லிபரல்பாளையத்தில் தேர்தல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 7,285 
 

1.கடவுள் வாழ்த்து

நற்சிந்தனை நன்மொழியையும், அத்தகு நன்மொழி நல்லெழுத்தையும், அந்த நல்லெழுத்து நல்ல வாசகர்களையும் பெற்றுத்தருமாதலால் யார் மனதையும் தொந்தரவு செய்யாமல் இந்தக் கதையையாவது எழுதுவதற்கான வல்லமையை அல்லது கருணையை எனக்கு கடவுள் வழங்குவாராக. அப்படி வழங்குவதற்கு சத்தும் சாமர்த்தியமும் இல்லாதிருக்கும் பட்சத்தில் கடவுள் என்ற ஸ்தானத்தில் என்ன மயித்துக்கு இருக்கணும் என்று தற்கொலை செய்துகொள்ளும் துணிச்சலாவது அந்த கடவுளுக்கு வந்து தொலைப்பதாகுக.

2.ஜேம்ஸ்பாண்ட்ஸ் 00007777.5
2008 ஏப்ரல் 1 அல்லது மற்றவர்களை முட்டாளாக்கும் நாள். இடம் – கொள்ளை மாளிகை. ஜி-19 (கேங்-19) நாடுகளின் பொச்சி மாநாடு. (உச்சிமாநாடுகளை நடத்தி எதுவும் விளங்காமல் போனதால் நேமாலஜி படி இந்த புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.) கொள்ளைக்குப் போனாலும் கூட்டு ஆகாது என்ற முதுமொழியைப் பொய்யாக்கி, கூட்டுச் சேர்ந்தால்தான் கொள்ளையடிக்க முடியும் என்ற புதுவிதியின் கீழ் இணைந்திருக்கும் இந்த நாடுகளின் தலைவர்கள் பளபளக்கும் சூட்கேசுகளுடன் மாநாட்டரங்கில் நுழையும்போது உலகத்தின் கெட்ட நேரம் காலை 10 மணி என்று காட்டியது. உலகத்தில் எஞ்சியிருக்கும் ஓட்டை ஒடுக்கு ஈயம் பித்தளைச் சொம்புகளையும் எவ்வாறு லபக்குவது என்ற ஒற்றைப்பொருள் குறித்து விவாதிக்க இப்படியான மாநாடுகளை இவர்கள் அடிக்கடி நடத்துவதுண்டு. ஆயினும் இன்றைய மாநாடு அதைப் பற்றியதல்ல.

மாநாட்டைத் தொடங்கிவைத்துப் பேசிய தலைவர், நாம் இங்கு எடுக்கும் முடிவுகளை லிபரல்பாளையத்தில் அமல்படுத்துவது பெரும் சவாலாகவே இருக்கிறது. அந்த நாட்டின் இப்போதைய பிரதானக் கட்சிகள் இரண்டுமே நமக்கு வேண்டப்பட்டவைதான். நாம் காலால் இடுகிற வேலையை தலையால் செய்து முடிக்குமளவுக்கு அவை நம்மிடம் விசுவாசம் கொண்டவை. என்றாலும் தேர்தலை மனதில்வைத்து அவ்வப்போது மக்களிடம் பல்லிளிக்கும் கேவலத்தையும் செய்கின்றன. மக்களின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து சிலநேரங்களில் நமக்கு எதிராக பேசுமளவுக்கும் செல்கின்றன. தமாசுக்காகக்கூட நம்மை எதிர்த்துப் பேசக்கூடாது என்ற விதி 6.5/9.1 ல் கையெழுத்திட்டிருந்தும் அவர்கள் இவ்வாறு நடந்துகொள்வதை இம்மாநாடு தீவிரமாக பரிசீலிக்க வேண்டுகிறேன்.

நமது மூதாதைகள் முன்னூறு வருசம் அந்த நாட்டை பாடாய்ப்படுத்தியதை இன்னும் சிலர் ஞாபகம் வைத்திருப்பதால் அச்சமுற்றிருக்கும் இக்கட்சிகள் நம்மிடம் கொண்டுள்ள விசுவாசத்தை வெளிப்படையாக அறிவித்துக் கொள்ளவும் தயங்குகின்றன. நமக்கெதிராக நடக்கும் கியாட்டில் பாணி பேரணிகள் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கத் துணியாமல் இன்னமும் ஜனநாயகம், மனிதவுரிமை என்று பேசித் திரிய அனுமதிப்பதை நாம் எப்படி சகித்துக் கொள்ள முடியும்?

லிபரல்பாளையத்தின் ஆட்சியாளர்களையும் எதிர்க்கட்சிகளையும் வசக்கி நிறுத்த நாம் படுகிற பாட்டைப் புரிந்துகொள்ளாமல் நமது எஜமானர்கள் நம்மை நச்சரித்துக் கொண்டேயிருக்கிறார்கள். மூத்திரத்தில் உப்பு காய்ச்சி மூட்டை மூட்டையாக ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை தொடங்க ஒப்பந்தம் போட்டாச்சா, கலப்பின மாட்டின் கோமியத்தை கலயத்தில் அடைத்து விற்க அனுமதி வாங்கியாச்சா என்று ராவும்பகலும் நம் தொழிலதிபர்கள் நைய்நைய்யென்று சீலைப்பேனைப்போல அரிக்கிற தொல்லை தாங்க முடியாதளவுக்கு அதிகரித்து வருகிறது….

லிபரல்பாளையத்தில் யாரோ ஒருவரை ஆட்சியில் உட்காரவைத்துவிட்டு, ஒவ்வொன்றுக்கும் நாம் அவர்களை தொங்க வேண்டியிருக்கிற அவமானத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டியுள்ளது. அதாவது, லிபரல்பாளையத்தின் அரசியல்களத்தை நாமே கைப்பற்றியாக வேண்டிய கட்டத்திற்கு வந்துள்ளோம். அதற்காக அந்த நாட்டில் 1000 கோடி முதலீட்டில் இரண்டு கட்சிகளை தொடங்கி ஆட்சியைப் பிடித்துவிட்டால் நமக்குத் தேவையான சட்டத்தை நாமே இயற்றிக்கொள்ளலாம். நாம் விரும்புகிறபடி தொழில் தொடங்கலாம். ஏற்றுமதி செய்யலாம். இறக்குமதி செய்யலாம். எதிர்க்கிறவர்களைப் பிடித்து சிவான்டனாமோ சிறையில் தள்ளலாம் அல்லது சாகடிக்கலாம்…. லிபரல்பாளையத்தில் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் நாம் விரைந்து களமிறங்க வேண்டும் என்று வாயில் நுரைதள்ள பேசிவிட்டு அமர்ந்தார் தலைவர்.

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்றை நடத்தி வெற்றிபெற லிபரல்பாளையத்தில் நாம் கட்சி தொடங்குவது வரவேற்கக்கூடியதுதான். ஆனால் அங்கு 1000 கோடியில் கட்சி ஆரம்பிப்பது சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. முன்னாள் சினிமா நடிகர்கள், கலர் மாத்திரை விற்கிற மருத்துவர்கள், சாராய வியாபாரிகள், கட்டைப் பஞ்சாயத்து தாதாக்கள், வெண்கலக்குரல் வியாபாரிகள் எல்லோரும் அங்கு இப்போது அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த ஜூஜூபிக்களே ஆயிரம் கோடியில் ஆரம்பிக்கும்போது அவர்களுக்கெல்லாம் சீனியரான நாம் ஒரு ஐம்பதாயிரம் கோடியிலாவது கட்சி ஆரம்பித்தால்தான் நமது பவிசுக்கும் படோடபத்துக்கும் பெருமை சேர்ப்பதாயிருக்கும் என்று ஒரு பிரதிநிதி பேசியதை மாநாட்டு பங்கேற்பாளர்கள் மேசையைத் தட்டி வரவேற்றனர். எடுத்தயெடுப்பிலேயே பிரம்மாண்டமாய் ஆரம்பித்து உள்ளூர் சரக்குகளை ஓரங்கட்டி சந்தையைக் கைப்பற்றிவிடுகிற நமது வியாபார உத்தியைத்தான் இதிலும் நாம் பயன்படுத்த வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்து பங்கேற்பாளர்களின் பாராட்டைப் பெற்றார்.

கோழி பிரியாணியும் கொக்கு வறுவலும் கொடுத்தாலே மசிந்துவிடுமளவுக்கு ‘ரொம்ப நல்லவங்களா’ இருக்கிற லிபரல்பாளையம் மக்களுக்கு ஐம்பதாயிரம் கோடி முதலீடு செய்வது அனாவசியம். அந்தத் தொகையில் கால்வாசியைக் கமிஷனாகக் கொடுத்தாலே அந்த நாடு மொத்தத்தையும் ஓசிக்கு கிரயம் எழுதிக் கொடுக்கிற தலைவர்கள் அங்கே ஆட்சியில் இருப்பதை லாவகமாக பயன்படுத்திக் கொள்ளாமல் நாம் இப்படி ஊதாரியாக செலவழிக்கக்கூடாது என்று பிரதிநிதி ஒருவர் தெரிவித்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டது.

அவருக்கு பதில்சொல்ல வந்த இன்னொருவர், அதெல்லாம் பழைய கதை என்பதை மாண்புமிகு உறுப்பினர் புரிந்துகொள்ளவேண்டும். வெறுமனே கட்சியை நடத்திக்கொண்டிருப்பதென்றால் ஒரு லட்டர்பேடும் ஐந்தாறு விசிட்டிங்கார்டும் வெறும் அம்பதுரூபாயும்கூட போதும்தான். ஆனால் நாம் ஆட்சியைப் பிடிக்க வேண்டியிருக்கிறது. பங்குச்சந்தையின் இன்றைய காலை நிலவரப்படி லிபரல்பாளையத்தில் ஒரு ஓட்டின் முகமதிப்பு குறைந்தபட்சம் 500 ஸ்லேவ் டாலராக இருக்கிறது. இப்போதைக்கு ஏற்றயிறக்கம் காணப்பட்டாலும் தேர்தல் நெருங்க நெருங்க இந்த விலை இன்னும் கூடும் வாய்ப்பிருக்கிறது. தேர்தல்நாளில் விலை கட்டுக்கடங்காமல் எகிறும் என்பதையும் கணக்கில் கொண்டால், எப்படிப் பார்த்தாலும் வாக்காளர் கொள்முதல் என்ற வகையிலும் இன்னபிற செலவினங்களுக்காகவும் ஒரு முப்பதாயிரம் கோடியாவது தேவைப்படும். முதலீடு செய்த ஒரேவருடத்தில் வட்டியும் அசலுமாய் ஒட்ட உறிஞ்சி பன்மடங்காக திருப்பி எடுத்துவிடும் நுணுக்கங்கள் அறிந்த நமக்குள் இந்த சின்னத்தொகைக்காக இவ்வளவு நீண்ட விவாதங்கள் தேவையில்லை என்றார்.

வாதப் பிரதிவாதங்களை கூர்ந்து கவனித்துவந்த தலைவர் தனக்குத்தானே ஒரு முடிவுக்கு வந்தவரைப் போல சரி கனவான்களே, ஆயிரம் கோடி என்ற என் முன்மொழிவை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். தலா 30 ஆயிரம் கோடியில் இரண்டு கட்சிகளை ஆரம்பிக்கலாமா என்று கேட்டார். ஒரு நாட்டை ஆள ஒரு கட்சி போதும்தானே, எதற்காக இரண்டு கட்சிகள் என்று எதிர்ப்பு கிளம்பியது. கூடவேயிருந்தாலும் நம்ம கேரக்டரையே புரிஞ்சிக்கமாட்டேங்கிறாங்களே என்று அலுத்துக்கொண்ட தலைவர் விளக்கத் தொடங்கினார். அதாவது, எதிரும் புதிருமாக இரண்டு கட்சிகளை களமிறக்கி ஏற்கனவே களத்தில் இருக்கிற எல்லாக்கட்சிகளையும் ஓரங்கட்டிவிடுவது, ஆளுங்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் நம்முடைய கட்சிகளையே ஆக்கிவிடுவது என்ற தலைவரின் விளக்கம் யாவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தது. தலைவரின் மூளையே மூளை என்று வியந்து பாராட்டினர். இல்லாட்டி உங்களுக்கெல்லாம் தலைவரா இருக்க முடியுமா என்று தலைவர் தன்னடக்கத்தோடு அந்தப் பாராட்டை ஏற்றுக்கொண்டார்.

3.ஆப்ரேஷன் எல்.பி

பணிக்களம்- லிபரல்பாளையம்
திட்ட மதிப்பீடு- முப்பதாயிரம் கோடி + முப்பதாயிரம் கோடி
நிறைவேற்று காலம்- 2008 அக்டோபர் முதல் 2009 மே 18 வரை
எதிர்பார்க்கப்படும் வரவு- மொத்த நாடும், அந்த நாட்டின் சுடுகாட்டுச் சாம்பலும் இடுகாட்டில் எஞ்சியுள்ள மண்டையோடுகளும்
நிதி மற்றும் வழிகாட்டுதல்- ஜி-19 (கேங் 19)

அக் 2008

1.கட்சி என்றிருந்தால் அதற்கென்று ஒரு தொலைக்காட்சி சேனல் அவசியம். அல்லது தொலைக்காட்சி சேனல் என்றிருந்தால் அது ஒரு கட்சியை நடத்தவேண்டும். இது லிபரல்பாளையத்தில் நிலவும் வியாபார/ அரசியல் நியதி. கட்சியைக் காப்பாற்ற தொலைக்காட்சி அல்லது தொலைக்காட்சியைக் காப்பாற்றக் கட்சி என்றிருக்கும் இந்த நிலையை பயன்படுத்திக்கொண்டு, லிபரல்பாளையத்தின் எல்லா வட்டாரமொழிகளிலும் உள்ளூர் பெயரில் நாம் தொலைக்காட்சி சேனல்களை தொடங்குவது. தலா முப்பதாயிரம் கோடியில் நாம் ஆரம்பிக்கவிருக்கும் கட்சிகளுக்கு போட்டியற்ற வளமான களத்தை உருவாக்கிட, ஏற்கனவே லிபரல்பாளையத்தில் இயங்கிவரும் எல்லாக் கட்சிகளையும் அரசியலிலிருந்து தனிமைப்படுத்தும் வகையில் சகட்டுமேனிக்கு விமர்சிக்கவேண்டும் என்று அந்த சேனல்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.

24 மணிநேர செய்திச்சேனல்கள் என்பதால் உள்ளூர் வித்வான்களை விட்டு டொய்ங் டொய்ங் என்று எதையாவது ஜவ்விழுப்பாய் இழுத்துக்கொண்டிருக்க முடியாது. நொடிக்குநொடி பரபரப்பு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளுக்கு திட்டமிட வேண்டும். எல்லா கட்சித் தலைவர்களையும் ஸ்டுடியோவுக்கு அழைத்து எடக்குமடக்காக கேள்வி கேட்டு பதில் சொல்வதற்கு முன்பே குறுக்கிட்டு மூக்கறுத்து அனுப்புமளவுக்கு சாதுர்யமும் மூச்சுவிடாமல் பேசும் திறனுமுள்ள தொகுப்பாளர்களை நியமித்துக்கொள்வது அவசியம். இந்த தலைவர்கள் பேசுவதை நமது நோக்கத்திற்கேற்ப வெட்டியும் ஒட்டியும் திரித்தும் வெளியிடுவதற்கு சிறிதும் தயங்கக்கூடாது. நேர்மையற்ற இந்த திருகுதாள வேலைகளை எவ்வாறு திறம்படச் செய்வது என்று அறிந்துகொள்ள இந்தியாவிலிருந்து ஒளிபரப்பாகும் கின்டிடிவி அல்லது கிஎன்என்- கிபிஎன் சேனல்களை முன்னுதாரணமாகக் கொள்ளலாம்.

தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கப்படும் இச்சேனல்கள், அந்தந்த வட்டாரங்களில் ஓரளவுக்கு செல்வாக்கு பெற்றுள்ள தலைவர்களின் அரசியல் யோக்கியதைகள், கைசுத்தம், வாய்ச்சுத்தம், மெய்சுத்தம் பற்றி கிழிகிழியென்று கிழித்துவிட வேண்டும்.

செய்முறை உதாரணம்1- ஆளுங்கூட்டணியில் அங்கம் வகிக்கும் குமுக தலைவர் விலைஞர். வெண்குலக்குரல் விற்பன்னர், மஞ்சத்துண்டு மகாராஜா, வெண்செருப்பு வீரர், கூலிங்கிளாஸ் குபேரன் என்றெல்லாம் புகழ்ந்துரைக்கப்படும் இவரை அம்பலப்படுத்துவதன் மூலம் அவருக்குள்ள ஆதரவு தளத்தை சுருக்கமுடியும். இவரது கட்சிக்குத்தான் மந்திரிசபையில் அதிக இடங்கள். தன் குடும்பத்தில் நேற்று பிறந்த குழந்தையைக்கூட அமைச்சராக்கிவிட்டிருக்கும் இவர், முழுகாமல் இருக்கும் தன் கொள்ளுப்பேத்திகளின் பிரசவத்தேதிக்காக முன்தேதியிட்டு இன்னும் ஐந்து அமைச்சர் இடங்களை கைவசம் காலியாக வைத்திருக்கும் விசயத்தை நாறடிப்பது. தன் குடும்பமே கட்சியில் இருக்கிறது என்று இவர் சொல்லிக்கொண்டிருப்பதற்கு மாறாக கட்சியே குடும்பத்திடம் இருக்கிறது என்று அம்பலப்படுத்துவது. பூர்வீக சொத்தோ வேறு நிரந்தர வருமானமோ இல்லாத – முழுநேர அரசியல்வாதியான உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இவ்வளவு சொத்து எப்படி வந்தது? எனக் கேட்டு மடக்குவது.

செய்முறை உதாரணம் 2- லிமக தலைவர் புத்திரபாசத்தான் என்னும் ஜோசியர் ஐயா. பத்துவருசத்துக்கு முன்பு ஒரு ஓட்டை சைக்கிளில் கிராமம் கிராமமாகப் போய் நாடி ஜோசியம் பார்த்து வந்த உங்களுக்கு இந்த தோட்டம்துரவு எல்லாம் எப்படி வந்தது? அரசியலுக்கு வந்து அமுக்கியதுதான் என்றால் ஒண்ணாம் நம்பர் யோக்கியனாட்டம் ‘அரசியலில் நேர்மை தனிவாழ்வில் தூய்மை’ என்று சவடாலடிக்கும்போது மனசாட்சி உறுத்தவில்லையா? எதுக்கு உங்களுக்கு இந்த வெள்ளையும் சொள்ளையும் ….?

(இந்த நேரத்தில் அவர்களது அசையும் அசையா சொத்துக்கள் அனைத்தையும் பின்புலக் காட்சியாக திரையில் ஓடவிடுவது கூடுதல் விளைவுகளை உருவாக்கும்.)

-இப்படி தீவிரமாக அம்பலப்படுத்துவதன் மூலம், இப்போதிருக்கும் தலைவர்களின் கொட்டத்தைக் கண்டு மனம் வெதும்பியிருக்கிற மக்களின் குரலாக, நிஜமாகவே ஜனநாயகத்தின் நான்காவது தூணாக நம் சேனல்கள் மட்டுமே செயல்படுகின்றன என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டுவிடும். நாட்டையே ரட்சிக்கப்போவது இந்த சேனல்தான் என்று நம்புமளவுக்கு மக்களின் சிந்திக்கும் ஆற்றலை சிதறடித்துவிட வேண்டும். அதற்குப்பிறகு நாம் புலியைக் காட்டி பூனை என்று சொன்னாலும் மக்கள் நம்புவார்கள்.

(இதுபோல் நாறடிக்கப்பட வேண்டிய தலைவர்களின் பட்டியலும் அவர்கள் சிக்கிக் கொண்டிருக்கும் விசயங்களும் அறிக்கையின் பின்னிணைப்பின் பக்கம் 26ல் தரப்பட்டுள்ளது.)

நவம்பர் 2008

ஐஎம்எஃப் அல்லது உலகவங்கியில் நமது காலைச் சுற்றித் திரிகிற லிபரல்பாளையத்தைச் சேர்ந்த அதிகாரிகளில் பொருத்தமான ஒருவரைக் கொண்டு (இப்போதைக்கு மிஸ்டர் எக்ஸ் எனக் கொள்க) லிபரல்பாளைய தேசியக் கழகம் – லிதேக என்ற கட்சியைத் தொடங்குவது. அதாவது கட்சி நம்முடையதாக இருந்தாலும் அதற்கு ஒரு உள்ளூர் முகத்தைக் கொடுப்பது அவசியம். ‘இதோ 2009 தேர்தலுக்கென்றே எமது புத்தம் புதிய கட்சி ரிலீஸ்’ என்று எல்லாப் பத்திரிகைகளிலும் முழுப்பக்கத்திற்கு பலவண்ணங்களில் விளம்பரம் கொடுப்பது. எல்லாத் தொலைக்காட்சி சேனல்களிலும் சீரியல்களுக்கிடையில் விளம்பரம் செய்வது.

(இந்த விளம்பரத்திற்கான வாசகங்கள், படங்கள் ஆகியவற்றின் மாதிரிப்படிவத்திற்கு பின்னிணைப்பின் 97ம் பக்கத்தைப் பார்க்கவும். விளம்பரத்தை வடிவமைக்க சர்வதேசரீதியில் புகழ்பெற்ற தொழில்முறை குழுக்களை அமர்த்திக்கொள்ள கட்சியின் தலைவர் மிஸ்டர் எக்ஸ் அவர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது)

டிசம்பர் 2008

1.நமக்கு விசுவாசமான இன்னொரு அதிகாரியைக் கொண்டு (இப்போதைக்கு மிஸ்டர் ஒய் எனக் கொள்க) லிபரல்பாளையம் ஜனக்கழகம்- லிஜக என்ற நம்முடைய இரண்டாவது கட்சியைத் தொடங்குவது. லிதேகவின் விளம்பரங்களை காட்டமாக விமர்சித்து பரவலாக எதிர்விளம்பரம் செய்வது. இதோ நாட்டின் மாபெரும் ஜவுளிக்கடல்/கடை என்கிற தொனியில் ‘உங்களுக்கு செருப்பாய் கிடந்து சேவை செய்ய இதோ ஒரு உண்மையான கட்சி’ என்று இந்தக் கட்சியும் பரவலாக விளம்பரம் செய்யவேண்டும்.

2. மிஸ்டர் எக்ஸ், மிஸ்டர் ஒய் இருவருமே நம்முடைய ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றாலும் அவர்கள் தங்களை எல்லா நேரத்திலும் எதிரும்புதிருமாகவே நிறுத்திக்கொள்ள வேண்டும். ஒருவர் முகத்தில் மற்றவர் முழிப்பதே அவமானம் என்ற ரீதியில் நடந்துகொள்ள வேண்டும். நடப்பது நாடகம்தான் என்று இருவருமே அறிந்திருந்தாலும் உயிரைக் கொடுத்து நடிப்பதில்தான் நமது வெற்றி அடங்கியிருக்கிறது.

3.நம்முடைய சேனல்கள் இவர்களிருவரைப் பற்றிய செய்திகளையே தந்திரமாக முன்னிலைப்படுத்த வேண்டும். இருவரையும் அடிக்கடி ஸ்டுடியோவுக்கு அழைத்து நேரடி வாக்குவாதத்தில் ஈடுபடுத்தலாம். ஆனால் அதற்கு முன்பு இருவரும் சந்தித்து ஒத்திகை பார்த்த கபடம் வெளியே கசிந்துவிடக்கூடாது. பிற ஊடகங்களிலும் நம்மிரண்டு கட்சிகளில் ஏதாவதொன்றைப் பற்றிய செய்தியே தினமும் தலைப்புச் செய்தியாக வருமாறு பார்த்துக் கொள்வது அவசியம். ஆதரித்தோ எதிர்த்தோ நம்மைப் பற்றிய செய்தி எப்போதும் ஏதாவதொருவகையில் மக்கள் மத்தியில் புழங்கிக்கொண்டே இருப்பது சாதகமான விளைவுகளை உருவாக்கும். இதற்காக மற்ற பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களுக்கு தினசரி பேட்டா கொடுத்து நன்கு கவனித்துக் கொள்வதற்கென்று தனியே செய்தித் தொடர்பாளர்களை நியமித்துக்கொள்ள இரு தலைவர்களுக்கும் அதிகாரமளிக்கப்படுகிறது.

4. நமது இரண்டு கட்சிகளும் போடுகிற கூச்சலைக் கேட்டு இதுவரை களத்திலிருக்கும் எல்லாக்கட்சிகளும் வாயடைத்து பேதலித்து செயலிழந்து போகும் நிலைக்குத் தள்ளுவது. அவை சுதாரித்து மறுப்பரசியல் எதையும் பேசுவதற்கான வாய்ப்பளிக்காமல் நமது கட்சிகளே களத்தை ஆக்கிரமிப்பது (சந்தையில் கோக்கும் பெப்ஸியும் மட்டுமே இருப்பதுபோல). அதாவது களத்தில் வேறு கட்சிகளே இல்லை- கட்சி என்றாலே நம்முடையவை மட்டும்தான் என்ற தோற்றத்தை உருவாக்குவது. மற்ற கட்சிகள் வம்புக்கிழுத்தாலும் வலிய சண்டைக்கு வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உதாசீனம் செய்து சோர்வடைய வைப்பது. இதன்மூலம் அவைகளாகவே நமக்கு ஆயுள் அவ்வளவுதான் என்று எண்ணி அமைதியடையும் நிலைமையை உருவாக்குவது.

5. வெவ்வேறு கட்சிகளில் இருக்கும் பிரமுகர்களில் சிலரை தினசரி நம்முடைய ஏதாவதொரு கட்சியில் இணையவைத்து அதை பரவலாக விளம்பரப்படுத்துவதன் மூலம் நஞ்சானும் குஞ்சானுமாய் இருக்கிற துண்டுத்துக்காணி கட்சிகளை நம்மால் உட்செரித்துக்கொள்ள முடியும். அவ்வப்போது பிரபலமடையும் சினிமா நடிகைகள், விளையாட்டு வீரர்கள், உலக அழகிகளை நமது விளம்பரத்திற்காக அமர்த்திக்கொள்வது நலம். அவர்களது தொடை அல்லது முதுகும் இடுப்பும் கூடுமிடத்தில் கட்சி சின்னத்தை வரைந்து காட்டுவது கூடுதல் பலனளிக்கும். இதற்காக நமது மூலதனத்தில் கணிசமான வீதத்தை ஒதுக்குவதில் கஞ்சத்தனம் காட்டக்கூடாது.

ஜனவரி 2009

நம்முடைய இரண்டு கட்சிகளில் எது ஜெயித்தாலும் லாபமே. ஆனால் இவ்விரண்டில் ஒன்றுதான் ஆளுங்கட்சியாகப் போகிறது என்ற எதிர்பார்ப்பை மக்களிடம் உருவாக்கிவிட இந்த மூன்றுமாத காலத்தை முழு ஆற்றலோடு பயன்படுத்த வேண்டும். தோற்றுவிடுகிற கட்சியின் தலைமை, அடுத்தத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க பிரத்யேகமாக எதற்கும் மெனக்கெடத் தேவையில்லை. ஆட்சியின் அலங்கோலங்களை எதிர்த்து அக்கப்போர் எதையும் செய்தாக வேண்டிய அவசியமும் கூட கிடையாது. அடுத்துவரும் ஐந்தாண்டுகளுக்கும் அமைதியாக ஏதேனும் பழத்தோட்டத்திலோ குளுகுளு வாசஸ்தலத்திலோ ஓய்வெடுக்க வேண்டும். அல்லது கதை கவிதை என்று இலக்கிய கப்ஸாக்கள் எதையாவது உல்லாசமாக கிறுக்கிக் கொண்டிருக்கலாம். மறக்காமல் அவ்வப்போது காட்டமான மொழிநடையில் ஒன்றிரண்டு அறிக்கைகள் விட்டு களத்தில் இருந்து கொண்டேயிருப்பதான தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை அரசியல் சாணக்யம் என்று போற்றும் அல்லக்கை கூட்டம் ஒன்று அங்கும் இருக்கிறது. மற்றபடி ஆளுங்கட்சி தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொண்டு தோற்றுப்போய், கடந்தமுறை தோற்றுப்போன கட்சியை இம்முறை ஜெயிக்கவைத்துவிட வேண்டும். எக்காரணம் கொண்டும் மூன்றாவதாக ஏதாவதொரு கட்சி தலையெடுப்பதற்கு வாய்ப்பளித்துவிடக்கூடாது. இப்படி, இரண்டு கட்சிகளும் மாறிமாறி ஒரு சுழற்சிமுறையில் ஆட்சியிலமர்வதன் மூலம் லிபரல்பாளையம் தொடர்ச்சியாக நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கும்.

பிப்ரவரி- மே 2009

பிப்ரவரி தொடக்கத்திலிருந்தே மக்களைச் சந்தித்து வாக்கு கொள்முதல் வேட்டை நடத்துவது. தலைக்கு இத்தனை ஸ்லேவ் டாலர் என்று கணக்கிட்டு பட்டுவாடா செய்வது. பணத்தைக் கொடுத்ததும் வேலை முடிந்ததென்று ஏரியா கமிட்டிகள் வந்துவிடக்கூடாது. கை நீட்டி பணம் வாங்கிவிட்ட அந்த வாக்காளர்கள் மனம் மாறாமல் இருப்பார்கள் என்றாலும் ஒரு உத்திரவாதத்திற்காக வெற்றிலை, பால் அல்லது தாலி மீது சத்தியம் வாங்கிக்கொள்ள வேண்டும். இந்த சென்டிமென்ட் டெவலப்மென்ட்டுக்காக தினமும் ஏழு கவுளி வெற்றிலையும் பத்துலிட்டர் பாலும் வாங்கிக்கொள்ள ஏரியா கமிட்டிக்கு அனுமதியளித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

4.மோசக்காரனுக்கு மோசக்காரன் அல்லது திருடப்போன இடத்தில் தேள்கொட்டிய கதை

பெறுதல்
அனைத்து உறுப்புநாடுகளின் தலைவர்கள்
ஜி-19

அவசர சுற்றறிக்கை எண்- 1/ நாள் 2008 ஜூன் 1

லிபரல்பாளையத்தைக் கைப்பற்ற என்னவெல்லாம் செய்யவேண்டுமென்று ரகசியமாக நாம் ஏப்ரல் முதல்நாளில் கூடி திட்டமிட்டிருந்தோமோ அவற்றையெல்லாம் நம்மை முந்திக்கொண்டு வேறு யாரோ செய்து கொண்டிருக்கிறார்கள். நம்முடைய அறிக்கை அவர்கள் கையில் உடனடியாகவே சிக்குமளவுக்கு நமது பாதுகாப்பில் சுணக்கம் இருந்திருக்கிறது. இதற்கென்று நாம் ஒதுக்கியிருந்த தொகை அறுபதாயிரம் கோடி ஸ்லேவ டாலரையும் அவர்கள் போலியான பாஸ்வேர்ட் கொடுத்து அப்போதே வங்கியிலிருந்து எடுத்திருக்கிறார்கள். இவ்வளவு பெரிய மோசடியை உணராமல் நம்முடைய உளவுத்துறையின் குற்றத்தடுப்புப் பிரிவு வாயைப் பிளந்து கொட்டாவியும் விட்டு கோட்டையும் விட்டிருக்கிறது.

அக்டோபர் 2008ல் திட்டப்பணிகளைத் தொடங்குவதற்கான முன்தயாரிப்புகளில் நாம் ஈடுபட்டிருந்த வேளையில் அவர்கள் நம்மை முந்திக்கொண்டு மே 2008 முதல்நாளிலேயே வட்டார மொழிகள் அனைத்திலும் தொலைக்காட்சி சேனல்களைத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்குப் பின்னாலுள்ள அரசியல் நோக்கத்தை கண்டுபிடிக்காத நம்முடைய உளவுத்துறை யாரோ காசுள்ள மகராசன் சேனல்களைத் தொடங்கியிருப்பதாக கருதி மெத்தனமாக இருந்திருக்கிறது. அன்றைக்கே அவர்கள் வெவ்வேறு நகரங்களில் லிமதேக, தேலிமக என்ற இரண்டு கட்சிகளைத் தொடங்கியிருக்கிறார்கள். நமக்கு சந்தேகம் வந்துவிடக்கூடாதென்பதற்காக அவர்கள் இவ்வாறு ஒரேநாளையும் வெவ்வேறு நகரங்களையும் வேறுவேறு கட்சிப்பெயர்களையும் அவசரஅவசரமாக தேர்ந்தெடுத்து குழப்பியுள்ளார்கள். இந்நிகழ்வுகளை நாம் இணைத்துப் பார்த்துவிடக் கூடாதென்பதற்காக மிகவும் தற்செயலானதாகவும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற இருவேறு நிகழ்வுகளைப் போலவும் சித்தரித்ததில் அவர்கள் வெற்றி கண்டிருக்கிறார்கள்.

இப்போது எல்லாமே கைமீறிப் போய்விட்டது. என்னவெல்லாம் செய்தால் ஆட்சியைப் பிடிக்கமுடியும் என்று ரகசிய அறிக்கையில் சொல்லியிருந்தோமோ அதையெல்லாம் அவர்கள் நம்முடைய பணத்தை வாரி இறைத்து செய்து கொண்டிருப்பதைப் பார்த்து மனங்குமைவதைத் தவிர நமக்கு மார்க்கம் வேறில்லை. அவர்களது மோசடியை அம்பலப்படுத்தப் போனால் நமது பெயரும் நாறிப்போகும் என்பதால் இதை நாம் வெளியிலும் சொல்லித் தொலைக்க முடியாத இக்கட்டில் மாட்டிக்கொண்டிருக்கிறோம். நம்முடைய சதியை முறியடித்திருக்கும் இந்தக் கூட்டத்திற்குப் பின்னால் நமது நிரந்தர எதிரிகளான காரல் மார்க்ஸ், சேகுவேரா போன்றவர்களின் ஆவிகளோ அல்லது மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந்து நம் நிம்மதியில் கோடாரி பாய்ச்சும் பிடல் காஸ்ட்ரோவோ, வீச்சுடன் கிளம்பியிருக்கும் நமது புதிய எதிரியான சாவேஸ் போன்றவர்களோ இருக்கக்கூடுமென்றும் கண்டிப்பாக நாம் சந்தேகிக்க வேண்டியுள்ளது.

நம்முடைய திட்டத்தை நமது பணத்தைக் கொண்டே யாரோ செயல்படுத்திவிட்ட நிலையில் இனி நாம் சேனல் தொடங்குவதோ கட்சி ஆரம்பிப்பதோ பலனளிக்கப்போவதில்லை. எனவே நாம் அந்த நாட்டை லபக்கித் தின்ன வேறுவகையான தந்திரங்களை மிகுந்த ரகசியமாக மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் நம்மை முந்திக்கொண்டுவிட்ட அவர்கள் யார்? அவர்கள் கைக்கு நம் அறிக்கையும் பணமும் எவ்வாறு கிடைத்தது? அவர்களுக்கும் அல்கொய்தாவுக்கும் தொடர்பிருப்பதாகக் கூறி லிபரல்பாளையம் மீது படையெடுத்து தேர்தலைத் தடுத்து ‘நமது பாணியிலான ஜனநாயகத்தை’ நிர்மாணிக்கும் சாத்தியங்கள் அங்கு இருக்கிறதா என்பதை ஆராயவேண்டியுள்ளது. எது எப்படியிருப்பினும் இப்போதைக்கு ஆப்ரேஷன் எல்பி கைவிடப்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதே என் அபிப்ராயம்.

நமது திட்டத்தையும் பெருந்தொகையையும் களவாடிய அவர்கள் இப்போது லிபரல்பாளையம் மக்களின் ஆதரவை பெற்றிருப்பவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளும் அதேநேரத்தில் இந்தத் தேர்தலையும் நாம் கண்கொத்திப் பாம்பாக இருந்து கண்காணிக்க வேண்டியிருக்கிறது. இரண்டில் எந்தக்கட்சிக்கு சாதகமாக அலைவீசுகிறதோ அந்தக் கட்சியின் தலைவரை நமது தூதர் சந்தித்து ஆட்சிக்கு வரும்பட்சத்தில் நமது ஜி 19 நாடுகளுடன் போட்டுள்ள ஒப்பந்தங்கள் எதற்கும் பாதிப்பு நேராதவகையில் எச்சரித்து ராஜீயரீதியாக பலமாகவே மிரட்டி தோதுபார்த்துவிட்டு வரவேண்டும். இதுபற்றிய மேலதிக விவரங்கள் பின்பு உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்.

இப்படிக்கு,
(ஒப்பம்) /தனிச்செயலர், ஆப்ரேஷன் எல்பி,

5.லிபரல்பாளையத்தில் உய்யலாலா

லிபரல்பாளையத்தின் தேர்தல்முறை அண்டசராசரத்திலும் அம்பத்தாறு தேசங்களிலும் இல்லாதபடிக்கு அதியதி நவீனமானது. மலத்தை மனிதனே கையால் அள்ளிக் கொண்டிருந்தாலும் நிலவுக்கு டவுன்பஸ் விடுமளவுக்கு அறிவியல் தொழில்நுட்பத்தின் அதியுச்சங்களை எட்டிய இந்த நாடு, தேர்தலை மட்டும் பழைய குடவோலை முறை மாதிரி நடத்திக் கொண்டிருந்தால் நாலுசனம் காரித் துப்பும் என்ற மானவுணர்ச்சி மிகுத்துப் பெய்ததில் இங்கு ஆன்லைன் தேர்தல் முறை இந்த பதினைந்தாவது பொதுத்தேர்தலின் போது நடைமுறைக்கு வந்துவிட்டிருந்தது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் செய்கிற மந்திரியே இங்கும் வாய்த்திருந்தாலும் அவரது அக்கப்போர்களையெல்லாம் மீறி எப்படியோ 5ஜி தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்துவிட்டிருந்தது லிபரல்பாளையத்தில். எனவே ‘அரிசி டப்பா (கவனிக்கவும்- பழைய அரிசிப்பானை அல்ல) காலி, அடுப்பு பற்றவைக்க வழி/ வக்கில்லை, புவ்வா லேது, டுடே ஸ்பெஷல் பட்டினிப்பாயாசம்’ என்கிற தகவலைக்கூட தன் குடும்ப உறுப்பினர்களுக்கு எஸ்எம்எஸ் அல்லது இமெயிலில் தெரிவிக்குமளவுக்கு இங்கு தகவல் தொழில்நுட்பம் அன்றாட வாழ்வுடன் இணைக்கப்பட்டுவிட்டிருந்தது. வர்த்தகம், வம்பளப்பு, வாய்க்கா வரப்புத் தகராறு, காதல், கல்யாணம், கருமாதி எல்லாமே ஐந்தாறு வருடமாக ஆன்லைனில்தான் நடந்து கொண்டிருக்கிறது. இப்படியான கீர்த்தியோடு இருக்குமிந்த நாட்டை ஆண்டு அனுபவிக்க பதவியேற்று பரிபாலிக்க யார் தலையில் எழுதியிருக்கிறதென்று நடக்கவிருக்கும் தேர்தலை மிக நவீனமாக ஆன்லைனில் நடத்துவதுதானே கௌரதையாக இருக்கும்?

ஆன்லைன் தேர்தல் என்பதால் ஆயிரம் கார்களைக் கூட்டிக்கொண்டு அளப்பறை செய்தபடி வேட்புமனுத் தாக்கல் செய்வதோ, அந்த அத்துமீறலைக் கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்களை நியமிப்பதோ தேவையற்றதாகிவிட்டது. போட்டியிட விரும்புகிறவர் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தை நிரப்பி மின்னஞ்சல் செய்வதே போதுமானதாயிருந்தது. டெபாசிட் தொகையான 50 ஆயிரம் ஸ்லேவ் டாலரை ஆன்லைன் மூலமாகவே செலுத்திவிட்டு வேறுநாட்டுக்கே போய்விட்டாலும் அவர் பெயர் வேட்பாளர் பட்டியலில் இருக்கும்.

லிபரல்பாளையத்தின் பிரச்சாரமுறையும் முற்றிலும் வித்தியாசமானதுதான். வாக்காளரை வேட்பாளரோ, வேட்பாளரை வாக்காளரோ வாழ்நாளில் ஒருமுறைகூட சந்தித்துக்கொள்ள வேண்டியதேயில்லை. சந்தித்தும் ஆகப்போவது ஒன்றுமில்லை என்பதாலும்கூட இவ்விதி உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அரசியல் சட்ட வல்லுனர்களிடம் உண்டு. ஆனால், தொலைக்காட்சியில் தோன்றி கொஞ்சம் உரக்கப் பேசினாலே உணர்ச்சிவசப்பட்டு ஓட்டு போட்டுவிடுகிறவர்களாக இந்த மக்கள் இருக்கும்போது எதற்காக மெனக்கெட்டு அலைய வேண்டும் என்ற தலைவர்களின் மனப்பான்மைதான் பிரச்சார வடிவத்தையே மாற்றிவிட்டது என்ற குற்றச்சாட்டும் உண்டு. மக்களை நேடிரயாக சந்திக்க ஆர்வமற்றிருக்கும் இந்தத் தலைவர்களுக்கு உகந்த மாதிரி தேர்தல் ஆணையமும் பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் எஸ்எம்எஸ், இமெயில் வழியாக மட்டுமே வாக்கு சேகரிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்துவிட்டது. (தன் குடும்பத்தாரிடமும்கூட நேரடியாக வாக்கு கேட்டால் தேர்தல் நடத்தைவிதி மீறலாக கருதப்படும்.) வாக்காளர்களும் இதேரீதியில் எஸ்எம்எஸ் அல்லது இமெயில் மூலம் வீட்டிலிருந்தபடியோ விருப்பப்பட்ட இடத்திலிருந்தோ வாக்களித்துவிட வேண்டும்.

லிபரல்பாளையத்தில் தேர்தல் களைகட்டிவிட்டது. அவிழ்த்துவிடப்பட்ட கருத்துக் கணிப்புகள் லிமதேக அல்லது தேலிமக தான் ஆட்சியைப் பிடிக்கப்போகிறது என்று அறிவித்தன. இந்த கருத்துக் கணிப்பு அமைப்புகளை இவ்விரண்டு கட்சிகளும் சேர்ந்து ரகசியமாக உருவாக்கியிருப்பதை அறியாத மக்கள், உண்மையாக இருக்கக்கூடும் என்று நம்பி அவரவர் பங்குக்கு அடுத்தவரிடம் பரப்பிக் கொண்டிருந்தார்கள்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதற்கு மறுநாள். தூங்கி எழுந்து வாசல் தெளிக்க கதவைத் திறந்த பெண்கள் (லிபரல்பாளையத்திலும் பெண்கள்தானய்யா வாசல் தெளிப்பார்கள்), தம்வீட்டு வாசற்படியில் ஒரு புத்தம் புதிய செல்போனை கண்டெடுத்தார்கள். அது மிகவும் நவீனமாகவும் மயக்கும் அழகோடும் இருந்தது. விலையும் மிக அதிகமாக இருக்குமெனத் தோன்றியது. இவ்விசயத்தை முன்தூங்கி பின் எழும் தத்தமது கணவன்மாரிடம் தெரிவிக்க, தேர்தல் வந்திடுச்சில்ல என்று சொல்லிவிட்டு மீண்டும் தூங்கப் போய்விட்டனர். பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்க. ஆனா மறக்காம லிமதேகவுக்கு ஓட்டுப்போடுங்க என்ற வாசகம் செல்போன் திரையில் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு ஓட்டுக்கு 100 ஸ்லேவ் டாலர் என்ற வீதத்தில் தொகையிட்ட கவரை தேர்தலுக்கு முதல்நாள் சன்னலுக்குள் வீசியடித்துவிட்டுப் போவது, லட்டுக்குள் மூக்குத்தி வைத்து தருவது, கறிவிருந்து வைத்து காசும் கொடுப்பது போன்றவற்றை வழக்கமாகப் பார்த்திருந்த மக்கள், இந்தத் தேர்தலில் ஆரம்பமே செல்போன் என்றால் அடுத்தடுத்து என்ன கிடைக்கப்போகிறதோ என்று ஆவலோடு காத்திருந்தார்கள். அவர்களது ஆவல் பொய்யாகிவிடவில்லை. அடுத்தநாள் வாசலில் கம்ப்யூட்டர் கிடந்தது. எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே இதை தேலிமக தான் வைத்துவிட்டுப்போயிருந்தது.

லிமதேகவும் தேலிமகவும் இப்படி எடுத்தயெடுப்பில் ஒரேநாளில் வாக்காளர்களின் கொள்முதல் விலையை உயர்த்திவிட்டது கண்டு மருண்டு போன பெரும்பாலான கட்சிகள் போட்டியிலிருந்தே ஒதுங்கிக்கொண்டன. சொடுங்கிப்போக மனமற்ற சில கட்சிகள் பொன்னை வைக்கிற இடத்தில் பூவை வைப்பதாகக்கூறி கால் பவுன் அரை பவுன் காசுகளைக் கொடுத்து கையெடுத்து வேண்டி கால் பிடித்து தொழுதன. ஆனால் ஏற்கனவே கொடுத்ததைவிட பெரியதாக கொடுப்பவர்களுக்கே வாக்களிப்பது என்றும் எதன் பொருட்டும் தமது சந்தை மதிப்பை குறைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்றும் தீர்மானமாயிருந்த வாக்காளர்கள் துளியும் இரக்கமற்று ஆகட்டும் பார்க்கலாம் என்று முகத்தை திருப்பிக்கொண்டனர். ஆக போட்டி இரண்டு கட்சிகளுக்கு இடையில்தான் என்றாகிவிட்டது.

6.உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே

மிகப்பெரிய மாளிகையில் தன்னந்தனியாயிருக்கிறோம் என்ற அச்சத்தில் தூக்கம் பிடிக்காமல் அதிகாலையிலேயே விழித்துவிட்ட குடியரசுத்தலைவர் நடந்து முடிந்த இந்த தேர்தலைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தார். வெளிநாட்டு அதிபர்களுக்கு விருந்து கொடுப்பதைத் தவிர ஒழிந்த நேரங்களில் இப்படி அவர் அவ்வப்போது நாட்டைப் பற்றியும் சிந்திப்பதுண்டு. நெடிய அரசியல் அனுபவம் கொண்டிருந்த அவருக்கு இந்தத் தேர்தல் முடிவு மிகுந்த ஆச்சர்யத்தையும் இனம்புரியாத அச்சத்தையும் கொடுத்தது. ஆரம்பித்தே ஒரே வருஷத்தில் நாட்டிலிருந்த அத்தனைக் கட்சிகளையும் துடைத்தெறிந்துவிட்டு லிமதேக ஆளுங்கட்சியாகவும், தேலிமக எதிர்க்கட்சியாகவும் தேர்வு பெற்றிருப்பதை அவரால் எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆன்லைனில் தேர்தல் என்றானதால் இந்தக் கட்சிகளின் தலைவர்களையோ வேட்பாளர்களையோ ஒருமுறைகூட நேரில் பார்க்காத மக்கள் இதுநாள்வரை பாரம்பரியமாக லிபரல்பாளையத்தில் அரசியல் செய்துவந்த பல பெருந்தலைகளையும் தோற்கடித்துவிட்டது குறித்த துயரம் அவரை வாட்டியது. இந்த புதிய கட்சிகள் இரண்டையும் அனுசரித்துப் போனால்தான் அடுத்தமுறையும் தான் குடியரசுத்தலைவராக நீடிக்கமுடியும் போலிருக்கிறதே என்று நினைத்து பெருமூச்சு விட்டுக்கொண்டார். ஆட்சியமைக்க உரிமை கோரி இன்று தன்னை சந்திக்கும் வரும் லிமதேக தலைவரை இதமாக வரவேற்க தன்னை தயார்படுத்திக் கொண்டு காத்திருந்தார்.

காலையிலிருந்து காத்திருந்தும் லிமதேக தலைவர் வரவேயில்லை. அதற்கடுத்த நாளும் வீணாகத்தான் போனது. அவரைத் தேடிப்போன குடியரசு மாளிகை அதிகாரிகள், அந்தத் தலைவர் கொடுத்திருந்த முகவரி போலியானது என்பதை அறிந்து ஏமாற்றத்துடனும் அதிர்ச்சியுடனும் திரும்பி வந்து உதட்டைப் பிதுக்கினர். தீவிரத் தேடுதலுக்குப் பிறகு லிமதேக தலைவர் மட்டுமல்ல, அதன் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருந்த அவ்வளவுபேர் கொடுத்திருந்ததும் போலி முகவரிதான் என்ற தகவல் குடியரசுத் தலைவரிடம் தெரிவிக்கப்பட்டது. ஏதோ விபரீதம் நடந்துகொண்டிருக்கிறது என்று பதற்றமடைந்த அவர் தேலிமக தலைவரையாவது அழைத்துவருமாறு பணித்தபோதுதான் அந்தக் கட்சியின் தலைவரும் அதன் உறுப்பினர்களும் கொடுத்திருந்த முகவரியும்கூட போலியானதுதான் என்பது தெரிய வந்தது. நுணுக்கமாக ஆராய்ந்ததில் அவர்கள் கொடுத்திருந்த புகைப்படங்கள் எல்லாமே கம்ப்யூட்டர் மூலம் வெட்டி ஒட்டப்பட்டவை என்றும் தெரிய வந்தது. வாயில் நுரைதள்ள வரிந்து கட்டிக்கொண்டு இந்தக்கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த தொலைக்காட்சி சேனல்களின் அலுவலகங்களும் கேட்பாரற்றுக் கிடந்தன.

வேறு கட்சிகள் எதுவும் ஒரு சீட்கூட ஜெயிக்காததால் யாரையுமே ஆட்சியமைக்க அழைக்க முடியாத நிலை இதற்கு முன் எப்போதும் ஏற்பட்டதில்லை. ஆளுங்கட்சியுமில்லாமல் எதிர்க்கட்சியுமில்லாமல் தலையற்ற முண்டமாக நாடு கிடப்பதால் ஏற்பட்டிருக்கும் அரசியல் சாசன நெருக்கடியை எப்படித் தீர்ப்பது என்று குடியரசுத் தலைவர் பல்வேறு சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்துக் கொண்டிருந்தார்.

ஒருவேளை மறுதேர்தல் நடந்தாலும் மக்கள் புதிதாக தொடங்கப்படும் தங்கள் கட்சியை நம்பமாட்டார்கள் என்பதால் ஆப்ரேஷன் எல்பி திட்டத்தை நிரந்தரமாகவே கைவிடுவதென்று ஜி-19 (கேங் 19) நாடுகள் முடிவெடுத்தன. ஆனால் தங்களது ரகசியத் திட்டத்தையும் பணத்தையும் திருடி சேனல்களையும் கட்சிகளையும் தொடங்கி ஆட்சியைக் கைப்பற்றியவர்கள் யார் என்று தெரியாத மர்மத்தால் அச்சமுற்ற ஜி-19 நாடுகளின் தலைவர்கள் ‘எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி’ என்று பினாத்திக் கொண்டலைந்தனர்.

(இவர்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் என்று திருப்தியடைகிறவர்கள் இங்கேயே கதை முடிந்துவிட்டதாக கருதி நின்றுவிடலாம்.)

7.நன்மக்கள் பேராயம் அல்லது பொறுப்பு வாய்ந்த போக்கிரிகள் நடுவம்- 2009 மே 18

வெளிச்சம் புகாத அடர்ந்த காடுகளின் குகையிடுக்கில் காடாவிளக்கின் வெளிச்சத்தில் கருப்பு பெட்சீட்டுகளை போர்த்திக் கொண்டிருப்பவர்கள்தான் நாட்டுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுகிறவர்கள் என்பதெல்லாம் ஆக்ஷன் ஹீரோக்களின் சினிமாக்கள் காட்டும் பீலா, உடான்ஸ். உண்மையில் இதோ இதுபோன்ற நட்சத்திரவிடுதியின் குளிரூட்டப்பட்ட அறைகளில் நுரை ததும்பும் மதுக்கோப்பைகளை உறிஞ்சியபடியேதான் அப்படியான திட்டங்கள் தீட்டப்படுகின்றன என்பதை நினைவில் வையுங்கள். இங்குதான் நன்மக்கள் பேராயம் அல்லது பொறுப்பு வாய்ந்த போக்கிரிகள் நடுவம் என்ற தலைமறைவு இயக்கத்தின் தலைவர்கள் கூடியிருக்கிறார்கள். அவர்கள் சதிவேலை செய்திருக்கிறார்கள்- ஆனால் அது தேசத்திற்கு எதிரானதல்ல என்பது அவர்களது நம்பிக்கை. அவர்கள் பெட்ஷீட் எதையும் போர்த்தியிருக்கவில்லை. வேட்டி கட்டியவர்களையே இதுபோன்ற விடுதிகளில் அனுமதிக்காதபோது வெறும் கோவணம் மட்டுமே கட்டியிருக்கிற இவர்களை எப்படி அனுமதித்தார்கள் என்பதுதானே உங்கள் கேள்வி? அதற்காக புருவத்தையெல்லாம் சுருக்கி யோசிப்பீர்களானால், ‘கையிலே ஆயுதம் இருந்தால், நட்சத்திர விடுதியின் கதவுகள் மட்டுமல்ல அப்புச்சிகளே, நட்சத்திரமேகூட திறக்கும்’ என்ற பஞ்ச் டயலாக்கை, இந்த இடத்தில் சொல்லவேண்டியிருக்கும்.

படித்தவர்கள், கம்ப்யூட்டர் நிபுணர்கள் எந்நேரமும் இன்டர்வியூவுக்குப் போகிறவர்களைப்போல உடுத்தியிருக்க வேண்டும் என்ற பொதுப்புத்தியை அல்லது புத்தியின்மையை செருப்பால் அடிக்க வேண்டுமென்பதற்காகவே கோவணம் கட்டிக்கொண்டு பொதுவிடங்களில் உலவுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர்கள் மடிக்கணிணியோடு இருப்பது பொருத்தமற்ற தோற்றமாக இருந்தாலும் அந்த கணினி மூலமாகத்தான் அவர்கள் லிபரல்பாளையத்தின் அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி தங்கள் நாட்டை காப்பாற்றியிருக்கிறார்கள். ஆகவே உருவு கண்டு எள்ளாமை வேண்டும்.

‘ஆப்ரேஷன் எல்பி’ என்று ஜி-19 நாடுகள் தயாரித்திருந்த ரகசிய அறிக்கையை கைப்பற்றியது தொடங்கி இதுவரை நடந்திருக்கும் பணிகள் வரை எல்லாவற்றையும் விவாதித்தனர். தேர்தல் முறை முழுவதும் ஆன்லைனுக்கு மாற்றப்பட்டதால் கிடைத்த தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி தாங்கள் மேற்கொண்ட அரசியல் தலையீடு குறித்து திருப்தியடைந்த நன்மக்கள் பேராயத்தின் உறுப்பினர்களுக்கு, தங்களின் இந்த முயற்சிகள் சாகசமாகவோ சீர்குலைவு வேலையாகவோ புரிந்துகொள்ளப்படவும் வாய்ப்பிருப்பதை உணர்ந்தே இருந்தனர். இருந்தும் ஜனநாயகத்தின் பெயரால் தேர்தலானது கேலிக்கூத்தாக மாற்றப்பட்டுக் கொண்டிருப்பதை உணர்த்தவே தாங்கள் ஜி19 நாடுகள் ஆட நினைத்த ஆட்டத்தை வேறுவழியின்றி ஆடிப்பார்க்க நேர்ந்ததென நாட்டு மக்களுக்கும் குடியரசுத்தலைவருக்கும் தெரியப்படுத்த விரும்பினர். ‘நாடு அழைத்தது, நாங்களே செய்தோம்’ என்ற தலைப்பில் நாளை காலை பத்திரிகைகளில் வெளியாகும் அவர்களது அறிக்கையில் ஒருவேளை அவர்கள் தம் மனதை திறந்து வைத்திருக்கக்கூடும்.

(நன்றி: உயிரெழுத்து)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *