ராமநாதன் சார்…

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 12, 2016
பார்வையிட்டோர்: 8,112 
 
 

ராமநாதன் சார் நேற்று இரவு தூக்கத்தில் மாரடைப்பினால் இறந்து விட்டாராம். இன்று காலை ஆபீஸ் வந்தவுடன்தான் அவர் இறப்பு சக ஊழியர்களான எங்களுக்குத் தெரிய வந்தது. நாங்கள் அனைவரும் கூடிக் கூடி வருத்தத்துடன் ராமநாதன் சாரைப் பற்றி பேசிக் கொண்டோம். பத்து மணிக்கு ஜி.எம். தன் காரில் ராமநாதன் சாரின் உடலுக்கு மரியாதை செலுத்தச் சென்றவுடன், நாங்களும் இரண்டு இன்னோவா காரில் ஏறிக் கொண்டு அவரைத் தொடர்ந்தோம்.

ராமநாதன் சார்தான் எங்கள் ஆபீசில் சீனியர். 47 வயது. எங்கள் அனைவருக்கும் முப்பது, முப்பத்தைந்துக்கு மேல் இருக்காது. ஆனால் தான் சீனியர் என்கிற ஒதுங்குதல் இல்லாமல் எங்களுக்கு சரியாக ஜோக் அடிப்பார், கிண்டல் செய்து வெடிச் சிரிப்பு சிரிப்பார்… பெண்கள் அருகில் இல்லாத சமயங்களில் புதுமையாக செக்ஸ் ஜோக் அடித்து எங்களை மகிழ்விப்பார். சுற்றி இருப்பவர்களை கலகலப்பாக வைத்துக் கொள்வதால் அவரைச்சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்.

வருடத்திற்கு இரண்டு முறை ஆபீசிலிருந்து பிக்னிக் போகும்போது ராமநாதன் சாரிடம் கேட்டுக்கொண்டு அவருக்கு வசதியான நாட்களில்தான் பிக்னிக் செல்வோம். பிக்னிக் என்றல்ல எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் ராமநாதன் சார் இருந்தால்தான் அந்த நிகழ்ச்சி களை கட்டும்.

அவர் இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. போன வாரம்தான் எனக்கு ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்திருந்தார். அதை இன்று அவர் மகனிடம் சொல்லிவிட வேண்டும்….பிறகு சம்பளம் வாங்கியதும் மகனிடம் திருப்பிக் கொடுத்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டேன். மாதக் கடைசிகளில் எனக்கு ராமநாதன் சார்தான் தெய்வம்.

அவர் டைம்லியாக பேசும் நகைச்சுவைகளை எங்களால் மறக்க முடியாது… ஆபீசில் ஒருவர் கோபமாக இன்க்ரிமென்ட் லெட்டர் வாங்காமல் மறுத்ததற்கு அவரிடம் சிரித்துக்கொண்டே, “வாங்காட்டா போ…குளத்துகிட்ட கோவிச்சுகிட்டு குண்டி கழுவாம போனா யாருக்கு நஷ்டம்?” என்றார். என்ன சார் இப்படில்லாம் அசிங்கமா பேசறீங்களே என்றதற்கு, “எது அசிங்கம்… அதுவும் நம் உடம்பில் ஒரு உறுப்புதானே” என்று எங்கள் வாயை அடைத்துவிட்டார்.

ஏதாவது ஒரு விஷயத்தில் எவராவது ரொம்ப இறங்கிவந்தால், “குதிரைக்கு குண்டி காய்ந்தால் வைக்கோல் திண்ணும்” என்பார். நாலு பேர் சிரிக்கும்படி யாராவது நடந்துகொண்டால், “சும்மா சிரிக்க மாட்டா, குண்டிய வழிச்சிண்டு சிரிப்பா..” என்று ஒரு முறை சொன்னார். அதன் பிறகு, அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் எங்களைப் பார்த்து, “சும்மா சிரிக்கமாட்டா…” என்று அவர் சொல்லி நிறுத்தினால், நாங்கள் கோரஸாக “…வழிச்சிண்டு சிரிப்பா” என்று அவருக்கு ஒத்துப்பாடி மகிழ்வோம்.

அன்றைக்கு நாங்கள் டைனிங் ஹாலில் லஞ்ச் சாப்பிட்டுக்கொண்டே டி.வி.யில் சினிமா பாட்டு பார்த்தோம். வானம்பாடி படத்தில் வரும் ‘தூக்கணாங் குருவிக் கூடு’ பாட்டு வந்தது. உடனே ராமநாதன் சார் “தூக்குனா குருவிக் கூடு” என்று பாட தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த ஸ்ரீராம் வெடித்துச் சிரித்ததில் புரையேறிவிட்டது.

இன்னொரு நாள், “உன்னி கிருஷ்ணன் கச்சேரி தப்பாக பாடினால், அவரிடம் எப்படி கோபப் படுவீர்கள்?” என்று கேட்டார்.

நாங்கள் அனைவரும் நமட்டுச் சிரிப்புடன் அவரையே பார்த்தோம். அவர் எங்களிடம், “இதுல என்ன சிரிப்பு வேண்டிகிடக்கு? அவர் தாய் மொழி மலையாளம் என்பதால் அவரிடம் கோபப் படுதல் கூடாது” என்று அப்பாவியாகச் சொல்லி, எங்களை வாரினார்.

ஒருநாள் எங்களிடம் “ஒரு கட்டு சுள்ளில ஒரு சுள்ளி கோணச் சுள்ளி… என்று யார் வேகமாக திருப்பி திருப்பிச் சொல்கிறீர்களோ, அவர்களுக்குப் பரிசு” என்றார். நங்கள் அதை வேகமாக திருப்பிச் சொல்லி சிரி சிரியென்று வயிறு வலிக்கச் சிரித்தோம்.

புதிதாக அவரைப் பார்ப்பவர்களிடம், “டு யூ நோ தி ஸ்டோரி ஆப் புரோக்கன் பென்சில்?” என்று சீரியஸாக கேட்பார்.

“தெரியாது” என்றால் “நோ பாயின்ட்” என்று சிரிப்பார்.

அடுத்து, “டு யூ நோ த ஸ்டோரி ஆப் ராட்டன் எக்?” என்று கேட்டு

“தெரியாது” என்ற பதிலுக்கு “too bad” என்று சொல்லி சிரிப்பார்.

உடைந்த பென்சிலுக்கு எழுதுமுனை இல்லாததையும், அழுகிய முட்டை மிகவும் மோசமானது என்பதையும் சிறிய கதையாக நம்மிடம் சொல்லிவிட்டாராம்…

பொது இடங்களில் டீ காப்பி குடிக்க நேர்ந்தால், இடது கையினால் எடுத்துக் குடிப்பார். “ஏன் சார்?” என்று கேட்டால், “வலது கையினால் குடிப்பவர்கள்தான் அதிகம்… அவர்களின் உதடுகள் அதிகம் அங்கு பட்டிருக்கும். அதனால் இடது கையினால் டீ குடித்து ஹைஜீன் மெயின்டெயின் பண்ணுகிறேன்” என்று சிரிப்பார்.

இது மாதிரி ராமநாதன் சாரைப் பற்றி நினைத்து நினைத்து அசைபோட இன்னும் ஏகப்பட்டது இருக்கிறது. .

அவர் வீட்டில் ஏகப்பட்ட கூட்டம் இருந்தது. நாங்கள் அனைவரும் மாலையுடன் உள்ளே நுழைந்தோம்.

ராமநாதன் சாரை நடுக் கூடத்தில் கிடத்தியிருந்தார்கள். கால் கட்டை விரல்கள் சேர்த்துக் கட்டப் பட்டிருந்தது. மூக்கில் பஞ்சு அடைக்கப் பட்டு, தலையிலிருந்து தாடையைச் சுற்றி மெல்லிய வெள்ளைத் துணியால் இறுக்கி கட்டப் பட்டிருந்தது. தலை மாட்டில் ஒரு குத்துவிளக்கு எரிந்து கொண்டிருந்தது.

அனைவரும் அமைதியாக இருந்தார்கள். அவர் முழங்காலின் மீது ஸ்ரீராம் மாலையை சார்த்த… நான் அவர் பையனின் தோள்களை தொட்டு துக்கம் பகிர்ந்தேன்.

அவர் பையன் எங்களிடம், “அப்பா நேற்று ராத்திரி டி.வில சூப்பர் சிங்கர் பார்த்துட்டு தூங்கப் போனார்…காலைல எந்திரிக்கல” என்றான்.

நாங்கள் மெளனம் காத்தோம். பிறகு நான் மட்டும் தனியாக அவனிடம் மெதுவான குரலில் “அப்பாக்கு ஆபீசலர்ந்து செட்டில் பண்ண வேண்டிய பணம் நிறைய இருக்கு… தவிர நானும் அவரிடம் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருக்கேன்… காரியம் எல்லாம் முடிஞ்ச பிறகு எப்ப வரீங்கன்னு எனக்கு போன் பண்ணுங்க.. நான் உடனே செட்டில்மென்ட் பண்ண வசதியாக இருக்கும்” என்றேன்.

“நீங்க வாங்கிய கடன கோவில் உண்டியல்ல போட்டுருங்க சார்.”

சிறிது நேரத்திற்குப் பின் நாங்கள் கிளம்ப ஆயத்தமானோம். கடைசியாக அவர் முகத்தை ஒரு முறை பார்த்தேன். ராமநாதன் சார் என்னைப் பார்த்து லேசாக சிரிப்பது போலிருந்தது.

நாங்கள் அனைவரும் கனத்த இதயத்துடன் இன்னோவாவில் ஏறிக் கொண்டோம்.

ராமநாதன் சாரிடம் கடன் வாங்கிய ஆயிரம் ரூபாயை கோவில் உண்டியலில் போட்டு விட்டால் அவர் கடனை நான் அடைத்துவிட்ட திருப்தி எனக்கு வந்துவிடும். அதனால் அவரை நான் சீக்கிரம் மறக்க நேரிடலாம். அவரை மறக்க நான் விரும்பவில்லை. அதனால் அவருக்கு நான் என்றென்றும் கடன் பட்டவனாகவே இருக்க ஆசைப் படுகிறேன். அப்போதுதான் அவர் நினைவு எனக்கு எப்போதும் இருக்கும்.

எனவே நான் கோவில் உண்டியலில் அந்தக் கடனை சேர்க்கப் போவதில்லை என்று நினைத்துக் கொண்டேன்.

Print Friendly, PDF & Email
என் பெயர் எஸ்.கண்ணன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்'…மேலும் படிக்க...

1 thought on “ராமநாதன் சார்…

  1. இந்தக் கதை இது ஒரு வித்தியாசமான எழுத்து. மனசை வருடிய கதை.
    ஜனனி ராம்நாத், திருச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *