ரயில் நிலையம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 2, 2012
பார்வையிட்டோர்: 8,330 
 
 

எல்லாவற்றிற்கும் என் நண்பன் தான் காரணம். நண்பன் என்றால் இப்படித்தான் இருக்‍க வேண்டும். மற்ற நண்பரக்‍ள் எல்லாம் இவனைப் பார்த்துக்‍ கற்றுக்‍ கொள்ள வேண்டும். நான் கேட்டவுடன் எனக்‍கு ரயிலில் டிக்‍கெட் புக்‍ செய்து கொடுக்‍க அவனால் எப்படி முடிந்தது என்று எனக்‍கே தெரியவில்லை. சொன்னவுடன் மறுக்‍காமல் செய்து கொடுத்தான். தக்‍கலில் டிக்‍கெட் புக்‍ செய்து கொடுக்‍குமாறு கேட்டேன்.

“அதெல்லாம் வேண்டாம் வீண் செலவு, வீக்‍ டேஸ் தானே, ஒன்றும் கூட்டம் இருக்‍காது” என்று கூறி என் பணத்தை மிச்சப்படுத்துவதில் அவனுக்‍குத்தான் எவ்வளவு அக்‍கறை. டிக்‍கெட்டைப் பெற்றுக்‍ கொண்டு 2 கால பாய்ச்சலில் ஓடினேன்.

சினிமாவில் வருவது போன்று கடைசி நேரத்தில் ஓடிச்சென்று ரயிலைப்பிடித்தால் தான், ரயிலில் பயணிப்பதற்கான திருப்தி கிடைக்‍கும் என்கிற லட்சிய வேட்கையில் பொதுமக்‍கள் அனைவரும் கடைசி நிமிடத்தில் ஓடிக்‍ கொண்டிருக்‍கும்போது நான் மட்டும் உரிய நேரத்தில் ரயில் நிலையம் சென்றால் அது எப்படிப்பட்ட அசிங்கம் என்கிற வெட்க உணர்வில் ரயிலைப்பிடிப்பதற்காக நேரம் தவறி ஓடிக்‍கொண்டிருந்தேன். சில வயதான ஆண்கள் கூறுவது போல் இளம்பெண்களை கவர்வதற்காகத்தான் இந்த வெடலைப் பசங்க இப்படி துள்ளிக் குதித்து ஓடியபடி சீன் போடுகிறார்கள் என்று சொல்லுவதை நான் நம்புவதற்கு தயாராக இல்லை. பெண்கள் மேல் ஈர்ப்பு உண்டு தான். இல்லையென்று சொல்லவில்லை. அதற்காக அவர்களை கவர்வதற்காகத்தான் ஓடுகிறேன் என்று சொல்வது மடத்தனம்… முட்டாள்தனம்… ஏதோ பேச வேண்டும் என்பதற்காக எதையாவது பேசிக் கொண்டிருக்‍கும் வேலையில்லாத பெரியவர்களின் தறிகெட்ட பேச்சு… அதற்கு மேல் அந்த வார்த்தைகளில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் அந்த ஜீன்ஸ் பேண்டை டைட்டாக அணிந்திருக்‍கும் இளம் பெண் என்னைப் பார்த்து சிரித்த நிமிடத்தில்…… யோசித்துப் பார்த்தால்…….ஆம் இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

படிகளில் ஏறிச் செல்லும்பொழுது அனைவரையும் விலக்‍கிக்‍ கொண்டு எளிதாக கடந்துசென்றுவிட முடியும். ஆனால் சில குண்டு பெண்மணிகள் படிகளில் ஏற முடியாமல் ஏறிச் செல்லும் போது மட்டும் ஒன்றுமே செய்ய முடியாது. சீனப்பெருஞ்சுவர் போன்று பாதுகாப்பு அரணை அமைத்துக்‍ கொண்டு வெறும் 3 பெண்மணிகள் தான் நடந்து செல்வார்கள். அவர்களைக்‍ கடந்து செல்வது என்பது கரும்பு மெஷினுக்‍குள் கையை விடுவதற்குச் சமம். ஒரு வேகத்தில் இடைப்பட்ட வழியில் நுழைய முற்பட்டால் ‘வாலிபர் உயிர் ஊசல்’ என்கிற தலைப்பில் போட்டோவை போட்டு தினத்தந்தியில் 3ம் பக்‍கம் செய்தியாக வெளியாக அதிக வாய்ப்பு உண்டு. மேலும், பொது இடங்களில் ஆக்‍சிடெண்ட் ஆனால் அரசு மருத்துவமனைக்‍கு தூக்‍கிச் செல்வது காலம்காலமாக கடைபிடிக்‍கப்பட்டு வரும் செயல் ஆகையால், நிதானம் காப்பது அறிவுடைமை ஆகும்.

அரசு மருத்துவமனைக்‍கு தூக்‍கிச் செல்லப்படுவதற்கும், மின்சார சுடுகாட்டிற்கு தூக்‍கிச் செல்லப்படுவதற்கும் குறைந்தபட்சம் 6 வித்தியாசம் கூட கண்டுபிடிக்‍க முடியாது என்பது உலகறிந்த உண்மை. ஆதலால் 3 பெண்மணிகள் எப்பொழுதாவது ஆயாசமாக நடந்து செல்லும் பொழுது அவர்களுக்‍கு மரியாதை அளித்து அவர்கள் பின்னால் செல்ல வேண்டும் என்பது பாதுகாப்பு விதிகளில் கடைபிடிக்‍கப்பட வேண்டிய முக்‍கிய அம்சங்களில் ஒன்றாகும். நெஞ்சு படபடத்தாலும் உயிருக்‍கு மரியாதை கொடுத்து அவர்கள் பின்னாலேயே மெதுவாக நடந்து செல்வது உத்தமமான செயலாகும். ஏன்? ஒரு லாரியோ, ஒரு ட்ரக்‍கோ, ஒரு மண் அள்ளும் கிரேன் இயந்திரமோ சாலையில் முன்னால் சென்று கொண்டிருக்‍கும்போது, அவர்கள் வழி விடும் வரை அமைதியாக பின்னாலேயே நாம் செல்வதில்லையா? அதுபோல் நினைத்துக் கொள்வதில் என்ன தவறு இருக்‍கப் போகிறது. அவர்கள் கனரக வாகனங்களைப்போல் ட்ராபிக்‍கை உருவாக்‍கிக்‍ கொண்டு நடந்து செல்வார்களேயானால் நாம் பொறுமை காத்து பின்னே மெதுவாக செல்வதில் எந்தவொரு தவறும் இல்லை.

வடகம் போடுவது எப்படி, ஊறுகாய் செய்வது எப்படி, பொக்‍கிசம் சீரியல் வில்லன் பற்றி என அதி முக்‍கியத்துவம் வாய்ந்த விஷயங்களை அவர்கள் பகிர்ந்து கொள்வதற்கு குந்தகம் விளைவிக்‍கும் விதமாக அவர்களை தொந்தரவு செய்வது என்பது மன்னிக்‍க முடியாத குற்றமாகும். இந்நாட்டில் பெண்களுக்‍கு இந்த சுதந்திரம் கூட இல்லையா என்ன? அவர்களின் உரிமைகளை அவர்களுக்‍கு வழங்க வேண்டும். தாய்நாடு, தாய்மொழி என பெண்மையத்தானே முதன்மையாக வைத்துள்ளோம். நதிகளுக்‍கு பெண்களின் பெயர்களை வைத்து பெருமை படுகிறோம். அப்படிப்பட்ட பெண்களுக்‍கு , ரயி்ல் நிலைய பிளாட்பாரத்தை மறைத்துக்‍கொண்டு பேசியபடி செல்ல உரிமை இல்லையா என்ன?

அவர்கள் நெய்கத்திரிக்‍காய் எந்தக்‍ கடையில் விலை குறைவாக்‍ கிடைக்‍கும் என்று நிதானமாக பேசிக்‍ கொண்டும், சிரித்துக்‍கொண்டும் சென்று கொண்டிருக்‍கையில், நெஞ்சுவலி வந்தால் கூட நெஞ்சைப் பிடித்துக்‍ கொண்டு வாயைத் திறக்‍காமல் அமைதியாக பின்னால் நடந்து வரவேண்டு​மேயல்லாமல், ‘சற்று வழி விடுங்க அக்‍கா’ என்று சொல்லி அவர்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்ளக் கூடாது. அவ்வளவுதான் நின்று பெண்ணுரிமை பேச ஆரம்பித்துவிடுவார்கள். அவர்கள் நின்று விட்டால் மீண்டும் நடப்பதற்குள் ரயில் விழுப்புரம் தாண்டிவிடும். ஆகையால் அமைதியாக வாயை பொத்திக்‍கொண்டு நல்லபிள்ளை என்று சொல்லக்‍கூடிய அனைத்து குணாம்சங்களையும் கடைபிடித்தபடி அமைதியாக பின்னால் நடந்து செல்ல வேண்டும். எப்பொழுதாவது சில சமயம் ​​லேசாக திரும்பியபடி இடம் விடுவார்கள். உச்சபட்ச துணிவுள்ளவர்கள் அந்த இடைப்பட்ட வழியில் நுழைந்து சென்று விடலாம். ஆனால் உயிருக்‍கு உத்தரவாதம் என்பது சிம்பு படத்தை 2வது முறை பார்க்‍க கட்டாயப்படுத்தப்பட்ட ஒருவனின் நிலைமையில் பாதி தான் என்பதை மறக்‍கக் கூடாது.

அவர்கள் மனமுவந்து எனக்‍கான வழியை விட்டபொழுது அவர்களுக்‍கு என் மனதில் அடி ஆழத்திலிருந்து நன்றிப் பெருக்‍குடன் எனது நன்றியைக் கூறினேன். பைபிளில் ஏதோ ஒரு அதிகாரத்தில் இவ்வாறு கூறப்பட்டிருக்‍கிறது. ‘உனக்‍கு உதவி செய்தவர்களுக்‍கு நன்றி கூறாமல் செல்வது உத்தமமாகாது’. ஆனால் அந்த பெண்மணிகளுக்‍குத்தான் அந்த நன்றியின் அர்த்தம் புரியவில்லை. எதற்கு இந்த லூசுப்பயல் நன்றி கூறுகிறான் என்று வியந்தபடி மீண்டும் சிரித்தார்கள். இந்தியாவில் பெண்களின் வாழ்க்‍கையே மகிழ்ச்சியால் நிறைந்ததுதான். அவர்கள் எப்பொழுதும் சிரித்துக் கொண்டுதான் இருப்பார்கள். புரிந்தாலும் சரி, புரியாவிட்டாலும் சரி அனைத்திற்கு சிரிப்பார்கள். சிரித்து மனதையும், சூழ்நிலையையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார்கள். ஒரு ​நகைச்சுவையோ, ஒரு சிரிக்‍கக் கூடிய சூழ்நிலையே சிரிப்பதற்கு தேவை என்கிற கட்டுப்பாடு எல்லாம் அவர்களுக்‍குத் தேவையில்லை. சரஸ்வதி தெருவில் வெகுநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த கணேஷன் தாத்தா இறந்து விட்டார் என்று கூறினால் கூட “ஓ……. பிரமாதம் அப்படியா எப்படிச் செத்தார்” என்று மகிழ்ச்சியோடு சிரித்தபடி பேசி மகிழ்வார்கள். ஆதலால் அந்த குண்டு பெண்மணிகளின் சிரிப்பதற்கு என்ன அர்த்தம் என்கிற கடினமான விஷயத்திற்குள் செல்லாமல் அதை அப்படியே விட்டு விட்டு சென்று விடுவது என்பது சாலச் சிறந்தது.

பின் அந்த தொழிலதிபர்களின் அன்புத் தொல்லையிலிருந்து விடுபடுவதற்கு எனது உச்சபட்ச திறமையை பயன்படுத்தப்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதைப் பற்றி எப்படி விவரிப்பது. நிச்சயமாக ரயில் நிலைய படிகளின் அனைத்து மூலையிலும் ஏதாவது ஒரு தொழிலதிபர் தனது அலுவலகத்தை அமைத்திருப்பார். அவர் முறைப்பான பார்வையுடன் அமர்ந்திருப்பார். அவருக்‍கு தேவையான வசதிகளை ரயில்வே நிர்வாகம் இலவசமாக அமைத்துக் கொடுத்திருக்‍கும். ரயில்வே நிர்வாக அதிகாரிகளிலிருந்து, ரயில்வே போலீஸ் வரை அனைவரும் அவர்களுடை நண்பர்கள், வாடிக்‍கையாளர்கள், நலம் விரும்பிகள் என எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்‍கு இலவச ரயில் பயணம் செய்ய முழு அனுமதியுண்டு. அந்த அனுமதியை அவர்களே எடுத்துக்‍கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ரயில்வே டி .சி. (டிக்‍கெட் கலெக்‍டர்) என்பவர் ரயிலில் பயணிக்‍கும் பிரதமரிடம் டிக்‍கெட் கேட்டாலும் கேட்பாரே தவிர, இந்த தொழிலதிபர்களிடம் டிக்‍கெட் கேட்கவே மாட்டார். சில சமயங்களில் அவர்கள் கும்பலாக நடந்து வரும் போது, டிக்‍கெட் கலெக்‍டரின் கால்கள் கூட நடுங்க அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவார். அவர்களுக்‍கு குடிநீர் வரி கட்ட வேண்டியதில்லை. இலவசமாக குளிர்ந்த மற்றும் சூடான குடிநீர் சுத்தமாக கிடைக்‍கும். அவர்கள் மின்சாரக்‍ கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அவர்களுக்‍கு மின்சாரம் முழுக்‍க முழுக்‍க இலவசம். அவர்கள் தங்கள் வாழ்நாளில் வாடகை கட்டியதே இல்லை. என்ன ஒன்று அவர்களுக்‍கு குளிப்பதற்குத்தான் நேரமே கிடைப்பதில்லை. 24 மணி நேரமும் பிசினஸ் பிசினஸ் என்று அதே சிந்தனையிலேயே திரிந்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்‍கு சங்கம் கூட இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களின் வருமானத்தையும், சேமிப்பையும் பற்றிய எந்தவொரு விஷயமும் வெளியே தெரிவதில்லை. சி.பி.ஐ. எல்லாம் அவர்கள் அருகில் கூட நெருங்க முடியாது.

அவர்களுடைய தொழில் ஆர்வத்தைப் பார்க்‍கையில் கற்றுக்‍கொள்ள நிறைய விஷயம் இருப்பது போல் தோன்றும். காலையில் 6 மணிக்‍கு அவர்களை அவர்களுடைய அலுவலகத்தில் பார்த்தால், மாலை 6 மணிக்‍கும் அதே இடத்தில் அவர்க​ளைப் பாரக்‍க முடியும். அவர்கள் அந்த இடத்தை விட்டு நகராமல் கூட தங்கள் தொழிலை செய்து கொண்டிருப்பார்கள். என்ன ஒரு டெடிகேஷன் இருந்தால் அவர்கள் காலை முதல் இரவு வரை நகராமல் ஒரே இடத்தில் உட்காரந்தபடி தங்கள் தொழிலை கவனிக்‍க முடியும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். வெயில், பனி, பசி, நோய் என எதையும் பொருட்படுத்தாமல் தாங்கள் சார்ந்த தொழிலை மட்டுமே நேசிக்‍கும் பண்பு தீவரமான விஞ்ஞானிகளுக்‍கு மட்டுமே உள்ளது என்பதை சுட்டிக்‍காட்ட விரும்புகிறேன். அவர்களை பிச்சைக்‍காரர்கள் என்ற வன்மொழி பயன்படுத்தி அழைப்பது வன்மையாக கண்டிக்‍கத்தக்‍கது, ஏற்புடையதல்ல என்று அவர்கள் கூறுவதில் நியாயம் இருக்‍கத்தானே செய்கிறது.

என்ன அவர்கள் முன்னே ஒரு டீ கூட குடிக்‍க முடியாது. தனக்‍கும் ஒரு டீ வேண்டும் என்பார்கள். டீ வாங்கித்தர விருப்பம் இல்லையென்றால், பணமாகத் தந்துவிடலாம். செக்‍, டி.டி. எல்லாம் கிடையாது ஒன்லி கேஷ். ஹாட் கேஷ் மட்டுமே அவர்களுடைய விருப்பம். இல்லையென்றால் உற்று பார்த்துக்‍ கொண்டே இருப்பார்கள். மற்றபடி அவர்களால் ஒரு பிரச்னையும் இல்லை. எப்பொழுதாவது ஒருரூபாய் அல்லது தெரியாத்தனமாக 50 பைசாவை அவர்களுக்‍கு கொடுக்‍கும் பட்சத்தில் அவர்கள் கோபப்படுவதுண்டு. சில சமயங்களில் முகத்தில் தூக்‍கி எரிந்து விடுவார்கள். சில சமயங்களில் ஒன்றிரண்டு கெட்ட வார்த்தைகளில் கூட திட்டிவிடலாம். அவரவர் நேரத்தைப் பொறுத்து அவர்களுடைய எதிர்வினை அமையும். கவர்ன்மெண்ட் செல்லாது என்று தெரிவித்த நாலணா, பத்து பைசாவையெல்லாம் கொடுக்‍கும்பட்சத்தில் அவர்களால் துரத்தப்படுவதற்கும் வாய்ப்புண்டு. இன்று கடுமையாக அவமானப்பட ​வேண்டும் என்று விரும்புவர்கள் முயற்சி செய்து பார்க்‍கலாம்.

இரண்டு ரூபாய்க்‍கு கடலை விற்பவர், பேனா, கிரெடிட்கார்டு கவர், சி.டி. கவர் விற்பவர்கள், கடலைமிட்டாய் விற்பவர்கள். பிஸ்கெட், சமோசா விற்பவர்கள் எல்லாம் அவர்களுடன் ஒப்பிடக்‍கூடியவர்கள் அல்ல. இந்தத் தொழிலதிபர்களின் வருமானம் ஒருமணி நேரத்துக்‍கு இவ்வளவு என்று எகிறிக்‍கொண்டிருக்‍கும். அவர்கள் அவர்களுடைய அலுவலகத்தில் தூங்கிக்‍கொண்டிருந்தாலும் அவர்களுடைய வருமானம் உயர்ந்து கொண்டே இருக்‍கும். நான் கேள்விப்பட்டதுண்டு தூங்கிக்‍ கொண்டிருக்‍கும்பொழுது கூட பில்கேட்சின் வருமானம் இவ்வளவு என்று உயர்ந்து கொண்டே இருப்பதாக. யாருக்‍குத் தெரிகிறது இந்தத் இந்தியத் தொழிலதிபர்களைப் பற்றி. அவர்களை கடந்து செல்லும் பொழுது தன்னம்பிக்‍கை வருகிறது. அவர்களுடைய டெடிகேஷன் மனதைக்‍ கவரக்‍கூடியதாக இருக்‍கிறது. அவர்கள் இளைஞர்கள் அனைவருக்‍கும் ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறார்கள்.

இந்தக்‍ குண்டு பெண்மணிகள் முன்னே நடந்து செல்லும்பொழுது ஒரு வசதி என்னவென்றால் இந்தத் தொழிலதிபர்களின் பார்வையிலிருந்து எளிதில் தப்பித்துக்‍கொள்ள முடியும். அவர்கள் சம்பளம் வாங்காத பாதுகாவலர்கள், பாடிகார்ட்ஸ். மேலும், எப்பொழுதும் படிகளில் தாவிச் செல்லும்பொழுது கடைசிப்படியில் தவறி விழுந்துவிடும் வாய்ப்புண்டு என்பதால் நிதானமாக கடந்து செல்வது அவரவர் பற்களுக்‍கு நல்லது. அந்த வாய்ப்பை எனக்‍கு அளிக்‍காததால் அந்த குண்டு பெண்மணிகளுக்‍கு நான் என் மனமார்ந்த நன்றியை கூறிக்‍கொள்ள கடமைப்பட்டிருக்‍கிறேன். ஒருவேளை கடைசிப்படிகளில் தவறி விழ நேர்ந்தாலும் அப்பெண்மணிகள் முன்னிலையில் நான் ஆபத்தில்லாமல் தப்பித்துவிட முடியும் என்பதை கடவுள் முன் உணர்ந்தே எனக்‍கு இப்படியொரு பாதுகாப்பு கவசத்தை ஏற்பாடு செய்து கொடுத்திருப்பார் என்று நினைக்‍கத் தோன்றுகிறது. காரணம் இப்பொழுதெல்லாம் யாருக்‍கும் தெரியாமல் அவ்வப்பொழுது கடவுள் வழிபாடு செய்ய ஆரம்பித்திருக்‍கிறேன்.

அதிரடியான, அதிர்ச்சியான நேரங்களில இதயம் துடிக்‍காமல் நின்றுவிட வாய்ப்புண்டு என்பதை ஒரு மருத்துவர் தனது ஜூனியர்களுக்‍கு விளக்‍க முற்படும் போது ஏதேனும் ஒரு உதாரணம் தேவைப்பட்டால் அவர் இதை உபயோகப்படுத்திக்‍ கொள்ளலாம். அதாவது, நாம்தான் முதன் முதலில் அன் ரிசர்வ்ட் கம்பார்ட்மென்டில் சென்று இடம் பிடிக்‍கப் போகிறோம் என்கிற பெருமிதத்தோடும், தன்னம்பிக்‍கையோடும் ஓடிச் சென்று 4 பேரை இடித்துத் தள்ளிவிட்டு திட்டு வாங்கி, பல குண்டு பெண்மணிகளையெல்லாம் உயிரைப் பணயம் வைத்து கடந்த வந்து கடைசிப்படியைக்‍ கடந்து பிளாட்பாரத்தினுள் நுழைந்து அப்படி தலை நிமிர்ந்து பார்த்தால் தூரத்தில் ஒரு 500 பேர் கோவிலில் உண்டக்‍கட்டி வாங்க அடித்துக்‍ கொள்வது போல் அந்த சின்ன ரயில் வண்டிப்பாதையை மொய்த்துக்‍ கொண்டு நிற்பார்கள். அந்த சூழ்நிழைலயில், அதைப் பார்க்‍க நேர்ந்த ஒரு மனிதனுக்‍கு ஏற்படும் அதிர்ச்சியில், ஒரு மனிதனுக்‍கு இருதயம் நின்றுவிட வாய்ப்புண்டு என்று தனது ஜூனியர்களுக்‍கு ஒரு மருத்துவர் விளக்‍கி கூறுவாரேயானால், இளம் மருத்துவர்களால் எளிதில் விளக்‍கிக்‍ கொள்ள முடியும்.

கண்ணைக்‍ கசக்‍கிக்‍ கொண்டு பார்த்தாலும் அதே 500 பேர்தான் சண்டை போட்டுக்‍ கொண்டு நிற்கிறார்கள். 2, 3 பேர் கூட குறைந்ததாகத் தெரியவில்லை. ஒருவர் ஃபையர் எக்‍சிட் ஜன்னல் வழியாக தனது 2 வயது குழந்தையை நுழைத்து சீட்டில் இடம் பிடித்தார். மற்றொரு நபர் தனது துண்டை (அனேகமாக சோப்பு என்கிற ஒரு வஸ்துவை அந்த துண்டு சந்தித்திருக்‍கவே, வாய்ப்பிருக்‍காது. அந்த துண்டுக்‍கு மட்டும் வாய் இருந்தால் சோப்புன்ன என்ன? அப்படி ஒன்று இந்தபூமியில் இருக்‍கிறதா? என்று கேட்கும் – அப்படிப்பட்ட ஒரு சபிக்‍கப்பட்ட அழுக்‍குத் துண்டு) எடுத்து தலைக்‍கு மேல் சுற்றியபடி ஜன்னல் வழியாக இடம்பிடிக்‍க முயற்சித்துக்‍ கொண்டிருந்தார்.

இன்னொருவர் (ஒரு காலத்தில் மகளிர் டென்னிஸ் விளையாட்டில் மோனிகா செலஸ் என்றொரு பெண்மணி இருந்தார். ஸ்டெபிகிராப் வரும் வரை அவர்தான் சாம்பியனாக வலம் வந்தார். அவர் ஒவ்வொரு பந்தை அடிக்‍கும்பொழுதும் வீச் வீச்சென்று கத்துவார். அவரது மொத்த சக்‍தியையும் பயன்படுத்தி பந்தை திருப்பி அடிப்பார்) அப்படிப்பட்ட மோனிகா செலஸைப் போன்று தனது சக்‍தியை எல்லாம் திரட்டி கத்திக்‍ கொண்டே முன்னேறியபடி இடம் பிடிக்‍க முயற்சித்துக்‍ கொண்டிருந்தார். அவர் கத்துவதைப் பார்த்தால் ஏதோ மாட்டு வண்டியை ஓட்டுவதற்கு பிரயத்தனப்படுவதைப் போல் இருந்தது. அவர் குடித்திருப்பார் போல. அருகிலிருந்த பெண்மணி மூக்கைப்பிடித்தபடி, முகத்தை சுழித்துக் கொண்டு செருப்பை கழற்றி அடித்துக்கொண்டிருந்தார். அதைக் கூட கவனிக்காமல் அவர் கத்திககொண்‍டு இடம் பிடிப்பதில் முனைப்புடன் செயலாற்றிக் கொண்டிருந்தார். என்னவொரு டெடிகேஷன் அவருக்கு. தன்மேல் விழும் அடிகளைக் கூட பொருட்படுத்தாமல் காரியத்தில் கண்ணாய் இருப்பது எடிசனுக்குப் பிறகு இவராகத்தான் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

இன்னொரு ஆச்சரியமான விஷயம் நடந்து கொண்டிருந்தது. அந்த 3 குண்டு பெண்மணிகளும் அந்தக் கூட்டத்திற்குள் புகுந்து இடம் பிடிக்க முயற்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள். என்னவொரு துணிச்சல். எனக்கு இடம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இல்லையென்றாலும், எப்படி அந்தப் பெண்மணிகள் அந்த சின்ன வாசல் வழியாக ரயில் பெட்டிக்குள் செல்வார்கள் என்பதைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை என் கால்களை ஆணியடித்தது போல் அங்கேயே நிற்கச் செய்தது. ரயில்வே நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை. பொதுமக்களுக்கும் முன்னெச்சரிக்கை இல்லை. பின் ரயில் கவிழ்ந்த பின்னர் கண்டவர்களை குறை சொல்லிக்‍ கொண்டிருப்பதையே வழக்‍கமாக கொண்டிருப்பார்கள் தமிழக பத்திரிகையாளர்கள்

அப்பொழுது ஒருவர் வந்து என்முன் நின்றார். அவரைப் பார்க்‍கும் போதே கேரளத்துக்‍காரர் என்பது தெரிந்தது. கருவிழிகளை ஒருநிலையில்லாமல் உருட்டிக்‍ கொண்டு “அன் ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்ட் எவ்வடே” என்று என்னிடம் விழித்தார்.

“இந்த இடத்திலிருந்து அதோ அந்த இடம் வரை மெதுவாக நடந்து​ செல்லும் பொது எந்த இடத்தில் மூச்சுவிட முடியாமல் மூக்‍கைப் பொத்திக்‍ கொள்கிறீர்களோ, எந்த இடத்தில் மூச்சுத் திணறல் ஏற்படுகிறதோ, அந்த இடம்தான் அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மென்ட் நிற்கும் இடம்” என்று கூறினேன்.

ஏனெனில் கிரேக்‍கர்கள் ஒரு மறைவான இடம் கிடைத்தால் படிக்‍க ஆரம்பித்து விடுவார்கள். ஆங்கிலேயர்கள் ஒரு மறைவான இடம் கிடைத்தால் காதல் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். இந்தியர்கள் ஒரு மறைவான் இடம் கிடைத்தால் இயற்கை உபாதையை கழிக்‍க ஆரம்பித்து விடுவார்கள். இடம், பொருள், காலம் எல்லாம் கிடையாது. எந்த இடத்தில் தோன்றுகிறதோ அந்த இடத்தில் ஆரம்பித்துவிடுவார்கள். ஒரு பொதுஇடம் மக்‍கள் அதிகமாக நடமாடும் இடம் என்றெல்லாம் கருணையுடன் நினைத்துப் பார்ப்பதே கிடையாது. எனக்‍கு சுதந்திரம் தான் முக்‍கியம் என்று கூறுவார்கள். என் சுதந்திரத்தில் தலையிட எவனுக்‍கு அதிகாரம் இருக்‍கிறது என்று ஏசுவார்கள். ரயில் நிலையத்தில் அப்படியொரு மூத்திரவாடையை உருவாக்‍க எந்தவொரு கெமிக்‍கல் விஞ்ஞானியாலும் முடியாது என்பதை அடித்து சொல்ல முடியும். கழிவரை சென்றுவிட்டு தண்ணீர் ஊற்றும் பழக்‍கம் எங்கள் பரம்பரைக்‍கே கிடையாது என்று நெஞ்சைத் தூக்‍கிக்‍கொண்டு கம்பீரமாக சொல்வார்கள். அதையும் மீறி தண்ணீர் ஊற்ற வற்புறுத்தினால், ஏதோ தனது கவுரவத்திற்கு இழுக்‍கு ஏற்பட்டு விட்டதாக வருந்தி கொலைகாரர்களாக உறுமாறிவிடுவார்கள். மூக்‍கைப் பொத்திக்‍கொண்டால் மட்டும் சுற்றி இருக்‍கும் கார்பன்டை ஆக்‍சைடு, சுவாசத்தை சும்மா விட்டுவிடுமா என்ன?ஏதோ நம்மைக்‍ காப்பாற்றிக்‍கொள்வதாக நினைத்துக்‍ கொண்டு மூக்‍கைப்பிடித்துக்‍கொள்ள வேண்டியதுதான்.

ஏதோ சீனா இந்தியா மீது பயோவார் நடத்தப் போவதாக செய்திகள் எல்லாம் கசிகின்றன. சினிமா இயக்‍குனர்கள் எல்லாம் இந்தக்‍ கருப்பொருளை மையமாக வைத்து படம் எடுக்‍கிறார்கள். இவையெல்லாம் ஒருவேலை உண்மை என்கிற பட்சத்தில், சீனாவின் முட்டாள் தனத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது என்றுதான் எடுத்துக்‍ கொள்ள வேண்டும். அவனுக்‍கு என்ன தெரியும் இந்திய மக்‍களுக்‍கு பயோ வார் என்பது புறங்கையில் ஊர்ந்து செல்கிற எறும்பு போல என்று. ஒரு இந்திய ரயில்வே கழிவறையை விட மோசமான கிருமி உற்பத்தியாக்‍கும் ஃபேக்‍டரியை எந்த கொம்பனாலும் உருவாக்‍க முடியாது. அதையே ஃபூ என்று ஊதிவிட்டு வேலையை பார்த்துக்‍ கொண்டிருக்‍கிறார்கள். இந்த நிலையில் சீனாக்‍காரன் இந்தியாவுக்‍குள் நுழைந்து பயோவாரைத் தொடங்கப் போகிறானாம். அவன் உருவாக்‍கும் கிருமிகள் இந்தியர்கள் முன்னிலையில், விஜயகாந்திடம் மாட்டிக்‍ கொண்ட பாகிஸ்தான் தீவிரவாதிகளைப்போல் திருதிருவென விழிக்‍கப் போகின்றன என்பது மட்டும் நிச்சயம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையிலும், நான் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் (ஆக்‍ஸிஜன் சிலிண்டர்) இல்லாமல், திடமான மனநிலையுடன் அன்ரிசர்வ்ட் கம்பாண்மென்ட் அருகில் சென்றேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. மேலும் நான் மயக்‍கமடையவில்லை. ஒரு நூறுபேர் உட்காரக்‍ கூடிய ஒரு பெட்டியில் 350 பேர் நுழைந்து போர் செய்து கொண்டிருக்‍கும்பொழுது, எனக்‍கும் அந்தப் பெட்டிக்‍குள் ஏதேனும் இடம் கிடைக்‍குமா என்று சிறுபேதையைப் போல எட்டிப்பார்த்தேன். உள்ளுக்‍குள்….

ஒரு அம்மா தன் குழந்தை செய்த அசிங்கத்தை ஒரு பேப்பரில் துடைத்து ஜன்னல் வழியாக விட்டெரிந்தார்.

ஒரு பெரியவர் வெத்தலையைக்‍ குதப்பிக்‍ கொண்டு துப்புவதற்காக ஜன்னலருகே முகத்தைக்‍ கொண்டு வந்தார்.

ஒரு பெண்மணி 5 இட்லி கொண்ட பொட்டலத்தில் 4 இட்லிகளை சாப்பிட்டு ஒன்றை சட்னியோடு மடித்து பேப்பரில் கையைத் துடைத்து திரும்பிப் பார்க்‍காமல் ஜன்னல் வழியாக விட்டெறிந்தார்.

ஒரு சிறுவன் ஆரஞ்சுபழத் தோலை கையில் வைத்துக்‍ கொண்டு பிளிச், பிளிச் என்று கண்ணில் அடித்தான்.

ஒரு நொடிக்‍கும் குறைவான நேரத்தில் நடைபெற்ற இத்தனை தாக்‍குதல்களிலிருந்தும் சூப்பர்மேனைப் போல் தப்பித்தும் கடைசியில் சிறுவனின் ஆரஞ்சுப்பழத்தோல் தாக்‍குதலில் மாட்டிக்‍கொண்டு கண்களை கசக்‍கிக்‍ கொண்டு ஓடிவந்துவிட்டேன்.

ரயில் நிலையம் என்றால் அப்படித்தான் இருக்‍கும். நான்கு பக்‍கமும் இருந்து தாக்‍குதல் நடத்தத்தான் செய்வார்கள். அதற்கெல்லாம் பயந்தால் எப்படி ரயிலில் பயணம் செய்ய முடியும் என்று கேனைத்தனமாக பேசிய, எனக்‍கு அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மென்டில் கேட்டவுடன் டிக்‍கெட் புக்‍ செய்து கொடுத்த, என் அன்பு நண்பனிடம் நான் கேட்டேன்.

“இப்ப நீ எங்க இருக்‍க”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *