ரெண்டாவது ரகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 29, 2018
பார்வையிட்டோர்: 7,248 
 
 

“மனுசனுக்கு வேதனையப் பாரு.. யாருக்கும் தொல்லையா இல்ல. வம்பு தும்புக்கு போகாத ஆளு, அவனுக்கா இப்படி….?”

“தான் உண்டுனு ஏதாவது எழுதிக்கிட்டுதான் இருப்பான். வழியக்க பேசாட்டியும் மத்தவங்க பேச்சுக்கு மரியாதக் கொடுப்பான்…”

“பாவம்யா… பொண்ணுக்கு கல்யாணத்த முடிச்சுட்டு பையனுக்கும் அடுத்த முகூர்த்தத்துலேயே முடிச்சர்றதா எங்கிட்டயே சொன்னாரு அவுக அப்பா..”

“களத்து மேட்ல உள்ள செடிகள சுத்தம் பண்ணும்போது தான் விரியன் பாம்பு கடிச்சுச்சாம். காலையில இருந்து ஒன்னுமே சொல்லலயாம். விசம் இப்ப ரொம்ப ஏறிடுச்சு…”

கூடி இருந்தவர்கள் அங்கு பேசிக்கொண்டிருந்தனர்.

“டாக்டர் … ஏம் மவன் பொழச்சுடுவானா. சொல்லுங்க” என்றார் கண்ணீர் வழிந்த முகத்துடன் சோமையா….

“நா சொல்றதுக்கு ஒன்னுமில்லங்க. ஆண்டவன் விட்ட வழி…” கை விரித்து காட்டினார் டாக்டர்.

தங்கை கமலமும் தாய்ப் பர்வதம்மாளும் முருகேசன் தலையருகே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தனர்.

“தெனமும் கதை கவிதைனு கவர்ல வச்சு ஏதாவது பத்திரிக்கைகளுக்கு அனுப்பிக்கிட்டே இருப்பான். திரும்பி வந்ததும் இல்ல. எதுவும் சன்மானம் வந்ததாவும் இல்ல.. அஞ்சாறு கவிதை மட்டும் ரெண்டு மூணு பத்திரிகைல வந்துருக்கு. கஷ்டப்படுற குடும்பத்துக்கு தண்டனையப் பாரு…”

மூச்சிறைக்க ஓடிவந்த ரவி, முருகேசன் காலைப் பிடித்துக் கொண்டு அழுது கதறினான். வீட்டுக்குள் அழுகைச் சத்தம் அலறலாக கேட்டது.

“அய்யோ…. போயிட்டியா…. ஏம் புள்ளையோட உசுருதான் ஒனக்கு வேணுமா….வயலுக்கருப்பா… ஒனக்கு வாரவாரம் வெளக்குப் போட்டேனே… அது இதுக்குத்தானா…” தன் தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு புரண்டு அழுதாள் பர்வதம்மாள்.

தொழுவத்தில் நிறைமாதமாக நின்ற பசுவும் காளங்கன்று போட்டது. பசு… அம்மா…அம்மா… என்றே கத்தியது. ஆனால் அதன் குரல் யாருக்கும் கேட்கவில்லை. விலக முடியாத கூட்டம். ஊரே கூடியது.

அந்த நேரத்தில் மாருதி கார் வந்து வேகமாக நின்றது. அதில் ஒருவர் வந்து இறங்கினார். அவர்தான் “மகா சிறுகதைப் போட்டியை” நடத்திய பாலன்.

“எழுத்தாளர் முருகேசன் வீடு எதுங்க…”

“இதாங்க அவரு வீடு. இப்ப அவரு இல்ல. சின்ன வயசுலேயே மேல போயிட்டாரு.அதான் எல்லாரும் நிக்கிறோம். வேணும்னா அவங்க அப்பாவக் கூப்புடுறேன்…” என்றார் பெரியவர்.

“வாங்கய்யா… நாந்தான் முருகேசோட அப்பா” என்றார் அழுகையுடன்.

“எங்க இதழ் மூலமா சிறுகதைப் போட்டி வச்சோம்… அதுல உங்க பையனோட சிறுகதைக்கு முதல் பரிசு கெடச்சுருக்கு. முதல் பரிசு இருபத்தஞ்சாயிரம் ரூபா. அத சொல்லிட்டு வீட்ல உள்ளவங்ககிட்ட பேட்டி எடுக்கனும்னு வந்தோம். வந்த இடத்துல இப்படியா… இதுல ஒரு கையெழுத்து போடுங்கய்யா…”

ரசீது ஒன்றைப் பெற்றுக் கொண்டதும் அதை தன் மகன் மேல் வைத்து அழுதார் .. துடித்தார்… சோமையா.

“இங்கே வாங்க அவரு எழுதி வச்சது எது இருந்தாலும் கொடுங்க… அத எங்க செலவுல புத்தகமா வெளியிட்டு தகுந்த சன்மானம் தர்றோம்.

அவர் எழுதிய அனைத்தும் சாக்கு பைக்குள் இருந்தது. கொண்டுவந்து கொடுத்தார் சோமையா. அதைப் பெற்றுக்கொண்டு முருகேசனை புகைப்படம் எடுத்துக் கொண்டு புறப்பட்டனர்.

சில எழுத்தாளர்கள், கவிஞர்கள் வாழ்க்கை இப்படித்தான். யாருக்கும் தெரியாமல் இறந்து போவார்கள். யாவருக்கும் தெரிந்த பிறகு இறந்து போவார்கள். இதில் முருகேசன் ரெண்டாவது ரகம்.

எழுத்தாளர் முருகேசன் உடல் மறையத் தொடங்கியது. தனது பெயர் சொல்ல சிறுகதைகளும் கவிதைகளும் ஆசிரியர் பாலன் மூலம் மலரத் தொடங்கியது.

– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *