ராசுக்குட்டியின் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 17, 2016
பார்வையிட்டோர்: 6,865 
 
 

நம் நாடு சுதந்திரம் வாங்குவதற்கு பதினைந்து வருடங்கள் முன்பு அந்த ஊரின் நிலச்சுவாந்தாரர் திருவாளர் குப்பண்ணன் அவர்களுக்கும் திருமதி மாரியம்மாள் அவர்களுக்கும் ஒரே மகனாய் அவதாரம் எடுத்தார் ராசுக்குட்டி, ஏகப்பட்ட சொத்துக்களுக்கு வாரிசாக ராசுக்குட்டி பிறந்ததற்கு அவர்கள் வீட்டில் ஒரே கொண்டாட்டம். சும்மாவா பின்னே !, பதினைந்து ஏக்கரா தோட்டம்,தென்னந்தோப்பு,வயல், இத்தனைக்கும் எதிர்காலத்தில் சொந்தக்காரனாக போகும் ராசுக்குட்டிக்கு வீட்டில் ஒரே செல்லம்தான்.

சுதந்திரம் வந்தபோது ஓரளவு விவரம் வந்துவிட்ட ராசுக்குட்டிக்கு அதனை அனுபவிக்கும் ஆற்றல் 1960க்கும் மேல் வந்தது.. காந்திய அரசியலை ஏற்க மறுத்த ராசுக்குட்டி வேகமாக வளர்ந்து கொண்டிருந்த கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தார். குப்பண்ணனும், மாரியம்மாளும் எவ்வளவோ புத்திமதி சொல்லியும் அரசியல் போதை அவரை தீவிரமாக பற்றிக்கொண்டது. அவரை இப்படியே விட்டால் அழிந்து விடுவார் என்று அவர் வீட்டார் மகாலட்சுமி போன்ற ஒரு பெண்ணை அவருக்கு கட்டி வைத்து அழகு பார்த்தனர்.

அவர் அந்தக்கல்யாணத்தையும் அழகாக அரசியல் ஆக்கினார். எப்படியென்றால் எப்படியும் இந்த முறை தமது தொகுதியில் இடம் வாங்கிவிடவேண்டும் என்று முடிவு செய்துவிட்டார், அதற்காக திருமணத்தன்று ஒரு மறியல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, இவரே ஒரு போட்டோகிராபரை ஏற்பாடு செய்து கொண்டு, தாலி கட்டியவுடன் மறியலுக்கு சென்று மறியல் செய்து “புது மாப்பிள்ளை கைது” மறியலில் ஈடுபட்டபொழுது’ என்று பெரிய எழுத்துக்களில் செய்தி வருமப்டி செய்து கட்சித்தலைமை வேறு வழி இல்லாமல் இவருக்கே சீட் வழங்குவதற்கு ஏற்பாடு செய்துவிட்டார்.

இவர் நின்ற தொகுதியில் இவர் ஏற்பாடு செய்த போட்டோகிராபர் உபயத்தால் திருமண கோலத்துடன் கைதான காட்சி பட்டி தொட்டியெங்கும் பரவி அந்த ஊர் வாக்காளர்களின் மனதில் பசக்கென ஒட்டிக்கொள்ள, எதிர்த்து நின்ற காந்திய அரசியல்வாதி தேர்தல் முடிவுக்கு பின் இந்த மாதிரி அரசியல் கண்டு மிரண்டு சொந்த தொழிலான விவசாயத்திற்கே சென்று விட்டார்.

இப்படியாக அரசியலில் புயலை கிளப்பிக்கொண்டிருந்த ராசுக்குட்டிக்கு மகாலட்சுமி போன்ற மனைவி வாய்த்த வேளை அவருக்கு பதவி மேல் பதவி அரசியலில் தேடி வந்த்து.ஆனால் அவருக்காக கவலைப்பட்டுக்கொண்டிருந்த அப்பனும், ஆத்தாளும், சிவலோகம் போய்ச்சேர்ந்தனர். ராசுக்குட்டிக்கு குடும்பம் பெரியதாக ஆரம்பித்தது மூன்று குழந்தைகள், பையன் இரண்டு பெண் ஒன்றாக ஆனது. ராசுக்குட்டி குடும்பத்தை பணத்தால், வசதியால் வாயையை கட்டிப்போட்டார்.

இவர்கள் கட்சியில் இருந்து பிரிந்து சென்று புதிதாக ஆரம்பிக்கப்பட்ட புதிய கட்சி ஒன்று அரசியலில் பெரும் புயலை கிளப்பி அடுத்த ஆட்சியை பிடித்த்து. ராசுக்குட்டி இதை எதிர் பார்க்கவில்லை, தெரிந்திருந்தால் அந்தக்கட்சிக்கு தாவி இருப்பார். அதற்குள் காலம் கடந்து விட்டது.

அடுத்தடுத்து அவர் மேல் வழக்குகள் போடப்பட்டன, எதிகொள்ளமுடியாமல் தத்தளித்தார், அவரது அரசியல் தந்திரங்களாலும் ஏகப்பட்ட பணம் செலவழித்தும் ஒரு வழியாக தப்பினார். அவரது வாரிசுகளே அவரது அரசியலில் இருப்பதை எதிர்க்க ஆரம்பித்துவிட்டனர்.அவரது மகன் ஆளும் கட்சியில் சேர்ந்து இவர் செய்த அதே தந்திரங்கள் மூலம் பிரபலமடைய ஆரம்பித்துவிட்டான்.

இவர் ஆரம்பத்தில் வீம்புக்காக கட்சி வேலை செய்து பார்த்தார், ஆனால் வயது அவருக்கு ஒத்துழைக்க மறுத்த்து, கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழக்க ஆரம்பித்தார்.

இப்போது ராசுக்குட்டியை ஒரு நாற்காலி போட்டு உட்காரவைக்கப்பட்டார், ஒரு பொம்மை போல் உட்கார்ந்திருப்பார், கரை போட்ட கட்சிக்காரர்கள், அவரை கண்டுகொள்ளாமல் அவரைத்தாண்டி அவ்ர் மகனை பார்க்க செல்வார்கள். அவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லையா? அல்லது அவருக்கு யாரையும் அடையாளம் தெரியவில்லையா? தெரியவில்லை.

இவர் கட்டி வந்த மகாலட்சுமி போன்ற மனைவி அவரை விட்டு மறைந்தது கூட அவருக்கு தெரியவில்லை, அவரைப்பற்றி கவலைப்பட இப்பொழுது யாருமில்லை, குப்பண்ணன்,மாரியம்மாள்,மனைவி மூவரும் அவனை விட்டு வெகு தூரம் சென்று விட்டனர்.அவருக்கு யாரையும் தெரியவில்லை என்று முடிவு கட்டி விட்ட மக்களிடையே அவர் இந்த மூவரை மட்டுமே மனதில் நிறுத்தி வைத்திருக்கிறார் என்பது யாருக்கும் தெரியப்போவதில்லை.

அடுத்ததாக ஏதாவது திருவிழாவோ, அல்லது வெளி மாநில கோயில்களுக்கோ இவரை கூட்டிச்செல்லக்கூட ஏற்பாடுகள் செய்யலாம், எதற்கு என்று வாசகர்களுக்கு புரியும், நமக்கு இந்த நிலைமை வரவேண்டாம் என நாம் பிரார்த்திப்பது மட்டுமே
இப்பொழுது நாம் செய்யும் வேலை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *