாப் போல சிரிப்பு. கபாலி வெறுங் கையோடு பஸ் இறங்கியதாக சரித்திரமே கிடையாது. அந்த வசைச்சொல்லுக்கும் அகராதியிலேயே அர்த்தம் கிடையாது.
ஆளைப் பார்த்ததும் யார் எங்கே எப்படிப் பணம் வைத்திருப்பார்கள், எவ்வளவு வைத்திருப்பார்கள் என்று அவன் யோசனை ஓடும். பஸ்சும் ஓடும். ”பாத்து முன்னால போங்க – இடம் எவ்ள கிடக்கு பார் போங்க சார் போங்க.” கண்டக்டர் இருக்கிறதில் அப்பாவியான ஆம்பளையைத் தொட்டு முன்னால் செலுத்துவான். கபாலி அடுத்த நிறுத்தத்தில் முன்பக்கம் போய் ஏறிக் கொள்வான். என்னவோ கண்டக்டர் அவனே இவனது வாடிக்கையைக் காட்டிக் கொடுத்தாப் போல. ”பெரியவரே நல்லாப் பிடிச்சுக்கோங்க. பாத்து உஷாரா நில்லுங்க…”
வெள்ளை வேட்டி. வலது தொடைப் பக்கவாட்டில் அன்டர்வேருக்குள் ஒரு உப்பல். கொஞ்சம் இந்தப்பக்க உப்பலாய் இருந்தால், அது சிறுநீர் உபத்திரவம்… இது… வெத்திலை முடிச்சா துட்டா? அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது அது. அவன் அதிர்ஷ்டசாலியா? அவர் அதிர்ஷ்டசாலியா, என்பதையும் பொறுத்தது. நக பிளேடால் மெல்லிசாய் வேட்டியைக் கீற வேணும். வேட்டி தாண்டி அது சதையைத் தொடக் கூடாது. அது அவன் திறமைக்கு இழுக்கு. அவரும் வலியில் அலறி ஊரைக் கூட்டிவிடக் கூடும். இடது பக்கம் கிழிக்கப் போகிறானானால் தன் கைக்குட்டையை எடுத்து விரித்துக் கொள்வான். அவர் பின்புறமாக காற்றில் போல வீசி அவரது வலது தொடையில் கைக்குட்டையால் உரசுவான். பார்ட்டி உஷாராய் இருந்தால் கூட வலது தொடை உணர்ச்சிக்கு மூளையில் கவனஈர்ப்பு. அந்த விநாடிநேர கவனச் சிதறல், பரிசு! அதிர்ஷ்டத்தைப் பொறுத்து, புகையிலையோ, பணமுடிச்சோ. வீட்டுக்குப் போய் அவர் முடிச்சுக்குத் துழாவ வேறேதோ தட்டும்.
பஸ்சில் கூட்டம் இல்லை. யாரோ சின்னப் பெண். சம்பளப் பணம் போலிருந்தது. அடிக்கடி கைப்பையைப் பார்த்துக் கொண்டே வந்தது. பெரிய ஜவுளிக்கடைகளில், டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் ஒரே மாதிரி டிரஸ் மாட்டிக் கொண்டு நிறையப் பெண்கள் வாசலில் நிற்பார்கள். வரும் ஆட்களிடம் என்ன தேவை, எந்த மாடிக்குப் போக வேண்டும் என்று சொல்லி, மாடி பற்றிய விவரங்களைக் கொண்ட துண்டுப் பிரசுரம் விநியோகிப்பார்கள். இயேசு சீக்கிரம் வருகிறார், போல. சிவஸ்தலங்களில் துன்னீரு மடிக்க காகிதம் நீட்டுகிறாப் போல. துவார பாலகிகள்.
கல்யாணமே வாழ்க்கை லட்சியம் எனக் கண்ட ஸ்திரீகள்… பஸ்சில் ரெண்டு வாலிபப் பசங்கள் அவளைப் பார்க்காமல் பார்த்தபடி சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவள் கேட்காமல் கேட்டபடி ரசித்துக் கொண்டிருந்தாள். எழுத்துப் பிழை நிரம்பிய காதல் கவிதையை வாசிக்கிறாப் போலிருந்தது… நான் உண்ணைக் கதாலிக்கிறேன்.
அவர்கள் கூட அழைத்துப் போய் எதுவும் சாப்பிட வாங்கித் தந்தால் அவள் மறுக்கப் போவதில்லை.. நாயை வாலை ஆட்ட வைத்துவிட்டு பிஸ்கெட் போடாமல் செல்கிறாப் போல அவர்கள் போய்விடப் போகிறார்கள். கடைசி பஸ். அதிகக் கூட்டமும் இல்லை. அவளை கபாலியால் நன்கு பார்க்க அடையாளப் படுத்திக் கொள்ள முடிந்தது. கொஞ்சம் கிறுக்குப் பிடித்த உதடுகடித்த சிரிப்புடன் இருந்தாள்.
கபாலி வெறுங் கையுடன் பஸ்ஸைவிட்டு இறங்கியதாக வரலாறு கிடையாது. அவனது அதிர்ஷ்ட நாள். அவள் பையில் சானிடரி நாப்கின்… இல்லை. துட்டேதான். வேலை முடிந்து போகிறவளாய் இருக்கலாம். கடைசி பஸ். கபாலி திருப்தியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். நிசி முற்றிக் கொண்டிருந்தது. கூவம் நதிக்கரை நாகரித்தில் அவனது ஜாகை. தெருவில் இரவில் பாயைவிரித்து ஜனங்கள் படுத்தார்கள். பின்னிரவில் ஜனங்கள் உருண்டு வெறுந் தரைக்கு வர, நாய்கள் வந்து பாயில் சுருண்டு கொள்ளும். யாரையும் மிதிக்காமல் த்தா தாண்டிப் போக வேண்டும். தனது குச்சுவரை போக அலுத்தவர்கள் அப்படியே ஓரங்கட்டிச் சுருண்டு கொள்வர். என்னா அவசரம், காலை விடிய எழுந்து வீடு சேரலாம்… இருட்டு. மர நிழல் இருட்டைத் தீவிரப் படுத்தி யிருந்தது. தரையில் கருப்பாய்க் கோலம் போட்டிருந்தன மரங்கள். யாரோ ஒண்ணுக்குப் போய் எழுந்து போனாப் போல. தட்டிக்கதவைத் திறந்தபோது வீட்டுக்குள்ளேயிருந்து பெருச்சாளி ஒன்று வெளியே ஓடியது.
ஆயாவிடம் யாரோ ஒரு துப்பு கொண்டு வந்து தந்திருந்தார்கள். கபாலிக்குப் பெண் பார்க்கிற வேலைகளை ஆயா துவக்கியிருந்தாள். தொழில் நிபுணன். கூட ஒரு வயித்து சாப்பாட்டுப் பிரச்னை அவனுக்கு விஷயமே அல்ல. அவனுக்கு இணையாய் அந்த வட்டாரத்தில் பெண்டுகளே இல்லை அவள் பார்வையில். அழகன். அவன்மேல் ஆசை என்று சிறு சலனப்பட்ட பெண்டுகள் – குளிக்க சோப்பு வாங்கித் தருவான். மஞ்சளைப் போட்டு அப்ப வேண்டியதில்லை – பெண்டுகள்கூட ஆயாவை நினைத்து ஜகா வாங்கினார்கள்.
கபாலிக்கு வெட்கமாகி விட்டது. ”இன்னா ஆயா சொல்றே? கல்யாணமா நமக்கா?” என்றான் பீடியைத் துப்பி விட்டு. ”நமக்கு இல்லடா. ஒனக்கு…” என்று திருத்தினாள் ஆயா. ”உனக்கு இன்னாடா கொற. நாலு எளுத்துப் படிச்சவன்லா சோத்துக்குத் திண்டாடித் திர்றான்… நீ வெளிய இறங்கினா பத்தைந்நூறுக்குக் கொறையாமக் கொண்டாற…” என்றாள்.
”இன்னிக்கு த்தா மூவாயிரம் போலத் தேறும் போலுக்கு ஆயா” என்றான் மகிழ்ச்சியாய். தன்னை அவள் புகழ்ந்துரைத்தது அவனுக்குப் பிடித்தது. அவள் கல்யாணப் பேச்செடுத்ததும் பிடித்தது. மழைக்கு ஒதுங்கினாப் போல அவன் பொம்பளை ருசி எப்பவாவது பார்த்திருக்கிறான். ஒதுங்கியபிறகு அவனே மழை பொழிவான். பொதுவா அதில் ஒரு பயம் உண்டு. ஒருமுறை அவன் தேடிப்போன பொம்பளை அவனுக்கு மயங்க மயங்க சாராயம் ஊற்றிவிட்டு கைப்பணத்தை எடுத்துக் கொண்டு காணாமல் போய்விட்டாள். கபாலி எழுந்து பார்த்தபோது அவள் இல்லை. அவன் வேட்டி தரையில் தனியே விரித்துக் கிடந்தது.
கல்யாணம் என்றது போதையாய் இருந்தது. ஆயாமேல் அவனுக்கு அன்பு தெருச் சாக்கடையாய்ப் பெருக்கெடுத்தோடியது. ”பொண்ணு எந்தப் பக்கம் ஆயா?” என்று கேட்குமுன் குரல் தொண்டையில் மாட்டி வார்த்தைகள் காற்றில் கிழிந்து விட்டன. ”சிந்தாரிப்பேட்ட…”
இனி அந்தப் பக்கம் கைவரிசையைக் குறைத்துக் கொள்ள முடிவு செய்தான். மனசுக்குள் பூப்பூத்தாப்போல இருந்தது. காதுக்குள் வண்டு சுற்றும் கிர்ர்.
”பொண்ணு யார் ஆயா? நீ பார்த்திருக்கியா?”
”கஸ்மாலம் கெடந்து அலையாத” என்றாள் ஆயா செல்லமாய். ”சாயந்தரமா போய்ப் பாக்கப்போறம்… எங்கயும் கிளம்பிறாத, என்ன?”
எவ்வளவு விரைவாக விஷயங்கள் நடக்கின்றன. ”ஏன் ஆயா, அந்தப் பொண்ணு கிட்ட என்னியப் பத்தி என்ன சொல்லியிருக்க?”
”லேத்துப் பட்டறைல வேலை பாக்கறதாச் சொன்னேன்…”
”ஏன் ஆயா அப்பிடிச் சொன்னே?”
”அட அதெல்லலாம் நீ கவலைப்படாத… அவக எதுவரை படிச்சிருக்கேன்னு கேட்டா என்ன சொல்லுவே?”
”நாந்தான் பள்ளிக்கூடமே போவலியே ஆத்தா?”
”நாலு கிளாஸ்னு சொல்லி வெச்சிருக்கேன். அதெல்லாம் நமக்கு ஒரு கெளரதைடா…”
நமக்கு அதெல்லாம் இருக்கிறது, என்பதே அவனுக்கு அதுவரை தெரியாதிருந்தது. ஆயா எத்தனை விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கிறாள்.
”நான் நாலாங்கிளாஸ்னா நீ எட்டுவரை படிச்சவ, அப்பிடிச் சொல்லிக்கிறலாம். ஹி ஹி” என்று கபாலி சிரித்தான். கிறுகிறுப்பாய் இருந்தது அவனுக்கு. பையில் கைவிட்டான். பீடி இல்லை. அப்பவே அவன் வாழ்க்கைத்தரம் உயர்ந்து விட்டாப் போல இருந்தது. ஆனால்கூட பீடியின் காரம் சிகெரெட்டில் கிடையாது, என்று தோணியது. தண்ணியூத்தி சாராயம் அடிக்கதுக்கும் ‘ரா’வா அடிக்கதுக்கும் உள்ள வித்தியாசம். வெளியே வந்தபோது அந்த நாய் அவனைப் பார்த்து பயத்தில் பம்மியது. நேற்று கிட்ட வரச்சொல்லி எத்து விட்டவன். பெட்டிக்கடைக்குப் போய் அவன் நாயை அழைத்து ஒரு பொறை வாங்கிப் போட்டான். ஒருவர் பொறை இருவர் நட்பு. தெய்வமே என்று அது நன்றியில் சிலிர்த்தது. ”ஏ உனக்கு அண்ணி வரப் போறாங்கடே” என்று அதைப் பார்த்து உளறினான் கபாலி.
வண்ணாங்கடையில் வாடகை என்று நல்ல வேட்டி, நல்ல அன்டர்வேர், நல்ல சட்டை, நல்ல புடவை என்று உடுத்துக் கொண்டார்கள். பிளவுஸ்தான் கிடைக்கவில்லை. மூச்சுத் திணறுகிறாப் போலிருந்தது. ஆஸ்துமாக்காரியாட்டம். ”பாத்து மெதுவா மூச்சு விடு ஆயா. பட்டன் தெறிச்சிறப் போவுது” என்றான் கபாலி. அவன் நடையிலேயே ஒரு தயக்கம் வந்திருந்தது. ஒரு சைக்கிள் ரிக்ஷா வைத்துக் கொண்டார்கள். கெளரதை. ஆயா சொல்லிவிட்டாள். உற்சாகத்துக்குக் குறைவில்லை…
போகிற வழியில் ஒரு துட்டி. செத்த பிணத்தை நடு ரோட்டில் கிடத்தி புது உடையும் மாலையுமாய் அமர்க்களப் படுத்தியிருந்தார்கள். அதைப் பார்க்க என்னவோ போலிருந்தது. நம்ம ஜனங்கள் கொஞ்சம் அழுக்காய் இருந்தால்தான் இயல்பாக இருக்கிறது.
கூட ஓடிவந்த நாயைப் பிரிய மனமில்லாமல் பிரிந்தான். நாயையெல்லாம் ரிக்ஷாவில் ஏற்றிக் கொள்ள முடியாது. இது கெளரதைப் பிரச்னை… ஏய் நான் போய்ப் பாத்துட்டு வந்து பொண்ணு எப்பிடின்னு சொல்றேன்…
ஒடுக்கமான சந்து நீளமாய்ப் போனது. வாசலில் சாக்குப் படுதாக்கள். சுவரைத் தொட்டாப்போல பாத்திர பண்டங்களுடன் பிளாட்பார ஜீவிகள். குப்புறக் கவிழ்ந்து நீந்தித் தவழும் குழந்தை. அருகில் குப்புற நீந்தும் அப்பன். சாராய மயக்கம். கனகாரியமாய் ஆடுபுலியாட்டம் விளையாடும் ஒரு ஜமா. விதி எனும் புலிமுன் எல்லாருமே ஆடுகள்!
ஆ வீடு! பரபரப்பாய் இருந்தது. முழுக்கைச் சட்டை எப்பவாவதுதான் அணிவான்.. ஸ்லாக், அதன்மேல் ஒரு ஈரிழைத் துண்டு, அலங்காரங்கள் மாறியிருந்தன. கஞ்சி போட்ட மொடமொடப்பான அன்டர்வேர் அரித்தது. ஷேவிங் எடுத்து மீசையை விளக்குத் திரியாட்டம் சற்றே சுருட்டியிருந்தான். சுருட்டுப் போல. சலூன் கண்ணாடியைப் பிரிய அவனுக்கு மனசே இல்லை.
இறங்கி வீட்டுக்குள் நுழைய எல்லாரும் சிரிப்புடன் வரவேற்றார்கள்.
”என்னா உங்களுக்கு மூச்சுத் திணறுது?” என்று கேட்டார்கள்.
”உடும்பு ஷரில்ல” என்றாள் ஆயா.
பெண் வந்தாள். ”நீயா?” என்றாள் அவனைப் பார்த்து. ”ஐயா, என் சம்பளப் பணம்… இவன்தான் அபேஸ் அடிச்சது” என்றாள்.
– ஜூன் 2007